திகைக்க வைத்த திருப்பதி பயணம் -3

திருமலையை விட்டு கீழிறங்கும் போது வேறு பாதையில் வருவதை அறிய முடிந்தது. பல இடங்களில் மரக் கன்றுகள் பராமரிக்கப்பட்டுக் கொண்டு இருந்தன. சில இடங்களில் நடைபயணம் மேற்கொள்வோர்களுக்கான படிக்கட்டுகளும், ஓய்வு அமைப்புகளும் இருந்தன. அதை தவிர நிர்வாக அமைப்புக்காக உள்ள சில கட்டிடங்கள், சிறு கோவில்கள். இவை தவிற வேறெந்த கட்டிடங்களோ, வீடுகளோ மலை முழுக்க இல்லை. இன்னும் கூட காடுகளாகவே திருமலை பாதுகாக்கப் பட்டு வருதல் மகிழ்ச்சி. மான்கள் சிலவற்றை சாலையின் ஓரம் பார்க்க முடிந்தது. சுதந்திரமாக திரிந்து கொண்டிருந்தன. சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதென சில நேரங்களில் செய்திதாள்களில் படித்திருக்கிறேன். ஆனால் அவைகள் கண்களில் படவில்லை. திருமலைக்கு செல்லும் நேரத்தினை விட மிகக் குறைவான நேரத்திலே மீண்டும் நகரை அடைந்தோம்.

பேருந்து பங்களா போன்ற தோற்றம் அளிக்கக் கூடிய பெரிய கட்டிடத்தினை நோக்கி சென்றது அங்கு எ.பி.டிராவல்ஸ் என்று எழுதப்பட்ட பத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் நின்றுகொண்டிருந்ததன. ஆந்திர அரசாங்கத்தின் சுற்றுலா மேம்பாடுத் துறை பெரிய அளவில் செயல்படுவதற்கு அந்த கட்டிடமே சாட்சி. வழிநடத்துனர் எங்களிடம் வந்து “முதல் மாடியில் ரெஸ்ட் ரூம் இருக்கு, அதற்கு பக்கத்திலேயே ரெஸ்டாரன்ட் இருக்கு சாப்பிட்டுட்டு எல்லோரும் கீழே வந்திடுங்க” என்று கூறி, ஆளுக்கொரு டோக்கன் கொடுத்தார். லிப்டுக்கு எங்களோடு வந்தவர்கள் நிற்க, முதல்மாடிதானே படிக்கட்டில் செல்லாம் என படிக்கட்டை தேடினோம். வலது பக்க திருப்பத்தில் அமைந்திருந்த படிக்கட்டின் மேலே “” என்று எழுதியிருந்தது அறிவிப்பு பலகை. திருமலையின் மேல் பழந்தமிழர்களின் வாழ்வியலை கூறிக் கொண்டு தமிழ்கல்வெட்டுகள் இன்னுமும் இருக்கின்றன. ஆனால் கீழே தமிழ் கொலை செய்யப்பட்டு கிடக்கின்றது.

தமிழ் கொலை

தமிழ் கொலை

அனைவருக்கும் முழு சாப்பாடு வழங்கப்பட்டது. நாங்கள் உண்டு முடித்தும் பலர் இன்னும் மும்முரமாக அந்த வேலையில் இருந்ததால், கட்டிடத்தினை சுற்றிப் பார்க்க சென்றோம். சென்னை மயிலாப்பூர், கலங்கரை விளக்கம் போன்ற இடங்களில் அமைந்திருக்கும் மின்சார தொடர்வண்டிகளுக்கான பிரம்மாண்ட கட்டிடங்களைப் போல இருந்தது. குறைவான அளவே மக்கள் இருந்ததால் கட்டிடத்தின் பேரமைதியும், பெரும் இடமும் நன்கு தெரிந்தது. ஆன்மீக நூல்கள், குளிர்பான விற்பனையகம் என்று குட்டி குட்டியாய் கடைகள் இருந்ததன. கலை அலங்காரப் பொருள்கள் விற்பனையகம் மட்டும் பெரியதாக இருந்தது. ஸ்பென்சரில் இருப்பது போல கட்டுப்படியாக விலையில் பொருள்கள் விற்கப்பட்டன. வெங்கியின் மரத்தாலான உருவம் லட்சக்கணக்கான விலைப்பட்டியலைக் கொண்டிருந்தது. தஞ்சை தலையாட்டி பொம்மைகள், சிறு சிறு கற்சிலைகள், வெங்கல சிலைகள் என ஏகம் இருந்தன. பேருந்தை தவற விட்டுவிடப்போகிறோம் என வாசல் நோக்கி வந்தோம்.

