35வது சென்னை புத்தக கண்காட்சி அனுபவங்கள்

சென்னை புத்தகாட்சிக்கான விளம்பரங்கள் வர ஆரமித்ததுமே ஏன்டா வேலை கிடைத்தது என இருந்தது. சென்ற வருடம் தினம் தினம் திருவிழாவிர்கு சென்று புத்தங்களோடு இருந்த மாதிரி இவ்வருடம் இருக்க முடியவில்லை. ஆனாலும் ஒரு ஆனந்தம் இம்முறை உழைப்பின் மூலம் கிடைத்த பணத்தினைக் கொண்டு புத்தகம் வாங்கியதுதான். ஞாயறு மட்டும் தான் எங்கள் அலுவலம் விடுமுறை. அன்று கண்காட்சிக்கு சென்றால் புத்தங்களை நெருங்கக் கூட முடியாது என்பதால், பொங்கலுக்கு ஊருக்கு செல்லும் முன் நாளை தேர்ந்தெடுத்தேன். இனி புத்தக திருவிழாவில் நான் தொலைந்து போனதைப் பற்றி,..

நேற்று (11.01.2012) அலுவகம் முடிந்து கண்காட்சிக்குள் நுழையவே 5.00 மணி ஆகியிருந்தது. இதற்கே அனுமதி வாங்கி அலுவலகம் முடியும் முன்பே கிளம்பியிருந்தேன். வழக்கமாக வாங்கும் புத்தகங்களை விடுத்து சில நல்ல இலக்கியங்களை தேடலாம் என சில நாட்களாக வலையில் எஸ்.ரா, ஜெயமோகன் சிபாரிசுகளை குறிப்பெடுத்திருந்தேன். அந்தப் பட்டியலோடு, புத்தக பதிப்பகங்களின் பெயர்களையும் எழுதிவைத்திருந்தேன். அந்தப் காகிதம் நம்பிக்கையை கொடுத்தது.

அரசியல்வாதிகளையும், நடிகர்களையும் மட்டுமே கொண்டாடும் மனிதர்களுக்கு மத்தியில் எழுத்தார்களை கொண்டாடும் வகையில் வழிநெடுகிலும் ப்ளாஸ்க் பேனர்கள் வரவேற்றன.சுஜாதா, ஜெயமோகன், எஸ்.ரா, சாரு, வைரமுத்து என பிரபல எழுத்தாளர்களு்ககு மத்தியில் புதியதாக சிலரும் இருந்தார்கள். அதிலும் குமுதத்தின் பேனர்களில் தமிழே தெரியாத சில நடிகைர்களும், நடிகைகளும் எங்களுக்கு பிடித்தது என சிலவற்றை சொல்லி வரவேற்றார்கள். தமிழனிடம் புத்தகம் வி்ற்க எந்தளவிற்கு நிறுவனங்கள் தரம் தாழ்ந்து நடந்து கொண்டிருக்கின்ற என்பதை பார்க்கும் போது வேதனையாக இருந்தது.

கண்காட்சியை முதலில் ஒரு முறை சுற்றிவந்தேன். கல்கியின் பொன்னியின் செல்வன் ஐந்து தொகுதிகளாகவும், ஒரே புத்தகமாகவும் பல்வேறு விலையில் விற்கின்றன. விகடன் பதிப்பகம் வெளியிட்டிருக்கின்ற பொன்னியின் செல்வன்தான் மிக அதிகமான விலையில் இருந்தது. வரலாற்று நாவல்களுக்கான வாசர்கள் எப்போதும் குறைவதேயில்லை. ரமணிசந்திரன், சாண்டல்யன், கல்கி என இப்போதும் எழுத்துகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுடன் சுஜாதாவும் சேர்ந்துவிட்டார். பல ஸ்டால்களில் ஆன்மீகம் ஊற்றெடுத்து ஓடியது. மழைக்கு கூட மக்கள் ஒதுங்காத சில ஸ்டால்களும் இருந்ததை பார்க்கும் போது பகிரென்றது. இன்று எல்லாவற்றையும் விளம்பரங்களே தீர்மானிக்கின்ற என்ற உண்மையை அவர்கள் உணர்ந்திருந்தால், இந்நிலை வந்திருக்காது என நினைக்கிறேன். இஸ்லாமிய ஸ்டால் சென்ற முறை பெரியதாக இருந்தது, அங்கு வாங்கிய குரான் இன்னும் பத்திரமாக இருக்கிறது. ஆனால் ஸ்டால் இம்முறை சிறியதாகிவிட்டது. அலுவலகத்தில் உடன்பணிபுரிபவர் சிவ புராணம் புத்தகத்தினை ஹிந்தியில் வேண்டுமென கூறியிருந்தார், கீதா பதிப்பகம் என்பதில் இருப்பதாக கூறினார்கள். அவரை கைப்பேசியில் அழைத்து செய்தியை சொன்னேன்.

