உரைப்பான் – பச்சிளம் குழந்தைக்கான செரிமான மருந்து

உரைப்பான்

குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுத்தாலும் அதனுடைய செரித்தல் திறனை மேம்படுத்த உரைப்பான் என்ற பெயரில் சில மருந்துப் பொருட்களை அரைத்து தருகிறார்கள். கீழ்கண்ட ஒன்பது பொருட்களில் கிடைக்கின்றவைகளை தாய்ப்பாலுடன் உரைப்பான் கல்லில் ஐந்து மூன்று என்ற கணக்கில் உரைத்து குழந்தைக்கு தருகிறார்கள்.

1) வசம்பு
2) சுக்கு
3) மாச்சக்காய்
4) சாதிக்காய்
5) சித்தரத்தை
6) முறுக்குத் திப்பிலி
7) ஒருதலைப் பூண்டு
8) பெருங்காயக் கட்டி
9) மான் கொம்பு

இப்பொருட்களில் வசம்பு என்பது புள்ளவளர்த்தி (பிள்ளை வளர்த்தி) என்றும் அழைக்கப்படுகிறது. மாலை நேரங்களில் இந்தப் பெயரைக் கூறாமல் பெயர் சொல்லாதது என்றும் வழங்குகிறார்கள். முறுக்குத் திப்பிலி என்பது குழந்தைகள் உடலை அடிக்கடி முறுக்கிக் கொள்வதை தவிர்ப்பதற்காக சேர்க்கப்படுகிறது. இப்பொருட்களை சாணத்தில் வைத்து பதப்படுத்தி, விளக்கு சுடரில் காட்டி தீய்த்து உபயோகம் செய்கின்றார்கள். இப்பொருட்களில் பெரும்பாலானவை இன்றும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கின்றன.

நெடுங்காலமாக விளம்பரங்களில் குழந்தை அழுதால் உட்வான்ஸ் வாட்டர் கொடுங்கள் என்று கூறப்படும் பொருளுக்கு மாற்றாக கிராமங்களில் இந்த உரைப்பானே கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

#மகரயாழினி #நாட்டார்_சடங்குகள் #பிறப்பு_சடங்குகள்

2017 சனவரி மாதம் 12ல் முகநூலில் பதிவு செய்தது.

மழலை பாடல்கள்

2017 சனவரி 8 ல் எனது முகநூலில் மகரயாழிக்கான மழலை பாடலை பதிவு செய்திருந்தேன்.

என்னுடைய அம்மாச்சியும், கருப்பாயி என்ற உறவுக்காரப் பாட்டியும் நிறைய நாட்டார் பாடல்களை மகரயாழினிக்காக நேற்று பாடினார்கள். பல் போன பாட்டிகள் தங்களின் நினைவுப் பைகளிலிருந்து சில்லறைகளைப் போல நாட்டார் பாடல்களை சிதறவிடுகிறார்கள். கருத்திற்கோ, பொருளுக்கோ முக்கியத்துவம் இல்லாமல் ஓசைநயத்திற்கே அதிகம் முக்கியத்துவம் தருகின்ற பாடல்களாக அவை இருக்கிறன. மொழியே அறியாத மூன்று மாதங்கள் கூட நிரம்பாத அந்த மழலை மகிழ்ச்சியை பொக்கை சிரிப்பால் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது.

இங்கு இங்கு இங்கு..
இது இங்கு குடிக்கிற சங்கு.
வார்த்தை கேட்கிற வண்டு.
பாட்டு கேட்கிற பாங்கி,
பேச்சு கேட்கிற பூச்சி
இது இங்கு கேட்கிற இளஞ்சியம்

இந்தப் பாடல் கேள்வியாகவும் முடியும் வண்ணமும் மாற்றிப் பாடுகிறார்கள்.

இது இங்கு குடிக்கிற சங்கா என்பதுபோல மழலையோடு உரையாடுவதாகவும் பாடுகிறார்கள். 🙂

இந்தப்பதிவிற்கு விக்கிப்பீடியரும், தமிழார்வருமான செல்வா ஐயா தன்னுடைய கருத்தினை பகிர்ந்திருந்தார்.

IMG_20181025_193624

செல்வா ஐயா குறிப்பிட்ட ஒந்து.. ஒந்து காசு பாடலை..

“உந்தி உந்தி காசு..
யார் கொடுத்த காசு..
மாமா கொடுத்த காசு..
மாயமாப் போச்சு..”

என ஊர் பக்கம் பாடுகிறார்கள். இதில் உந்தி உந்தி எனும் போது இடது உள்ளங்கையில் வலதுகை ஆள்காட்டி விரலை தொட்டு தொட்டு காட்டவும்.. மாயமாய் போச்சு எனும் கையை விரித்து ஆட்டி இல்லை என விவரித்தார்கள்.

#மகரயாழினி க்கு பிடித்த பாடலாகிப் போனது. “வூ..ம்.. வூ..ம்” என ஓசை எழுப்பிக் கொண்டு உள்ளங்கையில் ஆள்காட்டி விரலை தொட்டு தொட்டு காட்டுவாள்.. அப்படியானால் நாம் உந்தி உந்தி காசினை பாட வேண்டும்.

அவளின் அம்மா பாடி முடித்ததும்.. என்னுடைய அம்மாக்கள் பாட வேண்டும்..

வணக்கம் வைக்க இருகரம் கூப்பவும், குட்மார்னிங் வைக்க நெற்றியில் கை வைக்கவும் தொடங்கிய பிறகு இந்த உந்தி உந்தி காசு பாடல் மறையத் தொடங்கிவிட்டது.

#மகளதிகாரம்

பேலுக்குறிச்சி சந்தையும் சங்கிலி கருப்பும்

இம்முறை வீட்டு வருச சாமான்கள் வாங்குவதற்கு நாமக்கல் மாவட்டம் பேலுக்குறிச்சிக்கு செல்வது என்று அம்மா முடிவெடுத்தார். சென்ற முறை திருச்சிராப்பள்ளியில் வருச சாமான்கள் வாங்கியிருந்தாலும், மற்ற உறவினர்களிடம் அது குறித்து விசாரித்த போது விலை மலிவாக பேலுக்குறிச்சியில் கிடைப்பதை தெரிவித்தனர். அதனால் இம்முறை சென்ற சனிக்கிழமையன்று பேலுக்குறிச்சிக்கு சென்றோம்.
pellukurichi

வாசனைப்பொருள்களுக்கு என்று தனிக்கடைகளும், வருச சாமான்கள் எனப்படும் மிளகு, கடுகு, சீரகம் போன்றவற்றுக்கு தனிக்கடைகளும் இருக்கின்றன. இம்முறை மழைப் பொய்த்துப் போனதால் பாதிச்சந்தைக்கே வியாபாரிகள் இருப்பதாக வருடந்தோறும் சென்றுவரும் உறவினர் தெரிவித்தார். வியாபாரிகள் மக்களின் தேவைக்கு ஏற்றவாறு ரகம் வாரியாக பொருள்களை வைத்துள்ளார்கள். குறைவான விலைக்கு கேட்டால் தரம் குறைந்த பொருகளையும், தரத்தினை எதிர்ப்பார்த்தால் அதிக விலையும் உண்டு. இதுதான் வியாபாரம். சில கடைகளில் எடை ஏமாற்றும் வழக்கமும் உள்ளது என்பதால், உடன் வந்த உறவினர் வீட்டிலிருந்து படியொன்றினை எடுத்து வைத்திருந்தார். அதில்தான் தர வேண்டும் என்று வியாபாரிடம் சொன்ன போது, அவர் தன்னுடைய படியையும், உறவினர் படியையும் அளந்து சரி பார்த்தார். வியாபாரிடம் ஒரு லிட்டர் படி இருந்தது, உறவினர் கொண்டுவந்தது கிலோ படி.

லிட்டர் படியைவிட 100-200 கிராம் அளவுக்கு பொருள்கள் பிடித்தன. அதனால் செட் 1300 என நிர்ணயம் செய்து மூன்று செட்டுகளை வாங்கிக் கொண்டோம். ஒரு செட்டில் ஐந்து பொருள்கள், ஒவ்வொன்றும் நான்கு கிலோ,. ஆக 60 கிலோ பொருளுடன் நான் விடைப்பெற்று அருகிலிருந்த ஒரு கோயிலில் அமர்ந்து கொண்டேன். மற்றவர்கள் பூண்டு, மஞ்சள், பட்டாணி என வாங்கிக் கொண்டு திரும்பிவர அனைவரும் பேருந்து ஏறி அவரவர் இல்லத்தினை வந்தடைந்தோம்.

பேலுக்குறிச்சி சந்தையைப் பற்றி பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்றபட்டமைக்கு இரு காரணங்கள், 1) சங்கிலி கருப்பு 2) கூட்டாஞ் சோறு.

சங்கிலி கருப்பு – 

sangalikarupu

நாட்டார் தெய்வங்களில் முனியும், கருப்பும் மட்டும் எண்ணற்ற பெயர்களையும், அமைப்புகளையும் உடையது. மிகவும் உக்கிரமான கருப்பினை சில மந்திரவாதிகள் சங்கிலியால் கட்டி தங்களுக்கு சேவகம் செய்ய வைத்துள்ள கதைகளையும், ஊருக்கு நல்லது செய்ய சத்தியம் செய்து சங்கிலியில் கட்டுண்டு கிடக்கும் கருப்பு கதைகளும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். என்னுடைய நண்பன் ஒருவனின் குலதெய்வமான கருப்புசாமியை அவனுடைய தாத்தா அழைத்துவந்து கோயில்கட்டியமை குறித்து தெரிவித்திருக்கிறான். எனினும் இதுவரை சங்கிலி கருப்பினை கண்டதில்லை என்ற குறை இம்முறை அகன்றது.
பேலுக்குறிச்சி சந்தையின் முன்பகுதியில் சில பதிவுகளோடு, சங்கிலி கருப்பும் உள்ளார். ஆளுயர சிலை. மேலிருந்து கீழ் வரை சங்கிலி சுற்றப்பட்ட கருங்கல்லாக காட்சியளிக்கிறார். முன்பக்கத்தில் தமிழ்எழுத்துகள் இருக்கின்றன. பக்கவாட்டில் வட்டமிட்டு அதன் குறுக்காக கோடிட்டவாறு சின்னங்கள் உள்ளன. பின்பக்கம் செதில் செதிலாக உள்ளது. முகநூலில் சேலம் வரலாற்று ஆய்வு செய்யும் ஆர்வளர்களுக்கு தகவல் தந்துள்ளேன். எண்ணற்ற சிறு தெய்வங்கள் ஏதேனும் வரலாற்றுக்காக வைக்கப்பட்ட அரசுச் சின்னங்களாக இருப்பதை அவர்கள் கண்டு முன்பே தெரிவித்துள்ளார்கள்.

