கதைகளும் நானும் – விடலை ஞாபகங்கள்

கதைகளும் நானும் – மழலை ஞாபகங்கள் ன் தொடர்ச்சி,..

சிறுவர் மலரில் தொடங்கிய என் வாசிப்பனுவபம் வாரமலர், குமுதம், ஆனந்தவிகடன் என சிற்றிதழ்களாக நீண்டது.  சிற்றிதழ் கதைகளில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கொஞ்சம் சிற்றின்பமும் இணைந்தன.  மலரின் வாசனையில் மதிமயங்கிய வண்டென மனம் தள்ளாடின. அதன் புரிதலை நோக்கிய பயணத்தில் புராணக் கதைகளில் கூட இதுவரை தெரிந்த கதைகளிலேயே சில சம்பவங்கள் உடன் சேரத் தொடங்கின.  பாஞ்சாலிக்கு ஐந்து கணவன்கள், தசரதனுக்கு ஆயிரம் மனைவிகள், இராமனின் மனைவிக்கு இராவணன் ஆசை கொண்டது என கதைகளின் அடிநாதம் காமமாக இருந்தது.

உடலுறவு என்பதை வெறுத்தோ, குழந்தைகளுக்கு சொல்ல மறுத்தோ புராண, இதிகாசங்களில் ஒரு நகைப்புக்குறிய விசயத்தினை செய்திருப்பார்கள். குமரன் சிவ நெற்றி பொறியில் இருந்து பிறந்தான், வினாயகன் சக்தியின் அழுக்கில் இருந்து பிறந்தான், ஐயப்பனை மன்னன் கண்டெடுத்தான் என்று கதையளந்திருப்பார்கள். மகாபாரதத்தில் பாண்டு இறந்தபிறகு குந்திக்கு ஐந்து மகன்கள் பிறந்தன என்றும், ஒவ்வொருவரின் தந்தையும் எமன்(தர்மனின் தந்தை), வாயு(பீமனின் தந்தை), இந்திரன்(அர்ஜூன்னின் தந்தை), அஸ்வினி தேவர்கள்(நகுலன்,சகாதேவனின் தந்தை) என்று சொன்னவர்கள். மந்திரத்தால் பிறந்தவர்களாக சுட்டியிருப்பார்கள். அதனால்தான் கண்ணனும், இயேசுவும் கன்னித்தாய்க்கு பிறந்தவர்களாக மாற்றியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

நல்லவேளை சிற்பிகளும் அவ்வாறு நினைக்காததால் பாலியல் கல்வி கோயில் சிற்பங்களாக இருந்துவந்துள்ளன. அம்மையும் அப்பனும் சொல்லிதர தயங்கும் சங்கதிகளெல்லாம் சப்தமின்றி அங்கிருந்தன. கோயிலே கதியென இருந்த அந்தகால மக்களுக்கு இதெல்லாம் சாத்தியப்பட்டு இருந்திருக்கலாம். கருவறை மட்டுமே பிரதானமாக மாறியிருக்கும் இந்த காலத்தில் நிச்சயம் கோவில்சிற்பங்களால் பலனில்லை. காரைக்கால் அருகே இருக்கும் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் 500 ரூபாய் தரிசன நபர்கள் மட்டுமே ராஜகோபுரம் வழியாக நுழைய முடியும். விழாக்காலங்களில் வாசலில் ஆரமிக்கும் இரும்பு தடுப்புகள், சனீஸ்வரை நமக்கு காட்டிவிட்டு மறுபடியும் வாசலுக்கே கொண்டுவந்து விட்டுவிடும். பிறகு எங்கிருந்து கோயில் சிற்பங்களை கண்டுகளிப்பதெல்லாம்.

