திருப்பூத்து

அன்றைய நாள் பகவதி மிக அழகான ஆடை உடுத்தியிருந்தாள். நேற்று அவளைக் காணவந்த ஒரு ஒருவர், அவளுக்கு  பட்டுச்சட்டையும், பட்டுப்பாவாடையும் வாங்கிவந்திருந்திருந்தார். பட்டுச்சட்டையில் ஆங்காங்கே மாங்காய் லட்சனை பதிக்கப்பட்டிருந்தது. பாவாடையின் இறுதியில் அதே மாங்காய் சின்னங்கள் அணிவகுத்திருந்தன. பகவதியை அவர் முன்பு பார்த்தில்லை என்றாலும் அவளுக்கு மிகப் பொருத்தமான பச்சையாடையை தந்திருந்தார். அதைப் போட்டுக் கொண்டு பகவதி தன்னைக் காண வருகின்றவர்கள் அத்தனை பேரிடமும் அந்த சட்டையைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தாள். அவளுக்கு அளவுக்கு அதிகமான உற்சாகம் இருந்தது. நேற்று மொத்தமும் அவள் மகிழ்ச்சியாக இருந்தாள். ஆனால் யார் கண் பட்டதோ, இன்று காலையிலிருந்து அவளுடைய வயிற்றில் லேசான வலியுண்டானது. ஒரு வேளை நேற்று அளவுக்கு அதிகமாக உண்டு விட்டேனோ என்று யோசித்துப் பார்த்தாள், மகிழ்ச்சியில் எந்த அளவுக்கு உண்டாள் என்றே அவளுக்கு நினைவில்லை.

தொப்புளுக்குக் கீழ்பகுதியில் அடிவற்றியில் இருந்த வலி கொஞ்சம் அதிகரித்தது. அந்த வலி அப்படியே மெல்ல மெல்ல கீழ்நோக்கி அல்குல்  வரை சென்று ஒரு சுண்டு சுண்டியது. இதுநாள் வரை இப்படியொரு வலியை அவள் உணர்ந்ததே இல்லை. இது புதுமாதிரியான வலியனுபவம். உதவிக்கு ஒரு பெண்ணிடம் செல்ல அவளுக்கு ஆசையாக இருந்தது. ஆனால் கண்களுக்கு எட்டியவரை எந்தப் பெண்களும் இல்லை. அவ்வப்போது சில ஆண்கள் மேலாடையின்றி அங்கும் இங்கும் நடந்துக் கொண்டிருந்தார்கள். ஆபத்துக்குப் பாவமில்லை என்று அவர்களையே அழைத்துவிடலாமா என்று பகவதிக்கு தோன்றியது. ஆனாலும் இத்தனை நாள் போற்றிக் காப்பாற்றிய ஏதோ ஒன்று அவளைத் தடுத்துவிட்டது.

வயிற்றுப்பகுதியிருந்து அல்குல் வரை சொல்லப்படாத வலியோடு நின்றபடி இருந்தாள். நேற்று புதிதாக உடுத்திய பட்டுப்பாவடையில் ரத்தக் கரைப் பட்டது. பகவதி தனக்குள் பொறுமிக் கொண்டிருந்தது அங்கு அலைந்துக் கொண்டிருந்தவருக்கு கேட்டதோ என்னவோ, அவர் பகவதியின் முன்னால் இருந்த பொருட்களையெல்லாம் ஓரமாக வைத்துவிட்டு, ஒரு திரையை இழுத்துவிட்டார். பின்பு பகவதியை நெருங்கி அவளுடைய சட்டையையும் பாவாடையும் எடுத்துவிட்டார். பகவதிக்கு வெக்கமாகவும் அருவருப்பாகவும்  இருந்தது. எதுவும் செய்ய முடியாதவளாய் நின்றாள். முன்னும் பின்னுமாக சட்டையையும் பாவாடையையும் பார்த்தவர், அதிர்ந்தார். பகவதியை ஆச்சிரியமாகப் பார்த்துவிட்டு, அவளுடைய அல்குலை தொடையோடு தடவிப் பார்த்தார். கை பிசுபிசுத்தது. வெளியே சென்றார். சிலரை அழைத்து பாவாடையைக் காட்டிப் பேசினார். எல்லோரும் ஆண்கள் என்பதால் சரியான முடிவுக்கு வரமுடியவில்லை. அந்த மனிதனர் வீட்டிற்கு ஓடி, தன்னுடைய மனைவியிடம் காட்டினார். அவள் பகவதி பெரியவளாகிவிட்டாள் என்று கூறினாள். அதன்பின் பகவதியை அந்த இடத்திலிருந்து தூக்கி தனியாக குடிசைக்குள் அந்த மனிதரே வைத்தார். எல்லோரிடமும் இந்த சம்பவத்தைக் கூறி, அவளை யாரும் பார்க்காத வண்ணம் செய்தார்.

சிறையில் அடைக்கப்பட்டது போல பகவதி எதுவும் புரியாமல் நின்றுகொண்டிருந்தாள். மூன்றாம் நாள் அவளை ஆற்றுக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டி மீண்டும் புத்தாடை கொடுத்து நிறுத்திவைத்தார்கள். மீண்டும் அவளை பார்க்க நிறைய நபர்கள் வந்தார்கள். யாரேனும் ஒரு பெண்ணைப் பார்த்து தனக்கு எனக்கு நடந்தது என்று அறிந்து கொள்ள ஆவலாய் இருந்தாள் பகவதி. ஆனால் எல்லோருமே அவளுடைய அறைக்கு வராமல் அவளை கைகூப்பி பார்த்துவிட்டு சென்றனர். மனவருத்ததுடன் தன்னுடைய பீடத்திலேயே நின்றிருந்தாள் செங்கன்னூர் பகவதி அம்மன்.

பொங்கச்சோறு – சிறுகதை

pongalsoru

அன்று மாலையில் பெய்யத்தொடங்கிய மழை சன்னமாக இருள்கவிழ்ந்தும் தொடர்ந்து கொண்டிருந்தது. உறவுமுடிந்து கிடக்கும் உடல்போல பூமி குளிந்திருந்தது. எங்களுடைய அறை சன்னல் வழியாய் மழையின் இசையை கேட்டவாறு படுத்திருந்தோம். நீண்டிருந்த மௌனத்தை “அப்பாக்கிட்ட ஒரு கதை கேளுடா மவனே” என வெட்டினாள்.
“டேய்.. பயலே.. அம்மாக்கிட்ட சொல்லிடு. கதை முழுசும் கேட்கலைன்னா.. அபிமன்யூ போல எங்காவது போய் மாட்டிக்குவேன். அதனால கதை முழுசும் முடியிற வரைக்கும் அம்மா தூங்க கூடாதுன்னு”
“தூக்கம் வராத மாதிரி கதையை சொல்லச் சொல்லுடா. ”
“கதையெல்லாம் தூக்கம் வரதுக்கு சொல்லறதுல்ல இல்லை. அப்படி தூக்கம் வரதுக்குன்னு சொல்லியிருந்தா, பாதிக் கதைதானே இருக்கும்.”
“அதெல்லாம் சரிதான். கதையை ஆரமியுங்க. உள்ளுக்குள்ள பையன் தூங்கிடப் போகுது”
“ம்.. ஒரு காலத்துல ஒரு ராஜா இருந்தாராம்…”
“ம்கூம்.. இராஜா கதை வேணாம்.”
“ஏ.. என்னடீ. அது வேணாம் இது வேணாமுனுக்கிட்டு. தெரிஞ்ச கதையைத் தானே சொல்ல முடியும்.”
“வேற ஏதாவது கதையைச் சொல்லுங்க.”

“சிவபுரமுன்னு ஒரு ஊரு. அந்த ஊருக்கு நடுவிலேயே ஒரு சிவன்கோயில் பாழடைஞ்சுக் கிடந்துச்சு. அந்த சிவன்கோயிலுக்கு தினமும் ஒரு அய்யர் மட்டும் வந்து பூசை செஞ்சிட்டு போவாரு. கையில கொஞ்சம் சக்கரைப் பொங்கல் எடுத்துவருவாரு. பிள்ளையாருக்கும், சிவனுக்கும் இரண்டு குடம் தண்ணியை ஊத்தி கழுவிட்டு, மத்த சாமிகளுக்கெல்லாம் கொஞ்சம் தண்ணியை தெளிச்சு விடுவாரு. ”
“ஏங்க எல்லா சாமிக்கும் அபிசேகம் செய்ய மாட்டாறா..”
“ஒத்த ஆளு, அந்தக் கோயில இருக்கிற நாயன்மார்களே 63 பேரு, அப்புறம் மீதம் வள்ளி, தெய்வானை முருகன், ஏழு கன்னிகள் அதெல்லாம் ஒழுங்கா கழுவி வேலை செய்யனுமுன்னா பெரிய கூட்டமுள்ள வேணும்..”
“சரி கதையை சொல்லுங்க..”

