கதைகளும் நானும் – விடலை ஞாபகங்கள்

கதைகளும் நானும் – மழலை ஞாபகங்கள் ன் தொடர்ச்சி,..

சிறுவர் மலரில் தொடங்கிய என் வாசிப்பனுவபம் வாரமலர், குமுதம், ஆனந்தவிகடன் என சிற்றிதழ்களாக நீண்டது.  சிற்றிதழ் கதைகளில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கொஞ்சம் சிற்றின்பமும் இணைந்தன.  மலரின் வாசனையில் மதிமயங்கிய வண்டென மனம் தள்ளாடின. அதன் புரிதலை நோக்கிய பயணத்தில் புராணக் கதைகளில் கூட இதுவரை தெரிந்த கதைகளிலேயே சில சம்பவங்கள் உடன் சேரத் தொடங்கின.  பாஞ்சாலிக்கு ஐந்து கணவன்கள், தசரதனுக்கு ஆயிரம் மனைவிகள், இராமனின் மனைவிக்கு இராவணன் ஆசை கொண்டது என கதைகளின் அடிநாதம் காமமாக இருந்தது.

உடலுறவு என்பதை வெறுத்தோ, குழந்தைகளுக்கு சொல்ல மறுத்தோ புராண, இதிகாசங்களில் ஒரு நகைப்புக்குறிய விசயத்தினை செய்திருப்பார்கள். குமரன் சிவ நெற்றி பொறியில் இருந்து பிறந்தான், வினாயகன் சக்தியின் அழுக்கில் இருந்து பிறந்தான், ஐயப்பனை மன்னன் கண்டெடுத்தான் என்று கதையளந்திருப்பார்கள். மகாபாரதத்தில் பாண்டு இறந்தபிறகு குந்திக்கு ஐந்து மகன்கள் பிறந்தன என்றும், ஒவ்வொருவரின் தந்தையும் எமன்(தர்மனின் தந்தை), வாயு(பீமனின் தந்தை), இந்திரன்(அர்ஜூன்னின் தந்தை), அஸ்வினி தேவர்கள்(நகுலன்,சகாதேவனின் தந்தை) என்று சொன்னவர்கள். மந்திரத்தால் பிறந்தவர்களாக சுட்டியிருப்பார்கள். அதனால்தான் கண்ணனும், இயேசுவும் கன்னித்தாய்க்கு பிறந்தவர்களாக மாற்றியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

நல்லவேளை சிற்பிகளும் அவ்வாறு நினைக்காததால் பாலியல் கல்வி கோயில் சிற்பங்களாக இருந்துவந்துள்ளன. அம்மையும் அப்பனும் சொல்லிதர தயங்கும் சங்கதிகளெல்லாம் சப்தமின்றி அங்கிருந்தன. கோயிலே கதியென இருந்த அந்தகால மக்களுக்கு இதெல்லாம் சாத்தியப்பட்டு இருந்திருக்கலாம். கருவறை மட்டுமே பிரதானமாக மாறியிருக்கும் இந்த காலத்தில் நிச்சயம் கோவில்சிற்பங்களால் பலனில்லை. காரைக்கால் அருகே இருக்கும் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் 500 ரூபாய் தரிசன நபர்கள் மட்டுமே ராஜகோபுரம் வழியாக நுழைய முடியும். விழாக்காலங்களில் வாசலில் ஆரமிக்கும் இரும்பு தடுப்புகள், சனீஸ்வரை நமக்கு காட்டிவிட்டு மறுபடியும் வாசலுக்கே கொண்டுவந்து விட்டுவிடும். பிறகு எங்கிருந்து கோயில் சிற்பங்களை கண்டுகளிப்பதெல்லாம்.

