குரங்குநாதர் கோயில் குழந்தைகள் 2

சென்றப்பதிவில் கையில் பூக்களுடன் இறைவனுக்காக கசிந்துருகும் பக்தன் சிலையைப் பார்த்தோம். இந்தப் பதிவில் தென்முகக் கடவுள் சிற்பத் தொகுதியை காணலாம்.

சனத்குமாரர்கள் எனும் நான்கு பிரம்ம மைந்தர்கள் ஞானத்தினைப் பெறுவதற்காக பிரம்மாவையும், திருமாலையும் கண்டு அவர்கள் தம்பதி சமேதராய் வாழ்வதாலேயே நிராகரித்தனர். தங்கள் குருவினைத் தேடி வருகையில் ஈசன் அவர்களுக்கு இளைஞன் வடிவெடுத்து ஆலமரத்தின் கீழ் தட்சிணாமூர்த்தி என்ற வடிவமாக அமர்ந்தார். சிவாலயங்களின் கோஷ்டத்தில் தெற்குநோக்கியவாறு இருக்கும் அவரை இன்றைய பக்தர்கள் குருவென அழைத்து வியாழன் தோறும் சுண்டல்மாலையுடன் சந்திக்கிறார்கள். ஞானத்தின் தேடலுக்கு அவரும் அருள் செய்து கொண்டுள்ளார்.

அந்த தட்சணாமூர்த்தி குரங்குநாதர் கோயிலிலும் இருக்கிறார். சற்று சிதைந்து இருந்தாலும், முற்றிலுமாக அழிக்கப்படாமல் இருப்பது நம்மை மகிழச் செய்கிறது.  அவரும் அவரைச் சுற்றியிருக்கும் சிற்பங்களும் உயிரோட்டமாக உள்ளன. இத்தனை சித்திரவாதைகளுக்குப் பின்னும் உயிரோடு இருக்கும் சிற்பங்களை சிதைக்க கல்மனத்துக்காரர்களாலேயே முடியும்.

இனி நாம் தட்சிணாமூர்த்தியை கவனிப்போம். இறையின் அடியைப் பற்றினால்தானே மோட்சம். தட்சிணாமூர்த்தியின் அடியை கவனிப்போம். சிதைக்கும் எண்ணம் கொண்டவர்களால் சிதைக்க முடியாத பாதங்கள் மட்டும் அந்தரத்தில் இருந்து முயலகனின் மேல் இருக்கின்றன. ஆகா.. முயலகன். இந்து சமயத்தவர்களின் குறியீட்டு சின்னம் முயலகன். அறிவே வடிவான ஞானமூர்த்தி, அஞ்ஞானத்தினை காலடியிட்டு இட்டு மிதிக்கிறார் என்ற கருத்துருவின் வடிவு. முலகனை உற்று நோக்கினோல் அவன் தட்சிணாமூர்த்தியின் அழுத்ததால் ஆ.. வென கதறுவது தெரியும். சோழச் சிற்பியின் திறம்.

தட்சிணாமூர்த்தி சிற்பத் தொகுதி. கட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது, முயகனை மிதிக்கும் ஈசனின் பாதம்.

001

கால்கள் வெட்டப்பட்டாலும், சிதைவுறாமல் சேதி சொல்லும் பாதம். முயலகன் ஏறக்குறைய பூதவடிவில் குறுகைகளும், குறுகால்களும் கொண்டு இருக்கிறார்.

002

ஈசனின் திருவடி  முயலகனின் மீது இருப்பதும், முயலகனின் முக பாவனையும் தெரிகிறாதா.

003

இதோ “ஆ..” வென வாய் திறந்து அலறும் முகப்பாவம்.

004

குரங்குநாதர் கோயில் குழந்தைகள்

சீனிவாசநல்லூர். சிவபெருமானின் பிரதானப் பக்தன் சீனிவாசன் வசிக்கும் நல்ல ஊர். எங்கள் காட்டுப்புத்தூரிலிருந்து முசிறி செல்லும் வழியில் தொட்டியத்திற்கு அடுத்தபடியாக இருக்கும் ஊர். நீங்கள் திருச்சியிலிருந்து சேலம் செல்லும் போது முசிறியைக் கடந்ததும் இவ்வுரை எதிர்ப்பார்த்து இருக்கலாம்.

காட்டுப்புத்தூரிலிருந்து முசிறி நோக்கி செல்லும் போது ஒவ்வொரு முறையும் தொட்டியத்தினை கடக்கும் போது சீனிவாசநல்லூர் குரங்குநாதர் கோயிலை ஏக்கத்துடன் பார்த்துச் செல்வேன். இந்தக் கோயில் எப்போதுதான் திறக்கும் என விசாரித்துக் கொள்வேன். யாருக்கும் தெரியவில்லை. இம்முறை அவ்வழியாக சென்ற போது, பூட்டியக் கோயிலையாவது காண்போம் என சென்றேன்.

