திகைக்க வைத்த திருப்பதி பயணம் -2

திகைக்க வைத்த திருப்பதி பயணம் – 1

வழிகாட்டியாக வந்தவர் வாகன மண்டபம் என்ற இடத்தினை குறிப்பிட்டு காட்டி, தரிசனம் முடித்ததுமே இங்கு வந்துவிடுங்கள். தரிசனத்திற்கு நான் வரமாட்டேன் என்று கூறிவிட்டு திருப்பதி கோவிலுக்குள் அழைத்து சென்றார். வெள்ளை வெள்ளேறென கோபுரங்கள் இருக்க கலசங்கள் மட்டும் தங்க நிறத்தில் தகதகத்தன. கற்கோபுரங்களையும், வர்ண கோபுரங்களையும் விட ஈர்ப்பானது இல்லையென்றாலும் புதுமையாக இருந்தது. பிரகார வீதியிலிருந்து ஒரு மண்டபத்திற்கு வந்தோம். அங்கிருந்த வரிசையில் இணைந்தோம். எங்கள் காத்திருப்பு நேரம் கணக்கிடப்பட தொடங்கியது.

சிலர் கைகளில் வாட்டர் பாட்டில் வைத்திருந்தார்கள். நாங்கள் வாங்கியதை பேருந்திலேயே விட்டுவிட்டு வந்திருந்தோம். இதை கோவிலுக்குள் அனுமதிப்பார்களோ மாட்டார்களோ என்ற தயக்கமே காரணம். ஆனாலும் அதையெல்லாம் மறந்து புராணங்கள் பற்றியும், திரைப்படங்கள் பற்றியும் கதையடிக்க தொடங்கினோம். வரிசை மெதுவாக மெதுவாக ஊர்ந்து ஒரு சிறைபோன்ற அமைப்பினை எட்டியது. அதனை பெட்டி என்று சொன்னார்கள். ஏற்கனவே அமர்ந்திருந்த கூட்டத்துடன் ஐக்கியமானோம். அந்த அமைப்பின் வலது மூளையில் திடீறென திண்பன்டங்கள் விற்கப்பட்டன. ஈக்கள் மொய்ப்பது போல ஒரே கூட்டம். அது அடங்கியப் பிறகு முறுக்கு வாங்கிவந்து கொறிக்கத் தொடங்கினோம். அறையின் வெளியில் தண்ணீர் இருந்தது, கழிவறையும் கூட சுத்தமாக இருந்தது. எல்லாம் முடித்து அறைக்கு திரும்பினோம்.

இப்போது அதே வலது மூளையில் சாதம் தரப்பட்டது. முதலில் தின்பண்டங்கள் போல இதுவும் பணம் என்று அமைதியாக இருந்தோம். அருகில் உள்ளவர் இலவசம் என்றார். இது தெரிந்திருந்தால் முறுக்கு பாக்கெட்டை 40 ரூபாய் கொடுத்து வாங்கியிருக்க மாட்டோமே என்று க்ளுக்கென சிரித்துக் கொண்டோம். மீண்டும் ஈ போல மொய்க்கும் கூட்டம் குறைய பொறுத்திருந்தோம். ஒரு வழியாக சாப்பாடும் முடிந்தத போது மணி 2.30.பக்கத்து அறை கதவு திறந்து மக்கள் செல்ல அடுத்து நாம் தான் என அறைக்குள் இருந்த கூட்டம் வரிசையாக தொடங்கிற்று.