ஒவ்வொரு ஆணின் பருவ வயது ஒரு சிக்கலான நூல்கண்டினைப் போன்றது. அதன் சிக்கல்களை நீக்க முடியாமல் நூல் முழுவதையும் வீணாக்கிவிடுகின்றதைப் போல வாழ்க்கையை வீணடித்த ஆண்களே இங்கு அதிகம். வெகுசிலரே அதன் சிக்கல்களை புரிந்துகொண்டு வாழ்கின்றார்கள். இந்த சமூகத்தின் கட்டமைப்பில் ஆண்களின் நிலையை விட பெண்ணின் நிலை மிகவும் தெளிவானதாக இருக்கிறது. அவளுக்கு அன்னை, பாட்டி என எல்லோரும் உதவி செய்ய காத்திருக்கின்றார்கள். போதாக்குறைக்கு சமூலநல இயக்கங்களும் உடனிருக்கின்றன. ஆனால் ஆணின் அருகில் வரக் கூட தகப்பன்மார்கள் விரும்புவதில்லை. சமூகமும் அதன் பொறுப்புணர்வில்லாமல் ஊமையாக இருந்துவிடுகிறது. அதனால் முட்டிமோதி பருவத்தினைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஆண்களுக்கு ஏற்படுகிறது.

என் சகவயது தோழர்களும் ஏறக்குறைய இதே நிலையில்தான் இருந்தார்கள். அவர்களிடமும் பல கேள்விகள் இருந்தன, விடையின்றி. எங்கிருந்து இதற்காக விடைபெறுவது. இணையம் அறிமுகம் இல்லா காலம் என்பதால் ஒரே உபாயம் புத்தகம் மட்டுமே. அறிமுகமானது குறுநாவல் படிக்கும் வழக்கம். ஒரு கதாநாயகன் கதாநாயகியை திருமணம் செய்து கொள்வதிலிருந்து கதை ஆரமிக்கிறது. அவன் அவளுடைய உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் நேரம்கால கணக்கின்றி அவளை அனுபவிப்பதிலேயே குறியாக இருக்கிறான். அவள் அன்னையிடம் புகார் கூறும் போது, அன்னை அதை அலட்சியம் செய்கிறாள். இப்படி போகின்ற கதையின் இறுதியில் அவளின் தகப்பன் இறந்ததை கூட மறைத்து இரவு முழுதும் அவளுடன் கழித்துவிட்டு காலையில் சொல்கிறான். அதனால் கோபம் கொண்டு அவள் வெளியேறுவதாக முடிகிறது கதை. எது புரிந்த்தோ இல்லையோ, இவ்வகை கதைகளை படிப்பதால் கேள்விகளுக்கு விடை கிடைக்காது என்று நன்கு புரிந்தது.

ஆனாலும் பருவக் கதைகள் சகதோழர்களிடம் ஏகம் இருந்தன. வழிவழியாக நாடோடிப் பாடல்களைப் போல கடத்தப்பட்டுவந்த அது, இன்னமும் வரிவடிவம் பெறாமல் இருக்கின்றன. சில எழுத்தாளர்கள் சுஜாதா, கி.ராஜநாராயணன் போல துணிந்து எழுதினாலும் அதெல்லாம் முதல் மழைதுளி போன்றதே. இன்றும் கடலளவு கதைகள் காற்றோடு காற்றாய் பரிமாறப்பட்டு வந்துகொண்டிருக்கின்றன. தேர்ந்த எழுத்தாளர்களால் எழுத்துருவம் பெறும் கதைகள் திரிதலுக்கும் உட்படுகின்றன. நாட்டார் பாடல்கள் போல அப்படியே ஆவணம் செய்தல் கடினமே. மூன்றாம் தர எழுத்தாளர்களால் எழுதப்படும் கதைகளில் நான் மேலே கூறிய எதையும் நீங்கள் பெற முடியாது. காமத்தினை காசாக்க நினைப்பவர்களின் கதையில் சதை வர்ணனை தவிற ஏதையும் எதிர்பார்க்க முடியாது. 13+, 18+ என வயதுவரையரை செய்தாலும் கதைகளுக்கு வயதில்லை.