எங்களுடன் வந்தவர்களை ஆந்திரா ஈசல்கள் பயமுறுத்திக் கொண்டிருந்தன. சிங்கம், புலி போன்ற பெரிய கொடும் விலங்களுக்கெல்லாம் மனிதன் பயப்படுவதில்லை. சிறு உயிர்களான கொசுவுக்கும், ஈசலுக்கும் பயந்து போகிறோம். இயற்கை சமநிலையை தகர்க்காமல் விட்டிருந்தால் இந்தநிலை மனிதனுக்கு வந்திருக்காது. கொசு, ஈ, ஈசல் என சிறு பூச்சிகளை உண்ணும் பெரும்பாலான பறவைகள் அழிந்துவிட்டன. ம்ஹூம்… நாம் அழித்துவிட்டோம். இதில் தப்பி பிழைத்த பறவை காக்கா மட்டுமே. ஆனால் அவைகளுக்கு பூச்சிகளை உண்ண பிடிப்பதில்லை. இவையெல்லாம் நாமே செய்து கொண்ட வினை. பேருந்து புறப்பட தயாரானது. உண்ட களைப்பில் பத்மாவதி அம்மன் கோவிலுக்கு போவதையே மறந்திருந்தோம். வழிநடத்துனர் அம்மனை பார்க்க சிலரே விருப்பம் தெரிவிக்கின்றார்கள், நிச்சயம் அம்மனை பார்க்கனுமா, இல்லை நேராக சென்னை சென்றுவிடலாமா என்று கேட்டார். முதல்முறையாக வந்திருக்கிறோம், பார்த்துவிட்டு செல்லலாம் என்று நாங்கள் முடிவெடுத்தோம், எங்களுடன் சிலர் மட்டுமே வர தயாராக இருந்தார்கள்.

பேருந்திலி்ருந்து இறங்கியதுமே, “கோவிலில் 40 ரூபாய் டிக்கெட் இருக்கும் அதை எடுத்துக் கொண்டு செல்லுங்கள், வேகமாக தரிசனம் செய்துவிட்டு வந்துவிடலாம். தாமதமாக்காதீர்கள்” என்று அறிவுரை கூறினார். அவர் கூறியதை போலவே 40 ரூபாய் டிக்கெட் எடுத்துவிட்டு கோவிலினுள் நுழைந்தோம். சுற்றுப் பிரகாரங்களில் எத்தனை இரும்பு தடுப்பு அமைத்து பாதை போட முடியுமோ அத்தனை போட்டிருந்தார்கள். மின்விசறிகள் கூட சிறிது இடைவெளிவி்ட்டு விட்டு தொடர்ந்தது. அம்மனை தரிசித்துவிட்டு வரும் வழியில் ஒரு பெரிய உண்டியலை சுற்றி பாதை அமைத்திருந்தார்கள். தனியே உண்டியலை வைத்தால் மக்கள் எங்கே மறந்துவிட போகின்றார்களோ என்று சிந்தித்திருக்கின்றார்கள். தரிசனத்தினை விட லட்டுக்குத்தான் பெரிய வரிசை இருந்தது. ஒரு லட்டு பத்துரூபாய்க்கு கிடைக்கிறது. அலுவலகத்தில் கொடுக்க வேண்டி சில லட்டுகளை வாங்கிக் கொண்டோம். திருமலையில் கொடுக்கப்பட்ட லட்டுபோல் இல்லாமல் முந்திரி திராட்சையோடு சுவையும் குறைந்தே காணப்பட்டது. 40 ரூபாய் டோக்கனுக்கு 2 லட்டுகள் வேறு கொடுக்கின்றார்கள். கட்டாய பிரசாதம். ஆனால் அதே பிளாஸ்டிக் பை. அப்போதுதான் திருப்பதி தேவஸ்தானமே இதை நடத்துகின்றது என்று புரிந்தது.

கோவிலுக்கு வெளியே தாமரை, ருத்திராட்சம், படிகமாலை என எல்லாமே விற்பனை செய்யப்படுகிறது. ருத்திராட்சம் மரத்தின் கிளையோடு வெட்டி வைத்திருந்தார்கள் சிலர். கோவிலுக்கு வராத பலர் எங்களின் வருகைக்காக பேருந்தில் காத்திருந்தார்கள். அனைவரும் வந்ததும், வழிநடத்துனர் “இதோடு நான் போயிடுவேன். இனிமே இவர்தான் கூட வருவார். இவர்க்கிட்ட எந்த இடத்தில் நிறுத்தனுமுன்னு முன்னாடியே சொல்லிடுங்க” என்று அறிவுரை கூறிவிட்டு விடை பெற்றார். நாங்கள் யார் யாருக்கு எத்தனை லட்டுகள் கொடுக்கப்போகிறோம் என்று பட்டியல் தயாரித்துக் கொண்டிருந்தோம். பேருந்து சென்னை நோக்கி முன்னேற, கொஞ்சம் கண்கள் அயர்ந்தோம், சில மணி நேரங்களில் சைதை பனகல் மாளிகை அருகே பேருந்து நின்றது. அப்போது மணி இரவு 1.30. எங்களின் திருப்பதி பயணம் இனிதே முடிந்தது.

