தொட்டியச்சியம்மன் கதை – தமிழ் மண்ணின் சாமிகள்

தொட்டியம் நாயக்கர் பற்றியும், சோழிய வெள்ளாளர் பற்றியும் தெரிந்து கொண்டால் மட்டுமே நாட்டார் தெய்வமான தொட்டியச்சியின் கதையை அறிய முடியும். இந்த இரண்டு சமூகமும் தொட்டியச்சியின் கதையோடு பின்னிப்பிணைந்து இருக்கிறது. அதனால் இந்த சமூகங்களைப் பற்றி முதலில் சில வரிகள்,…

தொட்டியம் நாயக்கர்கள் –

தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்ட சமூகம். ஆந்திராவில் அதிகமாக வாழும் காப்பு என்ற இனத்தின் உட்பிரிவில் ஒன்றாக இந்த தொட்டியம் நாயக்கர்கள் இருக்கிறார்கள். காப்பு இன மக்கள் ஆந்திராவில் அதிகம் இருந்தாலும், தமிழகத்தில் தொட்டியம் நாயக்கர்கள் அதிகளவு உள்ளார்கள். தங்கள் பூர்வீகமான “கம்பளம்” நாட்டினை வைத்து ராஜகம்பளம் என்ற இனமாகவே தங்களை அடையாளம் காண விரும்புகிறார்கள்.

சோழிய வெள்ளாளர் –

தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட சமூகம்.  தமிழகத்தின் தென்பகுதியில் அதிகமாக வாழும் இல்லத்துப் பிள்ளைமார்(ஈழவர்) என்ற இனத்தின் உட்பிரிவில் ஒன்றாக இந்த சோழிய வேள்ளாளர்கள் இருக்கிறார்கள். ஈழவர் இன மக்கள் ஆந்திராவில் அதிகம் இருந்தாலும், தமிழகத்தில் சோழிய வெள்ளாளர் அதிகளவு உள்ளார்கள். தங்கள் பூர்வீகமான “சோழ” நாட்டினை வைத்து  சோழிய வெள்ளாளர் என்ற இனமாகவே தங்களை அடையாளம் காண விரும்புகிறார்கள்.

மணவாடி –

கரூர் மாநகரிலிருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும் சாலையில் இருக்கிறது மணவாடி என்ற குக்கிராமம். எனது சிற்றன்னையை மணம்முடித்து கொடுத்த ஊர் என்பதால் சிறுவயதிலிருந்தே மிகவும் நெருக்கமான ஊர். பாறை பூமி என்பதால் தண்ணீருக்கு கொஞ்சம் பஞ்சம். அதனாலேயே சோளப் பயிர்கள் வயல்களிலும், கள்ளி செடிகள் மற்ற இடங்களிலும் காணப்படும். சென்ற தலைமுறை வரை அத்தனை பேரும் விவசாயம் சார்ந்த தொழில்களையே செய்து வந்தார்கள். நிற்காது ஓடும் எண்ணை செக்கும், நிரம்பி வழியும் பசுமையும் காணப்படும். இப்போது கரூர் நகரின் வளர்ச்சியால் பலர் டெக்டைல்ஸ் தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். அதோடு இங்கு வயக்காடுகளின் வரப்போரங்களில் விளையும் குண்டுமணியையும், காதுகுத்தி முள்ளையும் வேறுபகுதியில் நான் கண்டதில்லை. பனை மரங்கள் அதிகம் இருந்த பகுதி இப்போது புதியதாக வந்திருக்கும் பணக்கார வெள்ளாளர்களால் பாசன வசதி செய்யப்பட்டு தென்னை தோப்பாக காட்சியளிக்கன்ற புதுமையும் காண முடிந்தது. குக்கிராமம் என்ற நிலையிலிருந்து தன்னை உயர்த்திக் கொள்ள ஆரமித்திருக்கிறது மணவாடி.

தொட்டியச்சி அம்மன் –

முக்கிய சாலையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் பக்கம் நடந்து சென்றால்தான் மணவாடி கிராமம் வரும். அப்படி கிராமத்திற்கு செல்லும் சாலையின் வலது பக்கத்தில் ஒரு ஒத்தயடி பாதை பிரிகிறது. அந்த பாதையில் நடந்து சென்றால் ஆள் அரவமற்ற இடத்தில் மிக பிரம்மாண்டமாய் விரிந்து நிற்கும் வேப்பம்மரத்தின் அடியில் மண்ணில் சொறுகப்பட்டிருக்கும் வேல்கம்புகளும், செங்குத்தான  நான்கு பெரிய கற்களும் தெரிகின்றன. அந்த கற்கள் திருவிழா காலங்களி்ல் குடில் அமைக்க வைக்கப்பட்டவை. அந்த நான்கு கற்களுக்கும் மத்தியில் முக்கோண வடிவம் என்று கணிக்கும்படியான கற்கள் வரிசையாக இருக்கின்றன. அவை கன்னிமார்கள். வலது புறம் இருப்பது பெரியசாமி, இடது புறம் இருப்பது கருப்புசாமி, அதோ அதுதான் தொட்டியச்சி என்றார் உடன் வந்த உறவினர். சரியான களமின்மை, இதுதான் நாட்டார் தெய்வங்களின் பலமும், பலவீனமும்.

கதை –

சுற்றிலும் அடர்ந்த காடுகளாக இருக்க, கரூர் மாநாகராக மாறியிறாத காலம். வேட்டைக்கு பழக்கம் செய்யப்பட்ட உயர் ரக நாய்களுடன் தொட்டியம் நாயக்கர்களில் ஒரு குழு வேட்டையில் ஈடுபட்டிருந்தது. அந்த குழுவில் ஆண்களுக்கு நிகராய் பெண்களும் வீரத்துடன் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். பெருமுயல்களை பிடிப்பதற்கு நிலத்தில் வலையமைத்தல், பெருமிருங்களை வேட்டையாட துப்பாக்கியை பயன்செய்தல் என பல வழிமுறைகளை கையாண்டனர். இரவு பகலாய் விலங்குகளை வேட்டையாடுதலில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு அவர்கள் குழுவில் இருந்த பெண்ணொருத்தி வழிதவறியது தெரியவில்லை. நெடுநேரத்திற்குபின் அந்த பெண் தவறியதை அறிந்து தேடத்தொடங்கினர்.

இரவு முழுவதும் தேடியும் அவர்களுக்கு பலன்கிடைக்கவில்லை. இது அந்த குழுவில் இருந்த மற்ற பெண்களுக்கு மிகவும் வேதனை தருவதாக இருந்தது. மறுநாள் காலையில் வழிதவறியப் அந்தப் பெண் மணவாடி கிராமத்திற்கு வந்தாள். வயல்வெளிகளில் வேலை செய்து கொண்டிருந்த சோழிய வெள்ளாள மக்கள் வேட்டை தோரனையுடன் குதிரையில் வீரத்தின் உருவாகவே வந்து நிற்கும் பெண்ணைக் கண்டு அசந்து போனார்கள். அவள் வழிதவறி அலைவதையும், அவளுடன் வந்த கூட்டம் அவளை தேடுவதையும் அறிந்துகொண்டார்கள். அந்தப் பெண்ணின் துயர் தீர்க்க ஆட்கள் சிலரை தொட்டியம் நாயக்கர்களை தேடி அனுப்பினார்கள். அந்த ஆட்களும் விரைந்து தேடுதலில் ஈடுபட்டார்கள்.

ஒரு வழியாக தொட்டியம் நாயக்கர் குழுவானது கண்டுபிடிக்கப்பட்டு, வழிதவறிய அந்த வேட்டைக்காரப் பெண்ணோடு சேர்த்துவைக்கப்பட்டது. பெருநிம்மதியுடன் தங்கள் வேலையை பார்க்க திரும்பிய சோழிய வெள்ளாளர்களுக்கு தொட்டியம் நாயக்கர்களின் கட்டுக்கோப்பான கட்டுப்பாடுகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான். அது இரவு முழுதும் வேறு இடத்தில் தங்கியப் பெண்ணை மீண்டும் தங்கள் குழுவுடன் இணைத்துக் கொள்ளக் கூடாது என்ற கட்டுப்பாடு. அந்தப்பெண் தவறு செய்யவில்லை என்று அறிந்தும் கூட மனதினை கல்லாக்கிக் கொண்டு சமூகத்தின் கட்டுப்பாட்டினை காப்பாற்ற, அவளை அங்கேயே விட்டுவிட்டு சென்றனர். தன் இனமக்களின் பிரிவினை தாங்கமுடியாமல் அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்கிறாள்.