இதில் ரசனை மிகுந்த நகைச்சுவை கதைகளும் ஏராளம். விடுதியின் ஞாயிறுகளில் மேடைமீதேறி ஒவ்வொருவராய் கதை பகிர்ந்திருக்கிறோம். மண்குடம் கதை சொல்லி நான் அமர்ந்த பிறகு அரங்கேறிய கதைகளால் விடுதியறை வெட்கம் கொண்டிருக்கும். குபீர் சிரிப்பலைகளை அடக்கி விடுதி கண்காணிப்பாளரிடமிருந்து தப்பிய அனுபவங்களை எத்தனை தோழர்கள் பகிர்ந்து கொண்டிருப்பார்கள் என்பதே கேள்விக் குறிதான். இறுக்கமாக இருக்கும் நம் சமூகத்திலேயே இத்தனை கதைகள் புழங்குகையில், வெளிநாடுகளில் எளிமையான  காமிக்ஸ் வரை சென்றது வியப்புகுறியதல்ல.

பாலுறுப்புகளின் அமைப்பினையும், செயல்பாட்டினையும் பள்ளி பாடபுத்தகம் கற்றுக் கொடுத்தாலும், வாழ்வியல் சந்தேகங்களை அவைகள் கண்டுகொள்வதில்லை. காமகதைகளும் உதவாது என்றானபோது, ஏன்?ஏதற்கு?எப்படி? என்பதில் வாசகர் சுயஇன்பம் பற்றி கேட்ட கேள்விக்கு சுஜாதா விடை எழுதியிருந்தார். எதார்த்த உண்மையானது கதையில் வருவது போல கற்பனையல்ல என்று உணர்ந்த போது, நாராயணரெட்டி, ஷாலினி போன்ற மருத்துவர்களின் நூல்கள் கிடைக்க தொடங்கின. இதெல்லாம் இணையமென்ற பரந்தவெளி அறிமுகமி்ல்லா காலத்தில் நிகழந்த ஒரு விடலை வாழ்வியல் நிகழ்வுகள். இப்போதிருக்கும் விடலைகளுக்கு இதைவிட அதிக கதைகள் கிடைத்திருக்கலாம், இல்லை கிடைக்கப்பெறாமல் கூட போயிருக்கலாம். கிடைத்தவர்கள் பாக்கியசாலிகள் என்று சொல்லமுடியாத போது என்ன கவலை?

பி.கு –

விரசமின்றி எழுதியிருக்கிறேன் என்று நம்புகிறேன். இருப்பினும் விரும்பாதவர்கள் பொருட்செய்யாதீர்கள்.

இரண்டு பொண்டாட்டிக்காரன் கதை

ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழனுடைய கலாச்சாரமா?.
தமிழனின் கடவுளான முருகனுக்கு இரண்டு மனைவிகள். அவனுடைய தந்தைக்கும், அண்ணனுக்கும் கூட இரண்டு மனைவிகள். ஆன்மீகத்தில் மட்டுமல்ல, நாத்திகத்தில் கூட இரண்டு பொண்டாக்காரன்கள் இருக்கின்றார்கள். தமிழனின் தலைவனாக தன்னை முன்நிறுத்திக் கொண்ட தாத்தா கருணாநிதிக்கு மூன்று மனைவிகள். பகுத்தறிவு தந்தையான பெரியாருக்கோ இரண்டு மனைவிகள்.

இந்தக் கலாச்சாரத்தைப் பற்றிய கவலைகள் எதுவுமின்றி ஒரு சின்ன நகைச்சுவைக் கதை. நித்தியானந்தரை குமுதம் அறிமுகப்படுத்தியது, ஆனந்த விகடனில் வெளியான சுவாமி சுகபோனந்தாவின் “மனசே ரிலாக்ஸ் ப்ளிஸ்” என்ற தொடருக்கு பிறகு தான் என்று சொல்லுகின்றார்கள். அந்த மனசே ரிலாக்ஸ் ப்ளிஸ் புத்தகத்திலிருந்து,….