அப்படியே பிரபல பதிப்பகங்களின் ஸ்டால்களை குறித்துக் கொண்டேன். முதலில் பட்டியலிருந்த ஜெயமோகன் அவர்களின் விஷ்ணுபுரம் நாவலை வாங்கி எனது புத்தக வேட்டையை ஆரமித்தேன். உலோகம் நாவலுக்காக கிழக்கு பதிப்பகத்தினை தேடிக் கொண்டிருந்த நேரத்தில் சடசடவென மழை பொழிய துவங்கியது. வெளியிலிருந்தவர்கள் உள்ளே வந்ததால் கூட்டம் அதிகமானது. எனக்கோ புத்தகங்களை எப்படி வீட்டிற்கு கொண்டு செல்வோம் என்ற கவலை வந்தது. அதானால் மழை நிற்கும் வரை புத்தகங்களை வாங்கமலேயே சுற்றிக் கொண்டிருந்தேன். வ.உ.சி பதிப்பகத்தில் மழை நீர் மிக அதிகமாவே ஊற்றியது, பிளாஸ்க் பேனர்கள் கைக் கொடுத்தன. வழி தடத்தில் ஒழுகியதை யாரும் பொருட் படுத்தவில்லை. குழந்தைகளை தத்து எடுப்பது பற்றி,.. என்ற புத்தகம் பாரதி புத்தகாலயத்தில் கிடைத்து. பழைய மர பாலத்தில் ஒரு சம்பவமும் புத்தகத்தினை தேடினேன். கிடைக்கவில்லை. அருகிலிருந்த உதவியாளரிடம் கேட்டேன், சிறிது யோசித்துவிட்டு இல்லையென்றார்.

கைப்பேசி தொடையை கிள்ளியது, நண்பன் அழைத்திருந்தான், “மச்சி எங்கிருக்க?” “புத்தக கண்காட்சியிலதான்”. “அங்க செம மழையாமே. டி.வியில சொன்னாங்க.”, “அதுக்குள்ள டி.விவரைக்கும் செய்தி வந்துடுச்சான்னு” எங்கள் உரையாடல் தொடர்ந்தது. அதற்குள் மழை சுத்தமாக நின்றுவிட்டது. திரும்பி வராது என்ற நம்பிக்கையில் மீண்டும், வேட்டையை தொடர்ந்தேன். அறிவியல் வெளியீடு பதிப்பகத்தில் அறிவியல் புனைகதைகள், போரின் பிடியில் பிஞ்சகள் என இரண்டு புத்தங்களை எடுத்துக் கொண்டேன். நாஞ்சிலின் சூடிய பூ சூடற்க நாவல் ஒன்றே ஒன்று இருந்தது, அதுவும் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அதை வாங்காமல் நடையை கட்டினேன். ஒரு பதிப்பக்ததில் எம்.ஜி.ஆர் நூல்களை அடுக்கி வைத்திருந்தார்கள், திருநாவுக்கரசு எழுதிடய புத்தத்தினை புரட்டினேன் ” கைது செய்யப்பட்ட சசிகலாவிற்காக அழுத ஜெயலலிதா” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றும் இருந்தது. இன்றைய நிலைய நினைத்துக் கொண்டே இடம் பெயர்ந்தேன்.

தமிழனி பதிப்பகத்தில் காவல் கோட்டம் புத்தகம் ஏறாளமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. கனத்தினை பார்த்து இறுதியாக எடுத்துக் கொள்ளலாம் என வைத்துவிட்டேன். எழுத்தாளர்களுடன் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் எழுத்தாளர் வெங்கடேசன் வந்திருப்பதாக ஒலிப்பெருக்கியில் கூறினார்கள். ஆவலோடு சென்றேன். பதினெந்துக்கும் குறைவான நற்காளிகளைப் போட்டு ஒரே ஒரு மைக்கினை கொடுத்திருந்தார்கள். வாசகர்கள் கேள்வி கேட்கவும், அவர் பதில் சொல்லவும் மாற்றி மாற்றி அதேயே பயண்படுத்த வேண்டியிருந்ததால் சிரமாக இருந்தது.