இந்த செய்தி சோழிய வெள்ளாளர்களுக்கு தெரியவருகையில் மிகவும் வருத்தம் கொள்கின்றார்கள். பிள்ளைமாரான சோழிய வெள்ளாளர்கள் கன்னி தெய்வங்களை வழிபடும் வழக்கம் கொண்டவர்கள்.பொதுவாக தன் வீட்டு கன்னி தெய்வங்களை தங்கள் வீட்டிலேயே வைத்து வணங்குதல்தான் வழக்கம்.தங்கள் இனமில்லை என்ற போதும் தங்கள் மண்ணில் உயிர்நீத்த பெண்ணை வணங்குவதென ஒருமித்து தீர்மானித்து இன்று வரை வணங்கி வருகிறார்கள். தொட்டியச்சி என்ற தொட்டியம் நாயக்கர் சமூகத்தின் பெயரையே தெய்வத்தின் பெயராக சொல்கிறார்கள். இறந்தபோன அந்தப் பெண்ணின் உண்மைப் பெயர் தெரியவில்லை. மேலும் தொட்டியம் நாயக்கர் சமூகத்திலிருந்து ஒரு தம்பதியை அழைத்துவந்து, அவர்கள் தலைமையில் தான் தொட்டியச்சியின் திருவிழாவினை சோழிய வெள்ளாளர்கள் நடத்துகிறார்கள்.

மிகவும் சுருக்கமாக சொல்வதானல் சமூகத்தின் கட்டுப்பாட்டினால் ஒதுக்கிவைக்கப்பட்டு இறந்த போன ஒரு பெண் தெய்வமான கதைதான் தொட்டியச்சியின் கதை.

தொட்டியம் மதுர(மதுரை) காளியம்மன் கதை – தமிழ் மண்ணின் சாமிகள்

எனது ஊருக்கு அருகில் இருக்கும் மிகவும் பிரபலமான கோவில்களில் மதுரை காளியம்மன் கோவிலும் ஒன்று. பிரம்மாண்டமும், ஆச்சிரியங்களும் நிறைந்த அதன் தேர் திருவிழாக் காலங்களை என்னால் எளிதில் மறக்க இயலாது. மற்ற குலதெய்வக் கோவில்களைப் போலன்றி மாறுபட்டு இருப்பது அதன் சிறப்பு. அந்தக் கோவிலைப் பற்றிய இடுகையே இது.

கோவில் முன்தோற்றம்

பறையன் இசையில் மயங்கிய காளி –

தொட்டியம் பகுதியிலிருந்து மதுரை திருவிழாவிற்கு சென்ற இரண்டு பறை இசைக் கலைஞர்கள், விழா முடிந்து திரும்பி வருகையிலும் தங்கள் களைப்பு தெரியாமல் இருக்க இசைத்துக் கொண்டே வந்தார்கள். அவர்களின் இசையில் மயங்கியிருந்த காளி, அவர்களின் இசையைக் கேட்டுக் கொண்டே தொட்டியம் வந்ததாக கூறுகின்றார்கள்.

பறை இசை கலைஞர்கள்

பறையையும், பறை இசைப்பவர்களையும் தாழ்த்தப்பட்டவர்களாய் ஒதுக்கி வைத்திருக்கும் சமூகத்திற்கு மத்தியில் அவர்களை முதன்மைப்படுத்தி சொல்லப்படும் கதை ஆச்சிரியமான ஒன்றுதானே. மேலும் அவர்கள் இருவரின் சிலையும் கோவில் பிரகாரத்தில் அமைக்கப்படுள்ளது. சில கோவிலுக்குள் நுழையவே அனுமதி மறுக்கின்ற நிலை இப்போதும் உள்ளது என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்.

தமிழர்களின் இசைக் கருவியென பறையை கொண்டாட இப்போதுதான் ஆரமித்திருக்கின்றார்கள். ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, ஒரு தெய்வம் அந்த இசையில் மயங்கி வந்தமையே இதன் மூலக் கதை எனும் போது, பறை இசையையும், அதன் கலைஞர்களின் மகத்துவமும் புரிகிறது. இதை வருங்கால தலைமுறைக்கு தெரிவிக்க
வேண்டும் என்பது நம் முன்னோர்களின் எண்ணமாக இருந்திருக்க வேண்டும். அவர்களின் எண்ணம் நம் சகோதரன் வலைப்பூவின் மூலம் நிறைவேறிவிட்டது என நினைக்கிறேன்.

எருமைக் கிடா பலி –

மதுர காளியம்மன்

ஆடு, மாடு, கோழி என முப்பலிகளை தருவது பழங்கால வழக்கம். அந்த வழக்கம் இன்றும் தொட்டியம் மதுர காளியம்மன் கோவிலில் நடைபெறுகிறது. பொதுவாக கோழியும், ஆட்டுக்கிடாவும் பலி தரப்பட்டாலும்., எருமைக் கிடா பலி திருவிழாக்காலங்களில் நடைபெறுகிறது. வெட்டப்பட்ட எருமைக் கிடாயை புதைப்பதற்கென பெரும் நிலப்பரப்பும் கோவிலுக்கு அருகிலேயே இருக்கின்றது.

சிறப்புகள் –

  • பறையன் இருவரின் சிலையும் கோவிலுள் இருப்பது.
  • முப்பலி நடைபெருவது.
  • பலருக்கு குலதெய்வமாக இருந்தாலும், அருகில் வசிப்பவர்களுக்கு விருப்பமான தெய்வமாகவும் மதுரகாளி அருள் செய்கிறார்.
  • மக்களின் அன்பால், வெகு விமர்சையாக தேர்திருவிழா கொண்டாடப்படுகிறது.
  • திருமணங்களும், இன்னும் பிற விஷேசங்களும் நடத்தப்படுகின்றன.
  • எல்லாவற்றுக்கும் மேலாக மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தெய்வமாக இருக்கிறாள் மதுரகாளியம்மன்.

முன்னோர்களைத் தேடி ஒரு பயணம் – 4

பயணத்தின் இறுதி நாள். சிறுவயது முதல் கேட்டு வளர்ந்த பொன்னரையும் சங்கரையும் தேடி பயணப்பட்டோம். அண்ணன்மார் கதையின் ஆரம்பம் மதுக்கரையில் இருந்து ஆரமிக்கிறது. அந்த ஊர் எங்கள் ஊரின் அருகில் இருக்கிறது என்பது தகவல். கலைஞர் எழுதிய காவியத்தில் சீத்தப்பட்டி என்ற ஊர் வருவதாகவும், அதுவும் எங்கள் ஊருக்கு அருகில் இருப்பதையும் என் சிற்றன்னை குறிப்பிட்டார். கதையை அறியாமல் இடத்தின் மகிமையை அறிய இயலாது அதனால், மூன்று தலைமுறை கதையை எளிமையாக இங்கு சொடுக்கி படித்துவிட்டு வாருங்கள்.

என்ன கதை தெரிந்துவிட்டதா?. இனி பயணத்தினை தொடர்வோம். கரூர் நகரிலிருந்து வீரப்பூர் செல்ல அரைமணி நேரம் ஆனது. முதலில் பெரியகாண்டியம்மன் கோவிலுக்கு சென்றோம். இந்த அம்மன் தான் தங்கை அருக்காணிக்கு ஓமதீர்த்தம் தந்ததாக சொல்கின்றார்கள். கோவிலின் முன் திருவிழாக் கடைகள் நிரந்திரமாக இருக்கின்றன. அதைவிட பிச்சைக்காரர்களும் இருக்கின்றார்கள். குலதெய்வக்கோவில்களில் முதன் முதலாக பிச்சைக்காரர்களை அன்றுதான் பார்த்தேன்.

நாள்தோறும் வருகின்ற கூட்டத்திடம் கொஞ்சம் பணம் கிடைத்தாலே போதும் என்று நினைக்கின்றார்கள். இவர்களாவது தேவலாம் என்றிருந்தது, உள்ளே பூசாரிகள் அடிக்கும் கொள்ளை. தீபாராதனை காட்டுவார் ஒருவர், அர்ச்சனை செய்வார் ஒருவர், சந்தனப் பொட்டு வைக்கிறார் ஒருவர். ஆனால் எல்லோரும் காசு காசு என பிய்த்து எடுக்கின்றார்கள். கொஞ்சம் ஏமாந்தால் மொட்டை அடித்துவிடுவார்கள். கோவிலை சுற்றி வருகையில் கூட இரண்டு மூன்றுபேர் நிற்கின்றார்கள். தீர்த்தம் தெளிப்பதற்கு கூட தனியாக வசூல். ஆச்சிரியம் என்னவென்றால் பூசாரிகளெல்லாம் தங்கள் பணத்தினை தனித்தனியாக கேட்டு வாங்கிக்கொள்ள, பிச்சைக்காரர்கள் ஒற்றுமையாக ஒருவரிடம் கொடுத்துவிட்டு போங்கள் நாங்கள் பிரித்துக்கொள்கிறோம் என்றார்கள்.