அவன் நடுத்தர வயதை சேர்ந்தவன். அவன் தலையில் பாதி வெள்ளை முடி. அவனுக்கு இரண்டு மனைவிகள். ஒருத்தி அவனை விட வயதில் மூர்த்தவள். மற்றொருவள் அவனைவிட சிறியவள்.

“இப்படி தலையில் வெள்ளை முடியோடு நீங்கள் என்னுடன் வந்தால் , என் தோழிகள் எல்லாம் என்னை கிண்டல் செய்வார்கள்..” என்று சொல்லி இளைய மனைவி அவன் தலையில் இருந்த வெள்ளை முடிகளையெல்லாம் ஒரு நாள் பிடுங்கிவிட்டாள்.

அடுத்த நாள் காலையில் அவனைப் பார்த்த மூத்த மனைவி திடுக்கிட்டுப் போனாள்.”இப்படி கருகருவென்ற தலைமுடியோடு இருக்கும் உங்களுடன் நான் ஜோடியாக வெளியே வந்தால், பார்ப்பவர்கள் என்னைத் தான் “பாட்டி” என்று பரிகாசம் செய்வார்கள். இதை நான் அனுமதிக்க மாட்டேன்!” என்று சொல்லிவிட்டு அவன் தலையில் இருந்த கருப்பு முடிகளையெல்லாம் பிடுங்கிவிட்டாள்.

ஆக மொத்தத்தில் அவன் இப்போது முழு மொட்டை.

என்ன சிரித்தீர்களா?…

பழையனூர் நீலி

குலதெய்வங்களைப் பற்றி அறிய முற்பட்ட போது கிடைத்த பழையனூர் நீலியின் கதை. இந்தக் கதையுடன் வெள்ளாலர்களைப் பற்றிய தகவலும் வருகிறது என்பது கவணிக்கத் தக்கது. நீலியை இசக்கி என சில இனத்தவர் வழிபட்டு கொண்டிருக்கின்றார்கள் என்பதும் திருவாலங்காட்டிலிருந்து பழையனூர் முக்கால் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்பதும் செய்தி.

பழையனூர் நீலி

இசக்கியம்மன்

காஞ்சிபுரத்தில் ஒரு வணிகன் வசித்து வந்தான். அவனது மனைவியின் பெயர் நீலி. அவளுடன் அவன் இன்பமாக வாழ்ந்து வந்தான். கணவனுக்கு நீலி ஒரு குறையையும் வைக்கவில்லை. என்றாலும் அந்த வணிகன் அடிக்கடி பாலியல் தொழில் புரிபவர்களின் வீட்டுக்கு சென்று வந்தான். நீலிக்கு இது பிடிக்கவில்லை. கண்டித்தாள். வணிகன் இதை பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து தனது லீலைகளை நடத்தி வந்தான். நீலியும் விடவில்லை. அவனை கண்டிப்பதையும் நிறுத்தவில்லை. தனது சந்தோஷத்துக்கு இடையூறாக நீலி இருப்பதால், சுபயோக சுபதினத்தில் அவளை அவன் கொன்று விட்டான்.

நீலி பேயாக மாறி அவனை பழிவாங்க அலைந்து கொண்டிருந்தாள். இந்த விஷயம் வணிகனுக்கு தெரிந்ததும் சாமியாரை தேடி ஓடினான். அவரிடமிருந்து ஒரு மந்திரவாளை பெற்றுக் கொண்டான். எங்கு சென்றாலும் அந்த வாளுடனேயே சென்றான்.

ஒருநாள் பழையனூருக்கு வியாபார விஷயமாக அவன் சென்றபோது, பேய் உருவில் இருந்த நீலி அவனை துரத்த ஆரம்பித்தாள். ஆனால், அவளால் அவனை எதுவும் செய்யமுடியவில்லை. அவனிடமிருந்த மந்திரவாள் அவளை தடுத்தது. உடனே நீலி, கள்ளிக்கொம்பை ஒடித்து அதை குழந்தையாக மாற்றினாள். தானும் ஒரு அழகிய பெண்ணாக மாறினாள். குழந்தையை இடுப்பில் சுமந்தபடி அவனை பின்தொடர்ந்தாள். வணிகன் பயந்துவிட்டான். நேராக பழையனூரில் உள்ள 70 வேளாளர்கள் அடங்கிய சபையில் முறையிட்டான். அழகிய பெண்ணாக உருமாறி இருந்த நீலி அழுதாள். இவர் என் கணவர். தாசி வலையில் விழுந்து என்னையும் எங்கள் குழந்தையையும் நிர்கதியாக விட்டுவிட்டார். எங்களை சேர்த்து வையுங்கள்…” என்று கதறினாள் .

இதை கேட்டு வணிகன் அலறினான். ” பொய். இவள் என் மனைவியே அல்ல. பேய்!” என ஓலமிட்டான். ஆனால், குழந்தை ஓடிச்சென்று அவனை கொஞ்சியது. ”அப்பா…” என்றழைத்து முத்தமிட்டது . இதனை பார்த்த வேளாளர்கள் வணிகன் பொய் சொல்வதாக நினைத்தனர். ”சரி, இன்றிரவு நீங்கள் மூவரும் இங்கேயே தங்குங்கள். நாளை காலையில் மற்ற விஷயங்களை பேசிக் கொள்ளலாம்” என்றபடி வணிகனையும், குழந்தையுடன் இருந்த அந்தப் பெண்ணையும் ஒரே அறையில் தங்க வைத்தனர். முரண்டு பிடித்த வணிகனை அடக்கினர். போகும்போது மறக்காமல் வணிகனிடமிருந்த அந்த மந்திர வாளை வாங்கி சென்றனர். ”உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் எழுபது பேர் இருக்கும்போது இந்த வாள் எதற்கு? உங்களுக்கு ஏதாவது ஆபத்தென்றால் நாங்கள் எழுபது பேரும் தீக்குளிக்கிறோம்” என்று சொல்லிவிட்டு சென்றனர்.

வணிகனின் கையைவிட்டு மந்திரவாள் சென்றதும் அழகிய பெண்ணாக உருமாறியிருந்த நீலி, தன் உருவத்துக்கு வந்தாள். வணிகனை கொன்று பழி தீர்த்தாள். மறுநாள் வணிகனை காப்பாற்ற முடியாமல் போனதற்காக எழுபது வேளாளர்களும் தீக்குளித்து இறந்தார்கள்.

நல்லதங்காள் கதை

சில கதைகளை கேட்டதும் நெஞ்சம் நெகிழும், சில கதைகள் கேட்டுதும் நெஞ்சம் கனக்கும். நல்லதங்காள் கதை கேட்டாள் இரண்டுமே நடக்கும்.

நல்லதங்காள் கதை –

ராமலிங்க ராஜா, இந்திராணி என்ற தம்பதியினருக்கு மகளாக பிறந்தாள் நல்லதங்கள். இவருக்கு ஒரு அண்ணன் உண்டு. அவர் பெயர் நல்லதம்பி. பெற்றோர்கள் இறந்துவிட நல்லதங்காளை வளர்த்தது நல்லதம்பிதான். காலச்சக்கரம் உருண்டு ஓடின. நல்லதங்காளை மானாமதுரை ராஜா காசிராஜனுக்கு மணம் முடித்து கொடுத்தார்கள். மிக பிரம்மாண்டமான திருமணம். எல்லாம் முடிந்தபின்பு அண்ணனை பிரிய மனமின்றி கணவன் காசிராஜனுடன் மதுரைக்கு புறப்படுபோனாள் நல்லதங்காள்.

அங்கு நல்லதங்கள் காசிராஜன் தம்பதிக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன. செல்வசெழிப்புடன் வளர்ந்துவந்த அவர்களைப் பார்க்க நல்லதம்பி ஒரு முறை கூட மானாமதுரைக்கு வர வில்லை. காரணம் அவனுடைய கொடுமைக்கார மனைவி மூளி அலங்காரி தான். ஆனால் எல்லோரும் சந்தோசமாக இருந்தார்கள். அப்போது திடீரென மானாமதுரையில் வானம் பொய்த்துப்போனது. தொடர்ந்து 12 வருடங்களாக மழை இல்லை.

