பேருந்துக்குள் மழை – சிறுகதை

Rain-Korea copy

“தம்பி.. தம்பி.. வலையப்பட்டி இறங்கனுமுன்னு பேசிக்கிட்டு வந்திங்க. இப்படி தூங்கிக்கிட்டு இருக்கிங்க” அருகில் இருக்கும் புண்ணியவான் தூக்கத்தினைக் கலைத்தார்.

“வலையப்பட்டி வந்துடுச்சுங்களா” மிரட்சியுடன் கேட்டேன்.

“இல்லைப்பா. இனிமேதான் வரப்போகுது.”

“அப்பாடா” உண்மையிலேயே அவர் புண்ணியவான்தான். அவர் எழுப்ப வில்லையென்றால் வலையப்பட்டியைத் தாண்டி பேருந்து செல்லும் போது, எதற்சையாக என்னைக் காணும் நடத்துனர். கண்டபடி வசைபாடி ஏதேனும் ஒரு நிறுத்ததில் தள்ளிவிட்டு போயிருப்பார். அதன் பின்பு அங்கிலிருந்து மீண்டும் வலையப்பட்டிக்கு வந்திருக்க வேண்டும். ம்.. அது நடவாமல் போனது மகிழ்ச்சி. நான் எழுந்து மேலே வைத்திருந்த ஒரு சின்ன சோல்டர் பேக்கையும், அதற்குப் பின் ஒளித்துவைத்த லேப்டாப் பையையும் எடுத்துக் கொண்டேன்.

மணியைப் பார்த்தேன். அதிகாலை மூன்று. அருகில் என்னுடன் இறங்க ஒருவர் ஆயத்தமாக இருந்தார். ஓய்வு பெற்ற காவலதிகாரியா, இல்லை ஏதேனும் கிராமத்து பஞ்சாயத்து தலைவரா தெரியவில்லை. இறுகிய முகத்தில் தடித்த முறுக்கிய மீசை.. நான் முகத்தை திருப்பி சாலையில் கவனத்தினை வைத்தேன்.

“வலையப்பட்டியெல்லாம் இறங்கு” நடத்துனரின் குரல் மட்டும் கேட்டது. படபடவென இறங்கி சாலையைக் கடந்து பேருந்து நிறுத்ததில் நின்றுகொண்டேன். இனி நான்கு முப்பது வரை காத்திருக்க வேண்டும். அப்போதுதான் என்னுடைய ஊருக்கு செல்ல பேருந்து வரும். அதுவும் அதிஸ்டமிருந்தால். சென்ற முறை வந்தபோது ஐந்து இருபத்துக்குதான் வந்தது.

ஐந்து நிமிடங்களுக்கு பத்து பதினைந்து பேருந்துகள் வந்துபோகும் நகரங்களிலிருந்து கிராமத்திற்கு வந்தால், காத்திருப்பின் கடினம் புரிந்து போகும். திருச்சியிலிருந்து சேலத்திற்கோ, நாமக்கல்லிற்கு செல்லும் இரவுப் பேருந்தினைப் பிடித்து இந்த ஊர் வரை வந்துவிடலாம். அதன்பின்பு இங்கிருந்து காட்டுப்புத்தூருக்கு உள்ளே செல்ல தனிப் பேருந்து வரும். அதிலும் எங்கள் ஊர் இந்த சாலையின் உள்ளே இருக்கிறது. அதற்கு மூன்று நான்கு பேருந்துக்கு ஒன்றுதான் எங்களூருக்கு செல்லும். அப்படி இப்படியென ஒரு அரைமணி நேரத்தினைக் கழித்திருந்தேன். சாலைக்கு அந்தப் பக்கத்திலிருக்கும் டீகடைக்கு சென்றாலாவது நேரத்தினைக் கழிக்கலாம் என தோன்றியது. ம்.. அதுதான் சரியான முடிவென பைகளைத் தூக்கிக் கொண்டு சென்றேன். ஒடிசலாய் ஒருவர் நின்று புகைத்துக் கொண்டிருந்தார். ஓரு பீடியே பீடி பிடிக்கிறதே என பார்த்திபன் போல கவிதை வந்தது.

அந்த மீசைக்காரர் பென்ச்சில் அமர்ந்து நாளிதலைப் பார்த்துக் கொண்டிருந்தார். விடியும் முன்பே பிரதானச் சாலைகளில் இருக்கும் டீகடைகளுக்கு செய்திதாள்கள் வந்துவிடுகின்றன. எங்களூருக்கு காலை ஏழு மணிக்கு கேகேபி பேருந்தில்தான் வரும். சில நேரங்களில் அந்தப் பேருந்தும் வராமல் போனால். மறுநாள்தான் கிடைக்கும். அவர் தீண்டாமல் வைத்திருந்த துணுக்கு செய்திதாளை எடுத்து அமர்ந்தேன்.

“சார் டீயா”

“ம்.. ராகிமால்ட் இருக்கா”

இல்லை சாரே. தீர்ந்துபோயிடுச்சு. டீ தாரேன்.

