காதலுடன் பேசிக்கொண்டிருந்தேன்

 

temple_young_girl

பள்ளிக்கூடத்தின் இரும்புக் கதவுக்கு வெளியே
ஏராளமான அன்னைகள் அணிவகுத்திருந்தாலும்
வகுப்பறை விட்டு வெளியேறும் சிறுவனுக்கு
தன் அன்னை மட்டுமே தெரிவது போல
குவிந்து கிடந்த மணப்பெண் புகைப்படங்களில்
நீ மட்டுமே எனக்குத் தெரிந்தாய்!

 

***

உன்னைப் பெண்பார்த்து வந்த பின்னர்
என் நடுசிற்றன்னை
உன் நெற்றியிலிருந்த
தழும்பு பற்றி பேசிக்கொண்டிருந்தார்
என் கடைச்சிற்றன்னை
உன் கருங்கூந்தலின்
உயரம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்
என் இளையோன்
உன் இமையின் கீழிருந்த
கருவளையம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தான்
உன்னைப் பார்த்த அனைவருமே
உன்னைப் பற்றியேப் பேசிக்கொண்டிருந்தார்கள்
நான் மட்டும்
உன் காதலுடன் பேசிக்கொண்டிருந்தேன்.

 

***

பேருந்தில்
பெண்கள் வரிசையில்
நின்றிருக்கிறாய் நீ

ஆண்கள் வரிசையில்
அமர்ந்துன்னைப் பார்த்துக்
கொண்டிருக்கிறேன் நான்

அவ்வப்போது வந்து
தாயின் மடி முட்டி
பாலருந்தும் ஆட்டுக்குட்டியென

உன் தாவணி
காற்றில் தவழ்ந்து
தழுவிச் செல்கிறது என்னை
காதலருந்தியபடியே!

ம்மா…

ம்மா

ம்மா

அழுது அடம் செய்து
ஆடையில்லாவிடத்து சதைக் கவ்வி
அமுதுண்டு அடங்கிப் போனேன்.

அறிவியல் கற்று அறிந்தேன்
குழந்தையாய் இருக்கும் பொழுது
குடித்ததெல்லாம் உன் குருதியென.

ம்மா..

தாய்க் கிழவி காத்திருக்கிறாள்

தாய்க் கிளவி

திகட்டாத பலநூறு கதைகளுடன்
திண்ணையில் காத்திருக்கிறாள்
இந்த தாய்க் கிழவி!

வாருங்கள் கதை கேட்க
குழந்தைகளாக மாறி…

– சகோதரன் ஜெகதீஸ்வரன்

பேருந்து கவிதைகள்

சாத்தான்கள் –

கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி
அரசு பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்

சவ்வாது மணமும், சந்தன பவுடர் மணமும்
வியர்வை வாடையோடு நாசியை துளைக்கின்றன

பயணசீட்டுக்கு பணம் கொடுத்துவிட்டு
அதுவரும் பாதையை பார்த்துக் கொண்டிருக்கிறேன்

ஒருகாலூன்றி மீனுக்காக காத்திருக்கும் கொக்கென
மறுகாலூன்ற சிறுஇடம் கிடைக்க காத்திருக்கிறேன்

இடதுகையில் பேருந்தின் கம்பியை இறுகப்பற்றியிருந்தும்
திருப்பங்களிலெல்லாம் கடிகாரப் பெண்டுலமென ஆடுகிறேன்

உணவுக்கூடையை பிடித்தபடி வலதுகை வகையாய் சிக்கியிருக்கிறது
இன்னமிரு கைகளை இணைத்திருக்கலாம் ஆண்டவன்
பேருந்தில் பயணிப்பவர்களுக்காகவாவது என்றெண்ணுகிறேன்!

சாலை இரைச்சல்மீறி இருபெண்களின் சத்தம்
பேருந்து முழுவதும் ஒலிக்கிறது

“அவுனுங்களையும் நான் சுமந்துபோகனும்”
“….”
“….. எடுத்து தேக்கிறவன்கிட்ட என்ன சொல்ல”
“உக்காந்துதானே இருக்கே”
“உக்காந்திருக்கும்போது ஒட்டிஒட்டி வாரானுங்க”
“போடி பைத்தியக்காரி”
“நீதான்டி குச்சிக்காரி”

நீளுகின்ற அவர்கள் சண்டையின் சாரம்
என்னைப் போல உங்களுக்கும் தெரிந்திருக்கும்!

