நத்தமேடு நினைவுச் சின்னங்கள்

கரூர் – திண்டுக்கல் சாலையில் மணவாடி கிராமத்திலிருந்து சற்று தொலைவில் அமைந்திருக்கிறது நத்தமேடு கிராமம். மிகச் சமீபத்தில் பணக்காரர் ஒருவரால் புரணமைக்கப்பட்டு மிகச் சிறந்த சிவாலயமாக திகழ்கிறது வீரபாண்டீசுவரர் கோயில். சுற்றியிருக்கும் கிராம மக்களும் பிரதோச, சிவராத்திரி, சோமவார திங்கள் கிழமைகளுக்கு கூடுகிறார்கள். கடந்த சனிப் பிரதோசத்திற்கு அக்கோயிலுக்குச் சென்றபோது, அருகே இருக்கும் அம்மன் கோயிலொன்று கண்களில் பட்டது. அது திறந்திருக்கிறதா என காணச் சென்றேன்.

நல்ல வேளையாக திறந்திருந்தது. அம்மனின் காவல்தெய்வமாக கருப்புசாமி சன்னதி வாயிலுக்கு இடப்புறமும், சிம்ம வாகனம் மண்டபத்திற்கு வெளியேயும் அமைந்திருந்தது. மண்டபத்தில் சில நினைவுச் சிற்பங்களை அமைத்திருக்கிறார்கள். அவை குறித்தே இந்தப் பதிவு.

முதல் சிலை 1-

1
இடப்பக்க கொண்டை, கைகளில் கால்களில் ஆபரணங்கள், காதுகளில் குண்டலங்கள், மேலாடை இல்லாமல், கணுக்கால் வரை அமைந்துள்ள கீழாடை என கைகூப்பி நின்றபடி இருக்கும் சிற்பம் முதல் சிற்பமாக அமைந்துள்ளது. இடையில் குறுவாள் உள்ள சிற்பம் என்பதால் வீரராக இருக்க வாய்ப்புண்டு. சன்னவீரம் கண்களுக்குப் புலப்படவில்லை.

இரண்டாவது சிலை 2-
2மகுடம் (துணியால் ஆனதாக இருக்கலாம்), காதுகளில் குண்டலங்கள், கழுத்து, கைகள், கால்கள் ஆகிவற்றில் ஆபரணங்கள், முட்டி வரையான இடையாடை, உடைவாள் ஆகியவற்றோடு வணங்கிய நிலையில் உள்ள சாந்த தவலும் சிலை. அழகிய மீசையுடன் இருப்பது வசீகரமாக இருக்கிறது. வலது மற்றும் இடது தோள்பட்டையிலிருந்து சிறிய அளவில் புடைப்பு தெரிகிறது. அது சன்னவீரமாக இருக்கலாம். அரசராகவோ, படைத் தளபதியாகவோ இருக்கலாம்.

மூன்றாவது சிலை –

3

மற்றச் சிலைகளைப் போல அல்லாமல் தம்பதிகளாக வடிக்கப்பட்ட சிற்பம். இருவரும் வலக்கையில் வாளும், தண்டமும் ஏந்தியவாறு இருக்கிறார்கள். இடப்பக்க கொண்டை, காதணிகள், கழுத்து மாலை, கை, கால் ஆபரணங்கள் இவற்றோடு இருக்கிறார்கள். ஆண் மேலாடையில்லாமல், கீழாடை தொடையளவு மட்டுமே உள்ளதாக இருக்கிறார். பெண்ணும் மேலாடையின்றி, கீழாடை கணுக்கால் வரை அணிந்து இருக்கிறார். ஆணின் இடக்கையில் குத்துவாள் உள்ளது. பெண்ணின் கையிலும் அவ்வாறு இருந்திருக்க வேண்டும். ஆனால் சிலை சிதைவுற்று காணப்படுகிறது.

நான்காவது சிலை –
4

தனித்த சிலைகளில் இச்சிலை சற்று வித்தியாசமாக வணங்கும் பொழுது, உடைவாளை இடக்கையால் உடலை அணைத்தவாறு அமைந்துள்ளது. இச்சிலை இடப்பக்க கொண்டை, கை, கால், கழுத்து ஆபரணங்கள் அணிந்தவாறு உள்ளது.