“தனக்காக ஒருத்தன் தினமும் வந்து நெய்வேத்தியம் பண்ணறான்னு, சிவபெருமான் கைலாயத்துல இருந்து தினமும் நேரத்துக்கு கோயிலுக்கு வந்துடுவாராம். இந்த அய்யரு பூசையெல்லாம் செஞ்சிட்டு அந்தப் பொங்கலை சாமிக்கு கொடுக்காம எடுத்துக்கிட்டு போயிடுவாறாம்.”
“ம்கூம்.. ஆரமிச்சுட்டிங்களா..”
“இந்தா.. இப்படி இடை இடையே தடுத்தீன்னா.. கதையெல்லாம் சொல்ல மாட்டேன். மகனே உன் ஆத்தா.. கதை சொல்லவிடமாட்டேங்குதுடா.”
“ம்..சரி.. சரி.. அப்பனாச்சு, மகனாச்சு.. ”

“அந்தக் கோயிலுக்கு சிவபெருமான் தினமும் போறதும், அந்தக் கோயில் அய்யர் பொங்கலைத் தராம வீட்டுக்கு எடுத்துக்கிட்டு போறதையும் கைலாயத்துல இருக்கிற இரண்டு பூதங்களுக்கு தெரிஞ்சுப் போச்சு. அதுங்க இரண்டும் சண்டி, முண்டின்னு பேரு. நிறைய குறும்பு பிடிச்சதுங்க. தங்களுக்கு தெரிஞ்சத மறைச்சு வைக்காம, எல்லா சிவகணத்தையும் கூட்டி ஒரு நாடகமா நடிச்சு காட்டியதுங்க. சண்டி சிவபெருமான் மாதிரி உட்காந்து கொள்ள, முண்டி அய்யராக வந்து பொங்கலை அவரிடம் காட்டி உடனே மூடிக்கொண்டது. சண்டி அதைப் பார்த்து தனக்கு பொங்கல் கிடைக்கவில்லையே என ஏக்கப் பெருமூச்சு விட, முண்டி பொங்கலை வெளுத்துக் கட்டுவதாக நடிச்சது. இதையெல்லாம் பார்த்த சிவ கணங்கள் வயிறு குலுங்க குலுங்க சிரித்தன. கைலாயத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த சிவபெருமானுக்கு இந்த சிரிப்புச் சத்தம் கேட்டது.”

“எதற்காக இந்த சிரிப்புச் சத்தம் வருகிறது என்பது சிவபெருமானுக்கு தெரிஞ்சுப் போச்சு. சண்டி, முண்டி இரண்டு பேரையும் கைலாயத்தை விட்டுட்டு சிவபுரம்  கோயிலுள்ள இருக்க சொல்லிட்டாரு. சிவபெருமானுக்கே பொங்கல் தராத அய்யரா, பூதங்களுக்கு தந்திடப் போறாரு. இரண்டு மூனு நாளா சாப்பாடு கிடைக்காம பூதங்கள் பசியாவே கிடந்துச்சுங்க. அடுத்த நாளு அய்யர் வந்து பூசை செய்யும் போது பொங்கல் மொத்தத்தையும் காலி பண்ணிடுச்சுங்க. சாப்பிட்டதுக்கு அப்புறமா அதுகளுக்கு மறுபடியும் குறும்புத்தனம் வந்துச்சு. அய்யர் வீட்டுக்கு கிளம்பும் போது பொங்கல் சட்டியை எடுத்தா. அது கணம் இல்லாம இருந்துச்சு. அய்யருக்கு உள்ளுக்குள்ள பயம் வந்துச்சு. மெதுவாக சட்டியை திறந்து பார்த்தா கொஞ்சம் கூட மிச்சம் இல்ல.”
“அய்யரு சட்டியை அங்கேயே போட்டுட்டு ஊரு முழுக்க சாமி பொங்கல சாப்பிட்டுச்சுன்னு சொன்னாரு. ஒன்னு ரெண்டு பேரு அடுத்த நாள் பொங்கலை செஞ்சு கொண்டுவந்து படைச்சாங்க. அதையும் சண்டியும் முண்டியும் சாப்பிட்டுட்டு காலியாகவே வைச்சுச்சுக்கு. அவங்களும் மக்கள்கிட்ட சாமி பொங்கலை சாப்பிடுவதைச் சொன்னாங்க. ”
“கொஞ்ச நாள் கழிச்சு. சிவபெருமானுக்கு சண்டியையும், முண்டியையும் பத்தி நெனச்சுக்கிட்டாரு. சரி அருளே வடிவான நாமளே மன்னிக்கலேன்னா எப்படியென, அவர்களை மன்னிச்சு சிவபுரத்துக்கு வந்தார். அந்த ஊரே தலைகீழா மாறிப்போயிருந்துச்சு. சாலையில் இரண்டு பக்கமும் சொகுசு வண்டிகளிலிருந்து மிதிவண்டிவரைக்கும் வரிசை கட்டி நின்றன. பொங்கல் வைக்க தனியாக ஒரு திடலே இருந்தது. அங்கே கூட்டம் கூட்டமாக மக்கள் பொங்கல் வைச்சுக்கிட்டு இருந்தாங்க.பொங்கலுக்கு தேவையான அரிசியும், வெல்லமும் விற்பதற்காக கடைகள் இருந்தன. எங்கிருந்தோ வந்த யாகசம் கேட்பவர்கள் வரிசையாக அமர்ந்திருந்தார்கள். பொங்கலை வைக்க சட்டிகள் ஒரு பக்கம் வானுய அடுக்கப்பட்டிருந்தது. எல்லாத்தையும் பார்த்துட்டு சிவபெருமான் கோயிலுள் போனார். அங்கே சண்டி முண்டியோட சேர்ந்து பக்கத்து ஊருல இருக்கிற எல்லா சாமிகளும்  சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். “

பேருந்துக்குள் மழை – சிறுகதை

Rain-Korea copy

“தம்பி.. தம்பி.. வலையப்பட்டி இறங்கனுமுன்னு பேசிக்கிட்டு வந்திங்க. இப்படி தூங்கிக்கிட்டு இருக்கிங்க” அருகில் இருக்கும் புண்ணியவான் தூக்கத்தினைக் கலைத்தார்.

“வலையப்பட்டி வந்துடுச்சுங்களா” மிரட்சியுடன் கேட்டேன்.

“இல்லைப்பா. இனிமேதான் வரப்போகுது.”

“அப்பாடா” உண்மையிலேயே அவர் புண்ணியவான்தான். அவர் எழுப்ப வில்லையென்றால் வலையப்பட்டியைத் தாண்டி பேருந்து செல்லும் போது, எதற்சையாக என்னைக் காணும் நடத்துனர். கண்டபடி வசைபாடி ஏதேனும் ஒரு நிறுத்ததில் தள்ளிவிட்டு போயிருப்பார். அதன் பின்பு அங்கிலிருந்து மீண்டும் வலையப்பட்டிக்கு வந்திருக்க வேண்டும். ம்.. அது நடவாமல் போனது மகிழ்ச்சி. நான் எழுந்து மேலே வைத்திருந்த ஒரு சின்ன சோல்டர் பேக்கையும், அதற்குப் பின் ஒளித்துவைத்த லேப்டாப் பையையும் எடுத்துக் கொண்டேன்.

மணியைப் பார்த்தேன். அதிகாலை மூன்று. அருகில் என்னுடன் இறங்க ஒருவர் ஆயத்தமாக இருந்தார். ஓய்வு பெற்ற காவலதிகாரியா, இல்லை ஏதேனும் கிராமத்து பஞ்சாயத்து தலைவரா தெரியவில்லை. இறுகிய முகத்தில் தடித்த முறுக்கிய மீசை.. நான் முகத்தை திருப்பி சாலையில் கவனத்தினை வைத்தேன்.

“வலையப்பட்டியெல்லாம் இறங்கு” நடத்துனரின் குரல் மட்டும் கேட்டது. படபடவென இறங்கி சாலையைக் கடந்து பேருந்து நிறுத்ததில் நின்றுகொண்டேன். இனி நான்கு முப்பது வரை காத்திருக்க வேண்டும். அப்போதுதான் என்னுடைய ஊருக்கு செல்ல பேருந்து வரும். அதுவும் அதிஸ்டமிருந்தால். சென்ற முறை வந்தபோது ஐந்து இருபத்துக்குதான் வந்தது.