அடுத்து சங்கரை பொன்னர் அடைத்துவைத்தாக சொல்லப்படுகின்ற இடத்திற்கு சென்றோம். அங்கே கன்னிமார்களும், பொன்னர், சங்கர், அருக்காணிக்கும் சிலை வைத்திருக்கின்றார்கள். ஒரு திருவிழா கூட்டமே அங்கிருந்தது. நாங்கள் செல்லும் போது, ஒரு பணக்காரப் குடும்பம் சமையல் செய்து கொண்டிருந்தது. அவர்களின் அருகே இருந்த சுமோவில் தி.மு.க பிரமுகரின் பெயர் கருப்பு சிவப்பில் மின்னிக்கொண்டிருந்தது. பூசாரிகளிடம் கதைகளைக் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டேன். ஆச்சரியமாக ஒத்துக்கொண்டார்கள். அந்த இடத்திற்கு அருகே மகாமுனியின் சிலை இருக்கிறது. மிகவும் சக்தி வாய்ந்த காவல்தெய்வமாக அதை கொண்டாடுகின்றார்கள்.

அதன்பிறகு காலம்காலமாக மர்மமாகவே இருக்கும் படுகளம் பகுதிக்குச் சென்றோம். பெரிய மைதானம் போல இருந்தது படுகளம். சுற்றிலும் மதில் சுவர் எழுப்பியிருக்கின்றார்கள். அதற்குள் பொன்னர், சங்கர் தற்கொலை செய்து கொள்வது, வீரபத்திரன் முறசு கொட்டுவது என பல சிலைகள் சிமென்டால் செய்யப்பட்டிருக்கின்றன. மைதானத்தின் ஒரு பகுதியில் கோவில் கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. அங்கு புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டும், மறுத்துவிட்டார்கள். அதற்காக விட்டுவிட இயலுமா. பொன்னரும் சங்கரும் மனைவிகளுடன் இருந்ததை படம்பிடித்து கொண்டேன்.

இந்னும் இரண்டு இடங்கள் மீதம் இருப்பதாக சொன்னார்கள். ஒன்று போரில் சிந்தப்பட்ட ரத்தம் கற்களாக இருக்கும் பகுதி, மற்றொன்று பெரியக்கா தபசு என்கிற இடம். படுகளம் பகுதிக்கு அருகிலேயே போர் நடந்ததாக சொல்லப்படுகின்ற இடமும் இருக்கிறது. அந்தப்பகுதிக்கு சம்மந்தம் இல்லாத கற்கள் அங்கே கொட்டப்பட்டிருக்கின்றன. தூரத்திலிருந்து பார்க்கையில் கரிய நிற கற்களின் பரவலுக்கு மேல், ஒரு குடிசை தெரிகிறது. அதற்குள் வழக்கம் போல, பொன்னர் சங்கரின் சிலைகள். அங்கிருக்கும் கற்களை ரத்தம் என்று நம்ப முடியவில்லை. மற்ற கற்களைக் காட்டிலும் அந்தக் கற்கள் எடை குறைவாக இருந்தன. அங்கிருக்கும் பூசாரி ஒரு பெரிய கல்லை வைத்துக்கொண்டு இதுதான் உண்மையான ரத்தக் கல் என்று வருவோரின் தலையில் வைத்து, காசு வாங்கிக் கொண்டிருந்தார். அந்தக்கல்லின் எடை மிகவும் குறைவாக இருந்தது. அவ்வளவு ரத்தம் வந்திருந்தால் நிச்சயம் மனிதன் பிழைத்திருக்கவே வாய்ப்பில்லை. ஆனால் மனிதனின் நம்பிக்கைகள் அதையெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை எந்பது வேறுவிசயம். இவைகளையெல்லாம் பார்ப்பதற்குள்ளவே மாலை நேரம் நெருங்கி விட்டது. அடுத்த முறை வந்தால், பெரியக்கா தபசை பார்க்கலாம் என்று சொல்லிவிட்டார்கள்.

என்னுடைய பள்ளித் தோழியின் குலதெய்வம் பொன்னர் சங்கர். அவள் டியூசன் நேரத்தில் அந்தக் கதையை கூறுவாள். நமக்குதான் கதைகள் என்றாலே கொள்ளைப் பிரியமாயிற்றே. பட்ப்பை விட்டுவிட்டு நாள்தோரும் கதைகள் கேட்டுக்கொண்டே பொழுது போனது. வீரப்பூரின் ஒவ்வொறு இடங்களுக்கு செல்லுகையிலும் அவள் சொன்ன கதைகள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தன. இன்று அவள் எங்கிருக்கிறாள் என தெரியாது. ஆனால் வருடத்திற்கு ஒரு முறை அவள் குடும்பத்துடன் வந்துபோகும் இடத்திற்கு நானும் வந்திருக்கிறேன் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. பெரியசாமி கோவிலுக்கு போகும் போதெல்லாம் என்னுடைய பாட்டாவின் பெயர் கல்வெட்டில் பதியப்பட்டிருப்பதை பெருமையாக பார்த்துவிட்டு வருவேன். என்னுடைய எத்தனை தலைமுறைகள் அங்கே கால்தடம் பதித்திருக்கின்றன என எண்ணும் போதே, ஒரு இனம் புரியாத சினேகம் வருகிறது. காலம் காலமாக இந்தக் கதைகள் நம்மிடைய ஒரு பிணைப்பினை ஏற்படுத்தி தந்திருக்கின்றன. அதன் சாட்சியாக வீரப்பூர் போன்ற ஊர்கள் இன்றும் இருக்கின்றன. அவற்றின் பெருமைகளை உணர்ந்து நாம் அடுத்த தலைமுறைக்கும் இந்த வாய்ப்பை தருவதே மிகப்பெரிய விஷயம் என்று நினைக்கிறேன்.

முன்னோர்களைத் தேடி புறப்பட்ட எங்கள் முதல் பயணம் இனிதே நிறைவுற்றது. ஆனால் இது முடிவல்ல, ஒரு மாபெரும் தொடக்கம் என்றே தோன்றுகிறது.

முன்னோர்களைத் தேடி ஒரு பயணம் – 3

மூன்றாம் நாள். கருவூர் என்ற அழைக்கப்பட்ட கரூர் மாநாகரிலிருந்து திண்டுக்கல் நகரை நோக்கி செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது. மணவாடி. இந்த இடத்தினை தொட்டியச்சி, முத்தாலம்மன் என்ற இரண்டு தெய்வப் பெண்களின் பாதம் பட்ட இடமாக சொல்கிறார்கள். ஒரு இடத்தில் ஒரு மூதாதையரின் கதை கிடைப்பதே அபூர்வம் என்கின்றபோது, ஒரு இடத்தில் இரண்டு மூதாதையரின் கதை கிடைத்தது அற்புதம் என்றே சொல்ல வேண்டும்.

தொட்டியச்சி கிராமத்திற்கு செல்லும் சாலையில் குடிகொண்டிருக்கின்றாள். ஒரு கல்லினை வைத்து இதுதான் தொட்டியச்சி என்று வணங்குகிறார்கள் ஊர்மக்கள். நவக்கன்னிகள், மாசி பெரியண்ண சுவாமி, கருப்பு என காவல் தெய்வங்களும் இருக்கின்றன. கற்கலால் அமைக்கப்பட்ட கோவிலோ, குடிசையோ அல்லாமல் திறந்தவேளியில் யாருக்கும் கட்டுப்படாதவளாக இருக்கிறாள். அவளுக்காக கோவில் அமைக்க எத்தனை முறை கோரிக்கை வைத்தாலும், மறுத்துவிடுகிறாள்.

இவளுக்கு அப்படியே நேர்எதிரானவள் முத்தாலம்மன். இவளுக்கு ஏக இடங்களில் கோவில்கள் இருக்கின்றன. கிராமத்திற்கு நேர் எதிரே சாலை கடந்து சென்றால், முத்தாலம்மனை தரிசிக்கலாம். அதிலும் இங்குள்ள கோவில் அழகு நிறைந்தது. அங்கிருக்கும் சிலையைப் பற்றியே தனி இடுகை இடலாம். அத்தனை கதைகள் சொல்கின்றார்கள். நான் தரிசனம் செய்துவி்ட்டு, கதைகள் கேட்டேன். அந்தசிலை மண் சிலை என்ற போது என்னால் நம்பவே முடியவில்லை.

அதை விடவும் நம்ப முடியாத விசயம். சின்னஞ்சிறு கோவிலில் இருக்கும் அவளுக்கு இருக்கும் சொத்துகள். கிராமத்தின் பெரும்பாலான நிலங்கள் அவளுக்கு சொந்தமானவை. இப்போது பராமரிக்க ஆளில்லாமல் எல்லாம் கைவிட்டு சென்று கொண்டிருக்கிறது. அதற்காக வருமானம் இல்லையென சொல்லிவிடமுடியாது. சமீபத்தில் கோவில் திருவிழாவின் போது ஒன்றறை லட்சம் பணம் வசூலாகி இருக்கிறதாம். அதுவும் முறை கட்டளை என யாரிடமும் காசே வசூலிக்கவில்லை. எல்லாம் அவர்களாகவே கொடுத்த காசு என்றார் கோவில் திருவிழாவை முன்நின்று நடத்தி வைத்த பெரியவர்.