முகநூல் நண்பரான ராஜசேகரன் இது நெடுங்கல்லாகவோ, கோமாரிக்கல்லாகவோ இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார். மாலை, ஆபரணம், துண்டு ஆகியவை இல்லாமல் வெறும் கல்லை மட்டும் படம்பிடித்திருந்தால் இந்நேரம் அது என்ன என்று தெரிந்திருக்கும். 🙂 கருப்புசாமியாக ஒரு வரலாறு மக்களால் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பதால் மிகவும் மகிழ்ச்சி. எனக்கு நெடுங்காலமாக கேள்விப்பட்ட சங்கிலி கருப்பைக் கண்டதில் மகிழ்ச்சி.

கூட்டாஞ் சோறு –

பேலுக்குறிச்சியில் எண்ணற்ற ஊர் மக்கள், பெரும்பாலும் மகளீர் ஒற்றுமையாக ஒரு கனரக மூன்று சக்கர, நான்கு சக்கர வண்டிகளில் வந்திறங்கி முழுச்சந்தையிலும் பொருள்களை வாங்கிக் கொண்டு ஒன்று சேர்ந்து திரும்புகின்றார்கள். பசியாறுவதற்கு வீட்டில் சமைத்துக் கொண்டு வரும் உணவை கோயிலில் அமர்ந்து பகிர்ந்து உண்கிறார்கள். பொருகளை மாற்றி மாற்றி தங்களுக்குள் ஒருவர் இருந்து காவல் காக்கின்றார்கள். இந்தக் காலத்திலும் இவ்வாறான ஒற்றுமையும், குழு மனப்பான்மையும் வியக்க வைக்கிறது.

சகோதர சகோதரி – சிறுகதை

சென்னை மெரினா கடற்கரை. எல்லோருக்கும் தெரிந்தது அந்த மெரினா சென்னையின் அடையாளம், இரண்டாவது பெரிய கடற்கரை அவ்வளவே. சல்லிக்கட்டு போராட்டம் சகல உலகத்தினருக்கும் மெரினாவையும், தமிழர் பெருமையையும் கொண்டு சேர்த்தது. அந்தப் போராட்டத்தில் தமிழச்சிகளோடு தமிழர்களும் இரவு பகலாக இருந்தார்கள். ஒரு சின்ன சீண்டல்கள், சலசலப்புகள் என எதுவுமே இல்லை. அங்கு நடைப்பெற்றிருக்க கூடிய ஒரு கற்பனை இது.

அவள் பெயர் சுலோச்சனா, தோழர்களும் தோழிகளும் சுலோ சுலோ என்று அழைப்பார்கள். ஆனால் உண்மையில் சுலோ சுலோவானவள் இல்லை. மெரினாவில் ஆங்காங்கே கோசமிட்டுக் கொண்டிருந்த வெகுசில பெண்களில் மிகவும் கவனிக்கத்தக்கவளாக இரண்டாம் நாளே மாறியிருந்தாள் சுலோ. அவளுடைய எதுகை மோனையில் எல்லா அரசியல்தலைவர்களும் சின்னா பின்னமாகினார்கள். கூட்டத்தோடு கூட்டமாக எல்லாப்பக்கமும் இருந்த உளவுத்துறை சுலோச்சனாவின் பெயரையும் தன்னுடைய பட்டியலில் இணைத்து முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பியது.

மூன்றாம் நாளை மாலை. கலைகட்டியிருந்த மெரினாக் கூட்டத்தில் சுலோ தன்னுடைய நெருங்கிய தோழியான தாமரையுடன் சேர்ந்து கழிவறைக்குச் சென்றால் வடக்குபுறம் நிறுத்தப்பட்டிருந்த நான்கு நடமாடும் கழிவறைகளிலும் எண்ணற்ற நபர்கள் வரிசையில் இருந்தார்கள். தாமரை அங்கே நின்றுகொண்டிருந்த கூட்டதோடு நின்றாள். ஆனால் சுலோவிற்கு இந்தக் கூட்டத்தில் நின்று கழிவறைக்கு செல்லும்வரையெல்லாம் தாங்காது என்று தெரிந்துபோனது. அவளுடைய புண்டையிலிருந்து சில சொட்டு பேண்டீசை நனைத்து அதை அவளுக்கு உணர்த்தியது. தாமரையிடம் சைகையில் கலங்கரை விளக்கு நோக்கி காமித்துவிட்டு சாலைக்கு வந்தாள்.

அவள் அருகே சென்று கொண்டிருந்த வாகனங்களில் ஒருநபர் வருகின்ற இருசக்கர வாகனத்தைப் பார்த்து நிறுத்துமாறு சைகை காட்டினாள். இவள் துரதிஸ்டம் வந்தவன் கவனிக்காமல் முன்னே சென்றுவிட, அந்த இருசக்கர வாகனத்தின் பின்னால் வந்த சிவப்புநிற போர்ட் மகிழுந்து அவளை நெருங்கி நிறுத்தியது. அதன் கண்ணாடிகள் கீழறங்க,. நாயகன் போல வெங்கட் அதிலிருந்தான்.

கம் இன் என்றான். யோசிக்க நேரமில்லாதவள் அவனுடைய மகிழுந்தின் முன்புற கதவினைத் திறந்து அமர்ந்து கதவை மூடினாள். அதற்குள் பின்னால் இருந்து வாகனங்களின் ஒலிப்பான்கள் காதுகளைப் பிளந்தன. வெங்கட் சட்டென ஒரு பொத்தானை அழுத்த எல்லாக் கதவுகளின் கண்ணாடிகளும் உயர்ந்து கதவு தாழிட்டுக் கொண்டது. உடனே வண்டி விரைந்தது.

ஜல்லிக்கட்டு புரோட்டஸிசா
ஆமாம் என்றபடியே நெருங்கிக் கொண்டிருந்த மற்றொரு பப்ளிக் டாய்லெட்டைப் பார்த்தாள். அதுவும் மிகவும் கூட்டம். ச்சே என்றவளின் வார்த்தையில் வலியும் இருந்தது.
வாட்.
ம்.. அந்த குப்பம் பக்கம் நிறுத்தறீங்களா. பாத்ரூம் அர்ஜெண்ட்.
ஓகே. அங்க டாய்லெட் உறுதியாக கிடைக்குமா. அர்ஜெண்டுனா எங்க வீட்டுக்கு வாங்களேன்.
வீட்டுக்கா.. நோ..நோ.. பிளீஸ் இங்கேயே இறக்கி விட்டுடுங்க.
பயப்படாதீங்க. நானும் அந்தக் குப்பத்துல தான் இருக்கேன். இது நான் வேலை செய்ய முதலாளியோட காரு.
ஓ.. உண்மையைத்தான் சொல்லறீங்களா.
ஏங்க நீங்க கைகாட்டி நிறுத்தாம போன பைக்காரனைப் பார்த்துட்டு நான் வண்டியை நிறுத்தி ஏத்திக்கிட்டேன். இப்ப கூட நம்பிக்கை இல்லையா சிஸ்டர்.
சிஸ்டருன்னு கூப்பிடிங்க பாருங்க. இப்ப நம்பிக்கை வந்துடுச்சு பிரதர். கொஞ்சம் வேகம் பிளீஸ்..

நத்தமேடு நினைவுச் சின்னங்கள்

கரூர் – திண்டுக்கல் சாலையில் மணவாடி கிராமத்திலிருந்து சற்று தொலைவில் அமைந்திருக்கிறது நத்தமேடு கிராமம். மிகச் சமீபத்தில் பணக்காரர் ஒருவரால் புரணமைக்கப்பட்டு மிகச் சிறந்த சிவாலயமாக திகழ்கிறது வீரபாண்டீசுவரர் கோயில். சுற்றியிருக்கும் கிராம மக்களும் பிரதோச, சிவராத்திரி, சோமவார திங்கள் கிழமைகளுக்கு கூடுகிறார்கள். கடந்த சனிப் பிரதோசத்திற்கு அக்கோயிலுக்குச் சென்றபோது, அருகே இருக்கும் அம்மன் கோயிலொன்று கண்களில் பட்டது. அது திறந்திருக்கிறதா என காணச் சென்றேன்.

நல்ல வேளையாக திறந்திருந்தது. அம்மனின் காவல்தெய்வமாக கருப்புசாமி சன்னதி வாயிலுக்கு இடப்புறமும், சிம்ம வாகனம் மண்டபத்திற்கு வெளியேயும் அமைந்திருந்தது. மண்டபத்தில் சில நினைவுச் சிற்பங்களை அமைத்திருக்கிறார்கள். அவை குறித்தே இந்தப் பதிவு.

முதல் சிலை 1-

1
இடப்பக்க கொண்டை, கைகளில் கால்களில் ஆபரணங்கள், காதுகளில் குண்டலங்கள், மேலாடை இல்லாமல், கணுக்கால் வரை அமைந்துள்ள கீழாடை என கைகூப்பி நின்றபடி இருக்கும் சிற்பம் முதல் சிற்பமாக அமைந்துள்ளது. இடையில் குறுவாள் உள்ள சிற்பம் என்பதால் வீரராக இருக்க வாய்ப்புண்டு. சன்னவீரம் கண்களுக்குப் புலப்படவில்லை.

