பேலுக்குறிச்சி சந்தையும் சங்கிலி கருப்பும்

இம்முறை வீட்டு வருச சாமான்கள் வாங்குவதற்கு நாமக்கல் மாவட்டம் பேலுக்குறிச்சிக்கு செல்வது என்று அம்மா முடிவெடுத்தார். சென்ற முறை திருச்சிராப்பள்ளியில் வருச சாமான்கள் வாங்கியிருந்தாலும், மற்ற உறவினர்களிடம் அது குறித்து விசாரித்த போது விலை மலிவாக பேலுக்குறிச்சியில் கிடைப்பதை தெரிவித்தனர். அதனால் இம்முறை சென்ற சனிக்கிழமையன்று பேலுக்குறிச்சிக்கு சென்றோம்.
pellukurichi

வாசனைப்பொருள்களுக்கு என்று தனிக்கடைகளும், வருச சாமான்கள் எனப்படும் மிளகு, கடுகு, சீரகம் போன்றவற்றுக்கு தனிக்கடைகளும் இருக்கின்றன. இம்முறை மழைப் பொய்த்துப் போனதால் பாதிச்சந்தைக்கே வியாபாரிகள் இருப்பதாக வருடந்தோறும் சென்றுவரும் உறவினர் தெரிவித்தார். வியாபாரிகள் மக்களின் தேவைக்கு ஏற்றவாறு ரகம் வாரியாக பொருள்களை வைத்துள்ளார்கள். குறைவான விலைக்கு கேட்டால் தரம் குறைந்த பொருகளையும், தரத்தினை எதிர்ப்பார்த்தால் அதிக விலையும் உண்டு. இதுதான் வியாபாரம். சில கடைகளில் எடை ஏமாற்றும் வழக்கமும் உள்ளது என்பதால், உடன் வந்த உறவினர் வீட்டிலிருந்து படியொன்றினை எடுத்து வைத்திருந்தார். அதில்தான் தர வேண்டும் என்று வியாபாரிடம் சொன்ன போது, அவர் தன்னுடைய படியையும், உறவினர் படியையும் அளந்து சரி பார்த்தார். வியாபாரிடம் ஒரு லிட்டர் படி இருந்தது, உறவினர் கொண்டுவந்தது கிலோ படி.

லிட்டர் படியைவிட 100-200 கிராம் அளவுக்கு பொருள்கள் பிடித்தன. அதனால் செட் 1300 என நிர்ணயம் செய்து மூன்று செட்டுகளை வாங்கிக் கொண்டோம். ஒரு செட்டில் ஐந்து பொருள்கள், ஒவ்வொன்றும் நான்கு கிலோ,. ஆக 60 கிலோ பொருளுடன் நான் விடைப்பெற்று அருகிலிருந்த ஒரு கோயிலில் அமர்ந்து கொண்டேன். மற்றவர்கள் பூண்டு, மஞ்சள், பட்டாணி என வாங்கிக் கொண்டு திரும்பிவர அனைவரும் பேருந்து ஏறி அவரவர் இல்லத்தினை வந்தடைந்தோம்.

பேலுக்குறிச்சி சந்தையைப் பற்றி பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்றபட்டமைக்கு இரு காரணங்கள், 1) சங்கிலி கருப்பு 2) கூட்டாஞ் சோறு.

சங்கிலி கருப்பு – 

sangalikarupu

நாட்டார் தெய்வங்களில் முனியும், கருப்பும் மட்டும் எண்ணற்ற பெயர்களையும், அமைப்புகளையும் உடையது. மிகவும் உக்கிரமான கருப்பினை சில மந்திரவாதிகள் சங்கிலியால் கட்டி தங்களுக்கு சேவகம் செய்ய வைத்துள்ள கதைகளையும், ஊருக்கு நல்லது செய்ய சத்தியம் செய்து சங்கிலியில் கட்டுண்டு கிடக்கும் கருப்பு கதைகளும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். என்னுடைய நண்பன் ஒருவனின் குலதெய்வமான கருப்புசாமியை அவனுடைய தாத்தா அழைத்துவந்து கோயில்கட்டியமை குறித்து தெரிவித்திருக்கிறான். எனினும் இதுவரை சங்கிலி கருப்பினை கண்டதில்லை என்ற குறை இம்முறை அகன்றது.
பேலுக்குறிச்சி சந்தையின் முன்பகுதியில் சில பதிவுகளோடு, சங்கிலி கருப்பும் உள்ளார். ஆளுயர சிலை. மேலிருந்து கீழ் வரை சங்கிலி சுற்றப்பட்ட கருங்கல்லாக காட்சியளிக்கிறார். முன்பக்கத்தில் தமிழ்எழுத்துகள் இருக்கின்றன. பக்கவாட்டில் வட்டமிட்டு அதன் குறுக்காக கோடிட்டவாறு சின்னங்கள் உள்ளன. பின்பக்கம் செதில் செதிலாக உள்ளது. முகநூலில் சேலம் வரலாற்று ஆய்வு செய்யும் ஆர்வளர்களுக்கு தகவல் தந்துள்ளேன். எண்ணற்ற சிறு தெய்வங்கள் ஏதேனும் வரலாற்றுக்காக வைக்கப்பட்ட அரசுச் சின்னங்களாக இருப்பதை அவர்கள் கண்டு முன்பே தெரிவித்துள்ளார்கள்.

முகநூல் நண்பரான ராஜசேகரன் இது நெடுங்கல்லாகவோ, கோமாரிக்கல்லாகவோ இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார். மாலை, ஆபரணம், துண்டு ஆகியவை இல்லாமல் வெறும் கல்லை மட்டும் படம்பிடித்திருந்தால் இந்நேரம் அது என்ன என்று தெரிந்திருக்கும். 🙂 கருப்புசாமியாக ஒரு வரலாறு மக்களால் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பதால் மிகவும் மகிழ்ச்சி. எனக்கு நெடுங்காலமாக கேள்விப்பட்ட சங்கிலி கருப்பைக் கண்டதில் மகிழ்ச்சி.

கூட்டாஞ் சோறு –

பேலுக்குறிச்சியில் எண்ணற்ற ஊர் மக்கள், பெரும்பாலும் மகளீர் ஒற்றுமையாக ஒரு கனரக மூன்று சக்கர, நான்கு சக்கர வண்டிகளில் வந்திறங்கி முழுச்சந்தையிலும் பொருள்களை வாங்கிக் கொண்டு ஒன்று சேர்ந்து திரும்புகின்றார்கள். பசியாறுவதற்கு வீட்டில் சமைத்துக் கொண்டு வரும் உணவை கோயிலில் அமர்ந்து பகிர்ந்து உண்கிறார்கள். பொருகளை மாற்றி மாற்றி தங்களுக்குள் ஒருவர் இருந்து காவல் காக்கின்றார்கள். இந்தக் காலத்திலும் இவ்வாறான ஒற்றுமையும், குழு மனப்பான்மையும் வியக்க வைக்கிறது.

தொட்டியச்சியம்மன் கதை – தமிழ் மண்ணின் சாமிகள்

தொட்டியம் நாயக்கர் பற்றியும், சோழிய வெள்ளாளர் பற்றியும் தெரிந்து கொண்டால் மட்டுமே நாட்டார் தெய்வமான தொட்டியச்சியின் கதையை அறிய முடியும். இந்த இரண்டு சமூகமும் தொட்டியச்சியின் கதையோடு பின்னிப்பிணைந்து இருக்கிறது. அதனால் இந்த சமூகங்களைப் பற்றி முதலில் சில வரிகள்,…

தொட்டியம் நாயக்கர்கள் –

தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்ட சமூகம். ஆந்திராவில் அதிகமாக வாழும் காப்பு என்ற இனத்தின் உட்பிரிவில் ஒன்றாக இந்த தொட்டியம் நாயக்கர்கள் இருக்கிறார்கள். காப்பு இன மக்கள் ஆந்திராவில் அதிகம் இருந்தாலும், தமிழகத்தில் தொட்டியம் நாயக்கர்கள் அதிகளவு உள்ளார்கள். தங்கள் பூர்வீகமான “கம்பளம்” நாட்டினை வைத்து ராஜகம்பளம் என்ற இனமாகவே தங்களை அடையாளம் காண விரும்புகிறார்கள்.

சோழிய வெள்ளாளர் –

தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட சமூகம்.  தமிழகத்தின் தென்பகுதியில் அதிகமாக வாழும் இல்லத்துப் பிள்ளைமார்(ஈழவர்) என்ற இனத்தின் உட்பிரிவில் ஒன்றாக இந்த சோழிய வேள்ளாளர்கள் இருக்கிறார்கள். ஈழவர் இன மக்கள் ஆந்திராவில் அதிகம் இருந்தாலும், தமிழகத்தில் சோழிய வெள்ளாளர் அதிகளவு உள்ளார்கள். தங்கள் பூர்வீகமான “சோழ” நாட்டினை வைத்து  சோழிய வெள்ளாளர் என்ற இனமாகவே தங்களை அடையாளம் காண விரும்புகிறார்கள்.

மணவாடி –

கரூர் மாநகரிலிருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும் சாலையில் இருக்கிறது மணவாடி என்ற குக்கிராமம். எனது சிற்றன்னையை மணம்முடித்து கொடுத்த ஊர் என்பதால் சிறுவயதிலிருந்தே மிகவும் நெருக்கமான ஊர். பாறை பூமி என்பதால் தண்ணீருக்கு கொஞ்சம் பஞ்சம். அதனாலேயே சோளப் பயிர்கள் வயல்களிலும், கள்ளி செடிகள் மற்ற இடங்களிலும் காணப்படும். சென்ற தலைமுறை வரை அத்தனை பேரும் விவசாயம் சார்ந்த தொழில்களையே செய்து வந்தார்கள். நிற்காது ஓடும் எண்ணை செக்கும், நிரம்பி வழியும் பசுமையும் காணப்படும். இப்போது கரூர் நகரின் வளர்ச்சியால் பலர் டெக்டைல்ஸ் தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். அதோடு இங்கு வயக்காடுகளின் வரப்போரங்களில் விளையும் குண்டுமணியையும், காதுகுத்தி முள்ளையும் வேறுபகுதியில் நான் கண்டதில்லை. பனை மரங்கள் அதிகம் இருந்த பகுதி இப்போது புதியதாக வந்திருக்கும் பணக்கார வெள்ளாளர்களால் பாசன வசதி செய்யப்பட்டு தென்னை தோப்பாக காட்சியளிக்கன்ற புதுமையும் காண முடிந்தது. குக்கிராமம் என்ற நிலையிலிருந்து தன்னை உயர்த்திக் கொள்ள ஆரமித்திருக்கிறது மணவாடி.

தொட்டியச்சி அம்மன் –

முக்கிய சாலையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் பக்கம் நடந்து சென்றால்தான் மணவாடி கிராமம் வரும். அப்படி கிராமத்திற்கு செல்லும் சாலையின் வலது பக்கத்தில் ஒரு ஒத்தயடி பாதை பிரிகிறது. அந்த பாதையில் நடந்து சென்றால் ஆள் அரவமற்ற இடத்தில் மிக பிரம்மாண்டமாய் விரிந்து நிற்கும் வேப்பம்மரத்தின் அடியில் மண்ணில் சொறுகப்பட்டிருக்கும் வேல்கம்புகளும், செங்குத்தான  நான்கு பெரிய கற்களும் தெரிகின்றன. அந்த கற்கள் திருவிழா காலங்களி்ல் குடில் அமைக்க வைக்கப்பட்டவை. அந்த நான்கு கற்களுக்கும் மத்தியில் முக்கோண வடிவம் என்று கணிக்கும்படியான கற்கள் வரிசையாக இருக்கின்றன. அவை கன்னிமார்கள். வலது புறம் இருப்பது பெரியசாமி, இடது புறம் இருப்பது கருப்புசாமி, அதோ அதுதான் தொட்டியச்சி என்றார் உடன் வந்த உறவினர். சரியான களமின்மை, இதுதான் நாட்டார் தெய்வங்களின் பலமும், பலவீனமும்.

கதை –

சுற்றிலும் அடர்ந்த காடுகளாக இருக்க, கரூர் மாநாகராக மாறியிறாத காலம். வேட்டைக்கு பழக்கம் செய்யப்பட்ட உயர் ரக நாய்களுடன் தொட்டியம் நாயக்கர்களில் ஒரு குழு வேட்டையில் ஈடுபட்டிருந்தது. அந்த குழுவில் ஆண்களுக்கு நிகராய் பெண்களும் வீரத்துடன் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். பெருமுயல்களை பிடிப்பதற்கு நிலத்தில் வலையமைத்தல், பெருமிருங்களை வேட்டையாட துப்பாக்கியை பயன்செய்தல் என பல வழிமுறைகளை கையாண்டனர். இரவு பகலாய் விலங்குகளை வேட்டையாடுதலில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு அவர்கள் குழுவில் இருந்த பெண்ணொருத்தி வழிதவறியது தெரியவில்லை. நெடுநேரத்திற்குபின் அந்த பெண் தவறியதை அறிந்து தேடத்தொடங்கினர்.

இரவு முழுவதும் தேடியும் அவர்களுக்கு பலன்கிடைக்கவில்லை. இது அந்த குழுவில் இருந்த மற்ற பெண்களுக்கு மிகவும் வேதனை தருவதாக இருந்தது. மறுநாள் காலையில் வழிதவறியப் அந்தப் பெண் மணவாடி கிராமத்திற்கு வந்தாள். வயல்வெளிகளில் வேலை செய்து கொண்டிருந்த சோழிய வெள்ளாள மக்கள் வேட்டை தோரனையுடன் குதிரையில் வீரத்தின் உருவாகவே வந்து நிற்கும் பெண்ணைக் கண்டு அசந்து போனார்கள். அவள் வழிதவறி அலைவதையும், அவளுடன் வந்த கூட்டம் அவளை தேடுவதையும் அறிந்துகொண்டார்கள். அந்தப் பெண்ணின் துயர் தீர்க்க ஆட்கள் சிலரை தொட்டியம் நாயக்கர்களை தேடி அனுப்பினார்கள். அந்த ஆட்களும் விரைந்து தேடுதலில் ஈடுபட்டார்கள்.

ஒரு வழியாக தொட்டியம் நாயக்கர் குழுவானது கண்டுபிடிக்கப்பட்டு, வழிதவறிய அந்த வேட்டைக்காரப் பெண்ணோடு சேர்த்துவைக்கப்பட்டது. பெருநிம்மதியுடன் தங்கள் வேலையை பார்க்க திரும்பிய சோழிய வெள்ளாளர்களுக்கு தொட்டியம் நாயக்கர்களின் கட்டுக்கோப்பான கட்டுப்பாடுகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான். அது இரவு முழுதும் வேறு இடத்தில் தங்கியப் பெண்ணை மீண்டும் தங்கள் குழுவுடன் இணைத்துக் கொள்ளக் கூடாது என்ற கட்டுப்பாடு. அந்தப்பெண் தவறு செய்யவில்லை என்று அறிந்தும் கூட மனதினை கல்லாக்கிக் கொண்டு சமூகத்தின் கட்டுப்பாட்டினை காப்பாற்ற, அவளை அங்கேயே விட்டுவிட்டு சென்றனர். தன் இனமக்களின் பிரிவினை தாங்கமுடியாமல் அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்கிறாள்.