மனம் சொல்லுகிறது
பேருந்தில் நிற்கவே போராடும் நமக்கு
அமர்ந்திருப்பவர்களின் பிரட்சனைகள் எதற்கு?

ஆமென்று கூறி மறுகால்வைக்க
இடமொன்றை தேடியபடி இருக்கிறேன்
சகபயண ஆண்களெல்லாம் பெண்களுக்கு சாத்தான்களே!

***

யாருக்குத் தெரியும்?

கற்பிணி பெண்ணோ
கைக்குழந்தை வைத்திருப்பவளோ
பேருந்தில் ஏறினால்
பெண்கள் பகுதிக்கு செல்வதில்லை!

அருகில் வந்து நின்றாலே
ஆண் எழுந்து அமர்விடம் தரும்போது
அடுத்ததற்கு அவசியமில்லை!

ஆண்கள் இரக்கம் நிறைந்தவர்களென
பெண்களுக்கு தெரிந்திருக்கலாம்
இல்லாமல்போனானால்
எளிதில் ஏமாந்துவிடுபவர்களென
இளக்காரமாக நினைத்திருக்கலாம்

நன்றிகூட கூறாமல்
நன்றாக அமர்பவர்களைத்தவிற
வேறுயாருக்குத் தெரியும் இந்த சூட்சமம்?

கருப்பு வெறும் நிறமல்ல!

கருப்பு வெறும் நிறமல்ல!

வெண்தோல் வேண்டி
வேண்டாத களிம்பு தடவி!

வெளியில் செல்லாமல்
வெயிலில் துள்ளாமல்!

அறைக்குள் முடங்கி
ஆடைக்குள் உறக்கியது போதும்!

உண்மையை உணர்க…

ஊருக்கு உழைத்தோம்- அதனால்
உடலெல்லாலம் கருத்தோம்!

கருப்பு வெறும் நிறமல்ல
கடவுள் கொடுத்த வரம்!

கருப்பின வெறுப்பு!

கருப்பின வெறுப்பென்பது
அவர்களை அடிப்பதும்
அடிமைசெய்வதும் மட்டுமன்று

நான் வெள்ளையாக வேண்டுமென
க்ரீம் எடுத்து பூசுவதும்கூட
கருப்பின வெறுப்புதான்!

கவிதைக்கான காரணம் –

காலம் காலமாக உழைத்தனாலும், தட்ப வெட்ப சூழலாலும் நம் தமிழர்களின் நிறம் சராசரியாக கருப்பு நிறமாகவே இருக்கிறது. சிலர் கொஞ்சம் மாநிறத்தில் இருந்தாலும், பெருபான்மை எல்லாம் கருப்பு நிறமே. உண்மை இப்படியிருக்க, பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை காட்டப்படும் வெண்தோல் விளம்பரங்களால், கருப்பான பெண் மீதும், ஆண் மீதும் மறைமுக வன்முறைகள் தொடுக்கப்படுகின்றன. ஒரு சமூகத்தின் நிறத்திற்கு எதிரான நிறவெறியை நாம் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறோம். இப்போதே பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும், தலைவிரித்தாட தொடங்கிவிட்டது நிறவெறி.

சமீபத்திய தமிழ் திரைப்படங்களின் கதைநாயகிகள் எல்லாம் வெளிர் நிறம் கொண்டவர்கள், வெளிமாநிலத்தவர்கள். தமிழ்பெண்களின் நிறம் தகுதி குறைவாக நினைக்கப்படும் போது, தமிழே அறியாதவர்கள் எல்லாம் தங்கள் நிறத்திற்காக கதைநாயகிகளாக ஆகின்றார்கள். “வெள்ளையாய் இருப்பவன் வெகுளி”, “சிகப்பு பெண்ணே அழகு”, “வெள்ளையாய் இருந்தால்தான் சாதிக்க முடியும்”  என்றெல்லாம் நம் நெஞ்சத்தில் நச்சு வளர்ந்து கொண்டே இருக்கிறது. கருப்பாக இருப்பதை “டல்” என கேலி செய்வதும், வெள்ளையாய் வந்தால் “தூள்” என புகழ்வதும் வன்முறை அல்லவா.  வெள்ளையாய் இருந்தால் தான் மேடையில் பாட முடியும், கருப்பாக இருப்பதே தோல்விக்கு காரணமென, திறமையை எல்லாம் கேலி செய்வது தவறு அல்லவா. கருப்பாக இருப்போறெல்லாம் சிவப்பாக மாற இருவாரம் போதுமென்றால் ஆப்பிரிக்காவில் இருக்கும் எல்லோரையும் சிவப்பாக மாற்றிவிட முடியுமே. அமெரிக்காவின் ஜனாதிபதியாக உலகையே ஆட்டிப் படைக்கும் ஒபாமா, இந்நேரம் வெள்ளையாய் ஆயிருப்பாரே.  எந்தவித அறிவியல் புரிதலும் இன்றி அடுக்கடுக்காய் ஏவப்படும் அபாய விளம்பரங்களை எந்த சமூக நல அமைப்பும் இன்றுவரை எதிர்க்கவில்லை. ஊருக்கு உழைப்பதாய் தங்களை முன்நிறுத்திக் கொள்ளும் எந்த ஊடகங்களும்(தொலைகாட்சி, திரைப்படம், நாளேடுகள், புத்தகங்கள்) இதற்கெதிராய் குரல் கொடுப்பதில்லை.