ஐந்தாவது சிலை –
5ஐந்தாவது சிலையானது முன்னுள்ள சிலை போல அமைந்துள்ளது. இடப்பக்க கொண்டை இல்லாமல் வணங்கிய நிலையில் உள்ளது.

இந்தச் சிலைகளின் காலம் பற்றியோ, இவர்கள் யாராக இருக்க கூடும் என்ற அனுமானங்கள் கூறும் நிலையில் நானில்லை. இதைப் பற்றி ஆய்வாளர்கள் ஒன்றினைந்து ஆய்ந்தால் கரூர் மாவட்டத்திலுள்ள பல வரலாற்று தகவல்கள் கிடைக்க கூடும். நன்றி.

குரங்குநாதர் கோயில் குழந்தைகள் 2

சென்றப்பதிவில் கையில் பூக்களுடன் இறைவனுக்காக கசிந்துருகும் பக்தன் சிலையைப் பார்த்தோம். இந்தப் பதிவில் தென்முகக் கடவுள் சிற்பத் தொகுதியை காணலாம்.

சனத்குமாரர்கள் எனும் நான்கு பிரம்ம மைந்தர்கள் ஞானத்தினைப் பெறுவதற்காக பிரம்மாவையும், திருமாலையும் கண்டு அவர்கள் தம்பதி சமேதராய் வாழ்வதாலேயே நிராகரித்தனர். தங்கள் குருவினைத் தேடி வருகையில் ஈசன் அவர்களுக்கு இளைஞன் வடிவெடுத்து ஆலமரத்தின் கீழ் தட்சிணாமூர்த்தி என்ற வடிவமாக அமர்ந்தார். சிவாலயங்களின் கோஷ்டத்தில் தெற்குநோக்கியவாறு இருக்கும் அவரை இன்றைய பக்தர்கள் குருவென அழைத்து வியாழன் தோறும் சுண்டல்மாலையுடன் சந்திக்கிறார்கள். ஞானத்தின் தேடலுக்கு அவரும் அருள் செய்து கொண்டுள்ளார்.

அந்த தட்சணாமூர்த்தி குரங்குநாதர் கோயிலிலும் இருக்கிறார். சற்று சிதைந்து இருந்தாலும், முற்றிலுமாக அழிக்கப்படாமல் இருப்பது நம்மை மகிழச் செய்கிறது.  அவரும் அவரைச் சுற்றியிருக்கும் சிற்பங்களும் உயிரோட்டமாக உள்ளன. இத்தனை சித்திரவாதைகளுக்குப் பின்னும் உயிரோடு இருக்கும் சிற்பங்களை சிதைக்க கல்மனத்துக்காரர்களாலேயே முடியும்.

இனி நாம் தட்சிணாமூர்த்தியை கவனிப்போம். இறையின் அடியைப் பற்றினால்தானே மோட்சம். தட்சிணாமூர்த்தியின் அடியை கவனிப்போம். சிதைக்கும் எண்ணம் கொண்டவர்களால் சிதைக்க முடியாத பாதங்கள் மட்டும் அந்தரத்தில் இருந்து முயலகனின் மேல் இருக்கின்றன. ஆகா.. முயலகன். இந்து சமயத்தவர்களின் குறியீட்டு சின்னம் முயலகன். அறிவே வடிவான ஞானமூர்த்தி, அஞ்ஞானத்தினை காலடியிட்டு இட்டு மிதிக்கிறார் என்ற கருத்துருவின் வடிவு. முலகனை உற்று நோக்கினோல் அவன் தட்சிணாமூர்த்தியின் அழுத்ததால் ஆ.. வென கதறுவது தெரியும். சோழச் சிற்பியின் திறம்.

தட்சிணாமூர்த்தி சிற்பத் தொகுதி. கட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது, முயகனை மிதிக்கும் ஈசனின் பாதம்.

001

கால்கள் வெட்டப்பட்டாலும், சிதைவுறாமல் சேதி சொல்லும் பாதம். முயலகன் ஏறக்குறைய பூதவடிவில் குறுகைகளும், குறுகால்களும் கொண்டு இருக்கிறார்.

002

ஈசனின் திருவடி  முயலகனின் மீது இருப்பதும், முயலகனின் முக பாவனையும் தெரிகிறாதா.

003

இதோ “ஆ..” வென வாய் திறந்து அலறும் முகப்பாவம்.