காவல் கோட்டம் பத்து வருட உழைப்பு என்பது, அதனை எழுத முடியாது என அவர் மூன்று முறை ஒத்தி வைத்தது என பல சுவாரசியங்கள். மலையாள தேசத்திலிருந்து வந்த ஒரு இளைஞர் தன்னுடைய மூதாதயர்கள் வாழ்ந்த ஊரினை தேடி வந்திருப்பதாகவும், அவர்கள் நாவலில் குறிப்படப்படும் அந்த புலம்பெயர்வில் மதுரையிலிருந்து வந்தவர்கள் என்பதையும் கூறினார். வியப்பாக இருந்தது. களவுக்கு ஆதாரவு தருகின்றீர்களா, குறிப்பிட்ட ஜாதியைப் பற்றி உயர்வாக எழுதியுள்ளீ்ர்களே, மதுரைக்கு எப்பவுமே நெகட்டிவ் கதைகளை களமாக கொள்ளப்படுகின்றதே என ஏகப்பட்ட கேள்விகள், ஏக்கங்கள். “பாண்டியர்கள், சோழர்கள்,.. என இப்படி இருக்கும் போது எப்போது தமிழன் என்ற பொதுப்பெயர் வந்தது” என்று ஒருவர் கேள்வி கேட்க,.. வெங்கடேசனை பார்க்கும் போது பாவமாக இருந்தது. ஒரு எழுத்தாளனுடனான சந்திப்பு இத்தனை சுவாரசியமாக இருக்கும் என அப்போதுதான் புரிந்தது.

ஜெயமோகனின் உலோகம் நாவலை வாங்க கிழக்கு பதிப்பகத்தில் நுழைந்தேன். ராஜேஸ்குமார் நாவலைப் போன்ற வடிவமைப்பில் உலோகம் இருந்தது. எஸ்.ராவின் உபபாண்டவத்தை வாங்கலாமா வேண்டாமா என்று யோசனை செய்து கொண்டே நடந்து வந்ததில் தமிழினி பதிப்பகம் மீண்டும் வந்தது. சரி இம்முறையாவது எஸ்.ராவை விட்டுவிடுவோம் என காவல் கோட்டத்தினை எடுத்துக் கொண்டு பணம் கட்டும் இடத்தில் நின்று கொண்டிருந்தேன். அதற்குள் என்.டி டிவியில் வந்த ஒரு நிருபர் பணம் பெறுபவரிடம் இங்கே இயக்குனர்களெல்லாம் எந்த புத்தகத்தினை அதிகம் வாங்குகிறார்கள் என்று கேட்க, “எனக்கு இயக்குனர்கள் யாரையும் தெரியாது” என கடுப்படித்தார் அவர். “இளைஞர்கள் எந்தப் புத்தகங்களை வாங்குகின்றார்கள் என மீண்டும் அவர் கேட்க, நான் கண்களை சுழலவிட்டேன். நாஞ்சில் விளம்பரத்தில் சிரித்துக் கொண்டிருந்தார், கீழே சூடிய பூ சூடற்க என்று எழுதியிருந்தது. காவல் கோட்டத்தை அவரிடமே விட்டுவிட்டி நாஞ்சிலின் புத்தகத்தினை தேடி எடுத்துக் கொண்டு பணம் பெறுபவரிடம் வந்தேன். இரண்டிற்கும் பணம் கொடுத்த போது புன்னகையோடு பெற்றுக் கொண்டார்,. உண்மையில் இவருக்கு சினிமா இயக்குனர்களை தெரியாது என்று மனம் சொல்லியது. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை புத்தக கண்காட்சியில் கண்டால்தான் உண்டு.

இறுதியாக புத்தக பட்டியலை சரிபார்த்தேன்,. இரண்டு புத்தகங்கள் விடுபட்டிருந்தன். பூம்புகார் பதிப்பகத்தின் ஆயிரத்தியொரு அரேபிய இரவுகள் புத்தகமும், பாரதி புத்தகாலயத்தின் பழைய மர பாலத்தில் ஒரு சம்பவமும் கிடைக்கவில்லை. கோடிக்கண்ககான புத்தகங்களுக்கு மத்தியில் நின்று கொண்டு இரண்டு புத்தகளுக்காக அழுவது சரியாக தோன்றவில்லை. பாரதி புத்தகாலயமாவது கண்களில் தென்பட்டது, பூம்புகாரை பார்க்கவேயில்லை. அண்ணா நூலகத்தில் உள்ளதுபோல ஒரு கணினியில் புத்தகங்களின் தகவல்கள் இருந்தால் நன்றாக இருக்கும்.