அந்தக் கிராமத்தினைச் சுற்றி தொட்டியம் நாயக்கர் மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். வேட்டையாடும் தொழில் செய்திள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றார்கள். அவர்கள் வேட்டைக்காக வைத்த பொறிகளைக் கூட சிலர் பார்த்திருக்கின்றார்கள். கடந்த ஐம்பது வருடங்களில் அவை முற்றிலுமாக அழிந்துவிட்டன. இப்போது எந்த தடயமும் கிடைக்கவில்லை. தொட்டியச்சி கதையும், முத்தாலம்மன் கதையும் நாயக்கர் மற்றும் வெள்ளாலர் இனமக்களோடு தொடர்புடையது.

தொட்டியச்சி கோவில்வீடு

தொட்டியச்சி நாயக்கர் இனத்தினை சார்ந்தவள். மிகுந்த திறமைசாலி. அவளுடன் சேர்ந்து எல்லோரும் வேட்டைக்கு சென்ற போது, அவள் மட்டும் வழி தவறிவிட்டாள். ஓரிரவு வெளியில் தங்கிய பெண்ணை ஏற்றுக்கொள்ளமாட்டார்களலாம் நாயக்கர் மக்கள். எனவே தொட்டியச்சி தீக்கிரையாகிப் போய்விட்டாள். அதை அறிந்த சில சோழிய வெள்ளாலர் இன பெரியவர்கள் இவளையே குலதெய்வமாக வணங்குவதாக முடிவெடுத்திருக்கின்றனர்.

இப்போதுகூட திருவிழாவிற்கு நாயக்கர் இனத்திலிருந்து ஒரு ஜோடி வந்து விருந்தினராக கலந்து கொள்ளும் வழக்கம் இருக்கிறது. அவர்கள் கைகளால் நீர் எடுத்துவந்து அபிசேகம் செய்து மக்களுக்கு வழங்குகிறார்கள். திருவிழாவிற்கு வர மறுத்துவி்ட்டாள் நாயக்கர் இன மக்களை தொட்டியச்சி தண்டித்துவிடுவாள் என்ற பயம் எல்லோர்க்கும் இருக்கிறது. வேறு சாதியை சார்ந்த பெண் என்றாலும் இங்கு வாழும் சோழிய வெள்ளாலர் இன மக்கள் அவளை குலதெய்வமாக போற்றி வழிபடுகின்றனர்.

பயணம் தொடரும்…

முன்னோர்களைத் தேடி ஒரு பயணம் – 2

பயணத்தின் இரண்டாம் நாள். ஒருவந்தூர் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு முதலில் சென்றோம். ஆடுகளை பலி கொடுக்க பெரும் கூட்டம் நின்று கொண்டிருந்தது. கருவறையில் சாமிக்கு தீபம் காட்டகூட பூசாரிகள் இல்லை. ஆனால் திரும்பும் இடமெல்லாம் குடும்பத்துடன் நின்று கொண்டிருந்தார் பட்டவன்.

யார் இந்த பட்டவன் என்று தொன்றுகிறதா. இவர் உண்மையான மூதாதயரின் வடிவம். நன்கு வளர்ந்த மரம் திடீரென்று பட்டுபோனது என்பார்களே. அதே பொருளில் இறந்த மனிதனை பட்டவன் என்கிறார்கள்.

எத்தனையோ முறை செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சென்றிருக்கிறேன். தேர்திருவிழாவில் கடையில் விற்கும் மிட்டாய்களுக்காக ஏங்கியிருக்கிறேன்.ஆனால் அன்றுதான் கண்களில் பட்டார் பட்டவன். பட்டவனின் பெருமையை என்னுடைய அப்பாயி சொல்லிக் கொண்டு வர, நவலடியான் கோவில் வந்தது. நவலடி கருப்பு புகழ் பெற்றிருந்தாலும், மதுரைவீரனுக்கும் தனி சந்நதி உண்டு. அங்கிருக்கும் பூசாரி பூஜையின் போது சொல்வதை கேட்பதே இன்பமாக இருக்கும். ஏன் என்றால் அத்தனையும் தெளிவான தமிழ், நல்ல உச்சரிப்பு. அர்ச்சனையின் போது பால் பெருகுதலிருந்து ஆயுள் நீடிப்பு வரை அழகாக எடுத்து சொல்லுவார். தங்கள் இன மக்களின் முகவரியை பதிந்து வைத்திருக்கின்றார்கள் கோவில் நிர்வாகிகள். மூடியிறக்கும் இளம் குழந்தைகளுக்கு உடல் பாதிப்பு வரக்கூடாதென வெந்நீர் ஏற்பாடு செய்து தருகின்றாரகள். இந்த முறையை நான் இங்கு மட்டுமே பார்த்தேன்.

அடுத்து மோகனூரில் இருக்கும் மூன்று அண்ணன்மார்கள் கோவில். பேரைக்கேட்டதும், அண்ணன்களுக்காக கட்டப்பட்ட கோவில் என்று நினைத்தேன். ஆனால் அது தங்கைக்கு அண்ணன்கள் எழுப்பிய கோவில். சோழர்கள் காலத்தில் உடன்கட்டை ஏறிய தங்களுடைய தங்கைக்காக கோவில் எழுப்பியிருக்கின்றார்கள். வழக்கமான கோவில் அமைப்பு இல்லாமல் வெளித்தோற்றத்தில் மண்டபம் போல தோன்றினாலும், கருவறையில் வள்ளியம்மனுடன், நம்பியண்ணனும் காட்சிதருகிறார். அவர்களுடைய அண்ணன் குடிகள் 2160என 2001ம் ஆண்டு செதுக்கப்பட்ட கல்வெட்டு சொல்கிறது. 2010 நடந்து கொண்டிருக்கும் வேளையில் இன்னும் குடிகள் உயர்ந்திருக்க கூடும். இத்தனை குடிகளையும் ஒருங்கினைத்து பேணி வருவதை பார்க்கும் போது சிலிர்ப்பாக இருந்தது.

அந்த சிலிர்ப்பு அடங்குவதற்குள் திரௌபதி அம்மன் கோவிலை கடந்திருந்தோம். காப்பியத்தலைவி கண்ணகியை கடவுளாக வழிபாடுவது போலவே சில இடங்களில் திரௌபதிக்கும் கோவில்கள் உண்டு. அடுத்ததாக சென்றது ராசாராசாயி கோவில்.

ராஜா என்பதை ராசா என்றே உச்சரித்து பழக்கப்பட்ட மக்கள் ராணியை ராசாயி என்றே அழைக்கின்றனர். படையெடுப்புகளின் போது கன்னி வேட்டை நடத்துபவர்களோடு கோவிலின் புராணக் கதை சம்மந்தம் கொண்டிருக்கிறது. அங்கு ஆச்சரியம் கொள்ள வைத்த விசயம் கருவறையில் ராசா, ராசாயோடு முருகன் இருப்பதுதான். அந்த ராசா முருகனை வழிபட்டுவந்ததாக பூசாரி சொன்னார். அதே சமயம் கருப்பையும் வழிபட்டு வந்ததால் அதற்கென தனி சந்நதியும் அமைக்கப்பட்டிருந்தது.

கருப்புசாமி சந்நதிக்கு எதிரே பலியாடுகள் நின்றுகொண்டிருந்தன. கிடா வெட்ட வந்த ஒரு குடும்பம் (ஒரு ஊர் எனவே வைத்துக்கொள்ளாலாம் அவ்வளவு கூட்டம்) செய்வதறியாது நின்று கொண்டிருந்தது. காரணம் தலையில் ஒரு குடம் தண்ணீர் தெளித்தும் ஆடு அசரமல் நின்று கொண்டிருந்ததுதான். தெய்வக் குத்தம் என்று பயந்து சில பெண்கள் அழுதே விட்டார்கள். என்னுடைய அப்பா ஒரு யோசனை சொன்னார். ஐஸ் தண்ணீர் தெளித்தால் தலையை ஆட்டுமென. அப்படியே செய்தார்கள். நல்ல வேளையாக ஆடு இசைந்தது. அவர்கள் நெகிழ்ச்சியோடு நன்றி கூற, நாங்களும் மகிழ்ச்சியோடு புறப்பட்டோம். இரண்டாவது நாள் பயணம் இனிதே முடுவுற்றது.

பெரும்பாலான சிறுதெய்வ கோவில்களில் முதலில் தடைவிதிக்கப்படுவது இந்த பலிகளுக்குதான். இதன் அரசியல் மிக பயங்கரமானது. சுருக்கமாக சொன்னால் இது பாரம்பரிய மக்களை விரட்டிவிட்டு பாப்பான்களை கோவிலுக்குள் கொண்டும் செல்லும் வழி. அதுசரி தொட்டியச்சி, முத்தாலம்மன் பற்றி சொல்கிறேன் என்றேனே,… அது அடுத்த பகுதியில். ஆனால் சாதிகளின் வீச்சம் இல்லாமல் அந்த தெய்வங்களின் கதையை சொல்ல முடியாது. அதனால் சாதியை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

பயணம் தொடரும்.

