கோரதெய்வ வழிபாடு ஏற்புக்குரியதா? – என் கேள்வியும் ஜெமோ பதிலும்

11

அன்பு ஜெ,

சமயம் சார்ந்த வழிகாட்டுதல்களுக்கு உங்கள் தளம் மிகவும் உகந்ததாக இருக்கிறது. நாளும் சமயம் குறித்தான கேள்விகள் சீடர்கள் தங்களின் குருவிடம் கேட்பது போல உங்களிடம் கேட்டு தெளிவு பெறுகிறோம். படைப்புகளைத் தவிர்த்து இவ்வாறு வாசகர்கள் எங்களுடன் நீங்கள் இணைந்தே இருப்பது. எங்கள் பேறு.

உறையூர் குங்குமவல்லித்தாயார் உடனுறை தான்தோன்றீஸ்வரர் கோயிலுக்குச் சென்றிருந்தேன். அக்கோயின் பிரகாரத்திலேயே, கோரதெய்வங்களான பிருத்தியங்கரா தேவி, வராகி, அட்ட பைரவர்கள், ஆகாயகாளி, பூமாகாளி, பாதாளகாளி போன்ற தெய்வங்கள் இருந்தன. அந்தத் தெய்வங்களில் பிருத்தியங்கரா தேவியின் கோர ரூபம் இன்னும் கண்களிலேயே இருக்கிறது.

ஒரு காலத்தில் வழிபடப்பட்டதாக கூறப்பட்ட இந்த தெய்வங்கள் மீண்டும் எழுச்சி பெற்று பொது மக்களால் வழிபடக்கூடிய அளவிற்கு சென்றுள்ளன. சில நாட்கள் முன் முகநூலில் கீழ் இணைத்துள்ள விளம்பரப் பதாகை கண்களில் பட்டது. கோவிலுக்கு வருகின்றவர்கள், வேம்பினை கொண்டுவாருங்கள் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆயிரமாயிரம் தெய்வங்கள் உள்ள இந்து சமயத்தில் இந்த கோர தெய்வ வழிபாடு ஏற்புக்குறியதா? தற்போது சிவாலயங்களில் மட்டுமல்லாது, திருமால் ஆலையங்களிலும் சொர்ண ஆகர்சன பைரவரை வைத்து அட்டமி நாளில் சிறப்பு வழிபாடு செய்கின்றனர். மூல நாதனை மறந்து இப்படி ஏவல், காவல் தெய்வங்களை வழிபடும் போக்கு தற்காலத்தில் பெருகியுள்ளது ஆன்மீக எழுச்சியை வலியுறுத்துகிறதா? மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு இறையை தேடுவது காட்டுகிறதா? இதனை எவ்வாறு நீங்கள் காண்கின்றீர்கள் என்பதை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.

நன்றி.

ஜெகதீஸ்வரன் நடராஜன்

***

அன்புள்ள ஜெகதீஸ்வரன்

தெய்வம் என உருவகிக்கத் தொடங்கிவிட்டபின் பேரியற்கையில் நாம் அறியும் எல்லா ஆற்றல் வடிவங்களையும் தெய்வமாக உருவகிக்கத்தான் செய்வோம். இது உலகம் முழுக்க அனைத்து மதங்களிலும் உள்ளதுதான். தூய தத்துவ மதங்களான சமணம், பௌத்தம், அத்வைதம், கன்ஃபூஷியம், தாவோயியம் போன்றவை விதிவிலக்கு.

ஏ.எல்.பாஷாமின் The Wonder That Was India முக்கியமான ஒரு விடையை அளிக்கிறது. இந்தியாவில் வங்கம், ஒரிசா, கடலோர ஆந்திரம், கேரளம் ஆகிய கடற்கரை மாநிலங்களில் சாக்தம் வலுவாக இருக்கிறது. காரணம், இயற்கையின் கோரத்தாக்குதல் இப்பகுதிகளில் அதிகம். வருடந்தோறும் புயல் வீசும் பகுதிகள் இவை. [கடலோரத் தஞ்சையும் இதில் சேர்க்கலாம்]

இயற்கையை கருணைகொண்ட அன்னையாக, அமுதூட்டி காப்பவளாக அறிகிறான் மனிதன். கூடவே இரக்கமே அற்ற கொடூர அழிவுசக்தியாகவும் காண்கிறான். இந்த இரு முகங்களையும் இணைத்துத்தான் காளி என்னும் உருவகம் உருவாகியது. எங்கும் அது உள்ளது, ஆனால் இப்பகுதிகளில் வலுவாக இருக்கிறது.

ஆக, தெய்வ உருவகம் மனிதனால் திட்டமிட்டு உருவாக்கப்படுவதல்ல. இயற்கையிலிருந்து அவன் தன் ஆதிநுண்ணுணர்வால் அடையப்பெற்றது. தொன்மையான பழங்குடி வாழ்க்கையிலிருந்து மெல்லமெல்ல வளர்த்தெடுத்தது. பழங்குடிவாழ்க்கையில் வேர் இல்லாத தெய்வமே இருக்கமுடியாது.

பழங்குடிகளின் பெரும்பாலான தெய்வங்கள் உக்கிரரூபம் கொண்டவை. நோய், இயற்கைச்சீற்றம் ஆகிய வடிவில் தன்னைக் காட்டும் மனிதனை மீறிய பேராற்றலை தெய்வமென உருவகித்தனர். கூடவே அவற்றிலிருந்து காத்து ஆண்டு அருளும் தெய்வங்களையும் உருவகித்தனர். இருவகை தெய்வங்களும் எல்லா தொன்மையான பண்பாடுகளிலும் உள்ளன. சாஸ்தா தவிர நம் நாட்டார் தெய்வங்கள் அனைத்துமெ உக்கிரரூபம் கொண்டவை அல்லவா?

பின்னர் அத்தெய்வங்கல் மேலும் மேலும் குறியீட்டு ரீதியாக விரிவாக்கம் செய்யப்பட்டன. அவற்றின் உருவம் முறைப்படுத்தப்பட்டது. அவற்றின் வழிபாடு வகுக்கப்பட்டது. அவற்றுக்கு தத்துவார்த்த விளக்கங்கள் அளிக்கப்பட்டன புராணங்கள் உருவாயின. அவை இன்றைய தெய்வங்களாக மாறின. இன்றைய எல்லா தெய்வங்களும் அவ்வாறு பல்லாயிரமாண்டுகளாகப் பரிணாமம் பெற்றவைதான்.

இந்த தொன்மையான தெய்வ உருவகங்கள் பின்னாளில் பெருந்தெய்வமாக மாறியபோதும்கூட அவற்றில் இந்த இரட்டைமுகம் இருப்பதைக் காணலாம். உலகாளும் விஷ்ணு ஒருமுகம் உக்கிரநரசிம்மர் மறுமுகம். ருத்ரனும் உமாமகேஸ்வரனும் ஒரே தெய்வம்தானே?

இந்திய புத்தமதத்தில் கோரத்தெய்வம் இல்லை. ஆனால் திபெத்திய பௌத்தம் பலநூற்றாண்டுகளுக்குப்பின் பல கோரத்தெய்வங்களை உருவாக்கிக்கொண்டது. கோரத்தோற்றம் கொண்ட காலதேவர், போதிசத்வர்கள் திபெத்திய, சீன, தாய்லாந்து, கம்போடிய பௌத்தத்தில் உண்டு. திபெத்திய வஜ்ராயன பௌத்தத்தில் கொடூரமான தோற்றம் கொண்ட புத்தரின் தோற்றம்கூட வழிபடப்படுகிறது.