இரண்டாவது சிலை 2-
2மகுடம் (துணியால் ஆனதாக இருக்கலாம்), காதுகளில் குண்டலங்கள், கழுத்து, கைகள், கால்கள் ஆகிவற்றில் ஆபரணங்கள், முட்டி வரையான இடையாடை, உடைவாள் ஆகியவற்றோடு வணங்கிய நிலையில் உள்ள சாந்த தவலும் சிலை. அழகிய மீசையுடன் இருப்பது வசீகரமாக இருக்கிறது. வலது மற்றும் இடது தோள்பட்டையிலிருந்து சிறிய அளவில் புடைப்பு தெரிகிறது. அது சன்னவீரமாக இருக்கலாம். அரசராகவோ, படைத் தளபதியாகவோ இருக்கலாம்.

மூன்றாவது சிலை –

3

மற்றச் சிலைகளைப் போல அல்லாமல் தம்பதிகளாக வடிக்கப்பட்ட சிற்பம். இருவரும் வலக்கையில் வாளும், தண்டமும் ஏந்தியவாறு இருக்கிறார்கள். இடப்பக்க கொண்டை, காதணிகள், கழுத்து மாலை, கை, கால் ஆபரணங்கள் இவற்றோடு இருக்கிறார்கள். ஆண் மேலாடையில்லாமல், கீழாடை தொடையளவு மட்டுமே உள்ளதாக இருக்கிறார். பெண்ணும் மேலாடையின்றி, கீழாடை கணுக்கால் வரை அணிந்து இருக்கிறார். ஆணின் இடக்கையில் குத்துவாள் உள்ளது. பெண்ணின் கையிலும் அவ்வாறு இருந்திருக்க வேண்டும். ஆனால் சிலை சிதைவுற்று காணப்படுகிறது.

நான்காவது சிலை –
4

தனித்த சிலைகளில் இச்சிலை சற்று வித்தியாசமாக வணங்கும் பொழுது, உடைவாளை இடக்கையால் உடலை அணைத்தவாறு அமைந்துள்ளது. இச்சிலை இடப்பக்க கொண்டை, கை, கால், கழுத்து ஆபரணங்கள் அணிந்தவாறு உள்ளது.

ஐந்தாவது சிலை –
5ஐந்தாவது சிலையானது முன்னுள்ள சிலை போல அமைந்துள்ளது. இடப்பக்க கொண்டை இல்லாமல் வணங்கிய நிலையில் உள்ளது.

இந்தச் சிலைகளின் காலம் பற்றியோ, இவர்கள் யாராக இருக்க கூடும் என்ற அனுமானங்கள் கூறும் நிலையில் நானில்லை. இதைப் பற்றி ஆய்வாளர்கள் ஒன்றினைந்து ஆய்ந்தால் கரூர் மாவட்டத்திலுள்ள பல வரலாற்று தகவல்கள் கிடைக்க கூடும். நன்றி.

பிள்ளைக்குப் பெயர் வைக்கும் படலம்

நண்பர்களே எங்களுக்கு கடந்த மாதம் 26ம் தேதி மகள் பிறந்திருக்கிறாள். அவளுக்காக பெயர்களை தேடும் பொழுது வீட்டில் எழுந்த கூத்துகளும் கும்மாளங்களும் அளவில்லாத மகிழ்ச்சி தருபவை. அதனை அவ்வப்போது முகநூல் பகிர்ந்து வந்திருந்தேன். அவற்றின் தொகுப்பு இங்கே.

நான்: அம்மா என்ன பேருமா வைக்கலாம்.
அம்மா: சோசியருக்கிட்ட கேட்டு பிள்ளை நட்சத்திரத்துக்கு ஏத்த மாதிரி எழுத்து தருவாரு.. அதை தெரிஞ்சுக்கிட்டு வைச்சுடலாம்.
நான்: அதுக்கு எதுக்குமா அவர்கிட்டயெல்லாம் போகனும். இணையத்திலேயே இருக்கே..
இணையம்: ட,டு, டி, மோ, மௌ
நாங்கள்:???

மாமா: பாப்பா பிறந்த தேதி என்ன?
நான்: 26-10-2016
மாமா:2+6+1+0+2+0+1+6 பதினெட்டு. 1+8=9. தம்பி.. வைக்கிற பேரு நியூமராலஜிப்படி ஒன்பது வர மாதிரி பார்த்துக்கோ..
நான்: அய்யோ.. இது வேறையா..

நேமாலஜி, நியூமிராலஜி போன்றவற்றோடு சோதிட முறையில் கூறப்படும் நட்சத்திர அட்சரங்களையும் வேண்டாமென மறுத்தோம். தூய தமிழில் வெகு இயல்பாய் அழைக்கும் வண்ணம் இருக்க வேண்டும் என்றும், பெண் பிள்ளை என்பதால் அதிக பகடிக்கு ஆளாகா வண்ணம் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தோம்.

ஆதிரை
இளவஞ்சி
உமையவள்
எயினி
எழினி
கலாமயில்
கொற்றவை
கொன்றை
செந்தமிழ் குழல்வாய் மொழி
செம்பாகத்தாள்
நறுமுகை
நன்முல்லை
பிறப்பறு செல்வி
புவியேழ் பூத்தவள்
பூங்குயில்
மகரி
மகிழ்
மஞ்சரி
மதங்கி
மதிராட்சி
மயூரி
மோதயந்தி
மோய்
மௌவை
யாழினி
வெண்ணி

என ஓரளவு ஈர்த்த பெயர்களை முகநூலில் இட்டபோது, கனடாவில் வாழுகின்ற தமிழறிஞர் செல்வக்குமார் ஐயா, தமிழ்ப்பரிதி மாரி, விஜி பழனியப்பன் போன்றவர்கள் இப்பட்டியலில் உள்ள தமிழல்லாதவைகளை இனம் கண்டு ஒதுக்க உதவினார்கள்.

செந்தமிழ் குழல்வாய் மொழி – மிக நெடியப் பெயர், கொற்றவை – வெம்மையின் தெய்வம், எயினி – இடையர் பெண் என்பதாலும் தொடக்கதிலேயே மறுக்கப்பட்டுவிட்டன. அதன் பின்பு வெண்ணி என்பதை பன்னி என்று பகடி செய்ய ஏதுவாக இருக்கும் எனவும், பூ என்பதை கல்லூரிப் பெண்கள் வேறு ஒன்றுக்காக பயன்படுத்துகிறார்கள் என்பதால் பூங்குயிலும் விலகியது.

எழினி, கொன்றை, நறுமுகை, மகிழ், யாழினி இவைகளில் சிற்சிற மாறுபாடுகளோடு புதிய பெயர்களை இட்டுப் பார்க்கிறோம். எல்லாவற்றையும் விட மகிழினி, மகிழ் சிவனி, சிவக்கொன்றை, யாழிசை, யாழினி என விரிகிறது. அதிலும் யாழ் வகைகளுடன் இணைத்து யாழிசையும் யாழினையும் கொண்டுவர முயன்றோம்.

யாழ் – பண்டைய இசைக்கருவிகளில் ஒன்று. இதுவே தற்போதைய வீணையின் தாய்க்கருவி என்கிறார்கள். யாழைப் பற்றி எண்ணற்ற இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளது. எனினும் இங்கு அது வழக்கிலிருந்து அழிந்து போயிற்று. வெளிநாடுகளில் இன்னமும் யாழினைப் பயன்படுத்துகிறார்கள். மிகவும் போற்றப்படும் யாழ் வகைகளுள் மகர யாழ் கவர்ந்தது. அதனால் மகரயாழினி, மகரயாழிசை என்ற பெயர்களையும், மருத நிலத்தினை சார்ந்து எங்கள் குடும்பங்களில் பெயர் வைப்பது வழமை என்பதால் மருதயாழினி, மருதயாழிசை என்பதையும் கவனத்தில் கொண்டுள்ளோம்.

மகர யாழாள் – மகர யாழினை ஆள்பவள் –

finiyal

மகரயாழ் மீட்டும் பெண் – மகரயாழாள்

யாழினி, யாழிசை என்ற பெண் பெயர்கள் யாழின் இசையையும், அதன் இன்பத்தினையும் கூறுபவை. யாழை மீட்டுபவள் என்ற சொல்லாக்கத்திற்காக கௌதம் நீல்ராஜ் என்பவர் யாழ் மகிழி என்ற பெயரை கையாண்டுள்ளார். யாழினால் ஆன இசையால் மகிழுபவள் என விரித்து பொருள் கொள்ள வேண்டுமென நினைக்கிறேன். யாழினை மீட்டுபவள் என்றே பொருள் தர யாழ் + ஆள் – யாழாள் என்பதே சரியாக இருக்குமென நினைக்கிறேன்.

இந்து தொன்மவியலில் மகரம் என்பது யானை, முதலை, பறவை, மீன் என உயிரினங்களின் கலவை. மகரயாழ் கிரேகத்திலிருந்து நமக்கு கிடைத்திருக்க கூடும் என்று கருதுகிறார்கள்.

மகர யாழில் பத்தொன்பது நரம்புகள் இருந்திருக்கின்றன. இதனுடைய இசை யானையையும் வீழ்த்தக் கூடியது என்றும், யாழினை ஒரு போர்க்கருவியாகவே தமிழர்கள் உபயோகித்தார்கள் என்றும் ஒரு தகவல் உள்ளது.

ஒரு முறை விக்கிப்பீடியாவிலும் இணையத்திலும் இயங்குகின்ற செங்கைப் பொதுவன் ஐயா, தன்னுடைய புத்தகத்திற்காக ஒரு ஓவியத்தினை கற்பனை செய்யும் படி கூறினார். அதில் ஒரு ஆண் யாழினை மீட்டும் பொழுது அருகே ஒரு யானை மயங்கி நிற்பதாக இருக்க வேண்டும் என்றார்.