ஐந்து நிமிடங்களுக்கு பத்து பதினைந்து பேருந்துகள் வந்துபோகும் நகரங்களிலிருந்து கிராமத்திற்கு வந்தால், காத்திருப்பின் கடினம் புரிந்து போகும். திருச்சியிலிருந்து சேலத்திற்கோ, நாமக்கல்லிற்கு செல்லும் இரவுப் பேருந்தினைப் பிடித்து இந்த ஊர் வரை வந்துவிடலாம். அதன்பின்பு இங்கிருந்து காட்டுப்புத்தூருக்கு உள்ளே செல்ல தனிப் பேருந்து வரும். அதிலும் எங்கள் ஊர் இந்த சாலையின் உள்ளே இருக்கிறது. அதற்கு மூன்று நான்கு பேருந்துக்கு ஒன்றுதான் எங்களூருக்கு செல்லும். அப்படி இப்படியென ஒரு அரைமணி நேரத்தினைக் கழித்திருந்தேன். சாலைக்கு அந்தப் பக்கத்திலிருக்கும் டீகடைக்கு சென்றாலாவது நேரத்தினைக் கழிக்கலாம் என தோன்றியது. ம்.. அதுதான் சரியான முடிவென பைகளைத் தூக்கிக் கொண்டு சென்றேன். ஒடிசலாய் ஒருவர் நின்று புகைத்துக் கொண்டிருந்தார். ஓரு பீடியே பீடி பிடிக்கிறதே என பார்த்திபன் போல கவிதை வந்தது.

அந்த மீசைக்காரர் பென்ச்சில் அமர்ந்து நாளிதலைப் பார்த்துக் கொண்டிருந்தார். விடியும் முன்பே பிரதானச் சாலைகளில் இருக்கும் டீகடைகளுக்கு செய்திதாள்கள் வந்துவிடுகின்றன. எங்களூருக்கு காலை ஏழு மணிக்கு கேகேபி பேருந்தில்தான் வரும். சில நேரங்களில் அந்தப் பேருந்தும் வராமல் போனால். மறுநாள்தான் கிடைக்கும். அவர் தீண்டாமல் வைத்திருந்த துணுக்கு செய்திதாளை எடுத்து அமர்ந்தேன்.

“சார் டீயா”

“ம்.. ராகிமால்ட் இருக்கா”

இல்லை சாரே. தீர்ந்துபோயிடுச்சு. டீ தாரேன்.

சரி. ஒரு டீ… ஆர்டர் தந்துவிட்டேன். அந்த செய்திதாளில் உள்ளூரில் நடந்த கடை திறப்பு, கட்சி கூட்டம் போன்றவற்றை எல்லாம் தவிர்த்து எந்த எந்த திரையரங்குகளில் என்ன படம் ஓடுகிறது என்பதே பல பக்கங்களுக்கு இருந்தது. அதை வைத்துக் கொண்டு இனி ஒப்பேற்ற முடியாது எனும் போது சரியாக டீ வந்தது.

“காட்டுப்புத்தூருக்கு போறீங்களா”

“இல்லைன்னா முன்னாடியே ஆலம்பட்டி”

“சரி சரி. நாலே முக்காலுக்கு வந்துடும்” இன்னும் கால் மணிநேரம் கூடுதலாக.. ம்.. விடியகாலை இருட்டில் காத்திருப்பது. அதற்குள் இரண்டு மூன்று சேலம் பேருந்துகள் கடந்து போயிருந்தன. திருச்சிக்கு ஒரே ஒரு பேருந்து போனது. அதிலிருந்து இறங்கியவர்களுக்காக இருசக்கர வாகனங்களில் உறவினர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள். வந்து இறங்கியதும் அவர்களின் உடமைகளோடு காணாமல் போனார்கள். நான் தான் வெகுநேரமாக பொழுதினை கடினமாக கழித்துக் கொண்டிருக்கிறேன்.

ஒரு வழியாக காட்டுப்புத்தூர் பேருந்து வந்தது. நான் வேகமாக ஓடி பேருந்து நிற்பதற்குள் நெருங்கிவிட்டேன். பேருந்திலிருந்து ஒரு இளம்பெண் கண்களில் தூக்த்துடன் வந்து இறங்கினார். அவரை வரவேற்க புதுக்கணவன் தயாராக இருந்தான். நான் ஏறிக்கொண்டு மீசைக்காரரைப் பார்த்தேன். அவர் மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்தார். பேருந்து புறப்பட்டது. வேகம் பிடிப்பதற்குள் மீசைக்காரர் ஏறிவிட்டார்.

என்னையும் சேர்த்து ஒரு பத்துபேர் இருப்போம். பாதி பேர் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இரு பெண்கள் தங்களோடு வந்த கிழவனோடு பேசிக்கொண்டிருந்தார்கள்.

“டிக்கெட்”

“ஆலம்பட்டி”

“ஆலம்பட்டியா. கேட்டுக்கிட்டு ஏறக்கூடாதுங்களா. ஆலம்பட்டி உள்ளுக்க போகாதுங்க. முன்னாடியே இறங்கிக்கோங்க”

“ஏங்க. இந்தபஸ் உள்ள வருங்களே”

“இப்ப லேட் ஆகிடுச்சு சார். இன்னும் காட்டுப்புத்தூருக்கு போயிட்டு வரனும். ஆலம்பட்டி உள்ளேயெல்லாம் போய் வரமுடியாதுங்க. சும்மாவே லேட் ஆகும். இப்ப ரோடு போடறேன்னு இருந்த ரோட்டை வேற சுரண்டி வைச்சுட்டானுங்க”

இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை. ஆலம்பட்டிற்கு நடைதான். “சரி கொடுங்க”.

சடசடவென சத்தம் எழுந்தது. என்னவென ஊகம் செய்வதற்குள் ஜன்னலிருந்தும், பேருந்தின் மேலிருந்தும் மழை துளிகள் தெறித்துவிழுந்தன. பேருந்தே பரபரப்பானது. ஜன்னலிருந்து பழைய தார்பாய் இழுவைகளை இழுத்து தள்ளினோம். நடத்துனர் படிக்கட்டிலிருந்த தார்பாயை இழுத்துவிட்டார். இருந்தும் பேருந்துக்குள் தண்ணீர் வருவது நிற்கவில்லை. எனக்கு இரண்டு இருக்கையின் முன்னால் மேலிருந்து நீர் தாரைதாரையா வழிந்துகொண்டிருந்தது. என்னுடைய இருக்கையிலிருந்து எழுந்து யாருமில்லாத பின் இருக்கைக்கு சென்று அமர்ந்தேன். சரியான பிணைப்பில்லாத வழிகளிடையேயும், மேல் கண்ணாடி உடைந்திருந்தன் வழியாகவும் பேருந்தே ஈரமாகியது. மெதுவாக துடைத்தெரியும் வைப்பரோடு ஓட்டுனர் போராடி ஓட்டிக்கொண்டிருந்தார். மழையின் தீவிரம் அதிமாகியதும். சாலையே தெரியவில்லை என நடத்துனரிடம் சொல்லி முன்னே அழைத்துக் கொண்டார்.

என்மேல் அடிக்கும் சாரல் எங்கிருந்து வருகிறது என தேடிக்கொண்டிருந்தேன். இந்தக் கலவரத்திலிருந்து என்னுடைய லேப்டாப்பினை காப்பாற்றியாக வேண்டும். கீழே மேலே என எங்கும் வைக்க முடியாது. கோழிக்குஞ்சுகளை காக்கும் தாய்க்கோழியைப் போல மார்போடு அணைத்துக் கொண்டிருந்தேன். சட்டென ஒரு துளி மேலே விழுந்தது. இது எங்கிருந்து என மேலேப் பார்த்தால் என்னுடைய இருக்கையின் மேலே ஒன்று இரண்டு மூன்று என எண்ணிக்கையில் நீர்த்திவலைகள் கைகோர்த்து பெரியதாகிக் கொண்டே போயின. ஒன்று விழுந்ததும், அந்த இடத்தில் சிறியதாக ஒன்று தோன்றியது. செய்வதறியாது மேலேயே பார்த்துக் கொண்டிருந்தேன்.

