முன்னோர்களைத் தேடி ஒரு பயணம் – 4

பயணத்தின் இறுதி நாள். சிறுவயது முதல் கேட்டு வளர்ந்த பொன்னரையும் சங்கரையும் தேடி பயணப்பட்டோம். அண்ணன்மார் கதையின் ஆரம்பம் மதுக்கரையில் இருந்து ஆரமிக்கிறது. அந்த ஊர் எங்கள் ஊரின் அருகில் இருக்கிறது என்பது தகவல். கலைஞர் எழுதிய காவியத்தில் சீத்தப்பட்டி என்ற ஊர் வருவதாகவும், அதுவும் எங்கள் ஊருக்கு அருகில் இருப்பதையும் என் சிற்றன்னை குறிப்பிட்டார். கதையை அறியாமல் இடத்தின் மகிமையை அறிய இயலாது அதனால், மூன்று தலைமுறை கதையை எளிமையாக இங்கு சொடுக்கி படித்துவிட்டு வாருங்கள்.

என்ன கதை தெரிந்துவிட்டதா?. இனி பயணத்தினை தொடர்வோம். கரூர் நகரிலிருந்து வீரப்பூர் செல்ல அரைமணி நேரம் ஆனது. முதலில் பெரியகாண்டியம்மன் கோவிலுக்கு சென்றோம். இந்த அம்மன் தான் தங்கை அருக்காணிக்கு ஓமதீர்த்தம் தந்ததாக சொல்கின்றார்கள். கோவிலின் முன் திருவிழாக் கடைகள் நிரந்திரமாக இருக்கின்றன. அதைவிட பிச்சைக்காரர்களும் இருக்கின்றார்கள். குலதெய்வக்கோவில்களில் முதன் முதலாக பிச்சைக்காரர்களை அன்றுதான் பார்த்தேன்.

நாள்தோறும் வருகின்ற கூட்டத்திடம் கொஞ்சம் பணம் கிடைத்தாலே போதும் என்று நினைக்கின்றார்கள். இவர்களாவது தேவலாம் என்றிருந்தது, உள்ளே பூசாரிகள் அடிக்கும் கொள்ளை. தீபாராதனை காட்டுவார் ஒருவர், அர்ச்சனை செய்வார் ஒருவர், சந்தனப் பொட்டு வைக்கிறார் ஒருவர். ஆனால் எல்லோரும் காசு காசு என பிய்த்து எடுக்கின்றார்கள். கொஞ்சம் ஏமாந்தால் மொட்டை அடித்துவிடுவார்கள். கோவிலை சுற்றி வருகையில் கூட இரண்டு மூன்றுபேர் நிற்கின்றார்கள். தீர்த்தம் தெளிப்பதற்கு கூட தனியாக வசூல். ஆச்சிரியம் என்னவென்றால் பூசாரிகளெல்லாம் தங்கள் பணத்தினை தனித்தனியாக கேட்டு வாங்கிக்கொள்ள, பிச்சைக்காரர்கள் ஒற்றுமையாக ஒருவரிடம் கொடுத்துவிட்டு போங்கள் நாங்கள் பிரித்துக்கொள்கிறோம் என்றார்கள்.

அடுத்து சங்கரை பொன்னர் அடைத்துவைத்தாக சொல்லப்படுகின்ற இடத்திற்கு சென்றோம். அங்கே கன்னிமார்களும், பொன்னர், சங்கர், அருக்காணிக்கும் சிலை வைத்திருக்கின்றார்கள். ஒரு திருவிழா கூட்டமே அங்கிருந்தது. நாங்கள் செல்லும் போது, ஒரு பணக்காரப் குடும்பம் சமையல் செய்து கொண்டிருந்தது. அவர்களின் அருகே இருந்த சுமோவில் தி.மு.க பிரமுகரின் பெயர் கருப்பு சிவப்பில் மின்னிக்கொண்டிருந்தது. பூசாரிகளிடம் கதைகளைக் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டேன். ஆச்சரியமாக ஒத்துக்கொண்டார்கள். அந்த இடத்திற்கு அருகே மகாமுனியின் சிலை இருக்கிறது. மிகவும் சக்தி வாய்ந்த காவல்தெய்வமாக அதை கொண்டாடுகின்றார்கள்.

அதன்பிறகு காலம்காலமாக மர்மமாகவே இருக்கும் படுகளம் பகுதிக்குச் சென்றோம். பெரிய மைதானம் போல இருந்தது படுகளம். சுற்றிலும் மதில் சுவர் எழுப்பியிருக்கின்றார்கள். அதற்குள் பொன்னர், சங்கர் தற்கொலை செய்து கொள்வது, வீரபத்திரன் முறசு கொட்டுவது என பல சிலைகள் சிமென்டால் செய்யப்பட்டிருக்கின்றன. மைதானத்தின் ஒரு பகுதியில் கோவில் கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. அங்கு புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டும், மறுத்துவிட்டார்கள். அதற்காக விட்டுவிட இயலுமா. பொன்னரும் சங்கரும் மனைவிகளுடன் இருந்ததை படம்பிடித்து கொண்டேன்.

இந்னும் இரண்டு இடங்கள் மீதம் இருப்பதாக சொன்னார்கள். ஒன்று போரில் சிந்தப்பட்ட ரத்தம் கற்களாக இருக்கும் பகுதி, மற்றொன்று பெரியக்கா தபசு என்கிற இடம். படுகளம் பகுதிக்கு அருகிலேயே போர் நடந்ததாக சொல்லப்படுகின்ற இடமும் இருக்கிறது. அந்தப்பகுதிக்கு சம்மந்தம் இல்லாத கற்கள் அங்கே கொட்டப்பட்டிருக்கின்றன. தூரத்திலிருந்து பார்க்கையில் கரிய நிற கற்களின் பரவலுக்கு மேல், ஒரு குடிசை தெரிகிறது. அதற்குள் வழக்கம் போல, பொன்னர் சங்கரின் சிலைகள். அங்கிருக்கும் கற்களை ரத்தம் என்று நம்ப முடியவில்லை. மற்ற கற்களைக் காட்டிலும் அந்தக் கற்கள் எடை குறைவாக இருந்தன. அங்கிருக்கும் பூசாரி ஒரு பெரிய கல்லை வைத்துக்கொண்டு இதுதான் உண்மையான ரத்தக் கல் என்று வருவோரின் தலையில் வைத்து, காசு வாங்கிக் கொண்டிருந்தார். அந்தக்கல்லின் எடை மிகவும் குறைவாக இருந்தது. அவ்வளவு ரத்தம் வந்திருந்தால் நிச்சயம் மனிதன் பிழைத்திருக்கவே வாய்ப்பில்லை. ஆனால் மனிதனின் நம்பிக்கைகள் அதையெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை எந்பது வேறுவிசயம். இவைகளையெல்லாம் பார்ப்பதற்குள்ளவே மாலை நேரம் நெருங்கி விட்டது. அடுத்த முறை வந்தால், பெரியக்கா தபசை பார்க்கலாம் என்று சொல்லிவிட்டார்கள்.

என்னுடைய பள்ளித் தோழியின் குலதெய்வம் பொன்னர் சங்கர். அவள் டியூசன் நேரத்தில் அந்தக் கதையை கூறுவாள். நமக்குதான் கதைகள் என்றாலே கொள்ளைப் பிரியமாயிற்றே. பட்ப்பை விட்டுவிட்டு நாள்தோரும் கதைகள் கேட்டுக்கொண்டே பொழுது போனது. வீரப்பூரின் ஒவ்வொறு இடங்களுக்கு செல்லுகையிலும் அவள் சொன்ன கதைகள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தன. இன்று அவள் எங்கிருக்கிறாள் என தெரியாது. ஆனால் வருடத்திற்கு ஒரு முறை அவள் குடும்பத்துடன் வந்துபோகும் இடத்திற்கு நானும் வந்திருக்கிறேன் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. பெரியசாமி கோவிலுக்கு போகும் போதெல்லாம் என்னுடைய பாட்டாவின் பெயர் கல்வெட்டில் பதியப்பட்டிருப்பதை பெருமையாக பார்த்துவிட்டு வருவேன். என்னுடைய எத்தனை தலைமுறைகள் அங்கே கால்தடம் பதித்திருக்கின்றன என எண்ணும் போதே, ஒரு இனம் புரியாத சினேகம் வருகிறது. காலம் காலமாக இந்தக் கதைகள் நம்மிடைய ஒரு பிணைப்பினை ஏற்படுத்தி தந்திருக்கின்றன. அதன் சாட்சியாக வீரப்பூர் போன்ற ஊர்கள் இன்றும் இருக்கின்றன. அவற்றின் பெருமைகளை உணர்ந்து நாம் அடுத்த தலைமுறைக்கும் இந்த வாய்ப்பை தருவதே மிகப்பெரிய விஷயம் என்று நினைக்கிறேன்.