மக்கள் பஞ்சத்தால் எல்லாம் விற்றார்கள். நல்லதங்காளும் தாலியை தவிர எல்லாம் விற்றுவிட்டாள். அப்போதும் வயிறு நிறையவில்லை. சில இடங்களில் பசி கொடுமையால் மக்கள் சாக தொடங்கினார்கள். நல்லதங்காள் தன் குழந்தைகளை கூட்டிக்கொண்டு அண்ணன் அரண்மனைக்கு செல்வதென தீர்மானம் செய்தாள். ஆனால் இதற்கு காசிராஜன் சம்மதம் தெரிவிக்கவில்லை. இருந்தும் குழந்தைகளுக்காக மனம் இறங்கினான்.

நல்லதங்காளும் ஏழு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு தான் பிறந்த ஊரான அர்சுனாபுரத்திற்கு வந்தாள். ஊரின் எல்லையில் பிள்ளைகளுக்கு களைப்பு வந்துவிட ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தவளை வேட்டையாட வந்த நல்லதம்பி பார்த்தான். தான் வளர்த்த தங்கை வருமையின் கோரபிடியில் சிக்கி சின்னா பின்னமாக இருப்பதை பார்த்து “ உடனே அரண்மனைக்கு போ, அங்கு எல்லாம் இருக்கிறது.நான் மானை வேட்டையாடிவிட்டு வந்துவிடுகிறேன்” என சொல்லி ஓடிப்போனான்.

மூளிக்கு இவர்கள் வருவது தெரிந்து எல்லா உணவுகளையும் ஒளித்து வைத்தாள். பசியால் வாடிய பிள்ளைகள் மூளியின் அறையில் இருந்த மாங்காயையும், தேங்காயையும் ஆளுக்கு ஒன்றாய் எடுத்தன. அதையெல்லாம் பிடுங்கி வைத்துக்கொண்டு அழுகல் நிறைந்ததை கொடுத்தாள் மூளி. சாதம் சமைக்க வீணான பொருட்களையும் ஓட்டைப்பானையையும் தந்தாள். நல்லதங்காள் அதை வைத்தே கஞ்சி காச்சினாள். ஆனால் அதையும் தட்டிவிட்டாள் மூளி. கீழே வழிந்த கஞ்சியை அள்ளிக்குடித்தார்கள் ஏழு பிள்ளைகளும்.

அந்தக் காட்சியை பார்த்ததும் சகித்துக்கொள்ள முடிய வில்லை தாயால். எல்லா குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு பாலுங்கிணற்றிற்கு அருகே போனாள். ஒவ்வொறு குழந்தையாக கிணற்றில் வீசிக்கொன்றாள். பின்பு தானும் விழுந்து இறந்தாள். வேட்டை முடித்து வந்தவனுக்கு அக்கம் பக்கத்தினர் நடந்ததை சொல்ல நல்லதங்காளை தேடி ஓடினான். அவள் ஒடித்துப்போட்ட ஆவாரம் செடி பாதை சொன்னது, பாழும் கிணற்றில் ஏழு குழந்தைகளுடன் அவள் இறந்து போனதை பார்த்தான். காசிராஜன் ஈட்டியால் தன்னை குத்திக்கொண்டு மாண்டு போனான். நல்லதம்பி மூளியை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டான்.