சரி. ஒரு டீ… ஆர்டர் தந்துவிட்டேன். அந்த செய்திதாளில் உள்ளூரில் நடந்த கடை திறப்பு, கட்சி கூட்டம் போன்றவற்றை எல்லாம் தவிர்த்து எந்த எந்த திரையரங்குகளில் என்ன படம் ஓடுகிறது என்பதே பல பக்கங்களுக்கு இருந்தது. அதை வைத்துக் கொண்டு இனி ஒப்பேற்ற முடியாது எனும் போது சரியாக டீ வந்தது.

“காட்டுப்புத்தூருக்கு போறீங்களா”

“இல்லைன்னா முன்னாடியே ஆலம்பட்டி”

“சரி சரி. நாலே முக்காலுக்கு வந்துடும்” இன்னும் கால் மணிநேரம் கூடுதலாக.. ம்.. விடியகாலை இருட்டில் காத்திருப்பது. அதற்குள் இரண்டு மூன்று சேலம் பேருந்துகள் கடந்து போயிருந்தன. திருச்சிக்கு ஒரே ஒரு பேருந்து போனது. அதிலிருந்து இறங்கியவர்களுக்காக இருசக்கர வாகனங்களில் உறவினர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள். வந்து இறங்கியதும் அவர்களின் உடமைகளோடு காணாமல் போனார்கள். நான் தான் வெகுநேரமாக பொழுதினை கடினமாக கழித்துக் கொண்டிருக்கிறேன்.

ஒரு வழியாக காட்டுப்புத்தூர் பேருந்து வந்தது. நான் வேகமாக ஓடி பேருந்து நிற்பதற்குள் நெருங்கிவிட்டேன். பேருந்திலிருந்து ஒரு இளம்பெண் கண்களில் தூக்த்துடன் வந்து இறங்கினார். அவரை வரவேற்க புதுக்கணவன் தயாராக இருந்தான். நான் ஏறிக்கொண்டு மீசைக்காரரைப் பார்த்தேன். அவர் மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்தார். பேருந்து புறப்பட்டது. வேகம் பிடிப்பதற்குள் மீசைக்காரர் ஏறிவிட்டார்.

என்னையும் சேர்த்து ஒரு பத்துபேர் இருப்போம். பாதி பேர் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இரு பெண்கள் தங்களோடு வந்த கிழவனோடு பேசிக்கொண்டிருந்தார்கள்.

“டிக்கெட்”

“ஆலம்பட்டி”

“ஆலம்பட்டியா. கேட்டுக்கிட்டு ஏறக்கூடாதுங்களா. ஆலம்பட்டி உள்ளுக்க போகாதுங்க. முன்னாடியே இறங்கிக்கோங்க”

“ஏங்க. இந்தபஸ் உள்ள வருங்களே”

“இப்ப லேட் ஆகிடுச்சு சார். இன்னும் காட்டுப்புத்தூருக்கு போயிட்டு வரனும். ஆலம்பட்டி உள்ளேயெல்லாம் போய் வரமுடியாதுங்க. சும்மாவே லேட் ஆகும். இப்ப ரோடு போடறேன்னு இருந்த ரோட்டை வேற சுரண்டி வைச்சுட்டானுங்க”

இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை. ஆலம்பட்டிற்கு நடைதான். “சரி கொடுங்க”.

சடசடவென சத்தம் எழுந்தது. என்னவென ஊகம் செய்வதற்குள் ஜன்னலிருந்தும், பேருந்தின் மேலிருந்தும் மழை துளிகள் தெறித்துவிழுந்தன. பேருந்தே பரபரப்பானது. ஜன்னலிருந்து பழைய தார்பாய் இழுவைகளை இழுத்து தள்ளினோம். நடத்துனர் படிக்கட்டிலிருந்த தார்பாயை இழுத்துவிட்டார். இருந்தும் பேருந்துக்குள் தண்ணீர் வருவது நிற்கவில்லை. எனக்கு இரண்டு இருக்கையின் முன்னால் மேலிருந்து நீர் தாரைதாரையா வழிந்துகொண்டிருந்தது. என்னுடைய இருக்கையிலிருந்து எழுந்து யாருமில்லாத பின் இருக்கைக்கு சென்று அமர்ந்தேன். சரியான பிணைப்பில்லாத வழிகளிடையேயும், மேல் கண்ணாடி உடைந்திருந்தன் வழியாகவும் பேருந்தே ஈரமாகியது. மெதுவாக துடைத்தெரியும் வைப்பரோடு ஓட்டுனர் போராடி ஓட்டிக்கொண்டிருந்தார். மழையின் தீவிரம் அதிமாகியதும். சாலையே தெரியவில்லை என நடத்துனரிடம் சொல்லி முன்னே அழைத்துக் கொண்டார்.