ஒவ்வொரு ஆணின் பருவ வயது ஒரு சிக்கலான நூல்கண்டினைப் போன்றது. அதன் சிக்கல்களை நீக்க முடியாமல் நூல் முழுவதையும் வீணாக்கிவிடுகின்றதைப் போல வாழ்க்கையை வீணடித்த ஆண்களே இங்கு அதிகம். வெகுசிலரே அதன் சிக்கல்களை புரிந்துகொண்டு வாழ்கின்றார்கள். இந்த சமூகத்தின் கட்டமைப்பில் ஆண்களின் நிலையை விட பெண்ணின் நிலை மிகவும் தெளிவானதாக இருக்கிறது. அவளுக்கு அன்னை, பாட்டி என எல்லோரும் உதவி செய்ய காத்திருக்கின்றார்கள். போதாக்குறைக்கு சமூலநல இயக்கங்களும் உடனிருக்கின்றன. ஆனால் ஆணின் அருகில் வரக் கூட தகப்பன்மார்கள் விரும்புவதில்லை. சமூகமும் அதன் பொறுப்புணர்வில்லாமல் ஊமையாக இருந்துவிடுகிறது. அதனால் முட்டிமோதி பருவத்தினைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஆண்களுக்கு ஏற்படுகிறது.

என் சகவயது தோழர்களும் ஏறக்குறைய இதே நிலையில்தான் இருந்தார்கள். அவர்களிடமும் பல கேள்விகள் இருந்தன, விடையின்றி. எங்கிருந்து இதற்காக விடைபெறுவது. இணையம் அறிமுகம் இல்லா காலம் என்பதால் ஒரே உபாயம் புத்தகம் மட்டுமே. அறிமுகமானது குறுநாவல் படிக்கும் வழக்கம். ஒரு கதாநாயகன் கதாநாயகியை திருமணம் செய்து கொள்வதிலிருந்து கதை ஆரமிக்கிறது. அவன் அவளுடைய உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் நேரம்கால கணக்கின்றி அவளை அனுபவிப்பதிலேயே குறியாக இருக்கிறான். அவள் அன்னையிடம் புகார் கூறும் போது, அன்னை அதை அலட்சியம் செய்கிறாள். இப்படி போகின்ற கதையின் இறுதியில் அவளின் தகப்பன் இறந்ததை கூட மறைத்து இரவு முழுதும் அவளுடன் கழித்துவிட்டு காலையில் சொல்கிறான். அதனால் கோபம் கொண்டு அவள் வெளியேறுவதாக முடிகிறது கதை. எது புரிந்த்தோ இல்லையோ, இவ்வகை கதைகளை படிப்பதால் கேள்விகளுக்கு விடை கிடைக்காது என்று நன்கு புரிந்தது.

ஆனாலும் பருவக் கதைகள் சகதோழர்களிடம் ஏகம் இருந்தன. வழிவழியாக நாடோடிப் பாடல்களைப் போல கடத்தப்பட்டுவந்த அது, இன்னமும் வரிவடிவம் பெறாமல் இருக்கின்றன. சில எழுத்தாளர்கள் சுஜாதா, கி.ராஜநாராயணன் போல துணிந்து எழுதினாலும் அதெல்லாம் முதல் மழைதுளி போன்றதே. இன்றும் கடலளவு கதைகள் காற்றோடு காற்றாய் பரிமாறப்பட்டு வந்துகொண்டிருக்கின்றன. தேர்ந்த எழுத்தாளர்களால் எழுத்துருவம் பெறும் கதைகள் திரிதலுக்கும் உட்படுகின்றன. நாட்டார் பாடல்கள் போல அப்படியே ஆவணம் செய்தல் கடினமே. மூன்றாம் தர எழுத்தாளர்களால் எழுதப்படும் கதைகளில் நான் மேலே கூறிய எதையும் நீங்கள் பெற முடியாது. காமத்தினை காசாக்க நினைப்பவர்களின் கதையில் சதை வர்ணனை தவிற ஏதையும் எதிர்பார்க்க முடியாது. 13+, 18+ என வயதுவரையரை செய்தாலும் கதைகளுக்கு வயதில்லை.

