விக்கிப்பீடியாவில் பொன்னியின் செல்வன் கட்டுரைகள்

இதோ இரண்டாயிரத்து பனிரெண்டாம் ஆண்டு முடியப்போகிறது. எல்லோர் மனமும் இந்த வருடத்தில் பெற்றவைகளையும், இழந்தவைகளையும் பட்டியலிட்டு அசைபோட்டுக் கொண்டிருக்கின்றன. நானும் நிறைய இழந்திருக்கிறேன், அதேசமயம் நிறைய பெற்றிருக்கிறேன். அனைவரையும் போல தனிப்பட்ட மகிழ்வுகளையும், துக்கங்களையும் அனுபவித்திருக்கிறேன். ஆனால் இறுதியாக இந்த வருடத்தில் நான் வாழுகின்ற சமூகத்திற்கு ஏதேனும் செய்திருக்கின்றேனா என்ற கேள்வியெழுப்புகிறேன். ஆம் என்று விடைக் கிடைக்கின்றது. அது காலத்தினால் அழியாத காவியத்தினை கலைக்களஞ்சியத்தில் சேர்ப்பித்த பணி.

எவரும் எழுதலாம் என்ற சுலோகத்தோடு விக்கிப்பீடியா அனைவரையும் எழுத அழைக்கிறது. நானும் எதையாவது எழுதலாம் என விக்கியில் கணக்கு தொடங்கினேன். ஆனால் எழுதுவதற்கான உறுதியான மேற்கோள்கள், வலைதளம் போல் அல்லாது கலைக்களஞ்சியத்திற்கான தனித்த எழுத்துமுறை என்று ஏகப்பட்ட கடுமையான வரன்முறைகளால் என்னால் தொடர்ந்து பங்குகொள்ள முடியவில்லை. அவ்வப்போது ஆர்வம் மேலோங்கும் பொழுதெல்லாம் ஓடிச்சென்று எழுதிவிட்டு வருவதோடு என் பணி நின்று போனது. அலுவல் குறைந்த போன செப்டம்பர் மாதத்தில் அமரர் கல்கியின்  பொன்னியின் செல்வனை படிக்க தொடங்கியிருந்தேன்.

032

முழுவதுமாக படித்து முடிக்காமல் சகோதரன் வலைப்பூவில் கருத்து பகிர்வது இயலாது என்பதால், பொன்னியின் செல்வனைப் பற்றி பகிர்ந்து கொள்ள வேறொரு வழியை தேடினேன். அத்தருனத்தில் விக்கிப்பீடியாவில் பொன்னியின் செல்வன் என்ற பக்கமும், சில கதைமாந்தர்களின் பக்கமும் மட்டுமே உருவாக்கப்பட்டு இருந்தன. அவையும் முழுமையின்றி தொடங்கப்பட்ட இடத்திலேயே நின்றுகொண்டிருந்தன. எனவே படித்ததை பகிர்தலுக்காக விக்கியை தேர்தெடுப்பதில் எந்த சிரமமும் இல்லாமல் போனது.

02

சில நாட்களில் பொன்னியின் செல்வனை படிப்பதும், அதில் வரும் கதாப்பாத்திரங்களின் இயல்புகள் பற்றி விக்கியில் எழுதுவதுமே வழக்கமானது. இடைஇடையே வந்த சிக்கல்களும், கருத்து மாறுபாடுகளும் விக்கியில் முன்பிருந்தே பணியாற்றிக் கொண்டிந்த தமிழ்க்குரிசில், –Booradleyp போன்ற நண்பர்களால் ஒழுங்கு செய்யப்பட்டது. புனைவுக் கதையின் கதைப்பாத்திரங்கள் பற்றி எழுதுவதால் மேற்கொள் கட்ட வேண்டிய தொல்லையும் இல்லாதுபோனதால், மிகக் குறுகிய காலத்தில் பொன்னியின் செல்வன் கதைமாந்தர்கள் அனைவருக்குமான பக்கங்களை உருவாக்கிவிட்டேன். சில நாட்களிலேயே கதைமாந்தர்களின் இயல்புகள் எழுதிமுடிக்கப்பட்டுவிட்டன.