முன்னோர்களைத் தேடி புறப்பட்ட எங்கள் முதல் பயணம் இனிதே நிறைவுற்றது. ஆனால் இது முடிவல்ல, ஒரு மாபெரும் தொடக்கம் என்றே தோன்றுகிறது.

முன்னோர்களைத் தேடி ஒரு பயணம் – 3

மூன்றாம் நாள். கருவூர் என்ற அழைக்கப்பட்ட கரூர் மாநாகரிலிருந்து திண்டுக்கல் நகரை நோக்கி செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது. மணவாடி. இந்த இடத்தினை தொட்டியச்சி, முத்தாலம்மன் என்ற இரண்டு தெய்வப் பெண்களின் பாதம் பட்ட இடமாக சொல்கிறார்கள். ஒரு இடத்தில் ஒரு மூதாதையரின் கதை கிடைப்பதே அபூர்வம் என்கின்றபோது, ஒரு இடத்தில் இரண்டு மூதாதையரின் கதை கிடைத்தது அற்புதம் என்றே சொல்ல வேண்டும்.

தொட்டியச்சி கிராமத்திற்கு செல்லும் சாலையில் குடிகொண்டிருக்கின்றாள். ஒரு கல்லினை வைத்து இதுதான் தொட்டியச்சி என்று வணங்குகிறார்கள் ஊர்மக்கள். நவக்கன்னிகள், மாசி பெரியண்ண சுவாமி, கருப்பு என காவல் தெய்வங்களும் இருக்கின்றன. கற்கலால் அமைக்கப்பட்ட கோவிலோ, குடிசையோ அல்லாமல் திறந்தவேளியில் யாருக்கும் கட்டுப்படாதவளாக இருக்கிறாள். அவளுக்காக கோவில் அமைக்க எத்தனை முறை கோரிக்கை வைத்தாலும், மறுத்துவிடுகிறாள்.

இவளுக்கு அப்படியே நேர்எதிரானவள் முத்தாலம்மன். இவளுக்கு ஏக இடங்களில் கோவில்கள் இருக்கின்றன. கிராமத்திற்கு நேர் எதிரே சாலை கடந்து சென்றால், முத்தாலம்மனை தரிசிக்கலாம். அதிலும் இங்குள்ள கோவில் அழகு நிறைந்தது. அங்கிருக்கும் சிலையைப் பற்றியே தனி இடுகை இடலாம். அத்தனை கதைகள் சொல்கின்றார்கள். நான் தரிசனம் செய்துவி்ட்டு, கதைகள் கேட்டேன். அந்தசிலை மண் சிலை என்ற போது என்னால் நம்பவே முடியவில்லை.

அதை விடவும் நம்ப முடியாத விசயம். சின்னஞ்சிறு கோவிலில் இருக்கும் அவளுக்கு இருக்கும் சொத்துகள். கிராமத்தின் பெரும்பாலான நிலங்கள் அவளுக்கு சொந்தமானவை. இப்போது பராமரிக்க ஆளில்லாமல் எல்லாம் கைவிட்டு சென்று கொண்டிருக்கிறது. அதற்காக வருமானம் இல்லையென சொல்லிவிடமுடியாது. சமீபத்தில் கோவில் திருவிழாவின் போது ஒன்றறை லட்சம் பணம் வசூலாகி இருக்கிறதாம். அதுவும் முறை கட்டளை என யாரிடமும் காசே வசூலிக்கவில்லை. எல்லாம் அவர்களாகவே கொடுத்த காசு என்றார் கோவில் திருவிழாவை முன்நின்று நடத்தி வைத்த பெரியவர்.

அந்தக் கிராமத்தினைச் சுற்றி தொட்டியம் நாயக்கர் மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். வேட்டையாடும் தொழில் செய்திள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றார்கள். அவர்கள் வேட்டைக்காக வைத்த பொறிகளைக் கூட சிலர் பார்த்திருக்கின்றார்கள். கடந்த ஐம்பது வருடங்களில் அவை முற்றிலுமாக அழிந்துவிட்டன. இப்போது எந்த தடயமும் கிடைக்கவில்லை. தொட்டியச்சி கதையும், முத்தாலம்மன் கதையும் நாயக்கர் மற்றும் வெள்ளாலர் இனமக்களோடு தொடர்புடையது.

தொட்டியச்சி கோவில்வீடு

தொட்டியச்சி நாயக்கர் இனத்தினை சார்ந்தவள். மிகுந்த திறமைசாலி. அவளுடன் சேர்ந்து எல்லோரும் வேட்டைக்கு சென்ற போது, அவள் மட்டும் வழி தவறிவிட்டாள். ஓரிரவு வெளியில் தங்கிய பெண்ணை ஏற்றுக்கொள்ளமாட்டார்களலாம் நாயக்கர் மக்கள். எனவே தொட்டியச்சி தீக்கிரையாகிப் போய்விட்டாள். அதை அறிந்த சில சோழிய வெள்ளாலர் இன பெரியவர்கள் இவளையே குலதெய்வமாக வணங்குவதாக முடிவெடுத்திருக்கின்றனர்.

இப்போதுகூட திருவிழாவிற்கு நாயக்கர் இனத்திலிருந்து ஒரு ஜோடி வந்து விருந்தினராக கலந்து கொள்ளும் வழக்கம் இருக்கிறது. அவர்கள் கைகளால் நீர் எடுத்துவந்து அபிசேகம் செய்து மக்களுக்கு வழங்குகிறார்கள். திருவிழாவிற்கு வர மறுத்துவி்ட்டாள் நாயக்கர் இன மக்களை தொட்டியச்சி தண்டித்துவிடுவாள் என்ற பயம் எல்லோர்க்கும் இருக்கிறது. வேறு சாதியை சார்ந்த பெண் என்றாலும் இங்கு வாழும் சோழிய வெள்ளாலர் இன மக்கள் அவளை குலதெய்வமாக போற்றி வழிபடுகின்றனர்.

பயணம் தொடரும்…

முன்னோர்களைத் தேடி ஒரு பயணம் – 2

பயணத்தின் இரண்டாம் நாள். ஒருவந்தூர் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு முதலில் சென்றோம். ஆடுகளை பலி கொடுக்க பெரும் கூட்டம் நின்று கொண்டிருந்தது. கருவறையில் சாமிக்கு தீபம் காட்டகூட பூசாரிகள் இல்லை. ஆனால் திரும்பும் இடமெல்லாம் குடும்பத்துடன் நின்று கொண்டிருந்தார் பட்டவன்.

யார் இந்த பட்டவன் என்று தொன்றுகிறதா. இவர் உண்மையான மூதாதயரின் வடிவம். நன்கு வளர்ந்த மரம் திடீரென்று பட்டுபோனது என்பார்களே. அதே பொருளில் இறந்த மனிதனை பட்டவன் என்கிறார்கள்.

