இக்குவாகுவின் வலி – சிறுகதை

dscn6201 copy

1990 களில் கட்டப்பட்ட கட்டிடம். பாறைக்கற்களை உடைத்து ஒட்ட வைத்து புதுடிசைன் என்று பரவலாக அறியப்பட்ட காலத்தில் கட்டப்பட்டது. நான்கு புறமும் இரண்டு ஆட்கள் நடந்து செல்வதற்கு போதுமான இடைவெளியும், கிழக்குப்பக்கத்தில் தோட்டம் போடுவதற்கென விடப்பட்ட ஒரு சென்ட் நிலத்தினையும் சேர்த்து ஏழு சென்ட் நிலத்தினை ஆக்கிரமித்துள்ள கட்டிடம். சுற்றுபுறத்தில் கல்லுமச்சுவீடு என்று அறியப்பட்ட அந்த வீட்டின் முன்புதான் நிற்கிறேன். கருப்பு நிற கடப்பக்கல்லில் “சிவபதி இல்லம்” என பொறிக்கப்பட்டிருந்தது.

அழைப்பு மணியை அடிக்க வாசற்கதவிற்குள் கையை விட்டு துலாவி அடிக்க வேண்டும். சிறுபிள்ளைகள் அடிக்கடி அழைப்புமணியை அடித்துவிட்டு ஓடிவிடுவதால் இந்த தெருவில் யார் வீட்டிலும் அழைப்புமணியை வெளியே வைப்பதில்லை. என்னுடைய வீட்டிலும் இப்படிதான். நான் இந்த வீட்டின் பக்கத்தில் குடிவந்து ஐந்து மாதங்கள் ஆகின்றன. வந்த புதியதில் ஏற்பட்ட தவறான அபிப்ராயத்தால் இன்றுவரை இந்த வீட்டின் மனிதர்களோடு சகஜநிலை ஏற்படவில்லை.

சிவபதி சார்,… சிவபதி… சார்…

பதிலில்லை. ஆனால் வீட்டிற்குள் சலசலப்புகள் கேட்கின்றன. அவர்களுக்கு நான் வந்திருப்பது என் குரல் மூலம் தெரிந்திருக்கும். குறைந்தபட்சம் வேறு நபர்கள் கூப்பிட்டிருந்தால் இந்நேரம் வந்து வரவேற்கின்ற மனிதர்கள். என்னைமட்டும் மிகக் கடுமையாக வெறுக்கின்றார்கள். அழைப்பு மணியையும் சடங்கிற்காக அடித்தேன்.

பதிலில்லை.

எங்களது வீட்டு வாசலில் ஒய்யாரமாய் சாய்ந்தவாறு என் மனைவி என்னையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் சபாபதி வீட்டுவாசலில் தினமும் அழைப்பதும், அவள் என்னை வழுக்கட்டாயமாய் இங்கே நிற்கவிடாமல் இழுத்துச் செல்வதும் இன்றைக்கு நடக்கவில்லை. அவள் களைத்துப் போய்விட்டாள். ஆனால் நான் அப்படியல்ல. இன்று ஒரு தீர்மானத்துடன் வந்திருந்தேன். அது எப்படியாவது வீட்டிற்குள் நுழைந்து அவளைப் பார்த்துவிடுவது.

மீண்டும் அழைத்தேன். அழைப்புமணியை அடித்தேன்.

பதிலில்லை.

ஒரு எம்பு எம்பி வாசல் கதவின் பின்பக்கம் இருக்கும் கொக்கியை விடுவித்தேன். கருப்பும் தங்கநிறமும் பூசப்பட்ட கதவினை திறந்து நுழைந்தேன். என்னுடைய வருகை அவர்களுக்கு மேலும் கசப்பாக இருந்திருக்க வேண்டும். அதனால்தான் நான் உள்ளே வந்துவிட்டேன் என்பதை அறிந்தும் அவர்கள் வெளியேவரவில்லை. வராமல் போகட்டும். நான் அவரையோ, அவர் மனைவியையோ, அல்லது அவர் உருவமாகவே வந்துபிறந்திருக்கும் அவர் பிள்ளையையோ பார்க்க வரவில்லை. நான் வந்தது ரோசியைப் பார்க்க.

எங்கே அவள்.. வழக்கமாய் இருக்கும் இடத்தில் காணவில்லை. ஒருவேளை வீட்டின் தோட்டப்பகுதியில் இருக்கலாம். பத்துநாட்களாய் அவளைப் பார்க்க தவித்துக் கொண்டிருக்கிறேன். கிழக்குப்பகுதியிலிருக்கும் தோட்டத்தில் இரண்டு தென்னை மரங்களும், ஜாதிமல்லிகை கொடியும் இன்னும் சில காய்கறிகளும் பயிரிடப்பட்டிருந்தன.

ரோசி நடைபாதையில் ஒரு சாக்கின் மீது படுத்திருந்தாள். அவளுடைய தட்டில் வைக்கப்பட்டிருந்த பாலை எறும்புகள் உணவாக்கிக் கொண்டிருந்தன.   என்னுடைய வருகையை அவள் உணர்ந்திருக்க வேண்டும். வால் மெதுவாக ஆடியது. அவளருகில் சென்றேன். நாக்கினை பல்லிடுக்கில் கடித்து வலியை பொறுத்துக் கொண்டிருந்தாள். மெல்ல முனகல் சத்தம் மட்டும் கேட்டது.  வலது கண்ணுக்கும் காதுக்கும் இடையே எலும்பு முறிந்து அதன் பாதிப்பால் வீக்கமும், சீலும் ஏற்பட்டு, தற்போது ஒற்றைக் கண்ணை ரோசி இழந்துவிட்டாள்.

பக்கத்துவீட்டுக்கு குடிவந்ததும் முதலில் பழக்கமானவள் ரோசிதான். புசுபுசுவென தங்கநிறத்தில் இருந்தாள். பொமேரியன் நாட்டுநாய் கிராஸ் என்றார்கள். நெய்ரோட்டி, கோழி குழம்பு, முள்எடுத்த மீன் என எங்களுடைய சமையலில் அவளுக்கும் பங்குவைத்தோம். சிவபதி எப்போது கதவினைத் திறப்பார், எப்போது வெளியே ஓடலாம் என்றிருப்பாள். சாலையில் ஒரு ஓட்டம் ஓடிய பிறகே அவளை பிடித்து வீட்டிற்குள் அடைக்கமுடியும். எப்போதுமே துள்ளலாய் திரியும் அவள் ஒடுங்கிக் கிடப்பதைக் கண்டு… துக்கம் பீரிட்டது..