முதல் முறை என்பதாலும், முறையான தகவல்கள் இல்லாததாலும் இந்தப் பயணத்தில் பலவற்றை அறியமுடியவில்லை. திருப்பதியே செல்ல வேண்டாம் என்று நினைத்தவன், இப்போது நினைப்பதெல்லாம் இரண்டு மூன்று நாட்கள் திருப்பதியில் இருக்கும்படியாக செல்ல வேண்டும் என்பதே. எல்லா கோவில்களிலும் கருவறை தவிற நிறைய இருக்கிறது, திருப்பதியிலும் அவ்வாறு இருந்திருக்கும். ஆனால் இந்த பயணத்தில் கருவறை வேறொன்றை கூட கண்களால் பார்க்க முடியவில்லை. கருவறைக்கே செல்லாத ஒரு திருப்பதி பயணம் வரும் காலத்திலாவது சாத்தியப்படுமா என பார்க்கலாம்.

அதிசயக்க வைத்த அஷ்டலட்சுமி கோவில்

கிராம தெய்வங்களுடன் கொண்ட அன்பால், பெரிய தெய்வங்களின் மீதான ஈர்ப்பு குறைந்துபோனது. இன்னும் சொல்லப்போனால், அவையெல்லாம் அந்நிய தெய்வங்களைப் போல காட்சியளிக்கின்றன. இருந்தும் சென்ற ஞாயிறு பெசன்ட் நகரிலுள்ள அஷ்டலட்சுமி கோவிலுக்கு நண்பனின் விருப்பத்திற்காக அவனுடன் சென்றேன். பல முறை ஏலியட்ஸ் கடற்கரைக்கு சென்றிருந்தாலும், அஷ்டலட்சுமி கோவில் அருகில் இருப்பதற்கான அறிகுறிகளை கண்டதேயில்லை. என்னுடைய கற்பனையில் அஷ்டலட்சுமிகள் ஒரு கருவரையில் இருப்பார்கள் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அங்கு பெசன்ட் நகரை நெருங்கியதிலிருந்து எங்களுக்கு ஆச்சிரியங்கள் காத்துக்கொண்டே இருந்தன.

கோவிலின் அமைவிடத்தினை கூகுளில் கண்டிருந்தாலும் அங்கே மாதா கோவில் மட்டுமே தெரிந்தது. அந்த மதத்தினருக்கான பொருட்கள் வழிநெடுகிலும் இருந்தன. அவர்களிடம் அஷ்டலட்சுமி கோவிலுக்கான வழியை கேட்பசதில் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. பின் ஆட்டோ ஓட்டுனர் ஒருவரிடம் வழியை கேட்டு சென்றோம். மாதா கோவிலுக்கு அருகே செல்லும் சாலையில் செல்ல வேண்டியிருந்ததால், அங்கிருப்பவைகளை கண்களில் பட்டன. மெழுகுவர்த்திகள் ஏற்றும் இடத்தில், ஒரு யானை சிலை பக்தர்களை பார்த்துக்கொண்டிருந்தது. ஓரிடத்தில் மஞ்சள் தாலிகளும், தொட்டில்களும் கட்டப்பட்டிருந்தன. அங்கேயே பூட்டுகள் பலவும் இருந்தன. அண்ணா சாலையில் உள்ள தர்காவொன்றிலும் இந்த பூட்டு முறையை கண்டிருக்கிறேன். மாதாவிற்கு சேலை காணிக்கையாக செலுத்தும் இடம் என்று எழுதப்பட்டிருந்தது. மேரி எப்போது புடவை கட்டிக்கொள்ள பழகிக் கொண்டாளோ தெரியவில்லை. வெளிநாடு கோவில்களில் இருக்கும் நம் மாரியும் சுடிதார் போட்டுக் கொள்கின்றாளோ என்னவோ!. சரி இனி கோவில்,..

