இக்குவாகுவின் வலி – சிறுகதை

dscn6201 copy

1990 களில் கட்டப்பட்ட கட்டிடம். பாறைக்கற்களை உடைத்து ஒட்ட வைத்து புதுடிசைன் என்று பரவலாக அறியப்பட்ட காலத்தில் கட்டப்பட்டது. நான்கு புறமும் இரண்டு ஆட்கள் நடந்து செல்வதற்கு போதுமான இடைவெளியும், கிழக்குப்பக்கத்தில் தோட்டம் போடுவதற்கென விடப்பட்ட ஒரு சென்ட் நிலத்தினையும் சேர்த்து ஏழு சென்ட் நிலத்தினை ஆக்கிரமித்துள்ள கட்டிடம். சுற்றுபுறத்தில் கல்லுமச்சுவீடு என்று அறியப்பட்ட அந்த வீட்டின் முன்புதான் நிற்கிறேன். கருப்பு நிற கடப்பக்கல்லில் “சிவபதி இல்லம்” என பொறிக்கப்பட்டிருந்தது.

அழைப்பு மணியை அடிக்க வாசற்கதவிற்குள் கையை விட்டு துலாவி அடிக்க வேண்டும். சிறுபிள்ளைகள் அடிக்கடி அழைப்புமணியை அடித்துவிட்டு ஓடிவிடுவதால் இந்த தெருவில் யார் வீட்டிலும் அழைப்புமணியை வெளியே வைப்பதில்லை. என்னுடைய வீட்டிலும் இப்படிதான். நான் இந்த வீட்டின் பக்கத்தில் குடிவந்து ஐந்து மாதங்கள் ஆகின்றன. வந்த புதியதில் ஏற்பட்ட தவறான அபிப்ராயத்தால் இன்றுவரை இந்த வீட்டின் மனிதர்களோடு சகஜநிலை ஏற்படவில்லை.

சிவபதி சார்,… சிவபதி… சார்…

பதிலில்லை. ஆனால் வீட்டிற்குள் சலசலப்புகள் கேட்கின்றன. அவர்களுக்கு நான் வந்திருப்பது என் குரல் மூலம் தெரிந்திருக்கும். குறைந்தபட்சம் வேறு நபர்கள் கூப்பிட்டிருந்தால் இந்நேரம் வந்து வரவேற்கின்ற மனிதர்கள். என்னைமட்டும் மிகக் கடுமையாக வெறுக்கின்றார்கள். அழைப்பு மணியையும் சடங்கிற்காக அடித்தேன்.

பதிலில்லை.

எங்களது வீட்டு வாசலில் ஒய்யாரமாய் சாய்ந்தவாறு என் மனைவி என்னையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் சபாபதி வீட்டுவாசலில் தினமும் அழைப்பதும், அவள் என்னை வழுக்கட்டாயமாய் இங்கே நிற்கவிடாமல் இழுத்துச் செல்வதும் இன்றைக்கு நடக்கவில்லை. அவள் களைத்துப் போய்விட்டாள். ஆனால் நான் அப்படியல்ல. இன்று ஒரு தீர்மானத்துடன் வந்திருந்தேன். அது எப்படியாவது வீட்டிற்குள் நுழைந்து அவளைப் பார்த்துவிடுவது.

மீண்டும் அழைத்தேன். அழைப்புமணியை அடித்தேன்.

பதிலில்லை.

ஒரு எம்பு எம்பி வாசல் கதவின் பின்பக்கம் இருக்கும் கொக்கியை விடுவித்தேன். கருப்பும் தங்கநிறமும் பூசப்பட்ட கதவினை திறந்து நுழைந்தேன். என்னுடைய வருகை அவர்களுக்கு மேலும் கசப்பாக இருந்திருக்க வேண்டும். அதனால்தான் நான் உள்ளே வந்துவிட்டேன் என்பதை அறிந்தும் அவர்கள் வெளியேவரவில்லை. வராமல் போகட்டும். நான் அவரையோ, அவர் மனைவியையோ, அல்லது அவர் உருவமாகவே வந்துபிறந்திருக்கும் அவர் பிள்ளையையோ பார்க்க வரவில்லை. நான் வந்தது ரோசியைப் பார்க்க.

எங்கே அவள்.. வழக்கமாய் இருக்கும் இடத்தில் காணவில்லை. ஒருவேளை வீட்டின் தோட்டப்பகுதியில் இருக்கலாம். பத்துநாட்களாய் அவளைப் பார்க்க தவித்துக் கொண்டிருக்கிறேன். கிழக்குப்பகுதியிலிருக்கும் தோட்டத்தில் இரண்டு தென்னை மரங்களும், ஜாதிமல்லிகை கொடியும் இன்னும் சில காய்கறிகளும் பயிரிடப்பட்டிருந்தன.

