ஆயிரத்தில் ஒருவன் – பாகம் 3

“மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்” என்று கடமையை மூச்சாக கொண்ட எம்.ஜி.ஆருக்கு, அவருடைய மூன்றெழுத்தினையே மூச்சாக கொண்ட ஆயிரமாயிரம் ரசிகர்கள் கிடைத்தார்கள். இன்று கூட மூன்றெழுத்து மந்திரம் என்று எம்.ஜி.ஆரை சுட்டுகின்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எம்.ஜி.ஆருக்கும் மூன்று என்ற எண்ணிற்குமான தொடர்பு அவருடைய பெயரிலிருந்து ஆரமித்தாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவருடைய வரலாற்றினை உற்றுநோக்கினால், ஏனோ அவர் பிறந்ததிலிருந்தே அந்த மூன்று என்ற எண் அவரை பின் தொடர்ந்து வருவதை நம்மால் காணமுடியும்.

“என்னங்கடா 12லிருந்து 5 கழிச்சா 7ங்குவீங்க போலிருக்கே” என வசூல்ராஜா படத்தில் கமல் பேசும் வசனத்தினை கூட நீங்கள் நினைத்துக் கொள்ளலாம். இது கொஞ்சம் அறிவற்ற தன்மைதான் என்றாலும் சுவாரசியமானது.

21. அன்னை சத்தியபாமா அவர்களுக்கு நான்காவது பிள்ளை சக்ரபாணி அவர்கள். எம்.ஜி.ஆர் ஐந்தாவது பிள்ளை தான். எம்.ஜி.ஆர் அவர்கள் பிறந்த பிறகே இரண்டு சகோதரிகளும் ஒரு சகோதரரும் என மூன்று முன்னோர்கள் அடுத்தடுத்து இறந்து போனார்கள். எம்.ஜி.ஆரின் தந்தை கோபாலமேனன் காலமானபோது எம்.ஜி.ஆருக்கு வயது மூன்று.

22. என்னுடைய புது முயற்சிகளுக்கு மற்றவர்களை துன்பத்தில் ஆழ்த்த விரும்பவில்லை என்று கூறி எம்.ஜி.ஆர் பிச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவத்தினை உருவாக்கினார். அதன் மூலம் நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய மூன்று படங்களைத் தயாரித்தார் எம்.ஜி.ஆர்.

23. நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் என மூன்று படங்களை சொந்தமாக இயக்கியுள்ளார் எம்.ஜி.ஆர். இதில் நாடோடி மன்னன் தலைநகர் சென்னையில் மூன்று திரையங்குகளில் 100 நாட்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது.

24. எம்.ஜி.ஆரின் முதல் மனைவி பார்கவி என்கிற தங்கமணியை அன்னை சத்தியபாமாவின் கட்டாயத்தினால் 1941ல் திருமணம் செய்து கொண்டார். 1942ல் தங்கமணி நோய்வாய்ப்பட்டு இறந்த பிறகு எம்.ஜி.ஆர் சதானந்தவதியை 1944ல் திருமணம் செய்து கொண்டார். சதானந்தவதி அவர்களுக்கு 3-வது மாதத்தில் கர்ப்ப சிதைவு ஏற்பட்டது. பிறகு அடுத்து சதானந்வதி அவர்கள் கர்ப்பமாக இருந்தபோது உடல் நலம் குறைவு ஏற்பட்டு மருத்துவர்கள் யோசனைப்படி அந்த குழந்தையும் கலைக்கப்பட்டது. இருந்தும் சதானந்தவதி இறந்துபோனார். அதன் பின் தான் காதலித்த ஜானகி அம்மையாரை மூன்றாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார் எம்.ஜி.ஆர்.

25. 1977,1980,1984 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் தொடர்ந்து வெற்றிப் பெற்று மூன்று முறை தமிழக முதல்வராக பதவி வகித்தார் எம்.ஜி.ஆர். கி.பி 1920ல் அ. சுப்பராயலு ரெட்டியார் முதல் முதல்வராக இருந்ததிலிருந்து இன்றுவரை தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்தது எம்.ஜி.ஆர் மட்டுமே.