சடாரென இடியொன்று பனைமரத்தினை தாக்க அந்த வேகத்தில் பனை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அந்த அபரிவிதமான சத்தமும், அமானுஷ்ய வெளிச்சமும் எனக்குள் பயத்தினை உண்டுபண்ணியிருந்தன. ஓட்டுனர் இந்த பேய் மழையிலும் பேருந்தினை நிறுத்தாமல் ஓடிக்கொண்டிருந்தார். பேருந்தின் மேற்கூறையின் மீது மழைத்துளிகள் விழும் சத்தமும், ஜன்னல் தார்பாய்களை கிழிக்கும் காற்றின் சத்தமும் அதிகரித்திருந்தன. மீசைக்காரர் என்ன செய்கிறார் என பார்த்தேன். பேருந்தின் நடைப்பாதையில் குடையொன்று பிடித்துக் கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். இதென்ன பேருந்துக்குள் மழையா. பேருந்துக்குள் குடையா. எனக்குள் இருந்த பார்த்தீபன் விழித்துக் கொண்டான். தலையில் மழைதேவதையின் ஆசிர்வாத அட்சதைகள் விழுந்தன.

திண்ணைத் தீர்ப்பு- [சிறுகதை]

திண்ணைத் தீர்ப்பு

திண்ணைத் தீர்ப்பு – சிறுகதை

“இந்தா,.. ஊர்பிரட்சனையெல்லாம் தன்பிரட்சனையா நினைக்கிற பெரியமனுசன் ஊஞ்சலாட்டிக்கிட்டு இருக்காரு, அவருக்கிட்ட போய் சொல்லுடி. அடுப்படிக்கு வந்து தொனதொனன்னு உசிரு எடுக்காத”. கமலம்மாவின் குரல் காதில் விழுந்தாலும் அதை சட்டை செய்யாமல் வீட்டின் வாசலைப் பார்த்தபடி ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தார் பஞ்சராட்ச பிள்ளை. “அம்மா அப்பா காதுல விழப்போகுது. மெதுவா பேசு” மகள் சமாதானம் செய்ய முயன்று தோற்றாள்.

“ம்.. ஒத்த மனுசியா இருந்து வடிச்சுகொட்டரவ புலம்பிக்கிட்டு இருக்காளே, என்ன ஏதுன்னு ஏதாவது கேட்போமுன்னு வரதுக்கு இந்த வூட்டுல ஒரு நாதியிருக்கா..” பொதுப்படையான வசனங்கள் எல்லாம் தனக்குத்தான் என்று பிள்ளைக்கு நன்கு தெரியும். இருந்தும் மௌனமாக இருப்பதற்காகவே மடியில் இருந்த வெள்ளி வெத்தலைப் பெட்டியை எடுத்து சிறு வெத்தலை இரண்டில் சுண்ணாம்பு தடவி, சீவலை வைத்து மடித்து வாய்க்குள் தள்ளினார்.

முற்றத்திலிருந்து ஊஞ்சலின் ஓசை தொய்வில்லாமல் ஒலிப்பது கமலம்மாவிற்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. சமையல் செய்வதை நிறுத்திவிட்டு மகளை இழுத்துக்கொண்டு வெளியேவந்தாள். வாய்நிரம்பியிருக்கும் வெத்தலையை குதப்பி குடுவையில் துப்பிவிட்டு, ஆத்தாளுக்கும் மகளுக்கும் அடுப்படியில என்ன பஞ்சாயத்து என கேட்டு கமலம்மாள் வாய்திறக்கும் முன் முந்திக்கொண்டார். “ம்க்கும் என்னான்னு கேட்கவே இம்புட்டு நேரமான்னா எப்பதான் பஞ்சாயத்தைக் கேட்டு தீர்ப்பு சொல்லுவீங்களோ? ”

“அதான், பஞ்சாயத்து என்ன கேட்டாச்சே.. விரசா சொல்லு”

“உங்க மவ காலையிருந்து அஞ்சு ஆறுதடவ பாறைக்கு போய் வாரா. வயிறு சரியில்லையாம்”

“வைத்தியரை வரச் சொல்லட்டுமா”

“அதெல்லாம் வேணாம். இப்பதான் லேகியம் வைச்சு தந்திருக்கிறேன். அதுக்கு அடங்கிலேயினா வைத்தியரைப் பார்ப்போம்”

“இதுக்கா இப்படி சத்தம் போட்டுக்கிட்டு கிடக்கிறவ”

“ம்.. வயசுக்கு வந்த புள்ள ஆத்தர அவரசதுக்கு ஒதுங்க ஒரு கக்கூஸ் உண்டா. நடையா நடந்து போக வேண்டிகிடக்கு”

பஞ்சராட்ச பிள்ளைக்கு என்ன சொல்லுவதென்றே தெரியல. இப்போதைக்கு சமாதனம் செய்துவைக்க மட்டுமே முடியும் என்பதால். “உடனே இதக் கட்டுங்க, அதக் கட்டுங்க சொன்னா செய்யறதுக்கு பூதமா இருக்கு, இந்த அறுவடை முடியட்டும் ஏற்பாடு செய்யறேன். வேறென்ன,..”

“உங்க மவள கொஞ்சமாச்சும் வீட்டு வேலையை செய்து கத்துக்கிட சொல்லுங்க. ஆத்தா வீடுவாச தெளிக்கிறதிலிருந்து கஸ்டப்படராளேன்னு, ஒருநாளாவது ஒத்தாசையா இருக்காளா. இவ சாப்பிட்ட தட்டை கழுவராளா, இல்ல உடுத்துற துணியைதான் துவைக்கிறாளா. எல்லாத்தையும் நான்தான் செய்ய வேண்டி கிடக்கு”.

பிள்ளை மகளைப் பார்த்தார். அவள் அம்மாவின் முதுகுக்குப் பின்னால் தரையை பார்த்தபடி ஒளிந்திருந்தாள்.

“ஏங்கழுத ஆத்தா இவ்வளவு வசவுபாடராளே, உன் வேலையாச்சும் சுயமா செய்ய வேண்டியதுதானே.”

“நாளையிலிருந்து..” என்ற சன்னமான குரல் வெளிவந்தது. அதான் சொல்லிட்டால்ல, எல்லா வேலையும் அவளே செய்துக்கிடுவா, போய் சமையலைப் பாரு. நான் முத்துகருப்பு முதலியார் வீடுவரைக்கும் போயிட்டு வந்துடறேன்.”

“உடனே, துண்ட தொள்ல உதரிப்போட்டுக்கிட்டு கிளம்பிடுவீங்களே, இவ இப்ப பாறைக்கு போக பயமா இருக்கு கூடவான்னு வந்து நிக்கிறா. கிழக்கு தெரு பசங்க நாளு கூடி நின்று கிண்டல் பண்ணுதுகளாம். நான் சமையல செய்யறதா இல்ல இவகூட சுத்தரதா”

“அதுக்கு என்னை என்ன பண்ண சொல்லற”

“நீங்க துணைக்கு…”

“அடி வெளங்காதவளே. சாப்பாடும் வேணாம், ஒரு மண்ணும் வேணாம், அவ கூட போ. இதுக்கெல்லாம் சீக்கிறம் ஒரு முடிவு கட்டறேன்.” பிள்ளை வீட்டைவிட்டு வெளியேறினார்.

****

முத்துகருப்பு முதலியார் வீட்டுத்திண்ணையில் அமர்ந்து வருவோர் போவோரையெல்லாம் நலம் விசாரித்தப்படி அமர்ந்திருந்தார். பஞ்சராட்ச பிள்ளை வருவதைக் கண்டு உரத்த குரலில்,..

“வாங்க பிள்ளை. உங்களைத்தான் எதிர்ப்பார்த்துக்கிட்டு இருந்தேன்”.

“வழக்கமான நேரத்துக்கே கிளம்பிட்டேன், வீட்டு சின்ன பஞ்சாயத்து அதான் தாமதமாயிடுச்சு.”

“அதானேப் பார்த்தேன், நேரம்தவற ஆள நீங்க. செத்த இருங்க காபி சொல்லிட்டு வந்திடறேன்”. முதலியார் எழுந்து வீட்டிற்குள் சென்றார்.

பஞ்சராட்ச பிள்ளை சாலையில் சென்ற மாடசாமியை கண்டுகொண்டார்.

“எலேய் மாடசாமி,.”

“ஐயா” என பிள்ளை அமர்ந்திருந்த திண்ணை அருகே ஓடிவந்து கைகளை கட்டிக் கொண்டு நின்றார் மாடசாமி.

“இளவட்ட பசங்க ஒரு அஞ்சு பேர கூட்டிக்கிட்டு நாளைக்கு நம்ம வீட்டுப் பக்ககம் வந்திடு. குழி தோன்டற மாதிரி இருக்கும், கடப்பாறை, மமுட்டி, சட்டியெல்லாம் எடுத்தாந்திடு.”