ஆங்காங்கே சில தோழிகள் மட்டும் இந்த விஷயத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதை பதிவு செய்திருக்கிறார்கள். சமூகம் தங்களை புறக்கணிப்பு நிகழ்கிறது என்கிறார்கள்.  ஆணைவிட இந்த பாசிச மனப்பான்மை பெண்களையே அதிகம் பாதிக்கிறது. கருப்பாய் பெண் பிறந்தால் பவுன் அதிகம் போடவேண்டுமென சொல்லும் சமூகத்தில், கருப்பு ஒரு குறைபாடாகவே பார்க்கப்படும் அவலம். கை கால்களை இழந்து நிற்கும் மனிதர்களையே மாற்றுத்திறனாளிகள் என மரியாதையோடு அழைக்கும் நாம், கருப்பாய் பிறந்தமைக்காக மனதினை ஊனமாக்குவது ஞாயமா. நீ கருப்பு நிறம் அதனால் உன்னுடன் நான் பழகமாட்டேன் என்று சொல்லுவதை நிறவெறி தானே. இன்று பழகமாட்டேன், பேசமாட்டேன் என்றெல்லாம் சொல்லும் வெறுப்புகள் வளர்ந்து, நாளே வெளிநாடுகளில் உள்ளது போல கொலைகளும், தற்கொலைகளும் நடைபெறும் முன் இந்த கொடுஞ் செயலை தடுத்துநிறுத்திட வேண்டும்.

தொலைக்காட்சி, திரைப்படம், செய்திதாள்,  நாளேடுகள், புத்தகங்கள் என்று பரவிக்கிடக்கும் இந்த வெண்க்ரீம் விளம்பரங்களை தடுத்துநிறுத்த வேண்டும். சமூக நல இயக்கங்களும், பெண்ணிய அமைப்பைபுகளும் இந்த பாசிசத்திற்கு எதிரான குரல்களையும், விழிப்புணர்வையும் பதிவு செய்ய வேண்டும். சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் இந்த நஞ்சு, முயல்பிடிக்க பம்மியிருக்கும் வேட்டை நாய்போல எப்போது வேண்டுமானாலும் உயிரை பலிகொள்ளலாம். அதற்குள் விழிப்பது அவசியம். நன்றி!.

நான் யார் தமிழ்தாயே!


தமிழ்த்தாயே,.

நீ ஒரு இந்துவாக இருப்பதால்
தமிழனாக இருக்க முடியாது என்கிறார்கள்

இஸ்லாமியனும், கிறிஸ்துவனும், ஜைனனும்
தமிழனாக இருக்கலாமாம்,.

வீட்டில் அரபு மொழி பேசுபவனும்,
தெலுங்கு, கன்னடம் பேசுபவனும்,
தமிழனாக இருக்கலாமாம்,.

நித்தம் நித்தம்
தமிழ் பேசும் என்னை
தமிழனல்ல என்கிறார்கள்.

நான் யார் தாயே?

—-

பன்னிரு திருமுறைகள் தந்த எம் பாட்டன்கள்
தமிழன் இல்லையாமே…
தேவராத்திலும் திருவாசகத்திலும் இருக்கும் பாடல்கள்
தமிழில் இல்லையாமே..

கம்பன் பாடியதில் காமம் மட்டும் தெரிகிறதாமே,
சேக்கிலார் பாடியதில் காதல் மட்டும் வழிகிறதாமே,.
பக்தி இலக்கியத்தால் தாயே நீ வளரவில்லையாமே,.