“ரோசி என்னை மன்னிச்சுடுமா… மன்னிச்சுடு..”

என்ன இருந்தாலும் நான் இப்படி உன்னை காயப்படுத்தியிருக்க கூடாது. சொந்தங்கள் அத்தனை பேரும் வந்து கூடியிருக்க விழா அன்னைக்கும் நீ வந்து வாசல்ல ஒன்னுக்கடிச்சுட்ட. அவங்க முன்னாடி என் வீட்டுக்கும் எனக்கும் நடந்த அசிங்கமா நான் நெனச்சுட்டேன். அவங்களோட கேலியான சிரிப்பால, கொஞ்சநேரம் மிருகமாயிட்டேன்.

கொஞ்சம் கூட யோசிக்காம அங்கிலிருந்த கட்டையை எடுத்து அடிச்சுட்டேன். ஆனா அந்த அடி இப்படி உன்னை நரக வேதனையில தள்ளுமுன்னு நான்  நினைக்கல. நீ வலியில துடிக்கும் போது, என் மனசு பதருது. உன்கிட்ட மன்னிப்பு கேட்கனுமுன்னு நாய்மாதிரி உன்வீட்டு வாசல பத்துநாள் நின்னுக்கட்டு இருக்கேன். உன்னை அடிச்சதுக்கப்புறம்தான் புத்திவந்துச்சு. ஆனா நான் பாவி. உன்னை முடமாக்கிட்டு நான் நடந்துக்கிட்டு இருக்கேன். ஐஞ்சறிவு படைச்ச உன்கிட்ட ஆறறிவ எதிர்ப்பார்த்து நான் அறிவை இழந்துட்டேன். உன்னோட இயல்ப உணராம, நான் என் இயல்ப இழந்துட்டேன். நீ படர வேதனையை நானும் தினமும் பட்டுக்கிட்டு இருக்கேன்டீ.

பேருந்துக்குள் மழை – சிறுகதை

Rain-Korea copy

“தம்பி.. தம்பி.. வலையப்பட்டி இறங்கனுமுன்னு பேசிக்கிட்டு வந்திங்க. இப்படி தூங்கிக்கிட்டு இருக்கிங்க” அருகில் இருக்கும் புண்ணியவான் தூக்கத்தினைக் கலைத்தார்.

“வலையப்பட்டி வந்துடுச்சுங்களா” மிரட்சியுடன் கேட்டேன்.

“இல்லைப்பா. இனிமேதான் வரப்போகுது.”

“அப்பாடா” உண்மையிலேயே அவர் புண்ணியவான்தான். அவர் எழுப்ப வில்லையென்றால் வலையப்பட்டியைத் தாண்டி பேருந்து செல்லும் போது, எதற்சையாக என்னைக் காணும் நடத்துனர். கண்டபடி வசைபாடி ஏதேனும் ஒரு நிறுத்ததில் தள்ளிவிட்டு போயிருப்பார். அதன் பின்பு அங்கிலிருந்து மீண்டும் வலையப்பட்டிக்கு வந்திருக்க வேண்டும். ம்.. அது நடவாமல் போனது மகிழ்ச்சி. நான் எழுந்து மேலே வைத்திருந்த ஒரு சின்ன சோல்டர் பேக்கையும், அதற்குப் பின் ஒளித்துவைத்த லேப்டாப் பையையும் எடுத்துக் கொண்டேன்.

மணியைப் பார்த்தேன். அதிகாலை மூன்று. அருகில் என்னுடன் இறங்க ஒருவர் ஆயத்தமாக இருந்தார். ஓய்வு பெற்ற காவலதிகாரியா, இல்லை ஏதேனும் கிராமத்து பஞ்சாயத்து தலைவரா தெரியவில்லை. இறுகிய முகத்தில் தடித்த முறுக்கிய மீசை.. நான் முகத்தை திருப்பி சாலையில் கவனத்தினை வைத்தேன்.

“வலையப்பட்டியெல்லாம் இறங்கு” நடத்துனரின் குரல் மட்டும் கேட்டது. படபடவென இறங்கி சாலையைக் கடந்து பேருந்து நிறுத்ததில் நின்றுகொண்டேன். இனி நான்கு முப்பது வரை காத்திருக்க வேண்டும். அப்போதுதான் என்னுடைய ஊருக்கு செல்ல பேருந்து வரும். அதுவும் அதிஸ்டமிருந்தால். சென்ற முறை வந்தபோது ஐந்து இருபத்துக்குதான் வந்தது.

ஐந்து நிமிடங்களுக்கு பத்து பதினைந்து பேருந்துகள் வந்துபோகும் நகரங்களிலிருந்து கிராமத்திற்கு வந்தால், காத்திருப்பின் கடினம் புரிந்து போகும். திருச்சியிலிருந்து சேலத்திற்கோ, நாமக்கல்லிற்கு செல்லும் இரவுப் பேருந்தினைப் பிடித்து இந்த ஊர் வரை வந்துவிடலாம். அதன்பின்பு இங்கிருந்து காட்டுப்புத்தூருக்கு உள்ளே செல்ல தனிப் பேருந்து வரும். அதிலும் எங்கள் ஊர் இந்த சாலையின் உள்ளே இருக்கிறது. அதற்கு மூன்று நான்கு பேருந்துக்கு ஒன்றுதான் எங்களூருக்கு செல்லும். அப்படி இப்படியென ஒரு அரைமணி நேரத்தினைக் கழித்திருந்தேன். சாலைக்கு அந்தப் பக்கத்திலிருக்கும் டீகடைக்கு சென்றாலாவது நேரத்தினைக் கழிக்கலாம் என தோன்றியது. ம்.. அதுதான் சரியான முடிவென பைகளைத் தூக்கிக் கொண்டு சென்றேன். ஒடிசலாய் ஒருவர் நின்று புகைத்துக் கொண்டிருந்தார். ஓரு பீடியே பீடி பிடிக்கிறதே என பார்த்திபன் போல கவிதை வந்தது.