“சின்னப் பண்ணை வீட்டுல வேலை நடந்திக்கிட்டு இருக்குங்க. நாளை மறுநாள் வரைக்கும் வேலை கிடக்குதுங்க. அதனால நான் வரமுடியாதுங்களே.”

“சரி வேற ஆளிருந்த அனுப்பிவை.”

“சரிங்க. உத்தரவு வாங்கிக்கிட்டுங்களா?”

“ம்..”

கையில் காபியுடன் வந்து முதலியாரும் சேர்ந்து கொண்டார். இருவரும் காபியை குடித்தபடி பேசத் தொடங்கினர்.

“என்ன பிள்ளை வீட்டுல ஏதோ பஞ்சாயத்துன்னு சொன்னீங்க”

“இன்னும் எத்தனை காலம் நம்ப புள்ளைக்குட்டிக ஆத்திர அவரசதுக்கு பறைக்கு போறது. அதான் டவுன்ல இருக்கிற மாதிரி கக்கூஸ் கட்டிடலாமுன்னு இருக்கேன்.”

“வாஸ்தவம்தான், மழைக் காலத்துல நாமலே ரொம்ப சிரமப்படறோம். அதுங்க பாவம் என்ன செய்யும்.”

“”

“ஆமாம் உடனேயே வேலைக்கு ஆள வரச் சொல்லறீங்க. ஆறுவடை முடிஞ்சதுக்குப்புறம்தானே பணம் கைக்கு வரும்.”

“இரண்டு மாசம் முன்னாடியே,. நம்ப பஞ்சாயத்துக்கு கக்கூஸ் கட்டச் சொல்லி முன்பணம் கொஞ்சம் சர்கார்கிட்டருந்து வந்திருக்கு. அதெல்லாம் எதுக்கு கட்டிக்கிட்டுன்னு கிடப்புல போட்டாச்சு.”

“இப்ப அத எடுத்து வீட்டுக்கு கட்டப்போறீங்களா?”

“வீட்டுக்கு இல்ல ஊருக்குத்தான் கட்டப்போறேன். ஊரு வேற நாம வேறையா?. நம்மள தவிற வேறுயாரு பயன்படுத்தப்போறா”

“அதானே..”

****

செவப்பி – சிறுகதை

செவப்பியை உங்களுக்கு தெரிந்திருக்கலாம். நீங்கள் சென்னை வாசியாக இருந்தால், அவளை பேருந்திலோ, மின்சார ரயிலிலோ, சாலையிலோ, ஏன் உறவினர் வீட்டிலோ கூட பார்த்திருக்க வாய்ப்புண்டு. மாலை நாளேடுகளை தொடர்ந்தப வாசிக்கும் பழக்கம் இருந்தால் நீங்கள் அவளைப் பற்றி படித்திருப்பீர்கள்.

முன்நெற்றியில் விழும் கற்றைக் கூந்தலும், திருத்திய புருவங்களும், கோலிக்குண்டு கண்களும், கிள்ளத்தூண்டும் கண்ணச் சதையும் அவள் அடையாளங்கள். தெருவோரக் கடையில் விற்கும் காதணியும், மார்பை இறுக்கிப் பிடிக்கும் சட்டையும், கூடார பாவடையும் அவள் அணிபவை. உங்களுக்கு ஞாபகம் வருகிறதா?. இல்லையா!. சரி விடுங்கள் சிவப்பியை நான் உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

நெடுங்காலம் முன்பு குஜராத்தில் பூமிதேவதை ஆடிய ருத்திர தாண்டவத்தால் பெற்றோரையும், உற்றோரையும் இழந்த பெண் குழந்தையை, வடநாட்டு கூட்டமொன்று சென்னைக்கு அழைத்துவந்தது.

அன்றிரவு பூக்கார செவ்வந்தி விற்று தீர்க்காத பூக்களெல்லாம் கூடையில் அள்ளிப் போட்டுக் கோண்டு, கிடத்தியிருந்த சாக்கினையும், அவ்வப்போது நீர் தெளிக்க வைத்திருந்த பாத்திரத்தையும் ஓரம்கட்டி புறப்பட தயாரானாள். இப்போது கிளம்பினால்தான் கடைசி மின்சார வண்டியை பிடிக்க முடியும். நேற்று அதை தவறவிட்டு விட்டதால், பேருந்துக்காக காத்திருந்து அது வராமல் போக ஆட்டோவிற்கு மொத்த வருமானத்தையும் கொடுக்க வேண்டியதாய்ப் போயிற்று. வேக வேகமாய் எட்டுவைத்து நிலையத்தினை அடைந்தாள்.

இரவு உறக்கிய கூட்டத்திலிருந்து பிரிந்து தாயை தேடி மழலை மொழி பேசித் திரிகின்ற குழந்தையை பார்த்தாள். “அடடே, என்ன செவப்பு” என தனக்குள் அதிசயத்து அந்த குழந்தை அருகில் சென்றாள். அது இவளைப் பார்த்து ஏதோ சொன்னது. முகத்தினை உற்றுப் பார்த்து சிரித்து. செவ்வந்திக்கு சில நிமிடம் உலகமே மறந்தது. இருந்தும் குழந்தை நிறுத்தாமல் அவளிடம் பேசியது. அதன் பாசையில் வடமொழி வீச்சம் அதிகமிருந்ததால் யாரேனும் தவற விட்டிருக்கலாம் என்று சற்று நேரம் வருவோர் போவோரிடம் விசாரித்தாள்.

இறுதியாக ஏட்டு சிதம்பரத்திடம் சென்று “சாரே, யாரோ புள்ளைய தவறவிட்டுட்டாங்க” என்று நின்றாள். ஏட்டு நிலைய அதிகாரிடம் விசயத்தை கூறி, அறிவிப்பு செய்தும் யாருமே வராததால், குழந்தையை ஆசிரமம் ஏதாவதொன்றில் சேர்த்துவிட வேண்டுமென பேசிக்கொண்டார்கள். குழந்தையில்லாத செவ்வந்தி தயங்கி தயங்கி தானே வளர்ப்பதாக கூற, அவளுடைய முகவரியை வாங்கி பதிவு செய்து கொண்டு குழந்தையை அவளிடம் ஒப்படைத்தார்கள். செவ்வந்திக்கு குழந்தையை தர சொல்லி சிபாரிசு செய்த சிதம்பரம் அதற்காக தனியே மாமுல் வாங்கிக் கொண்டதை சொல்லி தெரியவேண்டியதில்லை.

செவ்வந்திக்கு தான் கருப்பாய் இருப்பதை உணர்ந்து கொஞ்சம் வருத்தம் இருந்தது. சிவப்பாய் இருப்பவர்கள் இறந்து போனதும் அவர்களின் தோலை வாங்கி தான் உடுத்திக் கொண்டால் என்ன என்றெல்லாம் சிந்திப்பாள். தன்னைவிட நிறமான குழந்தை தனக்கு கிடைத்திருப்பதை நினைத்து மகிழந்தபடி குடிசைக்கு சென்றாள். புருசன் மாரிமுத்துவிடம் கெஞ்சி கூத்தாடி வளர்க்கவும் சம்மதம் வாங்கிக் கொண்டாள். குழந்தை சிவப்பாக இருக்கிறது என்ற எண்ணம் தவிற வேறொன்றும் செவ்வந்திக்கு இல்லை. அதனால் செவப்பி என்று பெயர் வைத்தாள். தினமும் பூக்கூடையில் பூக்கள் நிரப்பி வைத்து அதில் செவப்பியை கிடத்தி தூங்க வைப்பாள். செவப்பி வளர்ந்து மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடும் போதும் தனித்த நிறத்துடன் திகழ்வதை பெருமை பொங்க பார்ப்பாள். கார்பரேசன் பள்ளியில் சேர்த்துவிட்டு செவப்பியை பெரிய ஆபிசராக ஆக்க எண்ணியிருந்தாள்.

***

செவப்பி பெரியவளாகி ஒரு மாதம் ஆகியிருந்தது. அன்றைய இரவில் ஏதோ சத்தம் கேட்டு எழுந்த செவ்வந்திக்கு கொலையே நடுங்கிப்போனது. மாரிமுத்து தூங்கிக் கொண்டிருந்த செவப்பியுடன் உடலுறவு கொள்ள முயன்று கொண்டிருந்தான். அப்பனிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள திமிரிக் கொண்டிருந்தாள்.