எத்தனையோ முறை செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சென்றிருக்கிறேன். தேர்திருவிழாவில் கடையில் விற்கும் மிட்டாய்களுக்காக ஏங்கியிருக்கிறேன்.ஆனால் அன்றுதான் கண்களில் பட்டார் பட்டவன். பட்டவனின் பெருமையை என்னுடைய அப்பாயி சொல்லிக் கொண்டு வர, நவலடியான் கோவில் வந்தது. நவலடி கருப்பு புகழ் பெற்றிருந்தாலும், மதுரைவீரனுக்கும் தனி சந்நதி உண்டு. அங்கிருக்கும் பூசாரி பூஜையின் போது சொல்வதை கேட்பதே இன்பமாக இருக்கும். ஏன் என்றால் அத்தனையும் தெளிவான தமிழ், நல்ல உச்சரிப்பு. அர்ச்சனையின் போது பால் பெருகுதலிருந்து ஆயுள் நீடிப்பு வரை அழகாக எடுத்து சொல்லுவார். தங்கள் இன மக்களின் முகவரியை பதிந்து வைத்திருக்கின்றார்கள் கோவில் நிர்வாகிகள். மூடியிறக்கும் இளம் குழந்தைகளுக்கு உடல் பாதிப்பு வரக்கூடாதென வெந்நீர் ஏற்பாடு செய்து தருகின்றாரகள். இந்த முறையை நான் இங்கு மட்டுமே பார்த்தேன்.

அடுத்து மோகனூரில் இருக்கும் மூன்று அண்ணன்மார்கள் கோவில். பேரைக்கேட்டதும், அண்ணன்களுக்காக கட்டப்பட்ட கோவில் என்று நினைத்தேன். ஆனால் அது தங்கைக்கு அண்ணன்கள் எழுப்பிய கோவில். சோழர்கள் காலத்தில் உடன்கட்டை ஏறிய தங்களுடைய தங்கைக்காக கோவில் எழுப்பியிருக்கின்றார்கள். வழக்கமான கோவில் அமைப்பு இல்லாமல் வெளித்தோற்றத்தில் மண்டபம் போல தோன்றினாலும், கருவறையில் வள்ளியம்மனுடன், நம்பியண்ணனும் காட்சிதருகிறார். அவர்களுடைய அண்ணன் குடிகள் 2160என 2001ம் ஆண்டு செதுக்கப்பட்ட கல்வெட்டு சொல்கிறது. 2010 நடந்து கொண்டிருக்கும் வேளையில் இன்னும் குடிகள் உயர்ந்திருக்க கூடும். இத்தனை குடிகளையும் ஒருங்கினைத்து பேணி வருவதை பார்க்கும் போது சிலிர்ப்பாக இருந்தது.

அந்த சிலிர்ப்பு அடங்குவதற்குள் திரௌபதி அம்மன் கோவிலை கடந்திருந்தோம். காப்பியத்தலைவி கண்ணகியை கடவுளாக வழிபாடுவது போலவே சில இடங்களில் திரௌபதிக்கும் கோவில்கள் உண்டு. அடுத்ததாக சென்றது ராசாராசாயி கோவில்.

ராஜா என்பதை ராசா என்றே உச்சரித்து பழக்கப்பட்ட மக்கள் ராணியை ராசாயி என்றே அழைக்கின்றனர். படையெடுப்புகளின் போது கன்னி வேட்டை நடத்துபவர்களோடு கோவிலின் புராணக் கதை சம்மந்தம் கொண்டிருக்கிறது. அங்கு ஆச்சரியம் கொள்ள வைத்த விசயம் கருவறையில் ராசா, ராசாயோடு முருகன் இருப்பதுதான். அந்த ராசா முருகனை வழிபட்டுவந்ததாக பூசாரி சொன்னார். அதே சமயம் கருப்பையும் வழிபட்டு வந்ததால் அதற்கென தனி சந்நதியும் அமைக்கப்பட்டிருந்தது.

கருப்புசாமி சந்நதிக்கு எதிரே பலியாடுகள் நின்றுகொண்டிருந்தன. கிடா வெட்ட வந்த ஒரு குடும்பம் (ஒரு ஊர் எனவே வைத்துக்கொள்ளாலாம் அவ்வளவு கூட்டம்) செய்வதறியாது நின்று கொண்டிருந்தது. காரணம் தலையில் ஒரு குடம் தண்ணீர் தெளித்தும் ஆடு அசரமல் நின்று கொண்டிருந்ததுதான். தெய்வக் குத்தம் என்று பயந்து சில பெண்கள் அழுதே விட்டார்கள். என்னுடைய அப்பா ஒரு யோசனை சொன்னார். ஐஸ் தண்ணீர் தெளித்தால் தலையை ஆட்டுமென. அப்படியே செய்தார்கள். நல்ல வேளையாக ஆடு இசைந்தது. அவர்கள் நெகிழ்ச்சியோடு நன்றி கூற, நாங்களும் மகிழ்ச்சியோடு புறப்பட்டோம். இரண்டாவது நாள் பயணம் இனிதே முடுவுற்றது.

பெரும்பாலான சிறுதெய்வ கோவில்களில் முதலில் தடைவிதிக்கப்படுவது இந்த பலிகளுக்குதான். இதன் அரசியல் மிக பயங்கரமானது. சுருக்கமாக சொன்னால் இது பாரம்பரிய மக்களை விரட்டிவிட்டு பாப்பான்களை கோவிலுக்குள் கொண்டும் செல்லும் வழி. அதுசரி தொட்டியச்சி, முத்தாலம்மன் பற்றி சொல்கிறேன் என்றேனே,… அது அடுத்த பகுதியில். ஆனால் சாதிகளின் வீச்சம் இல்லாமல் அந்த தெய்வங்களின் கதையை சொல்ல முடியாது. அதனால் சாதியை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

பயணம் தொடரும்.

முன்னோர்களைத் தேடி ஒரு பயணம் – 1

பயணங்கள் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஆன்மீகச் சுற்றுலாவாக குடும்பத்துடன் செல்லும் போது, கோவில்களின் வரலாறுகளையும், சிற்பக் கலையும் வெகுவாக ரசிப்போம். ஆனால் இந்த முறை கடவுள்களைத் தேடி பயணப்படவில்லை. நம் முன்னோர்களைத் தேடி பயணப் பட்டோம்.

துறையூயில் இருக்கும் மாசி பெரியசாமியை தரிசனம் செய்வது மட்டுமே என் பெற்றோர்களால் திட்டமிடப்பட்ட ஒன்று. மற்றவைகளை என்னிடமே விட்டுவிட்டார்கள். பிச்சாயி கதை நடந்த இடம் துறையூரி்ல் இருக்கும் பெருமாள் மலையின் அடிவாரம் என்று வலைப்பூவில் படித்திருந்ததை சொன்னேன். சரி முதலில் அங்கு செல்லாம் என்று சொன்னார்கள். அடுத்த சிலமணி நேரங்களில் பிச்சாயி,வீரய்யா கோவிலில் இருந்தோம்.

பிச்சாயி கோவில்

பிச்சாயி கதையும், கோவில் அமைப்பு பற்றியும் தனித்தனி இடுகையில் சொல்கிறேன். முக்கியமாக சொல்லப்பட வேண்டியது அழகு நிறைந்த அந்த குதிரைகள். அடுத்ததாக பெருமாள் மலையில் பெருமாளின் தரிசனம். தென் திருப்பதி என அழைக்கப்படுகிறதாம் பெருமாள் மலை. பிரகாரச் சிற்பங்கள் அழகாக இருந்தன. அதைவிடவும் சொல்லப்பட வேண்டியது. அங்கே இருந்த கருப்புசாமி சந்நதியைதான். பெருமால் கோவிலில் விபூதி பிரசாதத்துடன் ஒரு அடி குதிரையில் ஒய்யாரமாக இருக்கிறார். எங்கள் எல்லோருக்கும் வியப்பாக இருந்தது.

வியப்பு தீருவதற்குள் வைரசெட்டி பாளையத்திலுள்ள காமாட்சியம்மன் கோவிலில் இருந்தோம். அங்கே இருக்கும் மாசி பெரியண்ணன்தான் எங்கள் குலதெய்வம். சிலர் அவரை சிவன் ரூபம் என்கின்றார்கள். சிலர் பெருமாள் என்கின்றார்கள். சைவ வைணவ பிரட்சனையில் எங்கள் சாமியின் தலையில் நாமமும், பட்டையும் மாறி மாறி விழுந்து கொண்டிருப்பது ஒரு பெரும்கதை.

பட்டை அடித்துக் கொண்டு பெரியசாமி

பட்டை அடித்துக் கொண்டு பெரியசாமி

நாமம் போட்டுக் கொண்டு பெரியசாமி

நாமம் போட்டுக் கொண்டு பெரியசாமி

சாமியை புகைப்படம் எடுக்க முற்பட்ட போது “தம்பி மனுசனுங்கக் கூட விளையாடலாம், தெய்வத்தோட விளையாடாதே” என்று பயமுறுத்தினார் பூசாரி. “ஐயா, பெரியசாமி உன்னை எல்லா இடங்களுக்கும் கொண்டுப் போக அருள் செய். ” என்று வேண்டிக் கொண்டு புகைப்படம் எடுத்தேன். பூசாரிக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. “நீ, சொன்னா கேட்கமாட்டியா தம்பி!” என்று அதட்ட, “ங், சாமிக்கிட்ட சொல்லிட்டுதான் படம் எடுக்கறேன். நீங்க செத்த சும்மாயிருங்க” என்று நான் வாதம் செய்ய வேண்டியதாயிற்று.

அருகிலிருக்கும் கல்லாத்துக் கோம்பைக்கு சென்றோம். அது பெரியசாமிக்கென தனியாக கோவில் இருக்கும் இடம். அங்கு பெரியசாமிக்கு சைவ வைணவ பிரட்சனையோடு சாதிப் பிரட்சனையும் உண்டு. ஒருபுறம் பழைய கோவில், அங்கு பூசாரி சோழிய வெள்ளாளர். இன்னொரு புறம் புதிய கோவில் அங்கு முத்தரையர் பூசாரி. ஒரு கோவிலுக்கு வரும் பக்தர்கள் மறுகோவிலுக்கு செல்வதில்லை. கடவுளுக்கே இந்த நிலையா என்று நொந்து கொண்டேன்.

நாமக்கல் அருகிலிருக்கும் எட்டுகை அம்மன் கோவிலுக்கு செல்லாம் என்றேன். எட்டுகை அம்மனை கொல்லிமலையில் தரிசித்திருக்கிறேன். ஆனால் கீரம்பூரில் அத்தனை பெரிய கோவிலில் குடிகொண்டிருப்பாள் என கனவிலும் நினைக்கவில்லை. ஏக்கர் கணக்கில் தங்கள் குலதெய்வத்திற்கு கோவிலை அமைத்திருக்கின்றார்கள் கொங்கு வெள்ளாளர் சமூகத்தினர்.

எட்டுகை அம்மன் கோவில்

குலதெய்வங்களுக்காக அமைக்கப்பட்ட பெரிய கோவில் இதுவாகத்தான் இருக்குமென நினைத்தேன். செம்பூதத்தான் பண்ணை குலமக்கள் கோவிலில் ஓர் அறிவிப்பு பலகையை வைத்திருந்தார்கள். தங்களுடைய குழந்தைகளின் கல்விக்கு உதவும் நோக்கத்தில் அவர்களின் செயல்பாடு பிரம்மிக்க வைத்தது. என்னுடைய அப்பா அதனை பாராட்டிக் கொண்டே இருந்தார். இதனைப் பற்றியும் தனி இடுகையில்.

ஊருக்கு செல்லும் வழியில் வலையப்பட்டிக்கு சென்றோம். அங்குள்ள குன்னிமரத்தான் கோவிலுடன் எங்களுடைய முதல்நாள் பயணம் முடிவடைந்தது.

சாதிகளைக் கொண்டு கடவுளையே இப்படி பந்தாடுகின்றவர்கள் இருக்கும் அதே வேளையில் சாதிகளை இணைக்கும் தொட்டியச்சி, முத்தலாம்மன் பற்றி வரும் இடுகையில்,…

பயணம் தொடரும்,..

தடிவீரசாமி கதை – தமிழ் மண்ணின் சாமிகள்

திருச்செந்தூர் தேவேந்திர குல வேளாளர் (பள்ளர்) சாதியைச் சார்ந்த சிலர் வாழ்ந்து வந்தார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் செம்பாரக்குடும்பன், சந்திரக்குடும்பன், ரியக்குடும்பன் கியோர். இவர்கள் மூன்று பேரும் பள்ளர் சாதியினர் வாழ்ந்த ஏழு ஊர்களிலும் (ஏழு ஊர்கள் முருகன்குறிச்சி, முனிக்குளம், வெள்ளக்கோயில், தெப்பக்குளம், பாளையன்கோட்டை, திருநெல்வேலி, வண்ணாரப்பேட்டை எனக் கூறுவர்) உள்ள நிலங்களில் பயிர் செய்து வாழ்ந்தனர். இந்த நிலங்கள் அரசுக்குச் சொந்தமானவை. இந்த மூன்று பேர்களில் தலைவராகக் கருதப்பட்டவர் செம்பாரக் குடும்பன். இவர்தான் பயிர் செய்த நிலங்களின் வருமானத்தில் ஐந்தில் இரண்டு பஙகை வரியாக அரண்மனைக்குக் கொடுத்து வந்ததார்.

ஏழு ஊர்களிலும் உள்ள குடும்பன்மார்களுக்குத் துணி வெளுக்கும் பொறுப்பை நீலவண்ணான் என்பவன் கவனித்து வந்தான். இவன் சாதியில் புரத வண்ணான். இவனது மனைவி புரதமங்கை என்ற மாட வண்ணாத்தி . இவர்கள் இரண்டு பேரும் ஏழு ஊர்களில் வாழ்ந்த பள்ளர்களின் வீட்டில் அழுக்கை வெளுத்து வாழ்ந்து வந்தனர்.

நீலவண்ணாளுக்கு முப்பத்திரண்டு வயதானது. குழந்தை பிறக்கவில்லை. ஆகவே அவள் மனம் நொந்து இருந்தாள். குழந்தைககாக நேர்ச்சை செய்தாள். தண்ணீர் பந்தல் சுமைதாங்கி எனப் பலவும் செய்து வைத்தாள். தான தருமங்கள் செய்தாள். பரதேசிகளுக்கும் பிராமணர்களுக்கம் தானம் செய்தாள். பசுவையும் பூமியையும் தானமாகக் கொடுத்தாள். குருடர்களுக்குத் தானம் செய்தாள். இப்படிப் பலவகையான தான தர்மங்கள் செய்தாள். னால் குழந்தை மட்டும் பிறக்கவில்லை. இதனால் மிகவும் மனம் நொந்த புரதவண்ணாத்தி பிள்ளை இல்லாதவர்கள் வீட்டில் பெரியவர்கள் சாப்பிடமாட்டார்களே என்ன செய்வேன் என நொந்தாள்.

அவள் கணவனிடம் இரந்து கேட்டாள். கணவனே என் கணவனே நான் சொல்வதைக் கேட்பாய். எனக்கு சங்கரநயினார் கோவிலுக்குப் போகவேண்டும். மாதம் ஒருமுறை சென்று தவம் இருக்கவேண்டும் என்றாள். அவனும் அதற்கு இணங்கினான். அவள் நேர்ச்சைக்குரிய மாப்பலகாரம் பொரிவிளங்காய் போன்றவற்றை எடுத்துக்கொண்டு அந்தக்கோவிலுக்குப் பயணமானாள்.

அவள் ஏறாங்குடிப் பட்டணம், பண்டாரகுளம், தாழவூத்து, நஞ்சான்குளம், மாவிடி, மானூரு, தேவகுளம், பனைவிடலி போன்ற இடங்களக் கடந்து விடைப் பொய்கையில் தீர்த்தமாடினாள். பின் சங்கரன்கோவில் வந்தாள். அங்கு 41 நாட்கள் தவமிருந்தாள். அப்போது அக்கோவிலில் இருந்த இறைவன் சங்கரலிங்கம் கயிலைக்குச் சென்றார். சிவனைத் தரிசித்து புரதமங்கைக்கு குழந்தை வரம் கொடுக்கவேண்டும் என்றார். சிவனோ அவளுக்கு இந்த ஜன்மத்தில் குழந்தை பாக்கியம் இல்லை. அதனால் அவள் வயிற்றில் நீயே குழந்தையாகப் பிறப்பாய். நீ பதினெட்டு ஆண்டுகள் உயிரோடு இருப்பாய் என வரமளித்தார்.

பின்னர் சங்கரலிங்க பகவான் சங்கரன்கோவில் வந்தார். தவமிருந்த மங்கையிடம் உனக்கு ஒரு ண் குழந்தை பிறக்கும். அதற்கு 18 ம் வயதில் ஒரு தத்து உண்டு என்றார். அவளும் மகிழ்ச்சியுடன் தன் வீட்டிற்குச் சென்றாள். சங்கரலிங்க பகவான் வரம் கொடுத்த பத்தாம் மாதத்தில் ஒரு ண் குழந்தை பெற்றாள். அதற்கு மந்திரமூர்த்தி எனப் பெயர் கொடுத்தாள்.

மந்திரமூர்த்தி சிறுவயதில் மந்திரங்கள் படித்தான். கூடு விட்டுக்கூடு பாயும் வித்தை கற்றான். அவனுக்கு 12 வயது னது. பூதப்பாண்டியில் உள்ள சாத்தப்பிள்ளை என்னும் பெண்ணை மணந்தான். அவள் தாமிரபரணிக் கரையில் குடில் அமைத்து, வெள்ளாவிப் பானை வைத்து வெளுப்புத் தொழிலை ஒழுங்காக நடத்தி வந்தாள்.

இப்படி இருக்கும்போது நாடார் குலத்தில் பிறந்த புதியவன் என்பவன் மந்திரமூர்த்தியிடம் மந்திர வித்தைகள்படிக்க வந்தான். மந்திரமூர்த்தியும் முறைப்படியான வித்தைகளை அவனுக்குச் சொல்லிக் கொடுத்தான். அவனும் வித்தைகளைக் கவனமாகக் கற்றான். ஒருமுறை புதியவன் மந்திரமூர்த்தியைப் பார்த்து என்ன இருந்தாலும் நீ ஈன சாதியினன் அல்லவா எனக் கேட்டுவிட்டான். அதனால் கோபமுற்ற மந்திரமூர்த்தி என்னை அவமானப்படுத்திய உன்னைப் பழி வாங்குவேன் என்று கூறிச் சென்றான்.

திருச்செந்தூர் நகரில் செம்பாரக் குடும்பனுக்கு ஏழு ண் குழந்தைகள் பிறந்தனர். அவர்களுக்கு இளையவளாக சோணமுத்து என்ற பெண் பிறந்தாள். அவள் பத்து வயதில் பெரிய பெண் னாள். அவள் தோழிமார்களுடன் தாமிரபரணியாற்றில் நீராடப் புறப்பட்டாள். நீராடிவிட்டுப் புதிய சேலையை உடுக்க விரும்பினாள். அதற்கு மாற்றுச் சேலை வேண்டி வண்ணாரத் துறைக்கு வந்தாள். மந்திரமூர்த்தியைக் கண்டு சேலை வேண்டும் எனக் கேட்டாள்.

மந்திரமூர்த்தி சோணமுத்துவைக் கண்டான். இவள் சுந்தரியோ இந்தரியோ என மயங்கினான். அவள் பேரில் மையல் கொண்டான். எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணினாள். அவளுக்கு நல்ல சேலை தருவேன் என்றான். மந்திரம் படித்த அவன் சோணமுத்துவின் உருவையும் அவன் உருவையும் சேலையில் வரைந்து மந்திரம் உரு ஏற்றி அவளிடம் கொடுத்தான்.

சோணமுத்து சேலையை உடுத்ததும் மந்திரமூர்த்தியன் பேரில் சைப்பட்டாள். அன்று இரவு யாருக்கும் தெரியாமல் வகைவகையாய் சமைத்தாள். சம்பா அரிசி எடுத்து சோறு பொங்கினாள். ட்டுக்கறி, கோழிக்கறி வைத்தாள். கருவாட்டுக் குழம்பு வைத்து ஏழடுக்குச் சட்டியில் எடுத்துக்கொண்டு மோகினி ஒருத்தி பின்தொடர மந்திரமூர்த்தியின் குடிசைக்கு வந்தாள். வகைவகையாய் அவனுக்கு உணவு பரிமாறினாள். அவன் உண்ட மிச்சத்தை அவள் உண்டாள். பின்னர் இருவரும் வெற்றிலை பாக்கு பரிமாறிக் கொண்டார்கள். மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டார்கள். இருவரும் கட்டிலில் ஒன்றாகப் படுத்தார்கள். அவளை இறுக்கமுடன் கட்டித் தழுவினான் மந்திரமூர்த்தி.

இப்படியாக யாருக்கும் தெரியாமல் மந்திரமூர்த்தியைப் பலமுறை சந்திக்க வந்தாள் சோணமுத்து. ஒருநாள் புதியவன் நாடான் மந்திரமூர்த்தியின் குடிசையை அடுத்த பனையில் ஏறிக்கொண்டிருந்தபோது சோணமுத்துவும் மந்திரமூர்த்தியும் சேர்ந்திருப்பதைப் பார்த்தான். கா மந்திரமூர்த்தியைப் பழிவாங்க இதுதான் சமயம் என்று கருதினான்.

அடுத்தநாள் புதியவன் பனை ஏறிக்கொண்டிருந்தபோது சோணமுத்துவின் சகோதரர்கள் கள் குடிக்க வந்தார்கள். அப்போது புதியவன் அண்ணே உங்க்ள தங்கயை¨ வண்ணான் மந்திரமூர்த்தி வைப்பாக வைத்திருக்கிறான் தெரியாதா? என்றான்.

சகோதரர்களுக்கு வேசம் வந்தது. புதியன் சொன்னான். நாளை உன் தங்கை சோணமுத்து சந்திக்கும்போது கையும் களவுமாகப் பிடித்துக்கொள் என்றான். குடும்பர்களும் அவன் சொன்னபடியே மந்திரமூர்த்தியின் வீட்டின் அருகே மரத்தில் மறைந்து இருந்தான். சோணமுத்து அடுக்குபானையுடன் வந்தாள். மந்திரமூர்த்தியின் வீட்டிற்குள் நுழைந்தாள். இதைக்கண்ட சகோதரர்கள் அவன் வீட்டை வளைத்தனர்.

தனக்கு பத்து வருவதைஉணர்ந்தான் மந்திரமூர்த்தி. மாரண மையை சோணமுத்துவின் நெற்றியில் தடவினான். அவள் மாயமாய் மறைந்தாள். மந்திர மூர்த்தி பூனையாக மாரினான். குடும்பர்கள் இருவரையும் காணாமல் திகைத்தார்கள். புதியவன் மந்திர மையைப் போட்டுப் பார்த்தான். அந்தப் பூனையைத் துரத்திக் கொல்லுங்கள் என்றான். குடும்பர்களும் பூனையைத் துரத்தினர். பூனை பாம்பு அரணையாக மாறியது. அதையும் துரத்தினர் குடும்பர்கள். பாம்பு அரணை பல்லியாக மாறியது. பின் பல்லியாகவும் எலியாகவும் மாறி ஒரு வைக்கோல் படைப்பில் நுழைந்தான். குடும்பர் படைப்பில் தீ வைத்தனர். எலி வெள்ளெலியாக மாறி ஒரு மடைக்குள் நுழைந்தது. குடும்பர்கள் மிளகு வைத்து கொளுத்தினர். வெள்ளெலியோ புகையாக மாறி மறைந்தது. குடும்பர்கள் அவன் இறந்துபோனான் என்று கருதி வீட்டிற்குச் சென்றனர்.