கிறித்தவர்களின் ஜெகோவாவும் சரி இஸ்லாமியர்களின் அல்லாவும் சரி சீற்றம் கொண்டு தண்டிக்கும் தெய்வங்களும் கூட. மேலே சொன்ன விளம்பரத்தைப்போலத்தான் குமரிமாவட்ட கிறித்தவர்களின் கன்வென்ஷன் விளம்பரங்களும் இருக்கும். கிட்டத்தட்ட இதே வாசகங்கள் காணப்படும்.

இந்த தெய்வங்களின் நடைமுறைப் பயன்கள் என்ன? ஒன்று, மனிதனின் அச்சத்திற்கு இவை காப்பு. மானுடர் மிக எளியவர். தன்னம்பிக்கை, ஆணவம், அறிவுஜீவித்தோரணை ஆகிய அனைத்துக்கும் அடியில் அவர்கள் அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். பதற்றத்தில் இருக்கிறார்கள். நிலையின்மையை, நோயை, மரணத்தை, காலப்பெருவெளியை எண்ணி அலைக்கழிகிறார்கள்.

அந்த அச்சமே தெய்வங்களை நோக்கிச் செலுத்துகிறது. கோரத்தோற்றமுடைய தண்டிக்கும் தெய்வங்கள் தங்களுக்கு காப்பாகும் என அவர்களின் ஆழ்மனம் நம்புகிறது. பெரியபேச்சு பேசியவர்கள்கூட ஒரு இக்கட்டில் சட்டென்று சரணடைந்துவிடுவதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.

இரண்டாவதாக, இக்கோரதெய்வங்கள் மனிதன் தன் ஆழத்தில் உறையும் உக்கிரத்தை, ஆதிவிசையைக் கண்டடைய உதவிகரமாக உள்ளன. பிரத்யங்காரா போர்த்தெய்வம். உயிர்கொடுக்கக் களம்செல்லும் ஒருவீரனுக்கு அதற்கான வீரியத்தை அளிப்பவள். அவள் சாந்தமாக இருக்கமுடியுமா என்ன?

என் அனுபவத்தில் பல நிகழ்வுகளைச் சொல்லமுடியும். ஒன்று ஒருநண்பர் அணுக்கமான இருவரின் அவமரணத்திற்குப்பின் ஆழமான அக அதிர்ச்சிக்கு உள்ளாகி நரம்புப்பதற்றம் அடைந்த நிலையில் இருந்தார். அவர் வைணவப்பின்னணி கொண்டவர், மார்க்சியர். நான் அவரிடம் அவர் அகோரநரசிம்மரை வழிபடலாம் என்றேன். நூல்களில் அதுதான் சொல்லப்பட்டிருக்கிறது என்றேன்.

அதை ஒரு சம்பிரதாய வைணவர் சொல்லியிருக்கக்கூடும். நான் சி.ஜி.யுங்கை எல்லாம் மேற்கோள் காட்டி விளக்கினேன். அது ஓர் ஆழ்மனப் பயிற்சி என சொன்னேன். அவர் நூற்றெட்டுநாள் அகோரநரசிம்மரை வழிபட்டார். அவர் மீண்ட விதம் எனக்கே பிரமிப்பூட்டியது. குறியீடுகளின் வல்லமை அப்படிப்பட்டது. அவை நம்மை நாமறியாத வரலாற்று ஆழத்துக்குக் கொண்டுசெல்கின்றன. பண்பாட்டின் விசை முழுக்க அவற்றில் அடங்கியிருக்கிறது.

இன்னொரு அனுபவம் பிரத்யங்காரா தேவி. ஒருவரை கும்பகோணம் அருகே உள்ள பிரத்யங்கரா தேவியை  வழிபடும்படி ஓரிரு நூல்களை மேற்கோள்காட்டிச் சொன்னேன். அவர் மரபில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். ஒரு முக்கியமான வணிகமுடிவு எடுப்பதற்கு முன் தயங்கிக்கொண்டிருந்தார் அவர் துணிவுகொள்ளவும் போர்வேகம் கொள்ளவும் அவ்வழிபாடு உதவுவதை கண்டேன்.

ஆக கோரதெய்வங்கள் இருந்துகொண்டே இருக்கும். ஏனென்றால் அழகு, அருள்,நன்மை மட்டும் அல்ல இயற்கையில்  தெய்வவெளிப்பாடாக நாம் காண்பது. கோரம், அழிவு, தீமை ஆகியவையும்தான். ஒருவர் தெய்வம் என ஒன்றை மட்டும் பார்த்தார் என்றால் அவர் உண்மையின் ஒருபக்கத்தை மட்டுமே பார்க்கிறார். எங்கோ ஒரு புள்ளியில் அவர் ஏமாற்றத்தில் முட்டிக்கொண்டு மண்டையை உடைத்துக்கொள்வார்

கடைசியாக இரண்டு விஷயங்கள்.

ஒன்று: ஒருவருக்கு கோரமாகத் தெரிவது இன்னொருவருக்கு அப்படித் தெரியாமலிருக்கும். நீங்கள் சொல்லியிருக்கும் வராகி பன்றிமுகம் கொண்ட தேவதை. பழங்காலத்தில் மிக மங்கலமான தேவதையாக கருதப்பட்டாள். பன்றி நிலத்தை உழுவது. மேழி போன்ற முகம் கொண்டது. எனவே வளத்தின் குறியீடு.

அன்றெல்லாம் பன்றி நாம் இன்றுகொடுக்கும் எதிர்மறை அடையாளம் கொண்டது அல்ல. அன்றைய இந்தியப்பார்வையில் கருமை அழகு எனக் கருதப்பட்டது. பன்றி அழகும் ஆற்றலும் கொண்டது. வளம் நிறைப்பது. ஆகவே வழிபடப்பட்டது. பெருமாள் கூட பன்றியுருவத்தில் வராகராக வழிபடப்படுகிறார்

அதேபோல நாம் மங்கலமாகக் கருதும் யானைமுகப் பிள்ளையார், குரங்குமுக அனுமார் போன்ற தெய்வங்கள் ஐரோப்பியருக்கு அச்சமும் அருவருப்பும் ஊட்டும் வடிவங்களாகத் தெரிகின்றன.

இதைப்பற்றி ஒரு வெள்ளையர் கேட்ட கேள்விக்கு ஓஷோ ஒரு பதிலை அளித்தார். ஒரு கிறித்தவத் தம்பதியினர் சீனாவுக்குச் சென்றார்கள். அங்கே அவர்கள் சீனர்களின் பௌத்த மடாலயங்களில் உள்ள கோரத் தோற்றம் கொண்ட போதிசத்வர்களைக் கண்டு அருவருப்புடன் முகம் சுளித்தார்கள்

அன்று மாலையே அவர்களின் சீன வேலைக்காரி தப்பி ஓடிவிட்டாள். என்ன என்று போய் விசாரித்தால் அவள் இவர்கள் ஒரு மரச்சின்னத்தில் தொங்கும் குருதிவடியும் அரைநிர்வாணப் பிணத்தை வழிபடுவதை பார்த்து அருவருப்பு அடைந்துவிட்டாள் என்று தெரியவந்தது.