இந்த செய்தி சோழிய வெள்ளாளர்களுக்கு தெரியவருகையில் மிகவும் வருத்தம் கொள்கின்றார்கள். பிள்ளைமாரான சோழிய வெள்ளாளர்கள் கன்னி தெய்வங்களை வழிபடும் வழக்கம் கொண்டவர்கள்.பொதுவாக தன் வீட்டு கன்னி தெய்வங்களை தங்கள் வீட்டிலேயே வைத்து வணங்குதல்தான் வழக்கம்.தங்கள் இனமில்லை என்ற போதும் தங்கள் மண்ணில் உயிர்நீத்த பெண்ணை வணங்குவதென ஒருமித்து தீர்மானித்து இன்று வரை வணங்கி வருகிறார்கள். தொட்டியச்சி என்ற தொட்டியம் நாயக்கர் சமூகத்தின் பெயரையே தெய்வத்தின் பெயராக சொல்கிறார்கள். இறந்தபோன அந்தப் பெண்ணின் உண்மைப் பெயர் தெரியவில்லை. மேலும் தொட்டியம் நாயக்கர் சமூகத்திலிருந்து ஒரு தம்பதியை அழைத்துவந்து, அவர்கள் தலைமையில் தான் தொட்டியச்சியின் திருவிழாவினை சோழிய வெள்ளாளர்கள் நடத்துகிறார்கள்.

மிகவும் சுருக்கமாக சொல்வதானல் சமூகத்தின் கட்டுப்பாட்டினால் ஒதுக்கிவைக்கப்பட்டு இறந்த போன ஒரு பெண் தெய்வமான கதைதான் தொட்டியச்சியின் கதை.

தொட்டியம் மதுர(மதுரை) காளியம்மன் கதை – தமிழ் மண்ணின் சாமிகள்

எனது ஊருக்கு அருகில் இருக்கும் மிகவும் பிரபலமான கோவில்களில் மதுரை காளியம்மன் கோவிலும் ஒன்று. பிரம்மாண்டமும், ஆச்சிரியங்களும் நிறைந்த அதன் தேர் திருவிழாக் காலங்களை என்னால் எளிதில் மறக்க இயலாது. மற்ற குலதெய்வக் கோவில்களைப் போலன்றி மாறுபட்டு இருப்பது அதன் சிறப்பு. அந்தக் கோவிலைப் பற்றிய இடுகையே இது.

கோவில் முன்தோற்றம்

பறையன் இசையில் மயங்கிய காளி –

தொட்டியம் பகுதியிலிருந்து மதுரை திருவிழாவிற்கு சென்ற இரண்டு பறை இசைக் கலைஞர்கள், விழா முடிந்து திரும்பி வருகையிலும் தங்கள் களைப்பு தெரியாமல் இருக்க இசைத்துக் கொண்டே வந்தார்கள். அவர்களின் இசையில் மயங்கியிருந்த காளி, அவர்களின் இசையைக் கேட்டுக் கொண்டே தொட்டியம் வந்ததாக கூறுகின்றார்கள்.

பறை இசை கலைஞர்கள்

பறையையும், பறை இசைப்பவர்களையும் தாழ்த்தப்பட்டவர்களாய் ஒதுக்கி வைத்திருக்கும் சமூகத்திற்கு மத்தியில் அவர்களை முதன்மைப்படுத்தி சொல்லப்படும் கதை ஆச்சிரியமான ஒன்றுதானே. மேலும் அவர்கள் இருவரின் சிலையும் கோவில் பிரகாரத்தில் அமைக்கப்படுள்ளது. சில கோவிலுக்குள் நுழையவே அனுமதி மறுக்கின்ற நிலை இப்போதும் உள்ளது என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்.

தமிழர்களின் இசைக் கருவியென பறையை கொண்டாட இப்போதுதான் ஆரமித்திருக்கின்றார்கள். ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, ஒரு தெய்வம் அந்த இசையில் மயங்கி வந்தமையே இதன் மூலக் கதை எனும் போது, பறை இசையையும், அதன் கலைஞர்களின் மகத்துவமும் புரிகிறது. இதை வருங்கால தலைமுறைக்கு தெரிவிக்க
வேண்டும் என்பது நம் முன்னோர்களின் எண்ணமாக இருந்திருக்க வேண்டும். அவர்களின் எண்ணம் நம் சகோதரன் வலைப்பூவின் மூலம் நிறைவேறிவிட்டது என நினைக்கிறேன்.

எருமைக் கிடா பலி –

மதுர காளியம்மன்

ஆடு, மாடு, கோழி என முப்பலிகளை தருவது பழங்கால வழக்கம். அந்த வழக்கம் இன்றும் தொட்டியம் மதுர காளியம்மன் கோவிலில் நடைபெறுகிறது. பொதுவாக கோழியும், ஆட்டுக்கிடாவும் பலி தரப்பட்டாலும்., எருமைக் கிடா பலி திருவிழாக்காலங்களில் நடைபெறுகிறது. வெட்டப்பட்ட எருமைக் கிடாயை புதைப்பதற்கென பெரும் நிலப்பரப்பும் கோவிலுக்கு அருகிலேயே இருக்கின்றது.

சிறப்புகள் –

  • பறையன் இருவரின் சிலையும் கோவிலுள் இருப்பது.
  • முப்பலி நடைபெருவது.
  • பலருக்கு குலதெய்வமாக இருந்தாலும், அருகில் வசிப்பவர்களுக்கு விருப்பமான தெய்வமாகவும் மதுரகாளி அருள் செய்கிறார்.
  • மக்களின் அன்பால், வெகு விமர்சையாக தேர்திருவிழா கொண்டாடப்படுகிறது.
  • திருமணங்களும், இன்னும் பிற விஷேசங்களும் நடத்தப்படுகின்றன.
  • எல்லாவற்றுக்கும் மேலாக மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தெய்வமாக இருக்கிறாள் மதுரகாளியம்மன்.

சுடலை ஆண்டவர் கதை 2 – தமிழ் மண்ணின் சாமிகள்

நண்பர் மனோ மின்னஞ்சலில் அனுப்பிய சுடலை ஆண்டவரின் கதையின் தொடர்ச்சி இது.

சுடலை ஆண்டவர் கதை – 1

இனிமே இந்த அம்மாளிடம் அடங்கி போனால்தான் காரியம் நடக்கும் என்று எண்ணிய சுடலை, அம்மா நான் கேட்பதற்குரிய பலியை நீ கொடுக்க மறுத்தாலும், வெள்ளியும் செவ்வாயும் எனக்கு விடுமுறை கொடு, எனக்கு வேண்டிய உணவுகளை நான் மயானத்தில் சென்று தின்று வயிறை நிறைத்து கொள்வேன் என்றார் சுடலை. அதற்க்கு அம்மாளும் சரியென்று சம்மதித்தார். அன்றையிலிருந்து சுடலை வெள்ளியும் செவ்வாயும் மயான வேட்டை ஆடிவருவது வழக்கம். நாட்கள் கடக்கிறது.

அதே சமயம், அதே அந்த மலையாளத்தில், நந்தன் புனலூர் சலியர்கரை நான்கு சாலியர் தெருவிலே, அந்த காலத்தில் 1008 வீட்டு புலையன்மார்கள் வசித்து வந்தார்கள். இந்த புலையன்மார்களுக்கு எல்லாம் ஒரு தலைவன், அவன் பெயர் காளிப்புலையன். இவர்களின் தொழில் மாந்திரீக தொழில். அதுவும் சாதாரணப்பட்ட மாந்திரீகம் அல்ல, அந்த புலையன்கள், வானத்தையே வில்லாக வளைத்திடுவார்கள், மணலிலேயே கயிறு திரித்திடுவார்கள், அவர்கள் உரலுக்குள் மையை வைத்து அதை இந்த உலகமெல்லாம் சுற்ற விடுவார்கள், அது உலகமெல்லாம் சுற்றி வீட்டுக்கு வரும், அம்மிக்குள் மையை வைத்து அதை இந்த அகிலமெல்லாம் பறக்க வைப்பார்கள், அது அகிலமெல்லாம் பறந்து வீட்டுக்கு வரும், சுளவு தட்டியையும் தொண்ணூறு காதவெளிக்கு பரக்கவிடுவார்கள், அது ஒற்று பார்த்து வரும், கரையாத பொருட்களையும் கரைக்க வல்லவர்கள், கனத்த உருக்களையும் அளிக்க வல்லவர்கள். இந்த மந்திரவாதி காளிப்புலையனின் மனைவி காளிப்புலச்சி.

இரண்டுபேருக்கும் வெகு நாளாக குழந்தை இல்லாது போக, அவன் மனைவி காளிப்புலச்சி, நந்தன் புனலூரில் ஒரு பாதாள கண்டி ஈஸ்வரி என்ற ஒரு அம்மன் கோவில், அங்கு பொய் 48 நாள் ஒரு மண்டல காலம் விரதம் இருந்தாள். ஒரு காகமானது அக்கிரகாரதிலே, அவ்வையார் விரதமிருந்த ஒரு ஆச்சி வீட்டிலிருந்து ஒரு மா கொளுகட்டையை கொண்டுவந்து, கரமேந்தி தவசிருந்த காளிப்புலச்சி கையில் போட்டது, கோவிலில் கிடைத்தால் பிரசாதமாக நினைத்து அதை எடுத்து உண்டாள் காளிப்புலச்சி. அன்று முதல் அவள் கருவுற்று பத்தாவது மாதம் பெண் குழந்தை பிறந்தது. தவமிருந்து கிடைத்த குழந்தை ஆதலால் சந்தொசமுற்ற காளிப்புலையன், ஊர்மெச்ச விழா எடுத்து கொண்டாடினான், அவனுக்கு குலதெய்வம் இசக்கி. மாப்பிண்டதிலே அவதாரம் ஆனதால், இரண்டயும் இணைத்து மாவிசக்கி என்று குழந்தைக்கு பெயர் நாமம் சூட்டினான். அந்த குழந்தை இனிதே வாளர்ந்தது. ஐந்து வயதிலிருந்து அறிய கலைகளை படிக்கவைதான். பதிமூன்றாம் வயதிலே பருவமடைந்தாள் மாவிசக்கி. அவள் அழகை உவமானம் சொல்ல யாராலும் முடியாது. ஊரே மயங்கும் பேரழகு, மகளை பார்த்த காளிப்புலையன் யோசித்தான், நம் மகளின் அழகுக்கு நிகரான நகைகள் பூட்டி அவளை அலங்காரம் செய்ய ஆசைப்பட்டான், ஆனால், அவன் நியாயமான முறையிலே ஆசைப்பட வில்லை, அவனது மாந்திரீக புத்தி, அவனை கெடு வழியில் செல்ல தூண்டியது,

அஞ்சணமை என்று ஒரு மை, அதை கண்ணில் இட்டால் பூமியிலிருக்கும் புதையல் கூட புலப்ப்படுமாம். அந்த அஞ்சணமையை எடுத்து வெற்றிலையில் தடவி பார்க்கிறான், அங்கே, கொட்டாரக்கரை, பகவதி வாசல், தெற்குமேட்டுகலுங்கு, திருவாத்தி மூட்டுக்குள்ளே ஏழு அண்டா திரவியம் அசையாமல் இருக்ககிறது. அன்று வெள்ளிக்கிழமை ஆகையால் சுடலை மயான வேட்டைக்கு சென்று விட்டார். இதுதான் நல்ல தருணம், அந்த திரவியத்தை களவெடுத்து, வந்து மகளுக்கு நல்ல அணிகலன்கள் செய்ய வேண்டும் என்று மாந்த்ரீக சாலத்தோடு பெரும்புலையன் கிளம்புகிறான். மாந்த்ரீக வேலையோடு கொட்டாரக்கரை பகவதி வாசல் வந்து, ஏழு அண்டா திரவியத்தில், ஒரு அண்டாவை பெரும் புலையன் கொள்ளை போட்டு வீட்டுக்கு வந்தான்.

மயானம் போன சுடலை கலுங்குக்கு வந்தார், ஏழு அண்டா திரவியத்தில் ஒரு அண்டா காலியாக இருக்க கண்டார். பகவதியிடம் வந்தார் சுடலை, அம்மா நான் காவல் காத்த திரவியத்தை எவனோ களவெடுத்து சென்றுவிட்டான், யார் அவன், அவன் திசையை சொல்லு என்று கேட்டார் மாயாண்டி சுடலை. அதற்கு அம்மாள் சொன்னாள், மகனே திரவியம் போனாலும் போகட்டும், அவனை பற்றி கேளாதே என்றார். ஏனென்றால் அவன் காலனை விட கொடியவன், கொடிய பாவி அவன், மகனே, நந்தன் புனலூர் சலியர்கரை நான்கு சாலியர் தெருவிலே, 1008 வீட்டு புலையன்மார்கள் வசித்து வருகிறார்கள், அந்த புலையன்மார்களுக்கு எல்லாம் அவனே தலைவன், நமது திரவியத்தை களவெடுத்ததும் அவனே என்றாள் அம்மை. மேலும், பாம்பு கடித்து இறந்தார்கள் என்று யாரும் கண்டதே கிடையாது அவன் வாழும் தெருவிலே, தேள் கொட்டி அழுதவர்கள் அங்கு யாரும் இல்லை, அவர்களை எதிர்த்து சென்றவர்கள் திரும்பி வந்த சரித்திரமே இல்லை, அவளவு கொடிய மாந்திரவாதிகள் இருக்குமிடம், ஆகவே நீ போனால் உன்னையும் பிடித்து அடைத்து விடுவான், ஆகவே போக வேண்டாம் மகனே, போனது போகட்டும், நீ உள்ளே இரு என்றார் அம்மை. சுடலை கேட்கவில்லை, அம்மா, என்னுடைய காவலிலிருந்து ஒருவன் களவெடுத்து சென்ற பிறகும் நான் ஏனென்று கேட்க்காது இருப்பது முறையா. நீ ஒரு வார்த்தை சொல்லு. மகனே சுடலை சென்று வா, வென்று வா என்று ஒரு முறை ஆசி கொடுத்து அனுப்பு, வென்று வருகிறேன். எப்படி தெரியுமா ?

கொள்ளை கொண்டு சென்றவனை கொடியருத்து வாறேனம்மா, களவெடுத்து சென்றவனை கருவறுத்து வாறேனம்மா, மங்கவாய் வாயதிலே மண்ணள்ளி போட்டுவாரேன் எனக்கூறி, பலி வேகம் கொண்டு கொடும் சப்தமிட்டார். எல்லாம் கவனித்த அம்மாள் பார்த்தாள், இனி இவனை அடக்க முடியாது என்று உணர்ந்து, சென்று வா மகனே சென்று வா, புலையனை வென்று வா மகனே வென்று வா என்று வாழ்த்தி நல்ல விடை கொடுத்து, மந்திரித்த வல்லயத்தையும் கொடுத்து, திருநீறையும் கொடுத்து, சுடலையை, பகவதி அம்மையே அனுப்பி வைத்தாள்.

அங்கிருந்து வீர விகார வேசத்தோடு வந்த சுடலை அவன் வீடு நெருங்கியதும், யோசித்தார், இதற்கு அந்தப்புறம் நாம் இந்த சொருபத்தோடு செல்ல கூடாது. அந்த திருட்டு பயலை வேசம் போட்டுத்தான் மோசம பண்ணவேண்டும் என்று முடிவெடுத்தார். அதன் படியே ஒரு பாம்பாட்டி சித்தன் உருவம்பூண்டு, மகுடி எடுத்து ஊதினார், ஏகப்பட்ட பாம்புகள் வந்து கூடியது. அந்த ஆயிரம் பாம்பு கூட்டத்தில் ஒரு நாக பாம்பையும் ஒரு நல்ல பாம்பையும் பிடித்தார். பல தலை உடையதை நாகமென்றும், ஒரு தலை உடையததை நல்ல பாம்பு என்றும் சொல்வர். அந்த இரண்டு பாம்புகளையும் ஒரு கூடையில் அடைத்து, கூடையை தலை மேல் வைத்து, புலையர்களின் உயிரை கவரக்கூடிய ஒரு கூற்றுவனைபோல சுவாமி நடந்து வருகிறார். அப்படியே நான்கு சாலியர் தெருவை அடைந்த ஸ்வாமிகள், இங்குதான் பாம்பு வித்தை காட்ட வேண்டும் என்று முடிவு செய்தார். அப்படியே பாம்புகளை வெளியே எடுத்து , ஆட விட்டு பல கொடிய வேடிக்கைகளை செய்கிறார், அந்த வேடிக்கைகளை புலையன்மார்கள் பலர் வந்து பார்த்தாலும் காளிப்புலையன் வீட்டிலிருந்து எவரும் வரவில்லை. பார்த்தார் சுவாமி, வேடிக்கை காட்டுவது இப்போது முக்கியமில்லை, காளிப்புலையன் வரவில்லை என்றால் என்ன, நாமே அவன் இடத்திற்கு செல்வோம் என நினைத்த சுவாமிசுடலை, அந்த உருவை மாற்றி, ஒரு வயதான கிழவனைப்போல உருவெடுத்தார், அந்த உருவமானது, பழுத்த உடல் வெளுத்த தலையுமாகவும், உடலில் வெடித்த வெள்ளரி பழம் போன்ற வரிகளும், அந்த வரிகளில் வெள்ளி ஊசி போன்ற புழுக்களும் நெளிய, ஒரு வெறுக்கும் படியான உருவத்துடனும், காவி உடையோடு கழுத்திலே உத்திராட்சம், நெற்றியிலே விபூதி, ஒரு கையில் ஊன்றுகோல், மறு கையிலே திருவோடுமாக, தள்ளாடி தள்ளாடி, நடை நடந்து சுவாமி அந்த மாந்திரவாதியின் வீட்டு வடக்கு வாசலில் வந்து நின்றார்.

மாந்திரவாதி காளிப்புலையன் வீட்டில், அங்கு ஏழு அறைக்குள்ளே காளிப்புலையன் மகள் மாவிசக்கி தோளியர்களுடன் தன்னை தானே அலங்காரம் செய்து, அங்கு ஆடலும் பாடலுமாக மகிழ்ந்து கொண்டிருந்தாள். தாயும் தந்தையும் வெளியே சென்றிருந்தனர். உடனே சுவாமி வடக்கு வாசலில் நின்று பிச்சை கேட்பதுபோல, வீட்டில் யாரம்மா இருப்பது, ஒரு ஏழை ஆண்டி வந்திருக்கிறேன், கொஞ்சம் அன்னம் தாருங்கள் என்றார். அவளோ, யாசகம் கேட்பது சிவனடியார் என்று நினைத்து கையிலே கொஞ்சம் திணையை அள்ளிக்கொண்டு வந்தாள் மாவிசக்கி. இவள் வடக்கு வாசலில் வந்தால் சுவாமி தெற்கு வாசலில் நின்று, மீண்டும், அடியே பிட்சை போடு என்பார். மாவிசக்கி அங்கு சென்றால் உடனே அடுத்த வாசலுக்கு செல்வார். இப்படியே அவளை அலைக்கழித்தார். இதனால் கோபமடைந்த மாவிசக்கி சுடலையை பார்த்து, அடேய் கிளட்டுப்பயலே, மரியாதையாக தருவதை வாங்கிவிட்டு வீட்டைவிட்டு ஓடிவிடு என்று சத்தமிட, வந்தார் சுடலை, பெண்ணே நான் பிச்சைக்காக வந்தேன் என்று நினைத்தாயா, இல்லை, உனது அப்பனுக்கும் எனக்கும் ஒரு கணக்கிருக்கிறது, அதை முடிக்கவே நான் வந்தேன் என்று கூறி, மாரியாதை குறைவாக பேசினால் உன்னையும் இல்லாது அளித்திடுவேன் என்றார். அத்துடன், உன்னிடம் பேசி பேசி நாவறண்டு போனது கொஞ்சம் தண்ணீர் கொடு என்றார். அதற்க்கு மாவிசக்கி, அடேய் கிழவா நான் யாரென்று அறியாது பேசுகிறாய், அத்துடன், உனக்கு தர தண்ணீரும் இங்கு இல்லை, உனக்கு தண்ணீர் தரும்படியான இழிவான ஆட்களும் இங்கு இல்லை என்று அகங்காரமாக சொன்னாள். உடனே செஞ்சுடலை அவளை பார்த்து, அடி மாவிச்க்கி, உன் அப்பனுக்கு பசும பாலை கறந்து கொண்டு வந்து அலமாரியில் வைத்திருக்கிறாய், என்னிடமோ உனக்கு தர ஒன்றுமில்லை என்கிறாய், அது போக என்னை மிக இழிவாக பேசிவிட்டாய். கள்வனுக்கு பிறந்த நீயே இழிவானவள். ஆகவே இன்னும் எட்டு நாட்களுக்குள் உன்னை கன்னிகழித்து உன் அகங்காரத்தை அழித்து, அத்துடன், உன்னையும் உனது அப்பனையும் அவன் குடியையும் கருவறுத்து அளிப்பேன், இது தவறினால், நான் மயானத்தில் உருவெடுத்து கைலாசத்தில் வளரவும் இல்லை, என் தாய் பார்வதி தேவியாம் பேச்சியும் இல்லை, என்பெயர் சுடலையும் இல்லை என்று மார்தட்டி சபதம் வைத்த மாயாண்டி சுடலை மாயமாக மறைந்துவிட்டார்.

மாலை நேரம் சென்றதும் காளிப்புலையன் வீட்டிற்கு வந்தான். நடந்தது அனைத்தையும் சொன்னாள் மாவிசக்கி. அப்படியா என்வீட்டிலே வந்து ஒருவன் கருவருப்பானா, பார்கிறேன் நான் என்று கூறிய காளிப்புலையன், மை போட்டு பார்க்கிறான், சுடலை என்று அறிந்தான். திரவியதிற்கு காவல்காரன் வீடு தேடி வந்து விட்டான் இனி நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று புரிந்துகொண்ட காளிப்புலையன் காவலும் கட்டுமாக இருக்க, அதே அந்த மலையாளத்திலே ஆலடிப்புதூரிலே பளியன்மார்கள் எல்லாம் கூட்டு பங்காளியாக வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் காக்காச்சி மலை தாண்டி கண்ணாடி சோலைக்குள்ளே, அக்காலத்திய முறைப்படி விவசாயம் செய்தார்கள். செய்த விவசாயம் அங்கே பயிரில் பலன் பிடிக்கும் நேரம். அதே நேரத்தில் சுடலை தான் போட்ட சபதத்தை முடிக்கவேண்டும் என்று, எட்டாம் நாள் சாமம், அந்த புலையனின் கோட்டைக்கு வந்தார். அங்கு ஏழு அறைக்குள்ளே எரும்ம்பு ரூபம் எடுத்து மாவிச்க்கியின் அறைக்குள்ளே நுழைந்து, மாவிசக்கியாளை கொண்ட கணவனைப்போல கூடவே படுத்திருந்து கற்பழித்தார், கற்பழித்து முடிந்ததும் வெளிப்பட்டார் சுடலை. அடுத்து நேராக, காக்காச்சி மலை கண்ணாடி சோலைக்குள்ளே மத யானை போல நுழைந்து அனைத்து பயிர்களையும் அடி முதல் வேர்வரை சர்வநாசம் செய்து அனைத்தயும் அழித்தார். அழித்துவிட்டு அப்படியே கொட்டாரக்கரை பகவதி வாசலுக்கு வந்தார்.

பளியன்மார்கள் மறுநாள் விவசாயத்தை பார்க்க வந்தார்கள். சோலையே அழிந்து போனது கண்டு திகைத்தவர்கள் புலையனிடம் ஓடிவந்தார்கள், நடந்ததை தெரிந்துகொண்ட புலையன், காரணம் கண்டுபிடிக்க மையிட்டு பார்த்தான், அங்கேயும் ஆடியது சுடலைதான் என்பதை கண்ண்டான். உடனே சுடலையை அடக்க என்ன வழி என்று அவனது மாந்திர சக்திவளியாக ஆராய்ந்து பார்க்கிறான். அவனது மாந்திர குறி சுடலை கேட்பதை கொடுத்தால் அவரை அடக்கலாம் என்று சொல்கிறது, சுடலையை அடக்கி அடைக்கவில்லை என்றால் பெரும் இழப்புக்கள் நேரும், ஆகையால், எப்படியாவது சுடலை கேட்பதை கொடுத்து அவரை அடக்கி நிலை கட்டநினைத்தான் புலையன். ஆகையால், மீண்டும் வெற்றிலையில் மை போட்டு சுடலையை அழைக்கிறான். மையில் சுடலைவந்தார். ஏய் கீழ் நெறி புலையனே, என்னை இப்போதுதான் அறிந்தாயா, நீ இல்லாததால், உன் மகளை கற்பழித்து, உன்னுடைய சோலை நடுவங்களையும் அளித்தது நான்தான், அடுத்து உன்னையும் அளிப்பேன் என்று வெறி கொண்டு சொன்னார். சுடலையின் சக்தி அறிந்து பயந்து போன புலையன், சுடலை எதை கேட்டாலும் அதைகொடுத்து அவரை எப்படியாவது அடக்க நினைத்து, என்ன நீ கேட்டாலும் தருகிறேன், உன் கோபம தீர நான் என்ன தரவேண்டும், எதை கேட்டாலும் தருகிறேன் என்றான். அதற்க்கு சுடலை, நீ யாருக்காக எனது கட்டு காவலை மீறி எனது அம்மையின் திரவியத்தை களவெடுத்தாயோ, அந்த மாவிசக்கியை கருவோடு கொடிபுடுங்கி எனக்கு காபூசை கொடுத்தால் உன் கட்டுக்குள் அகப்படுவேன், இல்லையென்றால் அடுத்து உன்னையும் அழிதிடுவேன் என்றார்.

எப்படியோ தான் தப்பினால் போதும் என்று எண்ணிய சிறு குணத்தான் புலையனவன், மாவிசக்கியை, அந்த காக்காச்சி மலை கண்ணாடி சோலைக்குள்ளே கொண்டு வைத்துக்கொண்டு, ஏழு பரண் போட்டு, ஏழுவிதமான பலிகளை கொடுத்தான். சுடலையோ, டேய் புலையனே சொன்னது போல உன் மகளை பழிபோட்டு கொடு இல்லையென்றால், நீ நினைத்தது நடக்காது என்று கர்ஜிக்க, தான் பெற்ற மகளென்றும் பாராமல் அந்த சண்டாளப்பாவி புலையன், சூல்கொண்ட ஒரு பசுவை கிடதுவதுபோல பரணின்மேல் கிடத்தி, கை கால்களை கட்டி, அவளது வயிற்றை கிழிக்க ஆயுதத்தை கையில் எடுத்தான்.

அப்போதுதான் தான் சாகப்போகிறோம் என்று மாவிச்க்கிக்கு தெரிந்தது. அட சண்டாளப்பாவி புலையனே, அருமை பெருமையாக வளர்த்து, எங்கோகண்ட பேய் படைக்கோ என்னை பலிகொடுக்க வந்துவிட்டாயே என்று அளுத்து புலம்பி பதறினாள். அவளின் பதரலை பார்த்த சுடலை, யாரும் அறியாது நொடி வேளையில் அவளின் மனதிற்குள் புகுந்து, பெண்ணே நீ முற்பிறவியில் செய்த பலன் படி இந்த கள்வனுக்கு மகளானாய், பெற்றோர் செய்யும் தவறுகளுக்கு பிள்ளைகளும் பதில் சொல்லவேண்டும், என் அம்மையின் பொருளென்று அறிந்தும் நீ அதை அனுபவிக்க துணிந்தாய், அதனால் இப்பிறவியிலும் தவரிளைத்தாய், ஆகவே எனது சட்டப்படி இவைகளுக்கு நான் வழங்கும் கூலி இதுவே என, நெறி புரிவித்து அதே நொடியில் வெளி வந்தார்.

வெளிவந்த சுடலை, டேய் வேளை தவறுகிறது என்று ஓங்கார சப்தமிட, தான் தப்பினால் போதும் என்று எண்ணிய புலையன், தான் பெற்ற மகளென்றும் பாராமல் மாவிசக்கியின் வயிற்றை கிழித்து, மாவோடு கருவோடு பிள்ளையை பிடுங்கி, தலைவாழை இலையில் வைத்து சுடலைக்கு வாரிக்கொடுத்தான். அதை ஏற்ற சுடலை அவன் சொல்லுக்கு கட்டுப்படுவது போல் அவன் சிமிளுக்குள்ளே நுழைந்தார். புலையன் சுடலையை சிமிழோடு ஒரு தாமிர தூருக்குள்ளே வைத்து குளத்திற்குள் புதைத்தான். அடுத்து அதே குளத்திற்கு புலையனின் மனைவி தண்ணீர் எடுக்க வந்தாள். தூரை வெடித்து சிமிழோடு வெளியான சுடலை புலையனின் மனைவியின் தண்ணீர் குடத்தினுள் சிமிளாக புகுந்து கொண்டார். குடம் வீட்டுக்குள் வந்ததும் குடத்திலிருந்து துள்ளி சிமிளாக வந்து அருகிலிருந்த புலையனின் இடது கால் தொடையில் அமர்ந்து கொண்ண்டார். பயந்து போன புலையன், இவன் நம்மை இன்னும் விட வில்லையே என்று நினைத்து, சிமிளை உரலில் இட்டு இரும்பு உலக்கையால் இடித்தான், சிமிழ் உடைந்து வெளிப்பட்ட தேரடிமாடன் மாயாண்டி சுடலை, வல்லயமும் தடியோடு வீர வேக உருவோடு நின்று, அந்த புலையனை ஒரே அடியாக அடித்து ஊட்டியை முறித்து உதிரத்தை குடித்து அவனை அளித்து, அவனது மனைவி காளிப்புலைச்சியையும் அளித்து, அந்த திரவியத்தை எடுத்து, பழையபடி கொட்டாரக்கரை, பகவதி வாசலுக்கு கொண்டு வந்து பகவதி அம்மையிடம் ஒப்படைத்தார்.

அம்மையிடம் ஆசிவாங்கி, மீண்டும் நம் நாட்டிலுள்ள எல்லா தீர்த்தங்களும் ஆடி, 1008 சிவ ஸ்தலங்கள், 108 திருப்பதிகளையும் மாயாண்டி சுடலை வணங்கி, எல்லா தெய்வங்களையும் தொழுத சுவாமி மாயாண்டி சுடலை ஆண்டவர், மீண்டும் தென்னாடு வந்து தென்நாட்டில் குற்றாலம் வழியாக சீவலப்பேரிக்கு வந்து சீவலப்பேரி சுடலையாக குடி கொண்டார். அங்கிருந்து பிடி மண் மூலம், வள்ளியூர் அருகே சிறுமளஞ்சியில் ஒத்தப்பனை சுடலை ஆண்டவராகவும், ஆறுமுகமங்கலத்தில் ஆறுமுகமங்கல சுடலையாகவும், மற்றும் தென் நாடு முழுக்க பல இடங்களில் சுடலை ஆண்டவன் பரந்து விரிந்து வீற்றிருந்து இன்று தன் ஆட்சியை நடத்தி வருகிறார். தன்னை நம்பிவரும் பக்தர்களுக்கு நல்லருள் அருள் பாலிக்கிறார்.