ரோசி நடைபாதையில் ஒரு சாக்கின் மீது படுத்திருந்தாள். அவளுடைய தட்டில் வைக்கப்பட்டிருந்த பாலை எறும்புகள் உணவாக்கிக் கொண்டிருந்தன.   என்னுடைய வருகையை அவள் உணர்ந்திருக்க வேண்டும். வால் மெதுவாக ஆடியது. அவளருகில் சென்றேன். நாக்கினை பல்லிடுக்கில் கடித்து வலியை பொறுத்துக் கொண்டிருந்தாள். மெல்ல முனகல் சத்தம் மட்டும் கேட்டது.  வலது கண்ணுக்கும் காதுக்கும் இடையே எலும்பு முறிந்து அதன் பாதிப்பால் வீக்கமும், சீலும் ஏற்பட்டு, தற்போது ஒற்றைக் கண்ணை ரோசி இழந்துவிட்டாள்.

பக்கத்துவீட்டுக்கு குடிவந்ததும் முதலில் பழக்கமானவள் ரோசிதான். புசுபுசுவென தங்கநிறத்தில் இருந்தாள். பொமேரியன் நாட்டுநாய் கிராஸ் என்றார்கள். நெய்ரோட்டி, கோழி குழம்பு, முள்எடுத்த மீன் என எங்களுடைய சமையலில் அவளுக்கும் பங்குவைத்தோம். சிவபதி எப்போது கதவினைத் திறப்பார், எப்போது வெளியே ஓடலாம் என்றிருப்பாள். சாலையில் ஒரு ஓட்டம் ஓடிய பிறகே அவளை பிடித்து வீட்டிற்குள் அடைக்கமுடியும். எப்போதுமே துள்ளலாய் திரியும் அவள் ஒடுங்கிக் கிடப்பதைக் கண்டு… துக்கம் பீரிட்டது..

“ரோசி என்னை மன்னிச்சுடுமா… மன்னிச்சுடு..”

என்ன இருந்தாலும் நான் இப்படி உன்னை காயப்படுத்தியிருக்க கூடாது. சொந்தங்கள் அத்தனை பேரும் வந்து கூடியிருக்க விழா அன்னைக்கும் நீ வந்து வாசல்ல ஒன்னுக்கடிச்சுட்ட. அவங்க முன்னாடி என் வீட்டுக்கும் எனக்கும் நடந்த அசிங்கமா நான் நெனச்சுட்டேன். அவங்களோட கேலியான சிரிப்பால, கொஞ்சநேரம் மிருகமாயிட்டேன்.

கொஞ்சம் கூட யோசிக்காம அங்கிலிருந்த கட்டையை எடுத்து அடிச்சுட்டேன். ஆனா அந்த அடி இப்படி உன்னை நரக வேதனையில தள்ளுமுன்னு நான்  நினைக்கல. நீ வலியில துடிக்கும் போது, என் மனசு பதருது. உன்கிட்ட மன்னிப்பு கேட்கனுமுன்னு நாய்மாதிரி உன்வீட்டு வாசல பத்துநாள் நின்னுக்கட்டு இருக்கேன். உன்னை அடிச்சதுக்கப்புறம்தான் புத்திவந்துச்சு. ஆனா நான் பாவி. உன்னை முடமாக்கிட்டு நான் நடந்துக்கிட்டு இருக்கேன். ஐஞ்சறிவு படைச்ச உன்கிட்ட ஆறறிவ எதிர்ப்பார்த்து நான் அறிவை இழந்துட்டேன். உன்னோட இயல்ப உணராம, நான் என் இயல்ப இழந்துட்டேன். நீ படர வேதனையை நானும் தினமும் பட்டுக்கிட்டு இருக்கேன்டீ.