என்மேல் அடிக்கும் சாரல் எங்கிருந்து வருகிறது என தேடிக்கொண்டிருந்தேன். இந்தக் கலவரத்திலிருந்து என்னுடைய லேப்டாப்பினை காப்பாற்றியாக வேண்டும். கீழே மேலே என எங்கும் வைக்க முடியாது. கோழிக்குஞ்சுகளை காக்கும் தாய்க்கோழியைப் போல மார்போடு அணைத்துக் கொண்டிருந்தேன். சட்டென ஒரு துளி மேலே விழுந்தது. இது எங்கிருந்து என மேலேப் பார்த்தால் என்னுடைய இருக்கையின் மேலே ஒன்று இரண்டு மூன்று என எண்ணிக்கையில் நீர்த்திவலைகள் கைகோர்த்து பெரியதாகிக் கொண்டே போயின. ஒன்று விழுந்ததும், அந்த இடத்தில் சிறியதாக ஒன்று தோன்றியது. செய்வதறியாது மேலேயே பார்த்துக் கொண்டிருந்தேன்.

சடாரென இடியொன்று பனைமரத்தினை தாக்க அந்த வேகத்தில் பனை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அந்த அபரிவிதமான சத்தமும், அமானுஷ்ய வெளிச்சமும் எனக்குள் பயத்தினை உண்டுபண்ணியிருந்தன. ஓட்டுனர் இந்த பேய் மழையிலும் பேருந்தினை நிறுத்தாமல் ஓடிக்கொண்டிருந்தார். பேருந்தின் மேற்கூறையின் மீது மழைத்துளிகள் விழும் சத்தமும், ஜன்னல் தார்பாய்களை கிழிக்கும் காற்றின் சத்தமும் அதிகரித்திருந்தன. மீசைக்காரர் என்ன செய்கிறார் என பார்த்தேன். பேருந்தின் நடைப்பாதையில் குடையொன்று பிடித்துக் கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். இதென்ன பேருந்துக்குள் மழையா. பேருந்துக்குள் குடையா. எனக்குள் இருந்த பார்த்தீபன் விழித்துக் கொண்டான். தலையில் மழைதேவதையின் ஆசிர்வாத அட்சதைகள் விழுந்தன.

முன்னோர்களைத் தேடி ஒரு பயணம் – 4

பயணத்தின் இறுதி நாள். சிறுவயது முதல் கேட்டு வளர்ந்த பொன்னரையும் சங்கரையும் தேடி பயணப்பட்டோம். அண்ணன்மார் கதையின் ஆரம்பம் மதுக்கரையில் இருந்து ஆரமிக்கிறது. அந்த ஊர் எங்கள் ஊரின் அருகில் இருக்கிறது என்பது தகவல். கலைஞர் எழுதிய காவியத்தில் சீத்தப்பட்டி என்ற ஊர் வருவதாகவும், அதுவும் எங்கள் ஊருக்கு அருகில் இருப்பதையும் என் சிற்றன்னை குறிப்பிட்டார். கதையை அறியாமல் இடத்தின் மகிமையை அறிய இயலாது அதனால், மூன்று தலைமுறை கதையை எளிமையாக இங்கு சொடுக்கி படித்துவிட்டு வாருங்கள்.

என்ன கதை தெரிந்துவிட்டதா?. இனி பயணத்தினை தொடர்வோம். கரூர் நகரிலிருந்து வீரப்பூர் செல்ல அரைமணி நேரம் ஆனது. முதலில் பெரியகாண்டியம்மன் கோவிலுக்கு சென்றோம். இந்த அம்மன் தான் தங்கை அருக்காணிக்கு ஓமதீர்த்தம் தந்ததாக சொல்கின்றார்கள். கோவிலின் முன் திருவிழாக் கடைகள் நிரந்திரமாக இருக்கின்றன. அதைவிட பிச்சைக்காரர்களும் இருக்கின்றார்கள். குலதெய்வக்கோவில்களில் முதன் முதலாக பிச்சைக்காரர்களை அன்றுதான் பார்த்தேன்.

நாள்தோறும் வருகின்ற கூட்டத்திடம் கொஞ்சம் பணம் கிடைத்தாலே போதும் என்று நினைக்கின்றார்கள். இவர்களாவது தேவலாம் என்றிருந்தது, உள்ளே பூசாரிகள் அடிக்கும் கொள்ளை. தீபாராதனை காட்டுவார் ஒருவர், அர்ச்சனை செய்வார் ஒருவர், சந்தனப் பொட்டு வைக்கிறார் ஒருவர். ஆனால் எல்லோரும் காசு காசு என பிய்த்து எடுக்கின்றார்கள். கொஞ்சம் ஏமாந்தால் மொட்டை அடித்துவிடுவார்கள். கோவிலை சுற்றி வருகையில் கூட இரண்டு மூன்றுபேர் நிற்கின்றார்கள். தீர்த்தம் தெளிப்பதற்கு கூட தனியாக வசூல். ஆச்சிரியம் என்னவென்றால் பூசாரிகளெல்லாம் தங்கள் பணத்தினை தனித்தனியாக கேட்டு வாங்கிக்கொள்ள, பிச்சைக்காரர்கள் ஒற்றுமையாக ஒருவரிடம் கொடுத்துவிட்டு போங்கள் நாங்கள் பிரித்துக்கொள்கிறோம் என்றார்கள்.

