கருப்பு வெறும் நிறமல்ல!

கருப்பு வெறும் நிறமல்ல!

வெண்தோல் வேண்டி
வேண்டாத களிம்பு தடவி!

வெளியில் செல்லாமல்
வெயிலில் துள்ளாமல்!

அறைக்குள் முடங்கி
ஆடைக்குள் உறக்கியது போதும்!

உண்மையை உணர்க…

ஊருக்கு உழைத்தோம்- அதனால்
உடலெல்லாலம் கருத்தோம்!

கருப்பு வெறும் நிறமல்ல
கடவுள் கொடுத்த வரம்!

கருப்பின வெறுப்பு!

கருப்பின வெறுப்பென்பது
அவர்களை அடிப்பதும்
அடிமைசெய்வதும் மட்டுமன்று

நான் வெள்ளையாக வேண்டுமென
க்ரீம் எடுத்து பூசுவதும்கூட
கருப்பின வெறுப்புதான்!

கவிதைக்கான காரணம் –

காலம் காலமாக உழைத்தனாலும், தட்ப வெட்ப சூழலாலும் நம் தமிழர்களின் நிறம் சராசரியாக கருப்பு நிறமாகவே இருக்கிறது. சிலர் கொஞ்சம் மாநிறத்தில் இருந்தாலும், பெருபான்மை எல்லாம் கருப்பு நிறமே. உண்மை இப்படியிருக்க, பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை காட்டப்படும் வெண்தோல் விளம்பரங்களால், கருப்பான பெண் மீதும், ஆண் மீதும் மறைமுக வன்முறைகள் தொடுக்கப்படுகின்றன. ஒரு சமூகத்தின் நிறத்திற்கு எதிரான நிறவெறியை நாம் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறோம். இப்போதே பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும், தலைவிரித்தாட தொடங்கிவிட்டது நிறவெறி.

சமீபத்திய தமிழ் திரைப்படங்களின் கதைநாயகிகள் எல்லாம் வெளிர் நிறம் கொண்டவர்கள், வெளிமாநிலத்தவர்கள். தமிழ்பெண்களின் நிறம் தகுதி குறைவாக நினைக்கப்படும் போது, தமிழே அறியாதவர்கள் எல்லாம் தங்கள் நிறத்திற்காக கதைநாயகிகளாக ஆகின்றார்கள். “வெள்ளையாய் இருப்பவன் வெகுளி”, “சிகப்பு பெண்ணே அழகு”, “வெள்ளையாய் இருந்தால்தான் சாதிக்க முடியும்”  என்றெல்லாம் நம் நெஞ்சத்தில் நச்சு வளர்ந்து கொண்டே இருக்கிறது. கருப்பாக இருப்பதை “டல்” என கேலி செய்வதும், வெள்ளையாய் வந்தால் “தூள்” என புகழ்வதும் வன்முறை அல்லவா.  வெள்ளையாய் இருந்தால் தான் மேடையில் பாட முடியும், கருப்பாக இருப்பதே தோல்விக்கு காரணமென, திறமையை எல்லாம் கேலி செய்வது தவறு அல்லவா. கருப்பாக இருப்போறெல்லாம் சிவப்பாக மாற இருவாரம் போதுமென்றால் ஆப்பிரிக்காவில் இருக்கும் எல்லோரையும் சிவப்பாக மாற்றிவிட முடியுமே. அமெரிக்காவின் ஜனாதிபதியாக உலகையே ஆட்டிப் படைக்கும் ஒபாமா, இந்நேரம் வெள்ளையாய் ஆயிருப்பாரே.  எந்தவித அறிவியல் புரிதலும் இன்றி அடுக்கடுக்காய் ஏவப்படும் அபாய விளம்பரங்களை எந்த சமூக நல அமைப்பும் இன்றுவரை எதிர்க்கவில்லை. ஊருக்கு உழைப்பதாய் தங்களை முன்நிறுத்திக் கொள்ளும் எந்த ஊடகங்களும்(தொலைகாட்சி, திரைப்படம், நாளேடுகள், புத்தகங்கள்) இதற்கெதிராய் குரல் கொடுப்பதில்லை.