அந்த மீசைக்காரர் பென்ச்சில் அமர்ந்து நாளிதலைப் பார்த்துக் கொண்டிருந்தார். விடியும் முன்பே பிரதானச் சாலைகளில் இருக்கும் டீகடைகளுக்கு செய்திதாள்கள் வந்துவிடுகின்றன. எங்களூருக்கு காலை ஏழு மணிக்கு கேகேபி பேருந்தில்தான் வரும். சில நேரங்களில் அந்தப் பேருந்தும் வராமல் போனால். மறுநாள்தான் கிடைக்கும். அவர் தீண்டாமல் வைத்திருந்த துணுக்கு செய்திதாளை எடுத்து அமர்ந்தேன்.

“சார் டீயா”

“ம்.. ராகிமால்ட் இருக்கா”

இல்லை சாரே. தீர்ந்துபோயிடுச்சு. டீ தாரேன்.

சரி. ஒரு டீ… ஆர்டர் தந்துவிட்டேன். அந்த செய்திதாளில் உள்ளூரில் நடந்த கடை திறப்பு, கட்சி கூட்டம் போன்றவற்றை எல்லாம் தவிர்த்து எந்த எந்த திரையரங்குகளில் என்ன படம் ஓடுகிறது என்பதே பல பக்கங்களுக்கு இருந்தது. அதை வைத்துக் கொண்டு இனி ஒப்பேற்ற முடியாது எனும் போது சரியாக டீ வந்தது.

“காட்டுப்புத்தூருக்கு போறீங்களா”

“இல்லைன்னா முன்னாடியே ஆலம்பட்டி”

“சரி சரி. நாலே முக்காலுக்கு வந்துடும்” இன்னும் கால் மணிநேரம் கூடுதலாக.. ம்.. விடியகாலை இருட்டில் காத்திருப்பது. அதற்குள் இரண்டு மூன்று சேலம் பேருந்துகள் கடந்து போயிருந்தன. திருச்சிக்கு ஒரே ஒரு பேருந்து போனது. அதிலிருந்து இறங்கியவர்களுக்காக இருசக்கர வாகனங்களில் உறவினர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள். வந்து இறங்கியதும் அவர்களின் உடமைகளோடு காணாமல் போனார்கள். நான் தான் வெகுநேரமாக பொழுதினை கடினமாக கழித்துக் கொண்டிருக்கிறேன்.

ஒரு வழியாக காட்டுப்புத்தூர் பேருந்து வந்தது. நான் வேகமாக ஓடி பேருந்து நிற்பதற்குள் நெருங்கிவிட்டேன். பேருந்திலிருந்து ஒரு இளம்பெண் கண்களில் தூக்த்துடன் வந்து இறங்கினார். அவரை வரவேற்க புதுக்கணவன் தயாராக இருந்தான். நான் ஏறிக்கொண்டு மீசைக்காரரைப் பார்த்தேன். அவர் மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்தார். பேருந்து புறப்பட்டது. வேகம் பிடிப்பதற்குள் மீசைக்காரர் ஏறிவிட்டார்.

என்னையும் சேர்த்து ஒரு பத்துபேர் இருப்போம். பாதி பேர் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இரு பெண்கள் தங்களோடு வந்த கிழவனோடு பேசிக்கொண்டிருந்தார்கள்.

“டிக்கெட்”

“ஆலம்பட்டி”

“ஆலம்பட்டியா. கேட்டுக்கிட்டு ஏறக்கூடாதுங்களா. ஆலம்பட்டி உள்ளுக்க போகாதுங்க. முன்னாடியே இறங்கிக்கோங்க”

“ஏங்க. இந்தபஸ் உள்ள வருங்களே”

“இப்ப லேட் ஆகிடுச்சு சார். இன்னும் காட்டுப்புத்தூருக்கு போயிட்டு வரனும். ஆலம்பட்டி உள்ளேயெல்லாம் போய் வரமுடியாதுங்க. சும்மாவே லேட் ஆகும். இப்ப ரோடு போடறேன்னு இருந்த ரோட்டை வேற சுரண்டி வைச்சுட்டானுங்க”

இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை. ஆலம்பட்டிற்கு நடைதான். “சரி கொடுங்க”.

சடசடவென சத்தம் எழுந்தது. என்னவென ஊகம் செய்வதற்குள் ஜன்னலிருந்தும், பேருந்தின் மேலிருந்தும் மழை துளிகள் தெறித்துவிழுந்தன. பேருந்தே பரபரப்பானது. ஜன்னலிருந்து பழைய தார்பாய் இழுவைகளை இழுத்து தள்ளினோம். நடத்துனர் படிக்கட்டிலிருந்த தார்பாயை இழுத்துவிட்டார். இருந்தும் பேருந்துக்குள் தண்ணீர் வருவது நிற்கவில்லை. எனக்கு இரண்டு இருக்கையின் முன்னால் மேலிருந்து நீர் தாரைதாரையா வழிந்துகொண்டிருந்தது. என்னுடைய இருக்கையிலிருந்து எழுந்து யாருமில்லாத பின் இருக்கைக்கு சென்று அமர்ந்தேன். சரியான பிணைப்பில்லாத வழிகளிடையேயும், மேல் கண்ணாடி உடைந்திருந்தன் வழியாகவும் பேருந்தே ஈரமாகியது. மெதுவாக துடைத்தெரியும் வைப்பரோடு ஓட்டுனர் போராடி ஓட்டிக்கொண்டிருந்தார். மழையின் தீவிரம் அதிமாகியதும். சாலையே தெரியவில்லை என நடத்துனரிடம் சொல்லி முன்னே அழைத்துக் கொண்டார்.

என்மேல் அடிக்கும் சாரல் எங்கிருந்து வருகிறது என தேடிக்கொண்டிருந்தேன். இந்தக் கலவரத்திலிருந்து என்னுடைய லேப்டாப்பினை காப்பாற்றியாக வேண்டும். கீழே மேலே என எங்கும் வைக்க முடியாது. கோழிக்குஞ்சுகளை காக்கும் தாய்க்கோழியைப் போல மார்போடு அணைத்துக் கொண்டிருந்தேன். சட்டென ஒரு துளி மேலே விழுந்தது. இது எங்கிருந்து என மேலேப் பார்த்தால் என்னுடைய இருக்கையின் மேலே ஒன்று இரண்டு மூன்று என எண்ணிக்கையில் நீர்த்திவலைகள் கைகோர்த்து பெரியதாகிக் கொண்டே போயின. ஒன்று விழுந்ததும், அந்த இடத்தில் சிறியதாக ஒன்று தோன்றியது. செய்வதறியாது மேலேயே பார்த்துக் கொண்டிருந்தேன்.