இரண்டு: கோரத் தெய்வங்கள் பெரும்பாலும் மானுடனின் அச்சத்துடன் தொடர்புடையவை. ஆகவே அந்த அச்சத்தையும் ஐயத்தையும் பயன்படுத்திக்கொண்டு வணிகம் செய்யும் பூசாரிகளும் மந்திரவாதிகளும்தான் அவற்றை அதிகமாக பிரச்சாரம் செய்வார்கள் – எல்லா மதங்களிலும். நீங்கள் காட்டிய சுவரொட்டி அத்தகையது.

அந்த வணிகத்துக்கு உடன்படுவது வழிபாடல்ல. அது ஒரு மனிதனின் பேராசைக்கோ சுயநலத்துக்கோ நம்மை அர்ப்பணிப்பது. அது பூசாரியாக இருந்தாலும் சரி பாதிரியாக இருந்தாலும் சரி. கடைசியாக எஞ்சுவது துயரமும் ஏமாற்றமும்தான்.

ஜெ

ஜெயமோகனின் உலோகம் ஒரு பார்வை

கோவை மருத்துவமனையில் ஹார்ட் அட்டேக் வந்து ஐ.சி.யூவில் சேர்க்கப்பட்ட தந்தை, செய்வதறியாது திகைத்து நிற்கும் உறவுகள் என்ற இறுக்கமான சூழ்நிலையில் உலோகம் நாவலை படிக்கத் தொடங்கினேன். க்ளைமேக்சினை முதலில் காண்பித்துவிட்டு நடைபோடும் நவீன திரைப்பட பாணியில் எழுதப்பட்டது. பல்வேறான கொலைகள் நிகழ்ந்தாலும் ரெஜினா சார்லசை அடைவது வெகுவாக ஈர்த்தது. பெண்களுக்கு ஆண்களை அண்ணன் என்று அழைப்பது ஒரு தற்காப்பு தந்திரம். அவர்களுக்கு பாதுகாப்புணர்வு கொடுக்கும் உதட்டளவு வார்த்தை. எந்தவொரு பெண்ணும் உடன்பிறவாதவர்களை அண்ணன் என மனதளவில் ஏற்றுக்கொள்வதில்லை. அந்த வார்த்தை தேவைப்படாத சமயத்தில் அதனை புறக்கணிக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. என்னுடைய அனுபவத்தினை ரெஜினா கதாப்பாத்திரம் பிரதிபளித்ததால், அவள் எனக்கு மிகவும் நெருக்கமாக தோன்றினாள்.( உங்களை சில தாய்மார்கள் தங்களுடைய குழந்தைக்கு அங்கிள் என்றே அறிமுகம் செய்துவைத்திருப்பதை கவனித்திருக்கின்றார்களா?. இல்லையென்றால் இனி கவனிப்பீர்கள்.)

கரிக்கட்டை எடுத்து கோட்டோவியம் வரைந்தவனை, கவிதை சிறுகதையென காவியங்களை படைத்தவனை காலம் கொலையாயுதமாக மாற்றுவதை படம்பிடித்து காட்டும் நாவல் உலோகம். எண்ணிக்கையில் அடங்குகின்ற கதைமாந்தர்களும், ஏமாற்றம் தராத அவர்களின் இயல்புகளும் நாவலின் பலம். இதனை ஒரு த்ரில்லர் நாவலென்று கூறுகிறார்கள். கிரைம் மன்னன் ராஜேஷ்குமாரின் நாவல் வாசித்தவர்களுக்கு இதிலுள்ள த்ரில்லர் போதாது. ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் நாவலை திருப்பங்கள் நிறைந்ததாக எதிர்ப்பார்த்து படிப்பது ஏமாற்றம் தரக்கூடியதாகவே அமையும். மற்றபடி கதாப்பாத்தரம் கோபம் கொண்டால் நாம் கோபம் கொள்கிறோம், காமம் கொண்டால் நாம் காமம் கொள்கிறோம் என்பது ஜெயமோகனின் எழுத்தாற்றல்.

புதினத்தின் பெயர் காரணம் –
புதினத்தின் கதாநாயகனான சார்லஸ் பலாலி போரில் ஈடுபட்டிருந்த போது சுடப்படுகிறான். அவனுடைய தொடையில் அகற்றப்படாத தோட்டா இருக்கிறது. விரலசைவின் முடிவில் எந்த கேள்வியும் கேட்காமல் உலோக தோட்டாவினை துப்புகின்ற துப்பாக்கியைப் போன்றது அவன் கதாப்பாத்திரம். உலோகத்தினை சுமந்து நடமாடி திரியும் கொலையாயுதமாக சார்லஸ் இருப்பதை உலோகம் என்ற புதினத்தின் பெயர் விளக்கி கொண்டுள்ளது.

உலோகத்தின் கதை –

பொன்னம்பலத்தாரின் கொலையுடன் நாவல் துவங்குகிறது. அவரை கொன்றது யார் என்று துப்பரியும் வேலை நமக்கில்லை. கொலைகாரனான சார்லஸ் தன்னை முதல் அத்தியாத்திலேயே அறிமுகம் செய்துகொள்கிறான். சுஜாதா, ஜெயகாந்தன் என எழுத்தாளர்களையும், குமுதம், ஆனந்தவிகடன், வீரகேசரி என ஜனரஞ்சக பத்திரிக்கைகளையும் அறிந்தவன். பள்ளிபருவத்தில் பெண்ணொருத்தியை மானசீகமாக காதல் செய்தவன். ஈழத்தின் ஏதோ ஒரு இயக்கத்தில் இருந்து பின் அகதியாக தமிழகம் வருகிறான். அகதிகள் முகாமில் ஜோர்ஜ் என்பவனை சந்திக்கிறான். அவன் மூலம் இங்கிருக்கும் இயக்கமொன்றில் இணைகிறான்.

இந்திய உளவு அமைப்பு நடத்துகின்ற ஒரு இயக்கத்தின் சிறு தலைவன் ஆகிறான். உளவு அமைப்பின் தலைவரான வீரராகவன் என்பவர் சிறீ மாஸ்டரை கொல்ல உத்தரவிடுகிறார். அவரை சந்திக்கும் சந்தர்ப்பத்தினை ஏற்படுத்த சார்லஸ் இயக்த்திற்கும், சிறீ மாஸ்டர் இயக்கத்திற்கும் தற்செயலாக மோதல் நாகடமொன்றை உருவாக்க திட்டமிடுகிறார்கள். ஜோர்ஜை சிறீ மாஸ்டர் இயக்கத்தினர் கொன்றுவிட வைக்கின்றார்கள், பதிலுக்கு விக்கி என்பவனை கொல்கிறார்கள். அவர்கள் நினைத்து போலவே சார்லஸை சந்திக்க சிறீ மாஸ்டர் விரும்புகிறார். அந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி சிறீமாஸ்டரை கொன்று தப்புகிறான் சார்லஸ்.

ஜோர்ஜ் மனைவியான ரெஜினா சார்லஸையும், வீரராகவனையும் காமுரவைக்கிறாள். இருவரிடமிருந்தும் பணத்தினை பெற்றுக் கொள்கிறாள். இவ்வாறு இருக்கவேண்டாம், வேறு ஆணை திருமணம் செய்து கொள் என்று அறிவுரை கூறி டெல்லிக்கு செல்கிறான் சார்லஸ். அங்கே பொன்னம்பலத்தாரிடம் பாதுகாவலனாக சேர்கிறான். அவரை ஈழத்தில் உள்ள இயக்கம் துரோகி என்று நினைத்து கொல்ல திட்டமிடுவதை அறிந்து உயிர் பயம் கொண்டிருக்கிறார். அதனால் அவளுடய குடும்பத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை அவரின் மகள் உணர்கிறாள்.

சார்லஸை நெருங்கி உறவு கொண்டு அவனிடம் தன்னுடைய தந்தை கொன்றுவிடும்படி கோரிக்கை வைக்கிறாள். காமத்தில் சார்லஸூம் கொல்வதற்கு சம்மதிக்கிறான். ரா அமைப்பினர் இதனை அறிந்து சார்லஸை வதைத்து உண்மையை அறிகிறார்கள். அதற்குள் தகவலறிந்த பொன்னம்பலத்தார் அவனை விடுவித்துவிடுகிறார். அவரை கொன்றுவிடும்படி இயக்கத்திலிருந்து கட்டளை வருகிறது. இருவரும் தனிமையில் இருக்கும் போது சார்லஸ் அவரை கொன்றுவிடுகிறான். தப்ப முயலும்போது காவலாளிகளால் பிடிக்கப்படுகிறான் என்பதோடு நாவல் முடிகிறது.

நாவலின் தன்மை –

இரு இடங்களில் எம்.ஜி.ஆரை நினைவு படுத்தியது இந்த நாவல். கதைநாயகன் சார்லஸ் போல உடலுக்குள் உலோகம் சுமந்து வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர் என்பது ஒன்று. இரண்டாவது இந்திய அரசு விடுதலைபுலிகளை தவிற மற்ற இயக்கங்களை வெகுவாக ஆதரித்தது. ஈழத்தின் போராட்ட அமைப்புகளுக்கு தொடக்க காலத்திலிருந்து இந்தியா உதவுவதை அறிந்தபின் தான் எம்.ஜி.ஆர் விடுதலைப் புலிகளை அழைத்து பேசினார் என்கிற செய்தியை வாத்தியார் புத்தகத்தில் வாசித்ததாக நினைவு.

ஈழத்திலிருந்து வருகின்றவர்களுக்கு விமான சத்தம் உண்டாக்குகின்ற பயம். அவர்கள் தங்கவைக்கப்படும் முகாம்களின் அவலம். துணையிழந்த பெண் அகதியின் நிலை. இந்திய உளவு அமைப்புகளின் சதுரங்காட்டம். இயக்கங்களின் போலி சண்டைகள். வயதொத்த வாலிபர்களின் இச்சைகள். உயிர் பயம் கொண்டவரிகளின் மனநிலை. இவ்வாறு நாவலில் எண்ணற்ற நுட்பமான விசயங்கள் இருக்கின்றன. வாசிப்பனுபவம் வேண்டுபவர்கள் தவறவிடக்கூடாத நாவல்களில் இதுவும் ஒன்று.

மேலும் –
ஜெயமோகன் இணையதளத்தில் உலோகம் நாவல் வாசிக்க..

விஷ்ணுபுரத்தின் வாசலில் ஒரு வாசகனாக – ஸ்ரீபாதம்

பொம்மைகள் விற்கப்படும் மிகப் பெரிய கடையில் ஒரு குழந்தையை மட்டும் முழு சுகந்திரத்தோடு விட்டால் என்ன ஆகும். அந்தக் குழந்தை கடை முழுவதும் ஓடும், கண்ணிகளில் படும் பொம்மைகளையெல்லாம் வாரி அனைத்து விளையாடும், சிலவற்றை தேர்ந்தெடுத்து தன்னுடன் வைத்திருக்கும், சிலவற்றை மதிக்காமல் செல்லும், கைக்கெட்டாத பொம்மைகளை நினைத்து ஏங்கும்,.. விஷ்ணுபுரத்தினை பெரும் பொம்மைக் கடையாக நினைத்துக் கொண்டால், அந்த குழந்தைதான் ஜெயமோகன். ஆம் விஷ்ணுபுரம் என்ற கற்பனை நகரில் ஜெயமோகன் ஓடிக்கொண்டே இருக்கிறார். கண்களில் படுபவனப் பற்றியெல்லாம் விவரிக்கிறார். சில கதைமாந்தர்களை புறக்கணிக்கிறார், சிலரை தொடர முடியாமல் தவிக்கிறார். விஷ்ணுவின் பாதத்தின் அழகிலிருந்து இருந்து தொடங்கி, தேவதாசி யோனியின் வலி வரை எல்லாவற்றையும் தன் எழுத்துகளில் வடித்திருக்கிறார்.  ஐம்பது அத்தியாங்களை ஸ்ரீபாதம் எனும் முதல் பகுதியில் படிக்கும் வரை இப்படிதான் தோன்றியது. அடுத்த சில அத்தியாங்கள் இது வரை நினைத்தவற்றை எல்லாம் நொறுக்கி எறிந்தன. நாவலின் மிகவும் அழகிய கட்டுமானம் விளங்கியது. அதுவரை தனித்தனியாக இருந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்பு பெற்று அட்டகாசம் என்று சொல்ல வைக்கும். ஸ்ரீபாதத்தின் கடைசி வரிகளை படித்து முடித்தபின் புத்தகத்தினை மூடிவைத்துவிட்டு சிந்தனைக்குள் ஆழ்ந்தேன்.

விஷ்ணுபுரம்

விஷ்ணுபுரம்

அப்பப்பா,.. விஷ்ணுபுரத்தில்தான் எத்தனை செய்திகள், எத்தனை சாஸ்திரங்கள், எத்தனை கதாபாத்திரங்கள், எத்தனை நிகழ்வுகள்,… தொடக்கம் முதல் இறுதிவரை நடப்பவைகள் எல்லாம் கட்டுக்குழையாமல் இருக்கின்றன. சிறிது பிசங்கியிருந்தாலும் எழுத்தாளனை கேலி செய்ய வைத்துவிட்டு வாசகன் சென்றிருப்பான். ஆனால் இங்கு நாவல் வாசகனான என்னை பல இடங்களில் எள்ளி நகையாடியது.  பழங்கால இசைக் கருவிகளைப் பற்றி நாவல் சொல்லும் போது அவைகள் எப்படியிருக்கும், எந்த இசையை வெளிவிடும் என்பதெல்லாம் தெரியவில்லை, நகைகள் பற்றி கூறும்போதும், குதிரை, யானை சாஸ்திரங்களைப் பற்றி கூறும் போதும் கற்பனை வறட்சி ஏற்பட்டது. “தம்பி நீ சென்று இதையெல்லாம் பற்றி ஓரளவேனும் தெரிந்து கொண்டு வா”, பிறகு என்னைப் படிக்கும் போது சிறந்த அனுபவம் ஏற்படும் என்று சொல்லவது போல இருந்தது. ஒரே ஒரு ஆறுதல் நாவல் இந்து மதத்தினை தழுவி செல்வதுதான், அதனால் நாவல் கருடன், இந்திரன், ஸ்ரீசக்கரம் பற்றியெல்லாம் குறிப்படும் போது வர்ணனைகள் தேவைப்படாமலேயே அவைகளின் அமைப்பினை உணரமுடிந்தது. பௌத்தம் பற்றிய குறிப்புகள் வரும் போது மறுபடியும் பழைய நிலையே. இனி விஷ்ணுபுரம் ஸ்ரீபாதத்திற்கு உங்களையும் அழைத்துச் செல்கிறேன்.