ஆங்காங்கே சில தோழிகள் மட்டும் இந்த விஷயத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதை பதிவு செய்திருக்கிறார்கள். சமூகம் தங்களை புறக்கணிப்பு நிகழ்கிறது என்கிறார்கள்.  ஆணைவிட இந்த பாசிச மனப்பான்மை பெண்களையே அதிகம் பாதிக்கிறது. கருப்பாய் பெண் பிறந்தால் பவுன் அதிகம் போடவேண்டுமென சொல்லும் சமூகத்தில், கருப்பு ஒரு குறைபாடாகவே பார்க்கப்படும் அவலம். கை கால்களை இழந்து நிற்கும் மனிதர்களையே மாற்றுத்திறனாளிகள் என மரியாதையோடு அழைக்கும் நாம், கருப்பாய் பிறந்தமைக்காக மனதினை ஊனமாக்குவது ஞாயமா. நீ கருப்பு நிறம் அதனால் உன்னுடன் நான் பழகமாட்டேன் என்று சொல்லுவதை நிறவெறி தானே. இன்று பழகமாட்டேன், பேசமாட்டேன் என்றெல்லாம் சொல்லும் வெறுப்புகள் வளர்ந்து, நாளே வெளிநாடுகளில் உள்ளது போல கொலைகளும், தற்கொலைகளும் நடைபெறும் முன் இந்த கொடுஞ் செயலை தடுத்துநிறுத்திட வேண்டும்.

தொலைக்காட்சி, திரைப்படம், செய்திதாள்,  நாளேடுகள், புத்தகங்கள் என்று பரவிக்கிடக்கும் இந்த வெண்க்ரீம் விளம்பரங்களை தடுத்துநிறுத்த வேண்டும். சமூக நல இயக்கங்களும், பெண்ணிய அமைப்பைபுகளும் இந்த பாசிசத்திற்கு எதிரான குரல்களையும், விழிப்புணர்வையும் பதிவு செய்ய வேண்டும். சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் இந்த நஞ்சு, முயல்பிடிக்க பம்மியிருக்கும் வேட்டை நாய்போல எப்போது வேண்டுமானாலும் உயிரை பலிகொள்ளலாம். அதற்குள் விழிப்பது அவசியம். நன்றி!.

தமிழ் மண்ணின் சாமிகளின் பட்டியல்

என்னுடைய குலதெய்வம் மாசி பெரியண்ணின் கோவிலுக்கு சென்றிருந்த போதுதான், பல சுவாமிகளின் பெயர்கள் தெரியவந்தன. அவற்றின் கதைகள் அங்கிருக்கும் பூசாரிகளுக்குக் கூட தெரியவில்லை. என்னுடைய குலதெய்வத்தின் கதையையே பல மாதங்கள் அழைந்து திரிந்து பலரிடமும் கேட்டேன். என்னுடைய அப்பாவுக்கு கொஞ்சம் செய்தி மட்டுமே தெரிந்திருந்தது. ஓமாந்தூர் பெரிய பூசாரியிடம் கேட்டப்போதுதான் உண்மையான கதையை முழுமையாக அறிய நேர்ந்தது.

என்னைப் போல பலரும் தங்களின் குலதெய்வங்களின் கதை அறிய ஆவலாய் இருக்கிறார்கள் என்று அறிந்தேன். என்னுடைய நண்பர்களின் குலதெய்வங்களின் கதைகளை அறிய முற்பட்டபோது எனக்கு ஏராளமான ஆச்சிரியங்கள் நிகழ்ந்ததன. பெரும்பாலான கதைகளில் சிவனும், விஷ்னுவும் ஆட்சி செய்திருந்தார்கள். அவர்களை நீக்கிவிட்டு பார்க்கும் போது, உண்மையில் வாழ்ந்து மடிந்த மனிதர்களின் கதை கிடைத்தது. ரசவாதம், காயகல்பம் என சித்தர்களை தேடினால் எத்தனை சுவாரசியங்கள் கிடைக்குமோ, அந்தளவிற்கு எனக்கு இப்போது கிடைக்கின்றது.