இருப்பினும் அந்த கட்டுரைப் பக்கங்களுக்கு மேலும் அழகு சேர்க்க பொன்னியின் செல்வன் கதைமாந்தர்களை கற்பனையாக வரைந்த மணியம், வினு ஓவியங்களுடன், பத்ம வாசன் ஓவியங்களும் கிடைத்தவரை சேர்த்தேன். கட்டுரைகள் முழுமையான அழகுவடிவெடுத்து நின்றன. பொன்னியின் செல்வனுக்கான தனித்த வார்ப்புருவை கனகரத்திரம் என்ற நண்பர் உருவாக்கியிருந்தார். அதில் சில மாற்றங்களை செய்து, புதிய கதைமாந்தர்களையும் இணைத்து மேலும் பெரியதாக மாற்றினேன். இந்த வார்பபுரு முயற்சிக்கும் விக்கிப் பயனர்களால் வரவேற்பு தரப்பட்டது. ஆர்வமுள்ள புதுப்பயனர் பதக்கம், மறுவருகைப் பதக்கம் என இருபதக்கங்களும் விக்கியன்பர்களால் எனக்கு கொடுக்கப்பட்டன.

01

நான் உருவாக்கிய நாற்பதற்கும் மேற்பட்ட பொன்னியின் செல்வன் தொடர்புடைய கட்டுரைப் பக்கங்களால், விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/ஜெகதீஸ்வரன் என்பது உருவாக்கப்பட்டது. அது மட்டுமன்றி 29ம் தேதி அக்டோபர் மாதம் நான் பங்களித்த பொன்னியின் செல்வன் வார்ப்புரு விக்கப்பீடியாவின் முதல் பக்கத்தில் காட்சிபடுத்தப்பட்டது. பங்களிப்பின் இனிமையை உணர்ந்து மகிழ்ந்த தினம் அது. இப்போதும் சைவ சமயம் சார்ந்த கட்டுரைகளை போதிய அளவு எழுதப்படாமலும், எழுத தொடங்கப்பட்ட பல கட்டுரைகள் ஆழமாக எழுதப்படாமலும் உள்ளன. ஆனால் அவைகளை கற்பனை கதைகளைப் போல எழுத இயலாது. சரியான ஊடக மேற்கோள்களுடன் மட்டுமே எழுத வேண்டியுள்ளதால் கடினமாக உள்ளது. தீர்ப்புகளும், தீர்வுகளும் நம்மிடம் இருப்பதில்லை, எல்லாம் வல்ல ஈசன் அடுத்த வருடமாவது இதற்கு அருள் செய்ய வேண்டும். அடுத்த வருடத்தில் சந்திப்போம் நண்பர்களே.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

01

மேலும் –

விக்கிப்பீடியா பயனர் பக்கம் 

தொடங்கியுள்ள கட்டுரைகள்

10 comments on “விக்கிப்பீடியாவில் பொன்னியின் செல்வன் கட்டுரைகள்

  1. கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

    அன்பரே. வணக்கம்
    எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

  2. balaji srinivas சொல்கிறார்:

    vaalthukkal sagothara………….

  3. விக்கிபீடியாவில் பொன்னியின் செல்வன் கதைமாந்தர்கள் குறித்து தனிப்பதிவிட்டமைக்கு நன்றி. சமீபத்தில் கொடும்பாளூர் சென்றிருந்தோம். அதைக் குறித்து மற்ற நண்பர்களிடம் பகிர்ந்து கொண்ட போது பொன்னியின்செல்வனில் வருமே அந்த கொடும்பாளூர் தானே என ஆர்வமாக விசாரித்தார்கள்.

    • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

      பொன்னியின் செல்வனின் தாக்கத்தினை எனது நண்பர்களிடமும், தாயிடமும் என்னால் அனுபவிக்க முடிந்தது. சரளமாக அவர்களின் பேச்சில் பொன்னியின் செல்வன் கதைமாந்தர்களின் பெயர்கள் அடிபடுவதை கேட்டே, நான் பொன்னியின் செல்வனை கையில் எடுத்தேன். தமிழர்கள் நிச்சயம் கல்கிக்கு கடமைப்பட்டுள்ளார்கள்.

  4. வணக்கம்
    ஜெகதீஸ்வரன்

    இன்று வலைச்சரம் வலைப்பூவில்உங்கள் வலைப்பூஅறிமுகமானது வாழ்த்துக்கள் உங்களின் வலைப்பக்கம் வருவது முதல் தடவை பார்வைக்கு
    http://blogintamil.blogspot.com

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி