பேலுக்குறிச்சி சந்தையும் சங்கிலி கருப்பும்

இம்முறை வீட்டு வருச சாமான்கள் வாங்குவதற்கு நாமக்கல் மாவட்டம் பேலுக்குறிச்சிக்கு செல்வது என்று அம்மா முடிவெடுத்தார். சென்ற முறை திருச்சிராப்பள்ளியில் வருச சாமான்கள் வாங்கியிருந்தாலும், மற்ற உறவினர்களிடம் அது குறித்து விசாரித்த போது விலை மலிவாக பேலுக்குறிச்சியில் கிடைப்பதை தெரிவித்தனர். அதனால் இம்முறை சென்ற சனிக்கிழமையன்று பேலுக்குறிச்சிக்கு சென்றோம்.
pellukurichi

வாசனைப்பொருள்களுக்கு என்று தனிக்கடைகளும், வருச சாமான்கள் எனப்படும் மிளகு, கடுகு, சீரகம் போன்றவற்றுக்கு தனிக்கடைகளும் இருக்கின்றன. இம்முறை மழைப் பொய்த்துப் போனதால் பாதிச்சந்தைக்கே வியாபாரிகள் இருப்பதாக வருடந்தோறும் சென்றுவரும் உறவினர் தெரிவித்தார். வியாபாரிகள் மக்களின் தேவைக்கு ஏற்றவாறு ரகம் வாரியாக பொருள்களை வைத்துள்ளார்கள். குறைவான விலைக்கு கேட்டால் தரம் குறைந்த பொருகளையும், தரத்தினை எதிர்ப்பார்த்தால் அதிக விலையும் உண்டு. இதுதான் வியாபாரம். சில கடைகளில் எடை ஏமாற்றும் வழக்கமும் உள்ளது என்பதால், உடன் வந்த உறவினர் வீட்டிலிருந்து படியொன்றினை எடுத்து வைத்திருந்தார். அதில்தான் தர வேண்டும் என்று வியாபாரிடம் சொன்ன போது, அவர் தன்னுடைய படியையும், உறவினர் படியையும் அளந்து சரி பார்த்தார். வியாபாரிடம் ஒரு லிட்டர் படி இருந்தது, உறவினர் கொண்டுவந்தது கிலோ படி.

லிட்டர் படியைவிட 100-200 கிராம் அளவுக்கு பொருள்கள் பிடித்தன. அதனால் செட் 1300 என நிர்ணயம் செய்து மூன்று செட்டுகளை வாங்கிக் கொண்டோம். ஒரு செட்டில் ஐந்து பொருள்கள், ஒவ்வொன்றும் நான்கு கிலோ,. ஆக 60 கிலோ பொருளுடன் நான் விடைப்பெற்று அருகிலிருந்த ஒரு கோயிலில் அமர்ந்து கொண்டேன். மற்றவர்கள் பூண்டு, மஞ்சள், பட்டாணி என வாங்கிக் கொண்டு திரும்பிவர அனைவரும் பேருந்து ஏறி அவரவர் இல்லத்தினை வந்தடைந்தோம்.

பேலுக்குறிச்சி சந்தையைப் பற்றி பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்றபட்டமைக்கு இரு காரணங்கள், 1) சங்கிலி கருப்பு 2) கூட்டாஞ் சோறு.

சங்கிலி கருப்பு – 

sangalikarupu

நாட்டார் தெய்வங்களில் முனியும், கருப்பும் மட்டும் எண்ணற்ற பெயர்களையும், அமைப்புகளையும் உடையது. மிகவும் உக்கிரமான கருப்பினை சில மந்திரவாதிகள் சங்கிலியால் கட்டி தங்களுக்கு சேவகம் செய்ய வைத்துள்ள கதைகளையும், ஊருக்கு நல்லது செய்ய சத்தியம் செய்து சங்கிலியில் கட்டுண்டு கிடக்கும் கருப்பு கதைகளும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். என்னுடைய நண்பன் ஒருவனின் குலதெய்வமான கருப்புசாமியை அவனுடைய தாத்தா அழைத்துவந்து கோயில்கட்டியமை குறித்து தெரிவித்திருக்கிறான். எனினும் இதுவரை சங்கிலி கருப்பினை கண்டதில்லை என்ற குறை இம்முறை அகன்றது.
பேலுக்குறிச்சி சந்தையின் முன்பகுதியில் சில பதிவுகளோடு, சங்கிலி கருப்பும் உள்ளார். ஆளுயர சிலை. மேலிருந்து கீழ் வரை சங்கிலி சுற்றப்பட்ட கருங்கல்லாக காட்சியளிக்கிறார். முன்பக்கத்தில் தமிழ்எழுத்துகள் இருக்கின்றன. பக்கவாட்டில் வட்டமிட்டு அதன் குறுக்காக கோடிட்டவாறு சின்னங்கள் உள்ளன. பின்பக்கம் செதில் செதிலாக உள்ளது. முகநூலில் சேலம் வரலாற்று ஆய்வு செய்யும் ஆர்வளர்களுக்கு தகவல் தந்துள்ளேன். எண்ணற்ற சிறு தெய்வங்கள் ஏதேனும் வரலாற்றுக்காக வைக்கப்பட்ட அரசுச் சின்னங்களாக இருப்பதை அவர்கள் கண்டு முன்பே தெரிவித்துள்ளார்கள்.

முகநூல் நண்பரான ராஜசேகரன் இது நெடுங்கல்லாகவோ, கோமாரிக்கல்லாகவோ இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார். மாலை, ஆபரணம், துண்டு ஆகியவை இல்லாமல் வெறும் கல்லை மட்டும் படம்பிடித்திருந்தால் இந்நேரம் அது என்ன என்று தெரிந்திருக்கும். 🙂 கருப்புசாமியாக ஒரு வரலாறு மக்களால் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பதால் மிகவும் மகிழ்ச்சி. எனக்கு நெடுங்காலமாக கேள்விப்பட்ட சங்கிலி கருப்பைக் கண்டதில் மகிழ்ச்சி.

கூட்டாஞ் சோறு –

பேலுக்குறிச்சியில் எண்ணற்ற ஊர் மக்கள், பெரும்பாலும் மகளீர் ஒற்றுமையாக ஒரு கனரக மூன்று சக்கர, நான்கு சக்கர வண்டிகளில் வந்திறங்கி முழுச்சந்தையிலும் பொருள்களை வாங்கிக் கொண்டு ஒன்று சேர்ந்து திரும்புகின்றார்கள். பசியாறுவதற்கு வீட்டில் சமைத்துக் கொண்டு வரும் உணவை கோயிலில் அமர்ந்து பகிர்ந்து உண்கிறார்கள். பொருகளை மாற்றி மாற்றி தங்களுக்குள் ஒருவர் இருந்து காவல் காக்கின்றார்கள். இந்தக் காலத்திலும் இவ்வாறான ஒற்றுமையும், குழு மனப்பான்மையும் வியக்க வைக்கிறது.

1 comments on “பேலுக்குறிச்சி சந்தையும் சங்கிலி கருப்பும்

  1. Ram Raja சொல்கிறார்:

    nice info..congrats..

பின்னூட்டமொன்றை இடுக