பத்து நூற்றாண்டை கடந்த பயணம்

108 சிவதாண்டவ வடிவங்கள், மிகப்பெரிய சிவலிங்கம், மிகப்பெரிய நந்தி, கீழே விழாத கோபுர நிழல் என பல புகழுடைய தஞ்சை பெரிய கோவில் தன்னுடைய 1000 பிறந்த நாளை கொண்டாடுகிறது. சிவ பக்தன் இராஜராஜ சோழ மன்னன் கட்டிய மாபெறும் சிவன் கோவில் தஞ்சைப் பெருவுடையார் கோயில். 1006ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வயது பூர்த்தியாகின்றது. தமிழன் என்கிற முறையிலும், சைவன் என்ற பக்தியிலும் பெருமைமிகு கோவிலின் பத்து நூற்றாண்டைக் கடந்த பயணத்தில் ஒரு பூரிப்பே இந்தப் பதிவு.

தஞ்சை பெயர்க்காரணம் –

புராண காலத்தில் தஞ்சகன், தாரகன், தண்டகன் என்ற மன்னர்கள், தங்களை யாராலும் வெல்ல முடியாது என்ற வரத்தை சிவனிடம் பெற்றிருந்தனர். இதனால் தேவலோகம் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டி அதிகாரம் செலுத்தினர். வரம்பு மீறிய இவர்களின் செயல்கண்ட சிவன், திருமாலையும், காளியையும் அனுப்பி அவர்களை வதம் செய்தார். இருப்பினும், சிவபக்தர்களாக இருந்த அவர்களது பெயர் விளங்கும்படியாக, தஞ்சகனின் பெயரால் தஞ்சாவூரும், தாரகனின் பெயரால் தாராசுரமும், தண்டகனின் பெயரால் தண்டகம்பட்டு என்ற ஊர்கள் உண்டாயின.

ராஜராஜ சோழன் –

சோழர்களின் ஆட்சி தமிழர்களின் பொற்காலம். பல்வேறு நாடுகளை ஒன்றாய் இணைத்து ஆட்சி செய்த பெருமை சோழர்களுக்கு உண்டு. அறிவும், அறிவியலும், ஆன்மீகமும் சிறந்து விளங்கிய காலம். ராஜராஜன் காலத்தில் சிறப்பான ஆட்சி இருந்தமையினால் தான் இத்தகைய மிகப் பெரிய கோவிலை கட்ட முடிந்தது. இந்தக் கோயில் கட்டுவதற்குத் தேவையான கற்கள் பெரும்பான்மையாக அவன் ஆளுகைக்குட்பட்ட இடங்களுக்கு வெளியில் இருந்துதான் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இந்த கற்கள் அனைத்தும் முழுமையாகச் செதுக்கப்பட்டு கோயிலாக வடிவமைக்க சுமார் 34 வருடங்கள் வரை ஆகியது.

பெருமை –

இக்கோயில் கோபுரம் தரைத்தளத்திலிருந்து 216 அடி உயரம் உடையது. இக்கோயில் கோபுரம் கர்ப்பக்கிரகத்திலிருந்து எகிப்திய பிரமிடுகளைப் போல் 190 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோயில் கோபுரத்தின் உச்சியில் உள்ள பிரம்ம மந்திரக்கல் எனும் ஒரே கல்லிலான வட்ட வடிவமான கல் சுமார் 80 டன் அளவுடையது. இக்கோயிலின் மூலவரான பிருகதீசுவரர் (பெருவுடையார்) லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். இந்த லிங்கத்தின் உயரம் 13 அடி. ஆவுடை எனும் லிங்கத்தின் கீழ்ப்பகுதியான வட்டவடிவமான பகுதியின் சுற்றளவு 54 அடியாக இருக்கிறது.

இந்த லிங்கம் மத்தியப்பிரதேச மாநிலம் நர்மதை ஆற்றங்கரையிலிருந்த ஒரு மலையில் இருந்து கல் எடுத்து வந்து செய்யப்பட்டது என்கிறார்கள். இவ்வளவு பெரிய லிங்கம் வேறு எங்கும் இல்லை. இங்கு கோயிலின் முன்புறமுள்ள நந்தியும் மிகப்பெரிய அளவுடையது. இது 9 அடி நீளமும், 6 அடி அகலமும், 12 அடி உயரமும் கொண்டது. இது போன்ற நந்தி உருவம் வேறு எங்கும் இல்லை. கருவூரார் எனும் சித்தரின் அறிவுரையின்படி 10 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இந்தக் கோயில் முதலில் இராஜராஜ சோழன் பெயராலேயே இராஜராஜேஸ்வரம் என்று அழைக்கப்பட்டது.