மந்திரமூர்த்தி மாயமாக வீட்டிற்கு வந்ததும் வசிய மருந்து மூலம் சோணமுத்துவைத் தன் மீண்டும் வீட்டிற்கு வரவழைத்தான். அவர்கள் சேர்ந்திருந்தார்கள். அப்போது நடுநிசி. அந்த வேளையில் கொண்டையன் கோட்டு மறவர்கள் அங்கே வந்தனர். மந்திரமூர்த்தியின் வீட்டில் விளக்கு எரிவதைப் பார்த்தனர் வீட்டினுள் எட்டிப் பார்த்தனர். அங்கே மந்திரமூர்த்தியும் சோணமுத்துவும் சேர்ந்திருப்பதைக் கண்டனர்.

கொண்டையன் கோட்டு வீரர்கள் இந்தச் செய்தியைக் குடும்பர்களிடம் கூறினர். அவர்கள் ஊர்க்காரர்களையும் திரட்டிக்கொண்டு வந்தனர். சட்டென்று உள்ளே புகுந்து மந்திரமூர்த்தியைப் பிடித்துக் கட்டினர். ஊர்த்தலைவர் வடமலையப்ப பிள்ளையிடம் கொண்டு சென்றனர். அவர் நடந்த நிகழ்ச்சிகளை விசாரித்துவிட்டு அவனை வெட்டிவிட ணையிட்டார். காவலர்கள் மந்திரமூர்த்தியக் காட்டுக்கு அழைத்துச் சென்று வடதிசை நோக்கி நிறுத்தினர். வாளால் வெட்டினர். னால் அவன் சாகவில்லை. அப்போது மந்திரமூர்த்தி என் உடலில் ஒரு மந்திரக்குளிகை உள்ளது. அது இருக்கும்மட்டும் நான் சாகமாட்டேன். நானே அதை எடுத்துத் தருகிறேன் என்று கூறியபடி அந்த குளிகையை எடுத்துத் தந்தான்.

இந்த நிகழ்ச்சியைக் கேள்விப்பட்டு சாத்தப்பிள்ளையும் சோணமுத்துவும் அழுதபடி ஓடி வந்தனர். அவன் உடல் கிடந்த இடத்தில் தங்களை மாய்த்துக்கொண்டனர். இறந்துபோன மந்திரமூர்த்தி நடுநிசியில் வியாக புதியவனின் வீட்டிற்கு வந்து அவனைக் கொன்றான். பின் ஏழு ஊரிலும் ரவாரம் செய்தான். குடும்பர்கள் மந்திரமூர்த்திக்கு கோவில் எடுத்து தடிவீரய்யன் எனப் பெயர்கொடுத்து வழிபட்டனர்.

பொன்னிறத்தாள் அம்மன் கதை – தமிழ் மண்ணின் சாமிகள்

கடையம் என்ற ஊரிலே அணஞ்சபெருமாள் என்பவன் வாழ்ந்து வந்தான். அவனது மனைவி பொன்மாரி என்பவள் மிகவும் அழகுடையவள். அவர்களுக்கு அடுக்கடுக்காக ஏழு குழந்தைகள் பிறந்தன. சித்தன், சித்திரன், தம்மப்பன், மேப்பன், கிருஷ்ணன், வேலப்பன், மாடப்பன் என அவர்களுக்குப் பெயரிட்டிருந்தான்.

ஏழு பெண் குழந்தைகள் இருந்தும் பெண் குழந்தை இல்லையே என்ற கவலை பொன்மாரிக்கு ஏற்பட்டது . அவள் கோவிலைத் கூட்டிப்பெருக்கி நீர் தெளித்து கடன்செய்தாள். நாள்தவறாமல் விளக்கேற்றி ஈரத்துணி உடுத்து கோவிலைச் சுற்றி வந்தாள். பெண் குழந்தை பிறந்தால் ரங்கநாதன், குமரி அம்மன், குருத்தோலை நாதன், சிவனணைஞ்ச மார்த்தாண்டன் ஆகிய தெய்வங்களுக்கு நேர்ச்சை செய்வதாக வேண்டிக்கொண்டாள். அதன் பலனாக அவள் கர்ப்பமுற்றாள். பத்தாம் மாதத்தில் வெள்ளிக்கிழமை மீனராசியில் பஞ்சமியில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றாள். பொன்மாரிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. தனக்கு உதவி செய்த பெண்களுக்குப் பொன்னை வாரி வாரிக் கொடுத்தாள்.

பொன்னிறமாயிருந்த அக்குழந்தைக்குப் பொன்மாரி எனப் பெயரிட்டனர். அவள் வளர்ந்து அழகிய பெண்ணாக மாறினாள். பொன்னிறத்தாளின் அழகு பக்கத்து ஊரெல்லாம் பரவியது. அவளுக்குத் தோழிகளும் பெருகினர்.

ஒருநாள் பொன்னிறத்தாளும் அவள் தோழிகளும் பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே திருமலை நாயக்கனின் தளவாயின் மகன் இணைசூரப்பெருமாள் வந்தான். அவனுடன் துட்டன், வெள்ளையத்தேவன், துங்களபுரி மறவன், சையீட்டிக்காரர்கள் ஆகியோர் வந்தனர். இணை சூரப்பெருமாள் வேகமாய் பந்தாடும் இணையகொடி பொன்னிறத்தாளைக் கண்டதும் மெய்மறந்து நின்றான்.’ நாட்டிலே இவனைப்போல் அழகியைக் கண்டதில்லை ‘ எனத் திகைத்து நின்றான்.

இணைசூரன் பந்து விளையாடிக் கொண்டிருந்த தோழிகளில் ஒருத்தியை அழைத்தான். இவள் யார் எந்த ஊர் எனக் கேட்டான். தோழிகள் ஐயா இவள் பெயர் பொன்னிறத்தாள். ஊர் தென்காசி. இவள் தந்தை பெருமாள் தலைவன். இவளுடன் ஏழு சிங்கங்கள் பிறந்துள்ளனர். இவளது உறவினர்கள் கடையத்தில் வாழ்கின்றனர் என்றனர்.

இணைசூரனுக்குப் பொன்னிறத்தின் அழகு அறிவை மயக்கியது. உடம்பை உருக்கியது. தன் அரண்மனையில் சென்று படுத்தான். அவனது சோகக் கோலத்தைக் கண்ட தாய் “என்ன நடந்தது மகனே ? ” எனக் கேட்டாள்.

மகன் அம்மா, நான் உலாப்போகும்போது பொன்னிறத்தாள் என்ற பெண்ணைக் கண்டேன். தளவாய் நாயக்கன் மகனாம், அவளில்லாமல் நான் வாழமுடியாது அம்மா என்றான். அவன் தாயோ மகனே அந்தப் பொன்னிறம் உன் முறைப்பெண்தான். அவளை எப்படியும் உனக்கு மணமுடித்து வைக்கிறேன் கவலைவிடு என்றாள்.

இணைசூரனின்தந்தைனொரு நன்னாளில் உரிய வரிசைகளுடன் தளவாய் நாயக்கனின் வீட்டிற்குப் போய் ‘ உன் மகளை என் மகனுக்குத் தா ‘ எனக் கேட்டான். இணைசூரனும் மகளைக் கொடுக்க இசைந்தான். நல்லநாளில் இனிதாக திருமணமும் நடந்தது. அவர்கள் மதுரையில் மனம் ஒத்து சிறக்க வாழ்ந்தனர்

திருமணம் முடிந்த இரண்டாம் வருடம் பொன்னிறத்தாள் கர்ப்பமுற்றாள். ஏழாம் மாதத்தில் தன் குலவழக்கப்படி தன் தாய் வீட்டிற்கு வந்தாள். வலது காலை எடுத்து வைத்து வீட்டினுள் நுழைந்தாள். படி சறுக்கியது. துர்சகுனமாயிற்றே என்ன ஆகுமோ என நொந்துகொண்டே வீட்டினுள் புகுந்தாள். பொன்மாரி மகளின் பருத்த வயிற்றைக் கண்டு மகிழ்ந்தாள். குலம் தழைக்கப்போகிறது என்று நிறைவு கொண்டாள்.