ஐந்தாம் நாள் சென்னை புத்தக கண்காட்சி அனுபவங்கள்

5ம் நாள் –
விடுமுறை என்பதால், நண்பனும் வருவதாக கூறினான். மதிய உணவை முடித்துவிட்டு நண்பனோடு கண்காட்சிக்கு சென்றேன். பெயரே கேள்வியுறாத ஸ்டால்களில் புத்தகங்களை புரட்டி புரட்டிப் போட்டேன். மன நிறைவாய் ஒன்றும் அமையவில்லை. பாரதி புத்தகாலயத்தில் அரவாணிகளும் மனிதர்களே, சோசலிசமும், மதபீடங்களும் புத்தகங்களை தேர்ந்தெடுத்தேன். நக்கீரன் ஸ்டாலில் ஜெவை போட்டோசாப் செய்து போட்டிருந்தார்கள். நன்றாகவே இருந்தது.

ஞாநியையும், மனுஷ்ய புத்திரனையும் நண்பனுக்கு காட்டினேன். இருவரும் அவர்களுடைய அரங்குகளிலேயே இருந்தார்கள். சிலர் அவர்களிடம் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும், கையெழுத்து வாங்கவும் காத்திருந்தார்கள். என்.எச்.எம் அரங்கில் கூட்டம் வழிந்தோடியது, நம்முடைய ரசனைக்கு தக்கவாறு ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்தேன். ஒன்றும் கிடைக்கவில்லை. வேறொரு அரங்கில் ஒரு பெண் அளவுக்கு அதிகமான சத்தத்துடன் “நானே எம் புத்தகத்தை வாங்காம இருக்கேன்”, “இத பேஸ்புக்கில் போடப்போறேன்” என அருகில் உள்ளவரிடம் பேசிக் கொண்டிருந்தார். “மச்சி இது யாரு?” என்றான் நண்பன். “தெரியலேயப்பா” என்றேன் நான். (இந்த விஷயத்தை ஞாபகம் வைச்சுக்கோங்க, கடைசியில ஒரு மெசேஜ் இருக்கு!.)

விகடனின் புத்தகப் பட்டியலில் வ.உ.சி புத்தக்ததினை நேற்றே தேர்வு செய்திருந்தேன். அதனால் விகடன் அரங்கிற்கு சென்று வாங்கினேன். அரங்கு மிகவும் சிறியதாக இருந்தது. கூட்டமோ அதிகம். கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகங்கள் விலை குறைவாகவும், ஒரே புத்தகமாக இருப்பது அதிக விலையாகவும் இருப்பதாக கூறி வருத்தப்பட்டார் ஒருவர். சந்தியா பதிப்பகத்தின் தென்னிந்திய கிராம தெய்வங்களும் புத்தகம் சடங்குகளை விவரித்திருந்தது. அது மட்டுமே போதும் என முடிவெடுத்தேன். நண்பனுக்கு கொலையுதிர் காலத்தினை சிபாரிசு செய்தேன். (நானும் இன்னும் படிக்கலை, அதான்.) அதை வாங்கிவிட்டு கண்காட்சியை விட்டு வெளியே வந்தால், பாரதி பாஸ்கர் பேசிக் கொண்டிருந்தார்,பட்டிமன்ற ராசாவும் வந்திருந்தார்.

“வல்லமை தாராயோ” என்ற நூலுக்கான அறிமுக விழா அது. மக்கள் ராஜாவின் பேச்சுக்காக காத்திருந்தனர். கூட்டம் அதிகமாகவே இருந்தது. உடனே சாருவின் ஏழு புத்தகங்கள் வெளியீட்டு விழாவிற்கு கூட்டமே இல்லை ஜக்கி அவர்கள் எழுதியிருந்தது ஞாபகம் வந்தது. அடுத்த முறை புத்தக கண்காட்சியின் போது அவர்கள் நூல்களை வெளியிடலாம். நிச்சயம் வரவேற்பு அதிகமாக இருக்கும். ராஜா பேச்சில் விஷயமே இல்லையென்றாலும் சிரிக்க வைத்தார். குழந்தைகளை தோழில் தூக்கி வைத்திருக்கும் போது உச்சி மண்டை முடியை இழுப்பதை அழகாக சொன்னார். அம்மாக்களெல்லாம் சொல்லிறீங்க, அப்பாக்களுக்கு சொல்ல தெரியவில்லை என்றபோது, கரகோசம் வானை பிளந்தது. ராஜா பேசி முடித்ததும் கூட்டம் காலியானது, நாங்களும் கேன்டீன் வரை சென்று திரும்பினோம். அப்போது நிகழ்ச்சி முடிந்திருந்து பாரதி பாஸ்கரிடம் சிலர் ஆட்டோகிராப் வாங்கினர்.