அடுத்து சங்கரை பொன்னர் அடைத்துவைத்தாக சொல்லப்படுகின்ற இடத்திற்கு சென்றோம். அங்கே கன்னிமார்களும், பொன்னர், சங்கர், அருக்காணிக்கும் சிலை வைத்திருக்கின்றார்கள். ஒரு திருவிழா கூட்டமே அங்கிருந்தது. நாங்கள் செல்லும் போது, ஒரு பணக்காரப் குடும்பம் சமையல் செய்து கொண்டிருந்தது. அவர்களின் அருகே இருந்த சுமோவில் தி.மு.க பிரமுகரின் பெயர் கருப்பு சிவப்பில் மின்னிக்கொண்டிருந்தது. பூசாரிகளிடம் கதைகளைக் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டேன். ஆச்சரியமாக ஒத்துக்கொண்டார்கள். அந்த இடத்திற்கு அருகே மகாமுனியின் சிலை இருக்கிறது. மிகவும் சக்தி வாய்ந்த காவல்தெய்வமாக அதை கொண்டாடுகின்றார்கள்.

அதன்பிறகு காலம்காலமாக மர்மமாகவே இருக்கும் படுகளம் பகுதிக்குச் சென்றோம். பெரிய மைதானம் போல இருந்தது படுகளம். சுற்றிலும் மதில் சுவர் எழுப்பியிருக்கின்றார்கள். அதற்குள் பொன்னர், சங்கர் தற்கொலை செய்து கொள்வது, வீரபத்திரன் முறசு கொட்டுவது என பல சிலைகள் சிமென்டால் செய்யப்பட்டிருக்கின்றன. மைதானத்தின் ஒரு பகுதியில் கோவில் கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. அங்கு புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டும், மறுத்துவிட்டார்கள். அதற்காக விட்டுவிட இயலுமா. பொன்னரும் சங்கரும் மனைவிகளுடன் இருந்ததை படம்பிடித்து கொண்டேன்.

இந்னும் இரண்டு இடங்கள் மீதம் இருப்பதாக சொன்னார்கள். ஒன்று போரில் சிந்தப்பட்ட ரத்தம் கற்களாக இருக்கும் பகுதி, மற்றொன்று பெரியக்கா தபசு என்கிற இடம். படுகளம் பகுதிக்கு அருகிலேயே போர் நடந்ததாக சொல்லப்படுகின்ற இடமும் இருக்கிறது. அந்தப்பகுதிக்கு சம்மந்தம் இல்லாத கற்கள் அங்கே கொட்டப்பட்டிருக்கின்றன. தூரத்திலிருந்து பார்க்கையில் கரிய நிற கற்களின் பரவலுக்கு மேல், ஒரு குடிசை தெரிகிறது. அதற்குள் வழக்கம் போல, பொன்னர் சங்கரின் சிலைகள். அங்கிருக்கும் கற்களை ரத்தம் என்று நம்ப முடியவில்லை. மற்ற கற்களைக் காட்டிலும் அந்தக் கற்கள் எடை குறைவாக இருந்தன. அங்கிருக்கும் பூசாரி ஒரு பெரிய கல்லை வைத்துக்கொண்டு இதுதான் உண்மையான ரத்தக் கல் என்று வருவோரின் தலையில் வைத்து, காசு வாங்கிக் கொண்டிருந்தார். அந்தக்கல்லின் எடை மிகவும் குறைவாக இருந்தது. அவ்வளவு ரத்தம் வந்திருந்தால் நிச்சயம் மனிதன் பிழைத்திருக்கவே வாய்ப்பில்லை. ஆனால் மனிதனின் நம்பிக்கைகள் அதையெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை எந்பது வேறுவிசயம். இவைகளையெல்லாம் பார்ப்பதற்குள்ளவே மாலை நேரம் நெருங்கி விட்டது. அடுத்த முறை வந்தால், பெரியக்கா தபசை பார்க்கலாம் என்று சொல்லிவிட்டார்கள்.

என்னுடைய பள்ளித் தோழியின் குலதெய்வம் பொன்னர் சங்கர். அவள் டியூசன் நேரத்தில் அந்தக் கதையை கூறுவாள். நமக்குதான் கதைகள் என்றாலே கொள்ளைப் பிரியமாயிற்றே. பட்ப்பை விட்டுவிட்டு நாள்தோரும் கதைகள் கேட்டுக்கொண்டே பொழுது போனது. வீரப்பூரின் ஒவ்வொறு இடங்களுக்கு செல்லுகையிலும் அவள் சொன்ன கதைகள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தன. இன்று அவள் எங்கிருக்கிறாள் என தெரியாது. ஆனால் வருடத்திற்கு ஒரு முறை அவள் குடும்பத்துடன் வந்துபோகும் இடத்திற்கு நானும் வந்திருக்கிறேன் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. பெரியசாமி கோவிலுக்கு போகும் போதெல்லாம் என்னுடைய பாட்டாவின் பெயர் கல்வெட்டில் பதியப்பட்டிருப்பதை பெருமையாக பார்த்துவிட்டு வருவேன். என்னுடைய எத்தனை தலைமுறைகள் அங்கே கால்தடம் பதித்திருக்கின்றன என எண்ணும் போதே, ஒரு இனம் புரியாத சினேகம் வருகிறது. காலம் காலமாக இந்தக் கதைகள் நம்மிடைய ஒரு பிணைப்பினை ஏற்படுத்தி தந்திருக்கின்றன. அதன் சாட்சியாக வீரப்பூர் போன்ற ஊர்கள் இன்றும் இருக்கின்றன. அவற்றின் பெருமைகளை உணர்ந்து நாம் அடுத்த தலைமுறைக்கும் இந்த வாய்ப்பை தருவதே மிகப்பெரிய விஷயம் என்று நினைக்கிறேன்.