இதுவரை நான் கேள்விப்படாத பல தெய்வங்களின் பெயர்களும், கதைகளும் கிடைத்திருக்கின்றன. குறைந்தது ஆயிரம் சுவாமிகளின் பெயர்கள் கிடைக்கும் என நினைக்கின்றேன். நான் சேகரித்த பெயர்கள் விடுபடாமல் இருக்க வேண்டி இங்கு தொகுத்திருக்கிறேன்.

ஆண் தெய்வங்கள் –

தடிவீர சுவாமி

பெரியசாமி, பெரியண்ணாசுவாமி, மாசி பெரியண்ண சுவாமி, கொடை ஆல், மலையாளி, மலையாள கருப்பு, கருப்பண்ண சாமி, கொல்லிமலை கருப்பு, பதினெட்டாம்படி கருப்பு, இரட்டைமலை கருப்பு, ஒன்டி கருப்பு, பனையடி கருப்பு, சங்கிலி கருப்பு, முத்து கருப்பண்ண சாமி, வேம்பழ முத்து கருப்பண்ண சுவாமி, கறுப்பண்ணா, கறுப்பு கூத்தாண்டவர், கீழேரி கருப்பு, உதிர கருப்பு, சமயக்கருப்பசாமி, கருப்பு, தலைவாயில் கருப்பசாமி,கழுவடியான், இருளப்பச்சாமி, அய்யனார், மாடசாமி, சுடலைமாடன், உத்தண்டசாமி, பெரியாண்டவர், பசவன்னா, பதலமா, புத்தாகாசிப், எல்லைக்கறுப்பு, ஐயனார், மாதேஸ்வரா, ஊர் அத்தியன், மகாலிங்கா, ராஜவாயன், எதுமலை மதுரை வீரன், காத்தவராய சுவாமி, மந்திர மாகாமுனி, லாடசன்னாசி, அகோதரவீரபுத்திர சுவாமி, ஆலாத்தி வெள்ளையம்மாள், அனந்தாயி, ஆந்திரமுடையார், உச்சிமாகாளி, கட்டிலவதானம், சிதம்பர நாடார், தடிவீரசாமி, பிச்சைக்காலன், முத்துப்பட்டன் , வன்னியடி மறவன், வன்னியன், வன்னிராசன், வெங்கலராசன், பாவாடைராயன், பருதேசியப்பர், பொன்னர், சங்கர், ஒன்பது அண்ணன்மார்கள், விருமாண்டி, செங்கல்வராயன், வாழ்முனி, செம்முனி, செங்கா முனியப்பன், சங்கிலிபூதத்தார், நல்லமாடன், முத்து முனி, செம்முனி, ஜடாமுனி, லாடமுனி, கருமுனி, வீரமாமுனி, வாழுமுனி, கருப்பராயர், காவல்ராயன், கருப்பராயர், மண்டுகருப்பு, சாத்தன்-சாத்தாயி, வெண்டுமாலைகருப்பு, மாலைக்கருப்பு, தொட்டியக்கருப்பு,தூண்டிவீரன், வாகையடியான், உத்தாண்டராயர், பெத்தாரணசுவாமி, இருளப்பர், இருளாயி, கனரயடி காத்த அய்யனார், அனடக்கலம் காத்த அய்யனார், நீர் காத்த அய்யனார், அருஞ்சுனன காத்த அய்யனார், சொரிமுத்து அய்யனார், கலியணான்டி அய்யனார், கருங்குளத்து அய்யனார், குருந்துனடய அய்யனார், இளம்பானள அய்யனார், கற்குவேல் அய்யனார், கொண்னறயான்டி அய்யனார், செண்பகமூர்த்தி அய்யனார், திருவேட்டழகிய அய்யனார், சமணர்மனல அய்யனார், கூடமுனடய அய்யனார், சினற மீட்டிய அய்யனார், மக்கமனட அய்யனார், செகுட்ட அய்யனார், வெட்டுனடய அய்யனார்,மருது அய்யனார், வேம்பூலி அய்யனார், நினறகுளத்து அய்யனார், ஆதிபுதிரங்கொண்ட அய்யனார், சித்தகூர் அய்யனார், பிரண்டி அய்யனார், வீரமுத்து அய்யனார், பாலடி அய்யனார், தந்தனல வெட்டி அய்யனார், கருமனல காத்த அய்யனார், அல்லல் தீர்த்த அய்யனார், ஹரி இந்திர அய்யனார், கானட பிள்னள அய்யனார், செல்லப் பிள்னள அய்யனார், வீர பயங்கரம் அய்யனார், மாணிக்கக் கூத்த அய்யனார்,