வானளவு பெரிய கோபுரங்களும், அதில் புதைந்திருக்கும் தேவர்களும் யட்சிகளும், செந்நிற சோனா நதியும், முகம், உடல், பாதம் என மூன்று பாகமாய் காட்சிதரும் மூலவரும், காற்றில் ஒலியெழுப்பும் காடா மணிகளும் நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அளவு பெரியது இந்த விஷ்ணுபுரம், என்ற எண்ணத்தை மனதில் நிறுத்திவிட்ட பின்பே விஷ்ணுபுரத்திற்குள் பிரவேசிக்கின்றோம். தொடக்கத்தில் விரிந்திடும் விஷ்ணுபுரத்தின் உருவகங்கள் எல்லாம் ஓரிடத்திற்கு மேல் பிரம்மாண்டத்தின் உச்சத்தினை கூற முடியாமல் எச்சமாக தொக்கி நிற்கின்றன. எல்லா பிரம்மாண்டமும் நமக்கு ஒருவித பயத்தினை தரும், அதை விஷ்ணுபுரமும் கொடுக்க தவறவில்லை. பிரம்மாண்டத்தின் கூறுகளை சிறு சிறு இடுகைகளாக பகிர எனக்கு விருப்பம். விஷ்ணுபுரத்தின் கட்டமைப்பை கதாபாத்தரங்களாக பிரித்து கூறுகிறேன். இது விஷ்ணுபுரத்தினை பிரித்து தனி தனி கதைகளாக்க இயலும் என்ற எண்ணமே காரணம். மாபெரும் இதிகாசமான மஹாபாரதம் போல எண்ணற்ற குறுங் கதைகளுக்கு விஷ்ணுபுரம் தளம் அமைத்து தருகிறது. நலன் தமயந்தி போல ஒரு காவியம் எழுத கூட பின்னால் வரும் எழுத்தாளர்களுக்கு விஷ்ணுபுரம் வாய்ப்பு தருகிறது. ஒரே சீர் நடையில் விஷ்ணுபுரத்தை விவரித்தால் நிறைய விசங்களை நான் தவற விடக்கூடும் எனவே பொறுத்தருள்க.

வீரன் –
விஷ்ணுபுரத்தின் வீதிகளில் தெருநாய்களைப் போல யானைகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அதிலும் வீரன் என்ற யானை மிக எளிதாக மனிதில் பதிந்துவிடுகிறது. குறும்பு செய்யும் குட்டிநாயின் மீதும், குழந்தை மீதும் ஊற்றெடுக்கும் அன்பு அதன் மீது படுகிறது. நாம் வாஞ்சையும் அதனை தடவ நினைக்கையில், நவீன திரைப் படங்களின் முன்பாதியில் காதல் மிக அழுத்தமாக இருந்தால், காதலனோ, காதலியோ இறந்துவிடுவார்களே அது போல வீரனுக்கும் மரணம் நிகழ்கிறது. தேர்சக்கரத்தில் வீரனின் தும்பிக்கை அடிபட, வலி பொறுக்க இயலாமல் வீதியில் அது ஓட, கலவரத்தினை அடக்க வீரன் வீரபைரவன் என்ற யானையால் கொல்லப்படுகிறது. ரத்த சகதியில் அது மிதக்கின்ற தருனத்தில் நெஞ்சம் கனத்து புத்தகம் கையிலிருந்து விலகியது. எதற்காக வீரன் இங்கே கொல்லப்பட வேண்டும், ஜெயமோகன் நினைத்திருந்தால் அதை தவிர்த்திருக்கலாமே என்று தொன்றியது. அதன் பின் வீரனை கொன்ற வீரபைரவனுக்கு கொடுக்கப்படுகின்ற பாராட்டுதல்கள் வேதனையை மேலும் அதிகப்படுத்தியது. வீரனின் கால்களில் மிதிபட்டு இறந்த இருபது பேரைப் பற்றி சிந்திக்கவோ, பரிதாபம் கொள்ளவோ ஏன் மனம் தயாராக இல்லை. இதைத்தான் எழுத்தாளனாக அவர் எதிர்ப்பார்த்திருக்க வேண்டும். வீரனை வளர்த்து வைரவன் எனும் பாகன் அழுது புலம்புகையில் அவனோடு நாமும் சேர்கிறோம். ஸ்ரீபாதத்தில் வீரனின் மரணம் தவிர்க்க முடியாத விபத்தாகிறது. அதன் பின்வரும் அத்தியாயங்களில் வீரனின் மரணம் நிகழ்வதால் ஏற்படும் விளைவுகளை காண்கிறோம்.

சங்கர்ஷணன் –

அனிருத்தன், சுதா என்ற இரண்டு குழந்தைகளுடன் சங்கர்ஷணன், லட்சுமி தம்பதிகள் விஷ்ணுபுரத்திற்கு வருகின்றார்கள். சங்கர்ஷணன் ஒரு படைப்பாளி. லட்சுமி குடும்பப் பெண். அனிருத்தன் குறும்புக்காரச் சிறுவன். சுதா?.  காவியத்தை அரங்கேற்ற சங்கர்ஷணன் விழையும் போது சபையில் அவமானப்பட்டு திரும்புகிறான். தன்னுடைய ஆணவம் தன் முன்னாலேயே நிர்வாணமாக்கப்பட்டது கண்டு துயர்கொள்கிறான். பணம் வேண்டும் என்பதற்காக தாசிகளைப் புகழ்ந்து கவிதை எழுதவும் முடிவெடுத்து பத்மாட்சி என்பவளிடம் செல்கிறான். அவளிடம் இருந்து கொண்டே காவியத்தை மீண்டும் எழுத தொடங்குகிறான். இதற்கிடையே அனிருத்தன் கோபுரமொன்று சரிந்து விழுகின்ற விபத்தில் இறந்துவிடுகிறான். அதன் பின் சங்கர்ஷணன் லட்மியிடம் செல்லாமல், பத்மாட்சியுடனேயே தங்கிவிடுகிறான். லட்சுமியும் சுதாவும் தெருக்களில் பஜனை செய்யும் கோஸ்டியுடன் இணைந்துவிடுகின்றார்கள். காவியம் முழுமை பெற்றதும், சபையில் பத்மாட்சியை அருகில் வைத்துக் கொண்டு காவியத்தை இயற்றுகிறான். அதன் பின் அவனுக்கு ஒன்றுமேயில்லை என தோன்ற பத்மாட்சியிடமிருந்து வலகி மீண்டும் லட்சுமியுடன் சேர்கிறான். இருவரும் விஷ்ணுபுரம் இனி வேண்டாம் என முடிவெடுத்து, தூங்கிக் கொண்டிருக்கும் சுதாவுடன் விஷ்ணுபுரத்தை விட்டு வெளியேறுகிறார்கள்.

வீரன், சங்கர்ஷணனோடு இந்த இடுகையை முடித்துக் கொள்கிறேன். அடுத்த இடுகையில் மற்றவர்களைப் பற்றி பார்ப்போம்.

நன்றி.

இருவேறு படைப்புகள், அரவான் – காவல்கோட்டம்

காவல் கோட்டம் படிக்கும் முன், அரவான் படத்தை பார்த்துவிடுங்கள். இல்லையென்றால் அரவான் படத்தை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போய்விடும்,… ஒரு வேளை நீங்கள் அரவான் படத்தை பார்த்துவிட்டு காவல் கோட்டத்தை படிக்காமல் விட்டிருந்தால்,.. மேலும் தொடருங்கள்.

ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலில் இன்னும் 30 அதிகாரங்களைத்தான் முடித்திருக்கிறேன். அந்த பெரும்மாய மகிழ்ச்சிக்கு இடையே அரவான் படம் வந்து குறுக்கிட்டது. திரைப்படமாக காவல்கோட்டத்தின் கதை வருகிறது என்றவுடன், படம் பார்த்த பிறகு புத்தகத்தினை படிக்கலாம் என முடிவு செய்திருந்தேன். காரணம் கதைமாந்தர்களை நாம் என்னதான் கற்பனை செய்தாலும் படமிட்டு காட்டுவதை போல கற்பனை செய்ய முடியாது. மேலும் அவர்களின் இடங்கள், ஆபரணங்கள், செய்கைகள் போன்றவற்றை ஆசிரியர் சொன்னால் மட்டுமே சரியாக கற்பனை செய்ய முடியும். சென்ற வாரம் அரவான் படத்தினை பார்த்துவிட்டு வந்தபிறகு, வசந்தபாலனுடன் மதன் அவர்களின் பேட்டியை காண நேர்ந்தது. அதில் எகப்பட்ட தகவல்களை அள்ளி வீசினாரர் வசந்தபாலன்.

காவல் கோட்டம் நாவலின் “மாயண்டி கொத்து” எனும் பகுதிதான் படமென்றார். அஞ்சலி வரும் காட்சிகளையும், சின்ன ராணி வருவதையும் தன்னுடைய சேர்க்கை என்றார். ஒருவர் கற்பனையை கடனாக பெற்று அதையே தன் கற்பனையில் மாற்றி கொடுத்திருப்பதை உணர்ந்தேன். சு.வெங்கடேசனின் உண்மையான அரவான் கதை என்ன என்பதை அறிய காவல் கோட்டத்தை கையில் எடுத்து புரட்டினேன். “நான்கு ஐந்து பேர்தான் மாயாண்டியோட கொத்து” என்ற வரி 282ம் பக்கத்தில் சிக்கியது. அடுத் சில பக்கங்களில் “சின்னான்” என்பதைக் கண்டதும். தேடியது கிடைத்துவிட்டது என்ற மகிழ்வு கிட்டியது.

அலுவலகத்தின் உணவு இடைவெளியி்ல் காவல் கோட்டத்தில் கலந்தேன். கொம்பொதிக்கு பதில் மாயாண்டி என்று தொடங்குகையிலேயே நாவலில் இருந்து திரைப்படம் வேறுபட்டிருப்பதை உணர்ந்து கொண்டேன். அரவான் படத்தில் சொல்லாத சில இருப்பதையும், சொல்லிய பல இல்லாமல் இருப்பதையும் கதையுடன் பயணிக்கையில் கண்டுகொண்டேன். திரைப்படத்தின் நடுநடுவே வந்த கேள்விக்கெல்லாம் பதில் நாவலில் இருக்கிறது.

நீங்கள் அரவான் படத்தை பார்த்திருந்தால்,.. சின்னான் களவு செய்ய தவளும் போது தேவையில்லாமல் ஒரு பூனை குறுக்கே செல்வதை கவணித்திருக்கலாம். எல்லோரும் கயிறை எடுத்து மலையில் ஏறுவது போல இருக்கும் கோட்டையூரில் கொம்பொதியை காப்பாற்ற அத்தனை மாடுகள் எப்படி நுழைந்தன என்ற கேள்வி எழுந்திருக்கலாம். சின்னானை கண்டுபிடிக்க செல்லும் கொம்பொதியைப் பார்த்து எகத்தாளமாக சிரிக்கும் ஆந்தை அங்கிருப்பதற்கான காரணத்தையும், களவிற்கு முன் மொண்டிக்கொம்பை கன்னம் இட்ட சுவறுக்குள் விட்டு கருப்பின் உத்திரவு வாங்குவதன் பின்புலமும் நாவலை படித்தால் மட்டுமே புரியும். உதாரணத்திற்கு இறுதியாக சொன்ன மொன்டிக்கொம்பு பழக்கத்தை எடுத்துக் கொள்வோம், நடுவப்பாளையம் கனகலிங்கம் பிள்ளை வீட்டுக்கு கன்னம் வைக்கப்போன தாதனூர் ராக்கன் கொத்து கிளம்பிச் சென்று கன்னம் வைத்த துளை வரியாக மொண்டி உள்ளே தலையை விட்டபோது தலை கரகரவென்று அரியப்பட்டு காலைப்பிடித்து இழுத்தவர்களுக்கு முண்டம் மட்டும் கிடைப்பதும், கொங்குப் போரில் மூக்கு அறுபட்ட மொண்டியின் தலை ஒரு ஆதாரமாக ஆகும் என்று உணர்ந்து ஓடிப்போன தாதனூர் ராக்கன் குழு திரும்பி வந்து அந்தத் தலையை அழிப்பதும் இன்னொரு உத்வேகமான அடுத்த சித்தரிப்பு.

அதிலிருந்து கன்னம் வழியாக முதலில் ஒரு கம்பில் துணி சுற்றி உள்ளேவிடும் மரபு உருவாகிறது. அதற்கு மொண்டிக்கொம்பு என்றுபெயர்நடுவப்பாளையம் கனகலிங்கம் பிள்ளை வீட்டுக்கு கன்னம் வைக்கப்போன தாதனூர் ராக்கன் கொத்து கிளம்பிச் சென்று கன்னம் வைத்த துளை வரியாக மொண்டி உள்ளே தலையை விட்டபோது தலை கரகரவென்று அரியப்பட்டு காலைப்பிடித்து இழுத்தவர்களுக்கு முண்டம் மட்டும் கிடைப்பதும், கொங்குப் போரில் மூக்கு அறுபட்ட மொண்டியின் தலை ஒரு ஆதாரமாக ஆகும் என்று உணர்ந்து ஓடிப்போன தாதனூர் ராக்கன் குழு திரும்பி வந்து அந்தத் தலையை அழிப்பதும் இன்னொரு உத்வேகமான அடுத்த சித்தரிப்பு. அதிலிருந்து கன்னம் வழியாக முதலில் ஒரு கம்பில் துணி சுற்றி உள்ளேவிடும் மரபு உருவாகிறது. அதற்கு மொண்டிக்கொம்பு என்றுபெயர்.

திரைப்படத்தின் கதை –
வேம்பூரில் ராஜகளவு செய்யும் கொம்பொதி தன் ஊர் பெயர் சொல்லி களவு செய்யும் அனாதையான வரிபுலியை கண்டுபிடிக்கிறான். வரிபுலி களவாண்ட ராணி அட்டிகையை திருப்பி கொடுக்க 100 கோட்டை நெல் கிடைக்கிறது. வரிபுலின் களவாடும் திறன் கண்டு கொம்பொதி தன் கொத்துடன் இணைத்துக் கொள்கிறான். ஊரில் சிலர் வரிபுலியை நம்பாமல் மலையில் குடிலை அமைத்து தங்க சொல்கின்றார்கள். களவு செய்யும் இடத்தில் கொம்பொதி மாட்டிக் கொள்ள வரிபுலி காப்பாற்றி வருகிறான். அதை அறிந்த கொம்பொதி தங்கை வரிபுலி மேல் காதல் கொள்கிறாள். தொடர்ந்து வரிபுலியின் செயல்களை கண்காணித்தும் அவனுடைய வரலாற்றை அறிந்து கொள்ள முடியாமல் இருக்கிறான் கொம்பொதி.