இதில் ரசனை மிகுந்த நகைச்சுவை கதைகளும் ஏராளம். விடுதியின் ஞாயிறுகளில் மேடைமீதேறி ஒவ்வொருவராய் கதை பகிர்ந்திருக்கிறோம். மண்குடம் கதை சொல்லி நான் அமர்ந்த பிறகு அரங்கேறிய கதைகளால் விடுதியறை வெட்கம் கொண்டிருக்கும். குபீர் சிரிப்பலைகளை அடக்கி விடுதி கண்காணிப்பாளரிடமிருந்து தப்பிய அனுபவங்களை எத்தனை தோழர்கள் பகிர்ந்து கொண்டிருப்பார்கள் என்பதே கேள்விக் குறிதான். இறுக்கமாக இருக்கும் நம் சமூகத்திலேயே இத்தனை கதைகள் புழங்குகையில், வெளிநாடுகளில் எளிமையான  காமிக்ஸ் வரை சென்றது வியப்புகுறியதல்ல.

பாலுறுப்புகளின் அமைப்பினையும், செயல்பாட்டினையும் பள்ளி பாடபுத்தகம் கற்றுக் கொடுத்தாலும், வாழ்வியல் சந்தேகங்களை அவைகள் கண்டுகொள்வதில்லை. காமகதைகளும் உதவாது என்றானபோது, ஏன்?ஏதற்கு?எப்படி? என்பதில் வாசகர் சுயஇன்பம் பற்றி கேட்ட கேள்விக்கு சுஜாதா விடை எழுதியிருந்தார். எதார்த்த உண்மையானது கதையில் வருவது போல கற்பனையல்ல என்று உணர்ந்த போது, நாராயணரெட்டி, ஷாலினி போன்ற மருத்துவர்களின் நூல்கள் கிடைக்க தொடங்கின. இதெல்லாம் இணையமென்ற பரந்தவெளி அறிமுகமி்ல்லா காலத்தில் நிகழந்த ஒரு விடலை வாழ்வியல் நிகழ்வுகள். இப்போதிருக்கும் விடலைகளுக்கு இதைவிட அதிக கதைகள் கிடைத்திருக்கலாம், இல்லை கிடைக்கப்பெறாமல் கூட போயிருக்கலாம். கிடைத்தவர்கள் பாக்கியசாலிகள் என்று சொல்லமுடியாத போது என்ன கவலை?

பி.கு –

விரசமின்றி எழுதியிருக்கிறேன் என்று நம்புகிறேன். இருப்பினும் விரும்பாதவர்கள் பொருட்செய்யாதீர்கள்.

சுஜாத்…ஆ…! – மின் நாவல் பதிவிரக்கத்துடன்

சுஜாதாவைப் பற்றிய எதிர்மறை விமர்சனங்கள் வைக்கும் நபர்கள் கூட, அவரைப்போல விஞ்ஞானத்தினை எளிமையாக்கும் கலை வேறெவரிடத்திலும் இருந்ததில்லை என்பதை ஒப்புக்கொள்வார்கள். அறிவியலை அசாதரணமாக கையாளும் வரம் பெற்றவர். சில விஞ்ஞான விசயங்களை எடுத்துச் சொல்லும் போது, சாதாரண மனிதர்களும் அதனை எளிதாக புரிந்து கொள்ளும்படி சொல்லுவார். அதை சுஜாதாவின் எழுத்துகளை படித்தவர்கள் உணர்வார்கள். இலக்கியவாதிகளுக்கு வசந்த் கதாபாத்திரம் வழியாக சொல்லப்படும் சில விசயங்கள் பிடிக்கவில்லை. ஜனரஞ்சக எழுத்தாளராக அதை புறக்கணிக்க வேண்டிய நிலையிலேயே சுஜாதா இருந்தார்.

அவருடைய அறிவியல் திறனை நான் உணர்ந்த நாவல் கணேஸ், வசந்த் வரும் ஆ..!. காதல், க்ரைம் என்று இரண்டு குதிரைகளில் மட்டுமே நிரம்பியிருக்கும் நாவல் உலகில் நிச்சயமாய் ஒரு மாற்று நாவல் இது. நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல பொண்டாட்டி, நல்ல ரசனை என்றெல்லாம் இருக்கும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் பூர்வ ஜென்மத்தின் மனிதர்கள் தலையிட்டால் என்ன நடக்கும்? என்பதுதான் கதையின் நாட். பூர்வ ஜென்மம் என்றெல்லாம் சொல்லும் கதையில் மூடநம்பிக்கைகள்தான் நிறைந்தி்ருக்க வேண்டும். ஆனால் கதையில் இருந்தது “குரல்”களைப் பற்றிய அறிவியல். அதுமட்டும்தானா என்கின்றீர்களா. இல்லை,..