“ஏய், தேவுடியா மவனே..” என்று கத்திக் கொண்டே எழுந்து ஓடினாள். ஓடிய வேகத்தில் மாரிமுத்துவை எட்டி உதைத்தாள். அவன் குடிசையின் பக்கவாட்டில் சரிந்தான். அரண்டு எழுந்த சிவப்பிக்கு ஒன்றுமே புரியவில்லை. உடையை சரி செய்து கொண்டு பின்னால் நகர்ந்து கொண்டாள். “பெத்த புள்ளையை போய்.. எவனாவது இப்படி செய்வானா?” செவ்வந்தி சொல்லும் முன்பே மாரிமுத்து கத்தினான் “யாருக்கோ பிறந்த அநாதைநாயக்கு, நான் எப்படி அப்பன் ஆவேன்டீ. அவ எனக்கு புள்ளையும் இல்லை, நான் அப்பனும் இல்ல”.

தள்ளாடி எழுந்தவன் செவ்வந்தியை தள்ளிவிட்டு செவப்பியை நெருங்கினான். “இந்த செவத்த குட்டியோட படுத்து உனக்கு செவப்பா புள்ள பெத்து தாரேன்டி,..” செவப்பியின் சட்டையை இறுகப்பிடித்து கிழித்தான். அவள் உடல்நடுங்கியது. பேச்சுமூச்சற்று அப்பனையே பார்த்துக் கொண்டிருந்தாள். விழுந்துகிடந்த செவ்வந்தி தென்னமாற்றைத் தேடினாள் ஆனால் போதாத காலம் அரிவாள்மணைதான் கைக்கு சிக்கியது.

மகளை காப்பாற்ற வேண்டுமென்ற பதற்றத்தில் அவனை எத்தனையாக கூறுபோட்டாளென தெரியாது. பக்கத்து குடிசை வாசிகளும் வெளியில் படுத்திருந்தவர்களும் இந்த சத்தங்களைக் கேட்டு கதவினை தட்ட தொடங்கியிருந்தார்கள். சிறிது நேரத்தில் குடிசையின் பகுதியை கிழித்துக் கொண்டு கணேஷ் வரும்போது, மாரிமுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்தான். செவ்வந்தியும் செவப்பியும் கட்டியணைத்து அழுதபடி இருந்தார்கள். செவ்வந்தியை காவல்துறையினர் அழைத்து சென்றபோது செவப்பி இன்னும் அழுதாள். செவ்வந்திக்கு அழுவதற்கு கண்ணீர் மிச்சமிருக்கவில்லை.

மறுநாள் மாலை செய்திதாள்களில் “கணவனை கொன்ற மனைவி. வளர்ப்பு மகளிடம் தவறாக நடக்க முயன்றதால் விபரீதம்” என்று தலைப்பு செய்தியாக வந்தது. செய்தியில் பெயர்கள் மாற்றப்பட்டிருந்தன.

***

இதெல்லாம் நடந்து பல வாரங்களாகிவிட்டது, இப்போது செவ்வந்தி விசாரனை கைதியாக சிறையில் இருக்கிறாள். சிவப்பி படிப்பினை கைவிட்டுவிட்டு பக்கத்துவிட்டு சாராதாவுடன் கட்டிட வேலைக்கு சென்று கொண்டிருக்கிறாள். செவ்வந்தி இருக்கும் ஜெயிலில் கூட்டிப்பெருக்கும் வேலைக்கு சேர்ந்தால் அவளை தினமும் பார்க்கலாம் என தனக்கு தெரிந்தவர்கள் மூலம் அங்கு சேர முயன்று கொண்டிருக்கிறாள்.

நீங்கள் சிவப்பியை எங்கேனும் பார்த்தால் கொஞ்சம் தள்ளியே இருங்கள், செவ்வந்திக்கு மீண்டும் அரிவாள்மணை தூக்கும் வேலையை கொடுத்துவிடாதீர்கள்.

எனது சிறுகதைகள் –
மயிர்
தானம்
தாய்மை
அழகான பன்னிக்குட்டி

தாய்மை – ஜெகதீஸ்வரன் சிறுகதை

மின்சார ரயில் இந்திரா நகரில் வந்து நின்றது. கூட்டம் அலைமோதினாலும் பெண்களுக்கான பெட்டியில் வழக்கம் போல் கூட்டம் இல்லை. ரயில் கிளம்பிய சில நிமிடங்களில், தட தடவென ஒரு சத்தம். எல்லோரின் கவணமும் சிதைந்து கீழே அமர்ந்து தட்டினை குச்சியால் தட்டிக் கொண்டிருக்கும் பெண்ணிடம் சென்றது.

அவளுக்கு முப்பது வயதிற்கும் குறைவாகவே இருக்கும் என அவள் முகத்தின் பொழிவு சொன்னது. வண்ணமையமான புடவையும், நெற்றியின் பொட்டும், அணிந்திருந்த நகைகளும் வெறுமாநிலத்தவள் என நன்கு உணர்த்தியது. மற்றப் பெண்களெல்லாம் அவளேயே பார்த்துக் கொண்டிருக்க, ரேவதி மட்டும் நடுவில் நின்று ஆட ஆரமித்த சிறுமியை கவணித்தால்,.

ஒல்லியான தேகம். கையில் ஒரு வளையம். என்னச் செய்யப் போகிறாள் என நினைக்கும் முன்னே உடலை வளைத்து வளையத்திற்குள் நுழைத்து வித்தை காட்டினாள். பெண்கள் சிலர் ரசித்து கைதட்டினார்கள். ரேவதிக்கு அருகில் இருந்த அரசாங்க ஊழியை “இதுங்களுக்கு வேற வேலையே இல்லை. காலங்காத்தால இந்த தரித்திரங்கள பார்க்காம வேலைக்கே போகமுடியல” என கரித்துக் கொட்டினாள்.

ரேவதிக்கு அவள் குழந்தையைப் பற்றி நினைவுகள் வந்தன. இந்நேரம் அவள் பள்ளிக் கூடத்தில் இருப்பாள் என மனதைத் தேற்றிக் கொண்டாள். அந்தக் குழந்தை இப்போது குரங்கினைப் போல குட்டிக்கரணம் அடித்துக் கொண்டிருந்தாள். ரேவதிக்கு அதற்கு மேல் அதைக் காண சகி்க்க முடியவில்லை. ஓடிச்சென்று அந்தக் குழந்தையை அனைத்தபடி அழுதாள். எல்லோருக்கும் ஒன்றும் புரியவில்லை.

அந்தக் குழந்தையின் தாய் ஓடிவந்தாள். அவள் கையில் நூறு ரூபாய் திணிக்க, அவள் திகைத்துப் போனாள். ரயில் அடுத்த நிருத்தத்தில் நிற்க, ரேவதி அழுதபடியே இறங்கினாள். மகளிர் பெட்டியில் இருந்த எல்லோரும் புரியால் நிற்க,. “நம்ப மட்டும் இந்த தொழிலுக்கு வரலையின்னா நம்ப குழந்தைக்கும்…”, அவளை அழைத்துச் செல்ல காத்திருந்த வாடிக்கையாளரிடம் சென்றாள்.

கதைக் காரணம் –

தங்களுடைய வயிற்றுக்காக குழந்தையை வைத்து வி்த்தை காட்டி வாழ்க்கையை ஓட்டுகின்றார்கள் பலர். சிலர் தங்களின் மானத்தை விற்று குழந்தைக்கு வழிகாட்டுகின்றார்கள்.

அங்கிகாரமில்லாத ஆபத்தான தொழிலில் குழந்தைகளுக்கு ஈடுபடுகின்ற தாயை, விவரமறிந்த குழந்தைகள் வெறுக்கின்றன. நடு பகலில் குழந்தையை கத்தியால் கீறி கிடைக்கும் பணத்தில், டாஸ்மார்க்கிக்கு செல்லும் பெற்றோர்களை நான் வெறுக்கின்றேன். நீங்கள் எப்படி?.

எனது சிறுகதைகள் –
மயிர்
அழகான பன்னிக்குட்டி
தானம்
தாய்மை

இரண்டு பொண்டாட்டிக்காரன் கதை

ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழனுடைய கலாச்சாரமா?.
தமிழனின் கடவுளான முருகனுக்கு இரண்டு மனைவிகள். அவனுடைய தந்தைக்கும், அண்ணனுக்கும் கூட இரண்டு மனைவிகள். ஆன்மீகத்தில் மட்டுமல்ல, நாத்திகத்தில் கூட இரண்டு பொண்டாக்காரன்கள் இருக்கின்றார்கள். தமிழனின் தலைவனாக தன்னை முன்நிறுத்திக் கொண்ட தாத்தா கருணாநிதிக்கு மூன்று மனைவிகள். பகுத்தறிவு தந்தையான பெரியாருக்கோ இரண்டு மனைவிகள்.