பின்னர் நாயக்க மன்னர் காலத்தில் பெருவுடையார் கோயில் என்று அழைக்கப்பட்டது. அதன் பின்னர் 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களின் ஆளுமைக்குள் வந்த போது பிருகதீசுவரம் என்று பெயர் மாற்றமடைந்தது. இந்தக் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த சிறப்பான கோயில் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கருவூரார் –

கருவூரார் என்பவர் சித்தர்.இவர் அறிவுரைப்படிதான் இராஜராஜசோழன் இக்கோயிலை கட்டியதாக வரலாறு.கோயில் கட்டுவதற்கு முன்பு கருவூரார் இங்கு ரொம்ப காலமாக தியானத்தில் இருந்திருக்கிறார்.கோயில் கட்டும்போது முதலில் சுவாமியின் மேல்பாணம் செட் ஆகவில்லையாம்.கருவூரார் மிகவும் வருந்தி ஈசனை நினைத்து உருகி 11 திருவிசைப்பாக்களை பாடியபின்தான் பாணம் செட் ஆனதாக தகவல் ஒன்று கூறுகிறது.நாவினால் உமிழ்ந்த என்ற திருவிசைப்பா புகழ் பெற்றது.கருவூரார்க்கு இங்கு தனி சந்நிதி உள்ளது. கரூர் மாநகரில் உள்ள பசுபதீஸ்வரர் கோவில் இவர் சமாதி காணப்படுகிறது.

துணைக் கோயில்கள் –

தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் வளாகத்தில் பெரிய சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பெருவுடையார் கோயில் தவிர, வடமேற்கு மூலையில் சுப்பிரமணிய சுவாமி கோயிலும், வடகிழக்குப் பகுதியில் வராகியம்மன் கோயில், சண்டிகேசுவரர் கோயில், கணபதி கோயில், நடராஜர் கோயில் போன்றவைகளும், முன்பகுதியில் பெரிய நந்தி கோயிலும், கருவூரார் கோயிலும் அமைந்துள்ளன. கோயில் வளாகத்தில் சுற்றுப்புறச் சுவரின் உட்புறத்தில் உள்ள சுற்று மண்டபத்தில் 63 நாயன்மார்கள் சிலைகள மற்றும் பல வடிவங்களிலான 108 சிவலிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டுகள் –

சோழர்களின் பொற்கால ஆட்சி பற்றியும், கட்டிட கலை, ஆன்மீக ஆளுமை என பலவற்றிக்கும் சான்றாய் விளங்கும் பெரிய கோவில் கல்வெட்டுகள் அவர்களின் சேமிப்பையும் சுட்டிக் காட்டுகிறது. 50 ஓதுவார்களும், 400 நடன மாதர்களும் கோயிலிலிருந்ததாகக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. நிர்வாகத்தில் திறன்மிக்க சோழ அரசன் கோவிலுக்காக நெய் வழங்க எண்ணற்ற பசுக்களை தானம் செய்ததோடு. அவற்றின் பராமறிப்பிற்காக ஊர்களையும் வழங்கியது குறிப்பிடத் தக்கது.

பசுக்களை மேய்க்கும் பொறுப்புகளை வழங்கி, அவற்றை பராமறிக்க நிலமும் வழங்கி விடுவதும். பசுவை பராமரிக்கும் பக்தன் கோவிலுக்கு நெய் கொண்டுவந்து தரும் பணியையும் செய்தான். நடன மாதர்களுக்கும், ஓதுவார்கள், இசை கலைஞர்கள் என அனைவருக்கும் வசிக்க இருப்பிடம், உணவு, பொருளாதார வசதிகள் என சகலமும் செய்து தரப் பட்டுள்ளது. கல்வெட்டுகளின் வாயிலாக சோழர்களின் நவீன வரிகளையும், மக்களிடம் கொண்ட அன்பும் நிறைவாக விளங்குகின்றன என்கின்றார்கள் அறிஞர்கள்.

அடுத்த இடுகையிலும் தொடர்கிறது பெரிய கோவில் பெருமைகள்.

6 comments on “பத்து நூற்றாண்டை கடந்த பயணம்

  1. anandan சொல்கிறார்:

    very very useful and commendable

  2. சட்டைநாதரே. தஞ்சைப்பெரிய கோவிலே இராஜராஜனின் முன்னோர் சமாதியின் மேல் கட்டப்பட்டது தான்.

பின்னூட்டமொன்றை இடுக