மீண்டும் வரிசையில் இணைந்தோம். எங்கள் அறைக் கதவுகள் திறக்கப்பட்டு மீண்டும் ஊர்ந்து ஊர்ந்து செல்ல தொடங்கினோம். அப்போதுதான் திருப்பதி கோவிலின் தங்க கோபுர தரிசனம் கிடைத்தது. அந்த இடத்திற்கு அருகே பெல்ட் மூலம் சிமென்ட் மூட்டைகள் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன. இத்தனை நவீன வசதிகளுடன் வேலை நடப்பது வியப்புதான் என்றாலும், அவை பாதுகாப்பு கோபுரங்கள் அமைக்க செல்கின்ற என்பதை அங்கிருந்த முழுமையடையாத அமைப்புகள் தெரிவித்தன. எங்கள் மீது ஏசிக் காற்று படர்ந்தது, சிறிது தூரத்தில் வேறொரு வரிசையும் எங்களுடன் இணையத் தொடங்கிற்று. ஆகா நெருங்கிவிட்டோம் சந்நிதியை என்று குதுகலமானோம்.

“கோவிந்தா போலோ,. பாலாஜி போலோ” என்று பெரியவர் ஒருவர் கூற எல்லோரும் கோவிந்தா என்றே கூறிவந்தார்கள். போலோன்னா சொல்லுங்கள் தானே கோவிந்தா போலோன்னு சொல்லும் போதும் கோவிந்தான்னு சொல்லறாங்க, பாலாஜி போலோன்னு சொல்லும் போதும் கோவிந்தானே சொல்லறாங்க என்று கேள்விஞானம் கேள்விகளை கேட்க., அதைப் பற்றிய அக்கரை இன்றி அறை முழுதும் கோவிந்தா கோசங்கள் ஒலிக்க, தென்பட்டது சுவரில் இருந்த  கல்வெட்டுகள். அத்தனையும் அழகு தமிழில், நானும் நண்பனும் சேர்ந்து சில சொற்களைப் படித்தோம், பிரம்மிப்புடன் முன்நோக்கி நகர்ந்தோம். அது வரை அன்னியமாகவே இருந்த திருப்பதி நெருங்கிவந்தது போல இருந்தது. கோவிலை சுற்றி கல்வெட்டுகள் இருக்கும் என்று சொன்னபோது என் கற்பனையில் சிறிய அளவே கல்வெட்டுகளைப் பற்றிய சிந்தனை இருந்தது. ஆனால் நேரில் காணும்போது அதன் முழுஅளவு கண்டு திகைத்தேன், அந்த திகைப்புடன் தமிழன் என்ற பெருமை உடன் சேர்ந்தது. கொடிரத்தின் அடிப்பாகம் மட்டும் தெரிய, அதனைச் சுற்றி ஏதாவது சிற்பத்தினை அவதானிக்க முடிகிறதா என்று பார்த்தேன். அதற்குள் நுழைவுவாயில் வந்துவிட்டது.

உள்பிரகாரத்திற்குள் பிரசுவித்தோம், இருபுறமும் ஏதோ சந்நிதிகள் இருந்தன. உபதேவதைகள் பற்றிய கவலைகள் இன்றி மூலவரை நோக்கியே கூட்டம் நகர்ந்தது. நாமாவது செல்லலாமே என்று பார்த்தால் கயிறுகட்டி தடுத்திருந்தார்கள். அதைப் பற்றி மேலும் நினைக்க நேரமில்லை. மூலவரை நெருங்கினோம். வேங்கடநாதனின் படத்தினை எத்தனை முறை தெளிவாகவே பார்த்திருக்கிறேன். மார்பில் இருக்கும் முக்கோணம் முதற்கொண்டு படித்தும் இருக்கிறேன். ஆனால் திரைப்படங்களில் காண்பிப்பது போல தெளிவாக தெரியவில்லை. கருவறையின் இருளில், விளக்கொளிகளின் மங்கிய வெளிச்சத்தில் யாருமின்றி தனியாக நின்றுகொண்டிருப்பதை கண்டேன். பூசை செய்ய வேண்டியவர்கள் வெங்கிக்கு முதுகுகாட்டிக் கொண்டு எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பிரசாதங்களோ, சடரி சடங்குகளோ இல்லை. பின்னால் வரும் பக்தர்களுக்காக எங்களை தள்ளிக் கொண்டிருந்தார் ஒருவர். அவர் ஏதாவது சொல்கிறாரா என்று பார்த்தேன்.ம்ஹூம்., பேச்சேயில்லை செயல்தான்.