முன்னோர்களைத் தேடி புறப்பட்ட எங்கள் முதல் பயணம் இனிதே நிறைவுற்றது. ஆனால் இது முடிவல்ல, ஒரு மாபெரும் தொடக்கம் என்றே தோன்றுகிறது.

முன்னோர்களைத் தேடி ஒரு பயணம் – 3

மூன்றாம் நாள். கருவூர் என்ற அழைக்கப்பட்ட கரூர் மாநாகரிலிருந்து திண்டுக்கல் நகரை நோக்கி செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது. மணவாடி. இந்த இடத்தினை தொட்டியச்சி, முத்தாலம்மன் என்ற இரண்டு தெய்வப் பெண்களின் பாதம் பட்ட இடமாக சொல்கிறார்கள். ஒரு இடத்தில் ஒரு மூதாதையரின் கதை கிடைப்பதே அபூர்வம் என்கின்றபோது, ஒரு இடத்தில் இரண்டு மூதாதையரின் கதை கிடைத்தது அற்புதம் என்றே சொல்ல வேண்டும்.

தொட்டியச்சி கிராமத்திற்கு செல்லும் சாலையில் குடிகொண்டிருக்கின்றாள். ஒரு கல்லினை வைத்து இதுதான் தொட்டியச்சி என்று வணங்குகிறார்கள் ஊர்மக்கள். நவக்கன்னிகள், மாசி பெரியண்ண சுவாமி, கருப்பு என காவல் தெய்வங்களும் இருக்கின்றன. கற்கலால் அமைக்கப்பட்ட கோவிலோ, குடிசையோ அல்லாமல் திறந்தவேளியில் யாருக்கும் கட்டுப்படாதவளாக இருக்கிறாள். அவளுக்காக கோவில் அமைக்க எத்தனை முறை கோரிக்கை வைத்தாலும், மறுத்துவிடுகிறாள்.

இவளுக்கு அப்படியே நேர்எதிரானவள் முத்தாலம்மன். இவளுக்கு ஏக இடங்களில் கோவில்கள் இருக்கின்றன. கிராமத்திற்கு நேர் எதிரே சாலை கடந்து சென்றால், முத்தாலம்மனை தரிசிக்கலாம். அதிலும் இங்குள்ள கோவில் அழகு நிறைந்தது. அங்கிருக்கும் சிலையைப் பற்றியே தனி இடுகை இடலாம். அத்தனை கதைகள் சொல்கின்றார்கள். நான் தரிசனம் செய்துவி்ட்டு, கதைகள் கேட்டேன். அந்தசிலை மண் சிலை என்ற போது என்னால் நம்பவே முடியவில்லை.

அதை விடவும் நம்ப முடியாத விசயம். சின்னஞ்சிறு கோவிலில் இருக்கும் அவளுக்கு இருக்கும் சொத்துகள். கிராமத்தின் பெரும்பாலான நிலங்கள் அவளுக்கு சொந்தமானவை. இப்போது பராமரிக்க ஆளில்லாமல் எல்லாம் கைவிட்டு சென்று கொண்டிருக்கிறது. அதற்காக வருமானம் இல்லையென சொல்லிவிடமுடியாது. சமீபத்தில் கோவில் திருவிழாவின் போது ஒன்றறை லட்சம் பணம் வசூலாகி இருக்கிறதாம். அதுவும் முறை கட்டளை என யாரிடமும் காசே வசூலிக்கவில்லை. எல்லாம் அவர்களாகவே கொடுத்த காசு என்றார் கோவில் திருவிழாவை முன்நின்று நடத்தி வைத்த பெரியவர்.

அந்தக் கிராமத்தினைச் சுற்றி தொட்டியம் நாயக்கர் மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். வேட்டையாடும் தொழில் செய்திள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றார்கள். அவர்கள் வேட்டைக்காக வைத்த பொறிகளைக் கூட சிலர் பார்த்திருக்கின்றார்கள். கடந்த ஐம்பது வருடங்களில் அவை முற்றிலுமாக அழிந்துவிட்டன. இப்போது எந்த தடயமும் கிடைக்கவில்லை. தொட்டியச்சி கதையும், முத்தாலம்மன் கதையும் நாயக்கர் மற்றும் வெள்ளாலர் இனமக்களோடு தொடர்புடையது.