முன்னோர்களைத் தேடி ஒரு பயணம் – 1

பயணங்கள் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஆன்மீகச் சுற்றுலாவாக குடும்பத்துடன் செல்லும் போது, கோவில்களின் வரலாறுகளையும், சிற்பக் கலையும் வெகுவாக ரசிப்போம். ஆனால் இந்த முறை கடவுள்களைத் தேடி பயணப்படவில்லை. நம் முன்னோர்களைத் தேடி பயணப் பட்டோம்.

துறையூயில் இருக்கும் மாசி பெரியசாமியை தரிசனம் செய்வது மட்டுமே என் பெற்றோர்களால் திட்டமிடப்பட்ட ஒன்று. மற்றவைகளை என்னிடமே விட்டுவிட்டார்கள். பிச்சாயி கதை நடந்த இடம் துறையூரி்ல் இருக்கும் பெருமாள் மலையின் அடிவாரம் என்று வலைப்பூவில் படித்திருந்ததை சொன்னேன். சரி முதலில் அங்கு செல்லாம் என்று சொன்னார்கள். அடுத்த சிலமணி நேரங்களில் பிச்சாயி,வீரய்யா கோவிலில் இருந்தோம்.

பிச்சாயி கோவில்

பிச்சாயி கதையும், கோவில் அமைப்பு பற்றியும் தனித்தனி இடுகையில் சொல்கிறேன். முக்கியமாக சொல்லப்பட வேண்டியது அழகு நிறைந்த அந்த குதிரைகள். அடுத்ததாக பெருமாள் மலையில் பெருமாளின் தரிசனம். தென் திருப்பதி என அழைக்கப்படுகிறதாம் பெருமாள் மலை. பிரகாரச் சிற்பங்கள் அழகாக இருந்தன. அதைவிடவும் சொல்லப்பட வேண்டியது. அங்கே இருந்த கருப்புசாமி சந்நதியைதான். பெருமால் கோவிலில் விபூதி பிரசாதத்துடன் ஒரு அடி குதிரையில் ஒய்யாரமாக இருக்கிறார். எங்கள் எல்லோருக்கும் வியப்பாக இருந்தது.

வியப்பு தீருவதற்குள் வைரசெட்டி பாளையத்திலுள்ள காமாட்சியம்மன் கோவிலில் இருந்தோம். அங்கே இருக்கும் மாசி பெரியண்ணன்தான் எங்கள் குலதெய்வம். சிலர் அவரை சிவன் ரூபம் என்கின்றார்கள். சிலர் பெருமாள் என்கின்றார்கள். சைவ வைணவ பிரட்சனையில் எங்கள் சாமியின் தலையில் நாமமும், பட்டையும் மாறி மாறி விழுந்து கொண்டிருப்பது ஒரு பெரும்கதை.

பட்டை அடித்துக் கொண்டு பெரியசாமி

பட்டை அடித்துக் கொண்டு பெரியசாமி

நாமம் போட்டுக் கொண்டு பெரியசாமி

நாமம் போட்டுக் கொண்டு பெரியசாமி

சாமியை புகைப்படம் எடுக்க முற்பட்ட போது “தம்பி மனுசனுங்கக் கூட விளையாடலாம், தெய்வத்தோட விளையாடாதே” என்று பயமுறுத்தினார் பூசாரி. “ஐயா, பெரியசாமி உன்னை எல்லா இடங்களுக்கும் கொண்டுப் போக அருள் செய். ” என்று வேண்டிக் கொண்டு புகைப்படம் எடுத்தேன். பூசாரிக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. “நீ, சொன்னா கேட்கமாட்டியா தம்பி!” என்று அதட்ட, “ங், சாமிக்கிட்ட சொல்லிட்டுதான் படம் எடுக்கறேன். நீங்க செத்த சும்மாயிருங்க” என்று நான் வாதம் செய்ய வேண்டியதாயிற்று.

அருகிலிருக்கும் கல்லாத்துக் கோம்பைக்கு சென்றோம். அது பெரியசாமிக்கென தனியாக கோவில் இருக்கும் இடம். அங்கு பெரியசாமிக்கு சைவ வைணவ பிரட்சனையோடு சாதிப் பிரட்சனையும் உண்டு. ஒருபுறம் பழைய கோவில், அங்கு பூசாரி சோழிய வெள்ளாளர். இன்னொரு புறம் புதிய கோவில் அங்கு முத்தரையர் பூசாரி. ஒரு கோவிலுக்கு வரும் பக்தர்கள் மறுகோவிலுக்கு செல்வதில்லை. கடவுளுக்கே இந்த நிலையா என்று நொந்து கொண்டேன்.

நாமக்கல் அருகிலிருக்கும் எட்டுகை அம்மன் கோவிலுக்கு செல்லாம் என்றேன். எட்டுகை அம்மனை கொல்லிமலையில் தரிசித்திருக்கிறேன். ஆனால் கீரம்பூரில் அத்தனை பெரிய கோவிலில் குடிகொண்டிருப்பாள் என கனவிலும் நினைக்கவில்லை. ஏக்கர் கணக்கில் தங்கள் குலதெய்வத்திற்கு கோவிலை அமைத்திருக்கின்றார்கள் கொங்கு வெள்ளாளர் சமூகத்தினர்.

எட்டுகை அம்மன் கோவில்

குலதெய்வங்களுக்காக அமைக்கப்பட்ட பெரிய கோவில் இதுவாகத்தான் இருக்குமென நினைத்தேன். செம்பூதத்தான் பண்ணை குலமக்கள் கோவிலில் ஓர் அறிவிப்பு பலகையை வைத்திருந்தார்கள். தங்களுடைய குழந்தைகளின் கல்விக்கு உதவும் நோக்கத்தில் அவர்களின் செயல்பாடு பிரம்மிக்க வைத்தது. என்னுடைய அப்பா அதனை பாராட்டிக் கொண்டே இருந்தார். இதனைப் பற்றியும் தனி இடுகையில்.

ஊருக்கு செல்லும் வழியில் வலையப்பட்டிக்கு சென்றோம். அங்குள்ள குன்னிமரத்தான் கோவிலுடன் எங்களுடைய முதல்நாள் பயணம் முடிவடைந்தது.

சாதிகளைக் கொண்டு கடவுளையே இப்படி பந்தாடுகின்றவர்கள் இருக்கும் அதே வேளையில் சாதிகளை இணைக்கும் தொட்டியச்சி, முத்தலாம்மன் பற்றி வரும் இடுகையில்,…

பயணம் தொடரும்,..

தமிழ் மண்ணின் சாமிகளின் பட்டியல்

என்னுடைய குலதெய்வம் மாசி பெரியண்ணின் கோவிலுக்கு சென்றிருந்த போதுதான், பல சுவாமிகளின் பெயர்கள் தெரியவந்தன. அவற்றின் கதைகள் அங்கிருக்கும் பூசாரிகளுக்குக் கூட தெரியவில்லை. என்னுடைய குலதெய்வத்தின் கதையையே பல மாதங்கள் அழைந்து திரிந்து பலரிடமும் கேட்டேன். என்னுடைய அப்பாவுக்கு கொஞ்சம் செய்தி மட்டுமே தெரிந்திருந்தது. ஓமாந்தூர் பெரிய பூசாரியிடம் கேட்டப்போதுதான் உண்மையான கதையை முழுமையாக அறிய நேர்ந்தது.

என்னைப் போல பலரும் தங்களின் குலதெய்வங்களின் கதை அறிய ஆவலாய் இருக்கிறார்கள் என்று அறிந்தேன். என்னுடைய நண்பர்களின் குலதெய்வங்களின் கதைகளை அறிய முற்பட்டபோது எனக்கு ஏராளமான ஆச்சிரியங்கள் நிகழ்ந்ததன. பெரும்பாலான கதைகளில் சிவனும், விஷ்னுவும் ஆட்சி செய்திருந்தார்கள். அவர்களை நீக்கிவிட்டு பார்க்கும் போது, உண்மையில் வாழ்ந்து மடிந்த மனிதர்களின் கதை கிடைத்தது. ரசவாதம், காயகல்பம் என சித்தர்களை தேடினால் எத்தனை சுவாரசியங்கள் கிடைக்குமோ, அந்தளவிற்கு எனக்கு இப்போது கிடைக்கின்றது.

இதுவரை நான் கேள்விப்படாத பல தெய்வங்களின் பெயர்களும், கதைகளும் கிடைத்திருக்கின்றன. குறைந்தது ஆயிரம் சுவாமிகளின் பெயர்கள் கிடைக்கும் என நினைக்கின்றேன். நான் சேகரித்த பெயர்கள் விடுபடாமல் இருக்க வேண்டி இங்கு தொகுத்திருக்கிறேன்.