உள்பிரகாரத்தில் கண்ணாடியால் மூடப்பட்ட அமைப்பில் ஏகப்பட்ட காசுகள், நோட்டுகளை மக்கள் போட்டிருந்தார்கள். அதன் இடுக்குகளில் பணங்கள் இன்னும் சிக்கிக் கொண்டிருந்தன. இன்னும் சிலர் தங்கள் பங்கிற்கு சொருகி கொண்டிருந்தார்கள். நாங்கள் வேடிக்கை மட்டும் பார்த்தோம். நண்பர்களில் ஒருவன் தன்னுடைய பணம் இரண்டு ரூபாயை உண்டியலில் போட சென்றான். நாங்களும் பாதுகாப்பிற்கு உடன் சென்றோம். இரண்டு ரூபாய்க்காக என்று நினைத்துவிடாதீர்கள். நண்பனின் பாதுகாப்பிற்காக, அத்தனை கூட்டத்தில் தவற விடக்கூடாது அல்லவா. அதன் பின் அங்கே நடக்கும் கூத்துகள்தான் அதிகம் சிரிக்கவைத்தன. தங்க கோபுர தரிசனத்திற்காக மேடை போல சுற்றுப்பிரகாரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கு கூட்டமே இல்லை. நாங்கள் சில சிலையமைப்பினை பார்த்துவிட்டு வெளியே செல்ல முயன்றோம். அப்போது சிலர் தங்க முலாம் பூசப்பட்ட சிலையின் காலடியில் ரூபாய் நோட்டுகளை வைப்பதையும், எடுப்பதையும் பார்க்க முடிந்தது. அந்த சிலை லட்சுமி சிலை. மூடநம்பிக்கைகளின் சாட்சியாய், சிலையின் கால்களில் தங்க முலாமே இல்லை. எல்லாவற்றையும் சுரண்டிவிட்டிருந்தார்கள். சுற்றுப் பிரகாரத்தில் இருக்கும் இரண்டு சந்நிதிகளைப் பார்க்க ஆளில்லை. இரண்டுமே மூடப்பட்டுக் கிடந்தது. ஒன்றிலாவது நரசிம்மர் என பார்த்து பார்க்க முடிந்தது. மற்றொரு சந்நிதிக்கு செல்ல வழியே இல்லை.

நரசிம்மர் சந்நிதியில் ஒரு கல் இருந்தது எல்லோரும் அதில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார்கள். பெயராக இருக்குமோ என்று பார்த்தேன் அப்படி தெரியவில்லை. ஏதோ கணக்கு போல தெரிந்தது. நானும் விரல்களை வைத்து பார்த்தேன். வெண்ணெய் போல வலவலவென இருந்தது. நண்பன் ஒன்றை சுற்றிக் காட்டினான். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். கோவிலின் கற்இடுக்குகளில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என நாணயங்கள் சொருகப்பட்டிருந்ததன. அதுவும் மிக வலிமையாக, அதனால் நாணயங்கள் வளைந்தும் நெளிந்தும் கிடந்ததன. அதைப் பார்த்து இன்னும் சிலர் அந்த கேடு கெட்ட செயலை செய்து கொண்டிருந்தார்கள். சிலர் அடிக்கப்பட்டிருந்த நாணயங்களை பிடுங்க முயற்சித்தார்கள். திகைப்புடன் வெளியேற தொடங்கினோம், மீண்டும் வரிசை. வடிவேல் அவர்கள் குசேலன் படத்தில் கொடுப்பாரே அந்த அளவில் ஒரு லட்டு கொடுத்தார்கள்.