ஆறு மணிக்கு வாலியின் தலைமையிலான கவியரங்கு தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் வெகு நேரமாகியும் தொடங்கவில்லை. பிறகு கூட்டத்தினுள் சலசலப்பு கேட்டது, வாலி கிழட்டு சிங்கம் போல, நடை தளர்ந்து வந்தார். வாலியின் இளைமைகால புகைப்படங்கள் கண்முன் தோன்றி மறைந்தன. வாரம்தோரும் வாலியில் வந்த கவிதையின் முன்னும் பின்னும் கொஞ்சம் சேர்த்து கவி படைத்தார். அதில் ஈழமும், 2ஜியும் அதிகமாக இடம் பிடித்திருந்தது.
“நேர்மையென்றால் நேற்றுவரை டாடா, இன்றோ டாடாவா” என்று அதிகம் 2ஜியை விமர்சித்தார் வாலி. நான் கொஞ்சம் கூட இதை எதிர்ப்பார்க்கவில்லை. கவிதையின் ஓரிடத்தில் உங்கள் குழந்தை ராஜாவாகட்டும் என்று சொல்லிவிட்டு, இது வேற ராஜா என்று சிரித்தார்.

முத்துலிங்கம் பேச்சில் இன்றைய அரசியல் அனல் அடித்தது. பணம் எனும் தலைப்பில் 2ஜியை தவிர்க்க முடியவில்லை. கூட்டத்திலிருந்து கிடைத்த கரகோசத்தினை கவனித்த வாலி மக்கள் நாம் ஒன்றை சொன்னால், அதை வேறொன்றுடன் ஒப்பிட்டு கைதட்டுகிறார்கள், இந்த மக்களால் தான் கவியரங்குக்கு வெற்றி, நம் கவிதையால் அல்ல என்று மகிழ்ந்தார். ராதாகிருஷ்ணனின் பேச்சில் அவருடைய வங்கி அனுபவம்தான் தெரிந்தது. பத்திரத்தினை பத்திரமாக வைத்துக் கொள்வதோடு, நிலத்தினையும் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என அடிக்கடி கூறினார்.

இளைய கம்பன் கடிதம் எனும் தலைப்பில் மிக அருமையாக பேசினார். இரண்டொரு இடங்களில் வாலி பாராட்டியதோடு, வாஞ்சையாக தடவியும் கொடுத்தார். நெல்லை ஜெயந்தா புத்தகம் பற்றி பேசினார். அரசியல் கலப்பு அதிகமில்லை. பழனிபாரதி கவிமழையில் வாக்குச் சீட்டு மாட்டிக் கொண்டது. பெரும்புள்ளிகளாக்கும், வெறும்புள்ளிகளாக்கும் கரும்புள்ளி நம் ஆள்காட்டி விரல் புள்ளி என்று பேசினார். இடையே தி.மு.காவின் வாக்கிற்கு பணம் கொடுப்பதையும் கடிந்தார். நந்தலாலாவுக்கு பத்திரிக்கைதான் தலைப்பு, பத்திரிக்கைகளின் மோசமான செயல்களை திட்டினார். தலையரங்கத்தில் மட்டும்தான் தலை இருக்கிறது, மற்ற இடங்களில் உறுப்புகள்தான் இருக்கிறது என ஆபாசத்தினை விதைக்கும் சிறுபத்திரிக்கைகளை வாரினார். முதலில் கருத்துகணிப்பு போல கவி சொன்னார், அதில் சாமியாரிடம் கேட்டேன், பத்திரிக்கையென்றால் அதிகம் பயப்படுகின்றவர்கள் இப்போது சாமியார்கள்தான். அதனால் அவர் கருத்து சொல்ல மறுத்துவிட்டார் என்றபோது, கரகோசம் பறந்தது. இறுதியில் ஈழத் தமிழர்களின் எலும்பில் பேனாவிற்கு கட்டை செய்து எழுதுவோம் என்று சொன்னதை வாலி பாராட்டினார். அடுத்து வாலி இன்னொரு கவிதை சொல்வார் என நினைக்கும் முன் கவியரங்கம் முடிந்தது என சொல்லிவிட்டார்.