004

குரங்குநாதர் கோயில் குழந்தைகள்

சீனிவாசநல்லூர். சிவபெருமானின் பிரதானப் பக்தன் சீனிவாசன் வசிக்கும் நல்ல ஊர். எங்கள் காட்டுப்புத்தூரிலிருந்து முசிறி செல்லும் வழியில் தொட்டியத்திற்கு அடுத்தபடியாக இருக்கும் ஊர். நீங்கள் திருச்சியிலிருந்து சேலம் செல்லும் போது முசிறியைக் கடந்ததும் இவ்வுரை எதிர்ப்பார்த்து இருக்கலாம்.

காட்டுப்புத்தூரிலிருந்து முசிறி நோக்கி செல்லும் போது ஒவ்வொரு முறையும் தொட்டியத்தினை கடக்கும் போது சீனிவாசநல்லூர் குரங்குநாதர் கோயிலை ஏக்கத்துடன் பார்த்துச் செல்வேன். இந்தக் கோயில் எப்போதுதான் திறக்கும் என விசாரித்துக் கொள்வேன். யாருக்கும் தெரியவில்லை. இம்முறை அவ்வழியாக சென்ற போது, பூட்டியக் கோயிலையாவது காண்போம் என சென்றேன்.

கோயிலுக்கு அருகே உள்ள ஒரு மரத்தின் நிழலில் கயிற்று கட்டிலில் ஒரு மூதாட்டி அமர்ந்திருந்தாள். அவளுடைய பேரன் விளையாடிக் கொண்டிருந்தான். இனி எங்களின் உரையாடல்கள்.

“அம்மா.. இந்தக் கோயில் எப்பங்க திறந்திருக்கும்”

“அது இந்தக் கோயிலோட சாவி தஞ்சாவூர் ஆபிசருங்க கிட்ட இருக்குதுப்பா. அவுங்க வந்து திறந்தாதான் உண்டு.”

“அப்படிங்களா, எப்பவாச்சும் வந்து திறப்பாங்களா”

“அவுங்க வந்தா தான் உண்டு. எப்ப வருவாங்கன்னு தெரியாதுப்பா. உள்ளுக்கார சாமியில்லை. தூணுதான் இருக்கு. நீங்க எந்த ஊரு”

“நான் காட்டுப்புத்தூருங்க”

“காலையிலக் கூட இரண்டு மூணுபேரு வந்து கேட்டாங்க. என்னப்பா பன்னறது சாவி இல்லையே. இந்தக் கேட்டு சும்மாதான் சாத்தியிருக்கு. நீ வேணா சுத்தி இருக்கிறதைப் பார்த்துட்டு போ.”

“சரிங்க”

20161001_123526-copy

நான் கோயிலைக் கவனித்தேன். இது கோயிலா.. இல்லை. கருவறையும், அர்த்தமண்டபமும் மட்டுமே கொண்ட ஒரு சன்னதி அவ்வளவுதான். பிறந்தநாள் கேக்கில் எல்லோருக்கும் பங்கு போட்டு கொடுத்தப் பிறகு நடுப்பகுதி எஞ்சியிருக்குமே அப்படிதான் இருக்கிறது மூலவர் சன்னதி. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் மூலவரை மீண்டும் வைத்து கோயிலை புரணமைக்காமல் அப்படியே வைத்துள்ளார்கள். எந்தக் காரணத்திற்காக உருவாக்கப்பட்டதோ அந்தக் காரணம் நிறைவேறாமல் சூன்யமாக இருக்கிறது.

வேலியை விட சன்னதி கீழ் மட்டத்தில் இருக்கிறது. நம்மவர்கள் சாலைகளை உயர்த்த, அருகிலுள்ள வீடுகள் கீழே செல்ல. மீண்டும் வீடுகள் உயர்த்திக் கட்டப்பட, சாலைகள் அதற்கும் மேலும் உயர்ததப்பட என இங்கு நடக்கும் அரசாங்க தனியார் போரின் உச்சத்தால் இந்த நிலை.