வையம் உடையான் மகரயாழ் கேட்டருளும்
தெய்வச் செவிகொதுகின் சில்பாடல் – இவ்விரவில்
கேட்டவா என்றழுதாள் கெண்டையங்கண் நீர்சோரத்
தோட்டவார் கோதையாள் சோர்ந்து.
– புகழேந்திப் புலவர் (நளவெண்பா)

கேடு இலா மகர யாழில் கின்னர மிதுனம் பாடும்
– கம்பராமாயணம்

தகரக் குழலாள் தன்னொடு மயங்கி மகர யாழின் வான்கோடு தழிஇ – மணிமேகலை

மகர யாழ் வல்ல மைந்தன் ஒருவனைக்கண்ட மத்தப் புகர் முகக் களிற்றின்…”  மேருமந்திரப் புராணம் (வச்சிராயுதம்-31)

தமிழில் மகரம் என்பது மீனைக் குறிப்பது. மகரக்கொடியோன் என்ற மீனைக் கொடியாக உடைய மன்மதனைக் குறிக்க பயன்படுத்துகின்றனர். தமிழ்ப்படி பார்த்தால் மகர யாழ் என்பது மீனின் வடிவுடைய யாழ். ஆனால் சமசுகிருதத்தில் மகரமீன், மகரமச்சம் என்றெல்லாம் கையாளுகின்றனர். மகரம் என்பதே சமசுகிருதமாக இருக்கலாம் என்றொரு கருத்து இருந்தாலும், இலக்கியங்களில் ஆளப்பட்டுள்ளது என்பதால் ஒரு துணிவு இருக்கிறது. மரகயாழினை மீன்யாழ் என மாற்றவும், அதுகுறித்தான இலக்கிய செறிவும் இல்லை. எனவே மகரத்தினை விட மனமில்லாமல் இருக்கிறோம்.

மருதயாழிசை –

தமிழரின் ஐந்திணைகளுள் ஒன்றான வயலும் வயல் சார்ந்த இடமும் மருத நிலம். இத்திணையில் மருதயாழ் இசைக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர். இந்த யாழினைப் பற்றியும் இலக்கியங்களில் செய்திகள் இருக்கின்றன. எனினும் இதன் அமைப்பு குறித்து சரியான ஆய்வு விளக்கம் இணையத்தில் இல்லை. இதனுடைய இசையானது எவ்வாறானது என்பது பற்றி மட்டுமே செய்திகள் உள்ளன. மதுர யாழ் என்பது அமைப்பு ரீதியில் இல்லாமல் ஒரு பண்ணாக மட்டுமே இருந்திருக்க வாய்ப்புகள் அதிகமுள்ளது.

பூம ரும்புனல் வயற்களம் பாடிய பொருநர்
தாம ருங்கிளை யுடன்றட மென்மலர் மிலைந்து
மாம ருங்குதண் ணீழலின் மருதயாழ் முரலுங்
காமர் தண்பணைப் புறத்தது கருங்கழி நெய்தல்.
– சேக்கிலார் (பெரியபுராணம்)

நன்றி.

திருப்பூத்து

அன்றைய நாள் பகவதி மிக அழகான ஆடை உடுத்தியிருந்தாள். நேற்று அவளைக் காணவந்த ஒரு ஒருவர், அவளுக்கு  பட்டுச்சட்டையும், பட்டுப்பாவாடையும் வாங்கிவந்திருந்திருந்தார். பட்டுச்சட்டையில் ஆங்காங்கே மாங்காய் லட்சனை பதிக்கப்பட்டிருந்தது. பாவாடையின் இறுதியில் அதே மாங்காய் சின்னங்கள் அணிவகுத்திருந்தன. பகவதியை அவர் முன்பு பார்த்தில்லை என்றாலும் அவளுக்கு மிகப் பொருத்தமான பச்சையாடையை தந்திருந்தார். அதைப் போட்டுக் கொண்டு பகவதி தன்னைக் காண வருகின்றவர்கள் அத்தனை பேரிடமும் அந்த சட்டையைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தாள். அவளுக்கு அளவுக்கு அதிகமான உற்சாகம் இருந்தது. நேற்று மொத்தமும் அவள் மகிழ்ச்சியாக இருந்தாள். ஆனால் யார் கண் பட்டதோ, இன்று காலையிலிருந்து அவளுடைய வயிற்றில் லேசான வலியுண்டானது. ஒரு வேளை நேற்று அளவுக்கு அதிகமாக உண்டு விட்டேனோ என்று யோசித்துப் பார்த்தாள், மகிழ்ச்சியில் எந்த அளவுக்கு உண்டாள் என்றே அவளுக்கு நினைவில்லை.

தொப்புளுக்குக் கீழ்பகுதியில் அடிவற்றியில் இருந்த வலி கொஞ்சம் அதிகரித்தது. அந்த வலி அப்படியே மெல்ல மெல்ல கீழ்நோக்கி அல்குல்  வரை சென்று ஒரு சுண்டு சுண்டியது. இதுநாள் வரை இப்படியொரு வலியை அவள் உணர்ந்ததே இல்லை. இது புதுமாதிரியான வலியனுபவம். உதவிக்கு ஒரு பெண்ணிடம் செல்ல அவளுக்கு ஆசையாக இருந்தது. ஆனால் கண்களுக்கு எட்டியவரை எந்தப் பெண்களும் இல்லை. அவ்வப்போது சில ஆண்கள் மேலாடையின்றி அங்கும் இங்கும் நடந்துக் கொண்டிருந்தார்கள். ஆபத்துக்குப் பாவமில்லை என்று அவர்களையே அழைத்துவிடலாமா என்று பகவதிக்கு தோன்றியது. ஆனாலும் இத்தனை நாள் போற்றிக் காப்பாற்றிய ஏதோ ஒன்று அவளைத் தடுத்துவிட்டது.

வயிற்றுப்பகுதியிருந்து அல்குல் வரை சொல்லப்படாத வலியோடு நின்றபடி இருந்தாள். நேற்று புதிதாக உடுத்திய பட்டுப்பாவடையில் ரத்தக் கரைப் பட்டது. பகவதி தனக்குள் பொறுமிக் கொண்டிருந்தது அங்கு அலைந்துக் கொண்டிருந்தவருக்கு கேட்டதோ என்னவோ, அவர் பகவதியின் முன்னால் இருந்த பொருட்களையெல்லாம் ஓரமாக வைத்துவிட்டு, ஒரு திரையை இழுத்துவிட்டார். பின்பு பகவதியை நெருங்கி அவளுடைய சட்டையையும் பாவாடையும் எடுத்துவிட்டார். பகவதிக்கு வெக்கமாகவும் அருவருப்பாகவும்  இருந்தது. எதுவும் செய்ய முடியாதவளாய் நின்றாள். முன்னும் பின்னுமாக சட்டையையும் பாவாடையையும் பார்த்தவர், அதிர்ந்தார். பகவதியை ஆச்சிரியமாகப் பார்த்துவிட்டு, அவளுடைய அல்குலை தொடையோடு தடவிப் பார்த்தார். கை பிசுபிசுத்தது. வெளியே சென்றார். சிலரை அழைத்து பாவாடையைக் காட்டிப் பேசினார். எல்லோரும் ஆண்கள் என்பதால் சரியான முடிவுக்கு வரமுடியவில்லை. அந்த மனிதனர் வீட்டிற்கு ஓடி, தன்னுடைய மனைவியிடம் காட்டினார். அவள் பகவதி பெரியவளாகிவிட்டாள் என்று கூறினாள். அதன்பின் பகவதியை அந்த இடத்திலிருந்து தூக்கி தனியாக குடிசைக்குள் அந்த மனிதரே வைத்தார். எல்லோரிடமும் இந்த சம்பவத்தைக் கூறி, அவளை யாரும் பார்க்காத வண்ணம் செய்தார்.

சிறையில் அடைக்கப்பட்டது போல பகவதி எதுவும் புரியாமல் நின்றுகொண்டிருந்தாள். மூன்றாம் நாள் அவளை ஆற்றுக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டி மீண்டும் புத்தாடை கொடுத்து நிறுத்திவைத்தார்கள். மீண்டும் அவளை பார்க்க நிறைய நபர்கள் வந்தார்கள். யாரேனும் ஒரு பெண்ணைப் பார்த்து தனக்கு எனக்கு நடந்தது என்று அறிந்து கொள்ள ஆவலாய் இருந்தாள் பகவதி. ஆனால் எல்லோருமே அவளுடைய அறைக்கு வராமல் அவளை கைகூப்பி பார்த்துவிட்டு சென்றனர். மனவருத்ததுடன் தன்னுடைய பீடத்திலேயே நின்றிருந்தாள் செங்கன்னூர் பகவதி அம்மன்.

சோழ ரகசியம் – பாகம் 2

உடையார்குடி கிராமம் சோழப்படைகளால் சூழந்திருந்தது. மன்னர் உடையார் சிறீ ராஜராஜர் தனித்தேரிலும், மும்முடிச் சோழப் பிரம்மராயர், தளபதிகள், படை தலைமையாட்கள், ஒற்றர் படைத் தலைவர் போன்றோர் குதிரையுடனும் நின்றிருந்தார்கள். மண்டபத்தின் நடுவே நின்று பறையை மிகவும் வேகமாக அடித்து, “இதனால் சகலருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், ஆதித்த கரிகாலன் கொலையில் இங்கிருக்கும் ஒவ்வொரு பிஞ்சுகளுக்கும் கூட சம்மந்தம் இருப்பதை அறிகிறோம். நெடுநாட்கள் நடந்த விசாரணையில் அவை தெளிவாக மக்களுக்கு நிறுபனம் செய்யப்பட்டன. அதனால் உடையார் குடியில் இருக்கும் அந்தணர்னர்களையும், பெண்டுகளையும், சிறார்களையும் அவர்களோடு உறவுமுறை கொண்டுள்ள அனைவரையும் சோழ தேசத்தினை விட்டு நாடு கடத்துகிறோம். அவர்கள் அனைவரின் சொத்துகளும் அரசாங்கம் எடுத்துக் கொள்ளும். வாழ்க சோழம். வாழ்க உடையார் சிறீ இராஜராஜர்.” என்று அறிவித்தனர்.