நல்லோர் மனதை நடுங்க செய்பவர்கள், நட்டாற்றில் கையை நழுவ விடுபவர்கள், வரவுபோக்கிற்கு வழி அடைப்பவர்கள், வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பவர்கள், கற்பு வழி நிற்கும் கன்னியரை அழிப்பவர்கள், பொது சொத்தை கொள்ளை அடிப்பவர்கள், பதவியை பயன்படுத்தி பகட்டு வேஷம் போடுபவர்கள் இன்னும் பல ஆயிரமாயிரம் நரித்தனம் செய்யும் நயவஞ்சக மனிதர்களை கழுவேற்றி காவுகொள்கிறார். கண்ணீருடன் சுடலையிடம் முறையிடுவர்களுக்காக இன்றும் துரோகிகளை பழிதீர்த்து நல்லவர்களை காப்பாற்றி வருகிறார். சுடலை ஆண்டவன் சன்னதியில் பொய் சத்தியம் செய்பவர்களின் குடும்பத்தின் தலைமுறையும் பூண்டற்று போய்விடும். தனக்கு ஓர் துயர் நேர்ந்துவிட்டது என்று கண்ணீருடன் எந்த அப்பாவியும் முறையிட்டால் சுடலை சும்மா விடமாட்டார் என்பது வெறும் கதையல்ல ரத்தவரிகளால் எழுதப்பட்ட சரித்திரமாக இன்றும் நிலைத்து நிற்கிறது. சுடலை ஆண்டவருக்கு ஜாதி பேதமின்றி யார் வேண்டு மென்றாலும் பூஜை செய்யலாம். அந்தணர்கள் உட்பட அனைத்து ஜாதியிலும் பூசாரிகள் உண்டு. பொதுவாக சுடலை நயவஞ்சகரை அழிப்பவராகவும் பொய் சத்யவாதியை வதைப்பவராகவும். தீய மந்திர சக்திகளை ஒழிப்பவராகவும் இருக்கிறார், பல எதிரிகளுக்கு ஆட்பட்டு வாழ்க்கையில் துயரப்படுபவர்கள் சுடலையை வணங்கினால் சத்ருகள் நாசமடைந்து சந்தோஷமான வாழ்வை பெறுவார்கள்.

சுடலை ஆண்டவர் கதை – தமிழ் மண்ணின் சாமிகள்

நன்றி – மனோ என்ற நண்பர் நம்முடைய சகோதரன் தளத்தில் பதியப்பட்டிருக்கும் சுடலையின் கதையை படித்துவிட்டு, வேறொரு கதையை அனுப்பியிருக்கிறார். ராமாயணம் உலகறிந்த கதையாக எழுத்து வடிவம் பெறப்பட்டு இருக்கும் போதே, பல இடங்களில் மாறுபட்ட ராமாயணம் சொல்லப்படுவதை அறிவோம். அச்சில் ஏறாத சுடலையின் கதையை மக்கள் மாறுபட்டு சொல்வது பெரும் வியப்பானதல்ல. நம்முடைய தேடலில் புதியதாக ஒரு நண்பர் இணைந்து கொண்டமைக்கு நன்றிகள். இதோ அவர் எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிய கதை.

சுடலை ஆண்டவர் கதை – அன்று ஒருநாளில் புனிதமான கைலாச பார்வதத்தில், உலகையே கட்டி காக்கின்ற சிவனும் பார்வதியும் இடவலமாக வீற்றிருந்தார்கள். அங்கு மேலும் தேவர்கள், ரிஷிமார்கள், கம்போவர்கள், கணநாதர்கள், சாரணர்கள், சித்தர்கள் என கைலாசதிற்கானவர்களும் அங்கு இருந்தனர்.

உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும், எந்த உயிருக்கு எவ்வளவு என தெரிந்து, அறிந்து உணவளிப்பதும், ஈசனகிய சிவனின் பணிகளில் ஓன்று. அவ்வாறே அன்றும் பார்வதி தேவியிடம் ஈசன், நான் பூலோகம் சென்று அனைத்து உயிர்களுக்கும் அவைகளின் பிரவிப்பயனின் படியான கணக்குப்படி உணவளித்து வருகிறேன் என கூறி பூலோகம் சென்றார்.

பூலோகத்தில் ஈசன், எறும்பு முதல் யானைவரையிலும், உருவாகுகிற திசு முதல் வயிற்றிலிருக்கும் சிசு வரையிலும் எவற்றிற்கும் குறைவில்லாது படியளக்கும்போது, அங்கே கைலாசத்தில் இருக்கும் அம்மை பார்வதியாளுக்கு ஒரு சந்தேகம் சிவனின் மீது வந்தது. தினமும் ஈசன் படியளக்க போகிறேன் என்று செல்கிராரே அது எவ்வாறு, எவருக்கும் தவறாது எப்படி படியளக்க முடியும் என்று, ஈசனின் பணிமீது, தேவியின் மனதில் ஒரு சந்தேகம் வந்தது. எனவே இதை சோதித்து அறிய நினைத்தாள் அம்மை உமையவள்.

உடனே தேவலோக தேவ கட்சரிகளை அழைத்த தேவி, நீங்கள் சென்று ஒரு காஞ்சுராம் கம்பில் கடையப்பட்ட சிறு குமிழ் ஒன்றை செய்து வாருங்கள் என்றார். அவர்களும், மூடினால் காற்றுகூட புக முடியாத அளவில் துல்லியமான ஒரு காஞ்சிரங்குமிழை உருவாக்கி அம்மையிடம் அளித்தனர். உடனே தேவி பூலோகத்தில் இருந்து ஒரு சித்தெரும்பு ஒன்றை பிடித்து சிமிழுக்குள் அடைத்து, அதை தனது சேலை முடிப்பில் முடிந்து வைத்தாள்.

சிறிது நேரம் சென்றதும் ஈசன் அனைத்து உயிர்களுக்கும் படியளந்து மீண்டும் கைலாசம் வந்தார். இறைவனுக்கு அவர் வந்ததும் செய்ய வேண்டிய பணிவிடைகளை செய்த தேவி, இறைவனிடம் நீங்கள் எவ்வாறு அனைத்து உயிர்களுக்கும் படியளந்தீர்கள், ஒரு உயிர் கூட விடுபட்டிருக்காதா என்று ஈசனிடம் வினவ, அதற்கு ஈசன், ஒவ்வொரு உயிருக்கும், அந்த உயிர் அதன் முற்பிறவியில் செய்த நல்ல, கெட்ட காரியங்களின் கணக்குப்படி இந்த பிறவி வழங்கப்பட்டிருக்கும், அந்த பிறவிப்பலன் படி ஒவ்வொரு உயிருக்கும், ஒவ்வொரு நாளும் எவைஎவை வழங்கப்பட வேண்டும் என கணிக்கப்பட்டு வழங்கப்படும். இந்த கணக்கீட்டில் உணவும் அடங்குவதால், அதில் தவறு நேரக்கூடாது என்று நானே நேரில் சென்று என் கவனத்தில் வைத்து அளித்து வருகிறேன். எனவே தவறவே தவறாது என்றார்.

உடனே தேவி உமையாள் ஈசனிடம், ஈசனே நீங்கள் பூலோகம் சென்ற பிறகு என்னிடம் ஒரு உயிர் அகப்பட்டுக் கொண்டது. அது ஒரு வேளை உணவின்றி, உங்களை நம்பி உயிரை கூட விட்டிருக்கலாம் என்று கூறிக்கொண்டே முடிப்பை பிரித்து சிமிழை திறந்து பார்க்க, அதிர்ந்து போனாள். அங்கே அந்த சித்தெரும்பு வாயில் ஒரு திணை அரிசியை கவ்விக்கொண்டு குமிளுக்குள் சுற்றி சுற்றி வந்தது, அதனோடு இன்னொரு சித்தெரும்பும் துணைக்கு இருந்தது. உடனே தேவி இறைவனின் காலில் விழுந்து, ஈசனே தங்களின் பெருமையை நானே மறந்து, அறியாது தெரியாது மாபெரும் தவறை செய்துவிட்டேன், என்னை மன்னித்துவிடுங்கள் என்று நடுநடுங்கி அம்மை ஈசனிடம் மாப்பு கேட்க, ஈசனோ கண்கள் சிவந்து கடும் கோபம் கொண்டு அம்மை உமையவளுக்கு ஒரு சாபத்தை உதிர்த்தார்.

அந்த சாபம் என்னவெனில், கணவனை சொதித்ததால் காட்டு பேச்சியாக போகக்கடவது, மன்னனை சோதித்ததனால் மயான பேச்சியாக போகக்கடவது. பேயாக பிறந்தாலும் போதாது, நீ சுடுகாட்டு பேயாக போகவேண்டும், (பேச்சி என்று சொன்னால் தமிழில் பேய் என்று அர்த்தம). இப்படியாக பலவித சாபங்களை கொடுத்த சுவாமிகளிடம், அம்மை அழுது புலம்பியவாறே, ஈசனே இந்த அகோரமான சாபம் எனக்கு எப்போது தீரும் என்று கேட்க, அதற்க்கு ஈசன், நீ பேச்சியாக மயானத்தில் நின்று என்னை நினைத்து மாபெரும் தவம ஒன்று செய்தால், நான் அங்கு ஒரு ஆண் குழந்தையாக நான் அவதாரம் செய்வேன். நீ அந்த குழந்தையை கையால் தொட்டதும் உன் சாபம் தீரும் என்றார்.

ஈசனின் கோபத்தினால் சாபம்பெற்று பூலோகம் வந்த அம்மை உமையவள், பூலோகத்தில் தில்லைவன காடாகிய மயானபூமியில் ஐம்புலன்களையும் அடக்கி, ஈசனை நினைத்து, அம்மாள் பேச்சியாக ஒரு மபெரும் தவத்தை செய்யதார், அப்படியே அம்மையின் தவத்திற்கு இரங்கிய ஈசன் அங்கு பேச்சியான தேவிக்கு காட்சி கொடுத்தார். அப்படியே அம்மையிடம், உனக்கு என்ன வரம் வேண்டும் என்றார். அதற்க்கு அம்மை, ஈசனே நான் கணவன் உடன் சேராது ஒரு கைக்குழந்தை வேண்டும் என்றாள். உடனே ஈசன், பெண்ணே இந்த தில்லைவன காடாகிய மயானபூமியில், சிதையில் பிணம் கொடுஞ்சுடராக எரிந்துகொண்டு இருக்கும்போது, அந்த சுடரின் அருகாமையில் வந்து கண்களை மூடி முந்தாணி சேலையேந்தி என்னை நினைத்து நின்றால், ஒரு ஆண் குழந்தை அவதாரமாகும் என்றார். அப்படியே பேச்சி யாக அம்மை தவமிருக்க, மயானத்தில் பிணங்கள் எரிந்து வரும் சுடரிலிருந்து, சிவனின் திருவருளால் அம்மாவின் முந்தாணியில் சுடலை முத்துக்கள் வந்து விழுந்தன. அம்மா அவற்றை கூட்டி அள்ள அது ஒரு சதை பிண்டமாக உருவெடுத்தது. அந்த பிண்டதிற்கு உயிர் உள்ளது, ஆனால் அதற்கு எந்த உறுப்புகளும் இல்லை. உடனே அம்மை இறைவனை நினைத்து அழுது புலம்பி, ஈசனே பிள்ளைவரம் கேட்ட எனக்கு, ஒரு முண்டத்தை தந்து விட்டீரே, நான் என்னசெய்வேன் என்று முறையிட, ஈசனின் திருவருளினால் அந்த பிண்டம் அழகான ஒரு ஆண் குழந்தை வடிவம் பெற அம்மை மகிழ்ந்தாள். சுடரில் இருந்து உருவானதால் அந்தகுழந்தைக்கு சுடலை என்று பெயரிட்டாள்.

சுடலை குழந்தையாக இருக்க, அந்த குழந்தையின் அழகானது, ஏறு நெற்றி கூர்புருவத்துடனும், இருண்ட கண்கள், சிவந்த முகம், பவளம் போன்ற நிறத்துடனும் மாபெரும் அழகுடன் இருந்தது, உடனே அம்மை குழந்தைக்கு முத்தமிட்டு, நெஞ்சோடு அணைத்துக்கொண்டு, மயான பூமியில் வைத்தே சுடலைக்கு அமுதம் ஊட்டி, குழந்தையுடன் கைலாசம் வந்தாள் அம்மை உமையவள்.

கைலாசம் வந்த மாயக்குளந்தை சுடலை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வேகமாக வளர்ந்து வருகிறது, நாட்கள் செல்கிறது, அப்படியே ஒருநாள் குழந்தைக்கு அமுதுஊட்டி தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு பார்வதி அரனுடைய பதிக்கு சென்றுவிட்டாள். அப்போது நாடு ஜாமம் 12 மணி, அந்த நேரதிலே தொட்டிலில் இருந்த திரு குழந்தைக்கு ஒரு விதமான வாசம் தென்பட்டது, அது பிணம எறியும் வாடை, உடனே சுடலை நினைக்கிறார், அந்த அம்மா நமக்கு அமுது ஊட்டி நேரமாகிவிட்டது, நமக்கு பசிக்கிறது, இனிமேல் இந்த அம்மா ஊட்டும் அமுதம் நமக்கு போதாது, தனது வயிறு இந்த வாடை வரும் பிணங்களை தின்றால்தான் நிறையும் என்று எண்ணி, எவருக்கும் தெரியாது, வடக்குவாசல் வழியாக, தில்லைவன காடகிய மயான பூமிக்கு சென்றார். அங்கோ ஏகப்பட்ட பிணங்கள் எரு அடுக்கி எரிந்துகொண்டிருக்க, அவற்றை பார்த்த சுடலை, வெந்து கொண்டிருந்த பிணங்களின் வலது சுற்றி இடமாக வந்து, எவளவு வேண்டுமோ அவ்வளவு பிணங்களை தின்று, அத்துடன் அங்கிருந்த பேய்களுக்கும் விருந்தளித்து, பேயோடு பேயாக பேச்சி மகன் சுடலை நடனமாடினார். நேரமானது, அப்படியே கைலாசம் வந்து தொட்டிலில் குழந்தையாக படுத்துக்கொண்டார் சுடலை. அத்துடன் நில்லாது வயிறு பசிப்பது போல குவா குவா என்று அழுதார் சுடலை, குழந்தை அழுவது கேட்டு ஓடிவந்த பார்வதி அம்மாள் அப்படியே குழந்தையை அள்ளி அணைக்க, குழந்தையின் வாயில் ரத்தம் வடிய, பிணவாடையும் வீச, பார்த்தாள் பார்வதி, ஐயோ என்று அலறி குழந்தையை வீசி எறிந்து, ஈசனே, இது என்ன சோதனை, குழந்தை வரம் கேட்ட எனக்கு பிணம் தின்னும் பேயை குழந்தையாக தந்து விட்டீரே என்று அழுதாள். உடனே வந்தார் பரமசிவன், உட்காரணம் இல்லாது எவையும் நடத்த மாட்டார் ஈசன். எனினும் காரணத்தை வெளிக்காட்டாது, அம்மையை பார்த்த சிவன், ஆம் தேவி இவன் பிணம் தின்றதால், சைவமான என்னுடைய கைலயதிற்கு ஆகமாட்டான் இவனை பூலோகத்திற்கு அனுப்பிவிடுகிறேன் என்று கூறி சுடலையை அழைத்தார்.