தொட்டியச்சி கோவில்வீடு

தொட்டியச்சி நாயக்கர் இனத்தினை சார்ந்தவள். மிகுந்த திறமைசாலி. அவளுடன் சேர்ந்து எல்லோரும் வேட்டைக்கு சென்ற போது, அவள் மட்டும் வழி தவறிவிட்டாள். ஓரிரவு வெளியில் தங்கிய பெண்ணை ஏற்றுக்கொள்ளமாட்டார்களலாம் நாயக்கர் மக்கள். எனவே தொட்டியச்சி தீக்கிரையாகிப் போய்விட்டாள். அதை அறிந்த சில சோழிய வெள்ளாலர் இன பெரியவர்கள் இவளையே குலதெய்வமாக வணங்குவதாக முடிவெடுத்திருக்கின்றனர்.

இப்போதுகூட திருவிழாவிற்கு நாயக்கர் இனத்திலிருந்து ஒரு ஜோடி வந்து விருந்தினராக கலந்து கொள்ளும் வழக்கம் இருக்கிறது. அவர்கள் கைகளால் நீர் எடுத்துவந்து அபிசேகம் செய்து மக்களுக்கு வழங்குகிறார்கள். திருவிழாவிற்கு வர மறுத்துவி்ட்டாள் நாயக்கர் இன மக்களை தொட்டியச்சி தண்டித்துவிடுவாள் என்ற பயம் எல்லோர்க்கும் இருக்கிறது. வேறு சாதியை சார்ந்த பெண் என்றாலும் இங்கு வாழும் சோழிய வெள்ளாலர் இன மக்கள் அவளை குலதெய்வமாக போற்றி வழிபடுகின்றனர்.

பயணம் தொடரும்…

முன்னோர்களைத் தேடி ஒரு பயணம் – 2

பயணத்தின் இரண்டாம் நாள். ஒருவந்தூர் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு முதலில் சென்றோம். ஆடுகளை பலி கொடுக்க பெரும் கூட்டம் நின்று கொண்டிருந்தது. கருவறையில் சாமிக்கு தீபம் காட்டகூட பூசாரிகள் இல்லை. ஆனால் திரும்பும் இடமெல்லாம் குடும்பத்துடன் நின்று கொண்டிருந்தார் பட்டவன்.

யார் இந்த பட்டவன் என்று தொன்றுகிறதா. இவர் உண்மையான மூதாதயரின் வடிவம். நன்கு வளர்ந்த மரம் திடீரென்று பட்டுபோனது என்பார்களே. அதே பொருளில் இறந்த மனிதனை பட்டவன் என்கிறார்கள்.

எத்தனையோ முறை செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சென்றிருக்கிறேன். தேர்திருவிழாவில் கடையில் விற்கும் மிட்டாய்களுக்காக ஏங்கியிருக்கிறேன்.ஆனால் அன்றுதான் கண்களில் பட்டார் பட்டவன். பட்டவனின் பெருமையை என்னுடைய அப்பாயி சொல்லிக் கொண்டு வர, நவலடியான் கோவில் வந்தது. நவலடி கருப்பு புகழ் பெற்றிருந்தாலும், மதுரைவீரனுக்கும் தனி சந்நதி உண்டு. அங்கிருக்கும் பூசாரி பூஜையின் போது சொல்வதை கேட்பதே இன்பமாக இருக்கும். ஏன் என்றால் அத்தனையும் தெளிவான தமிழ், நல்ல உச்சரிப்பு. அர்ச்சனையின் போது பால் பெருகுதலிருந்து ஆயுள் நீடிப்பு வரை அழகாக எடுத்து சொல்லுவார். தங்கள் இன மக்களின் முகவரியை பதிந்து வைத்திருக்கின்றார்கள் கோவில் நிர்வாகிகள். மூடியிறக்கும் இளம் குழந்தைகளுக்கு உடல் பாதிப்பு வரக்கூடாதென வெந்நீர் ஏற்பாடு செய்து தருகின்றாரகள். இந்த முறையை நான் இங்கு மட்டுமே பார்த்தேன்.

அடுத்து மோகனூரில் இருக்கும் மூன்று அண்ணன்மார்கள் கோவில். பேரைக்கேட்டதும், அண்ணன்களுக்காக கட்டப்பட்ட கோவில் என்று நினைத்தேன். ஆனால் அது தங்கைக்கு அண்ணன்கள் எழுப்பிய கோவில். சோழர்கள் காலத்தில் உடன்கட்டை ஏறிய தங்களுடைய தங்கைக்காக கோவில் எழுப்பியிருக்கின்றார்கள். வழக்கமான கோவில் அமைப்பு இல்லாமல் வெளித்தோற்றத்தில் மண்டபம் போல தோன்றினாலும், கருவறையில் வள்ளியம்மனுடன், நம்பியண்ணனும் காட்சிதருகிறார். அவர்களுடைய அண்ணன் குடிகள் 2160என 2001ம் ஆண்டு செதுக்கப்பட்ட கல்வெட்டு சொல்கிறது. 2010 நடந்து கொண்டிருக்கும் வேளையில் இன்னும் குடிகள் உயர்ந்திருக்க கூடும். இத்தனை குடிகளையும் ஒருங்கினைத்து பேணி வருவதை பார்க்கும் போது சிலிர்ப்பாக இருந்தது.