அந்தணர்களிடமிருந்த அனைத்தையும் எடுத்துக்கொள்ளப்பட்டு, ஆடைகளோடு அவர்களை அணிவகுக்க வைத்தார்கள் சோழவீரர்கள். மும்முடிச் சோழப் பிரம்மராயர் தனியாக ஆட்களை நியமித்து அவர்களின் அடையாளங்களை சரிபார்த்தார். சில வீரர்கள் அந்தணர்களின் உறவுகளையும் அவர்களின் உறவு முறைகளையும் அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறிக் கொண்டிருந்தனர். பெண்களில் சிலரும், ஆண்களில் சிலரும், ஆதித்த கரிகாலரின் கொலையில் தங்களுக்கு சம்பந்தமில்லை என சத்தம் எழுப்பினார்கள். சிலர் கர்பிணிப் பெண்களுக்கும் இதே தீர்ப்பா எனவும், பச்சிளம் குழந்தைகளுக்கு இதிலென்ன சம்பந்தம் எனவும் கூச்சல் போட்டார்கள்.

மும்முடிச்சோழப் பிரம்மராயரே அனைத்தும் விடையளிக்கும் விதமாக, “நாங்கள் இங்கிருக்கும் அனைத்து நபர்களும் சோழ இளவரசர் ஆதித்த கரிகாலரின் கோரக் கொலையில் சம்பந்தம் இருப்பதை அறிந்தோம். உடையார் சிறீ இராஜராஜ சோழர் ஆட்சிப் பொறுப்பேற்றதும் முறையாக வழக்குகளும், வாதங்களும் எடுத்துரைக்கப்பெற்று அவற்றை நிறுபனம் செய்தும் உள்ளோம். சோழமக்களும் அதனை உறுதி செய்துள்ளார்கள். மாமன்னர் தீர்ப்பு வழங்கியதும், மீண்டும் ஒன்றுமறியாதது போல நீங்கள் பேசுவதில் ஞாயம் இல்லை. சோழத்தேசத்திற்கு எதிராக தேசதுரோகத்தில் ஈடுபட்ட போதும், உங்கள் அனைவரையும் உயிரோடு நாடுகடத்தவே மாமன்னர் உடையார் சிறீ இராஜராஜர் தீர்ப்பு தந்துள்ளார். சோழமக்களின் கோபத்திற்கு ஆளாவதற்குள், இங்கு மக்கள் கிளர்ந்து எழுவதற்குள் நீங்கள் நாட்டினைக் கடப்பதே உத்தமமான காரியம்.” என்றார்.

ஒரு பெரிய வீரர்களின் வளையத்திற்குள் அத்தனையும் நிகழ்ந்து கொண்டிருந்தது. அனைத்து சரிபார்க்கப் பட்டதாய் பிரம்மராயருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டவுடன். அவர் இராஜராஜரைப் பார்த்தார். அந்தப் பார்வையின் அர்த்தத்தினை உணர்ந்த இராஜராஜர், கைகளை முன்நோக்கி அசைத்தார்.

வீரர்கள் சூழ்ந்திருக்கும் அந்தணர்க் கூட்டம் நகர்ந்து சென்றது. எதிர்த்துப் பேசியவர்களுக்கும், மறுத்து நின்றவர்களும் பிரம்பால் தாக்கப்பட்டார்கள். ஒரு ஊரே காலிச் செய்து செல்வதை கனத்த மனதோடு பார்த்துக் கொண்ட இராஜராஜர் அங்கிருந்து தன்னுடையத் தேரில் கிளம்பினார். இதுவரை ஆதித்த கரிகாலனின் மரணத்திற்கு தக்க நடவெடிக்கை எடுக்கவில்லை என்ற அவரது மனவலி அகன்றது. உறவைக் கொன்றவர்களும் தயவுக்காட்டி, நாடுகடத்த கூறியிருக்கும் நல்மனதுடன் அவர் அரண்மனை நோக்கிச் சென்றார். எல்லாவற்றையும் கவனித்துவந்த பிரம்மராயர் குதிரையை வேறுபக்கம் செலுத்தினார்.
பிறகு உயிரோடு நாடுகடத்தப்படுவதை அறிந்த சோழ மக்கள் வெகுண்டு எழுந்து அந்தணர்கள் வாழ்ந்த வீடுகளை தீவைத்தார்கள். அவ்வூரே தீப்பிழம்பாக மாறியது. அந்நேரத்தில் மிகவும் சாமர்த்தியமாக சோழர் படை அந்தணர்களையும், அவரது உறவுகளையும் சேர நாட்டை நோக்கி கொண்டு சென்றுகொண்டிருந்தது. அவ்வாறு போகின்ற வழியில் சில விசயம் அறிந்த சோழமக்கள் அவர்களை துன்புருத்தினர். சோழப் படைவீரர்கள் அதனை தடுத்து அந்தணர்களை முன்நோக்கி அழைத்துச் சென்றது.

***
பெண்கள் கத்திக் கதறிக் கொண்டிருந்தார்கள். குழந்தைகளும், சிறுவர்களும் நடப்பது புரியாது தாய் தந்தையோடு ஒடுங்கி ஓலமிட்டுக் கொண்டிருந்தனர். ஆண்களுக்குள் இதுவரை இருந்த சோழப் பகைமை கொழுந்துவிட்டு எறிந்துக் கொண்டிருந்தது. கர்பினியாய் இருந்த ஒருபெண் எப்படி இந்த சோழ தேசத்தினை நிர்மூலம் ஆக்குவது என வயிற்றுக்குள் இருந்த குழந்தைக்கு சொல்லித் தந்துகொண்டிருந்தாள். வெற்றிலை எச்சிலை துப்பி, கல்லெடுத்து எரிந்து கனல் பொங்கும் கண்களோடு சோழ மக்கள் ஏசியதை வழியெல்லாம் சொல்லிக் கொண்டே வந்தார்கள்.
சோழத்தை ஏசுவதிலேயே கவனம் கொண்டமையால் அவர்களின் இருபுறமும் கிராமத்திற்கு கிராமம் படைவீரர்கள் கூடிக்கொண்டு போவதையும், ஏற்கனவே அவர்களோடு வந்த ராஜராஜரின் படைவீரர்கள் விலகிக்கொள்வதையும் அவர்கள் கவனிக்கவில்லை.
காடுகளின் ஊடே நடந்து ஒரு சமவெளியை கூட்டம் அடைந்தபோது, அந்தக்கூட்டத்தினை விட பெரிய அளவில் படைவீரர்கள் இருந்தார்கள்.

வாழ்க பாண்டிய தேசம் என்றொரு சத்தம் கேட்ட திசையை நோக்கினான் வாமதேவம். ஒரு வயதான மூதாட்டி கையில் கம்பினை ஊன்றி நடைதளர்ந்து வந்தவளிடமிருந்து அந்த சத்தம் வந்திருக்க கூடும். அவளின் மீது கண்களைப் பதித்தான். அவள் மீண்டும் வாழ்க பாண்டிய நாடு என்று கத்தினாள். இடைப்பட்ட கூச்சலிலும் அந்த மூதாட்டியின் அருகில் இருந்த சிறுவர்களும் பாண்டியர் புகழ் உரைப்பதை கேட்ட வாமதேவம் அதிர்ந்தான்.

“சோழதேசத்தில் அந்நியர்களுக்கு அடைக்கலம் தந்தது எத்தனை பெரியக் குற்றம். மன்னர்களின் நல்மனதினை இவர்கள் இப்படி நயவஞ்சமாக அல்லவா பயன்படுத்திக் கொண்டார்கள். இந்த பிஞ்சுகள் சோழ தேசத்தில் பிறந்தும் வாழ்ந்தும் இம்மண்ணை நேசிக்கவில்லையே. எத்தனை வன்மம். இதோடு அனைத்தும் நிறைவடையட்டும்.” என தனக்குள் உரையாடிக் கொண்டிருந்தவன், தன் இடையிலிருந்த சங்கை முழங்கினான். அந்தச் சத்தம் நிறைந்த காட்டில் மரங்களிடைப் புகுந்து அனைவருக்கும் கேட்டது. சோழ வீரர்கள் அப்படியே நின்றர். குதிரைகள் கூட ஒரு அடி எட்டுவைத்து அப்படியே நின்றன.

சோழ தேசத்திற்கு எதிராய் இவர்கள் இடும் கூச்சலையும், வசவுகளையும் கேட்டுக் கொண்டேப் பயணித்துவந்தோம். மாமன்னர் சிறீ இராஜராஜப் பெருவுடையார் இவர்களை நாடு கடத்த உத்தரவிட்டிருந்தாலும், முக்காலமும் அறிந்த நம் மும்முடிச் சோழப் பிரம்மராயரின் கட்டளையப்படி இவர்களில் சிறு பிஞ்சுகளை கூட உயிரோடு விடுவதென்பது நாளைய சோழப் பேரரசின் பேரழிவுக்கு ஒப்பாகும். மாந்திரிக தாந்திரிகத்திலும், அதிர்வண வேதத்திலும் வல்லவர்களான இவர்கள் நேரடிப் போரில் நம்மை வீழ்த்த முடியாது என்றாலும், பிற மந்திர வேளைகளில் ஈடுபட சகல வழிகளும் உண்டு. ஆகவே அனைவரையும் மண்டியிட வையுங்கள்.

வீரர்கள் விரைந்து செயல்பட்டார்கள்.