பெண் தெய்வங்கள் –

வெள்ளையம்மாள்

எட்டுகை அம்மன், கொல்லிப் பாவை, பாப்பாத்தி, கருப்பாயி, முத்துநாச்சியார், அரியநாச்சியார், காளியம்மன், துர்க்கையம்மன், தோட்டுக்காரி அம்மன், செல்லியம்மன், மாரியம்மன், கரடியம்மன், காந்தாரியம்மன், வெயிலுகாத்தம்மன், உச்சிமாகாளி, காய்ச்சிக்காரம்மன், வடக்கு வாய்ச்சொல்லி, அரிய நாச்சியம்மன், வீரகாளியம்மன், அங்காள ஈசுவரி, குளத்து அம்மன், மந்தையம்மன், வடக்குத்தியம்மன், சந்தனமாரியம்மன், உமையம்மன், ராசாயி, பெத்தனாட்சி, சோலையம்மன், காமாட்சியம்மன், மரகதவல்லி, செண்பகவல்லியம்மன், சந்திரமாகாளி, அட்டங்கம்மா, அம்மாரி, அங்கம்மா, அன்னம்மா, அரிக்கம்மா, பாலம்மா, பத்ரகாளி, பூலங்கொண்டாள் அம்மன், பொன்னிறத்தாள் அம்மன், அங்காள பரமேஸ்வரி, செமலம்மா, தாலம்மா, தோட்டம்மா, திரௌபதி, துர்க்கா, கங்கம்மா, கூனல்மாரி, கிரிதேவி, கன்னியம்மா, கன்னிகை, கீர்மாரி, மலைமாயி, மாரம்மா, முத்தாலம்மா, பிடாரி, பூலம்மா, சப்தகன்னிகை, துர்க்கை, உடலம்மா, உக்கிரமாகாளி, உச்சினமாகாளி, வாசுகோடி, ஈலம்மா, வானமாலம்மன், பேச்சியம்மன், பச்சை வாழையம்மன், சப்த கன்னிகள், நவ கன்னிகள், முக் கன்னிகள், இசக்கி, நீலி, பைரவி, மாடச்சி, அம்மாச்சி, பேராத்துசெல்வி, தளவாய்பேச்சி, பூங்குறத்தி, காத்தாயி அம்மன், குழந்தையம்மன், ராக்காச்சி , தீப்பாச்சியம்மன், இடைச்சியம்மன்,கிச்சம்மா, தொட்டிச்சிஅம்மன், ஆலாலகங்கா, வல்லடிக்காரர்

சைதாப்பேட்டை கடும்பாடி அம்மன் கோவிலில் ஒன்பது அண்ணன்மார்கள், மூன்று கன்னிகள் என பல்வேறு எண்ணிக்கையில் கூட தெய்வங்களை வழிபடுகின்றனர். இவர்களின் கதையும் கிடைக்கவில்லை.

உதவுங்கள் –

விடுபட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள் பெயர்களை சொல்லுங்கள் சேர்த்துக் கொள்கிறேன். இவர்களில் யாரின் கதை தெரிந்திருந்தாலும் சொல்லுங்கள் கேட்டுக்கொள்கிறேன். இல்லை ஏதேனும் வலைப்பூவில் இருந்தால் லிங்க் கொடுங்கள், படித்து தெரிந்து கொள்கிறேன்.