Amores Perros (அமோறேஸ் பெர்ரோஸ்) – ஈஸ்வரப் பார்வை

வெறுமையான இரவுநேரமொன்றில் பொழுதினை வண்ணமயமாக்கிட உலகத்திரைப்படங்களை தேடினேன். உள்ளூர் திரைப்படங்களையே விமர்சனத்தை படித்தப்பின்புதான் அனுக இயலும் நிலையில், உலகத்திரைப்படத்தை அனுக அர்ஜூன தவம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் திரைப்படங்களையே பார்க்க வேண்டாம் எனும் அளவிற்கு நம் பொறுமையை சோதிக்கும் படங்களிடம் சிக்கிக்கொள்வோம். என்னுடைய அலுவலகத்தில் உள்ள நண்பர் ஹிட்ச்காக், பாபெல் , ஜாக் நிக்கல்சன், 12 ஆங்கிரி மேன் என்பதைப் போன்று நிறைய திரைமொழி வார்த்தைகளை குறிப்பிடுவார். ஆனால் எனக்கோ பேருந்தில் சக பயனியாக அமர்ந்த இசுலாமிய குடும்பம் பேசும் அரபோ, உருதோ போல புரியாமலேயே இருக்கும். அதனால் அவரிடமிருந்து நமக்கு பயனுள்ள தகவல் கிடைக்காது.

ஆனால் திரைமொழி பேசும் தமிழ் வலைப்பதிவர்களை நாடினேன். மாறுபட்ட வாழ்வியலை கொண்ட மனிதர்கள் ஒரு சம்பவத்தின் போது பிணைக்கப்படுதலை திரைக்கதையாக கட்டமைக்கும் யுத்தி அமோறேஸ் பெர்ரோஸ் படத்திலிருந்தே உதயமானதாக கூறினார்கள். ஆயுத எழுத்து, வேதமென தமிழில் பார்த்திருந்தாலும் உலகத்திரைப்படத்தில் காண ஓடினேன்.

amores-perros

அமோறேஸ் பெர்ரோஸ் –

அமோறேஸ் பெர்ரோஸ் கதை குவில்லர்மொ அர்ரியாகா என்ற மெக்சிக்கன் திரைமொழி எழுத்தாளர் மற்றும் இயக்குனர் என்று பல்துறை வித்தகருடையது. இவருடன் இணைந்த இயக்குனர் இன்னாரித்தோ 36 முறை மாற்றம் செய்ததாக நிலாமுகிலன் வலைப்பூவில் படித்தேன். இப்படத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட நபர்களைப் பற்றிய கதைகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், ஆக்டாவியோ என்ற நாய் சண்டையிடும் இளைஞன், வலேரியா என்ற விளம்பர மாடல் பெண், எல் சைவோ என்ற பணத்திற்காக கொலை செய்யும் முதியவன் என மூன்று நபர்களைச் சுற்றி நடப்பவையாக வடிவமைத்திருக்கின்றார்கள்.

ஆனால் நான் படத்தினை பார்க்கையில் ராட்வில்லர்(rottweiler) வகையைச் சார்ந்த கோஃபி என்ற நாயை நடுநாயகமாக வைத்தே திரைக்கதை செல்வதை உணர்ந்தேன். இதுவரை இந்த கருத்தோட்டத்துடன் எவரும் பதிவு செய்யவில்லை என்பதால் அமோறேஸ் பெர்ரோஸின் மாறுபட்ட பார்வையை சகோதரனில் பதிவு செய்கிறேன். முதலில் ராட்வில்லர் நாயைப் பற்றி சில வரிகள். இது மீடியம் சைஸ் வகையானது. இந்தியாவின் சீதோசன நிலைக்கு ஏற்றது என்றாலும் சற்று மூர்க்கமானது. குடும்பத்தினரைத் தவிற பிறரை ஏற்றுக் கொள்ளவது கடினம். ஏற்கனவே நாய்களை வளர்த்தவர்களால் மட்டுமே எளிமையாக வளர்க்க முடியும். இல்லையென்றால் ஏய்த்துவிடும்.

காயம்பட்ட ஒரு நாயுடன் இரு இளைஞர்கள் காரில் பறக்கின்றார்கள். அவர்களை துரத்திக் கொண்டு மற்றொரு காரில் சில ஆட்கள் வருகிறார்கள். சிலர் துப்பாக்கியால் அந்த இளைஞர்களை சுட முயற்சிக்கின்றார்கள். அவர்களிடமிருந்து தப்பிக்க சிவப்பு சிக்னலை மதியாமல் செல்லும் இளைஞர்களின் கார் பக்கவாட்டில் வந்த மற்றொரு காரில் மோதி ஏற்படுத்தும் விபத்திலிருந்து திரைப்படம் தொடங்குகிறது. சுசைனா வீட்டின் கதவினை திறந்து உள்நூழைய முற்படும் போது, எப்படா கதவை திறப்பாங்க என்று பார்த்துக்கொண்டிருந்த கோஃபி ஓட்டம் எடுக்கிறது. அவளும் இரண்டு மூன்று முறை அழைத்துப்பார்த்துவி்ட்டு வீட்டிற்குள் போய்வி்டுகிறாள்.