முன்சென்ற சேனைத் தலைவன் தன்னுடைய இடத்திலிருந்து ஒரு மஞ்சள் நிற கொடியை காண்பித்தான். வீரர்கள் சோழ கூட்டத்திற்குள் நுழைந்து ஆண், பெண், சிறார்கள் என மூன்றாய்ப் பிரித்தனர். “என்ன செய்கின்றீர்கள். எதற்காக என் மனைவியைப் பிரிக்கின்றீர்கள், எதற்காக என் பேரனை கொண்டு செல்கின்றீர்கள்” என எல்லாபக்கமும் கேள்விகள் எழுந்தன. ஆனால் அக்கேள்விகளுக்கு விடை சொல்வாரில்லை.

தலைமை படைவீரனான மங்களநேசன் அக்கூட்டத்தின் முன் தன் குதிரையை செலுத்தி அவர்கள் முன்பு நின்றான்.

“இறுதி கிராமத்தினையும் கடந்து வந்துவிட்டோம். இன்னும் இரண்டு பரலாங்களுகள் கடந்தால், நீங்கள் வேறு தேசத்திற்கு உரியவர்களாகிவிடுவீர்கள். அதனால் கூட்டத்திற்குள் இருக்கும் நம் தேசத்து ஒற்றர்கள் எழுக” என்றான்.

அந்தணர்கள் திகைத்தார்கள். என்ன நம் கூட்டத்திற்குள் சோழ தேசத்து ஒற்றர்களா. இதெப்படி சாத்தியம். நாம் மிகவும் சாமர்த்தியமாக நம் குலத்தவர்களை மட்டுமே உடையார்குடியைச் சுற்றி குடியமர்த்தி வைத்தோம். என்று தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கும் போது, ஆங்காங்கே.. சிலர் எழுந்து நின்றனர். அவர்களை முன்நோக்கி வருமாறு சைகை செய்தான். அவர்களை வீரர்கள் சோதித்தார்கள். அடையாளங்கள் சரியாக இருந்தன.

சருகுகள் உதிரும் சத்தம் மட்டுமே கேட்டது. அனைவரும் அமைதியானார்கள். அப்போது குதிரைகள் விரைந்துவரும் சத்தம் கேட்டது. அனைவர் பார்வையும் அங்கு செல்ல… மூன்று குதிரைகள் அவர்களை நோக்கி வந்தன. அதில் இரண்டில் இருந்தவர்கள் தங்களுடைய அடையாளங்களை மறைத்திருந்தார்கள். பிரம்மதேவராயரை மட்டுமே அடையாளம் காண முடிந்தது. “பிரம்மதேவராயர் ஒழிக” என கூட்டத்தில் யாரோ சத்தமிட அனைவர் கழுத்துகளின் மேலும் வீரர்களின் வாள் அடுத்தநிமிடம் இருந்தது.

“அதர்வண அந்தணர்கள். சோழப் பேரரசின் கீழ் நீங்கள் வந்தபோதே நாங்கள் உங்களையும் சோழர்களாகவே எண்ணினோம். நான் பார்த்து வளர்ந்த பிள்ளையை கோரமாய் கொலை செய்துவிட்டு அதனை பெருமை பேசி குழந்தைகளை வளர்க்கின்றீர்கள். அனைத்தும் அறிந்தும் தர்மக் கடவுளான இராஜஇராஜ சோழர் வழக்கு எடுத்து ஆதாரம் கொண்டு நிறுவி உங்களையெல்லாம் கொல்ல மனமின்றி நாடுகடத்த ஆனையிட்டிருக்கிறார். ஆனால் அத்தகைய மாண்புகொண்டோரையும் உங்களால் மதிக்க முடியவில்லை. வரும் வழியெல்லாம் சோழத்துக்கு எதிராய் உங்கள் ஏச்சுகளும், பேச்சுகளும் இருந்தன.”
“இனி உங்களால் படைதிரட்டி சோழத்தினை ஒன்றும் செய்ய முடியாது. நாங்கள் அந்நிலையை கடந்துவிட்டோம். சோழப்பேரரசின் மகாசேனைக்கு இவ்வுலகே பயம்கொள்ளும். ஆனால் பேடிகளைப் போல மறைந்து திட்டம் தீட்டி, தந்திர மந்திர யாகம் வளர்த்து உங்களால் தொடர்ந்து இடையூருகள் உண்டாகும். எனவே…” என கட்டளைப் பிறப்பிக்கும் முன் தன்னுடைய இடபக்கம் நின்ற குதிரையின் மீதிருந்தவரைப் பார்த்தார். அவர் கைகளில் ஏதோ செய்கை செய்ய, பிரம்மதேவ ராயர் அதிர்ந்து கண்களை விரித்தார். பின்பு தன்னை மீட்டுக் கொண்டு சிறார்கள் பக்கம் இருக்கும் வீரர்களுக்கு உத்தரவிட்டார். அடுத்தகணம் குழந்தைகளும், சிறார்களும் கொல்லப்பட்டனர். அதர்வணப் பெண்களும், ஆண்களும் திகைத்து கதரினார்கள்.
பிரம்மதேவராயர் மீண்டும் அந்த குதிரைமேலிருந்த உருவத்தினைப் பார்த்தார். இம்முறையும் அவருக்கு செய்கையால் கூறப்பட்டது. ஓம் என்று அந்தண ஆண்கள் பக்கம் இருக்கும் வீரர்களுக்கு கட்டளைகள் செல்ல அனைவர் தலையும் உருண்டது.

ஒருபக்கம் ஆண்கள் மடிந்து கிடக்க, மறுபக்கம் சிறார்களும், குழந்தைகளும் சிதைந்து கிடக்க. நடுவே பெண்கள் கூட்டம் பெரும் ஓலம் இட்டு கதறிக் கொண்டிருந்தது. அடுத்தது அவர்கள் தான் என்று நினைக்கையில் பிம்மதேவராயர் அருகில் இருந்த உருவம் தன்மேல் போர்த்தியிருந்த ஆடையை சுழற்றி வீசியது. அதைப் பார்த்த அனைவருமே கண்களை முடிந்தமட்டும் திறந்து தங்களது வியப்பை வெளிப்படுத்தினார்கள். அது குந்தவை நாச்சியார்.

“கூட்டத்தில் கற்பினிகள் இருக்கிறார்கள். அவர்களையாவது விடுங்கள். சூலிப் பெண்களை கொல்வது சோழ தேசத்தை நிர்மூலமாக்கும்.” என்று கத்தினாள் ஒரு மூதாட்டி. அதனை மற்றப் பெண்களும் ஆமோதித்து குரல் எழுப்பினார்கள்.

குந்தவை பேசத்தொடங்கினாள். “ஆலகால விசத்திற்கெல்லாம் கருணை காட்டுதல் என்பது இயலாது. பாரதத்தில் அர்ஜூனன் செய்த தவறை நாங்களும் செய்ய மாட்டோம். உங்கள் கண்முன்னே உறவுகள் கொல்லப்பட்டமைக்கு காரணம் பெண்களாகிய நீங்களே சோழ தேசத்திற்கு எதிரிகள். நீங்களே எய்தவர்கள். ரவிதாசனும், உங்களுக்கு துணை போனவர்களும் வெறும் அம்புகள். சோழத் தேசத்து பெண்கள் மீது நீங்கள் வன்முறையை உங்கள் உறவுகளைக் கொண்டு ஏவுனீர்கள். எங்கள் பெண்களின் முலைகளையும், மூக்கினையும் அறுத்தீர்கள். குறிகளைக் காயம் செய்தீர்கள். சூலிப் பெண்கள் என்றும் நீங்கள் கருணை கொள்ளவில்லை. இப்போது அதே கருணையை உங்களுக்கு எதிர்ப்பார்க்கின்றீர்கள். இதுகண்டு பொறுக்காது பாண்டியனைத் தண்டித்த ஆதித்த கரிகாலரையும், வஞ்சமாய்க் கொன்றீர்கள். உண்மையில் இப்போது வழங்கப்பட்ட தீர்ப்பு ஆதித்த கரிகாலருக்காக அல்ல. உங்கள் மனதில் ஈரமில்லாமல் செய்த காரியத்திற்காக.”

“பிரம்மராயரே, இவர்களை தீவைத்து எரித்து சாம்பலை காவேரில் கரையுங்கள். மிஞ்சும் எழும்புகளை பொடியாக்கி வையுங்கள். சோழ தேசத்தில் நாம் கட்டப்போகும் பெருங்கற்றளிக்கு இவர்களே அஸ்திவாரம். இங்கு நடந்தவை அனைத்தும் சோழ ரகசியமாக இருக்கட்டும். எக்காரணத்தைக் கொண்டும் எவருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு. அதற்காக நீங்கள் எது செய்தாலும் இந்தக் குந்தவை முழு ஆதரவு தருவாள்.”
பிரம்மராயர் ஓம் என்றார். எஞ்சியப் பெண்களை ஒருசேர பிணைக்கப்பட்டு முழுக்க எண்ணைய் ஊற்றினார்கள். ஓலக்குரல் எழும்ப எழும்ப தீ வானொக்கி எரிந்தது.

“அந்தணர்களைக் கொல்லக்கூடாது என்பது பரவலான கருத்தாக்கம். ஆனால் இன்று நாம் கொன்றது அந்தணர்களை அல்ல. இம்மண்ணின் எதிரிகள். நம் குலக்கொழுந்து நிகரற்ற வீரன் ஆதித்த கருங்காலனை நயவஞ்சகமாய் கொன்ற துரோகிகள். அந்தணன் என்றால் அறவோன் என்ற கூற்றின் படி பார்த்தால், இந்த துரோகிகளை மன்னித்து நாடுகடத்த சொன்ன நம் மன்னன் இராராஜ உடையாரே அந்தணன்”. என்றார் மும்முடிச் சோழப் பிரம்மராயரின் அருகில் தன் அடையாளம் காட்டாத நபர்.

ஆதித்த கரிகாலன் இறந்தபிறகு கடமை தவறியதாக நினைத்து வருந்திக் கொண்டிருந்த கரிகாலனின் மெய்காவல் படையினர் நெடுநாட்களுக்குப் பிறகு சிரித்தார்கள். குந்தவை கண்களிலிருந்து நீர் திரண்டு சோழத்தாயின் மடிமீது விழ, வீரர் பெருங்கூட்டம் இராஜராஜ உடையாரின் மெய்கீர்த்தியை பாடியது.