சடாரென இடியொன்று பனைமரத்தினை தாக்க அந்த வேகத்தில் பனை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அந்த அபரிவிதமான சத்தமும், அமானுஷ்ய வெளிச்சமும் எனக்குள் பயத்தினை உண்டுபண்ணியிருந்தன. ஓட்டுனர் இந்த பேய் மழையிலும் பேருந்தினை நிறுத்தாமல் ஓடிக்கொண்டிருந்தார். பேருந்தின் மேற்கூறையின் மீது மழைத்துளிகள் விழும் சத்தமும், ஜன்னல் தார்பாய்களை கிழிக்கும் காற்றின் சத்தமும் அதிகரித்திருந்தன. மீசைக்காரர் என்ன செய்கிறார் என பார்த்தேன். பேருந்தின் நடைப்பாதையில் குடையொன்று பிடித்துக் கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். இதென்ன பேருந்துக்குள் மழையா. பேருந்துக்குள் குடையா. எனக்குள் இருந்த பார்த்தீபன் விழித்துக் கொண்டான். தலையில் மழைதேவதையின் ஆசிர்வாத அட்சதைகள் விழுந்தன.

செவப்பி – சிறுகதை

செவப்பியை உங்களுக்கு தெரிந்திருக்கலாம். நீங்கள் சென்னை வாசியாக இருந்தால், அவளை பேருந்திலோ, மின்சார ரயிலிலோ, சாலையிலோ, ஏன் உறவினர் வீட்டிலோ கூட பார்த்திருக்க வாய்ப்புண்டு. மாலை நாளேடுகளை தொடர்ந்தப வாசிக்கும் பழக்கம் இருந்தால் நீங்கள் அவளைப் பற்றி படித்திருப்பீர்கள்.

முன்நெற்றியில் விழும் கற்றைக் கூந்தலும், திருத்திய புருவங்களும், கோலிக்குண்டு கண்களும், கிள்ளத்தூண்டும் கண்ணச் சதையும் அவள் அடையாளங்கள். தெருவோரக் கடையில் விற்கும் காதணியும், மார்பை இறுக்கிப் பிடிக்கும் சட்டையும், கூடார பாவடையும் அவள் அணிபவை. உங்களுக்கு ஞாபகம் வருகிறதா?. இல்லையா!. சரி விடுங்கள் சிவப்பியை நான் உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

நெடுங்காலம் முன்பு குஜராத்தில் பூமிதேவதை ஆடிய ருத்திர தாண்டவத்தால் பெற்றோரையும், உற்றோரையும் இழந்த பெண் குழந்தையை, வடநாட்டு கூட்டமொன்று சென்னைக்கு அழைத்துவந்தது.

அன்றிரவு பூக்கார செவ்வந்தி விற்று தீர்க்காத பூக்களெல்லாம் கூடையில் அள்ளிப் போட்டுக் கோண்டு, கிடத்தியிருந்த சாக்கினையும், அவ்வப்போது நீர் தெளிக்க வைத்திருந்த பாத்திரத்தையும் ஓரம்கட்டி புறப்பட தயாரானாள். இப்போது கிளம்பினால்தான் கடைசி மின்சார வண்டியை பிடிக்க முடியும். நேற்று அதை தவறவிட்டு விட்டதால், பேருந்துக்காக காத்திருந்து அது வராமல் போக ஆட்டோவிற்கு மொத்த வருமானத்தையும் கொடுக்க வேண்டியதாய்ப் போயிற்று. வேக வேகமாய் எட்டுவைத்து நிலையத்தினை அடைந்தாள்.

இரவு உறக்கிய கூட்டத்திலிருந்து பிரிந்து தாயை தேடி மழலை மொழி பேசித் திரிகின்ற குழந்தையை பார்த்தாள். “அடடே, என்ன செவப்பு” என தனக்குள் அதிசயத்து அந்த குழந்தை அருகில் சென்றாள். அது இவளைப் பார்த்து ஏதோ சொன்னது. முகத்தினை உற்றுப் பார்த்து சிரித்து. செவ்வந்திக்கு சில நிமிடம் உலகமே மறந்தது. இருந்தும் குழந்தை நிறுத்தாமல் அவளிடம் பேசியது. அதன் பாசையில் வடமொழி வீச்சம் அதிகமிருந்ததால் யாரேனும் தவற விட்டிருக்கலாம் என்று சற்று நேரம் வருவோர் போவோரிடம் விசாரித்தாள்.

இறுதியாக ஏட்டு சிதம்பரத்திடம் சென்று “சாரே, யாரோ புள்ளைய தவறவிட்டுட்டாங்க” என்று நின்றாள். ஏட்டு நிலைய அதிகாரிடம் விசயத்தை கூறி, அறிவிப்பு செய்தும் யாருமே வராததால், குழந்தையை ஆசிரமம் ஏதாவதொன்றில் சேர்த்துவிட வேண்டுமென பேசிக்கொண்டார்கள். குழந்தையில்லாத செவ்வந்தி தயங்கி தயங்கி தானே வளர்ப்பதாக கூற, அவளுடைய முகவரியை வாங்கி பதிவு செய்து கொண்டு குழந்தையை அவளிடம் ஒப்படைத்தார்கள். செவ்வந்திக்கு குழந்தையை தர சொல்லி சிபாரிசு செய்த சிதம்பரம் அதற்காக தனியே மாமுல் வாங்கிக் கொண்டதை சொல்லி தெரியவேண்டியதில்லை.

செவ்வந்திக்கு தான் கருப்பாய் இருப்பதை உணர்ந்து கொஞ்சம் வருத்தம் இருந்தது. சிவப்பாய் இருப்பவர்கள் இறந்து போனதும் அவர்களின் தோலை வாங்கி தான் உடுத்திக் கொண்டால் என்ன என்றெல்லாம் சிந்திப்பாள். தன்னைவிட நிறமான குழந்தை தனக்கு கிடைத்திருப்பதை நினைத்து மகிழந்தபடி குடிசைக்கு சென்றாள். புருசன் மாரிமுத்துவிடம் கெஞ்சி கூத்தாடி வளர்க்கவும் சம்மதம் வாங்கிக் கொண்டாள். குழந்தை சிவப்பாக இருக்கிறது என்ற எண்ணம் தவிற வேறொன்றும் செவ்வந்திக்கு இல்லை. அதனால் செவப்பி என்று பெயர் வைத்தாள். தினமும் பூக்கூடையில் பூக்கள் நிரப்பி வைத்து அதில் செவப்பியை கிடத்தி தூங்க வைப்பாள். செவப்பி வளர்ந்து மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடும் போதும் தனித்த நிறத்துடன் திகழ்வதை பெருமை பொங்க பார்ப்பாள். கார்பரேசன் பள்ளியில் சேர்த்துவிட்டு செவப்பியை பெரிய ஆபிசராக ஆக்க எண்ணியிருந்தாள்.