அந்த சிலிர்ப்பு அடங்குவதற்குள் திரௌபதி அம்மன் கோவிலை கடந்திருந்தோம். காப்பியத்தலைவி கண்ணகியை கடவுளாக வழிபாடுவது போலவே சில இடங்களில் திரௌபதிக்கும் கோவில்கள் உண்டு. அடுத்ததாக சென்றது ராசாராசாயி கோவில்.

ராஜா என்பதை ராசா என்றே உச்சரித்து பழக்கப்பட்ட மக்கள் ராணியை ராசாயி என்றே அழைக்கின்றனர். படையெடுப்புகளின் போது கன்னி வேட்டை நடத்துபவர்களோடு கோவிலின் புராணக் கதை சம்மந்தம் கொண்டிருக்கிறது. அங்கு ஆச்சரியம் கொள்ள வைத்த விசயம் கருவறையில் ராசா, ராசாயோடு முருகன் இருப்பதுதான். அந்த ராசா முருகனை வழிபட்டுவந்ததாக பூசாரி சொன்னார். அதே சமயம் கருப்பையும் வழிபட்டு வந்ததால் அதற்கென தனி சந்நதியும் அமைக்கப்பட்டிருந்தது.

கருப்புசாமி சந்நதிக்கு எதிரே பலியாடுகள் நின்றுகொண்டிருந்தன. கிடா வெட்ட வந்த ஒரு குடும்பம் (ஒரு ஊர் எனவே வைத்துக்கொள்ளாலாம் அவ்வளவு கூட்டம்) செய்வதறியாது நின்று கொண்டிருந்தது. காரணம் தலையில் ஒரு குடம் தண்ணீர் தெளித்தும் ஆடு அசரமல் நின்று கொண்டிருந்ததுதான். தெய்வக் குத்தம் என்று பயந்து சில பெண்கள் அழுதே விட்டார்கள். என்னுடைய அப்பா ஒரு யோசனை சொன்னார். ஐஸ் தண்ணீர் தெளித்தால் தலையை ஆட்டுமென. அப்படியே செய்தார்கள். நல்ல வேளையாக ஆடு இசைந்தது. அவர்கள் நெகிழ்ச்சியோடு நன்றி கூற, நாங்களும் மகிழ்ச்சியோடு புறப்பட்டோம். இரண்டாவது நாள் பயணம் இனிதே முடுவுற்றது.

பெரும்பாலான சிறுதெய்வ கோவில்களில் முதலில் தடைவிதிக்கப்படுவது இந்த பலிகளுக்குதான். இதன் அரசியல் மிக பயங்கரமானது. சுருக்கமாக சொன்னால் இது பாரம்பரிய மக்களை விரட்டிவிட்டு பாப்பான்களை கோவிலுக்குள் கொண்டும் செல்லும் வழி. அதுசரி தொட்டியச்சி, முத்தாலம்மன் பற்றி சொல்கிறேன் என்றேனே,… அது அடுத்த பகுதியில். ஆனால் சாதிகளின் வீச்சம் இல்லாமல் அந்த தெய்வங்களின் கதையை சொல்ல முடியாது. அதனால் சாதியை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

பயணம் தொடரும்.

முன்னோர்களைத் தேடி ஒரு பயணம் – 1

பயணங்கள் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஆன்மீகச் சுற்றுலாவாக குடும்பத்துடன் செல்லும் போது, கோவில்களின் வரலாறுகளையும், சிற்பக் கலையும் வெகுவாக ரசிப்போம். ஆனால் இந்த முறை கடவுள்களைத் தேடி பயணப்படவில்லை. நம் முன்னோர்களைத் தேடி பயணப் பட்டோம்.

துறையூயில் இருக்கும் மாசி பெரியசாமியை தரிசனம் செய்வது மட்டுமே என் பெற்றோர்களால் திட்டமிடப்பட்ட ஒன்று. மற்றவைகளை என்னிடமே விட்டுவிட்டார்கள். பிச்சாயி கதை நடந்த இடம் துறையூரி்ல் இருக்கும் பெருமாள் மலையின் அடிவாரம் என்று வலைப்பூவில் படித்திருந்ததை சொன்னேன். சரி முதலில் அங்கு செல்லாம் என்று சொன்னார்கள். அடுத்த சிலமணி நேரங்களில் பிச்சாயி,வீரய்யா கோவிலில் இருந்தோம்.

