அர்ஜூன தவம் பகிரத தவம் – சிற்ப ஆய்வு

சைவ சமய புராணங்களில் இரண்டு தவங்கள் முக்கியமானவை.1. பகீரத தவம் – கங்கை நதியை பூமிக்கு கொண்டு வர சிவபெருமானை நோக்கி தவமிருப்பது.2. அர்ஜூன தவம் – பாசுபதம் எனும் ஆயுதம் வேண்டி சிவபெருமானை நோக்கி தவமிருப்பது.


பகீரத தவம் – பகீரதனின் முன்னோரான சகரரின் மனைவியான சுமதிக்கு 60 ஆயிரம் மகன்கள், மற்றொரு மனைவியான கேசனிக்கு ஒரு மகன். அசுவமேத யாகத்தை மன்னர் சகரர் செய்கிறார். அதன்படி குதிரையை விடுவிக்கின்றனர். குதிரையானது கபிலர் எனும் முனிவரின் குகை வாயிலில் இருக்கிறது. குதிரையை காணாது தேடிவந்த 60 ஆயிரம் பேரும் கபில முனிவரிடம் சண்டைக்கு செல்கின்றனர். கபிலரால் சபிக்கப்பட்டு சாம்பலானார்கள்.
கேசியின் மகனுக்கு பிறக்கும் பகீரதன் அரசரானதும் தன்னுடைய முன்னோர்கள் 60 ஆயிரம் பேர் முக்தி அடையாமல் இருக்கிறார்கள் என அறிந்து வருந்துகிறான். அவர்களை முக்தி பெற வைக்க தேவலோகத்தில் இருக்கும் கங்கை நதியை பூமிக்கு வர வைக்க சிவபெருமானை நோக்கி தவமிருக்கிறான். பெருந்தவம் கங்கையை பூமிக்கு வர வைக்கிறது. 60 ஆயிரம் முன்னோர்களும் முக்தி அடைகிறார்கள்.


அர்ஜூன தவம் – பாண்டவர்கள் சூதாடி தோற்ற பிறகு வனவாசம் மேற்கொள்கின்றனர். அந்தக்காலத்தில் ‘பாசுபதம்’ எனும் ஆயுதத்தை பெற சிவபெருமானை நோக்கி தவமிருந்தார் அர்ஜூனன். மூகாசுரன் என்ற அசுரன் அர்ஜூனன் தவம் கலைக்க பன்றியாக உருவெடுத்து மோதி தொல்லை செய்தான். பன்றியை கொல்ல அர்ஜூனன் அம்பு எய்த.. மற்றொரு அம்பும் அந்த பன்றியை துளைக்கிறது. அந்த அம்புக்கு உரிமையாளர் வேடனாக வந்த சிவபெருமான். பன்றி யாருக்கு சொந்தம் என வேடனுக்கும், அர்ஜூனனுக்கும் ஒரு சண்டை நடந்து இறுதியில் சிவபெருமான் அர்ஜூனனுக்கு பாசுபத அஸ்திரத்தை தந்தார்.
சிவாலயங்களில் ஒரு தவக்காட்சி சிற்பமாக இருக்கிறது. ஒரு ஆண் ஒற்றைக்காலை மட்டும் தரையில் ஊன்றி கடுமையாக தவமிருக்கிறார். அந்த தவம் செய்யும் மனிதர் அர்ஜூனனா? பகீரதனா என நமக்கு குழப்பம் நேரிடும். அதை எளிதாக வேறுபடுத்தி காட்டிட சிற்பி ஒரு உத்தியை கடைபிடிக்கிறார். அது பன்றி.


தவம் செய்யும் சிற்பம் அர்ஜூனன் என்றால் அவர் பின்புறமாக பன்றி சிற்பமும் சேர்த்து வடிக்கப்படும். பகீரதன் என்றால் அவர் மட்டுமே தவமிருப்பார்.