***

செவப்பி பெரியவளாகி ஒரு மாதம் ஆகியிருந்தது. அன்றைய இரவில் ஏதோ சத்தம் கேட்டு எழுந்த செவ்வந்திக்கு கொலையே நடுங்கிப்போனது. மாரிமுத்து தூங்கிக் கொண்டிருந்த செவப்பியுடன் உடலுறவு கொள்ள முயன்று கொண்டிருந்தான். அப்பனிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள திமிரிக் கொண்டிருந்தாள்.

“ஏய், தேவுடியா மவனே..” என்று கத்திக் கொண்டே எழுந்து ஓடினாள். ஓடிய வேகத்தில் மாரிமுத்துவை எட்டி உதைத்தாள். அவன் குடிசையின் பக்கவாட்டில் சரிந்தான். அரண்டு எழுந்த சிவப்பிக்கு ஒன்றுமே புரியவில்லை. உடையை சரி செய்து கொண்டு பின்னால் நகர்ந்து கொண்டாள். “பெத்த புள்ளையை போய்.. எவனாவது இப்படி செய்வானா?” செவ்வந்தி சொல்லும் முன்பே மாரிமுத்து கத்தினான் “யாருக்கோ பிறந்த அநாதைநாயக்கு, நான் எப்படி அப்பன் ஆவேன்டீ. அவ எனக்கு புள்ளையும் இல்லை, நான் அப்பனும் இல்ல”.

தள்ளாடி எழுந்தவன் செவ்வந்தியை தள்ளிவிட்டு செவப்பியை நெருங்கினான். “இந்த செவத்த குட்டியோட படுத்து உனக்கு செவப்பா புள்ள பெத்து தாரேன்டி,..” செவப்பியின் சட்டையை இறுகப்பிடித்து கிழித்தான். அவள் உடல்நடுங்கியது. பேச்சுமூச்சற்று அப்பனையே பார்த்துக் கொண்டிருந்தாள். விழுந்துகிடந்த செவ்வந்தி தென்னமாற்றைத் தேடினாள் ஆனால் போதாத காலம் அரிவாள்மணைதான் கைக்கு சிக்கியது.

மகளை காப்பாற்ற வேண்டுமென்ற பதற்றத்தில் அவனை எத்தனையாக கூறுபோட்டாளென தெரியாது. பக்கத்து குடிசை வாசிகளும் வெளியில் படுத்திருந்தவர்களும் இந்த சத்தங்களைக் கேட்டு கதவினை தட்ட தொடங்கியிருந்தார்கள். சிறிது நேரத்தில் குடிசையின் பகுதியை கிழித்துக் கொண்டு கணேஷ் வரும்போது, மாரிமுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்தான். செவ்வந்தியும் செவப்பியும் கட்டியணைத்து அழுதபடி இருந்தார்கள். செவ்வந்தியை காவல்துறையினர் அழைத்து சென்றபோது செவப்பி இன்னும் அழுதாள். செவ்வந்திக்கு அழுவதற்கு கண்ணீர் மிச்சமிருக்கவில்லை.

மறுநாள் மாலை செய்திதாள்களில் “கணவனை கொன்ற மனைவி. வளர்ப்பு மகளிடம் தவறாக நடக்க முயன்றதால் விபரீதம்” என்று தலைப்பு செய்தியாக வந்தது. செய்தியில் பெயர்கள் மாற்றப்பட்டிருந்தன.

***

இதெல்லாம் நடந்து பல வாரங்களாகிவிட்டது, இப்போது செவ்வந்தி விசாரனை கைதியாக சிறையில் இருக்கிறாள். சிவப்பி படிப்பினை கைவிட்டுவிட்டு பக்கத்துவிட்டு சாராதாவுடன் கட்டிட வேலைக்கு சென்று கொண்டிருக்கிறாள். செவ்வந்தி இருக்கும் ஜெயிலில் கூட்டிப்பெருக்கும் வேலைக்கு சேர்ந்தால் அவளை தினமும் பார்க்கலாம் என தனக்கு தெரிந்தவர்கள் மூலம் அங்கு சேர முயன்று கொண்டிருக்கிறாள்.

நீங்கள் சிவப்பியை எங்கேனும் பார்த்தால் கொஞ்சம் தள்ளியே இருங்கள், செவ்வந்திக்கு மீண்டும் அரிவாள்மணை தூக்கும் வேலையை கொடுத்துவிடாதீர்கள்.

எனது சிறுகதைகள் –
மயிர்
தானம்
தாய்மை
அழகான பன்னிக்குட்டி

பேருந்து கவிதைகள்

சாத்தான்கள் –

கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி
அரசு பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்

சவ்வாது மணமும், சந்தன பவுடர் மணமும்
வியர்வை வாடையோடு நாசியை துளைக்கின்றன

பயணசீட்டுக்கு பணம் கொடுத்துவிட்டு
அதுவரும் பாதையை பார்த்துக் கொண்டிருக்கிறேன்

ஒருகாலூன்றி மீனுக்காக காத்திருக்கும் கொக்கென
மறுகாலூன்ற சிறுஇடம் கிடைக்க காத்திருக்கிறேன்

இடதுகையில் பேருந்தின் கம்பியை இறுகப்பற்றியிருந்தும்
திருப்பங்களிலெல்லாம் கடிகாரப் பெண்டுலமென ஆடுகிறேன்

உணவுக்கூடையை பிடித்தபடி வலதுகை வகையாய் சிக்கியிருக்கிறது
இன்னமிரு கைகளை இணைத்திருக்கலாம் ஆண்டவன்
பேருந்தில் பயணிப்பவர்களுக்காகவாவது என்றெண்ணுகிறேன்!