இத்தனை அற்புதமாக கவியரங்கம் இருக்குமா என நண்பன் பாராட்டியபடியே வந்தான். நானும் அதன் அருமையை எதிர்ப்பார்க்கவே இல்லை. தொலைக்காட்சியில் போடுகின்ற கவியரங்கமெல்லாம், கருணாநிதியைப் பற்றியே நிகழ்கிறது, தமிழ் மாநாட்டிலும் இதுவே நிகழந்தது. ஆனால் வாலியின் தலைமையில் நிகழ்ந்த இந்த கவியரங்கத்தில்தான், 2ஜி, நிராடியா, ராஜா, நித்தியானந்தர் என அரசியலும், ஈழத்தின் மீதான கவிஞர்களின் உணர்வுகளும் பதிவு செய்யப்பட்டன. தி.மு.க ஆட்கள் தலைமையிடம் சொன்னால் அடுத்த முறை கண்காட்சி நடப்பதே கஷ்டம். கலைஞர் கொடுத்த ஒரு கோடி வைப்புநிதியில்தான் கண்காட்சி நடத்தும் பபாசி இயங்கிக் கொண்டிருக்கிறது. சாலையில் வந்து கொண்டிருந்தபோது, ஒரு பெண்மணி தொலைப்பேசியில் “அதுக்கென்ன அடுத்த தொகுதியாக போட்டுடலாம்” என்று பேசிவந்ததை கேட்டோம்., ஆகா சென்னையில் இருக்கிற எல்லோருமே எழுத்தாளர்களாகவும், பதிப்பகத்தரகளாகவும் இருப்பார்கள் போல! நாம ஜாக்கிரதையாகவே இருப்போம் என்று அமைதியாக வீடு திரும்பினோம். (இதுதான் அந்த மெசேஜ்!)

நான்காம் நாள் சென்னை புத்தக கண்காட்சி அனுபவங்கள்

சென்னை புத்தக கண்காட்சிக்கு வைரமுத்துவும், வாலியும் வரும் நான்கு மற்றும் ஐந்தாம் நாட்களே என் தேர்வாக இருந்தது. இப்போது இருவரின் பேச்சையும் நேரில் கேட்க வேண்டும் என் ஆசையும் பூர்த்தியாகிவிட்டது. நான்காம் நாள் கண்காட்சி அனுபவங்கள் இங்கே!.

வெள்ளிக் கிழமை என்பதால் கூட்டம் குறைவாகவே இருந்தது. பிரபல பதிப்பகங்கள், குழந்தைகளுக்கான பதிப்பகங்கள் தவிற மற்ற இடங்களில் காத்து வாங்கியது. மக்களின் ரசனைகள் மாறிக்கொண்டிருக்கின்றன என்பதற்கு சாட்சியாய் கலைஞரின் புத்தகங்களுக்கான இரண்டு அரங்குகளிலும் ஒருவர் கூட இல்லை. அதில் ஒரு அரங்கில் 20க்கும் மேல் புத்தகங்களே இல்லை. சட்டத் துறை நூல்களை கொண்ட இரண்டு அரங்குகள் கண்களில் பட்டன. அங்கே கைதானால் உங்கள் உரிமைகள் என்ன. தகவல் பெரும் உரிமைச் சட்டம் என இரண்டு புத்தகங்களை வாங்கினேன். இரண்டு ரூபாய் சில்லரை இல்லையென குட்டிப் புத்தகம் ஒன்றையும் தந்தார்கள்.

1000 ரூபாய் மதிப்புள்ள கீதை 120 ரூபாய் என விற்கப்பட்டது. எப்படிதான் கட்டுப்படி ஆகின்றதோ!. விகடன் 140 புத்தகங்களின் விலையை குறைத்து வெளியிட்டிருந்தது. விலைவாசி உயர்வுக்காக புத்தகங்களின் விலையும் கூட்டி விற்கும் பதிப்பகத்திற்கு மத்தியில் இப்படியும் ஒன்றா என்று வியப்பாக இருந்தது. அந்த பட்டியலில் இருந்த ஏடாகூட கதைகளை வாங்கிக் கொண்டேன்.

வைரமுத்து வரப்போகிறார் என்று மைக்கில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நேரம் குறைவாக இருப்பதால் கிழக்கு பதிப்பகத்தின் பக்கம் செல்லாமல், உயிர்மை பதிப்பகத்திற்கு சென்று விட்டேன். அங்கே பாக்கெட் நாவல் சைசில் எஸ்.ரா மற்றும் சாருவின் புதிய புத்தகங்கள் இருந்தன. ஆனால் விலை 90 ரூபாய்,. எதை வாங்குவது என தெரியவில்லை. வலையில் விமர்சனங்கள் படித்துவிட்டு பொருமையாக வாங்கலாம் என திரும்பினேன். கையில் அருவாளோடு ஐயனார் வீற்றிருக்கும் தமிழ் மண்ணின் சாமிகள் புத்தகம் கண்களில் பட்டது. அதை எடுத்துக் கொண்டேன்.