வழிநடத்துனர் கூறிய வாகன மண்டபத்திற்கு திரும்பினோம். எங்கள் குழுவில் சிலர் மட்டுமே வந்திருந்தார்கள். மீதம் இருப்பவர்கள் வருவதற்குள் லட்டு வாங்கிவரலாமே என்று எங்களை அழைத்தார். மஹா பிரசாதம் என பட்டனத்தில் பூதம் படத்தில் வரும் லட்டுபற்றி பேசிக்கொண்டு அவரை பின்தொடர்ந்தோம். 300 ரூபாய்க்கு லட்டு வழங்கும் இடம் என்பதில் நின்றோம். தள்ளுவண்டியில் கொண்டுவருகிறார்கள், பிளாஸ்டிக் கவரில் அதை டோக்கனுக்கு இத்தனை என்று தருகிறார்கள். கவர் ரூபாய் இரண்டாம். காசு கொடுத்தாலும் பிளாஸ்டிக்தான் என்றால் பிளாஸ்டிக் ஒழிப்பு என்பதெல்லாம் எப்படி என தெரியவில்லை. லட்டுகளை பிரித்துக் கொண்டு, காலணிகளை, கொடுத்திருந்த பைகளை, அலைப்பேசிகளைப் பெற்றுக் கொண்டு ஒரு பேருந்தில் அனைவரும் ஏறினோம். மலையிலிருந்து பேருந்து கீழிறங்க தொடங்கியது.

திகைப்பு தொடரும்…

தேவனூர் தந்த தொடக்கம்

கோவிலுக்கு செல்லும் சிலர் சடசடவென ஓடி கருவறையில் இருக்கும் கடவுளிடம் கோரிக்கைகளை வைத்து, கனநொடியில் காணாமல் போய்விடுவார்கள். இன்றும் சிலரோ நீண்ட நெடிய வரிசையில் காத்திருந்து கடவுளிடம் சரிவர பேச முடியாமல் கனத்த மனதோடு திரும்பி வருவார்கள். வெகு சிலரே கருவறையை தவிர்த்து கலையின் அழகை ரசிப்பார்கள். அந்த சிலரில் நானும் ஒருவன். சிற்பம், ஓவியம், இசை, நடனம், சொற்பொழிவு, ஆடை ஆபரண வடிவமைப்பு என்று கலைகளின் சங்கமமாக இருக்கும் கோவிலில், சமைத்து பரிமாறப்படும் பிரசாதமும் கூட கலைதான். கோவில் என்பது கலையின் வடிவம். கடவுள் இருக்கும் இடமாக மட்டுமே பார்த்தால் கோவில் பக்தி நிறைந்த இடமாக மட்டுமே தெரியும்.

இப்போது பக்தி என்பது கூட, கடவுளிடம் தனக்கு இன்னென்ன வேண்டும் என்று பட்டியல் இடுவதும், பத்து ரூபாய் உண்டியலில் போடுகிறேன், பத்து லட்சம் எனக்கு கொடு என்று பேரம் பேசுவதுமாக சுருங்கிப் போயிருக்கிறது. அதையும் குறிப்பிட்ட கோவிலுக்குள் சென்று கோரிக்கை வைத்தால் தான் நிறைவேறும் என்ற நம்பிக்கை உண்டாகியிருக்கிறது. இந்த நம்பிக்கையின் பின்புறம் மிக அழுத்தமான ஓர் அரசியல் ஒளிந்திருக்கிறது. அந்த அரசியல், வணிக ரீதியான லாபநோக்கிற்காக உண்டாக்கப்பட்டது. அதனால் கொஞ்சம் கூட சுயசிந்தனையற்ற ஒரு கூட்டத்தையே அது உருவாக்கி கொண்டிருக்கிறது. அதையும் மீறி சிந்திக்க நினைக்கின்றவர்களால் மட்டுமே கோவிலை வேறு வடிவமாக காண இயலும்.