பிச்சாயி கோவில்

பிச்சாயி கதையும், கோவில் அமைப்பு பற்றியும் தனித்தனி இடுகையில் சொல்கிறேன். முக்கியமாக சொல்லப்பட வேண்டியது அழகு நிறைந்த அந்த குதிரைகள். அடுத்ததாக பெருமாள் மலையில் பெருமாளின் தரிசனம். தென் திருப்பதி என அழைக்கப்படுகிறதாம் பெருமாள் மலை. பிரகாரச் சிற்பங்கள் அழகாக இருந்தன. அதைவிடவும் சொல்லப்பட வேண்டியது. அங்கே இருந்த கருப்புசாமி சந்நதியைதான். பெருமால் கோவிலில் விபூதி பிரசாதத்துடன் ஒரு அடி குதிரையில் ஒய்யாரமாக இருக்கிறார். எங்கள் எல்லோருக்கும் வியப்பாக இருந்தது.

வியப்பு தீருவதற்குள் வைரசெட்டி பாளையத்திலுள்ள காமாட்சியம்மன் கோவிலில் இருந்தோம். அங்கே இருக்கும் மாசி பெரியண்ணன்தான் எங்கள் குலதெய்வம். சிலர் அவரை சிவன் ரூபம் என்கின்றார்கள். சிலர் பெருமாள் என்கின்றார்கள். சைவ வைணவ பிரட்சனையில் எங்கள் சாமியின் தலையில் நாமமும், பட்டையும் மாறி மாறி விழுந்து கொண்டிருப்பது ஒரு பெரும்கதை.

பட்டை அடித்துக் கொண்டு பெரியசாமி

பட்டை அடித்துக் கொண்டு பெரியசாமி

நாமம் போட்டுக் கொண்டு பெரியசாமி

நாமம் போட்டுக் கொண்டு பெரியசாமி

சாமியை புகைப்படம் எடுக்க முற்பட்ட போது “தம்பி மனுசனுங்கக் கூட விளையாடலாம், தெய்வத்தோட விளையாடாதே” என்று பயமுறுத்தினார் பூசாரி. “ஐயா, பெரியசாமி உன்னை எல்லா இடங்களுக்கும் கொண்டுப் போக அருள் செய். ” என்று வேண்டிக் கொண்டு புகைப்படம் எடுத்தேன். பூசாரிக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. “நீ, சொன்னா கேட்கமாட்டியா தம்பி!” என்று அதட்ட, “ங், சாமிக்கிட்ட சொல்லிட்டுதான் படம் எடுக்கறேன். நீங்க செத்த சும்மாயிருங்க” என்று நான் வாதம் செய்ய வேண்டியதாயிற்று.

அருகிலிருக்கும் கல்லாத்துக் கோம்பைக்கு சென்றோம். அது பெரியசாமிக்கென தனியாக கோவில் இருக்கும் இடம். அங்கு பெரியசாமிக்கு சைவ வைணவ பிரட்சனையோடு சாதிப் பிரட்சனையும் உண்டு. ஒருபுறம் பழைய கோவில், அங்கு பூசாரி சோழிய வெள்ளாளர். இன்னொரு புறம் புதிய கோவில் அங்கு முத்தரையர் பூசாரி. ஒரு கோவிலுக்கு வரும் பக்தர்கள் மறுகோவிலுக்கு செல்வதில்லை. கடவுளுக்கே இந்த நிலையா என்று நொந்து கொண்டேன்.

நாமக்கல் அருகிலிருக்கும் எட்டுகை அம்மன் கோவிலுக்கு செல்லாம் என்றேன். எட்டுகை அம்மனை கொல்லிமலையில் தரிசித்திருக்கிறேன். ஆனால் கீரம்பூரில் அத்தனை பெரிய கோவிலில் குடிகொண்டிருப்பாள் என கனவிலும் நினைக்கவில்லை. ஏக்கர் கணக்கில் தங்கள் குலதெய்வத்திற்கு கோவிலை அமைத்திருக்கின்றார்கள் கொங்கு வெள்ளாளர் சமூகத்தினர்.

எட்டுகை அம்மன் கோவில்

குலதெய்வங்களுக்காக அமைக்கப்பட்ட பெரிய கோவில் இதுவாகத்தான் இருக்குமென நினைத்தேன். செம்பூதத்தான் பண்ணை குலமக்கள் கோவிலில் ஓர் அறிவிப்பு பலகையை வைத்திருந்தார்கள். தங்களுடைய குழந்தைகளின் கல்விக்கு உதவும் நோக்கத்தில் அவர்களின் செயல்பாடு பிரம்மிக்க வைத்தது. என்னுடைய அப்பா அதனை பாராட்டிக் கொண்டே இருந்தார். இதனைப் பற்றியும் தனி இடுகையில்.

ஊருக்கு செல்லும் வழியில் வலையப்பட்டிக்கு சென்றோம். அங்குள்ள குன்னிமரத்தான் கோவிலுடன் எங்களுடைய முதல்நாள் பயணம் முடிவடைந்தது.

சாதிகளைக் கொண்டு கடவுளையே இப்படி பந்தாடுகின்றவர்கள் இருக்கும் அதே வேளையில் சாதிகளை இணைக்கும் தொட்டியச்சி, முத்தலாம்மன் பற்றி வரும் இடுகையில்,…

பயணம் தொடரும்,..