கல்கியின் பொன்னியின் செல்வன் ஏறத்தாள எல்லா அரங்குகளிலும் இருந்தது. ஒவ்வொரு பதிப்பும் ஒவ்வொரு விலை. நாட்டுடமையாக்கப்பட்ட எழுத்துக்களுக்கு பஞ்சமேயில்லை. பிரபல அரங்குகளில் சுஜாதா நிறைந்திருந்தார். சில அரங்குகள் நாவல்களுக்காக மட்டுமே இருந்தன. இம்முறை அந்தப் பகுதிகளுக்கு செல்வதில்லை என முடிவெடுத்திருந்தேன்.

கண்காட்சிக்கு வெளியே வரும் போது, வரவேற்புரை நிகழ்ந்து கொண்டிருந்தது. வைரமுத்து, நக்கீரன் கோபால் என எல்லோரும் மேடையில் அமர்ந்திருந்தார்கள். அப்படியே கூட்டத்தோடு கூட்டமாக கலந்துவிட்டேன்.

சுவாரசியங்கள் –

ஞாநி அவருடைய அரங்கில் வாசகர்களோடு பேசிக் கொண்டிருந்தார். அவருடைய பாரதியின் ஓவியம் அவருடைய அரங்கு என்பதை சொல்லிக் கொண்டிருந்தது.

ஒரு அரங்கில் நாஞ்சில் இருந்தார். அவரிடம் ஒரு வாசகி நாவல்களைப் பற்றி பாராட்டிக் கொண்டிருந்தார். சில வரிகளை சுட்டிக் காட்டி அந்த வரிகள் தன்னை பாதித்தாக கூறினார். அவர்கள் வாசகர்களின் வழியை அடைத்துக் கொண்டு நின்றிருந்தமையால் நாஞ்சிலை அறியாத ஒருத்தர், தள்ளி நின்று பேசுங்கள் என்று கூறி சாதாரணமாக நடந்து போனார்.

ஒரு சிறுவன் கண்காட்சிக்குள் வர மாட்டேன் என அடம் பிடிக்க, அவன் தந்தை தூக்கிக் கொண்டு போனார். தாய் அவனை சமாதானம் செய்ய முயன்று கொண்டிருந்தாள்.

உயிர்மை அரங்கில் மனுஷ்யபுத்திரனை பார்த்தேன். சிலர் சாருவின் புத்தகங்களை எடுத்துக் கொண்டு வேகமாக ஓடினார்கள். என்னவென்று பார்த்தால் சாரு அமர்ந்திருந்தார். அவருடன் ஒரு பெண் பேசிக் கொண்டிருந்தார்.

வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்தினை சேர் செய்து வாங்கலாம் என ஒரு இளைஞன் தன் நண்பனிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.

பார்த்தீபனின் கிறுக்கல்கள் புத்தகத்தினை நிறைய பேர் பார்த்தார்கள். ஆனால் யாரும் வாங்கவில்லை. ஒருவன் சின்னக் கவிதையை தாளில் எழுதிக் கொண்டான். ஏன் என்று பார்த்தால் விலை 270.

சேத்துப்பட்டு ரயில் நிலையம் அருகேயிருக்கும் சிக்னலில் ஒரு திருடன் தாலிக் கொடியை பறித்துவிட்டதாகவும், அது தவறி எங்கோ விழுந்துவிட்டதை சிலர் தேடிக் கொண்டு இருந்தார்கள். கூட்டத்தில் எந்த பெண்மணியையும் பார்க்க முடியவில்லை. காவல்துறையினர் கூட்டத்தினை விரட்ட நமக்கென்ன என நானும் வந்துவிட்டேன்.

தமிழினத்தின் எச்சம் நீங்கள் – புத்தக திருவிழாவில் வைரமுத்து பேச்சு (காணொளியுடன்)

நேற்று 34வது சென்னை புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன். வைரமுத்துவின் பேச்சை நேரில் கேட்கவே நேற்று சென்றேன். அதனால் புத்தக அரங்கில் சரியாக சுற்ற இயலவில்லை. இருந்தும் மனநிறைவாக வீடு திரும்பினேன். அந்த அனுபவம் பற்றிய இடுகை இது,.

நக்கீரன் உரை –
உரை அரங்கத்தில் நக்கீரன் கோபால் தலைமை தாங்கி பேசினார். அவருடைய பேச்சில் தடுமற்றங்கள் நிறைய இருந்தது. பிரதமரை வரவேற்காமல் வைரமுத்துவின் ஆயிரம் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கலைஞரை பாராட்டினார். நகர வாழ்க்கையைப் பற்றி ஒரு கதை கூறினார் எல்லோரும் அதை ரசித்தார்கள். ஒரு திருடன் அந்த வீட்டில் எல்லாவற்றையும் திருடிவிட்டான். அப்போது அங்கே கட்டப்பட்டுக் கிடந்த பெண்மணி “எனக்காக ஒரு உதவி செய்யுங்கள். என் வீட்டில் திருடியது போல எதிர் வீட்டிலும் திருடி சென்றுவிடுங்கள். இல்லையென்றால் எப்படி திருடினான், எங்கே அடித்தான் என்றெல்லாம் கேட்டு உயிரை எடுத்துவிடுவார்கள்” என்றாள். அதைக் கேட்ட திருடன் அவளை ஓங்கி ஒரு அரை விட்டுவிட்டு, “நான் எதிரிவீட்டில் தான் திருட வந்தேன். அங்கு திருடிய பின் அவர்கள்தான் இங்கேயும் திருட சொன்னார்கள்.” என்று சொன்னானம்.

ஊரான் அடிகள் உரை –
அடுத்து ஊரான் அடிகள் என்ற வள்ளலார் தொண்டர் சங்க இலக்கிய காட்சியும் கருத்தும் என்பது பற்றி பேசினார். ஏற்கனவே தெரிந்திருந்த இரண்டு சங்க இலக்கிய பாடலுக்கு விளக்கம் அளித்தமையால் அவை என்னை கவரவில்லை. புத்தகம் என்பதற்கு நூல் என்ற பண்டையப் பெயர் எப்படி வந்தது என்று கூறினார். மரத்தினை சரியான அளவில் அறுப்பதற்கு சாயம் பூசிய நூலை இருமுனைகளில் இருந்தும் தட்டி, அந்த நேர் கோட்டில் அறுப்பார்களாலாம். அடுத்து பராய் மரத்தினை வெட்டுவதைக் கடினம் என்றும், அந்த பராய் மரத்தினை கொண்டே திருப்பராய்த்துறை என்ற பெயர் உருவானதாகவும் கூறி வைரமுத்து பேச இடம் தந்தார்.

வைரமுத்துவின் பேச்சு –
தொடக்கத்தில் எல்லோருக்கும் வணக்கம் கூறி மெதுவாக பேச ஆரமித்தார். அதன் பின் வேகம் கூடிக் கொண்டே சென்றது. அவர் தேமதுர தமிழோசை என்ற தலைப்பில் பேசினார். அதில் மூன்று விஷயங்கள் முக்கியமானது.

1. கோபத்திலும் அறத்தினை பேனியவர்கள் நம் தமிழர்கள் என்பதற்கு உதாரணமாக கண்ணகி மதுரை எரித்ததை குறிப்பிட்டது. கண்ணகி அந்தனன், அறவோன், பசு, மழலை என சிலரை தவிற மற்றவர்களை எரிக்க சொன்னதை வியப்பாக குறிப்பிட்டார்.

2. தமிழின் சிறப்பான விஷயமாக பூவிற்கு பெயரிட்டதை கூறினார். அரும்பு, மொட்டு, பூ என பெயரிட்டுவிட்டு விழுகின்ற பூவிற்கும் “வீ” என்று பெயர் இட்டிருக்கின்றார்கள் தமிழர்கள்.

3. என்.எஸ்.கிருஷ்ணனின் வாழ்வில் ஒரு நிகழ்வினை கூறினார். சங்க இலக்கிய பாடல்களில் வரும் சிலேடையை தமிழன் அன்றாட வாழ்வில் பயன்படுத்தியமை நினைவு கூறினார்.

நிறைய பேசினார். உங்கள் குழந்தைகளை இந்த கண்காட்சியில் தவழ விடுங்கள். வருங்கால சந்ததிகள் புத்தகத்தினை தொட்டுப் பார்த்து வளரட்டும் என்றார். இறுதியாக பத்திரிக்கைகள் தமிழில் பிழை இல்லாமல் இருக்க தமிழாசிரியர்களை ஒரு குழுவாக நியமிக்க வேண்டினார். அவருடைய பேச்சில் தலித் அரசியலும், நாத்திகமும் கலந்தே இருந்தது. அதை விட அதிகம் இருந்தது, தமிழை வளர்க்க வேண்டும் என்ற கோரிக்கையே!.

நான்கு பகுதிகளாக அவருடைய பேச்சினை பதிவு செய்தேன். இறுதி பகுதியை இணையத்தில் இணைக்க இயலவில்லை. அதனால் மூன்று பகுதிகளை மட்டும் தருகிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள்.