சிவன் அழைத்ததும் வந்தார் சுடலை. மகனே சுடலை, உடல் எரியும் மயான சுடரிலிருந்து அவதாரமானதால், அந்த சுடலையாண்டியும் நீதானப்பா, மயானத்தில் மாய உருவெடுத்ததால் மாயாண்டி சுடலையும் நீயே, பேய்களுக்கு அதிகாரி நீ, பேறுபெற்ற மாசுடலையும் நீயே என்று கூறி, மகனே நீ பூலோகம் செல் அங்கு உனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது என்றார், அதற்கு சுடலை, பகவானே, என்னை அவதரித்த நீங்களே என்னை பூலோகம் செல்ல பணிக்கும்போது, நான் என்ன செய்ய முடியும். உங்களின் மனம் படியே நான் செல்கிறேன். ஆனால், அப்பனே அங்கு நான் என்ன செய்ய வேண்டும், அங்கு உணவுக்கு என்ன செய்வேன், இப்படியே போனால் என்னை யார் மதிப்பார்கள், பூலோகத்தில் எங்கு இருப்பது என ஈசனிடம் கேட்க, அதற்கு ஈசன், மகனே, என் ஒரு கணி அசைவிற்க்கும் காரணம் உண்டு, நீ அங்கு சென்றதுமே நான் உன்னை நடத்துவேன். பூலோக இடுகாட்டு சிதைகளில் உனக்கு உணவு கிடைக்கும், அது போக மனிதர்கள் உனக்கு வில்லோடு முரசோடு வீரகண்டன் கொட்டோடு ஊட்டு போட்டு கோடை கொடுப்பார்கள் நீ போகலாம் என்று சொல்ல, சுடலையோ ஈசனை பார்த்து, பகவானே அதே ஊட்டு பூசையை இந்த கைலாசதிலேயே எனக்கு போட்டு தாருங்கள், அப்போதுதான் நான் பூலோகத்திலும் சென்று இதுபோல கேட்க முடியும் என்ன்று சொல்ல, படைப்பின் குணமறிந்து, கொடுப்பதை கொடுத்து இடத்தை மாற்ற நினைத்தார் சிவம்.

நித்ய சைவமான ஸ்ரீ கைலயதில், அனைத்து தேவதைகளும் அதிர்ச்சியில் நிற்க, சுடலைக்காக ஈசனே நின்று, கைலாச வாசலிலேயே பலவிதமான இரத்த பலிகளை கொடுத்தார். அந்த பலிகளானது, பரண் பரணாக ஆடு, எருமை, பன்றி, என பலவிதமான உயிர்வகைகளுடன் நிறைந்திருந்தது. அவற்றை உண்ட சுடலையோ, மீண்டும் ஈசனை பார்த்து, அப்பனே எனக்கு தகுந்த வரங்களை கொடு நான் செல்கிறேன் என்று சொல்ல, உடனே ஈசன் சில வரங்களை கொடுத்தார். அவைகளாவன, மகனே உனக்கு ஓங்கார பேய்களை எல்லாம் உருட்டி அடக்க வரம், தர்க்கமிடும் பேய்களை எல்லாம் தடி கொண்டு விரட்ட வரம், நீ மயான சாம்பலை கையிலெடுத்தால் தீராத வினைகளும், நோய் நொடிகளும் தீர்ந்தொளியும் என்றார். அதற்கு சுடலையோ, நல்லவை மட்டுமே செய்தால் போதாது அப்பனே, கேட்டவர்களுக்கு கேடும் செய்ய வேண்டும். நல்லவர்கள் என்னை அறியாவிட்டாலும், எனக்கு பணிவிடை செய்யாவிட்டாலும் நான் நல்லது செய்வேன், ஆனால் கெட்டவர்கள் மற்றும் துஷ்ட தனமானவர்கள், என் காலடி பணிந்தாலும் நான் கருவருப்பேன், அதற்கு வரம் தாருங்கள் என்று கேட்க, ஈசனோ கேள் தருகிறேன் என்றார்.

உடனே சுடலை அப்பனே, நான் இருந்த இடத்திலேயே இருந்துகொண்டு இருப்பேன், நேரம் தப்பிய வேளையிலே, என் சட்டத்திற்கு விரோதமானவர்களோ, என்னை நம்பும் நல்ல குணவானுக்கு தீங்கு செய்பவனோ, மற்றும் துரோகிகளோ என் எல்லைக்குள் நுழைந்தார்களானால், அப்படியே, நேரம் தப்பி வருவோரை நெஞ்சடியாய் அடிக்கவரம், துரோகித்த, வாலிகளையும் சூலிகளையும் வஞ்சி கொண்டு குத்த வரம், மூன்று மாத சூலிகளை முட்டை போல நேரிக்கவரம், நிறை வயிராய் வருபவரை குறை வயிராய் ஆனுப்பவரம், என பலவகையான துஷ்டதனமான வரங்களை கேட்க, ஈசன் அனைத்தயும் கொடுத்தார்.

கயிலை நாதனாம் ஈசனிடமிருந்து, அனைத்து வரங்களையும் பெற்ற சுவாமி, வீர வேசம், விகாரமான சொருபத்தோடு, கைலாசத்தின் தெற்கு கோட்டை வாசல் வளியாக, பூலோகத்தில் இறங்க, தெற்கு நோக்கி அங்கே முதல் ஸ்தலம் திருக்கேதாரம், அடுத்து வரிசையாக, புத்த காசி, கெளரிகுண்டலம், உத்திரபிரயாதை, தேவபிரயாதை, ஹரித்துவாரம் என பலபல புனித ஸ்தலங்களை கண்டு வணங்கி, வடகாசியில் 64 தீர்த்தங்களில் நீராடி, அடுத்து இறக்க முக்தியாம் காசியிலும் மற்றும் பல தீர்த்தங்களிலும் நீராடி நமது தென்னாடு வந்தார். தென்னாட்டில் திருவேங்கடமலையில் திருவேங்கட நாதரையும், அடுத்து திருக்காளாத்தி ஈசனையும் வணங்கி, அடுத்ததாக பல்லவர்கள் ஆண்டு வரும் தொண்டை நாட்டிலே, பஞ்சபூத மண்டல ஸ்தலமாகிய காஞ்சியை கண்டார். அங்கு காஞ்சி அம்மாளையும், ஏகாம்பரநாதனயும் வணங்கி, அடுத்து திருவண்ணாமலையில் அருணகிரிநாதர் முக்திபெற்ற அண்ணாமலையாரையும், உண்ணாமுறைஅம்மாளையும் வணங்கி, மேலும் சிதம்பரம், சீர்காழி, திருவணைக்காவல் என பலபல ஸ்தலங்களை கண்டு வணங்கிய சுவாமி மாயாண்டி சுடலை, பாண்டியநாட்டு எல்லைக்கு வந்தார். அங்கு மதுரையில் வைகையில் தீர்த்தமாடி மதுரை மீனாட்சி அம்மாளையும், சோமசுந்தர பெருமாளையும் வணங்கினார். இப்படியே 1008 சிவ ஸ்தலங்கள், 108 திருப்பதிகளையும் மாயாண்டி சுடலை வணங்கிவந்தார். கடைசியாக மலையாள நாடு காணவிரும்பிய சுடலை, மலையாள மேற்ற்கு கடலோரம் கோகுர்ணம் என்று ஒரு புண்ணிய ஸ்தலம் அங்கு சென்று சிவத்தை வணங்கி, அடுத்ததாக வைக்கியம், குருவாயூர், திருவனந்தபுரம் என பல இடங்களை தரிசித்து கொட்டாரக்கரை என்ற ஊருக்கு வந்தார். அந்த ஊரின் அருகில் பேச்சி பாறை மலை. அங்கே சென்ற சுவாமி அங்கிருந்து கீழ்த்திசையில் பார்க்க, அங்கே பகவதி என்ற பெண் தேவதை இருப்பதை கண்ண்டார்.

கொட்டார கரையிலிருந்து அந்த பகவதி அம்மன் என்ற தேவதை மலையாளத்தை ஆண்டு வருகிறது. பகவதி அம்மனுக்கு மாதம் இரண்டு திருவிழா, வருடம் இரண்டு தேரோட்டம் நடக்கிறது. அப்படியே பகவதி அம்மன் தேர் திருவிழாவுக்கு அன்றும் கொடியேறி ஒன்பதாவது நாள் ஆகையால் தேரோட்டம் நடந்தது. தேரிலே அமர்ந்து பகவதி அம்மன் தெருவழியே ஊர்வலம் வந்து கொண்டு இருந்தார். அங்கோ வேதர்கள் எல்லாம் வேதங்களை சொல்லிவர, தேவதாசிகள் தேருக்கு முன்னால் ஆடிவர, நட்டுவன் கொட்டிவர, ஆடலுடன் பாடலுமாக அந்த அம்மன் பகவதி தேர் பவனி வருகிறாள். பார்த்தார் மாயாண்டி சுடலை. எந்த தெய்வத்திற்கு தேர் பவனி நடக்கிறதோ அந்த தெய்வத்தின் கொடி அந்த ரதத்தில் பறக்கும். திருமாலுக்கு கருட கொடி, சிவனுக்கு காளை கொடி, பிரம்மாவுக்கு அன்ன கொடி, முருகனுக்கு சேவல் கொடி, விநாயகருக்கு எலி கொடி. ஆனால் இங்கு ரதத்தில் பறக்கும் கொடியோ சிங்க கொடி. பார்த்தார் செஞ்சுடலை மாயாண்டி. சிங்க கொடி பறப்பதால் அதுவும் நமது தாய்தான் என புரிந்து கொண்ட மாயாண்டி சுடலை, அங்கே பேச்சி பாறை மலையிலிருந்து ஒரே பாச்சலாக தேர் மீது பாய்ந்தார். தேரில் சுடலை விழவும் தேரின் அச்சாணி இரண்டாக முறிந்தது. அங்கே சிலர் தேரோட்டம் பார்க்காது பக்தி மார்கமின்றி, ஆடிவரும் தாசிகளை பார்த்து கொண்டு இருந்தார்கள், அதில் ஒருவன் தலையை பிடுங்கி அவன் ரசித்த தாசியின் முகத்தில் வீசினார். அலறி விழுந்து இருவரும் மாண்டனர். அங்கிருந்து ஒரே பாச்ச்சலாக பகவதி அம்மனின் கோட்டைக்கு வந்தார். கோட்டைக்குள் வந்து கதவை சாத்திக்கொண்டு, உள்ளே கடுமையான அட்டகாசங்களை செய்தார் மாயாண்டி சுடலை. கோட்டையை இடிக்கின்றார், கொடிமரத்தை அசைகின்றார், கொடிமரத்தில் ஒருகாலும் கோபுரத்தில் ஒருகாலும் வைத்து ஆதாழி செய்தார்.

அம்மை பகவதி பார்த்தாள், எவனோ ஒருவன், நம் ரதத்தை ஓடித்துவிட்டு கோட்டையிலும் சென்று ஆதாழி செய்கிறானே, இது என்ன விவகாரம் என்று மந்திரவாளோடு கடும் கோபத்தோடு கோட்டைக்கு வந்தாள். வாயில் கதவை தட்டி, யாரடா நீ, பகவதி கோட்டையில் வந்து ஆதாழி செய்ய உனக்கு என்ன தைரியம் என்று சத்ப்தமிட்டு, கதவை திறக்கிறாயா, அல்லது எனது மந்திர வாளுக்கு பலியாகிறாயா என்று கேட்க்க, பார்த்தார் மாயாண்டி சுடலை, அம்மை மிகவும் கோபமாக இருக்கிறார். இந்த ரூபத்துடன் அம்மை நம்மை கண்டால் அம்மையின் கோபம தீராது என்று எண்ணி, ஒரு ஏழு வயது சிறுவனின் உருவம் பூண்டு அம்மையின் முன்னே பாலகனாக நின்றார் மாயாண்டி சுடலை. அம்மை நேருக்கு நேராக பார்த்தாள் சுடலையை. இந்த பாலகனா இவளவு சேட்டை செய்தது, வேறு யாராவது கோட்டையில் இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு சுடலையிடம் வந்து, யாரப்பா நீ, உன் குலம் கோத்திரம் என்ன, ஏன் அனாதையாக வந்து நிற்கிறாய் என்று, குழந்தையை கண்டவுடன் சோகம் உட்புகுந்து, இறக்க குணத்துடன் அம்மை சுடலையிடம் கேட்டார்.

சுடலை சொன்னார், அம்மையே என்னுடைய வரலாறே மிகவும் விசித்திரமானது, எல்லாரு இறந்த பிறகுதான் சுடுகாடு போவார்கள், ஆனால் நான் படைக்கப்பட்டதே மயான சுடலையில், சுடலையில் உருவானதால் எனக்கு சுடலை என்று பெயரிட்டார்கள். நான் பார்வதியாள் பிள்ளை, பரமனுடைய அமுஷம், பிறந்த இடம் உயர்ந்த இடம், நல்ல பிள்ளையாக இருந்திருக்கலாம், வீட்டுக்கு அடங்காமல் மாயானத்திலே போய் பிணத்தை தின்றுவிட்டு வந்துவிடவே அவர்கள், என்னை, நீ மாமிசத்தை தின்றதால் மாணிக்க கைலாயத்திற்கு ஆகாது எனவே, பூலோகத்திற்கு செல் என்று புறக்கணித்து அனுப்பிவிட்டார்கள். ஆகையால் தாயே இங்கு நான் தலை கீழாக வந்து விழுந்து விட்டேன்.

இந்த மண்ணுலகில் தாயே எனக்கு, அக்கமில்லை பக்கமில்லை ஆதரிப்பார் யாருமில்லை, திக்கு அற்ற பாவி போல இந்த தெருவில் நின்று தவிக்கின்றேன், நான் பார்வதிக்கு பிள்ளை என்றால் இந்த பகவதிக்கும் குழந்தைதானே, இப்போது வளப்பார் கை பிள்ளையாக வந்தேனம்மா உன்னிடத்தில், இருக்க ஒரு இடம் கொடு, நான் இருக்கின்றேன் உன்னுடனேயே என்றார் மாய சுடலை. பகவதி அம்மனுக்கு இரக்கமாகவும் இருந்தது, பார்த்தாள் பகவதி, இப்படி ஒருவன் நமக்கும் தேவைதான் என்று எண்ணி, மகனே நீ பார்வதிக்கு பிள்ளை எனில், நீ எனக்கும் பிள்ளைதான், அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. நீ வரவேண்டிய இடத்திற்குத்தான் வந்திருக்கிறாய். தாயிடத்தில் வந்தபிள்ளை இனி கவலை படவேண்டாம், சுடலையில் பிறந்தால் உனக்கு சுடலை என்று பெயரிட்டதாக சொன்னாய், நானும் உனக்கு பெயரிடுகிறேன், தேரின் அச்சை உடைத்ததால் உனக்கு தேரடிமாடன் என்று பெயரிடுகிறேன், உனக்கு தேரடியிலே ஒரு நிலையம், தெப்பக்குளத்தில் ஒரு நிலையம் , கொபுரத்திலே ஒரு நிலையம் , கொடிமரதிலே ஒரு நிலையம் போட்டு தருகிறேன், அது மட்டுமல்ல, எனக்கு இடது பக்கம் ஈசான மூலையில் தெற்குமேட்டுகலுங்கு திருவாத்தி மூட்டுக்குள்ளே ஏழு அண்டா திரவியம் தண்டயத்தில் அசையாது இருக்கிறது. அதை கள்வர்கள் கொண்டு செல்லாது மெய்க்காவல் காத்துவந்தால் உனக்கு வயிறார உணவு தருகிறேன் என்றார்.

