திண்ணைத் தீர்ப்பு- [சிறுகதை]

திண்ணைத் தீர்ப்பு

திண்ணைத் தீர்ப்பு – சிறுகதை

“இந்தா,.. ஊர்பிரட்சனையெல்லாம் தன்பிரட்சனையா நினைக்கிற பெரியமனுசன் ஊஞ்சலாட்டிக்கிட்டு இருக்காரு, அவருக்கிட்ட போய் சொல்லுடி. அடுப்படிக்கு வந்து தொனதொனன்னு உசிரு எடுக்காத”. கமலம்மாவின் குரல் காதில் விழுந்தாலும் அதை சட்டை செய்யாமல் வீட்டின் வாசலைப் பார்த்தபடி ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தார் பஞ்சராட்ச பிள்ளை. “அம்மா அப்பா காதுல விழப்போகுது. மெதுவா பேசு” மகள் சமாதானம் செய்ய முயன்று தோற்றாள்.

“ம்.. ஒத்த மனுசியா இருந்து வடிச்சுகொட்டரவ புலம்பிக்கிட்டு இருக்காளே, என்ன ஏதுன்னு ஏதாவது கேட்போமுன்னு வரதுக்கு இந்த வூட்டுல ஒரு நாதியிருக்கா..” பொதுப்படையான வசனங்கள் எல்லாம் தனக்குத்தான் என்று பிள்ளைக்கு நன்கு தெரியும். இருந்தும் மௌனமாக இருப்பதற்காகவே மடியில் இருந்த வெள்ளி வெத்தலைப் பெட்டியை எடுத்து சிறு வெத்தலை இரண்டில் சுண்ணாம்பு தடவி, சீவலை வைத்து மடித்து வாய்க்குள் தள்ளினார்.

முற்றத்திலிருந்து ஊஞ்சலின் ஓசை தொய்வில்லாமல் ஒலிப்பது கமலம்மாவிற்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. சமையல் செய்வதை நிறுத்திவிட்டு மகளை இழுத்துக்கொண்டு வெளியேவந்தாள். வாய்நிரம்பியிருக்கும் வெத்தலையை குதப்பி குடுவையில் துப்பிவிட்டு, ஆத்தாளுக்கும் மகளுக்கும் அடுப்படியில என்ன பஞ்சாயத்து என கேட்டு கமலம்மாள் வாய்திறக்கும் முன் முந்திக்கொண்டார். “ம்க்கும் என்னான்னு கேட்கவே இம்புட்டு நேரமான்னா எப்பதான் பஞ்சாயத்தைக் கேட்டு தீர்ப்பு சொல்லுவீங்களோ? ”

“அதான், பஞ்சாயத்து என்ன கேட்டாச்சே.. விரசா சொல்லு”

“உங்க மவ காலையிருந்து அஞ்சு ஆறுதடவ பாறைக்கு போய் வாரா. வயிறு சரியில்லையாம்”

“வைத்தியரை வரச் சொல்லட்டுமா”

“அதெல்லாம் வேணாம். இப்பதான் லேகியம் வைச்சு தந்திருக்கிறேன். அதுக்கு அடங்கிலேயினா வைத்தியரைப் பார்ப்போம்”

“இதுக்கா இப்படி சத்தம் போட்டுக்கிட்டு கிடக்கிறவ”

“ம்.. வயசுக்கு வந்த புள்ள ஆத்தர அவரசதுக்கு ஒதுங்க ஒரு கக்கூஸ் உண்டா. நடையா நடந்து போக வேண்டிகிடக்கு”

பஞ்சராட்ச பிள்ளைக்கு என்ன சொல்லுவதென்றே தெரியல. இப்போதைக்கு சமாதனம் செய்துவைக்க மட்டுமே முடியும் என்பதால். “உடனே இதக் கட்டுங்க, அதக் கட்டுங்க சொன்னா செய்யறதுக்கு பூதமா இருக்கு, இந்த அறுவடை முடியட்டும் ஏற்பாடு செய்யறேன். வேறென்ன,..”

“உங்க மவள கொஞ்சமாச்சும் வீட்டு வேலையை செய்து கத்துக்கிட சொல்லுங்க. ஆத்தா வீடுவாச தெளிக்கிறதிலிருந்து கஸ்டப்படராளேன்னு, ஒருநாளாவது ஒத்தாசையா இருக்காளா. இவ சாப்பிட்ட தட்டை கழுவராளா, இல்ல உடுத்துற துணியைதான் துவைக்கிறாளா. எல்லாத்தையும் நான்தான் செய்ய வேண்டி கிடக்கு”.

பிள்ளை மகளைப் பார்த்தார். அவள் அம்மாவின் முதுகுக்குப் பின்னால் தரையை பார்த்தபடி ஒளிந்திருந்தாள்.

“ஏங்கழுத ஆத்தா இவ்வளவு வசவுபாடராளே, உன் வேலையாச்சும் சுயமா செய்ய வேண்டியதுதானே.”