வெறிகொண்ட நாயின் கழுத்தினை பிடித்தபடி எதிர்எதிரே இருநபர்கள் இருக்கிறார்கள். நடுவர் ஓகே சொன்னதும் நாய்கள் விடுபட்டு மூர்க்கமாக சண்டையிடுகின்றன. பலர் சுற்றி நின்று வேடிக்கைப் பார்க்கின்றார்கள். நம்மூர் சேவல் சண்டையைப் போலவே இருக்கிறது நாய் சண்டையும். சண்டையில் ஜெயித்த நாயும் அதன் உரிமையாளரும் மிகவும் பெருமையோடு சாலைக்கு வருகிறார்கள். மூர்க்கம் தீரா நாயின் வேகத்தினை தெருநாயின் மீது காட்டச்செல்லும் போது அதை தடுத்திட விழைகிறார் ஒரு முதியவர். அவனுடைய நண்பர்கள் அங்கே சுற்றும் கோஃபியை மாட்டிவிடுகிறார்கள். வீட்டுநாயுடன் வேட்டைநாயை மோதவிடுகிறார்களே என்று பதறும்போது, அவர்களுடன் இருந்து வேடிக்கைப் பார்த்த ஜார்ஜ் கோஃபியின் ஓனரான அக்டாவியோவிடம் வந்து “உன் நாய் வேட்டைநாயை கொன்றுவிட்டது” என சொல்கிறான்.இறந்த நாயை வைத்து பேரம் பேசுகிறார்கள் தோற்றவர்கள். அக்டோவியோ அதற்கு படியாமல் போக வெறுப்புடன் செல்கிறார்கள்.

ஜார்ஜின் யோசனையைக் கேட்டு, கோஃபியை நாய் சண்டை நடக்குமிடத்திற்கு அழைத்துசெல்கிறான். போட்டியை நடத்துபவரிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு தோற்றவனிடமே மீண்டும் மீண்டும் ஜெயிக்கிறான். (எனக்கு ஏனோ ஆடுகளம் நினைவில் வந்துபோனது) ஒவ்வொருமுறையும் புதுபுது நாயுடன் வந்தாலும் வில்லன் தோற்றுப்போகிறான். பணமிருக்கும் தெகிரியத்தில் அண்ணியின் மீதான தகாத காதலை வெளிப்படுத்தி, உறவும் கொள்கிறான். அவளை தனியாக சென்று வாழ அழைக்கிறான், இப்போதிருக்கும் பணம் இரண்டு வருடங்களுக்குகூட வராது என்று அவள் கூற, மேலும் பணம் சேர்க்க வேண்டிய நிர்பந்த்திற்கு வருகிறான். அந்நேரத்தில் எதிரியிடமிருந்து தனிப்பட்ட இடத்தில் நாய்சண்டை வைத்துக்கொள்ள ஒரு அழைப்பு வருகிறது. எதிரி பெரும்பணம் தர சம்மதிக்கவும், தன் சுயதேவைக்காக சண்டைக்கு சம்மதிக்கிறான். அந்த சண்டையில் கிடைக்கும் பணத்தினை வைத்து அண்ணியுடன் தனியாக செல்ல திட்டம் தீட்டுகிறான். அதற்கு குறுக்கே நிற்கும் அண்ணை அடியாட்களை வைத்து அடிக்கிறான்.

அடிப்பட்ட அண்ணனும், அண்ணியும் இவனுடைய பணத்தினை எடுத்துக்கொண்டு வேறிடம் சென்றுவிடுகிறார்கள். தன்னை அண்ணி ஏமாற்றிவிட்டாள் என்று அறிந்தாலும், போட்டிநாளன்று எதிரியை தனியாக கோஃபியுடன் சந்திக்கிறான். அங்கு நடக்கும் போட்டில் எதிரி கோஃபியை சுட்டுவிட, எதிரியை கத்தியால் குத்திவிட்டு கோஃபியை காப்பற்ற நண்பன் ஜார்ஜுடன் பயனிக்கும் போதுதான் முதலில் வந்த விபத்து நேரிடுகிறது.