அம்மை பகவதியின் மொழி கேட்ட சுடலையோ, அம்மா உன்னுடைய உணவு வேறு, என்னுடைய உணவு வேறு. உனக்கு பூஜை செய்யும் சிவாச்சாரியார் உனக்கு பூஜை செய்வதை இரு தினமாக நான் பார்க்கிறேன். உனக்கு ஒரு பித்தளை தாம்பாளத்தில் உப்பில்லாத பச்சரிசி சாதம் ஒரு கரண்டி வைத்து, ஒரு துணியை போட்டு மூடி, அதை, கணபதிகோயில் முதல் பைரவர் வரை அதையே படைக்கிறார். எனக்கு இந்த பூஜை போதாது, எனவே எனக்கு தனியாக ஒரு படப்பு போட்டு கொடு என்றார். அத்துடன், அந்த படப்பில் ஒரு நாளைக்கு ஒரு கோட்டை அரிசியை பொங்கி மூன்று உருண்டையாய் உருட்டி தரவேண்டும் என்றார். பகவதி அம்மையும் சரி என்று சம்மதிக்கவே, சுடலை ஆண்டவர் தன்னுடைய பூஜையை வாங்கிக்கொண்டு திரவியத்தை காத்து வருகிறார்.

அப்படியாக, கொஞ்ச நாளாக திரவியத்தை காத்து வருகிறார். ஆனால் சுடலையால் இருந்த இடத்தில அப்படியே இருக்க முடியவில்லை. அம்மை பகவதியை தரிசிக்க கோவிலுக்கு வருபவர்களில் யாரவது கெட்டவர்கள் மற்றும் துஷ்ட தனமானவர்கள் சுடலையின் பார்வையில் பட்டால், உடனே அவர்களை கொன்று தின்ன ஆரம்பித்தார். இதை தெரிந்துகொண்ட அம்மை வந்து தடுத்தாள், மகனே, கெட்டவர்கள் ஆனாலும் திருந்த வாய்ப்பு அளிக்கவேண்டும், அதற்காக இவளவு பெரிய கொலை தண்டனை கொடுக்க கூடாது, வேலியே பயிரை அளிக்க கூடாது, நீ காவல் தெய்வம், அதுவும் நம்மை வணங்க வருபவர்களை நாமே அடித்து கொல்லலாமா, தவறு செய்யாதே என்றார்.

அதற்கு சுடலை, அம்மா எனக்கு எல்லா நீதிகளும் தெரியும், எல்லா தர்மங்களும் தெரியும், நீ கொடுக்கும் தேங்காய் சில்லையும், பச்சரிசி சாதத்தையும் தின்று வயிறு நிறையவில்லை. நான் எவ்வளவு பசியில் இருந்தாலும் இங்கு வருபவர்களில் குணவன்களையும், நல்லவர்களையும் பார்க்கும்போது என் பசி மறந்து அவர்கள் என் பிள்ளைகளாக தெரிகின்றனர், அவர்களை, அவர்களுக்கு வரவிருக்கும் தீமைகளில் இருந்தும் துயரங்களில் இருந்தும் பிரித்து அவர்களை பாதுகாக்கிறேன். ஆனால், என்வயிறு நிறைந்து இருக்கும் போதும் கூட, துரோகிகளும் துஷ்ட தனமானவர்கள் என் கண்களில் பட்டாலே எனது வயிறு பசிஎடுத்து அவர்களை அழித்து தின்று விடுகிறேன். ஈசன் என்னை இப்படி படைத்தது விட்டார். நான் என்ன செய்வது என்றதுடன், அம்மையே உன்வருத்தம் எனக்கு புரிகிறது, ஆகையால், தினமும் உனக்கு மத்தியானம் உச்சிகால பூஜை நடக்கும்போது எனக்கு ஒரு சேவல் குடு, வெள்ளி கிழமையானால் ஒரு தீர்த்தம் வைத்து கொடு, மாதம் கடைசி செவ்வாய்க்கு ஒரு படுக்கை போட்டு குடு, வருடம் ஒரு தடவை உனது தேரோட்டத்துக்கு முன்னதா எனக்கு ஒரு ஊட்டு போட்டு குடு, அதன் பிறகு நான் யாரையும் தொந்தரவு செய்ய மாட்டேன் என்றார் சுடலை. பகவதி அம்மை சொன்னாள், அடேய் இது சிவகாம முறைப்படி பூஜை நடக்கும் திருத்தலம், இந்த சைவ பூஜையில் நீ இரத்தம் கேட்பது நியாயம் இல்லை, இஷ்டமானால் இரு, இல்லையெனில் இடத்தை காலிபண்ணு என்றார் அம்மை.

– சுடலை தொடர்வான்,…

பாப்பாத்தி அம்மன், கருப்பாயி அம்மன் கதை- தமிழ் மண்ணின் சாமிகள்

பாப்பாத்தி அம்மன், கருப்பாயி அம்மன் கதைகளை பார்க்கும்போது நம்முடைய முன்னோர்களின் வாழ்கையில் பிரிவு என்பது மிகக் கொடூரமாக இருப்பதை அறிய முடிகிறது. இன்றைய காலக்கட்டத்திலும் காதல் செய்த பலரை பிரிப்பது சமூகமாகவோ, பொருளாதாரமாகவோ இருக்கிறது. ஆனால் இவர்கள் கொண்ட நட்பை வறுமை பிரிக்க பார்க்கிறது. கதையை படியுங்கள், இது மனம் கனக்கும் தோழிமார் கதை.

குடுமியான் மலை. புதுக்கோட்டைக்கு அருகில் இருக்கும் கிராமம். சில தலைமுறைக்கு முன்னால் ஊரே மழையின்றி காய்ந்து போனது. நிலம் காய்ந்து போனதால், விவசாயத்தையே நம்பி இருந்தவர்களுக்கு ஏழ்மை மட்டுமே எஞ்சியது. எங்கு நோக்கினும் வறுமை தாண்டவம் ஆடியுது.

பஞ்சம் தணியும் எனக் காத்திருந்து காத்திருந்து சோர்ந்து போனார்கள். இறுதியாக என்ன செய்யலாம் என்று முடிவெடுக்க ஊர்க் கூட்டம் போட்டார்கள். கூடத்தில் இருந்த ஒருவர் மதுரைக்குப் பக்கம் சென்றால் பிழைப்பு தேட வழியுண்டு என்று சொல்ல. ஊரை விட்டு ஒட்டுமொத்தமாய் வெறியேற முடிவெடுத்தார்கள். ஆனால் காலம்காலமாக பாட்டன், பாட்டனுக்குப் பாட்டன் வசித்த பூமியை எளிதாக விட்டுச் செல்ல முடியவில்லை.

மக்களெல்லாம் மண்ணைப் பிரியும் துக்கத்தில் இருக்க, இரண்டு பெண்கள் மடடும் தாங்கள் பிரியப்போவதை எண்ணி அழுது கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருத்தி பாப்பன வீட்டுப் பெண் பாப்பாத்தி, மற்றொருத்தி கருப்பாயி. இருவரும் சிறுவயது முதல் தோழிகள். ஆச்சாரம் என்று பாப்பாத்தியை கருப்பாயுடன் சேர அனுமதிக்காவிட்டாலும், சாதிய கட்டுப்பாடுகளை தகர்த்து எரிந்துவி்டடு கருப்பாயுடன் நட்பாக இருந்தால் பாப்பாத்தி. வெவ்வேறு சாதியை சார்ந்த பெண்களாக இருந்தாலும் ஒருவர்மேல் ஒருவர் அளவுகட்ந்த அன்பு வைத்திருந்தார்கள்.

தொலைதொடர்பு வசதியெல்லாம் இல்லாத காலம் அது. இருவர் பிரிந்து வெவ்வேறு திசையில் பயணிக்க ஆரமித்தால் மீண்டும் வாழ்க்கையில் சந்திப்பதே கடினம். ஆனால் கருப்பாயி சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் முதலில் ஊரைவிட்டு செல்வதென முடிவெடுத்தார்கள். மாட்டு வண்டியில் பொருட்களையெல்லாம் ஏற்றிக் கொண்டு புறப்படத் தயாரானார்கள். “பாப்பாத்தியுடனே இருந்து கொள்கிறேன்” என உறவுகளுடனும், பெற்றவர்களுடனும் செல்ல மறுத்தாள் கருப்பாயி. பாப்பாத்தியோ “அவர்களுடன் நானும் செல்கிறேன். அனுமதிகொடுங்கள்” என்று கெஞ்சினாள்.

இருவரின் சொற்களையும் காதில் போட்டுக்கொள்ளக் கூட யாரும் தயாராய் இல்லை. பாப்பாத்தியை அவர்கள் வீட்டிற்குள் அடைத்துவைத்தார்கள். கருப்பாயை அவளின் சொந்தங்கள் கட்டாயப்படுத்தி அழைத்து சென்றார்கள். இருவருக்கும் அழுவது தவிற வேறெதையும் செய்ய முடியவில்லை. கருப்பாயி உறவுகள் நெடு நேரம் நடந்து சென்றார்கள். இரவு நெருங்கியதும் ஓய்வெடுக்க முடிவெடுத்தார்கள். நல்ல இடமாக பார்த்து எல்லோரும் தூங்கத் தொடங்கினார்கள். வண்டிமாடுகள் கூட கண்கள் அசந்தன. ஆனால் கருப்பாயி மட்டும் பாப்பத்தியைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாள்.

திடிரென ஒரு முடிவுக்கு வந்தவளாய், வந்த வழியே ஓடத்தொடங்கினாள் கருபப்பாயி. அவர்கள் தங்கியிருந்தப் பகுதி அடர்ந்த காடு. தனியாக செல்கிறோமென்ற பயமும் அவளிடம் இல்லை. பாப்பாயை பார்த்தால் போதும் என சக்தி வந்தவளாய் ஆவேசமாய் ஓடுகினாள். பாதி வழியில் எதிரே ஒரு உருவம் வருவது தெரிகிறது. அருகில் சென்று பார்த்தால் அது பாப்பாத்தி. யாருக்கும் தெரியாமல் பாப்பாத்தியை தேடி கருப்பாயி ஓடிவந்தது போலவே பாப்பாத்தியும் வந்திருந்தாள்.

கருப்பாயிக்கு என்ன யோசனை தோன்றியதோ, அதுவே பாப்பாத்திக்கும் தோன்றியது. கருப்பாயின் உறவுகள் பாப்பாத்தியை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. பாப்பாத்தியின் உறவுகள் கருப்பாயை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே “உயிரோடு இருந்தால் தானே பிரிப்பார்கள். ஒன்றாய் இறந்து போனால் என்ன செய்வார்கள் ” என விபரீதமான முடிவை சேர்ந்தே எடுத்தார்கள்.

பொழுது விடிந்ததும் கருப்பாயை காணாமல் ஒரு புறம் அவளின் உறவுகள் தேட, பாப்பாத்தியை காணாமல் மறுபுறம் அவளின் உறவுகள் தேடினார்கள். இந்த இரண்டு கூட்டமும் நடுக்காட்டில் சந்தித்துக் கொள்ள, இருவரையும் சேர்ந்து தேடத் தோடங்கினார்கள். அடர்ந்த காட்டையும், ஊரையும் சல்லடைப் போட்டு தேடிக் கொண்டிருக்கும் போது, ஒரு மொட்டைக் கிணற்றில் மிதந்து கொண்டிருந்தார்கள், கருப்பாயும், பாப்பாத்தியும்.

வாழ வேண்டிய வயதில் இரண்டு கன்னிப் பெண்களின் சாவைக் கண்டு கதிகலங்கி போனார்கள் இரண்டு கூட்டமும். சாதி பேரைச் சொல்லி இழந்தது போதுன்னு இரண்டு பிணங்களையும் ஒன்னாவே எரித்துவிட்டு, சாதி பார்க்காம இரண்டு பேரையும் வணங்கத் தொடங்கினார்கள்.

நன்றி –

இயக்குனர் சேரனின் டூரிங் டாக்கிஸ் புத்தகம். அதில் சேரனின் பாட்டி சொல்வதாக எழுதப்பட்டிருக்கிறது. சொல் வழக்கிலிருந்து கதையாக மாற்றியுள்ளேன். சில இடங்களில் அவை சிரமாக இருந்தாலும் இருக்கலாம். எடுத்துக்காட்டாக பாப்பாத்தி பிரமண குலத்தை சேர்ந்தவள். கருப்பாயி எந்த குலத்தை சார்ந்தவள் என தெரியவில்லை. அதை எப்படியோ சரி கட்டி கதையாக எழுதிவிட்டேன். விவரம் தெரிந்தவர்கள் சொன்னால் இணைக்க வசதியாக இருக்கும். வலைப்பூவில் இருவரின் புகைப்படமும் கிடைக்கவில்லை. எங்கள் ஊருக்கு அருகிலும் கோவில்கள் இருப்பதாக தெரியவில்லை. அம்மனின் படங்கள் கிடைக்கும் போது பதிக்கிறேன்.

பிச்சாயி அம்மன் – வீரப்பசுவாமி திருக்கோவில்

வீரப்பசுவாமி - பிச்சாயி அம்மன்

பிச்சாயி வீரய்யா கதையை அறிந்திருப்பீர்கள். அவளுக்காக கட்டப்பட்ட கோவில் பெருமாள் மலையின் அடிவாரத்தில் இருக்கிறது. அதன் கதையையும், நான் சென்று வந்தேன் என்பதையும் முன்பே கூறியிருக்கிறேன். அந்தக் கோவில் கல்லெரிந்த குலம் போல எனக்குள் நி்னைவலைகளை எழுப்பிக் கொண்டேயிருக்கிறது. அந்த நினைவுகளே இந்த இடுகை.

துறையூரிலிருந்து பெருமாள் மலைக்கு பேருந்துகள் இருக்கின்றன. தனியாக வாகணங்களில் சென்றால்கூட வழிகாட்ட மக்கள் இருக்கும் பூமி அது. மலையின் அடிவாரத்திலிருந்து ஒரு சாலை உள்ளே செல்கிறது. அந்த சாலையின் வலது புறத்தில் ஒரு ஆர்ச் பிச்சாயின் கோவிலிருப்பதை மக்களுக்கு சொல்ல கட்டப்பட்டிருக்கிறது. அதற்கு எதிரே ஒரு பழைய பலகையில் பிச்சாயி அம்மன் கோவில் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆர்ச் இல்லாத காலத்தில் நான்தான் கோவிலுக்கு வழிகாட்டினேன் என அந்தப் பலகை பெருமை கொள்வதாக தோன்றியது. அந்த பூமியில் கால்வைத்ததும் மெல்லிய குரலில் பிச்சாயி கதை எனக்குள் ஒலிக்கத்தொடங்கியது. இங்குதான் அவள் நிறைமாத கர்பிணியாக வந்திருக்கிறாள். அவள் கணவன் இங்கிருக்கும் ஏதோ ஒரு நிலத்தில் தான் பாடுபட்டிருக்கிறான் என்ற உண்மையில்,. அந்த இடத்திற்கும் எனக்கும் ஏதோ ஒரு நெருக்கம் ஏற்பட்டது.