இந்தக் கலாச்சாரத்தைப் பற்றிய கவலைகள் எதுவுமின்றி ஒரு சின்ன நகைச்சுவைக் கதை. நித்தியானந்தரை குமுதம் அறிமுகப்படுத்தியது, ஆனந்த விகடனில் வெளியான சுவாமி சுகபோனந்தாவின் “மனசே ரிலாக்ஸ் ப்ளிஸ்” என்ற தொடருக்கு பிறகு தான் என்று சொல்லுகின்றார்கள். அந்த மனசே ரிலாக்ஸ் ப்ளிஸ் புத்தகத்திலிருந்து,….

அவன் நடுத்தர வயதை சேர்ந்தவன். அவன் தலையில் பாதி வெள்ளை முடி. அவனுக்கு இரண்டு மனைவிகள். ஒருத்தி அவனை விட வயதில் மூர்த்தவள். மற்றொருவள் அவனைவிட சிறியவள்.

“இப்படி தலையில் வெள்ளை முடியோடு நீங்கள் என்னுடன் வந்தால் , என் தோழிகள் எல்லாம் என்னை கிண்டல் செய்வார்கள்..” என்று சொல்லி இளைய மனைவி அவன் தலையில் இருந்த வெள்ளை முடிகளையெல்லாம் ஒரு நாள் பிடுங்கிவிட்டாள்.

அடுத்த நாள் காலையில் அவனைப் பார்த்த மூத்த மனைவி திடுக்கிட்டுப் போனாள்.”இப்படி கருகருவென்ற தலைமுடியோடு இருக்கும் உங்களுடன் நான் ஜோடியாக வெளியே வந்தால், பார்ப்பவர்கள் என்னைத் தான் “பாட்டி” என்று பரிகாசம் செய்வார்கள். இதை நான் அனுமதிக்க மாட்டேன்!” என்று சொல்லிவிட்டு அவன் தலையில் இருந்த கருப்பு முடிகளையெல்லாம் பிடுங்கிவிட்டாள்.

ஆக மொத்தத்தில் அவன் இப்போது முழு மொட்டை.

என்ன சிரித்தீர்களா?…

கீற்று இணைய இதழில் எனது சிறுகதை

கீற்று இணைய இதழுக்கு என்னுடைய பரமனும் பன்னிக்குட்டியும் கதையை அனுப்பியிருந்தேன். அந்தக் கதையை அங்கிகரித்து தங்களுடைய இதழில் வெளியிட்டு இருக்கின்றார்கள்.

ஒரு சாதாரணமானவனின் கதையை அங்கிகரித்து வெளியிட்டிருக்கும் கீற்று இதழுக்கு நன்றி கூறவே இந்த இடுகை. அதன் ஆசிரியருக்கும், மற்ற அனைவருக்கும் நன்றிகள் பல.

என்னுடய சிறுகதை வெளிவந்தை கொண்டாடும் அளவிற்கு குடும்பத்தில் உள்ளவர்கள் இல்லை. நண்பர்கள் கூட்டத்தில் மட்டுமே வாழ்த்துகள் வரும். அளவு கடந்த மகிழ்ச்சி பகிரும் போது தான் கிடைக்கிறது.

பல வேளைகளுக்கிடையேயும் இணைய வாசிப்பில் இருக்கும் உங்களால் தான் என்னைப் போன்ற சிலர் மகிழ்வோடு இருக்கிறோம். அதனால் உங்களுக்கும் நன்றி கூறுவது என்னுடைய கடமை.

எழுத்தறிவித்த அன்னைக்கும், எழுத வைத்த ஈசனுக்கும் நன்றி.

பரமனும் பன்னிக்குட்டியும் சிறுகதையை கீற்றி்ல் படிக்க இங்கு சொடுக்கவும்.

அழகான பன்னிக்குட்டி

“டேய் பரமா, பக்கத்துல போவாதடா. குட்டிப் போட்ட பன்னி கடிச்சிடும்” அம்மாவின் எச்சரிக்கையால் சற்று தூர நின்றே பார்த்தேன். புசு புசுவென வெள்ளை பஞ்சை உருட்டி விட்டது போல மூன்று வெள்ளைக் குட்டிகள், இரண்டு கருப்பு குட்டிகள்.

தாய்ப் பன்னி படுத்துக் கிடக்க சுற்றி சுற்றி வந்து விளையாடின குட்டிகள். ஆசையோடு பார்த்துக் கொண்டிருந்தவனை “ பன்னியை பார்த்து போதும், வீட்டுக்கு வா” என அழைத்தாள் அம்மா. நான் எங்கே பன்னிக் குட்டியை கையில் பிடித்துவிடுவேனோ என்ற பயம் அம்மாவுக்கு.

இந்த புது வீட்டுக்கு குடிவந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது. பக்கத்தில் இருந்த காலி இடத்தில் நிறைந்திருந்த சாக்கடையில் பன்னி கூட்டம் படுத்துக் கிடக்கும். எனக்கு நாய்க்குட்டிகளை விடவும் பன்னிக்குட்டிகள் அழகாக தெரிந்தன.

“அம்மா நாம அந்த பன்னிக்குட்டியை வளர்க்கலாமா “ என்றேன் ஆசையாக.
“டேய் அதெல்லாம் பீயை திங்கும் டா. அது பக்த்துல எல்லாம் போவதே” என்றாள்.
“குட்டிப் பன்னியும் அதை சாப்பிடும்”
“அதுவும் பெரிசானதுக்கப்புறம் அதைதான் சாப்பிடும்” அதைக் கேட்டவுடன் எனக்கு அருவருப்பு தொற்றிக் கொண்டது. இருந்தாலும் ஒரு முறை நேரில் அந்த காட்சியை பார்க்கவும் எனக்கு பன்னிகள் என்றால் வெறுப்பானது. அழகான பன்னிக்குட்டிகளை அதன் பின் நான் பார்க்கவே செல்ல வில்லை. வீட்டுக்குள்ளவே விளையாடினேன்.

***

ஒரு நாள் காலையில் ஒரே சத்தம். நான் எழுந்து வாசலுக்கு ஓடினேன். என் ஆவலை புரிந்து கொண்டு அப்பா மாடிக்கு கூட்டி சென்றார். எங்கள் தெருவில் விரித்து வைத்திருந்த வலையில் ஒரு பெரிய பன்னி மாட்டிக் கொண்டது. அதன் மரணச் சத்தம் காதை கிழித்தது.
“அப்பா இதை எதுக்கு பிடிக்கிறாங்க”
“வெட்டி விக்கரத்துக்கு டா”
“அதை என்னப்பா பண்ணுவாங்க”
“சாப்பிடுவாங்கடா”
“அது பீயெல்லாம் சாப்பிடுமாமே அதைப் போய் இவங்க சாப்பிடுராங்களே ”
அப்பா என்ன சொல்லுவதென்று தெரியாமல் மௌனமாக இருந்தார்.

***

நாட்கள் நகர்ந்தன. பன்றிகள் பற்றி முழுவதும் மறந்திருந்தேன். இரவு வெளியிருந்து பன்றியின் சத்தம் வந்தது. வீட்டில் யாராலும் உறங்க முடியவில்லை. எல்லோரும் என்னவென்று பார்க்க வெளியே வந்தோம்.

சற்றே வளர்ந்த பன்னிக் குட்டியொன்று பின்பக்கம் அடிப்பட்டு வலி தாங்க முடியாமல் கத்திக் கொண்டிருந்தது. இரண்டு பின்னங்கால்களும் செயலிழந்து போயிருந்தன. முன்னங்கால்களால் ஊன்றி உடலையும் சேர்த்து இழுத்துக் கொண்டே கத்தியது. “நாய் ஏதாவது கடித்திருக்கும்” என்று அம்மா சொன்னார். “நாயா இருந்தா இப்படி செய்யாது. எவனோ வண்டில ஏத்திட்டு போயிருக்கான்” என்றார் அப்பா. அது விடாமல் வலியாலும் வேதனையாலும் கத்திக் கொண்டே இருந்தது.