ஆண் தெய்வங்கள் –

தடிவீர சுவாமி

பெரியசாமி, பெரியண்ணாசுவாமி, மாசி பெரியண்ண சுவாமி, கொடை ஆல், மலையாளி, மலையாள கருப்பு, கருப்பண்ண சாமி, கொல்லிமலை கருப்பு, பதினெட்டாம்படி கருப்பு, இரட்டைமலை கருப்பு, ஒன்டி கருப்பு, பனையடி கருப்பு, சங்கிலி கருப்பு, முத்து கருப்பண்ண சாமி, வேம்பழ முத்து கருப்பண்ண சுவாமி, கறுப்பண்ணா, கறுப்பு கூத்தாண்டவர், கீழேரி கருப்பு, உதிர கருப்பு, சமயக்கருப்பசாமி, கருப்பு, தலைவாயில் கருப்பசாமி,கழுவடியான், இருளப்பச்சாமி, அய்யனார், மாடசாமி, சுடலைமாடன், உத்தண்டசாமி, பெரியாண்டவர், பசவன்னா, பதலமா, புத்தாகாசிப், எல்லைக்கறுப்பு, ஐயனார், மாதேஸ்வரா, ஊர் அத்தியன், மகாலிங்கா, ராஜவாயன், எதுமலை மதுரை வீரன், காத்தவராய சுவாமி, மந்திர மாகாமுனி, லாடசன்னாசி, அகோதரவீரபுத்திர சுவாமி, ஆலாத்தி வெள்ளையம்மாள், அனந்தாயி, ஆந்திரமுடையார், உச்சிமாகாளி, கட்டிலவதானம், சிதம்பர நாடார், தடிவீரசாமி, பிச்சைக்காலன், முத்துப்பட்டன் , வன்னியடி மறவன், வன்னியன், வன்னிராசன், வெங்கலராசன், பாவாடைராயன், பருதேசியப்பர், பொன்னர், சங்கர், ஒன்பது அண்ணன்மார்கள், விருமாண்டி, செங்கல்வராயன், வாழ்முனி, செம்முனி, செங்கா முனியப்பன், சங்கிலிபூதத்தார், நல்லமாடன், முத்து முனி, செம்முனி, ஜடாமுனி, லாடமுனி, கருமுனி, வீரமாமுனி, வாழுமுனி, கருப்பராயர், காவல்ராயன், கருப்பராயர், மண்டுகருப்பு, சாத்தன்-சாத்தாயி, வெண்டுமாலைகருப்பு, மாலைக்கருப்பு, தொட்டியக்கருப்பு,தூண்டிவீரன், வாகையடியான், உத்தாண்டராயர், பெத்தாரணசுவாமி, இருளப்பர், இருளாயி, கனரயடி காத்த அய்யனார், அனடக்கலம் காத்த அய்யனார், நீர் காத்த அய்யனார், அருஞ்சுனன காத்த அய்யனார், சொரிமுத்து அய்யனார், கலியணான்டி அய்யனார், கருங்குளத்து அய்யனார், குருந்துனடய அய்யனார், இளம்பானள அய்யனார், கற்குவேல் அய்யனார், கொண்னறயான்டி அய்யனார், செண்பகமூர்த்தி அய்யனார், திருவேட்டழகிய அய்யனார், சமணர்மனல அய்யனார், கூடமுனடய அய்யனார், சினற மீட்டிய அய்யனார், மக்கமனட அய்யனார், செகுட்ட அய்யனார், வெட்டுனடய அய்யனார்,மருது அய்யனார், வேம்பூலி அய்யனார், நினறகுளத்து அய்யனார், ஆதிபுதிரங்கொண்ட அய்யனார், சித்தகூர் அய்யனார், பிரண்டி அய்யனார், வீரமுத்து அய்யனார், பாலடி அய்யனார், தந்தனல வெட்டி அய்யனார், கருமனல காத்த அய்யனார், அல்லல் தீர்த்த அய்யனார், ஹரி இந்திர அய்யனார், கானட பிள்னள அய்யனார், செல்லப் பிள்னள அய்யனார், வீர பயங்கரம் அய்யனார், மாணிக்கக் கூத்த அய்யனார்,

பெண் தெய்வங்கள் –

வெள்ளையம்மாள்

எட்டுகை அம்மன், கொல்லிப் பாவை, பாப்பாத்தி, கருப்பாயி, முத்துநாச்சியார், அரியநாச்சியார், காளியம்மன், துர்க்கையம்மன், தோட்டுக்காரி அம்மன், செல்லியம்மன், மாரியம்மன், கரடியம்மன், காந்தாரியம்மன், வெயிலுகாத்தம்மன், உச்சிமாகாளி, காய்ச்சிக்காரம்மன், வடக்கு வாய்ச்சொல்லி, அரிய நாச்சியம்மன், வீரகாளியம்மன், அங்காள ஈசுவரி, குளத்து அம்மன், மந்தையம்மன், வடக்குத்தியம்மன், சந்தனமாரியம்மன், உமையம்மன், ராசாயி, பெத்தனாட்சி, சோலையம்மன், காமாட்சியம்மன், மரகதவல்லி, செண்பகவல்லியம்மன், சந்திரமாகாளி, அட்டங்கம்மா, அம்மாரி, அங்கம்மா, அன்னம்மா, அரிக்கம்மா, பாலம்மா, பத்ரகாளி, பூலங்கொண்டாள் அம்மன், பொன்னிறத்தாள் அம்மன், அங்காள பரமேஸ்வரி, செமலம்மா, தாலம்மா, தோட்டம்மா, திரௌபதி, துர்க்கா, கங்கம்மா, கூனல்மாரி, கிரிதேவி, கன்னியம்மா, கன்னிகை, கீர்மாரி, மலைமாயி, மாரம்மா, முத்தாலம்மா, பிடாரி, பூலம்மா, சப்தகன்னிகை, துர்க்கை, உடலம்மா, உக்கிரமாகாளி, உச்சினமாகாளி, வாசுகோடி, ஈலம்மா, வானமாலம்மன், பேச்சியம்மன், பச்சை வாழையம்மன், சப்த கன்னிகள், நவ கன்னிகள், முக் கன்னிகள், இசக்கி, நீலி, பைரவி, மாடச்சி, அம்மாச்சி, பேராத்துசெல்வி, தளவாய்பேச்சி, பூங்குறத்தி, காத்தாயி அம்மன், குழந்தையம்மன், ராக்காச்சி , தீப்பாச்சியம்மன், இடைச்சியம்மன்,கிச்சம்மா, தொட்டிச்சிஅம்மன், ஆலாலகங்கா, வல்லடிக்காரர்

சைதாப்பேட்டை கடும்பாடி அம்மன் கோவிலில் ஒன்பது அண்ணன்மார்கள், மூன்று கன்னிகள் என பல்வேறு எண்ணிக்கையில் கூட தெய்வங்களை வழிபடுகின்றனர். இவர்களின் கதையும் கிடைக்கவில்லை.

உதவுங்கள் –

விடுபட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள் பெயர்களை சொல்லுங்கள் சேர்த்துக் கொள்கிறேன். இவர்களில் யாரின் கதை தெரிந்திருந்தாலும் சொல்லுங்கள் கேட்டுக்கொள்கிறேன். இல்லை ஏதேனும் வலைப்பூவில் இருந்தால் லிங்க் கொடுங்கள், படித்து தெரிந்து கொள்கிறேன்.

அன்புடன்,

சகோதரன் ஜெகதீஸ்வரன்.

பழையனூர் நீலி

குலதெய்வங்களைப் பற்றி அறிய முற்பட்ட போது கிடைத்த பழையனூர் நீலியின் கதை. இந்தக் கதையுடன் வெள்ளாலர்களைப் பற்றிய தகவலும் வருகிறது என்பது கவணிக்கத் தக்கது. நீலியை இசக்கி என சில இனத்தவர் வழிபட்டு கொண்டிருக்கின்றார்கள் என்பதும் திருவாலங்காட்டிலிருந்து பழையனூர் முக்கால் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்பதும் செய்தி.

பழையனூர் நீலி

இசக்கியம்மன்

காஞ்சிபுரத்தில் ஒரு வணிகன் வசித்து வந்தான். அவனது மனைவியின் பெயர் நீலி. அவளுடன் அவன் இன்பமாக வாழ்ந்து வந்தான். கணவனுக்கு நீலி ஒரு குறையையும் வைக்கவில்லை. என்றாலும் அந்த வணிகன் அடிக்கடி பாலியல் தொழில் புரிபவர்களின் வீட்டுக்கு சென்று வந்தான். நீலிக்கு இது பிடிக்கவில்லை. கண்டித்தாள். வணிகன் இதை பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து தனது லீலைகளை நடத்தி வந்தான். நீலியும் விடவில்லை. அவனை கண்டிப்பதையும் நிறுத்தவில்லை. தனது சந்தோஷத்துக்கு இடையூறாக நீலி இருப்பதால், சுபயோக சுபதினத்தில் அவளை அவன் கொன்று விட்டான்.