சாலை இரைச்சல்மீறி இருபெண்களின் சத்தம்
பேருந்து முழுவதும் ஒலிக்கிறது

“அவுனுங்களையும் நான் சுமந்துபோகனும்”
“….”
“….. எடுத்து தேக்கிறவன்கிட்ட என்ன சொல்ல”
“உக்காந்துதானே இருக்கே”
“உக்காந்திருக்கும்போது ஒட்டிஒட்டி வாரானுங்க”
“போடி பைத்தியக்காரி”
“நீதான்டி குச்சிக்காரி”

நீளுகின்ற அவர்கள் சண்டையின் சாரம்
என்னைப் போல உங்களுக்கும் தெரிந்திருக்கும்!

மனம் சொல்லுகிறது
பேருந்தில் நிற்கவே போராடும் நமக்கு
அமர்ந்திருப்பவர்களின் பிரட்சனைகள் எதற்கு?

ஆமென்று கூறி மறுகால்வைக்க
இடமொன்றை தேடியபடி இருக்கிறேன்
சகபயண ஆண்களெல்லாம் பெண்களுக்கு சாத்தான்களே!

***

யாருக்குத் தெரியும்?

கற்பிணி பெண்ணோ
கைக்குழந்தை வைத்திருப்பவளோ
பேருந்தில் ஏறினால்
பெண்கள் பகுதிக்கு செல்வதில்லை!

அருகில் வந்து நின்றாலே
ஆண் எழுந்து அமர்விடம் தரும்போது
அடுத்ததற்கு அவசியமில்லை!

ஆண்கள் இரக்கம் நிறைந்தவர்களென
பெண்களுக்கு தெரிந்திருக்கலாம்
இல்லாமல்போனானால்
எளிதில் ஏமாந்துவிடுபவர்களென
இளக்காரமாக நினைத்திருக்கலாம்

நன்றிகூட கூறாமல்
நன்றாக அமர்பவர்களைத்தவிற
வேறுயாருக்குத் தெரியும் இந்த சூட்சமம்?

கருப்பு வெறும் நிறமல்ல!

கருப்பு வெறும் நிறமல்ல!

வெண்தோல் வேண்டி
வேண்டாத களிம்பு தடவி!

வெளியில் செல்லாமல்
வெயிலில் துள்ளாமல்!

அறைக்குள் முடங்கி
ஆடைக்குள் உறக்கியது போதும்!

உண்மையை உணர்க…

ஊருக்கு உழைத்தோம்- அதனால்
உடலெல்லாலம் கருத்தோம்!

கருப்பு வெறும் நிறமல்ல
கடவுள் கொடுத்த வரம்!

கருப்பின வெறுப்பு!

கருப்பின வெறுப்பென்பது
அவர்களை அடிப்பதும்
அடிமைசெய்வதும் மட்டுமன்று

நான் வெள்ளையாக வேண்டுமென
க்ரீம் எடுத்து பூசுவதும்கூட
கருப்பின வெறுப்புதான்!

கவிதைக்கான காரணம் –

காலம் காலமாக உழைத்தனாலும், தட்ப வெட்ப சூழலாலும் நம் தமிழர்களின் நிறம் சராசரியாக கருப்பு நிறமாகவே இருக்கிறது. சிலர் கொஞ்சம் மாநிறத்தில் இருந்தாலும், பெருபான்மை எல்லாம் கருப்பு நிறமே. உண்மை இப்படியிருக்க, பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை காட்டப்படும் வெண்தோல் விளம்பரங்களால், கருப்பான பெண் மீதும், ஆண் மீதும் மறைமுக வன்முறைகள் தொடுக்கப்படுகின்றன. ஒரு சமூகத்தின் நிறத்திற்கு எதிரான நிறவெறியை நாம் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறோம். இப்போதே பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும், தலைவிரித்தாட தொடங்கிவிட்டது நிறவெறி.

சமீபத்திய தமிழ் திரைப்படங்களின் கதைநாயகிகள் எல்லாம் வெளிர் நிறம் கொண்டவர்கள், வெளிமாநிலத்தவர்கள். தமிழ்பெண்களின் நிறம் தகுதி குறைவாக நினைக்கப்படும் போது, தமிழே அறியாதவர்கள் எல்லாம் தங்கள் நிறத்திற்காக கதைநாயகிகளாக ஆகின்றார்கள். “வெள்ளையாய் இருப்பவன் வெகுளி”, “சிகப்பு பெண்ணே அழகு”, “வெள்ளையாய் இருந்தால்தான் சாதிக்க முடியும்”  என்றெல்லாம் நம் நெஞ்சத்தில் நச்சு வளர்ந்து கொண்டே இருக்கிறது. கருப்பாக இருப்பதை “டல்” என கேலி செய்வதும், வெள்ளையாய் வந்தால் “தூள்” என புகழ்வதும் வன்முறை அல்லவா.  வெள்ளையாய் இருந்தால் தான் மேடையில் பாட முடியும், கருப்பாக இருப்பதே தோல்விக்கு காரணமென, திறமையை எல்லாம் கேலி செய்வது தவறு அல்லவா. கருப்பாக இருப்போறெல்லாம் சிவப்பாக மாற இருவாரம் போதுமென்றால் ஆப்பிரிக்காவில் இருக்கும் எல்லோரையும் சிவப்பாக மாற்றிவிட முடியுமே. அமெரிக்காவின் ஜனாதிபதியாக உலகையே ஆட்டிப் படைக்கும் ஒபாமா, இந்நேரம் வெள்ளையாய் ஆயிருப்பாரே.  எந்தவித அறிவியல் புரிதலும் இன்றி அடுக்கடுக்காய் ஏவப்படும் அபாய விளம்பரங்களை எந்த சமூக நல அமைப்பும் இன்றுவரை எதிர்க்கவில்லை. ஊருக்கு உழைப்பதாய் தங்களை முன்நிறுத்திக் கொள்ளும் எந்த ஊடகங்களும்(தொலைகாட்சி, திரைப்படம், நாளேடுகள், புத்தகங்கள்) இதற்கெதிராய் குரல் கொடுப்பதில்லை.