நான் கதவினைத் திறப்பது கண்டு என்னுடைய சிற்றன்னையும் வந்து இணைந்து கொண்டார். கருவறை ஒரு முறை வலம் வந்து முடிந்தமட்டும் கைப்பேசியால் புகைப்படம் எடுத்துக் கொண்டு கிளம்பினோம். ஒரு சுற்று அல்லை. ஒரு நாள் அமர்ந்து காணக் கூடிய வகையில் சிற்பங்கள் அமைந்துள்ளன. அத்தனை நுட்பம். அவற்றை முடிந்த மட்டும் இடுகைகளாகத் தரப்பார்க்கிறேன்.

 

 

205

மேற்கண்டப் படத்தில் கருவறை கோஷ்டத்தில் இருக்கும் சிற்பத்தினைக் காண்கின்றீர்கள். தூரத்தில் இருந்துப் பார்த்தால் அவருடைய கைகள் வணக்கம் தெரிவித்தபடி இருப்பதாக தோன்றும், ஆனால் நன்கு நோக்கும் போது கைகளிடையே பூக்கள் உள்ளதைக் காணலாம். பூவினால் செய்தலே பூசை என்று நம்முன்னோர்கள் தெரிவித்துள்ளார்கள். இறைவனை வணங்குவதற்கு கற்பூரம் காட்டுவதும், ஆராத்திகள் எடுப்பதும் பிற்காலத்தில் வந்த சடங்கு முறைகள். நம் முன்னோர்கள் பூக்களை இறையுருவின் மீது தூவி வழிபட்டு வந்துள்ளார்கள். அந்த பாரம்பரியத்தினை விளக்கும் சிற்பம் இது.

 

சிற்பக்கலையை பாதுகாப்போம்

உலகம் முழுவதும் இந்தியா இனங்காணப்படுவது காந்திய நாடென்றும், கலையில் சிறந்த நாடென்றும் தான். பல்வேறான கோவில்கள் நிறைந்த பூமி என்பதால் சிற்பக்கலைக்கு பஞ்சமில்லா பூமி இந்தியா.

மற்ற நாட்டிலிருந்து வந்து புகைப்படம் எடுக்கவும், வரலாற்றை தெரிந்து கொள்ளவும் வருகின்ற கூட்டத்தினரிடையே இருக்கும் ஆர்வம் நம்மில் பலருக்கும் இருப்பதில்லை. திருவரங்கத்தின் தாயார் சன்னதியில் வெளிநாட்டினருக்கான அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது. வேறு மதத்தவருக்கு அனுமதி மறுக்கபடும் இடங்களில் எனக்கு கொஞ்சம் வருத்தம் வருவதுண்டு, என்றாலும் மகிழ்வும் வரும் இந்துவாக பிறந்தமைக்காக.

ஒருவேளை மாற்று மத்த்தில் பிறந்திருந்தால் அரிய பல சிற்பங்களும் கதைகளும் கிட்டாமலேயே போயிருக்கும். இதற்கே அதிக இடங்களை பார்க்க முடியாமல் வருத்தம் கொண்டிருக்கின்றேன். சுற்றிப் பார்க்க வேண்டிய கோவில்களுள் எனக்கு தாராசுரம் தான் முதல் இடம். அந்தக் குறையையும் தீர்த்து வைக்க கல்லிலே கலைவண்ணம் கண்டோம் எனும் வலைப்பூ இருக்கிறது. அதன் முகவரி இது http://www.poetryinstone.in/

படங்களை மட்டும் தராமல் விளக்கங்களும், நேர்த்தியான கலை நுனுக்கங்களை விவரித்து எழுதியிருக்கும் விதமும் அருமை. பலவகையான இடங்களுக்கு சென்று சேகரித்த விசங்களை படிக்கும் போது, எனக்கு பொறாமையாக இருக்கிறது, கடவுள் அவர்களுக்கு மட்டும் ஏதோ சலுகை காட்டிவிட்டது போல.

நான் பார்த்து ரசித்தவை,.

கற்சங்கிலி –

நவீன கருவிகளுன் செய்யப்படுகின்ற வேலைகளை விட சின்ன சின்ன உளிகள் கொண்டே முடித்திட்ட நம் சிற்பிகள் இன்னும் வியப்பு தருகின்றார்கள். பலருக்கும் திருச்சி என்றவுடன் மலைக்கோட்டைதான் ஞாபகம் வரும். அந்த மாபெரும் மலைக்கோட்டையில் இருக்கும் உச்சிப் பிள்ளையார் கோவிலில் அழகான ஓவியக் கூடம் இருக்கிறது.