பிச்சாயி கோவில்

ஆர்ச் உள்ளே நுழைந்தால், அந்த பச்சை பசேலென சுற்றி வயல்வெளி இருக்கும் பகுதியில் புதிய கட்டிடம் மின்னுகிறது. சிறுபறவைகளின் சத்தத்தில் மிக ரம்மியமான ஒரு கிராமக் கோவில். 2009ல் மகா கும்பாபிசேகம் நடைபெற்றதை கல்வெட்டு சொல்கிறது. சுற்றியிருக்கும் மதில் சுவர்களில் சிவன் கோவில்களில் நந்தியும், பெருமாள் கோவில்களில் கருடனும் இருப்பதை போல காமதேனு இருக்கிறாள். இருபுறமும் மாலைகளை கையில் வைத்துக்கொண்டு பெண்கள் நிற்க, கையில் ஒரு குழந்தையுடன் வாசலுக்கு மேல் இருக்கும் கோபுரத்தில் பிச்சாயி சிரித்தபடி இருக்கிறாள். வாசலின் இருபுறமும் துவாரபாலகிகள் கையில் கதையுடன் இருக்கின்றார்கள். ஒரு சிலையின் பின்பத்தினை மறுபுறம் வைத்திருப்பதாகவே தோன்றியது. ஏழு வித்தியாசங்கள் கண்டுபிடிக்கும் போட்டிக்கு கூட அனுப்பி வைக்கலாம். அந்தளவிற்கு உருவ ஒற்றுமை உள்ள சிலைகள்.

ஒரே பீடத்தில் பிள்ளையார் முதல் பெருமாள் வரை

கதவு மூடப்பட்டிருக்கும் போதுகூட பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்றவாறு கம்பிகள் வைத்து கதவு போடப்பட்டிருந்தது. அதை திறந்து கொண்டு பக்தர் நுழைய நாங்களும் பின்தொடர்ந்தோம். உள்ளே ஒரு பீடத்தில் பிச்சாயி, வீரய்யா, பெருமாள், கணபதி, ஐயனார், கன்னிமார் என தெய்வங்கள் இருந்தன. இடது புறத்தில் 18 கற்கள் வைக்கப்பட்டிருந்தன. அவை எந்த தெய்வங்களை குறிக்கின்றன என தெரியவில்லை. மறுபுறம் அதே போன்று மூன்று கற்கள் இருந்தன. மூன்று கன்னிகள் பற்றி கேள்வியுற்றிருக்கிறேன். ஒரு வேளை அதுவாக இருக்கலாம் என்ற முடிவுக்குதான் வர முடிந்தது. வழிபட வந்த பக்தரிடம் விசாரித்தேன். அவருக்கு பிச்சம்மா, வீரய்யா பற்றி மட்டும் தெரிந்திருந்தது. எல்லைகளற்ற இந்த பூமியில் இன்னும் எத்தனை லட்சம் கதைகள் கிடைக்காமல் இருக்கிறன என பெருமூச்சு விட்டேன்.

அழகு குதிரைகள்

வாகனமாக இரு வெள்ளைக் குதிரைகள் கோவிலின் முன்புறம் இருக்கின்றன. இரு குதிரைகளும் கொள்ளை அழகு. அதிலும் ஒரு குதிரைக்கும் மற்றொரு குதிரைக்கும் இடையே ஏகப்பட்ட வித்தியாசங்கள். வலதுபுறம் இருக்கும் குதிரை உயரமாகவும், ஏகப்பட்ட ஆபரணங்கள் அணிந்தும் இருக்கிறது. பார்க்கையில் கொஞ்சம் மூர்க்கமாக இருக்கும் அந்தக் குதிரையின் கழுத்துப்பகுதியின் கீழ் யாளின் உருவம் தெரிகிறது. கால்களில் இரண்டு காப்புகள் போடப்பட்டிருக்கின்றன. அதன் வால் பகுதி வரிவரியாக செதுக்கப்பட்டிருக்கிறது. அதன் முதுகில் துப்பாக்கியொன்று இருப்பதை காணமுடிந்தது. இடது புறம் இருக்கும் குதிரை சற்று குட்டையாக, ஆபரங்கள் குறைந்து காணப்படுகிறது. பொதுவாக இரு குதிரைகள் இருக்கும் கோவில்களில் வேறுபாட்டிற்காக நிறம் மாறியிருப்பதினை மட்டுமே பார்த்திருக்கிறேன். ஆனால் இது வித்தியாசமான அனுபவம்.

18 கடவுள்கள்

அருகில் ஒரு பெரிய கிணறு இருக்கிறது. வயல்வெளி பாசனத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வைத்திருக்கின்றார்கள். பிச்சாயி கோவிலிருந்து பார்க்கும் போது பெருமாள் மலை தரிசனம் தருகிறது. வீரய்யாவின் கடவுளை தரினசம் செய்ய பெருமாள் மலைக்கு சென்றோம். வழிநெடுகிலும் வாணரங்கள் தெரிந்தன. சில இடங்களில் குவியலாக சோறுகள் போடப்பட்டிருந்தன. வாகணத்தில் ஏறும் போது, வீரய்யா இந்த மலையில் நடந்து ஏறி தினம் பெருமாளை தரிசித்திருக்கிறார் என்று தோன்றியதுபோது சிலிர்த்தது.

மலையில் கோவிலில் வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து இருந்தது. சில சமயம் குரங்கள் உள்ளே இருக்க வாய்ப்புண்டு எனவே ஜக்கிரதையாக செல்லுங்கள் என அங்கு வந்திருந்த ஒருவர் எச்சரித்தார். பயந்து கொண்டு சென்றோம். நல்லவேளையாக குரங்குகள் எதுவும் இல்லை. இரு பிராட்டிகளுடன் பெருமாள் இருக்கிறார். தென் திருப்பதி என ஐயர் சொன்னார். கருப்பு சாமி கோவிலுக்குள் இருந்தது. பெருமாளின் அவதாரமாக கருப்பை சொல்லுவார்கள். ஒரு அடிக்கும் குறைவான மூன்று குதிரைகள். அதில் ஒரு குதிரையில் கருப்பு வீற்றிருக்கிறார். அங்கே திருநீறு கொட்டிக்கிடந்தது வியப்பாக இருந்தது. பெருமாள் கோவிலில் திருநீர் இருப்பதை முதன் முறையாக அப்போதுதான் பார்த்தேன்.

இணையத்தில் படித்து, கோவிலை தேடி பிச்சாயை பார்த்துவிட்டு திரும்புகிறேன் என நினைக்கும் போது, எல்லையற்ற தேடலின் இன்பம் எனக்குள் குடிகொண்டது. ஒரு பறவையின் எச்சத்திலிருந்து விழுந்த விதை ஆழமரமாக வளர்ந்து அதன் வேர்களை பரப்பி எழுந்து நிற்பதைப்போல சில முன்னோர்கள் காலங்களை கடந்து மனிதர்களுக்குள் நிலைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். அதற்கு சாட்சி இந்த பிச்சாயி அம்மன் – வீரப்பசுவாமி திருக்கோவில்.

பிச்சாயி அம்மன் கதை – தமிழ் மண்ணின் சாமிகள்

பிச்சாயி அம்மன்

வீரய்யா

அது 17ம் நூற்றாண்டு. சைவமும் வைணவமும் தங்களுக்குள் கொண்ட போட்டியால் வளர்ந்து சிறு சிறு கிராமங்களுக்கும் சென்றடைந்துவிட்ட நேரம். அப்போது வாழ்ந்துவந்தார் வீரய்யா என்ற விவசாயி. பெருமாளின் பெரும் பக்தர். அருகிலிருக்கும் பெருமாள் மலையில் பெருமாளை தரிசனம் செய்து, மனமுருகி வேண்டியபின்பே உணவருந்துவது அவருடைய நாள் தவறாத வழக்கம்.

அன்று வயலில் வேலை அதிகமாக இருந்த்து வீரய்யாவுக்கு. அதிகமாக வேலை செய்ததால் விரைவில் பசியெடுக்க ஆரமித்தது. வேலைகளை செய்து முடித்துவிட்டு நன்நீரில் கைகால்களை சுத்தம் செய்தார். பின் மதிய உணவுக்காக காத்திருந்தார். பிச்சாயி நிறைமாத கற்பிணியாக இருந்தமையால் உச்சி வெயிலில் அவளால் வேகமாக வரமுடியவில்லை. ஆனால் நேரம் செல்ல செல்ல பசி அதிகமாகிக் கொண்டே போனது. பசிக் கோபமும் வீரய்யாவுக்கு வந்தது.

பிச்சாயி வீரய்யாவிடம் வரும் போது அவருக்கு பசியைவிட கோபமே அதிகமாக இருந்தது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் திருநாமம் இட்டுக்கொள்ள நாமக்கட்டியை கேட்டார். ஆனால் அப்போதுதான் பிச்சாயிக்கு நாமக்கட்டியை மறந்துவிட்டு வந்தது ஞாபகத்திற்கு வந்தது. வீரய்யா கோபமாக இருக்கிறார் என்பதை அறியாமல் தான் மறந்துவிட்டு வந்ததை பிச்சாயி தெரியப்படுத்த, பசிக்கோபத்துடன் இருந்தவரின் புத்தி தடுமாறியது.

அவளுக்கு தண்டனை தரவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அருகில் கிடந்த மண் உருண்டையை பிச்சாயின் மீது கோபமாக வீசினார். ஏற்கனவே உச்சி வெயிலில் நடந்து வந்த களைப்புடன் இருந்தவள் தலையின்மீது மண் உருண்டை தாக்க உடனே மரணமடைந்தாள். நடந்த விபரீத்த்தை உணர்ந்த வீரய்யா தன்னையும் மாய்த்துக் கொண்டார். ஒரு சிறு கோபம் தம்பதிகள் இருவரின் மரணத்திற்கு காரணமானதை பிச்சாயி வீரய்யாவின் கதை எல்லோருக்கும் உணர்த்திக் கொண்டிருக்கிறது.

கோவில் –

பிச்சாயி அம்மன், வீரய்யா கோவில்,
பெருமாள் மலை அடிவாரம்,
துறையூர்.

நன்றி –
பிச்சாயி தெய்வத்தினை நண்பர் பின்னோக்கியின் வலைப்பூவில் அறிந்தேன். அந்தக் கோவிலுக்கு சென்றேன். அங்கே வணங்க வந்த சிலரிடம் அந்தக் கோவிலின் மகிமையை கூறுமாறு கேட்டேன். ஆனாலும் நண்பர் சொன்ன அளவு யாரும் சொல்லவில்லை. கதையின் முழு சாரமும் அவரிடமிருந்து கேட்டு வாங்கியது. அவருக்கு மிக்க நன்றி.

விருமாண்டி கதை பாடல் – தமிழ் மண்ணின் சாமிகள்

கமலஹாசனின் இயக்கத்தில் வந்த படம் விருமாண்டி. கதையின் தளம் மரணதண்டனையை ரத்துசெய்வதை மையமாக கொண்டிருந்தாலும், விருமாண்டி என்ற கிராம தெய்வத்தினை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்த்தது. சண்டியர் என்று பெயர் சர்ச்சையில் விருமாண்டி பெரிய விளம்பரத்தை தேடிக்கொண்டாலும், தெய்வத்தின் பெயரை தாங்கியே இறுதியாக வெளிவந்தது. “இதுக்கெல்லாம் அந்த சாமிதாலே காரணம். அது பேர வைச்சுக்கிட்டுதான் படத்தை வெளிவிடனும்முன்னு இப்படி பண்ணுது” என்று சொல்லி சிரித்தார்கள் நண்பர்கள். அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்கள் தலையிட்டு பிரட்சனையை தீர்த்ததாக சொன்னார்கள்.

விருமாண்டி பாடல் –

கருமாத்தூர் காட்டுக்குள்ளே ஒரு காலத்தில்
காளியம்மன் போல வந்தாள் பேச்சியம்மா (கருமாத்தூர்)

சைவசமையல் படையல் வைச்சு
சர்வசட்டியில் பொங்கல் வைப்பா
சாமிக்கெல்லாம் பூச வைப்பா
சங்கெடுத்து ஊதி நிப்பா (கருமாத்தூர்)

சங்குசத்தம் அந்தபொற்குலத்தில் உள்ள
பேய்க்காமன் காதில் கேட்டது… கேட்டது… கேட்டது…
பொங்கலோடு பழங்களும் சைவபடையல் வைச்சு
சாமிக்கு யார் அங்கு படைப்பது
சைவவாடையது கொஞ்சமும் சகிக்கவில்ல
தாக்கி முகம் சுழிக்க வைக்குது
என்று செங்கண் துடிதுடிக்க அங்கம் பளபளக்க
போங்கினானே பேய்க்காமனே!

மாட்டுக்கொடலெடுத்து மாலையாக போட்டுதான்
பேச்சியம்மா இடத்துக்குஅவன் வந்தானே (மாட்டுக்கொடலெடுத்து)
நானாளும் பகுதியே என்னென்னவோ சத்தம்தான்
நீயெழுப்பும் சத்தம் எல்லாம் சுத்தம்தான்
சத்தத்தாலே நேத்துபூரா தூங்கல
உங்க சங்கு சத்தம் கொட்டு சத்தம் தாங்கல

ஏழுநாளில் இங்கிருந்து கிளம்பனும்
அட இல்லாவிட்டால் நீங்களெல்லாம் புலம்பனும்
அச்சமூட்டி எல்லாரையும் மிரட்டுனான்
பொருளை அடிச்சு நொறுக்கி ஆவேசமா விரட்டுனான்
விரட்டுனான் ஐயயோ விரட்டுனான்
விரட்டுனான் ஐயயோ விரட்டுனான்

அன்னக்கொடுச்சி அழகுமயில் பேச்சியம்மா
தன்னந்தனியே வாடுரவ
கண்ணான கழுவநாதன் கண்டுமனம் கலங்கி நின்னு
அவ உள்ளங்கை ரேகையை ஊடுருவி பார்த்துட்டான்
புறங்கை ரேகையை புரட்டி புரட்டி பார்த்துட்டான்

உன்னையை காப்பாற்ற ஒரேஒரு ஆளைவிட்டா
உலகத்திலே யாருமில்லை… ஆமாம்
ஒட்டிநிக்கும் துன்பமெல்லாம்
ஒட்டடையா ஓட்டிடுவான் ஒருத்தனாக.. ஆமாம்
அனாதைக்கு ஆதாரவு தருவாண்டி
அவன்பேரு நான்சொன்னேன் விருமாண்டி

விருமாண்டிய வேண்டிவரதான் அந்த பேச்சியம்மா புறப்புட்டாளே
வனந்தரம் காடு கடந்து அந்த வண்ணமயில் புறப்புட்டாளே
எறும்பேற முடியாத எட்டு சுத்து கோட்டைக்குள்ளே
பாம்பேற முடியாத பத்து சுத்து கோட்டைக்குள்ளே
ஆதரவு இல்லாத ஆறாம்பிடி கோட்டைக்குள்ளே
அண்ணனிவ சந்திக்க அழகியவள் போனாளே!