வறுமைக்கு இரு குடும்பத்தையே பலி கொடுத்ததை இன்னமும் கிராமத்து மக்கள் கதைகளாக சொல்லி வருகிறார்கள். வறுமையின் சின்னமாக நல்லதங்காள் இன்னும் கதைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

தமிழ் சமூகக் கதைப் பாடல்கள்

சமூகக் கதைப் பாடல்கள் –

குலதெய்வ கதைகள் போல சில கதைகள் மக்களிடம் என்றும் சிறப்பு வாய்ந்தவையாக இருக்கின்றன. அந்த கதைகள் பாடல்கள் வழியாக பலதலைமுறைகளை கடந்து வந்திருக்கின்றன. தங்கள் சந்ததியினர் அந்தக் கதைகளை அறிந்து கொள்ள வேண்டும் என நம்முன்னோர்கள் விரும்பியிருக்க வேண்டும். அவைகளை சமூகக் கதைப் பாடல்கள் என அறிஞர்கள் கூறுகிறார்கள்.

சிறந்த பத்து கதைகள் –

வாய்மொழி கதைப் பாடல்களாக இருந்தவைகளை ஆவணம் செய்து விட பல தன்னார்வ தொண்டர்கள் ஆர்வம் காட்டிக்கொண்டிருக்கின்றார்கள். அந்த கதைகளுள் சிறந்த பத்து கதைகள் இங்கே.

1) நல்லதங்காள் கதை
2) முத்துப்பட்டன் கதை
3) சின்ன நாடான் கதை
4) சின்னத்தம்பி கதை
5) மம்பட்டியான் கதை
6) வெங்கலராசன் கதை
7) கௌதல மாடன் கதை
8) மதுரை வீரன் கதை
9) காத்தவராயன் கதை
10) கள்ளழகர் கதை

கதைகளின் கருத்து –

பேராசிரியர் நா.வானமாமலை என்பவர் இந்தக் கதைகளை ஐந்து வகையாக பிரிக்கின்றார். அவர் சொல்லும் விதத்தில் சமூகத்தின் அடிப்படை தவறுகளை சுட்டிகாட்ட மக்கள் இந்தக் கதைகளை கையாண்டதை நம்மால் தெரிந்து கொள்ள இயலும்.

1) கலப்பு மணமும் அவற்றின் துன்பியல் விளைவுகளும்.
(முத்துப்பட்டன் கதை, மதுரை வீரன் கதை, சின்னநாடான்
கதை) .

2) சாதிய அடக்குமுறையும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த
நாட்டார்களுக்கு உயர்சாதி மக்களால் விளைவிக்கப்படும்
கொடுமைகளும் (சின்னத் தம்பி கதை) .

3) தாய்வழி, தந்தைவழிச் சமூகக் குழுவினருக்கிடையே
தாய்வழியினர் தந்தை வழியினரிடம் மணஉறவு தேடும்
பொழுது ஏற்படும் சண்டைகள் – (தோட்டுக்காரி அம்மன்
கதை, வெங்கலராசன் கதை) .

4) பெண்களுக்குச் சொத்துரிமை மறுக்கப்படுதலும் அவற்றின்
துன்பியல் விளைவுகளும் – (நல்லதங்காள் கதை) .

5) சாதி சமயக் கட்டுப்பாடுகளைக் கடந்த மனிதாபிமானம்
(கௌதல மாடன் கதை) .

நாட்டார்கள் என்றால் சாதியாக கருதவேண்டாம். குடிமக்கள் எனும் கருத்தில் அவ்வாறு கூறப்பட்டிருக்கின்றது.

காலம் –

இந்தக் கதைகளில் வருகின்ற சாதி அமைப்புகளை கருத்தில் கொள்ள வேண்டும். பின்பு சில கதைகளில் சொல்லப்பட்டிருக்கும் பஞ்சம். எல்லாவற்றையும் கவணித்து பார்க்கையில் கதைப் பாடல்களின் நிகழ்வுக் காலம் கி.பி. 16, 17, 18 ஆகிய நூற்றாண்டுகள் எனலாம். அதாவது தமிழ் பேசும் பகுதிகளில் பாளையக்காரர் ஆட்சி முதல் ஆங்கிலேய ஆட்சி உறுதிப்பட்டது வரையிலான காலப் பகுதி.