ஒரு கட்டத்தில் ஜல்லிக்கட்டில் கொம்பொதியை மாடு முட்டிவிட, அவனை காப்பாற்ற தான் காத்துவந்த ரகசியத்தை கூறிவிடுகிறான் வரிபுலி. அதன் பின்பு சின்னிவீரம்பட்டி என்ற ஊரில் இறந்துபோனவனை கொன்றவன் யார்யென தெரியாமல், இறந்தவன் ஊர் மக்களின் கோபத்தை தனிக்க பலிஆளாக தேர்ந்தெடுக்கப்பட்டவன் தான் இந்த வரிபுலியென்றும், அவனுய பெயர் சின்னான் என்பதும் தெரியவருகிறது. காலங்கள் பின்நோக்கி செல்கிறது, சின்னிவீரம்பட்டி மாத்துர் இடையே இருக்கும் பகை நடுவே மாத்துக்காரன் ஒருவன் சின்னிவீரம்பட்டில் இறந்து கிடக்கிறான். மாத்தூர் மனிதர்களின் ரத்தவெறி அடங்க, பாளையக்காரர் ஒருவர் நாட்டாமை போல தீர்ப்பு சொல்கிறார்.

அதுதான் இறந்தவனுக்கு நிகரான இளவட்ட வாலிபன் ஒருவனை பலிதருவது, அதில் சின்னான் தேர்ந்தெடுக்கப்படுகிறான். 30நாள் குறித்து அவனை பலியிடும் நாளை அறிவிக்கின்றார்கள். அதற்குள் சின்னானை காதலிக்கும் ஒரு பெண் அவனையே திருமணம் செய்து கற்பமாகிறாள். சின்னானும் இன்னும் சிலரும் இறந்து போனவனை கொன்றது யார் என தேடுகிறார்கள். இறுதியில் தீர்ப்பு வழங்கிய பாளையக்கார்தான் உண்மையான குற்றவாளி என்று சின்னான் அறியும் தருவாயில் பாளையக்காரர் இறந்துவிடுகிறார். எந்த ஆதாரமும் இல்லாத சின்னான் இறுதியாக மாத்தூர்காரர்கள், சின்னிவீரம்பட்டி, வேம்பூர்காரர்கள் முன்நிலையில் தன்னைதானே வெட்டிக்கொண்டு இறக்கிறான்.

நாவலின் கதை –
(ஜெயமோகன் அவர்கள் எழுதிய கதைசுருக்கம். நன்றி.)
தாதனூர் பெயரைச் சொல்லி தாதனூர்காரர்களுக்கு முன்னதாகவே சென்று திருடும் சின்னானை மாயாண்டி கண்டு பிடிக்கிறான். மாயாண்டி ராஜகளவு செய்யும் தாதனூர்காரன். அந்த நிபுணத்துவத்தை மெச்சி சின்னானை தன்னுடன் சேர்த்துக் கொள்கிறான். ஆனால் பிற ஒருவனை களவூராகிய தாதனூர் ஊருக்குள் விடுவதில்லை. ஆகவே சின்னான் அமணர் மலையின் குகைகளில் தங்கிக் கொள்கிறான். அவனும் தாதனூர் கொடிவழிதான் என்பதை மாயாண்டி அறியும் இடம் தாதனூரின் மாறாத ஆசாரத்திற்கும் குல முறைகளுக்கும் சான்று. தேவிபட்டினத்திலிருந்து திரும்பி வரும் வழியில் கருப்பு கோயிலில் ஒரு தூக்கம் போடுகிறார்கள். அப்போது சின்னான் தாதனூரின் குலதெய்வமாகிய சடச்சி ஆலமரத்தின் பெரும் தூர் பக்கமாகச் சென்று ரகசியமாக அதைக் கும்பிட்டுவிட்டு வந்துதான் கருப்பனைக் கும்பிடுகிறான். ஆகவே அவன் தாதனூர்க்காரனே என்று தெரியவருகிறது.

சின்னானை விரும்பி ஊர்ப்பெண் ஒருத்தி அவனுடன் சென்று அமண மலையில் குடித்தனம் இருக்கிறாள். ஆனால் சின்னான் தான் யார் என்பதை அவளிடமும் கூறவில்லை. கடைசியில் அது தெரியவருகிறது. சின்னிவிரன் பட்டியைச் சேர்ந்த நல்லையாதான் அவன். பக்கத்து ஊரைச்சேர்ந்த ஒருவன் சின்னிவீரம்பட்டியில் வந்து இரவு தூங்கும்போது தவறுதலாகக் கொல்லப்படுகிறான். கொல்லப்பட்டவனின் ஊர் பழிவாங்க வரும்போது சின்னிவீரம்பட்டிக்காரர்கள் சமரசம் பேசுகிறார்கள். அதன்படி நல்லையாவை பதிலுக்குப் பலி கொடுக்க ஒத்துக்கொள்கிறார்கள்

நல்லையாவை ஊரே கொண்டாடுகிறது. உணவூட்டுகிறது. சீராட்டுகிறது. அவன் மரணநாள் நெருங்கி வருகிறது. உயிருக்குப் பயந்த அவன் தன் தாயின் ஊரான தாதனூருக்குச் சென்றுவிடுகிறான். தாதனூரின் வாக்கை உதறி வாழ்க்கைப்பட்டு போன ஒரு பெண்ணின் மகன் அவன். நல்லையாவுக்குப் பதிலாக பகை ஊருக்கு பலி அளிக்கப்பட்டவனின் பிள்ளைகளுக்கு நல்லையா என்ற சின்னானை பலிகொள்ள உரிமை இருக்கிறது. அவர்கள் வந்து சின்னானை கொல்கிறார்கள். தாதனூர் அவனை சின்னிவீரம்பட்டியிடம் இருந்து காப்பாற்றவில்லை.

வசந்தபாலன் இதெல்லாம் சின்ன விஷயம் என்று விட்டுவிட்டவையெல்லாம் பெரியாதாக தெரிகின்றன. அதற்காக அவரை ஒட்டு மொத்தமாக குறை சொல்லிவிட முடியாது. குறைசொல்லவும் கூடாது. கதாநாயகியின் மார்பு மடிப்புகளில் மயங்கிக் கிடக்கும் திரையுலகை கள்ளர்களின் வரலாற்று பக்கங்களை பதிவு செய்து 10 ஆண்டு கால வெங்கடேசனின் உழைப்பை எளிய மக்களுக்கும் சென்று சேர்த்தமைக்கும், பசுபதி, ஆதி போன்ற நடிகர்களை திறன்பட பயன்படுத்தியமைக்கும் நன்றி சொல்லியே ஆகவேண்டும். இருந்தாலும் குமணாண்டியின் தங்கை செல்லாயி கணவனுக்கு துருப்பு கொடுத்துவிட்டு வந்து, ஆசைப்பட்ட சின்னானை திருமணம் செய்வதை ஒருதலை காதலாக ஏன் மாற்றினார் என்று வசந்தபாலனை நிச்சயம் கேட்கவேண்டும். இப்படி பெண்கள் செய்வதை எல்லாம் மறைத்து மறைத்து வைத்துதான், இன்று வரை இந்த உலகம் பெண்களுக்காக ஒரு புனித தன்மை உண்டாக்கி தன்னை தானே ஏமாற்றி கொண்டிருக்கிறது. அதுசரி யார் அந்த குமணாண்டி யார் என கேட்கின்றீர்களா. காவல் கோட்டத்தின் 282ம் பக்கத்தை புரட்டுங்கள் நண்பர்களே…

வாசிப்பின் இடைவேளையில் சில வரிகள்

இந்த வருட புத்தக கண்காட்சிக்கு புத்தகங்களை தேர்வு செய்யும் போது, இலக்கியத்துவமான படைப்புகளை தேர்ந்தெடுத்தேன். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று நாஞ்சில் நாடனின் சூடிய பூ சூடற்க சிறுகதை தொகுப்பு. எண்ணற்ற சிபாரிசுகளும், சாகித்ய அகாதமி விருதும் இந்த புத்தகத்தினை தேர்வு செய்ய வைத்தன. நாஞ்சில் எழுத்துகளை முதன்முறையாக நான் படிக்கப்போகிறேன் என்ற ஆவல் இருந்ததே தவிற வேறு ஒன்றும் பெரியதாக தோன்றவில்லை. ஆனால் இந்தப் புத்தகம் என் வாசிப்பு அனுபவத்தை புரட்டி போடப் போகிறது என்பதை எண்ணிக் கூட பார்க்கவில்லை.