“நாளையிலிருந்து..” என்ற சன்னமான குரல் வெளிவந்தது. அதான் சொல்லிட்டால்ல, எல்லா வேலையும் அவளே செய்துக்கிடுவா, போய் சமையலைப் பாரு. நான் முத்துகருப்பு முதலியார் வீடுவரைக்கும் போயிட்டு வந்துடறேன்.”

“உடனே, துண்ட தொள்ல உதரிப்போட்டுக்கிட்டு கிளம்பிடுவீங்களே, இவ இப்ப பாறைக்கு போக பயமா இருக்கு கூடவான்னு வந்து நிக்கிறா. கிழக்கு தெரு பசங்க நாளு கூடி நின்று கிண்டல் பண்ணுதுகளாம். நான் சமையல செய்யறதா இல்ல இவகூட சுத்தரதா”

“அதுக்கு என்னை என்ன பண்ண சொல்லற”

“நீங்க துணைக்கு…”

“அடி வெளங்காதவளே. சாப்பாடும் வேணாம், ஒரு மண்ணும் வேணாம், அவ கூட போ. இதுக்கெல்லாம் சீக்கிறம் ஒரு முடிவு கட்டறேன்.” பிள்ளை வீட்டைவிட்டு வெளியேறினார்.

****

முத்துகருப்பு முதலியார் வீட்டுத்திண்ணையில் அமர்ந்து வருவோர் போவோரையெல்லாம் நலம் விசாரித்தப்படி அமர்ந்திருந்தார். பஞ்சராட்ச பிள்ளை வருவதைக் கண்டு உரத்த குரலில்,..

“வாங்க பிள்ளை. உங்களைத்தான் எதிர்ப்பார்த்துக்கிட்டு இருந்தேன்”.

“வழக்கமான நேரத்துக்கே கிளம்பிட்டேன், வீட்டு சின்ன பஞ்சாயத்து அதான் தாமதமாயிடுச்சு.”

“அதானேப் பார்த்தேன், நேரம்தவற ஆள நீங்க. செத்த இருங்க காபி சொல்லிட்டு வந்திடறேன்”. முதலியார் எழுந்து வீட்டிற்குள் சென்றார்.

பஞ்சராட்ச பிள்ளை சாலையில் சென்ற மாடசாமியை கண்டுகொண்டார்.

“எலேய் மாடசாமி,.”

“ஐயா” என பிள்ளை அமர்ந்திருந்த திண்ணை அருகே ஓடிவந்து கைகளை கட்டிக் கொண்டு நின்றார் மாடசாமி.

“இளவட்ட பசங்க ஒரு அஞ்சு பேர கூட்டிக்கிட்டு நாளைக்கு நம்ம வீட்டுப் பக்ககம் வந்திடு. குழி தோன்டற மாதிரி இருக்கும், கடப்பாறை, மமுட்டி, சட்டியெல்லாம் எடுத்தாந்திடு.”

“சின்னப் பண்ணை வீட்டுல வேலை நடந்திக்கிட்டு இருக்குங்க. நாளை மறுநாள் வரைக்கும் வேலை கிடக்குதுங்க. அதனால நான் வரமுடியாதுங்களே.”

“சரி வேற ஆளிருந்த அனுப்பிவை.”

“சரிங்க. உத்தரவு வாங்கிக்கிட்டுங்களா?”

“ம்..”

கையில் காபியுடன் வந்து முதலியாரும் சேர்ந்து கொண்டார். இருவரும் காபியை குடித்தபடி பேசத் தொடங்கினர்.

“என்ன பிள்ளை வீட்டுல ஏதோ பஞ்சாயத்துன்னு சொன்னீங்க”

“இன்னும் எத்தனை காலம் நம்ப புள்ளைக்குட்டிக ஆத்திர அவரசதுக்கு பறைக்கு போறது. அதான் டவுன்ல இருக்கிற மாதிரி கக்கூஸ் கட்டிடலாமுன்னு இருக்கேன்.”

“வாஸ்தவம்தான், மழைக் காலத்துல நாமலே ரொம்ப சிரமப்படறோம். அதுங்க பாவம் என்ன செய்யும்.”

“”

“ஆமாம் உடனேயே வேலைக்கு ஆள வரச் சொல்லறீங்க. ஆறுவடை முடிஞ்சதுக்குப்புறம்தானே பணம் கைக்கு வரும்.”

“இரண்டு மாசம் முன்னாடியே,. நம்ப பஞ்சாயத்துக்கு கக்கூஸ் கட்டச் சொல்லி முன்பணம் கொஞ்சம் சர்கார்கிட்டருந்து வந்திருக்கு. அதெல்லாம் எதுக்கு கட்டிக்கிட்டுன்னு கிடப்புல போட்டாச்சு.”

“இப்ப அத எடுத்து வீட்டுக்கு கட்டப்போறீங்களா?”

“வீட்டுக்கு இல்ல ஊருக்குத்தான் கட்டப்போறேன். ஊரு வேற நாம வேறையா?. நம்மள தவிற வேறுயாரு பயன்படுத்தப்போறா”

“அதானே..”

****