பக்கத்து வீட்டுகார்ரும் சத்தம் கேட்டு வெளியே வந்தார்.
“என்னச்சு சார்”
“எவனோ வண்டியில வந்து அடிச்சிட்டான் போலயிருக்கு”
“அச்ச்சோ, அப்ப அவன் வண்டியை உடனே வித்திடனுமே”
“அவன் வண்டியை விக்கிறான், இல்ல விக்காம போரான். இதை என்ன சார் பண்ணறது.”
“ஒரு குச்சியை வைச்சு வேற பக்கம் தள்ளிவிட்டுடலாம்.”
“அய்ய்யோ வேணாம் சார். அப்படி செஞ்சா அது இன்னும் கத்தும். வீட்டுல மத்தவங்களுக்கு சிரம்மாயிடும். ஒரு சாக்குல தூக்கிட்டு போய் தூரமா போட்டிடுவோம்”
“சரி இருங்க, நம்ம வீட்டுல ஒரு பழைய சாக்கு இருக்கு, அத எடுத்துட்டு வரேன்”.

அப்பாவும், பக்கத்துவீட்டுக்காரரும் அதை சற்று தொலைவில் விட்டு வந்தார். தூங்குவதக்கு படுத்தால் மெதுவாய் அதன் கத்தல் கேட்டுக் கொண்டே இருந்த்து. பிறகு சிறிது நேரம் கழித்து ஓய்ந்தது. எல்லோரும் தூங்கினோம்.

***

காலையில் அதை ஆஸ்பெட்டலுக்கு தூக்கிக் கொண்டு போகலாம் என்று அப்பாவிடம் அவர் விட்டுவந்த இட்த்தைக் கேட்டேன். அதற்குள் வெளியே “எவன்டா பன்னி மேல கல்லெடுத்துப் போட்டு கொன்னது ” என அதன் உரிமையாளன் கத்திக் கொண்டிருந்தான்.
“அடப்பாவீகளா அதான் ராத்திரி சத்தம் நின்னதா” என்று அம்மாவும் அப்பாவும் தெருவிற்கு ஓடினார்கள். நான் மட்டும் அப்படியே நின்றேன்.

பன்னி அருவருப்பானதா அழகானதா நீங்களே சொல்லுங்க .

எனது சிறுகதைகள் –
மயிர்
அழகான பன்னிக்குட்டி
தானம்
தாய்மை

மயிர் – சிறுகதை

நித்யாவை பார்த்ததும் எல்லோருக்கும் பிடித்துபோகும். அதுவும் அவள் பின்னழகு தொடும் கூந்தலை கண்டவுடன் வியப்போடு ஒரு அன்பும் அவள் மீது ஏற்படும். முதல் முறை பார்ப்பதால் சிவாவுக்கு மட்டுமல்ல அவன் உடன் வந்த அனைவருக்கும் சந்தேகம். அவனுடைய அம்மா “இது சவுரியா” என கேட்டும் விட்டாள். “இல்லைங்க. எம் பொண்ணுக்கு இயற்கையாவே நீளமான கூந்தல்” என அவளின் அப்பா பெருமையாக சொல்ல. எல்லோருக்கும் ஆச்சிரியம். அத்தனை அடர்த்தியான கூந்தலை பார்க்கும் போது பல பெண்கள் தங்கள் அரையடி கூந்தலை நினைத்து வருத்தம் கொள்ளவதுண்டு, அதைதான் செய்துகொண்டிருந்தாள் சிவாவின் அக்கா கமலம்.

நித்தியாவுக்கும் சிவாக்கும் திருமணம் முடிந்து ஒரு வாரத்திற்கு பிறகுதான் ஆரமித்தது பிரட்சனை. நித்தியாவின் கவணம் கூந்தலை விட்டு கணவன் பக்கம் செல்லவேயில்லை. மாறிவிடுவாள் என்று நினைத்து மனதை தேற்றிக்கொண்டான். ஆனால் நாளுக்கு நாள் அவனுடைய எண்ணத்தில் மண் விழுந்துகொண்டே இருந்தது. அவளுடைய கூந்தலுக்காக அதிக நேரத்தையும் அதிக பணத்தையும் செலவு செய்தாள். காலையில் அவள் கூந்தலை அலசி அதன் ஈரம் காயும் வரை காத்திருந்து பின்பு, இவள் சமையல் அறைக்கு செல்லும் முன்பே சிவா அலுவலகத்திற்கு சென்று விடுவான். கணவன் கொஞ்சும் போதுகூட கூந்தலில் சிக்கல் விழுந்துவிடாமல் பார்த்துக் கொண்டாள். விரிசல்கள் வளர்ந்தன.

அவள் கூந்தலை கவணமாக பார்த்துக் கொள்வதற்கு அவள் தரப்பு ஞாயங்களும் இருக்கதான் செய்தன. பள்ளி முதல் கல்லூரி வரை இவளை தனித்து காட்டியது இந்த கூந்தல் தான். இதன் மூலம் எத்தனையோ பெண்களை ஏங்க செய்திருக்கின்றாள், ஆசிரியைகள் முதல் அண்டைவீட்டினர் வரை எத்தனையோ பேர் புகழ்ந்து தள்ளியிருக்கின்றார்கள். அவளின் அப்பா கூட இயற்கை என் பெண்ணுக்கு வரம் தந்திருக்கிறது என எல்லோரிடமும் சொல்லி சொல்லி மாய்ந்துபோவார். தன்னை எல்லோரும் விரும்ப காரணம் தன் கூந்தல் தான் என்ற விசயம் அவள் மனதில் ஆழமாக பதிந்திருந்தது. அதனால் தனக்கும் சிவாக்கும் இடையே பெரியதாகும் இடைவெளியை அவள் உணரவில்லை.

அலுவல் விசயமாக வெளியூருக்கு சென்றிருந்த சிவா திரும்பும் போது காய்ச்சலோடு திரும்பினான். நெருப்பாய் கொதிக்கும் தேகத்தை விட மூட்டுகளின் இணைப்பில் எடுக்கும் வலியை அவனால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. மருத்துவரை பார்த்ததில் சிக்கன் குனியா என தெரிந்தது. அவனை விடவும் அதிகம் துடித்தது நித்தியாவாகதான் இருக்கும். மாத்திரை கொடுப்பது, ஆப்பிள், மாதுளை, அன்னாசி என பழச்சாரு கொடுப்பது என இரண்டு நாட்கள் அவனை தூங்காமல் கவணித்துக் கொண்டாள்.

கூந்தலை கவணிக்காமல் விட்டதால் அது சிக்கல் எடுத்து தன்னுடைய எதிப்பை காட்டியது. அதனால் பொழிவிழந்த கோயில் சிலை போல அவள் மாறியிருந்தாள். அந்த கோலத்தில் நித்தியாவை பார்க்க சிவாவுக்கு கஸ்டமாக இருந்தது. சிவாவின் அம்மா நித்யாவை பார்த்து மிரண்டு போனாள். “ நித்யா உன்னை இப்படி பார்க்கரத்துக்கே ரொம்ப கஸ்டமா இருக்கு, நீ பியூட்டி பார்லருக்கு போய் கூந்தலை சரி செஞ்சுட்டுவா. நான் அதுவரைக்கும் சிவாவை பார்த்துக்கிறேன்” என்றாள். நித்தியாவும் அத்தையிடம் எதிர் பேச்சு பேசாமல் தன் பர்சை எடுத்துக் கொண்டு வெளியேறினாள்.

சிவாவிற்கு உடல் நிலை சரியில்லாததை அறிந்து அங்கு வந்த கமலத்திறகு ஆத்திரம் பொங்கியது, “அந்த சிறுக்கிக்கு ரொம்ப தான் இடம் கொடுக்கிறீங்க ரெண்டு பேரும். புருசன்காரன் காய்ச்சலியே கிடக்கும் போது அறுபதடி கூந்தலை சரிசெய்ய பியூட்டி பார்லருக்கு போயிருக்காளா. வரட்டும் அவள நான் பார்த்துக்கிறேன்”. சிவாவும் அம்மாவும் எடுத்து சொல்லியும் அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. கமலம் வந்து இரண்டு மணி நேரம் முடிந்திருந்தது. சிவாவின் அம்மாவுக்கும் உறுத்த தொடங்கியது. கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் நித்தியாவை வழிமறித்து வசை பாடுவதற்காக சென்ற கமலமும், அவளை தடுக்க சென்ற சிவாவின் அம்மாவும் திகைத்து நின்றார்கள். சிவாவும் மெல்ல அங்கு பார்வையை செலுத்தினான். நித்யா சந்தனம் தடவிய மொட்டை தலையுடன் கையில் தேங்காய் பழம் வைத்த கூடையுடன் நின்றிருந்தாள்.

எனது சிறுகதைகள் –
மயிர்
அழகான பன்னிக்குட்டி
தானம்
தாய்மை