26. 1967 ஜனவரி 12 ந்தேதி எம்.ஜி.ஆர் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டார். முதல் சிகிச்சைக்குப் பிறகு ராயப்பேட்டை ஆஸ்பத்திரிலிருந்து சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் மாற்றப்பட்டார். எம்.ஜி.ஆர். கழுத்தில் பாய்ந்த குண்டு, மூன்று முக்கிய நரம்புகளுக்கு இடையே பதிந்திருந்ததால் அதனை அகற்றினால் பெரிய பிரட்சனையாகலாமென அப்படியே விட்டுவிட்டார்கள். இப்படி துப்பாக்கி குண்டோடு வாழ்ந்தவர்களில் மாவீரன் நெப்பொலியனும் ஒருவர்.

27. ஜானகி அம்மையாரின் முதல் கணவர் நடிகரும் ஒப்பனையாளருமான கணபதிபட் ஆவார். இவர்கள் இருவருக்கும் அப்பு என்கிற இரவீந்திரன் என்னும் மகன் இருந்தார். எனினும் எம்.ஜி.ஆர் மீதான காதலால் கணவரை விவாகரத்து செய்துவிட்டு எம்.ஜி.ஆரின் மூன்றாவது மனைவியானர். ஜானகி அம்மையார் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடத்த படம் மூன்று. அவை கோவிந்தன் கம்பெனி தயாரித்த “மருதநாட்டு இளவரசி”, எம்.கே.தியாகராஜ பாகவதர் தயாரித்த “ராஜமுக்தி”, ஜுபிடர் தயாரித்த “மோகினி”.

28. எம்.ஜி.ஆரின் கொடைத்தன்மை உலகம் அறிந்ததே. அந்த வள்ளல் தன்மையை குறிக்கும் பொருட்டு அவருக்கு ஏராளமான அடைமொழிகள் மக்களால் வழங்கப்பட்டன. அதில் ஒன்று முக்கை கொண்டவர் என்பதாகும். அதாவது வலக்கை, இடக்கையோடு ஈகை எனும் கையும் உடையவர் என்று பொருள்படும்படி கூறப்பட்டது.

29. நாடகம், திரைப்படம், அரசியல் என்று மூன்று துறைகளில் ஜொலித்த எம்.ஜி.ஆருக்கு அரசியல் பாடம் கற்றுக் கொடுத்து, அன்போடு இருந்தவர் அண்ணா என்ற மற்றொரு மூன்றெழுத்துக்காரர். அண்ணாவினைப் போல தி.மு.க என்ற முன்றெழுத்து கட்சியை அதிகம் நேசித்தார் எம்.ஜி.ஆர். தனிக் கட்சி தொடங்கியபோது கூட தி.மு.க என்ற மூன்றெழுத்தினையும், அண்ணா என்ற மூன்றெழுத்தினையும் இணைத்தே அண்ணா தி.மு.கவென கட்சிக்கு பெயர்வைத்தார்.

30. முப்பிறவி, இப்பிறவி, மறு பிறவி என்று மூன்று பிறவிகள் இருப்பதாக பலர் நம்பிக்கொண்டுள்ளார்கள். ஆனால் வாழ்நாளில் மூன்று பிறவிகளை கண்டவர் எம்.ஜி.ஆர். “செத்துப் பிழைச்சவன்டா – எமனை பார்த்து சிரிச்சவன்டா” என்று வாலிப கவிஞர் வாலி எழுதிய வார்த்தைகள் எத்தனை சத்தியமானவை.

ஆயிரம் புகழ் மாலைகளை நோக்கி…

முந்தைய பாகங்கள் –
ஆயிரத்தில் ஒருவன் – பாகம் 1
ஆயிரத்தில் ஒருவன் – பாகம் 2