விவரம் கோட்டு விருமாண்டி
வீரம் கொண்டு பொங்கி எழுந்தானே!
கன்னிப்பொண்ணு கதை கேட்டு
கண்ணுசெவக்க எழுந்தானே!
பெத்தபுள்ள துயரம் கேட்டு
பெத்தவங்க துடிப்பது போல்
பெரும்புழுதி புயலயடிக்க பேய்க்காமனும் இருக்குமிடம்
பிரமாண்டம் கிடுகிடுக்க விருமாண்டி வந்தானே…வந்தானே…வந்தானே…

வெண்பொங்கல் தேங்காப்பழம் விபூதி – அதை
வெறுப்பதென்ன அர்த்தம்கெட்ட கபோதி
இது பேச்சியம்மா குடியிருக்கும் திடலுடா
எதிர்த்து பேசினாக்க கிழிந்துபோகும் குடலுடா
மாட்டுகுடலில் மாலைபோடும் பராரி
உன்முதுகில் ஏறி செய்யப்போறேன் சவாரி… சவாரி.. சவாரி

இப்படி விருமாண்டி சொன்னதும் இரண்டு பேருக்கும் கடுமையா சண்டை நடந்துச்சு.அப்ப பூமியெல்லாம் நடுங்குச்சு மலையெல்லாம் உடைஞ்சுச்சு. இதைப்பார்த்த சிலபேரு வீணா ஏதுக்கையா சண்டை போடரிங்க, சமாதனமா பேசிதீர்த்துக்கலாம் அப்படின்னு சொன்னாங்க. அவங்களும் சம்மதிச்சாங்க. அதுக்கப்புறம் பஞ்சாயத்தார் தீர்ப்பு சொன்னாங்க.

என்ன சொன்னாங்க.

தொட்டப்பநாய்க்கனூரிலையும், மதுரை மொட்ட கோபுரம் பக்கத்துளேயும் கொடியென்னு நட்டுவைப்போம், உங்க ரெண்டு பேருலையும் யார் முதலபோய் அந்த கொடியை தூக்கிட்டு வாராகளோ, அவுங்களுக்கு அந்த எல்லை சொந்தமுன்னு பஞ்சாயத்தார் தீர்ப்பு சொல்ல பேய்க்காமன் யோசிச்சான். யோசிச்சு சதியொன்னு பண்ணுனான். விருமாண்டி கையில நொண்டி குதிரையொன்னு கொடுத்து, அவன் போன எங்கடா கொடிய தூக்கிக்கிட்டு வரப்போரான்னு நினைச்சான்.

ஆகா,..

மொட்டக்கோபுரந் தொட புறப்புட்டான் பேய்க்காமனும்
தொட்டப்பநாய்க்கனூரை தொட்டுட விருமன் போனான் (மொட்ட)
ஏய்க்க நினைச்ச அந்த
பேய்க்காமன் எல்லையையும்
சேர்த்தே அளந்துவந்து
ஜெயிச்சானே விருமாண்டியும்
ஜெயிச்சானே விருமாண்டியும்!

அண்ணே திரும்பிபோனா
இங்கே இவன் சும்மா இருப்பானா
பொண்ணுக்கு தொல்ல கொடுக்கும்
எவனும் இங்கே நல்லாருப்பானா
என்ன நானும் செய்யப்போறேன்
எனக்கு ஒன்னும் தெரியவில்லையே
அட அண்ணன்காரன் விருமன் போனா
வேறு ஏதும் வழியுமில்லையே

அதனால என்ன பண்ணறதுன்னு யோசிச்சு ஒரு தந்திரம் பண்ணுனா பேச்சியம்மா.

என்ன செஞ்சா.

தான் விரலுள்ள போட்டிருந்த மோதிரத்தை கிணத்துக்குள்ள போட்டுட்டு, அண்ணே அண்ணே மோதிரம் விழுந்துடுச்சு எடுத்துக்கொடுங்கன்னு அண்ணேன்னு சொன்னா.

தங்கச்சி வேண்டுதல நிறைவேத்தி வைக்கிற அண்ணன், தங்கச்சுக்காக கிணத்துல குதிச்சு மோதிரத்த எடுக்கையில, கிணத்துமேல வைச்சிருந்த கல்லை வைச்சுமூடி பேச்சியம்மா விருமாண்டிய கிணத்துக்குள்ளேயே சிறை வைச்சுப்புட்டா.

என்ன தங்கச்சி, உனக்கு உதவிபண்ண வந்த எனக்கு இதுதான் நீ காட்டுற நன்றியான்னு விருமாண்டி கேட்க, பேச்சியம்மா யோசிச்சு தினம் தினம் அண்ணனுக்கு சூலி பொண்ணும், சூலி மாடும் கொடுக்க நம்மலால முடியுமா. கொடுத்தா உலகம்தான் இத தாங்குமா அப்படின்னு நெனச்சு, அண்ணன்கிட்ட சொன்னா, அண்ணே நீ கேட்ட படி உனக்கு பூசை பண்ண முடியாது. ஆனா நாங்க என்ன பண்ணுவோம்னா,.

ஆடிக்கடைசி வெள்ளி
ஒனக்கொரு பூசை வப்போம்
ஆகாசப் பொங்கல் வச்சு
அப்போ படைய வப்போம்

ஆடிக்கடைசி வெள்ளி
ஒனக்கொரு பூசை வப்போம்
ஆகாசப் பூசை வச்சு
அப்போ படைய வப்போம்

அதிலே நீ கேட்டதெல்லாம்
ஆமாமா செஞ்சு வைப்போம்.
அதுக்காக எங்களையே எப்போவுமே காத்து இருந்து
இங்கே நீ இருக்க வேனும் – எங்கும்
பொங்கும் மங்கலம் தங்க வேனும்.
சாமி இங்கே நீ இருக்க வேனும் – எங்கும்
பொங்கும் மங்கலம் தங்க வேனும்.

பாடலோடு கதையின் சுருக்கத்தை தந்து, மேலும் விவரங்கள் சேர்த்து சொல்லாம் என நினைத்திருந்தேன். பாடலை கேட்டு எழுதவே இரண்டரை மணி நேரம் எனக்கு தேவைப்பட்டதால், இன்று முடியவில்லை. விருமாண்டி பதிவு அடுத்த இடுகையிலும் தொடரும்.

நன்றி –
விருமாண்டி திரைப்பட பாடல்கள்

தமிழ் மண்ணின் சாமிகளின் பட்டியல்

என்னுடைய குலதெய்வம் மாசி பெரியண்ணின் கோவிலுக்கு சென்றிருந்த போதுதான், பல சுவாமிகளின் பெயர்கள் தெரியவந்தன. அவற்றின் கதைகள் அங்கிருக்கும் பூசாரிகளுக்குக் கூட தெரியவில்லை. என்னுடைய குலதெய்வத்தின் கதையையே பல மாதங்கள் அழைந்து திரிந்து பலரிடமும் கேட்டேன். என்னுடைய அப்பாவுக்கு கொஞ்சம் செய்தி மட்டுமே தெரிந்திருந்தது. ஓமாந்தூர் பெரிய பூசாரியிடம் கேட்டப்போதுதான் உண்மையான கதையை முழுமையாக அறிய நேர்ந்தது.

என்னைப் போல பலரும் தங்களின் குலதெய்வங்களின் கதை அறிய ஆவலாய் இருக்கிறார்கள் என்று அறிந்தேன். என்னுடைய நண்பர்களின் குலதெய்வங்களின் கதைகளை அறிய முற்பட்டபோது எனக்கு ஏராளமான ஆச்சிரியங்கள் நிகழ்ந்ததன. பெரும்பாலான கதைகளில் சிவனும், விஷ்னுவும் ஆட்சி செய்திருந்தார்கள். அவர்களை நீக்கிவிட்டு பார்க்கும் போது, உண்மையில் வாழ்ந்து மடிந்த மனிதர்களின் கதை கிடைத்தது. ரசவாதம், காயகல்பம் என சித்தர்களை தேடினால் எத்தனை சுவாரசியங்கள் கிடைக்குமோ, அந்தளவிற்கு எனக்கு இப்போது கிடைக்கின்றது.

இதுவரை நான் கேள்விப்படாத பல தெய்வங்களின் பெயர்களும், கதைகளும் கிடைத்திருக்கின்றன. குறைந்தது ஆயிரம் சுவாமிகளின் பெயர்கள் கிடைக்கும் என நினைக்கின்றேன். நான் சேகரித்த பெயர்கள் விடுபடாமல் இருக்க வேண்டி இங்கு தொகுத்திருக்கிறேன்.

ஆண் தெய்வங்கள் –

தடிவீர சுவாமி

பெரியசாமி, பெரியண்ணாசுவாமி, மாசி பெரியண்ண சுவாமி, கொடை ஆல், மலையாளி, மலையாள கருப்பு, கருப்பண்ண சாமி, கொல்லிமலை கருப்பு, பதினெட்டாம்படி கருப்பு, இரட்டைமலை கருப்பு, ஒன்டி கருப்பு, பனையடி கருப்பு, சங்கிலி கருப்பு, முத்து கருப்பண்ண சாமி, வேம்பழ முத்து கருப்பண்ண சுவாமி, கறுப்பண்ணா, கறுப்பு கூத்தாண்டவர், கீழேரி கருப்பு, உதிர கருப்பு, சமயக்கருப்பசாமி, கருப்பு, தலைவாயில் கருப்பசாமி,கழுவடியான், இருளப்பச்சாமி, அய்யனார், மாடசாமி, சுடலைமாடன், உத்தண்டசாமி, பெரியாண்டவர், பசவன்னா, பதலமா, புத்தாகாசிப், எல்லைக்கறுப்பு, ஐயனார், மாதேஸ்வரா, ஊர் அத்தியன், மகாலிங்கா, ராஜவாயன், எதுமலை மதுரை வீரன், காத்தவராய சுவாமி, மந்திர மாகாமுனி, லாடசன்னாசி, அகோதரவீரபுத்திர சுவாமி, ஆலாத்தி வெள்ளையம்மாள், அனந்தாயி, ஆந்திரமுடையார், உச்சிமாகாளி, கட்டிலவதானம், சிதம்பர நாடார், தடிவீரசாமி, பிச்சைக்காலன், முத்துப்பட்டன் , வன்னியடி மறவன், வன்னியன், வன்னிராசன், வெங்கலராசன், பாவாடைராயன், பருதேசியப்பர், பொன்னர், சங்கர், ஒன்பது அண்ணன்மார்கள், விருமாண்டி, செங்கல்வராயன், வாழ்முனி, செம்முனி, செங்கா முனியப்பன், சங்கிலிபூதத்தார், நல்லமாடன், முத்து முனி, செம்முனி, ஜடாமுனி, லாடமுனி, கருமுனி, வீரமாமுனி, வாழுமுனி, கருப்பராயர், காவல்ராயன், கருப்பராயர், மண்டுகருப்பு, சாத்தன்-சாத்தாயி, வெண்டுமாலைகருப்பு, மாலைக்கருப்பு, தொட்டியக்கருப்பு,தூண்டிவீரன், வாகையடியான், உத்தாண்டராயர், பெத்தாரணசுவாமி, இருளப்பர், இருளாயி, கனரயடி காத்த அய்யனார், அனடக்கலம் காத்த அய்யனார், நீர் காத்த அய்யனார், அருஞ்சுனன காத்த அய்யனார், சொரிமுத்து அய்யனார், கலியணான்டி அய்யனார், கருங்குளத்து அய்யனார், குருந்துனடய அய்யனார், இளம்பானள அய்யனார், கற்குவேல் அய்யனார், கொண்னறயான்டி அய்யனார், செண்பகமூர்த்தி அய்யனார், திருவேட்டழகிய அய்யனார், சமணர்மனல அய்யனார், கூடமுனடய அய்யனார், சினற மீட்டிய அய்யனார், மக்கமனட அய்யனார், செகுட்ட அய்யனார், வெட்டுனடய அய்யனார்,மருது அய்யனார், வேம்பூலி அய்யனார், நினறகுளத்து அய்யனார், ஆதிபுதிரங்கொண்ட அய்யனார், சித்தகூர் அய்யனார், பிரண்டி அய்யனார், வீரமுத்து அய்யனார், பாலடி அய்யனார், தந்தனல வெட்டி அய்யனார், கருமனல காத்த அய்யனார், அல்லல் தீர்த்த அய்யனார், ஹரி இந்திர அய்யனார், கானட பிள்னள அய்யனார், செல்லப் பிள்னள அய்யனார், வீர பயங்கரம் அய்யனார், மாணிக்கக் கூத்த அய்யனார்,

பெண் தெய்வங்கள் –

வெள்ளையம்மாள்

எட்டுகை அம்மன், கொல்லிப் பாவை, பாப்பாத்தி, கருப்பாயி, முத்துநாச்சியார், அரியநாச்சியார், காளியம்மன், துர்க்கையம்மன், தோட்டுக்காரி அம்மன், செல்லியம்மன், மாரியம்மன், கரடியம்மன், காந்தாரியம்மன், வெயிலுகாத்தம்மன், உச்சிமாகாளி, காய்ச்சிக்காரம்மன், வடக்கு வாய்ச்சொல்லி, அரிய நாச்சியம்மன், வீரகாளியம்மன், அங்காள ஈசுவரி, குளத்து அம்மன், மந்தையம்மன், வடக்குத்தியம்மன், சந்தனமாரியம்மன், உமையம்மன், ராசாயி, பெத்தனாட்சி, சோலையம்மன், காமாட்சியம்மன், மரகதவல்லி, செண்பகவல்லியம்மன், சந்திரமாகாளி, அட்டங்கம்மா, அம்மாரி, அங்கம்மா, அன்னம்மா, அரிக்கம்மா, பாலம்மா, பத்ரகாளி, பூலங்கொண்டாள் அம்மன், பொன்னிறத்தாள் அம்மன், அங்காள பரமேஸ்வரி, செமலம்மா, தாலம்மா, தோட்டம்மா, திரௌபதி, துர்க்கா, கங்கம்மா, கூனல்மாரி, கிரிதேவி, கன்னியம்மா, கன்னிகை, கீர்மாரி, மலைமாயி, மாரம்மா, முத்தாலம்மா, பிடாரி, பூலம்மா, சப்தகன்னிகை, துர்க்கை, உடலம்மா, உக்கிரமாகாளி, உச்சினமாகாளி, வாசுகோடி, ஈலம்மா, வானமாலம்மன், பேச்சியம்மன், பச்சை வாழையம்மன், சப்த கன்னிகள், நவ கன்னிகள், முக் கன்னிகள், இசக்கி, நீலி, பைரவி, மாடச்சி, அம்மாச்சி, பேராத்துசெல்வி, தளவாய்பேச்சி, பூங்குறத்தி, காத்தாயி அம்மன், குழந்தையம்மன், ராக்காச்சி , தீப்பாச்சியம்மன், இடைச்சியம்மன்,கிச்சம்மா, தொட்டிச்சிஅம்மன், ஆலாலகங்கா, வல்லடிக்காரர்

சைதாப்பேட்டை கடும்பாடி அம்மன் கோவிலில் ஒன்பது அண்ணன்மார்கள், மூன்று கன்னிகள் என பல்வேறு எண்ணிக்கையில் கூட தெய்வங்களை வழிபடுகின்றனர். இவர்களின் கதையும் கிடைக்கவில்லை.

உதவுங்கள் –

விடுபட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள் பெயர்களை சொல்லுங்கள் சேர்த்துக் கொள்கிறேன். இவர்களில் யாரின் கதை தெரிந்திருந்தாலும் சொல்லுங்கள் கேட்டுக்கொள்கிறேன். இல்லை ஏதேனும் வலைப்பூவில் இருந்தால் லிங்க் கொடுங்கள், படித்து தெரிந்து கொள்கிறேன்.

அன்புடன்,

சகோதரன் ஜெகதீஸ்வரன்.