அன்புடன்,

சகோதரன் ஜெகதீஸ்வரன்.

குற்றம் செய்பவர்களுக்கு குன்னிமரத்தான் தண்டனை

இந்த தளம் நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள வலையப்பட்டி எனும் ஊரில் அமைந்துள்ளது. நாமக்கலிருந்து மிக அருகில் உள்ள ஊர் என்பதால் போக்குவரத்திற்கு பிரட்சனையில்லை.

குன்னிமரத்தான் அறிமுகம் –

எங்கள் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த ஒரு குடும்பத்தின் குலதெய்வம் இது. ஒரு முறை அவர்களின் உறவினர் வீட்டில் திருட்டு போனது, காவல் துறையை அனுகியும் பலன் இல்லை. எனவே குலதெய்வமான குன்னிமரத்தானுக்கு சேவலை நேந்துவிட முடிவு செய்தார்கள்.

ஒரு விழாவினைப் போல உறவினர்கள் ஒன்று சேர்ந்து செல்ல, அவர்களோடு நானும் இணைந்து கொண்டேன். நாங்கள் குன்னிமரத்தான் கோவிலுக்கு சென்றோம். பொதுவாக கோவிலில் மாடுகளையும், ஆடுகளையும், கோழிகளையும் தானமாக வழங்குவதைதான் பாரத்திருக்கிறேன். ஆனால் அன்று அவர்கல் செய்தது மிகவும் வினோதமான ஒன்று!. அது பற்றி சொல்லும் முன் கோவில் அமைப்பை பற்றியும், தள தோற்றத்தைப் பற்றியும் சொல்லிவிடுகிறேன்.

தள வரலாறு –

சுமார் 200 வருடங்களுக்கு முன்னால் இந்த இடத்தில் நெற்கதிரை அடிக்க வந்த விவசாயிகள், நிலத்தை பண்படுத்த முயன்ற போது குன்னிமரத்தை வெட்டினர். அதில் ஒரு குன்னி மரத்தில் ரத்தம் வர பயந்து நடுங்கினர். அவர்கள் பயத்தினைப் போக்க கருப்புசாமி அங்கு எழுந்தருளியதாகவும், குன்னிமரத்திலிருந்து தோன்றியதால் குன்னிமரத்தான் எனவும் அழைக்கின்றனர்.

மகிமை –

இந்த வகை குன்னி மரமானது சித்த வைத்தியத்திற்கு பெருதும் உதவுவதாக பூசாரி சொன்னார். குன்னிமரத்தான் சந்திற்கு எதிரே ஒரு பெரிய வெண் குதிரையோன்று காணப்படுகிறது.

அழகிய பூக்கள் பூக்கும் வன்னி மரங்களும், சிவப்பு குதிரையும் கோவிலுக்குள் உள்ளன. அழகிய இரண்டு துவாரபாலகர்கள் காவல் செய்ய அற்புதமாக உள்ளே இருக்கின்றார் கருப்பண்ண சுவாமி.

ஈடு போடல் –

ஒரு உயிர்கோழியை கால்களில் கட்டிய கயிற்றை கோவிலின் நுழைவுப் பகுதியில் இருக்கும் வேண்டுதல் சங்கிலி இணைத்துவிடுகின்றனர். இப்போது தலைகீழாக தொங்கும் கோழியின் கழுத்தை அறுத்துவிடுகின்றனர்.

வீட்டில் பணம், நகையை கொள்ளையடித்தவனை தண்டிக்கவும் , எதிரிகளி்ன் தொல்லைகள் குறையவும் இந்த வேண்டுதல் நடத்தப்படுகின்றன. மற்ற பறவைகளோ, விலங்குகலோ இந்த கோழிகளை தீண்டுவதில்லை என்பதோடு, மாமிச வாடையும் இதனுகில் வீசுவதில்லை என்றும் அவர்கள் சொன்னார்கள். நேரில் கண்டபிறகு தான் அது உண்மை என எனக்கு புரிந்தது.