***
பிரம்மராயர் அமைதியாய் இருந்துவிட்டு, “அம்மா.. பெருங்கற்றளி என்று சொன்னீர்களே.. அது என்ன. இவர்களைக் கொன்றமைக்காகவா அதனை எழுப்பப் போகிறோம்.”
“தேவராயரரே. ஒருவகையில் அந்தக் கற்றளிக்கு இவர்களும் காரணம். ஆனால் நெடுநாட்களாய்.. இராஜராஜ சோழருக்கென ஒரு கனவு இருக்கிறது. அவர் கனவு இந்த உலகில் நிறைவேறும் போது சோழ தேசத்திற்கு எதிரிகள் என்று எவரும் இருக்க கூடாது.”
“அம்மா… கோபிக்க வேண்டாம். எல்லா எதிரிகளையும் தான் நாம் அழித்துவிட்டோமே. இன்னுமா எதிரிகள் இருப்பதாக கருதுகிறீர்கள்.”

“பிரம்மதேவராயரே.. நீங்கள் இதற்கு முன்கண்ட அரசியல் அல்ல இவை. நேருக்கு நேர் நின்று பகைமை தீர்க்கும் வல்லமையும் துணிச்சலும் அற்றுப்போய் கோழைகளுடன் யுத்தம் செய்து கொண்டிருக்கிறோம். இதோ எரிந்து கொண்டிருக்கும் இவர்கள் வெறும் சல்லிவேர்கள். ஆணி வேரொன்று இருக்கிறது. அதுவும் சோழ தேசத்திலேயே இருக்கிறது. அதனையும் இராஜராஜ சோழருக்கு தெரியாமலே அகற்ற வேண்டியிருக்கும். அதன்பின் எல்லாம் சுபமாகும்.”

ஆ.. அம்மா. யார் அந்த ஆணிவேரன்றே கூறுங்கள். அவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்.

அவசரம் வேண்டாம், பிரம்மராயரே. இங்கு நடந்ததையே இராஜராஜருக்கு தெரியாமல் மறைத்தாக வேண்டிய சூழ்நிலை. இதைச் சரியாக செய்து முடிக்கவே நமக்கு சில காலங்கள் ஆகும். அதற்குள் தக்க காலத்தில் மற்றவற்றை எடுத்துறைக்கிறேன். வீரர்கள் எவறேனும் சந்தேகப்படும் நபர் உண்டா.

அப்படியிருந்தால் இவ்விடத்திற்கு வந்திருக்க மாட்டார்கள் அம்மா. அனைவருமே மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்கள். கடுகளவும் இந்த விசயம் வெளியே தெரியாது. நாளைய வரலாறு.. இவர்கள் தூரதேசத்திற்கு அனுப்பபட்டார்கள் என்பதோடு முடிந்துபோகும். அத்துடன் பேச்சின் இடையே கற்றளி என்று கூறினாயே. அது யாருக்காக சோழர்களின் குலதெய்வமான நிதம்பசூதனிக்கா.

“இல்லை பிரம்மராயரே. சாக்தம் இம்மண்ணில் தளைத்தால் மீண்டும் சோழ தேசம் அல்லல்படும். மந்திரங்களும், தந்திரங்களும் முடக்கப்பட்டு, அன்பு சமயமொன்று இங்கு எழவேண்டும். அத்தோடு ஆதித்த கரிகாலரும், அவர் பொருட்டு இதுவரை இறந்த அத்தனை உயிர்களும், இனி இறக்கப்போகிற உயிர்களுக்கும் நல்வழிகாட்ட ஈசனையே சரணடைய வேண்டும். அதனால் பெருங்கற்றளி ஈசனுக்கு உரித்தாகும்.

ஈசன் இனி சோழநாட்டினை பாதுகாப்பான். அன்பே வடிவான அருண்மொழிக்கு இனி ஈசனே துணை.”

சோழம்.. சோழம்.. சோழம்..

சோழ ரகசியம் – சிறுகதை பாகம் 1

முன்குறிப்பு – பொன்னியின் செல்வனைப் படித்தமையிலிருந்து ஆதித்த கரிகாலச் சோழரின் கோரக் கொலையை ஏற்கவே முடியவில்லை. அதன்பிறகு இராஜராஜர் கொலைக்காரணமானவர்களை தன்னுடைய கருணைமிகு இதயத்தினால் நாடுகடத்த மட்டுமே கூறியிருக்கிறார் என்றார்கள். அவர்களின் முடிவு அவ்வாறு இருக்க கூடாது என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். உடையாரை படிக்கத் தொடங்கியதும், எனக்குள் தோன்றியதை சிறுகதையாக வடித்திருக்கிறேன். இது புனைவு மட்டுமே. இப்படி நடந்திருக்க வேண்டுமென்ற ஆதங்கம். இனி கதை..

மும்முடிச் சோழப் பிரம்மராயர் நிதம்பசூதனியைப் பார்த்தார். அந்த தீபந்தங்களின் ஒளியில் அவளுடைய உக்கிர கோலம் அவருக்குள் உற்சாகம் தந்தது. “தாயே. இந்த சோழ தேசத்திற்கும், சோழ பரம்பரம்பரைக்கும் நீயே துணை. நீயே துணை” என்று வணங்கினார். உடனிருந்த மூன்று நபர்கள் ஜெய நிதம்பசூதனி என்று ஒன்றாக வணங்கினார்கள். காதில் குண்டலமும், கைகளில் காப்பும், கால்களில் வீரதண்டும், மார்பில் சன்னவீரமும், கழுத்தில் சிறு அட்டிகையும், இடையில் குறுவாள் பட்டையும் அணிந்த வீரன் எதிரே வந்தான். அவனுடைய நெற்றியில் நிதம்பசூதனியின் குங்குமப் பிரசாதம் விரவியிருந்தது. “வீரனே உன் பெயரென்ன”

“அருண்மொழி”
“உடையார் ராஜராஜ சோழரின் பெயரா. தாயே.. நிதம்பசூதனி. நீயே துணை” என அவனை ஆரத்தழுவினார். “நீயே நம் சோழத் தேசத்திற்காக உயிர்துறக்கப் போகும் இறுதி மனிதனாக இருக்க வேண்டும்.” என்று கூறினார் பிரம்மராயர்.

அன்னையின் முன் மண்டியிட்டான் அவன் கரத்தில் ஓர் கூரிய அரிவாள் தரப்பட, முடிந்த கூந்தலினை வலக்கையால் இறுகப்பற்றி, இடக்கையால் தலையை அரிந்துக்கொண்டான்.
அனைவரும் அவனை பரவசமாப் பார்த்தனர். உயிர்த்துடிப்பு அடங்கும்வரை பிரம்மராயர் கண்களை மூடியபடியே இருந்தார். பிரம்மராயரை நீலன் அனுகினான். “அய்யனே, அரிகண்டம் நிறைவாய் நடந்தேறியது.”

“நீலா.. உரிய முறையைச் செய், நடுகல்மட்டும் ஒருவாரம் பின் நடப்படட்டும். ஏராளமானப் பணிகள் இருக்கின்றன. நான் அரண்மனைக்குச் செல்கிறேன். வாழ்க சோழம். வாழ்க உடையார் சிறீ ராஜராஜர்”
சுற்றியிருந்தோர் வாழ்க வாழ்க என்றனர்.

***
ஏற்ற தருணம் வந்துவிட்டது. மும்முடிச்சோழப் பிரம்மராயர் கர்ஜித்தார். அவரது கர்ஜனையில் அருகில் கேட்டுக்கொண்டிருந்த ஏழு தலைமை  படைவீரர்களும், ஒரு ஒற்றர் தலைவனும் சிலிர்த்தார்கள். ஒற்றை தீப்பந்ததில் அந்த நான்குகால் மண்டபம் கொஞ்சம் ஒளிப்பெற்றிருந்தது. திருமண் நெற்றியில் ஒளிர, இடையில் உறைவாளும், குறுவாளும் இருந்தன. முப்புரிநூல் அவரின் குறுக்கே ஓடிற்று. பிரம்மராயர் தீவிர வைஷ்ணவராக இருந்தாலும் சாக்ததின் கோட்பாடுகளை சோழத்திற்காக கற்று வைத்திருந்தார். அவை வெளியே தெரியாதவாறு ஒரு மெல்லிய துணியை போர்த்தியிருந்தார். அவருடன் இருந்தவர்கள் வேளாலன், குடியோன் என பல வேடத்தில் இருந்தார்கள். சோழதேசத்தில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் யாவரும் அறியாவண்ணம் திட்டங்கள் வகுக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

“சோழப் பேரரசர், எவருக்கும் ஈடில்லா வீரச் சிம்மம் ஆதித்த கரிகாலர் கொலை வழக்கு நாளையோடு முடிவுக்கு வருகிறது. சிறீ ராஜராஜ உடையார் அவர்களுக்கு நாளை தீர்ப்பு நல்குவார். அப்போது அத்தீர்ப்பிலிருந்து யவரும் தப்பிவிடாதப்படி இருக்க. நெடுநாட்களாய் சேகரம் செய்த தகவல்களை உறுதி செய்ய வேண்டும். உடையார்குடியும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களும் நம் காவலுக்கு கீழ் இன்று நள்ளிரவுக்குள் வந்துவிடும். பணி நிமிர்த்தம் பயணத்திலும், உறவினர்கள் ஊர்களுக்கு சென்றவர்களும் கூட சோழ வீரர்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். நாளை வரலாறு நோக்கும் தினமாக இருக்கும்”

அனைவரும் ஒரு சேர “ஓம்” என்றார்கள்.