காசிற்காக பிறரை கொலை செய்யும் எல் சைவோ, தான் ஒத்துக்கொண்ட புதிய கொலைக்காக விபத்துநடக்கும் இடத்திற்கு எதற்சையாக வருகிறார். குறிவைத்த நபரை சுடும் முன்பே விபத்து நிகழ்ந்துவிடுவதால் அதை புறந்தள்ளிவிட்டு சேதமடைந்த காரில் இருக்கும் ஜார்ஜிடம் வருகிறார். ஜார்ஜ் இறந்துகிடக்கிறான். அவனிடமிருந்து பணத்தினை திருடிக்கொண்டு சைவோ கிளம்புகையில், உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ஆக்டாவியோவை மற்றவர்கள் ஆம்புலன்சில் ஏற்றுவதையும், குண்டடிப்பட்ட காயத்துடன் இருந்த கோஃபியை இறந்துவிட்டதாக எண்ணி குப்பைக்கு அருகே சிலர் போடுவதையும் காண்கிறார். நாய்களின் காதலனான சைவோ கோஃபி உயிரோடு இருப்பதை அறிந்து மருத்துவம் பார்க்க ஏற்கனவே நிறைய நாய்களோடு அவர் இருக்கும் வீட்டிற்கு செல்கிறார்.

கோஃபியை குணப்படுத்திவிட்டு தன்னுடைய மகளை காண செல்கிறார். வீடுதிரும்பியதும் அவரை வரவேற்க கோஃபி ஓடுவருகி்றது. கோஃபியின் உடல்முழுக்க ரத்தம் தெரித்திருக்கிறது. சைவோ கோஃபியின் உடல்முழுக்க ஆராய்ந்துவிட்டு சந்தேகத்துடன் வீட்டிற்குள் நுழைய ஆங்காங்கே ஆசையாய் வளர்த்த நாய்கள் மரணமடைந்து கிடைக்கின்றன. கோஃபிதான் காரணமென அறிந்தாலும் கொல்ல இயலாமல் விட்டுவிடுகிறார். அதன்பின் முடிக்காமல் விட்ட அசைன்மென்டை முடிக்க செல்கிறார். கொலை செய்யவேண்டிய ஆளை வீட்டிற்குள் கூட்டிவந்து கட்டிவைத்து அவனை கொல்ல அனுப்பியது யாரென கேட்கிறார். அவன் சகோதரன் என்பதை அறிந்ததும், அவனை வீட்டிற்கு வரவைத்து எதிரே கட்டிப்போடுகிறார். அவர்களுக்கு காவலாக கோஃபி இருக்கிறது. இறுதியாக இருவரின் கட்டுகளையும் தளர்த்திவிட்டு நடுவே துப்பாக்கியை வைத்து முடிவினை அவர்களிடம் விட்டு வெளியேறுகிறார் சைவோ. தன்னுடைய அனைத்து சம்பாத்தியத்தையும் மகளின் வீட்டில் வைத்து கண்ணீர் மல்க தன்னுடைய இயலாமையை பதிவு செய்துவிட்டு கோஃபியுடன் நடக்கையில் படம் நிறைவடைகிறது.

இடையே ஆக்டாவியோ ஏற்படுத்தும் விபத்தில் வலேரியா என்ற மாடலின் கால் பாதிக்கப்படுகிறது. அவளுடைய காலை அசையாமல் பார்த்துக்கொள்ள மருத்துவர்கள் வலியுருத்துகிறார்கள். புதியதாக வாங்கிய வீட்டில் தன் காதலனுடன் இருக்கும் வலேரியாவுக்கு மிகப்பிடித்தமான ரிச்சி அந்த வீட்டில் இருக்கும் ஓட்டைக்குள் விழுந்துவிடுகிறது. அதை மீட்கும் முயற்சியல் வலேரியாவின் கால் அதிகமாக காயப்பட, காலையே வெட்டி எடுத்துவிடுகிறார்கள் மருத்துவர்கள். மீட்கப்பட்ட ரிச்சியுடன் காலை இழந்த வலேரியாவின் கதை முடிகிறது. நெருடலான இந்த வலேரியாவின் கதை இடைசொறுகப்படாமலேயே இருந்திருக்கலாம். பணத்திற்கு குறைவில்லாத வலேரியா நிச்சயமாக ஓட்டைக்குள் விழுந்த அதே தினத்தில் ரிச்சியை மீட்டிருக்க இயலும் என்ற எதார்த்தம் படத்தினை பலவீனப்படுத்துகிறது. வங்கி கொள்ளையில் மாண்டுபோகும் ஆக்டோவியோவின் அண்ணன், ஆக்டோவியாவுடன் இறுதியாக வரமறுக்கும் சுசேனா என்று திரையியல் வன்புணர்வுகள் இருந்தாலும் சொல்லப்பட்டவிதத்தில் அமோறேஸ் பெர்ரோஸ் தனித்த இடத்தை வகிக்கிறது.