நித்தம் நித்தம்
தமிழையே துதிக்கும் என்னை
தமிழனல்ல என்கிறார்கள்.

நான் யார் தாயே?

பூவைத்து புடவை கட்டி
ஒய்யாரமாய் நீயும் வந்ததுவிடாதே,
பர்தாவும், கவுனும் அணியாதவர்களை
பாவப்பட்ட தமிழர்கள் ஏற்பதில்லை,.

இங்கே,..
சிறு தெய்வங்களெல்லாம் சாத்தானாக மாறி
பல வருடங்கள் ஆகின்றன.

இப்போது அவர்கள் வந்தால்
வேப்பிலையால் அடிப்பதில்லை,
விளக்கமாறால் அடிக்கிறார்கள்,..

முருகனும், இந்திரனும்,வருனனும்,
கொற்றவையும், திருமாலும் வடநாட்டு சாமிகளாம்,
அயல்நாட்டு சாமிகளான அல்லாவும் ஏசுவும்
தமிழ்நாட்டு சாமிகளாம்!.

அதெல்லாம் இருக்கட்டும்,..

நித்தம் நித்தம்
தமிழையே தாய்மொழி என நம்பியிருந்த என்னை
தமிழனல்ல என்கிறார்கள்.

நான் யார் தாயே?

சொல்லிவிட்டுப் போ!..

அன்புடன்,

உன் மைந்தன் ஜெகதீஸ்வரன்.

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

பால் ஊற்றெடுக்கா முலை!

அவள் காலையில் எழுகையில்
அவளோடு தலையணையில் உறங்கிய
அவள் பொம்மையும் விழித்தெழுகிறது!

அவள் ஆனந்தமாய் குளிக்கையில்
அதுவும் அருகிலேயே குளிக்கிறது!

அவள் ஒப்பனை செய்கையில்
அதுவும் ஓரளவு அழகாகிறது!

அவள் சொப்பு விளையாடுகையில்
அதுவும் சேர்ந்தே விளையாடுகிறது!

எல்லாம் முடிந்து,..
அவள்தன் தாய்மார்பில் பாலருந்துகையில்
அதுவும் பால்ஊற்றெடுக்காத
அவள்முலையில் பசியாருகிறது!

குழந்தைகளைப் பெற்றெடுக்கும் முன்பே
சில பெண் குழந்தைகள்
இப்படி தாயாகி விடுகின்றார்கள்!

– சகோதரன் ஜெகதீ்ஸ்வரன்.

அன்பு தமிழ்தாய்க்கு ஒரு கவிதை!

அன்பு தாயே!

ஈழத்திற்காக வருத்தம் தெரிவிப்பதா – இல்லை
இலவசங்களுக்காக வாழ்த்துகள் தெரிவிப்பதா
பெரும் குழப்பத்தில் இருக்கிறோம் நாங்கள்.

அய்யாவுக்கு ஓட்டா – இல்லை
அம்மாவுக்கு ஓட்டா
இது நேற்றைய குழப்பம்!.

சித்திரையில் புத்தாண்டா – இல்லை
தையில் புத்தாண்டா
இது இன்றைய குழப்பம்!.

விடுமுறை எடுத்துக்கொள்ளாமா – இல்லை
அலுவலகம் செல்லாமா
இது நாளைய குழப்பம்!.

குழப்பங்களுக்கு மத்தியில்
குப்பைகளாய் இருக்கிறோம் நாங்கள்.

தமிழ் கற்பிக்காத பள்ளியில் படிக்கிறோம்,
தமிழ் வேண்டாத அலுவலகத்தில் பணிபுகிறோம்,
தமிழ் பேசாத நண்பர்களிடம் பழகுகிறோம்,
தமிழே இல்லாத தமிழகத்தில் வாழ்கிறோம்,
அட
தமிழ் இல்லாத தமிழ்ப்படத்தையே பார்க்கிறோம்,

அட சொல்லவந்ததை மறந்துவிட்டு
பலவற்றை பேசிக்கொண்டிருக்கிறேனே!

Wish You Happy Tamil New Year!.
(தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்).

கொஞ்சிக் கொல்பவள்…

கொஞ்சிக் கொல்பவள்

சிலர் ஆயுதம் எடுக்கிறார்கள்
சிலர் வார்த்தைகளை உபயோகிக்கிறார்கள்
ஆனால் யாரும் உன்னைப் போல
கொஞ்சியே கொல்வதில்லை!.

