வள்ளியம்மன் நம்பியண்ணன் கதை – தமிழ் மண்ணின் சாமிகள்


தஞ்சையை சோழர்கள் ஆட்சி செய்துகொண்டிருந்த காலம். பெரிய கண்டியண்ணன், சின்ன கண்டியண்ணன், முத்து கண்டியண்ணன் எனும் மூவர் காங்கேய நாட்டில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு ஒரு தங்கை. அவள் பெயர் வள்ளியம்மாள். திருமண வயதை எட்டிய வள்ளிம்மாளுக்கு மூன்று அண்ணன்களும் கிழங்கு நாட்டைச் சார்ந்த நம்பியண்ணனுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். திருமணம் பேட்டப்பாளையத்தில் இனிதே முடிந்து இல்லறம் தொடர்கிறது.

ஒருநாள் நம்பியண்ணன் மண்பாண்டச் சூளைக்கு சோகைகள் அடுக்க முற்படும் போது பாம்பு தீண்டி அதே இடத்தில் உயிர் துறந்தான். அதை அறிந்த வள்ளியம்மாள் “கணவனுடன் தீப்பூக தஞ்சை மன்னிடம் அனுமதி பெற்று வருகிறேன். அதுவரை கணவனின் உடலை பாதுகாத்து வைத்திருங்கள்” என உறவுகளிடம் சொன்னாள். அவர்களும் அதனை ஏற்றுக் கொள்ள தஞ்சை மன்னனிடம் செல்கிறாள்.

அங்கு மன்னன் மதம் பிடித்த பட்டத்து யானையை அடக்கி வந்தால் அனுமதி தருவதாக சொல்கிறான். வள்ளியம்மாளும் காவிரியில் குளித்து கொண்டுவந்த தீர்த்தத்தினை கணவனை வணங்கிவிட்டு யானையின் மீது தெளித்தாள். மதம் கொண்ட யானை அடங்கி அவளை வணங்கியது. பட்டத்து யானையின் மதத்தை அடக்கியது கண்டு மகிழ்ந்த மன்னன் அவளுக்கு தீயை தர, அதனை முந்தானையில் வாங்குகிறாள் வள்ளிம்ம்மாள். மன்னன் முதற்கொண்டு எல்லோரும் வியப்படைகின்றார்கள். மன்னன் தன்னுடைய பட்டத்து யானையை பரிசாக தருகிறான்.

அந்தயானையில் அமர்ந்து மோகனூருக்கு வருகிறாள் வள்ளியம்மாள். அந்த அதிசயத்தை கண்ட வாய்ப்பேசாத சிறுமி ஒருத்தி அம்மாவென அழைக்கிறாள். இறுதியாக கணவன் உடல் இருக்கும் இடத்திற்கு வந்தாள். அங்கு கூடியிருந்த உறவுகளிடம் “நான் கணவனோடு தீப் புகுந்த பின்பு, தீ ஏந்திவந்த முந்தானையும், சூடி இருக்கும் மலரும், கையில் இருக்கும் பழமும் எரியாமல் அப்படியே இருக்கும். அவற்றை எடுத்து வழிப்பட்டு வாருங்கள்” எனக் கூறினாள்.

பிறகு முந்தானையில் உள்ள தீயை கணவன் உடல் கிடத்தப்பட்டிருக்கும் சந்தனக் கட்டைகளின் மீது கொட்டிவிட்டு, எரிகின்ற தீயை சுற்றிவந்து வணங்கிவிட்டு தீப்புகுந்தாள். அவள் சொன்னது போலவே முந்தானை, மலர், பழம் என மூன்றும் எரியாமல் இருந்தன. பெரிய கண்டியண்ணன், சின்ன கண்டியண்ணன், முத்து கண்டியண்ணன் மூவரும் அதே இடத்தில் வள்ளிம்மனுக்கும், நம்பியண்ண்னுக்கும் கோவில் அமைத்திருக்கின்றார்கள்.

கோவில் –
வள்ளியம்மன் நம்பியண்ணன் கோவில்,
4/ 139, வேலூர் ரோடு,
மோகனூர்,
நாமக்கல் மாவட்டம்.