நீலி பேயாக மாறி அவனை பழிவாங்க அலைந்து கொண்டிருந்தாள். இந்த விஷயம் வணிகனுக்கு தெரிந்ததும் சாமியாரை தேடி ஓடினான். அவரிடமிருந்து ஒரு மந்திரவாளை பெற்றுக் கொண்டான். எங்கு சென்றாலும் அந்த வாளுடனேயே சென்றான்.

ஒருநாள் பழையனூருக்கு வியாபார விஷயமாக அவன் சென்றபோது, பேய் உருவில் இருந்த நீலி அவனை துரத்த ஆரம்பித்தாள். ஆனால், அவளால் அவனை எதுவும் செய்யமுடியவில்லை. அவனிடமிருந்த மந்திரவாள் அவளை தடுத்தது. உடனே நீலி, கள்ளிக்கொம்பை ஒடித்து அதை குழந்தையாக மாற்றினாள். தானும் ஒரு அழகிய பெண்ணாக மாறினாள். குழந்தையை இடுப்பில் சுமந்தபடி அவனை பின்தொடர்ந்தாள். வணிகன் பயந்துவிட்டான். நேராக பழையனூரில் உள்ள 70 வேளாளர்கள் அடங்கிய சபையில் முறையிட்டான். அழகிய பெண்ணாக உருமாறி இருந்த நீலி அழுதாள். இவர் என் கணவர். தாசி வலையில் விழுந்து என்னையும் எங்கள் குழந்தையையும் நிர்கதியாக விட்டுவிட்டார். எங்களை சேர்த்து வையுங்கள்…” என்று கதறினாள் .

இதை கேட்டு வணிகன் அலறினான். ” பொய். இவள் என் மனைவியே அல்ல. பேய்!” என ஓலமிட்டான். ஆனால், குழந்தை ஓடிச்சென்று அவனை கொஞ்சியது. ”அப்பா…” என்றழைத்து முத்தமிட்டது . இதனை பார்த்த வேளாளர்கள் வணிகன் பொய் சொல்வதாக நினைத்தனர். ”சரி, இன்றிரவு நீங்கள் மூவரும் இங்கேயே தங்குங்கள். நாளை காலையில் மற்ற விஷயங்களை பேசிக் கொள்ளலாம்” என்றபடி வணிகனையும், குழந்தையுடன் இருந்த அந்தப் பெண்ணையும் ஒரே அறையில் தங்க வைத்தனர். முரண்டு பிடித்த வணிகனை அடக்கினர். போகும்போது மறக்காமல் வணிகனிடமிருந்த அந்த மந்திர வாளை வாங்கி சென்றனர். ”உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் எழுபது பேர் இருக்கும்போது இந்த வாள் எதற்கு? உங்களுக்கு ஏதாவது ஆபத்தென்றால் நாங்கள் எழுபது பேரும் தீக்குளிக்கிறோம்” என்று சொல்லிவிட்டு சென்றனர்.

வணிகனின் கையைவிட்டு மந்திரவாள் சென்றதும் அழகிய பெண்ணாக உருமாறியிருந்த நீலி, தன் உருவத்துக்கு வந்தாள். வணிகனை கொன்று பழி தீர்த்தாள். மறுநாள் வணிகனை காப்பாற்ற முடியாமல் போனதற்காக எழுபது வேளாளர்களும் தீக்குளித்து இறந்தார்கள்.

நல்லதங்காள் கதை

சில கதைகளை கேட்டதும் நெஞ்சம் நெகிழும், சில கதைகள் கேட்டுதும் நெஞ்சம் கனக்கும். நல்லதங்காள் கதை கேட்டாள் இரண்டுமே நடக்கும்.

நல்லதங்காள் கதை –

ராமலிங்க ராஜா, இந்திராணி என்ற தம்பதியினருக்கு மகளாக பிறந்தாள் நல்லதங்கள். இவருக்கு ஒரு அண்ணன் உண்டு. அவர் பெயர் நல்லதம்பி. பெற்றோர்கள் இறந்துவிட நல்லதங்காளை வளர்த்தது நல்லதம்பிதான். காலச்சக்கரம் உருண்டு ஓடின. நல்லதங்காளை மானாமதுரை ராஜா காசிராஜனுக்கு மணம் முடித்து கொடுத்தார்கள். மிக பிரம்மாண்டமான திருமணம். எல்லாம் முடிந்தபின்பு அண்ணனை பிரிய மனமின்றி கணவன் காசிராஜனுடன் மதுரைக்கு புறப்படுபோனாள் நல்லதங்காள்.

அங்கு நல்லதங்கள் காசிராஜன் தம்பதிக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன. செல்வசெழிப்புடன் வளர்ந்துவந்த அவர்களைப் பார்க்க நல்லதம்பி ஒரு முறை கூட மானாமதுரைக்கு வர வில்லை. காரணம் அவனுடைய கொடுமைக்கார மனைவி மூளி அலங்காரி தான். ஆனால் எல்லோரும் சந்தோசமாக இருந்தார்கள். அப்போது திடீரென மானாமதுரையில் வானம் பொய்த்துப்போனது. தொடர்ந்து 12 வருடங்களாக மழை இல்லை.

மக்கள் பஞ்சத்தால் எல்லாம் விற்றார்கள். நல்லதங்காளும் தாலியை தவிர எல்லாம் விற்றுவிட்டாள். அப்போதும் வயிறு நிறையவில்லை. சில இடங்களில் பசி கொடுமையால் மக்கள் சாக தொடங்கினார்கள். நல்லதங்காள் தன் குழந்தைகளை கூட்டிக்கொண்டு அண்ணன் அரண்மனைக்கு செல்வதென தீர்மானம் செய்தாள். ஆனால் இதற்கு காசிராஜன் சம்மதம் தெரிவிக்கவில்லை. இருந்தும் குழந்தைகளுக்காக மனம் இறங்கினான்.

நல்லதங்காளும் ஏழு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு தான் பிறந்த ஊரான அர்சுனாபுரத்திற்கு வந்தாள். ஊரின் எல்லையில் பிள்ளைகளுக்கு களைப்பு வந்துவிட ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தவளை வேட்டையாட வந்த நல்லதம்பி பார்த்தான். தான் வளர்த்த தங்கை வருமையின் கோரபிடியில் சிக்கி சின்னா பின்னமாக இருப்பதை பார்த்து “ உடனே அரண்மனைக்கு போ, அங்கு எல்லாம் இருக்கிறது.நான் மானை வேட்டையாடிவிட்டு வந்துவிடுகிறேன்” என சொல்லி ஓடிப்போனான்.

மூளிக்கு இவர்கள் வருவது தெரிந்து எல்லா உணவுகளையும் ஒளித்து வைத்தாள். பசியால் வாடிய பிள்ளைகள் மூளியின் அறையில் இருந்த மாங்காயையும், தேங்காயையும் ஆளுக்கு ஒன்றாய் எடுத்தன. அதையெல்லாம் பிடுங்கி வைத்துக்கொண்டு அழுகல் நிறைந்ததை கொடுத்தாள் மூளி. சாதம் சமைக்க வீணான பொருட்களையும் ஓட்டைப்பானையையும் தந்தாள். நல்லதங்காள் அதை வைத்தே கஞ்சி காச்சினாள். ஆனால் அதையும் தட்டிவிட்டாள் மூளி. கீழே வழிந்த கஞ்சியை அள்ளிக்குடித்தார்கள் ஏழு பிள்ளைகளும்.

அந்தக் காட்சியை பார்த்ததும் சகித்துக்கொள்ள முடிய வில்லை தாயால். எல்லா குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு பாலுங்கிணற்றிற்கு அருகே போனாள். ஒவ்வொறு குழந்தையாக கிணற்றில் வீசிக்கொன்றாள். பின்பு தானும் விழுந்து இறந்தாள். வேட்டை முடித்து வந்தவனுக்கு அக்கம் பக்கத்தினர் நடந்ததை சொல்ல நல்லதங்காளை தேடி ஓடினான். அவள் ஒடித்துப்போட்ட ஆவாரம் செடி பாதை சொன்னது, பாழும் கிணற்றில் ஏழு குழந்தைகளுடன் அவள் இறந்து போனதை பார்த்தான். காசிராஜன் ஈட்டியால் தன்னை குத்திக்கொண்டு மாண்டு போனான். நல்லதம்பி மூளியை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டான்.