அடுத்தவன் மனைவி

ஏற்கனவே திருமணம் ஆன உன்னை
இனியும் காதலிப்பது தகுமோ என
எனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தேன்.
நீ வந்தாய்,
கழுத்தில் தாலியில்லாமலும்,
காலில் மெட்டியில்லாமலும்…

அதிர்ந்து போய் நின்றேன்,
சிரித்துக் கொண்டே சொன்னாய்,
“கனவில் நீ கட்டியதெல்லாம்
கண்ணுக்குதெரியாதென!”

மயிலிறகு

குட்டிப்போடுமென நீ கொடுத்த
மயிலிறகுகளுக்கு
பிரசவகாலம் நெருங்கி விட்டது
அதனால்
தாய்வீடு தேடி
கொண்டு வந்திருக்கிறேன்
மறுக்காமல் வாங்கிக் கொள்!

திருட்டுப்பய

காதல் காதலென்று கத்திக்கொண்டு
காதல் தெருவில் ஓடினேன்
நான்…
கள்வன் கள்வன் என்று சொல்லி
துரத்திக் கொண்டுவந்தாய்
நீ…

படங்களுக்கு சில இணைய தளங்கள் –

take earth
webshots
corbisimages

eyefetch
gettyimages
pbase

lonelyplanetimages

தமிழுக்கு மாநாடு தமிழனுக்கு சுடுகாடு !!! – செம்மொழிக் கவிதைகள்

செம்மொழி மாநாடு ஒரு கேடா?

உழுகின்ற தமிழனுக்கு நிலம் இல்லை!
உழைக்கின்ற தமிழனுக்கு ஊதியம் இல்லை!
படித்த தமிழனுக்கு வேலை இல்லை!
பாமரத் தமிழனுக்கு மானம் இல்லை!
நெசவுத் தமிழனுக்கு நூல் இல்லை!
நோயாளித் தமிழனுக்கு மருந்து இல்லை!
மாணவத் தமிழனுக்கு கல்வி இல்லை
மீனவத் தமிழனுக்கு கடல் இல்லை!
இலங்கைத் தமிழனுக்கு நாடில்லை!
ஈடில்லாத் தமிழனுக்கு வீடில்லை!

ஆக,
தமிழனாய் பிறந்தவனுக்கு எதுவுமே இல்லை!
தமிழனாய் இருப்பவனுக்கு எதுவுமே இல்லை!
தமிழனாய் செத்தவனுக்கும் எதுவுமே இல்லை!
தமிழே உனக்கு…
செம்மொழி மாநாடு ஒரு கேடா?

தமிழுக்கு விழாவா.. இல்லை… தாத்தாவிற்கு விழாவா…

கோடி கோடியாய் செலவு செய்து
அறிஞர்கள் எல்லாம் ஆய்வு செய்து
தமிழுக்குதான் விழா எடுக்கின்றனர் என
நம்பிக்கை வைத்திருந்தால்,..

கவியரங்கம் என்று சொல்லி
கலைஞரை துதி பாடி
தமிழுக்கான விழாவை
தாத்தாவுக்கான விழாவாக மாற்றிவிட்டனர்!

உணவிட்ட தமிழை மறந்து
உணர்வற்ற பிணமாகி
அரசைப் போற்றுவதும்
அரசரைப் போற்றுவதும் கண்டு
தமிழன்னை செத்து போகாமல் இருக்கட்டும்!

தமிழர்களின் நிலை!

பிரசவம் பார்க்க மருத்துவச்சியின்றி
பிறர் பார்கக் சவமாயிருக்கிறாள்
ஒரு தமிழச்சி…!

கழிவரையில் குழந்தையை பெற்றெடுத்து
சாதனை செய்திருக்கிறாள் பத்தாம்வகுப்பு
ஒரு தமிழச்சி…!

கற்புநெறியில் சிறந்துவிளங்கி
கள்ள உறவால் கொல்லப்பட்டிருக்கிறாள்
ஒரு தமிழச்சி…!

ஊருக்கே அறிவுரை சொல்ல
திருக்குறளைத் தந்தவர்களுக்கு
எதைத் தருவது…!

தமிழுக்கு மாநாடு தமிழனுக்கு சுடுகாடு

தமிழிஸில் ஓட்டுப்போட இங்கு சொடுக்கவும்.