ஆங்காங்கே சில தோழிகள் மட்டும் இந்த விஷயத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதை பதிவு செய்திருக்கிறார்கள். சமூகம் தங்களை புறக்கணிப்பு நிகழ்கிறது என்கிறார்கள்.  ஆணைவிட இந்த பாசிச மனப்பான்மை பெண்களையே அதிகம் பாதிக்கிறது. கருப்பாய் பெண் பிறந்தால் பவுன் அதிகம் போடவேண்டுமென சொல்லும் சமூகத்தில், கருப்பு ஒரு குறைபாடாகவே பார்க்கப்படும் அவலம். கை கால்களை இழந்து நிற்கும் மனிதர்களையே மாற்றுத்திறனாளிகள் என மரியாதையோடு அழைக்கும் நாம், கருப்பாய் பிறந்தமைக்காக மனதினை ஊனமாக்குவது ஞாயமா. நீ கருப்பு நிறம் அதனால் உன்னுடன் நான் பழகமாட்டேன் என்று சொல்லுவதை நிறவெறி தானே. இன்று பழகமாட்டேன், பேசமாட்டேன் என்றெல்லாம் சொல்லும் வெறுப்புகள் வளர்ந்து, நாளே வெளிநாடுகளில் உள்ளது போல கொலைகளும், தற்கொலைகளும் நடைபெறும் முன் இந்த கொடுஞ் செயலை தடுத்துநிறுத்திட வேண்டும்.

தொலைக்காட்சி, திரைப்படம், செய்திதாள்,  நாளேடுகள், புத்தகங்கள் என்று பரவிக்கிடக்கும் இந்த வெண்க்ரீம் விளம்பரங்களை தடுத்துநிறுத்த வேண்டும். சமூக நல இயக்கங்களும், பெண்ணிய அமைப்பைபுகளும் இந்த பாசிசத்திற்கு எதிரான குரல்களையும், விழிப்புணர்வையும் பதிவு செய்ய வேண்டும். சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் இந்த நஞ்சு, முயல்பிடிக்க பம்மியிருக்கும் வேட்டை நாய்போல எப்போது வேண்டுமானாலும் உயிரை பலிகொள்ளலாம். அதற்குள் விழிப்பது அவசியம். நன்றி!.

தாய்மை – ஜெகதீஸ்வரன் சிறுகதை

மின்சார ரயில் இந்திரா நகரில் வந்து நின்றது. கூட்டம் அலைமோதினாலும் பெண்களுக்கான பெட்டியில் வழக்கம் போல் கூட்டம் இல்லை. ரயில் கிளம்பிய சில நிமிடங்களில், தட தடவென ஒரு சத்தம். எல்லோரின் கவணமும் சிதைந்து கீழே அமர்ந்து தட்டினை குச்சியால் தட்டிக் கொண்டிருக்கும் பெண்ணிடம் சென்றது.

அவளுக்கு முப்பது வயதிற்கும் குறைவாகவே இருக்கும் என அவள் முகத்தின் பொழிவு சொன்னது. வண்ணமையமான புடவையும், நெற்றியின் பொட்டும், அணிந்திருந்த நகைகளும் வெறுமாநிலத்தவள் என நன்கு உணர்த்தியது. மற்றப் பெண்களெல்லாம் அவளேயே பார்த்துக் கொண்டிருக்க, ரேவதி மட்டும் நடுவில் நின்று ஆட ஆரமித்த சிறுமியை கவணித்தால்,.

ஒல்லியான தேகம். கையில் ஒரு வளையம். என்னச் செய்யப் போகிறாள் என நினைக்கும் முன்னே உடலை வளைத்து வளையத்திற்குள் நுழைத்து வித்தை காட்டினாள். பெண்கள் சிலர் ரசித்து கைதட்டினார்கள். ரேவதிக்கு அருகில் இருந்த அரசாங்க ஊழியை “இதுங்களுக்கு வேற வேலையே இல்லை. காலங்காத்தால இந்த தரித்திரங்கள பார்க்காம வேலைக்கே போகமுடியல” என கரித்துக் கொட்டினாள்.

ரேவதிக்கு அவள் குழந்தையைப் பற்றி நினைவுகள் வந்தன. இந்நேரம் அவள் பள்ளிக் கூடத்தில் இருப்பாள் என மனதைத் தேற்றிக் கொண்டாள். அந்தக் குழந்தை இப்போது குரங்கினைப் போல குட்டிக்கரணம் அடித்துக் கொண்டிருந்தாள். ரேவதிக்கு அதற்கு மேல் அதைக் காண சகி்க்க முடியவில்லை. ஓடிச்சென்று அந்தக் குழந்தையை அனைத்தபடி அழுதாள். எல்லோருக்கும் ஒன்றும் புரியவில்லை.

அந்தக் குழந்தையின் தாய் ஓடிவந்தாள். அவள் கையில் நூறு ரூபாய் திணிக்க, அவள் திகைத்துப் போனாள். ரயில் அடுத்த நிருத்தத்தில் நிற்க, ரேவதி அழுதபடியே இறங்கினாள். மகளிர் பெட்டியில் இருந்த எல்லோரும் புரியால் நிற்க,. “நம்ப மட்டும் இந்த தொழிலுக்கு வரலையின்னா நம்ப குழந்தைக்கும்…”, அவளை அழைத்துச் செல்ல காத்திருந்த வாடிக்கையாளரிடம் சென்றாள்.

கதைக் காரணம் –

தங்களுடைய வயிற்றுக்காக குழந்தையை வைத்து வி்த்தை காட்டி வாழ்க்கையை ஓட்டுகின்றார்கள் பலர். சிலர் தங்களின் மானத்தை விற்று குழந்தைக்கு வழிகாட்டுகின்றார்கள்.

அங்கிகாரமில்லாத ஆபத்தான தொழிலில் குழந்தைகளுக்கு ஈடுபடுகின்ற தாயை, விவரமறிந்த குழந்தைகள் வெறுக்கின்றன. நடு பகலில் குழந்தையை கத்தியால் கீறி கிடைக்கும் பணத்தில், டாஸ்மார்க்கிக்கு செல்லும் பெற்றோர்களை நான் வெறுக்கின்றேன். நீங்கள் எப்படி?.

எனது சிறுகதைகள் –
மயிர்
அழகான பன்னிக்குட்டி
தானம்
தாய்மை

விபத்தில்லா கவிதைகள்

அருமை அப்பா

ஆயிரம் கதைகள் பேசித்திரிந்தோம்!.

ஆனால் இப்போது பேச ஒன்றுமில்லை,

அப்பா மகனுக்குள் !…

கனவு


சொல்ல முடியாத இழப்புகளையும்

மறைக்க முடியாத மகிழ்ச்சிகளையும்

மிகை செய்தே காட்டுகின்ற கனவில்,

நேற்றின் தாங்கங்கள் சில இருக்கின்றன.

ஒரு வேளை நாளையைக்கூட

காட்டாலமென்ற நப்பாசையில்

கனவுகான உறங்குகிறேன்!