நான்கு, ஐந்து உடல்களுடன் உள்ள குரங்கு ஓவியம் வெகுவாக ஈர்த்தது. அந்த ஓவியத்தின் நடுப்பகுதியில் மட்டும் ஒரு குரங்கு தலை காணப்படும். அந்த தலைக்கு தகுந்தாற்போல குரங்குகளின் உடல்கள் சுற்றி சுற்றி வரையப்பட்டிருக்கும். அந்தக் கூடத்தில் கல்சங்கிலி ஒன்றை கண்டேன். இரும்பு சங்கிலியைப்போலவே முழுக்க முழுக்க கற்கலால் நேரித்தியாக செய்யப்பட்ட அற்புதம் அது.

குடைவரைக் கோவில் –

இது நாமக்கல் மலையில் உள்ளது. நாமக்கல் என்றாலே பலருக்கும் ஆஞ்சிநேயர்தான் ஞாபகம் வருவார். சிலருக்கு முட்டையும், விவரம் அறிந்தவர்களுக்கு எய்சும் ஞாபகம் வரலாம். நாமகிரி என்ர அந்த மலையிலும் கோட்டை அமைந்துள்ளது. அந்த மலையில் இருக்கும் நரசிம்மர் சந்னதியில் இருக்கும் குடைந்து செய்யப்பட்ட சிலைகள் மனதை கொள்ளையடிப்பவை. நரசிம்மரின் இருபுறமும் தேவர்கள், புராண சிற்பங்களும் இருக்கும். எல்லாம் குடைந்து செய்யப்பட்டவை. பக்தனுக்கு கடவுளாக காட்சி தரும் சிலைகள். எனக்கு அருமையான கலையாகவும் தெரிந்த்தே பெரும் பாக்கியம்.

பெரிய நந்தி –

தஞ்சையை தவிற பெரிய நந்தியை நான் வேறெங்கும் பார்த்து இல்லை. மிகப்பெரிய கோவிலின் ஆவுடையாரும் சிறப்பு. கோவில் அமைப்பு மிகவும் பெரியது. எனக்கு தெரிந்து பல காலமாக வராகிக்கென தனி கோவில் இருப்பது அங்குதான். இப்போது சில இடங்களில் சப்த கன்னியர்களில் வராகிக்கும், கௌமாரிக்கும் கோவில்கள் அமைக்கப்படுகின்றன. தினமலர் ந்ந்தி அபிசேகத்தை எப்போதும் வண்ணப் படங்களுடன் வெளியிடும். அந்தப் படங்களைப் பார்க்கவே அத்தனை இன்பமாக இருக்கும் எனக்கு.

கோவிலுக்குள் இசைகலைஞர்கள் –

பறைகளை அடிக்கும் இருவரின் சிலைகள் தொட்டியம் மருதகாளியம்மன் கோவிலுக்குள் இருக்கும். மதுரையில் இருந்த காளியின் திருவிழாவிற்கு பறையடிக்க சென்ர இருவரின் இசையில் மயங்கி தேவி. அவரிகளுடனே தொட்டயத்திற்கு வந்துவிட்டதாக தளபுராணம் இங்கு சொல்லப்படுகின்றது. அதற்கு சாட்சியாய் இரண்டு பறையடிக்கும் மேதைகளும் அங்கே சிலையாய் இருக்கின்றார்கள். இந்த கோவிலில் எருமைமாடுகள் பலி கொடுப்பதை பார்த்திருக்கின்றேன். ஆடுகளைப் போல மாடுகள் பலி கொடுக்கும் இடம் எனக்கு தெரிந்து இது ஒன்று மட்டுமே.

நுண்ணிய வேலைபாடுகளுடன் இருக்கும் சிலைகள் சுற்றுப் பிரகாரங்களில் சில புராணக் கதைகள் முழுவதும் செதுக்கிஇருக்கும் சிற்பிகளுக்கு பாராட்டையும் நன்றியையும் அந்த சிற்பங்களை பலகாலம் பாதுகாத்து சொல்லவேண்டும். உயிருள்ள புலிகளை பாதுகாக்க அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது போல சிலைகளை காக்கவும் ஏதேனும் அமைப்பு இருந்தால் நன்றாக இருக்கும்.