கதைப் பாடல்களுக்கும் குலதெய்வ வழிபாட்டிற்கும் நிறைய சம்மந்தம் இருக்கிறது. இதில் வரும் மதுரை வீரன் கதையை காணும் போது சிலருடைய குலதெய்வம் மதுரை வீரன் என நினைவிலே கொள்ள வேண்டும். இந்தக் கதையில் திருமலை நாயக்கர் என்றொரு பாத்திரம் வருவதால் அதன் காலம் கி.பி.17-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்கின்றனர்.

கதை நாயகர்களின் காரணம் –

கி.பி.16,17,18-ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்பேசும் பகுதிகளைப் பல இனத்தினர் கொள்ளைக் காடாகப் பயன்படுத்தினர். நாயக்கர்கள், முசுலீம்கள், மராத்தியர், கன்னடியர், டச்சுக்காரர், போர்ச்சுகீசியர், ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர் ஆகிய இனங்களின் கொள்ளை இடும் பகுதியாகத் தமிழகப் பகுதி இருந்தது. எங்கு நோக்கினும் களவு, கொள்ளை, லஞ்சம், வழிப்பறி ஆகியவை நடந்தன. பஞ்சமும் வாட்டியது. இவற்றால் அதிகம் பாதிக்கப் பட்டவர்கள் தமிழ்நாட்டின் தென்பகுதி மக்களே. அதிலும் அடிநிலை மக்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்குச் சமூகத்தில் நிரந்தர இடமும் இல்லை, பாதுகாப்பும் இல்லை.

சமூகத்தில் பாதுகாப்புத் தன்மை குறைந்த காலத்தில் இத்தகையபாத்திரங்கள் ஒருவேளை மக்களைக் கவர்ந்திழுத்திருக்கலாம். நிலவுடைமை வர்க்கம் இந்தச் சமூக மரபு மீறலாளர்களைக் கொன்று விடுகிறது. இத்தகைய சோக முடிவு இவர்களை மக்கள் கண்முன் நாயகர்களாக நிறுத்துகிறது. எனினும் இத்தகைய சோக முடிவு மட்டுமே சமூகக் கதைப்பாடல்களின் ஆக்கத்திற்குக் காரணமாக அமைந்துவிடவில்லை. இவர்களின் சமூக மரபு மீறல் சமூகப் பாதுகாப்பற்ற அடித்தட்டு மக்களைக் கவர்கின்றது. அன்னாரின் முணுமுணுப்புக் குரல்கள் மக்களை ஈர்க்கின்றன. எத்தனையோ பேர் கொல்லப்பட்டுச் சோக முடிவுக்குள்ளாகும் பொழுது இல்லாத பற்று, இவர்கள் சோக முடிவு அடையும் போது இவர்கள் மீது வருவதற்குக் காரணமே அந்த ஈர்ப்பாக இருக்கலாம். தம்மால் செய்ய இயலாத ஒன்றைச் செய்த இம்மரபு மீறலாளர்களை ஏற்றுக் கொள்ளும் மக்கள், இவர்களைக் கதைத் தலைவர்களாக்கிப் பாடல் வடிவில் உயர்த்திப் பிடிக்கின்றனர்.

அதிகம் நடந்த பகுதிகள் –

பேராசிரியர் வானமாமலை வகைப்படுத்தியுள்ள சிக்கலைக் கருவாகக் கொண்ட சமூகக் கதைப் பாடல்கள் தோன்றியதற்கான காரணம்,கி.பி.16,17,18-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் நிலவிய அரசியல், பொருளாதார, சமூகச் சீர்கேடுகளே ஆகும். தமிழகத்தின் தென்பகுதியான மதுரை, நெல்லை, இராமநாதபுரம் பகுதிகளிலேயே இச்சீர்கேடுகள் அதிகமாக நடைபெற்ற காரணத்தால் சமூகக் கதைப்பாடல்களும் இப்பகுதிகளிலேயே அதிக அளவில் தோன்றி மக்களிடையே பரவியுள்ளன எனலாம்.

கதைகளை எளிய வடிவில் மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். விரைவில் நல்லதங்காள் கதை சகோதரனில் இடம் பெரும்.