ஏதோ எனக்கு தெரிந்த இந்த சிறு விஷயங்களை ஆவணப்படுத்தலாம் என கடந்த 2010 ஏப்ரல் மாதத்தில்http://hindutreasure.blogspot.in/ என்ற வலைப்பூவை தொடங்கி எழுதவும் செய்தேன். அந்த மாதத்தில் 5 பதிவுகளை மட்டுமே இட்டேன். அதில் ஒன்று தொடக்கம், மற்றொன்று படங்கள் மட்டுமே கொண்டது. இவைகளை தவிர்த்துப் பார்த்தால் மூன்றே இடுகைகள் கொண்ட வலைப்பூ அது. காலமாற்றத்தால் அந்த வலைப்பூவை நானே புறக்கணித்தேன். எத்தனை பேர் வந்து படிக்கின்றார்கள் என பார்க்க தெரியாததால் அந்த வலைப்பூ வாசகர்களாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று எண்ணினேன். வரவேற்பே பெறாத எழுத்துகள் எதற்கு என விலகி இருந்து, வருடம் இரண்டு ஓடிவிட்ட நிலையில்,.. ஒரு வாசகரின் மின்னஞ்சல் மூலம் அந்த வலைப்பூவின் உண்மைநிலையை உணர்ந்தேன். எழுதிய அந்த மூன்றே கட்டுரைகள் என்றாலும் அதை தங்கள் புத்தகத்தில் இணைத்துக் கொள்ள அனுமதி கேட்டார் அந்த நண்பர். மகிழ்ச்சியுடன் ஆச்சரியமும் வந்தது. அந்த தளத்தினை நான் மறந்தே போயிருந்தேன். ஆனால் என் பெயரை தாங்கி ஆர்.எஸ்.எஸ் புத்தகங்களில் கட்டுரையாக வரும் அளவிற்கு அந்தக் இடுகைகளுக்கு வலிமை இருப்பதை உணர்த்திவிட்டார் அந்த நண்பர். அதை உணர்ந்ததும் இது வரை சேகரித்தவைகளை எழுதலாம் என்ற உந்துதல் ஏற்பட்டது.

தேவனூர் கோவில் அன்றும் இன்றும்
தேவனூர் கோவில் அன்றும் இன்றும்

இதற்கிடையே முகநூல் நண்பர்கள் மூலம் தேவனூர் என்ற தளம் செஞ்சி அருகே சிதைந்த நிலையில் உள்ளது என்றும், அதை நண்பர்கள் ஒன்று சேர்ந்து புதுப்பிக்கின்றார்கள் என்பதையும் அறிந்தேன். ஒரு நாள் அங்கு செல்லும் வாய்ப்பும் வந்தது. சென்னையில் இருந்து திருவண்ணாமலை செல்லும் பேருந்தில் ஏறி செஞ்சிக்கு போனேன். அங்கிருந்து வளத்தி, சேத்பட்டு செல்லும் பேருந்து தேவனூருக்கு கொண்டு சேர்த்தது. கோவிலை தேடி கண்டுபிடித்ததை விட கோவிலுக்குள் எப்படி செல்வது என்று வாயிலை கண்டுபிடிக்கவே பெரும் சிரமாக இருந்தது. கோவிலை சுற்றிலும் நெற்பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. கோவிலுக்கான தடம் என்பதோ, சுற்றி வரும் பாதையோ விவசாயிகளுக்கு முக்கியமாக படவில்லை. ஆண்டுக்கணக்கில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த கோவிலின் அத்துவரை தங்களின் தேவைக்காக ஆக்கிரமிப்பு செய்திருந்தார்கள்.

நிறைய நண்பர்களின் அறிமுகம் கிடைத்த அந்த நாளில், நான் இதுவரை சென்று வந்த சிதையாத கோவில்கள் சொன்னதைவிட மிக அதிகமான செய்திகளை அந்த சிதைந்த கோவில் சொல்வதை உணர்ந்தேன். அங்கிருந்த கல்வெட்டில் ராஜராஜ சோழனின் பெயரும், குலோத்துங்க சோழனின் பெயரையும் கண்டேன். ஆர்காடு நவாப் நடத்திய போர்களைப் பற்றிய குறிப்புகள் இந்த கோவிலிருந்து கிடைக்கும் என்று நண்பர் ஒருவர் உறுதியாக கூறினார். கோவில் என்பது கலைகளை மட்டும் சுமந்ததல்ல. அவை மிகப்பெரும் வரலாற்று ஆவணங்கள் கூட. ஒற்றைக் கோவிலிலேயே இத்தனை வரலாறு கிடைக்கும் போது நிச்சயம் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கோவில்களையும் ஆய்வு செய்தால் கோடிக்கணக்கான செய்திகளும், தமிழனின் வரலாறும் தெரியும்.