ஒன்பதாம் மாதத்தில் முளைப்பாரி வைக்கவேண்டும் என்றாள் பொன்னிறத்தாள். அவளது இருபத்தொரு தோழிகளும் ஏழு நாட்கள் விரதம் இருந்தனர். பலவகை வித்துக்களைச் சட்டியிலே இட்டு குருத்தோலை கொண்டு மூடிவைத்தனர். ஏழாம்நாள் வளர்ந்திருந்த முளையை எடுத்துப் பார்த்தபோது எல்லா பெண்களும் வைத்த முளைகளும் வளர்ந்திருந்தன. பொன்னிறத்தாளின் முளை அழுகிப்போய் இருந்தது. எல்லாப் பெண்களும் முளைகளைச் சுனையிலே விட்டனர். எல்லாம் நீரில் மிதந்தன. பொன்னிறத்தாளின் முளையோ நீரில் அமிழ்ந்தது. பொன்மாரி இதைஎல்லாம் அறிந்து என்ன நடக்கப்போகிறதோ என நினைத்து வருந்தினாள்.

தோழிகள் சுனையாடச் செல்லப் புறப்பட்டனர். பொன்னிறத்தாளையும் அழைத்தனர். அவள் எனக்கு நிரம்ப வேலை இருக்கிறது. நீங்கள் முன்னே செல்லுங்கள் நான் வருகிறேன் என்றாள். தோழிகள் சென்றதும் பொன்னிறத்தாள் தயிர் கடைய மத்தை எடுத்தாள். அப்போது பூனை பானையை உருட்டியது. இது என்ன தீய சகுனம் என்று நினைத்து வள் மனம் நடுங்கினாள்.

பொன்மாரி சமைமயல் செய்துகொண்டிருக்கும்போது பொன்நிறம் சமைலறைக்கு வந்தாள். மகளே இன்று நீ சுனையாடப் போக வேண்டாம். உன்னைத் திருடர்கள் பிடித்துக்கொண்டு போய் காட்டாளம்மன் கோவிலில் பலி கொடுப்பதாகக் கனவு கண்டேன். நீ போகாதே என்றாள் பொன்மாரி.

பொன்னிறத்தாளோ விதிப்படி நடப்பதைத் தடுக்கமுடியாது. நடப்பது நடக்கட்டும் என்றாள்.

பொன்னிறத்தாள் சுனையாடுவதற்குரிய பொருட்களை எடுத்துக் கொண்டு சுனையாடப் புறப்பட்டாள். தாய் எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் கேட்காமல் கிளம்பிப் போனாள். வழியில் தீய சகுனங்கள் எதிர்பட்டன. குறத்தி ஒருத்தி பொன்னிறத்தாளைத் தடுத்து சுனையாடப் போகாதே என எச்சரித்தாள். பொன்னிறமோ எவற்றையும் லட்சியம் செய்யாது சுனைக்குச் சென்றாள்.

சுனைக் கரையில் தோழிகள் நின்றனர். பொன்னிறத்தைக் கண்ட தோழிகளுக்கும் மகிழ்ச்சி. எல்லோரும் சுனையாட இறங்கினர். அப்போது திடீரென மேகம் கவிந்தது. மழை கருக்கொண்டது. புயல் வீசியது. தோழிகள் அவசரமாகக் கரை ஏறினர். பொன்னிறத்தாளும் சுனைக்கரைக்கு வந்தாள். தோழிகள் ‘ மழை பெய்யப்போகிறது , வா நாம் வாகைநல்லூர் அம்பலத்துக்குச் செல்வோம் ” என்றனர். எல்லோரும் நடந்தனர். பொன்னிறம் மெல்ல நடந்தாள். முழு கர்ப்பிணியானதனால் அவளால் தோழிகளை எட்டிப் பிடிக்கமுடியவில்லை.

புயல் வேகமாக வீசியது. ஒரு புளியமரத்தின் அருகே சென்றாள். அந்த மரம் காற்றில் சரிந்தது. அவள் எங்கே நிற்பது என்று தெரியாமல் அலைந்தாள். தோழிகளைக் காணாமல் மழையிலும் காற்றிலும் பதறினாள்

அநத நேரத்தில் 61 திருடர்கள் அந்தக் காட்டுக்கு வந்தனர். ” எங்கே இன்று திருடச் செல்வது ?” என்று கேட்டான் ஒருவன். இன்னொரு திருடன் இந்தக் காட்டில் உள்ள காட்டாளம்மன் கோவிலில் ஒரு கருவூலம் இருக்கிறது. அதை எடுப்போம் என்றான். உடனே ஒரு திருடன் நான் மந்திரம் படித்தவன். கருவூலம் இருக்கும் இடத்தை மையிட்டுப் பார்க்கிறேன் என்றான். அவன் தீ வளர்த்து மையிட்டுப் பார்த்தான். இந்தக் கருவூலத்தில் கெட்ட வாதைகள் [பேய்கள்] உள்ளன. நாம் இங்கே இருக்கவேண்டாம். வட்டப்பாறைக்குப் போவோம் என்றான்.

கள்ளர்கள் எல்லோரும் வட்டப்பாறையில் கூடினர். குறிகாரக் கள்ளன் பிரசன்னம் [சோழி சோதிடம்] வைத்துப் பார்த்தான். ” இக்கருவுலத்தை ஒரு இசக்கி காவல் காக்கிறாள். இந்தக்கருவூலததை எடுக்க பாலாடு சூலாடு கரும்பூனை சேவல் போன்ற பலிகள் கொடுக்கவேண்டும். அதோடு சூலான பெண் ஒருத்தியையைம் இசக்கி பலி கேட்கிறாள் என்றான். மற்ற கள்ளர்கள் எல்லா பலிகளையும் கொடுக்கலாம். சூல் பெண்ணுக்கு எங்கே போவது என சிந்தித்தனர்.

ஒரு கள்ளன் நாம் எல்லோரும் இங்கே வரும்போது சுனைக்கரையில் ஒரு சூலி நின்றதைப் பார்த்தேன் என்றான்.

இந்த நேரத்தில் காட்டாளம்மன் கோவிலுக்குப் பூசை செய்ய ஒரு மறையவன் வந்தான். கோவிலின் முன்னே கள்ளர்கள் கூடியிருப்பதைப் பார்த்து இங்கே எல்லோரும் கூடியிருக்கிறீர்களே என்ன விசேஷம்- என்று கேட்டான்.

ஒரு கள்ளன் குறும்பாக காட்டாளம்மன் கோவிலுக்குப் பலிகொடுக்க ஒருவளைத் தேடிக்கொண்டிருந்தோம். நீ வந்துவிட்டாய் என்றான்.

மறையவன் அய்யோ அண்ணன்மார்களே உங்களுக்குப் பலிகொடுக்க ஒரு சூலியைக் காட்டித் தருகிறேன். என்னை விட்டுவிடுங்கள் என்றான்.

கள்ளர்கள் நல்லது. அவளை எங்களுக்குக் காட்டிவிட்டு நீ செல்வாய் என்றனர்.

வேதியன் கள்ளர்களை வழிநடத்தி அழைத்துச் சென்று பொன்னிறம் நின்றுகொண்டிருந்த மரத்தைக் காட்டினான். கள்ளர்கள் பொன்னிறத்தைக் கண்டதும் வேதியனை விட்டுவிட்டனர். பொன்னிறத்தாளின் அருகிலே வந்து பெண்ணே நீ யார் எனக் கேட்டனர். அவள் தன் வரலாற்றைக் கூறினாள்.

பொன்னிறம் கள்ளர்களிடம் அண்ணன்மார்களே என்னை என் வீட்டிற்குக் கொண்டு சேர்த்தால் என் தந்தை நீங்கள் கேட்ட பொன்னைத் தருவார்கள் என்றாள். அவள் அஞ்சி அழுதுகொண்டே அவர்களிடம் தன்னை காப்பாற்றும்படி மன்றாடினாள்.

கள்ளர்கள் “பெண்ணே நாங்கள் இந்தக் காட்டின் வழி மாடு பிடிக்கப் போகிறோம். உன்னை உன் வீட்டில் கொண்டு சேர்க்கிறோம் வா” என்றனர்.