ஊதுகுழாய்

அடுப்பெரிய இடுப்பொடிய

ஆச்சி ஊதும் ஊதுகுழாயில்

இசைவடியும் ஓசைக் கேட்டு

எழுந்து வந்தன புகைகள்!…

நிர்வாணக் குழந்தைகள்

அறியாமையோ

ஆடையின்மையோ

அழகாய்தான் இருக்கிறது

குழந்தைகளின் நிர்வாணம்!

உறவுகள்

அம்மாவின் அழுகுரல்,

உறவுகளின் கதரல் என ஒட்டுமொத்த சோகத்தையும்

ஒருசேர அழைத்துக் கொண்டு

தாத்தாவின் இறுதிபயணத்திற்காக பயணப்படுகிறன்.

வழியில்…
யாரென அறியாவிட்டாலும்

பாசமுடன் கையசைக்கின்ற

தெருவோரக் குழந்தைக்கு

பதிலுக்கு கையசைக்கின்ற போது

புரிகிறது…

ஒவ்வொருவரும் உறவுகளே என!

இரண்டு பொண்டாட்டிக்காரன் கதை

ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழனுடைய கலாச்சாரமா?.
தமிழனின் கடவுளான முருகனுக்கு இரண்டு மனைவிகள். அவனுடைய தந்தைக்கும், அண்ணனுக்கும் கூட இரண்டு மனைவிகள். ஆன்மீகத்தில் மட்டுமல்ல, நாத்திகத்தில் கூட இரண்டு பொண்டாக்காரன்கள் இருக்கின்றார்கள். தமிழனின் தலைவனாக தன்னை முன்நிறுத்திக் கொண்ட தாத்தா கருணாநிதிக்கு மூன்று மனைவிகள். பகுத்தறிவு தந்தையான பெரியாருக்கோ இரண்டு மனைவிகள்.

இந்தக் கலாச்சாரத்தைப் பற்றிய கவலைகள் எதுவுமின்றி ஒரு சின்ன நகைச்சுவைக் கதை. நித்தியானந்தரை குமுதம் அறிமுகப்படுத்தியது, ஆனந்த விகடனில் வெளியான சுவாமி சுகபோனந்தாவின் “மனசே ரிலாக்ஸ் ப்ளிஸ்” என்ற தொடருக்கு பிறகு தான் என்று சொல்லுகின்றார்கள். அந்த மனசே ரிலாக்ஸ் ப்ளிஸ் புத்தகத்திலிருந்து,….

அவன் நடுத்தர வயதை சேர்ந்தவன். அவன் தலையில் பாதி வெள்ளை முடி. அவனுக்கு இரண்டு மனைவிகள். ஒருத்தி அவனை விட வயதில் மூர்த்தவள். மற்றொருவள் அவனைவிட சிறியவள்.

“இப்படி தலையில் வெள்ளை முடியோடு நீங்கள் என்னுடன் வந்தால் , என் தோழிகள் எல்லாம் என்னை கிண்டல் செய்வார்கள்..” என்று சொல்லி இளைய மனைவி அவன் தலையில் இருந்த வெள்ளை முடிகளையெல்லாம் ஒரு நாள் பிடுங்கிவிட்டாள்.

அடுத்த நாள் காலையில் அவனைப் பார்த்த மூத்த மனைவி திடுக்கிட்டுப் போனாள்.”இப்படி கருகருவென்ற தலைமுடியோடு இருக்கும் உங்களுடன் நான் ஜோடியாக வெளியே வந்தால், பார்ப்பவர்கள் என்னைத் தான் “பாட்டி” என்று பரிகாசம் செய்வார்கள். இதை நான் அனுமதிக்க மாட்டேன்!” என்று சொல்லிவிட்டு அவன் தலையில் இருந்த கருப்பு முடிகளையெல்லாம் பிடுங்கிவிட்டாள்.

ஆக மொத்தத்தில் அவன் இப்போது முழு மொட்டை.

என்ன சிரித்தீர்களா?…

கவிதை மூடநம்பிக்கைகள்

உரிமையாளன்

மண் குலைத்து
கரையான் உருவாக்கிய
புற்றை…
பாம்பு வந்து பிடுங்கிக்கொள்ள
எல்லோரும் பாம்பு புற்றென்றார்கள்.

ஐயன் ஒருவன்
அந்த பாம்பையும் விரட்டிவிட்டு
அம்மன் சிலையை வைத்துப் போனான்
எல்லோரும் சாமி புற்றென்றார்கள்.

கஸ்டப்பட்டு கட்டிய கரையானை மட்டும்
கண்டுகொள்ள ஆளில்லை!.

பிச்சைபுகினும்

பெரிய உடலோடு இருந்தாலும்
பிச்சையெடுக்கும் போது
கூசிப்போகிறது யானை!.

கல்யாண யோகம்

கழுதையாக பிறந்திருந்தால் கூட
கல்யாணம் செய்துவைத்திருபார் அப்பாவென
புலம்பிக் கொண்டிருக்கிறாள்
புரோகிதரின் முதல்பெண்
முதிர்கன்னியாக!

செத்தும் கொடுத்தவர்கள்

அல்பாயுசியில் போன அப்பாவினாலோ
அனுபவித்துப் போன தாத்தாவினாலோ
காக்கைக்கு கிடைத்துவிடுகிறது சோறு
ஒவ்வொரு அம்மாவாசையிலும்!

இந்த இடுகைக்கு தமிலிஸில் ஓட்டு போட இங்கு சொடுக்கவும்.

கரும்பலகை காதல் – கவிதை

சிலுவைக் குறி

கரும்பலகையில்
ஆசிரியர் எழுதிப்போன கூட்டல்குறி
மெல்ல மெல்ல வளர்ந்து
சிலுவைக் குறியாகிக் கொண்டிருந்தது
கணித வகுப்பிற்கு வந்த
உன்னை நினைத்து!

வெள்ளிக் கிழமை

நீ வருவாய் என்பதற்காக
அலங்காரம் செய்து அமர்ந்திருக்கிறாள்
அம்பாள்!.

பாவிகள்

எல்லா இடங்களிலும்
காதல் புனிதமானது! – ஆனால்
காதலர்கள் தான்
பாவிகளாக்கப்படுகின்றார்கள்!

விந்தை

நீ
கிள்ளும் போது மட்டும்
சிரிக்கின்றன பூக்கள்!

கோவில்

வெளியே நானும்
உள்ளே கடவுளும்
காத்திருக்கிறோம்
உன் வருகைக்காக!.