இந்த நிலையிலும் தமிழனுக்கு வரலாறு இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் சிலர். இப்படி வரலாற்றை அழியவிட்டுவிட்டு நாளை அதை தேடினால் எப்படி கிடைக்கும். நாளைய தலைமுறைக்கு சொல்வதற்கு நம்மிடையே சோழனைப் பற்றியும், சேரனைப் பற்றியும், பாண்டியனைப் பற்றியும் அதிகம் தகவல்கள் இல்லை. தமிழனின் விளையாட்டு, வீரம் என்பன பற்றியும் தெரிவதில்லை. ஆனால் அயல்நாட்டவன் பற்றி புத்தகம் எழுதும் அளவிற்கு நம்மிடம் செய்திகள் இருக்கின்றன. தங்கள் இனத்தவரின் பெருமையை அறிவதற்கும், அறிந்து கொண்டமையை சொல்வதற்கும் நம்மிடைய தயக்கங்கள் இருக்கின்றன. இந்த தயக்கங்களை நாம் தகர்க்க வேண்டும். அப்போதுதான் தமிழனின் பெருமையை மற்ற இனத்தவர்களும் அறிய முடியும்.

தோவனூர் கோவிலின் தூண்களில் பலவகையான வேலைபாடுடைய சிற்பங்கள் இருந்தன. அதில் சிலவற்றை எந்தக் கோவிலிலும் நான் கண்டதி்ல்லை. குறிப்பாக அந்த பிரசவ நிலையை விளக்கும் சிற்பம் அருமையானது. சுக பிரசவத்திற்கு பெண்கள் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்று சொல்லுகின்ற சிற்பத்தை வடித்த சிற்பிக்கு, எத்தனை பொது நல நோக்கம் இருந்திருக்க வேண்டும். இறைவனை மட்டுமே கண்மூடித்தனமாக செதுக்காகமல் மக்களின் வாழ்வியல் முறைகளையும் செதுக்கி சென்றவனின் பெயர் கூட அங்கு இல்லை. ஆனால் அவன் நோக்கம் ஆயிரம் வருடங்கள் தாண்டியும் இன்று நம்மை வந்து சேர்ந்திருக்கின்றன.

பழங்கால பிரசவ முறையை விளக்கும் சிற்பம்
பழங்கால பிரசவ முறையை விளக்கும் சிற்பம்

இறுகிக் கிடந்த மண்ணை கடப்பாரையை எடுத்து கொத்திவிட்டு மண்வெட்டியால் அள்ளிக் கொடுத்த எனக்கே கையில் காப்பு காய்த்து இரண்டுநாட்கள் சிரமாக இருந்தது. வாரந்தோறும் இரண்டுநாள் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் நண்பர்களின் நோக்கம், மீண்டும் ஒரு சிவன் கோவிலை மக்களுக்கு தருவதல்ல. மண்ணுக்குள் புதைந்திருக்கும் தமிழனின் வரலாற்றை மீட்டெடுப்பது மட்டுமே. பிரதிபலன் பாராது உழைக்கும் அவர்களுக்கு மத்தியில் பாராட்டுக்காக பெரும் தொடரை நிறுத்திய என்னை நினைத்து வெட்கம் வந்தது. தகுதியானவைகளுக்கு தகுந்த அங்கிகாரம் காலம் கடந்தபின்னாவது கிடைக்கும் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்துள்ளேன். அதே உத்வேகத்துடன் இந்து மதம் ஒரு பொக்கிசம் இனி தொடராக இங்கு வெளிவரும்.

மேலும் பார்க்க –
தேவனூர் முகநூல் பக்கம்