அவள் அவர்களுடன் மெல்ல நடந்தாள் ஒன்பது மாதச் சூலியான அவளால் நடக்கமுடியவில்லை. யாராவது பார்த்துவிடுவார்கள் என்று அஞ்சிய கள்ளர்கள் அவளை ‘ சீக்கிரம் நட ‘ என்றனர். ஒரு மாபாவிக்கள்ளன் அவளை எருக்கலைக் கொம்பால் அடித்தான். ஒருவன் புளியம் விளாறால் அடித்தான். அவள் அடி பொறுக்கமுடியாமல் அழுதாள். கள்ளர்கள் அவளைக் காட்டாளம்மன் கோவிலுக்கு இழுத்துச் சென்று ஒரு அறையில் தள்ளி பூட்டி வைத்தனர்.

கோவிலின் முன்னே பெரிய பரண் கட்டி குலை வாழை நட்டனர். குருத்தோலை கட்டினர் துள்ளுகிடாவும். குட்டியும் சூலாடும் கொண்டுவந்து கோவிலின் முன்னே வைத்து அவற்றின் நெஞ்சைப் பிளந்து குருதியைத் தெளித்து வாதைகளுக்கு பலி தந்தனர். வடக்கு வாசலில் பன்றியைப் பலியிட்டனர். சூல் பன்றியின் நெஞ்சைப் பிளந்தனர். மேற்குவாசலில் பூனையை வைத்துக் கீறினர்.

பின்னர் கருவூலம் இருந்த இடத்தில் பலி கொடுக்க பொன்னிறத்தாளைக் கொண்டுவந்தனர். அச்சத்தால் அலறி களைத்து பரண்மீது மயங்கிப்போய் அவள் கிடந்தாள்.

கள்ளர்கள் அவளைப் பரண்மீது வைத்து இறுகக் கட்டினர். ஒருவன் அவள் அடிவயிற்றைக் கீற ஓடிவந்தான். அவளது அழகிய முகத்தைக் கண்டு பின்வாங்கினான். அதன் பிறகு ஒரு மொட்டையன் வந்தான். அவனும் அவளைப் பலிகொடுக்கத் தயங்கினான். கடைசியாக ஒரு மறவன் வந்தான். தயங்காமல் பொன்னிறத்தாளின் அருகே ஒரு தலைவாழை இலையை விரித்தான். அவள் வயிற்றைக் கீறினான். வயிற்றில் இருந்த ண் கருவை வெளியே எடுத்து வைத்து பலிதந்த பிறகு அவள் காலி வயிற்றில் எரியும் திரியை நட்டான்.

கள்ளர்கள் பலியைச் சுற்றி வந்து குரவையிட்டனர். இசக்கியை திருப்தி செய்து கருவூலத்தைத் திறந்து பொன்னை எடுத்தனர். ஒரு கள்ளன் சொன்னான். நாம் பொன்னை அளக்க மரக்கால் கொண்டுவரவில்லை. அதனால் மூங்கில் குழலை வெட்டி வருவோம். வந்தபின் அளக்கலாம் என்று. பத்து திருடர்கள் மூங்கில் வெட்ட காட்டுக்குச் சென்றனர். அவர்களின் கொடூரத்தைக் கண்டு வெகுண்ட காட்டாளம்மை அவர்களின் மேல் புலி கடுவாய்களை ஏவிவிட்டாள். அவர்களை அம்மிருகங்கள் கடித்தன. மற்ற கள்ளர்களை வேதாளங்கள் அடித்தன. எல்லா கள்ளர்களும் இறந்தார்கள். இறந்தவர்கள் நரகத்துக்குச் சென்றார்கள்.

இந்த நேரத்தில் பொன்னிறத்தைக் காணவில்லையே என்று அவள் தாய் பரிதவித்துக்கொண்டிருந்தாள். தோழிகளை அழைத்துக் கேட்டாள். அவர்களுக்கும் பொன்னிறத்தைப் பற்றித் தகவல் தெரியவில்லை. தாய் தந்தையை அழைத்துக் கூறினாள். எல்லா உறவினர்களும் கூடினர். காட்டுவழி சென்று தேடினார்கள். சுனைக்கரையில் பொன்னிறத்தைக் காணவில்லை. காட்டிலும் அவளைக் காணவில்லை.

உறவினர்கள் அவளது காலடித் தடத்தை அடையாளம் கண்டனர். அதை பார்த்து நடந்தனர். அப்போது காயத்தில் கழுகுகள் கூட்டமாகப் பறப்பதைக் கண்டனர். மனம் பதைக்க அந்த இடத்தை அடையாளமாகக் கொண்டு ஓடினார்கள். அந்த இடம் காட்டாளம்மன் கோவிலாக இருந்தது. கோவிலைச் சுற்றி கோழி, ஆடு, பூனை பலிகளைக் கண்டனர். இணைசூரன் கோவிலுக்குள் சென்றான். வயிறு பிளந்தநிலையில் பொன்னிறத்தாளைப் பார்த்தான். அருகிலே கரு. இணைசூரன் அலறியபடி அங்கேயே மயங்கி விழுந்தான்.

மற்றவர்களும் பொன்னிறத்தாளின் உடலைப் பார்த்து பதைத்து விழுந்தனர். பொன்னிறத்தின் தாய் உடனேயே மனமுடைந்து இறந்தாள். ஏழு அண்ணன்மார்களும் மனம் பொறாமல் தங்கள் வாளை மண்ணில் நட்டு அதன்மீது பாய்ந்து உயிரை விட்டனர். எல்லோரும் இறந்தபிறகு இணைசூரனும் வாளை நட்டுப் பாய்ந்து உயிரை விட்டான்.

இறந்துபோன பொன்னிறம் ஆத்மா அடங்காமல் பேயாகி கைலைமலைக்குச் சென்று சிவனிடம் பல வரங்கள் வாங்கினாள். வாவறை, சிறுமாங்குளி, மூன்றரைக் கூடம் போன்ற இடங்களில் இசக்கியாக இருக்க வரம் கேட்டாள். தன்னைப் பலி வாங்கிய கள்ளர்களின் உறவினர்களை தேடிச்சென்று கொன்று குடல்மாலை சூடி பழி வாங்கினாள். தன்னைக் காட்டிக்கொடுத்த வேதியனை கொன்றாள். அவன் குடும்பத்தை அலைக்கழித்தாள்.

அதன் பின் அவள் தன் தோழிகளைப் பார்க்கப் போனாள். அவர்கள்ளேற்கனவே இறந்து சுனைக்கரையில் பேய்களாக நின்றனர். அவர்களுடன் அவள் இரவில் சுனையாடினாள். காட்டாளம்மநை வழிபட்டாள் . அம்மன் பொன்னிறத்துக்குச் சில வரங்கள் கொடுத்தாள்.

பொன்னிறத்தாள் அதன் பிறகு உக்கிரமான பேயாக மதுரைக்குப் போனாள். அங்குள்ள மக்களைத் துன்புறுத்தினாள். பாண்டிநாட்டு பட்டத்து யானை மீது ஏறி மதுரையைச் சூறையாடினாள். மன்னனின் சோதிடன் மலைவேலனை அழைத்து யானையைப் பிடித்த பேயை விரட்டவேண்டும் என்றான். இளவேலன் மந்திரம் போட்டு பொன்னிறத்தை அறிந்துகொண்டான். அவன் தன் மந்திர வல்லமையால் பொன்னிறதாளை விரட்டப் பார்த்தான். பொன்னிறத்தாள் வேலனை அடித்துக் கொன்றாள் . அவளை யாருமே வெல்ல இயலவில்லை

ஆனால் வேலனின் மனைவி வேறு பலிகள் கொடுத்து பொன்னிறத்தை வணங்கினாள். மனம் அடங்கிய பொன்னிறத்தாள் பெண்ணுக்கு இரங்கி கணவனுக்கு உயிர்பிச்சை அளித்தாள். அதன் பின் ஊரார் அவளுக்கு மதுரையில் அவளுக்கு கோயில் கட்டினர்

பொன்னிறத்தாள் மதுரையிலும் நெல்லையிலும் பல இடங்களில் கோவில் கொண்டு அருள்புரிகிறாள்.

நன்றி –
ஆ.கா.பெருமாள்