வறுமைக்கு இரு குடும்பத்தையே பலி கொடுத்ததை இன்னமும் கிராமத்து மக்கள் கதைகளாக சொல்லி வருகிறார்கள். வறுமையின் சின்னமாக நல்லதங்காள் இன்னும் கதைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

பெருகிவரும் குலதெய்வ வழிபாடு

இந்து மதத்தின் ஈடு இணையற்ற வரலாற்று சின்னங்களில் குலதெய்வங்களும் ஒன்று. தமிழர்களின் பழங்கால பண்பாடுகளை எடுத்து சொல்ல இன்னமும் வரலாற்று ஆய்வாளர்கள் குலதெய்வ வழிபாட்டை நம்பியிருக்கின்றார்கள். சைவர்களும், வைணவர்களும் சில குலதெய்வங்களை சிவனாகவும், விஷ்னுவாகவும் மாற்றி விட்டாலும் பெரும்பாலான குலதெய்வங்கள் தன்னிலை மாறாமல் இருக்கின்றன. அவற்றின் மகிமை உணர்ந்து வருடம் தோறும் குலதெய்வ வழிபாடு மக்களிடையே பெருகி வருகிறது.

நம் முன்னோர்கள் –

குலதெய்வங்கள் என்பவை வெறும் கதைகளால் தோற்றுவிக்கப்பட்டதோ, ஆகாசத்திலிருந்து குதித்தவையோ அல்ல. அவை நம் முன்னோர்கள். தங்களை காப்பாற்றியவர்களையோ, தங்கள் காலத்தில் வாழ்ந்த சிறந்த மனிதர்களையோ நம் பெரியவர்கள் நமக்கு ஞாபகம் செய்ய குலதெய்வங்களாக வழிபட்டு வந்திருக்கின்றார்கள். வெள்ளாளர்களின் வரலாறு சொல்லும் பழைய நூல்களில் எல்லாம் நீலி கதையும் சொல்லப்பட்டிருப்பதாக அறிந்து வியந்து போகிறேன்.

மதுரைவீரன், கருப்பு, பெரியசாமி, செல்லாயி, மருதாயி என நம் முன்னோர்களின் பெயர்கள் அனைத்தும் குலதெய்வத்தினை சார்ந்தே இடப்பட்டிருக்கின்றன. நம் முன்னோர்களின் வாழ்க்கையோடு பின்னிபினைந்த வழிபாட்டு முறைகளையும், கதைகளையும் பற்றி கிராமங்களில் வாழ்ந்தவர்களுக்கு தான் தெரியும்.

அழிவு –

தெய்வங்களை அரசியலாக்கிய காலகட்டத்தில், திடீரென வெளிபட்ட பார்பாணிய எதிர்ப்பினால் அதிகம் பாதிக்கப்பட்டது குலதெய்வங்கள் தான். பல சிறு தெய்வங்களின் வரலாற்று உண்மைகள் தெரியாமல் போய்விட்டன. அவற்றின் முக்கியத்துவத்தினை உணராமல் பல கோயில்கள் பராமரிக்கப்படாமலும், அழிந்தும் விட்டன.

குலதெய்வம், மதுரைவீரன் என வரலாற்றை சொல்லி வந்த திரைப்படத்துறை கூட பின்நாளில் மாற்றம் கண்டுவிட்டது. விருமாண்டி என்ற தெய்வத்தின் பெயரை வைத்து எடுக்கப்பட்ட படத்தில்கூட அதன் வரலாற்றை சொல்லாமல் விட்டுவிட்டார் கமல். சர்ச்சைக்கு உள்ளான அந்த படத்தின் ஒரு வில்லு பாட்டில் விருமாண்டி வரலாற்றை அறிந்தேன். அந்தப் பாடல் படத்தில் இடம் பெறாமலே போய்விட்டது.

இப்படி எல்லா தரப்பும் செய்த சதியால், சில தமிழர்களுக்கு குலதெய்வ பெயரைத் தவிர மற்ற எந்த செய்தியும் தெரியவில்லை. அதிலும் சிலருக்கு தெய்வங்களின் பெயர்களும் கூட தெரிவதில்லை. இது மிகவும் வேதனையான செய்தி. நம் முன்னோர்களின் வரலாறுகளை நாம் அறிந்து கொள்ளாமல் இருக்கின்றோம்.

மாசி பெரியண்ணன் –

எங்களுடைய குலதெய்வம் மாசி பெரியண்ண சுவாமி. அதன் வரலாற்றை அறிய மிகவும் சிரமமாக இருந்தது. அப்பாவோ, தாத்தாவோ சில சம்பவங்களை மட்டும் தான் கூறினார்கள். அதன் பின் எழுந்த ஆவலில் கொல்லிமலைக்கு சென்று அங்குள்ள பெரியவர்களிடமுடம், பெரிய பூசாரிகளிடமும் கேட்டு வரலாற்றை அறிந்து கொண்டேன்.

மாசி பெரியண்ண சாமி பற்றி படிக்க –

கொல்லிமலை மகிமைகள்
பெரியசாமி கதை கோயில் படங்களுடன்
மாசி பெரியண்ண சாமி் (விக்கிசோர்சில்)

(நன்றி – நண்பர் ஞானப்பித்தன் (எ) வெற்றிக்கதிரவன் அவர்கள் லிங்க் பற்றி ஞாபகம் செய்தமைக்காக)

மறந்துவிட்ட மீடியாக்கள் –

மகாபாரதத்தையும், ராமயணத்தையும் மட்டும் மீண்டும் மீண்டும் பல வடிவங்களில் ஒளிபரப்பு செய்யும் மீடியாக்கள் சிறுதெய்வங்களின் வரலாற்றையும் பதிவு செய்து ஒளிபரப்பினால் நன்றாக இருக்கும். சிறுதெய்வங்களின் கதைகளில் தியாகம், வீரம், அன்பு, அறிவு என பல விதமான சுவைகள் இருக்கின்றன. என்னுடைய குல தெய்வத்தின் வரலாற்றை எப்படியோ அறிந்துகொண்டேன். ஆனால் மற்ற தெய்வங்களின் வரலாற்றை கண்டறிய கொஞ்சம் சிரமாக உள்ளது. நண்பர்களுக்கு அவர்களின் தெய்வங்களைப் பற்றி தெரியவில்லை.

குலதெய்வம் பற்றி வலையில் தேடினால் பெரும்பாலும் எம்.ஜி.ஆரின் படத்தினைப் பற்றிய செய்தி தான் வருகிறது. அப்போதும் சில பெரியவர்கள் இட்ட குலதெய்வ கட்டுரைகளை சேமித்து வைத்து படித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அவை மிக சொற்பமான அளவே இருக்கின்றன. சிறு தெய்வங்களின் கதைகள் சொல்லும் புத்தகங்களை தேடிக் கொண்டிருக்கிறேன். முடிந்தால் எல்லாவற்றையும் இணையத்தில் வெளியிடுவேன்.

ஆவணப்படுத்துங்கள் –

ஒரு தனி மனிதனாக எல்லாவற்றையும் ஆவணம் செய்ய இயலாது. உங்களுடைய குலதெய்வத்தினை பற்றி முழுமையாக அறியுங்கள். அதன் வழிபாட்டு முறைகள், வரலாற்று கதைகள் என எல்லாவற்றையும் ஆவணப்படுத்துங்கள். வலைப்பூக்கள் தொடங்கியுள்ள நண்பர்கள் இந்த பணியை செம்மையாக செய்துவிடுவார்கள். சிலர் செய்து கொண்டும் இருக்கின்றார்கள்.

வலைப்பூக்களில் எழுதி பழக்கமில்லாதவர்களும், வலைப்பூகளை தொடங்காதவர்களும் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றுங்கள் –

தமிழ் எழுதியான என்.எச்.எம்ஐ உங்கள் கணினியில் பதிவிரக்கம் செய்து கொள்ளுங்கள். இது மிகவும் எளிமையான தமிழ் எழுதி, தட்டச்சு பலகையின் மாதிரியும் இதோடு உள்ளது. (மற்ற தமிழ் எழுதிகளின் இணைப்புகள் இந்த தளத்திலே இடது புறமாக கொடுக்கப்பட்டு உள்ளது).

உங்கள் குலதெய்வ வழிபாட்டு முறை, சிறப்பான பெயர்கள், வரலாறு, அமைவிடங்கள் என எல்லாவற்றையும் தமிழில் எழுதிக் கொள்ளுங்கள்.

அவற்றை விக்கியில் பதிவு செய்து விடுங்கள். அவ்வளவுதான். உங்களுடைய குலதெய்வம் பற்றி அறிய விரும்பும் உலக தமிழர்கள் அனைவரையும் அது சென்றடைந்துவிடும்.

வேண்டுகோள் –

தங்களுடைய குலதெய்வம் பற்றிய செய்தியை நீங்கள் எழுதியிருந்தாலோ, அல்லது வலைப்பூவில் ஏதேனும் ஓர் இடத்தில் படித்திருந்தாலோ அவற்றின் இணைப்புகளை கண்டிப்பாக கொடுத்து செல்லவும். வரலாறு கதை சரியாக தெரியவில்லை என்றால் தங்கள் குலதெய்வப் பெயரை பதிவு செய்தால் கூட நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.