கோவிலின் முன்தோற்றம் - பழைய படம்

கோவிலின் முன்தோற்றம் - பழைய படம்

கடற்கரைக்கு அருகே, பிரம்மாண்டமாய் விரிந்திருக்கிறது கோவில். விடுமுறை தினம் என்பதால், மக்கள் சாரைசாரையாக நின்றிருந்தனர். இலவசம், ஒரு ரூபாய், நூறு ரூபாய் என பக்தர்களை தரம் பிரித்து கடவுள்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். காசு கொடுத்து கடவுளை பார்க்கும் அளவிற்கு நாங்கள் இன்னும் பொருளாதாரத்தில் உயரவில்லை என்பதால் நாங்கள் எப்போதும் போல இலவசத்திலேயே நின்று கொண்டோம். கொடிமரத்தின் அடிபாகம் விரிசல் விட்டிருந்தது. கோவில் புணரமைப்பு நிகழ்ந்துகொண்டிருந்ததால், அதையும் சீரமைப்பார்கள் என்றே நினைக்கிறேன். வரிசையில் ஊர்ந்து செல்லும் போது, அந்த பெரிய பலகை கண்களில் பட்டது. சற்று குறுகலான பாதை என்பதால், செல்ல இயலாதவர்கள் பின்னால் வருபவர்களுக்கு தொல்லை கொடுக்கவேண்டாம் என்ற ரீதியில் பயமுறுத்தியது. கருவரையை அடைந்துவி்ட்ட நிலையில் இதுவரை குறுகலான பாதையே இல்லையே எதற்காக வீணாக ஒரு பலகை என்று எண்ணினேன்.

முதல் மற்றும் இரண்டாவது கோபுர வரிசை

முதல் மற்றும் இரண்டாவது கோபுர வரிசை

கருவரை தரிசனம் முடித்து, எனக்கு முன்னால் சென்றவர்கள் படிகட்டுகளில் ஏறிக்கொண்டிருந்தார்கள். கோவில் கோபுரத்திற்கு எதற்கு ஏறுகின்றார்கள். வெளியே செல்ல அதுதான் வழியாக என நண்பனுடன் பேசிக்கொண்டே சென்றேன். முதன்முறையாக கோவிலின் கோபுரத்திற்குள் கருவரைகள் அமைக்கப்பட்டிருப்பதை அன்றுதான் கண்டேன். முதல் கோபுர வரிசையில், திசைக்கொன்றாக நான்கு லட்சுமிகள் இருந்தார்கள். இரண்டாவது வரிசையில் ஒரே ஒரு லட்சுமி மட்டும் இருக்கிறார். அடுத்ததாக கீழ் வரிசையில் மூலவர்தவிர்த்து மூன்று புறமும் மூன்று லட்சுமிகள். ஆக எட்டு லட்சுமிகள் இருக்கின்றார்கள். இந்த மாடி கட்டி குடியிருக்கும் சாமிகளைப் பார்த்தா இந்த ஆச்சியம் கொண்டாய் என நீங்கள் கேட்டால், இல்லை.

கருவரையில் உண்டியல்

கருவரையில் உண்டியல்

இதைத்தாண்டியும் ஒரு ஆச்சிரியம் எங்களுக்காக காத்திருந்தது. ஒவ்வொரு கருவரையிலும் ஒரு ஐயர் தட்டுயெந்தி அமர்ந்திருந்தார். அதோடு திரும்பி இடமெல்லாம் சின்னதும் பெரியதுமாய் உண்டியல்கள் பயமுருத்திக் கொண்டிருந்ததன. ஒரு கருவரை எதிரே அதிகமான கூட்டம், அந்த கருவரை தைரியலட்சுமியுடையது. அங்கே செல்லும் போது, காலை இடறியது ஒரு பொருள். என்னவென்று பார்த்தால் ஒரு குட்டி உண்டியல். நிறைய இடங்களில் பால் கேனை துளையிட்டு உண்டியலாக மாற்றியிருந்தார்கள்.

அதை விட ஒரு கருவரையில் மிகப்பெரிய உண்டியலையே கடவுளாக வைத்திருக்கின்றார்கள். அதற்கான கோபுர வாசலின் மேலே “பத்மநிதி” என்று எழுதப்பட்டிருந்தது. இறுதியாக,… தரிசனம், அர்ச்சனை, அர்ச்சனை பொருட்கள், பிரசாதம், தானம், பிராத்தனை என மக்களிடமிருந்து செல்வங்களை வாங்கி அங்கிருக்கும் லட்சுமிகளும், அவர்களின் அருகில் இருப்பவர்களும் செழிப்போடு இருக்கின்றார்கள். உங்களுக்கும் நேரமிருந்தால், அவர்களை காண அஷ்டலட்சுமி கோவிலுக்கு ஒரு முறை சென்று வாருங்கள்.

கோவிலின் தற்போதைய  தோற்றம்

கோவிலின் தற்போதைய தோற்றம்

கோவிலிலிருந்து கடற்கரை தோற்றம்

கோவிலிலிருந்து கடற்கரை தோற்றம்