இப்போது நான்கு கதைகளை தான் படித்து முடித்திருக்கிறேன். அதற்குள் இதுதான் சிறுகதை என இதுநாள் வரை நான் நினைத்திருந்த பின்பத்தை உடைத்தெரிந்துவிட்டன இந்த சிறுகதைகள். இயல்பான காட்சியமைப்பு இறுதியாக ஒரு மாறுபட்ட முடிவு என குமுதம், குங்குமம் வாரப் புத்தகங்களில் ஒரு பக்கத்தில் வருவதையோ, சில பக்கங்களில் காட்சிகளை விளக்கி நீதி சொல்லும் நீதிநெறிக் கதைகளோ, பிரபல எழுத்தாளர்கள் எழுதிய கதைகளையோ வடிவத்தில் ஞாபகம் செய்யாமல் செல்லுகின்ற ஒவ்வொரு கதைகளையும் ரசித்து ரசித்து படித்தேன்.

இன்னும் படிக்க பதினொரு கதைகள் இருக்கின்றன என்பது, ஏதோ புதையலில் கிடைத்த தங்க காசுகளைப் போல மகிழ்ச்சியை தந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு கதையின் தொடக்கமும் மிகுந்த கவணத்தோடு காட்சிகளை விவரிக்கின்றன. அந்தக் காட்சிகள் மனகண் முன் விரிகையில் அது கதை என்பதை மறந்து போயி அதற்குள் புதைந்து விடுகிறேன். தாய்கிழவியின் கணிவோடு தான் சொல்ல வந்ததை மிகத் தெளிவாக அந்தக் கதை சொல்லிவிட்டு முடிந்துவிடுகிறது. அதன்பின் அந்தக் கதையின் மாந்தர்கள் அதன் நிகழ்விடங்களில் சிறுது நேரம் மனத்திற்குள் வாழ்கின்றார்கள். அவர்களை அப்படியே விட்டுவிட்டு மனம் வேறு காரியங்களில் நுழைய மறுத்து மௌனமாக இருக்கிறது.

ஏதேனும் ஒரு கனத்தில் நான் உணர்ந்தவைகளை எழுத்தின் வடிவில் பார்ப்பது, எனக்கும் அந்த கதைகளுக்குமான இடைவெளியை இல்லாமல் செய்துவிடுகின்றன. கதைகள் எனக்குள் ஏற்படுத்திய உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். சிலருக்கு இது வெறும் பிதற்றலாக தோன்றலாம். சிலருக்கு வேடிக்கையாக கூட இருக்கலாம். வார்த்தைகளால் விவரிக்க முடியாது என கருதும் ஒரு மகிழ்வான கனத்தினை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

கல்கியின் பார்த்திபன் கனவிற்கு அடுத்து இப்போதுதான், பெரும் எதிர்பார்ப்புடன் ஒரு நாவலை படிக்க தொடங்கியிருக்கிறேன். அது ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவல். பார்த்திபன் கனவினை படிக்கும் போது, நான் பள்ளி செல்லும் மாணவன். மாலையில் கிடைக்கும் நேரத்தி்ல் எல்லாம் நாவல் என்னுடன் இருந்தது. குதிரையின் குளம்படி சத்தமும், வால்களில் ஓசையும், அந்தபுற ராணிகளின் குதுகல ஒலிகளும் மனகாதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்ததன. ராஜேஸ்குமார், சுபா என திரில் நாவல்களை படிக்கும் போது, அப்பா திட்டியிருக்கிறார். ஆனால் பார்த்திபன் கனவினை படிக்கும் போது ஒன்றும் சொல்லவில்லை. இந்த வாசி்ப்பு தளம் நோக்கி என்னை பயணப்பட வைத்தது அவர்தான் என நினைக்கிறேன். இதற்குதான் அவர் ஆசைப்பட்டிருக்கவும் கூடும்.

சரி விஷ்ணுபுரத்திற்கு வருவோம். வலைப்பூவில் ஜெயமோகன் அவர்களின் எழுத்துகளையும், சில கதைகளையும் படித்திருக்கிறேன். அவரை சிலர் இந்துத்துவாதி என குறிப்பிடுகின்றனர். எப்படி அமெரிக்காவில் கிருஸ்துவம் பற்றிய நிறைய படைப்புகள் வருகின்றனவோ, அதுபோல இங்கே இந்துமதம் பற்றிய படைப்புகள் வருகின்றன. அது வியாபார தந்திரமோ, சுற்றியிருக்கும் சமூகத்தின் காரணமாகவோ, இல்லை பெரும் காவியங்களின் பாதிப்போ எதுவென தெரியவில்லை. இந்து மதம் பிடிக்காத நடிகர்களை கூட வேலு, வேலாயுதம் என நடிக்கவைக்கும் காரணமும் அதுவாகத்தான் இருக்கும்.

இப்போதுதான் விஷ்ணுபுரத்திற்குள் நுழைந்திருக்கிறேன். பிரம்மாண்டமான கோவிலைக் கொண்ட விஷ்ணுபுரத்தில் விஷ்ணு படுத்திருப்பதைப் போல அங்கே ஒரு குஸ்டரோகியும் படுத்திருக்கிறான். அதைக் கண்டு ஒருவன் நிறைய சிந்தனை செய்கிறான். இல்லாத ஒரு கற்பனை நகரமன அதை எண்ணாமல், எங்கள் திருச்சி மாவட்டத்தின் திருவரங்கத்தினை மனதில் நிறுத்தி கதையை தொடர்ந்து கொண்டிருக்கிறேன். விஷ்ணுபுரமும், திருவரங்கமும் எனக்கு ஒன்றாகவே தோன்றுகின்றன. என் கற்பனையில் விஷ்ணுபுரம் திருவரங்கத்தின் பெரும் உருவகமாகவே தோன்றுகிறது. காற்றில் ஒலியெழுப்பும் தூண்கள், மிகப் பிரம்மாண்டமான கோபுரங்கள், விஷ்ணு படுத்திருக்கும் விதம் என எல்லாம் ஏற்கனவே அறிமுகமானவையாக இருப்பதால், இது புனைவு என்பதை அடிக்கடி மறந்து போகிறேன். தொடக்கமே அலாதியாக இருக்கிறது. இன்னும் சரியாக பத்து அத்தியாங்கள் கூட படிக்காமல் விஷ்ணுபுரம் பற்றி மேலும் கூற இயலாது. எல்லாம் படித்துவிட்டு வருகிறேன். என்னுடைய வாசிப்பு அனுபவம் போல நீங்களும் உணர்ந்திருந்தால் நிச்சயம் அந்த புத்தகம் பற்றி கருத்துரையில் மறக்காமல் குறிப்பிடுங்கள் நண்பர்களே.