கோயிலுக்கு அருகே உள்ள ஒரு மரத்தின் நிழலில் கயிற்று கட்டிலில் ஒரு மூதாட்டி அமர்ந்திருந்தாள். அவளுடைய பேரன் விளையாடிக் கொண்டிருந்தான். இனி எங்களின் உரையாடல்கள்.

“அம்மா.. இந்தக் கோயில் எப்பங்க திறந்திருக்கும்”

“அது இந்தக் கோயிலோட சாவி தஞ்சாவூர் ஆபிசருங்க கிட்ட இருக்குதுப்பா. அவுங்க வந்து திறந்தாதான் உண்டு.”

“அப்படிங்களா, எப்பவாச்சும் வந்து திறப்பாங்களா”

“அவுங்க வந்தா தான் உண்டு. எப்ப வருவாங்கன்னு தெரியாதுப்பா. உள்ளுக்கார சாமியில்லை. தூணுதான் இருக்கு. நீங்க எந்த ஊரு”

“நான் காட்டுப்புத்தூருங்க”

“காலையிலக் கூட இரண்டு மூணுபேரு வந்து கேட்டாங்க. என்னப்பா பன்னறது சாவி இல்லையே. இந்தக் கேட்டு சும்மாதான் சாத்தியிருக்கு. நீ வேணா சுத்தி இருக்கிறதைப் பார்த்துட்டு போ.”

“சரிங்க”

20161001_123526-copy

நான் கோயிலைக் கவனித்தேன். இது கோயிலா.. இல்லை. கருவறையும், அர்த்தமண்டபமும் மட்டுமே கொண்ட ஒரு சன்னதி அவ்வளவுதான். பிறந்தநாள் கேக்கில் எல்லோருக்கும் பங்கு போட்டு கொடுத்தப் பிறகு நடுப்பகுதி எஞ்சியிருக்குமே அப்படிதான் இருக்கிறது மூலவர் சன்னதி. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் மூலவரை மீண்டும் வைத்து கோயிலை புரணமைக்காமல் அப்படியே வைத்துள்ளார்கள். எந்தக் காரணத்திற்காக உருவாக்கப்பட்டதோ அந்தக் காரணம் நிறைவேறாமல் சூன்யமாக இருக்கிறது.

வேலியை விட சன்னதி கீழ் மட்டத்தில் இருக்கிறது. நம்மவர்கள் சாலைகளை உயர்த்த, அருகிலுள்ள வீடுகள் கீழே செல்ல. மீண்டும் வீடுகள் உயர்த்திக் கட்டப்பட, சாலைகள் அதற்கும் மேலும் உயர்ததப்பட என இங்கு நடக்கும் அரசாங்க தனியார் போரின் உச்சத்தால் இந்த நிலை.

நான் கதவினைத் திறப்பது கண்டு என்னுடைய சிற்றன்னையும் வந்து இணைந்து கொண்டார். கருவறை ஒரு முறை வலம் வந்து முடிந்தமட்டும் கைப்பேசியால் புகைப்படம் எடுத்துக் கொண்டு கிளம்பினோம். ஒரு சுற்று அல்லை. ஒரு நாள் அமர்ந்து காணக் கூடிய வகையில் சிற்பங்கள் அமைந்துள்ளன. அத்தனை நுட்பம். அவற்றை முடிந்த மட்டும் இடுகைகளாகத் தரப்பார்க்கிறேன்.

 

 

205

மேற்கண்டப் படத்தில் கருவறை கோஷ்டத்தில் இருக்கும் சிற்பத்தினைக் காண்கின்றீர்கள். தூரத்தில் இருந்துப் பார்த்தால் அவருடைய கைகள் வணக்கம் தெரிவித்தபடி இருப்பதாக தோன்றும், ஆனால் நன்கு நோக்கும் போது கைகளிடையே பூக்கள் உள்ளதைக் காணலாம். பூவினால் செய்தலே பூசை என்று நம்முன்னோர்கள் தெரிவித்துள்ளார்கள். இறைவனை வணங்குவதற்கு கற்பூரம் காட்டுவதும், ஆராத்திகள் எடுப்பதும் பிற்காலத்தில் வந்த சடங்கு முறைகள். நம் முன்னோர்கள் பூக்களை இறையுருவின் மீது தூவி வழிபட்டு வந்துள்ளார்கள். அந்த பாரம்பரியத்தினை விளக்கும் சிற்பம் இது.