“கவனமாயிருங்கள். திட்டத்தில் சிறிதளவு பிசங்கினாலும், இராஜராஜரின் அன்பை இழப்போம். அது மரணத்தினைவிடக் கொடியதாக இருக்கும். பணிகள் நிறைய இருக்கிறன்றன. எனவே விடைபெறுகிறேன். நீங்கள் நாளைக் காலை ஆயத்தமாக இருங்கள்.” என்று அந்த மண்டபத்திலிருந்து வெளியேறினார் பிரம்மராயர். அவர் சென்றதும் அதுவரை பரவியிருந்த சந்தனவாசமும் குறைய ஆரமித்தது.
“மாமன்னர் இராஜராஜ உடையார் நாளை எந்தத் தீர்ப்புத் தந்தாலும், நாம் பிரம்மராயரின் சொற்படி நடப்போம். இதனால் மன்னரின் கோபத்திற்கு ஆளனாலும், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு பொறுப்பாவோம். இது சோழத்திற்காக. உறுதியளியுங்கள்” என தலைமை ஒற்றர் வாமதேவம் கைகளை நீட்டினார். அனைவரும் அவருடைய கையின் மீது கைகளை வைத்து உறுதியளித்தார்.
***

விஜயாக்கா – சிறுகதை

29733691103_2493d06955_b

சன்னமாய் தட்டுமுட்டு சாமான்களை உருட்டும் சத்தம் கேட்டது. அதுவே கொஞ்சம் கொஞ்சம் அதிமாக கேட்கத் தொடங்கியது. அம்மாச்சி இருமல் சத்தம் மூலையில் இருந்துக் கேட்டது.
ஏ. கழுத.. அதான் முழுப்பு வந்துடுச்சுல்ல. எந்திருச்சி தொலைக்க வேண்டியதுதானே  என சத்தமிட்டுக் கொண்டே சட்டியில் எதையோ கடைந்து கொண்டிருந்தாள் அம்மா.
ஏன்தான் சீக்கிரமே விடிந்து தொலைக்கிறதோ. இரவு சின்னக்குஞ்சானோட விளையாடிக் கொண்டிருந்தது மட்டுமே ஞாபகம் இருக்கிறது. எப்படி தூங்கினேன் என்று தெரியவில்லை. அம்மா விரிப்பைப் போட்டு என்னைக் கிடத்தியிருக்க வேண்டும். சின்னக்குஞ்சான் எங்கிருக்கிறது என்று தேடிக் கொண்டே கொல்லைப் பக்கம் சென்றேன். செங்கலை எனக்கும் சேர்த்தே பொடியாக்கி வைத்திருந்தாள் அம்மா.

கொஞ்சத்தை அள்ளி பீச்சாங்கையில் போட்டுக் கொண்டு, சோத்துக் கையில் எச்சிலைத் துப்பி செங்கல் பொடியை தொட்டு ஈ எனக்காட்டி பல்லை விளக்கினேன். அங்கிருந்து அவள் கவனித்துக் கொண்டே இருப்பாள் என்று தெரியும். ஆனாலும் நான் சின்னக்குஞ்சானை பார்த்தேன். அவன் கொட்டிலிலேயே இன்னும் இருந்தான். வழக்கமாய் இந்நேரம் எழுந்து அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்க வேண்டும். ஏன் நான் சீக்கிரம் எழுந்துவிட்டேனோ என்று தோன்றியது. என் காலுக்கு அடியில் ஒரு உண்டை ஓடியது. அது பீயுருட்டி வண்டு. சாணியை உருண்டையாக உருட்டி லாவகமாய் எடுத்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்து. நான் குத்துக்காலிட்டு உட்காந்து அதன் உருவத்தைப் பார்த்தேன். அது இப்படியொருத்தன் பார்த்துக் கொண்டிருக்கிறானே என்ற கூச்சம் இல்லாமல் ஓடியது. எழுந்து அதைக் காலால் ஒரு எத்துவிட்டு அம்மாவின் பக்கம் வந்தேன். அந்த வண்டு எவன்டா என்னை உதைத்தது என என்னை தேடிக்கொண்டிருக்கும், உள்ளுக்குள் மகிழ்ந்தேன்.

அம்மாவிடம் ஈ எனக் காட்டினேன். அவள் போய் வாய்க்கொப்புளி என்றவுடன் அங்கிருந்து தொட்டியிலிருந்து நீரெடுத்து வாய்க்குள் இட்டு அந்நாந்து குலவை இட்டேன். வாயிலிருந்து நீீர் மார்பில் வழிந்தது. நன்றாக கொப்பிலித்துவிட்டு முகத்தில் நீரை இறைத்து முகத்தில் அடித்தேன். டவுசர் நினைந்துவிடாதவாறு உடல்முழுக்க நனைத்துவிட்டு நிமிர்ந்தபோது, வயிற்றுக்குள் பிசைவு உண்டாகியது. கீறிச்சிடும் தகரக்கதவைத் திறந்தேன். உள்ளே பெரிய குழியும் இரு கால் வைக்க மேடும் கொண்ட கக்கூஸ் இருந்தது. அதன் வலதுபக்கம் ஒரு பழைய இரும்பு சட்டியில் நிறைய சாம்பலும், கதவுக்கு அருகே நீர்வாளியும் டப்பாவும் இருந்தன. டவுசரை கழட்டி தோளில் போட்டுக் கொண்டு அந்த கால்வைக்கும் இடத்தில் ஒரு காலை கவனமாக வைத்துக் கொண்டேன். அடுத்தக் காலை வைக்கும் போது கொஞ்சம் பயமாக இருந்தது. இது பெரியவர்களுக்கு செய்யப்பட்டது. அதனால் குழியின் அகலம் அதிகமாக இருந்தது. குழிக்குள் எல்லோரும் கழித்த மலம் விதவிதமாக இருந்தது. நிறைய சாம்பலை அள்ளிப் போட்டிருந்தார்கள். அப்படியும் அதில் இருந்த மஞ்சள் நிறம் மறைவதாய் இல்லை.

என்னுடைய மலம் தொங்கியவாறு இருந்து அறுந்து அறுந்து விழுந்தது. வயிற்றுள் ஒரு வலியுடன் கூடிய இன்பம் கிடைத்தது. எனக்கு அருகில் ஒரு எறும்பு எதையோ தூக்கிக் கொண்டு ஓட அதைப் பின்தொடர்ந்து அங்கும் இங்கும் அலைந்தவாரு மற்றொரு எறும்பும் ஓடிக்கொண்டிருந்தது. அதனுடைய உணவை இது எடுத்துக் கொண்டு போயிலிருக்கலாம். சட்டென குழிக்குள் வெளிச்சம் பரவியது. அதன்பின்பக்கம் இருந்த தகரத்தை தூக்கி எட்டிப்பார்த்த ஒட்டச்சி “ஏலே.. மணி என்னாவுது இன்னும் கக்கூச உட்காந்துக்கிட்டு கிடக்க என்றாள்”. நான் அதிர்ந்து என்னுடைய டவுசரை முன்னுக்கு வைத்து மறைத்து சுவரோடு நின்றிருந்தேன். “என்னாடா பல்லிக் கணக்கா சுவத்துல ஒட்டிக்கிட்டு இருக்க. அந்த சாம்பல அள்ளி குழிக்குள் போடு” என்றாள். எனக்குள் எழுந்த படபடப்பு அடங்குவதற்குள், அவளிடம் திட்டுவாங்ககூடுமென நான் டவுசரை எங்கு வைத்துக் கொண்டு சாம்பலை அள்ளுவது. அவளிடம் அனுமதி கேட்டு கழுவிக் கொள்ளலாமா. ஒருவேளை அதுக்கும் திட்டினாள் என்ன செய்வது என்று பயந்து டவுடசை தூர வைத்துவிட்டு சாம்பலை கையில் அள்ளிப் போட்டேன். “இன்னும் போடு” .நானும் போட்டேன்.

சாம்பல் முழுக்க மூடியதும், அகப்பையால் அள்ளி அள்ளி கூடைக்குள் போட்டுக் கொண்டாள். எல்லாவற்றையும் அள்ளுவதற்குள் நான் ஓடிச்சென்று கழுவி டவுசரையும் போட்டுக் கொண்டு வெளியே வந்துவிட்டேன். என்ன நடந்தது என்று யோசிப்பதற்குள் வீ்ட்டின் வாசல் பக்கம் வந்து நின்றாள். ஐயயோ.. இப்போதும் திட்டுவாள் போலிருக்கே என்று நான் பின்பக்கம் ஓடினேன். “அம்மா.. அம்மாவோவ்..” என்னுடைய அம்மா வந்து பார்த்தால், ஒட்டச்சியைப் பார்த்தும் அவள் கக்கூசுக்குப் போய் தண்ணியை ஊற்றிவிட்டாள். ஒட்டச்சி விளக்கமாறால் அந்தக் குழியைக் கழுவி விட்டு தன்னுடைய கூடையை இடுப்பில் வைத்துக் கொண்டு கிளம்பினாள்.

“ஏன்டா கொஞ்ச நேரம் நின்னு தண்ணியை ஊத்திக்கிட்டு வந்திருக்கலாமுள்ள”
“அந்த ஒட்டச்சி, நான் ஒட்காந்து இருக்கும்போதே திறந்து பார்த்துடுச்சு.”
அம்மா சிரித்துக் கொண்டே, “நீ பொழுது முழுக்க தூங்கி எந்திருச்சி வெளுக்கிப் போனா, அவ திறந்து பார்க்கத்தான் செய்வா. சீக்கிரமே கக்கூசுக்கு போயிட்டு வந்தடனும்” என்றாள். நான் சரியென மண்டையை ஆட்டினேன். இரண்டு அடி என்னைக் கடந்து எடுத்துவைத்தவள். சற்று முகத்தினை மட்டும் திருப்பி,..”அவளை ஒட்டச்சின்னு இனி சொல்லாதே, விஜயாக்கன்னு கூப்பிடு. பாவப்பட்ட சாதியில்ல பிறந்து ஊரு பீயை அள்ளி பிழைச்சுக்கிட்டு இருக்கா.” என்றபடி நடந்தாள் அம்மா.