தினேஸ்குமார் என்றொரு மென்பொருள் வல்லுனன். நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல பொண்டாட்டி, நல்ல ரசனை என்று நல்லபடியாக செல்லும் அவனுக்குள் ஒரு குரல் தற்கொலை செய்துகொள்ள சொல்கிறது. சில தற்கொலை முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. அதன்பின்பு அந்தக் குரல் அவனின் மனைவியை கொல்ல சொல்ல, அவனும் கொன்று விடுகிறான். அந்தக் குரலின் பின்னனியில் அவனுடைய முன் ஜென்மம் இருக்கிறது. இதை இந்த பகுத்தறிவு உலகம் நம்புமா. அவனின் நிலை என்ன என்பதே முழுமையான கதை.

சிலசமயங்களில் அப்போதுதான் நடக்கும் விசயங்கள் முன்பொருமுறை நடந்ததாக நினைவுக்கு வரும். வாழ்க்கையில் முதன்முறையாக பார்க்கும் சிலரை, நன்கு அறிமுகமானவர்கள் என்று நம்பத்தோன்றும். நம்முடைய வாழ்க்கையிலும் மிக அரிதாக அமானுஸ்யங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அமானுஸ்யங்கள் என்று சொல்கின்ற விசயங்களில் நான் மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள் என்னுடைய நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் ஏற்பட்டிருப்பதை அவர்களுடன் பேச்சுவாக்கில் உறுதி செய்திருக்கிறேன். இவற்றுக்கான விடையை சைக்காலஜி வழியாக தேடலாம் என்றாலும், அதை பெரிது படுத்தாமல் விட்டுவிடுவோம்.

நாம் மனசாட்சி என்று நம்புகின்ற ஒரு குரல் நமக்குள் எப்போதும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. பல சமயங்களில் உற்ற நண்பனாக இருக்கும் அந்தக் குரலை நம்பிதான், முக்கிய முடிவுகளை நாம் எடுக்கிறோம். அந்தக் குரலை நம்பிதான் தனிமையை விரட்டுகிறோம். (பிறவி செவிடர்கள் இந்த விசயங்களை எப்படி எதிர்கொள்கின்றார்கள் என்று நீண்ட காலமாகவே சிந்தனை இருக்கிறது. தெரிந்தவர்கள் சொல்லவும்). இந்தக் குரல் நமக்கு தவறான ஆலோசனை சொன்னாலும், அதையே செய்யவோம். அதே குரல் நம்மை தற்கொலைக்கு முயற்சிக்க வற்புறுத்தினால் நிச்சயமாக நாம் தப்பிக்கவே முடியாது. சரி… சரி இப்படியே போனால் நான் சைக்கியாட்ரிஸ்டுகளை பார்க்க நேரிடும். நாவலுக்குச் செல்வோம்.

நாவலில் நான் ரசித்தவை,…

1. ஒவ்வொரு பகுதியும் முடியும் போது ஆ என்று முடியும். சில இடங்களில் வலிய திணிக்கப்பட்டிருப்பது தெரிந்தாலும் பெரும்பான்மையான இடங்களில் இயல்பாக வரும். இந்த சிந்தனை எப்படி வந்தது என்று தெரியவில்லை. நாவலின் வித்தியாச தன்மையை இரண்டு அத்தியாங்களை படிக்கும் போதே உணர்ந்தேன்.

2. ஹிப்னாட்டிக்ரிக்ரெஷன், ரோர்ஷாக் டெஸ்ட், தீமாட்டிக் அப்ரிஸியேஷன் என்றெல்லாம் மருத்துவ அறிவியல் பெயர்கள் நாவல் முழுவதும் வியாப்பித்திருக்கின்றன. அவைகள் எதற்கானவை என்பது நாவலை படிக்கும் போதே புரிந்துவிடும்.

3. குரல் பிரட்சனையை ஆன்மீக ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் பிரித்து எழுதியிருப்பார் சுஜாதா. பாராஸைக்காலஜி, பாராநார்மல் என்று இயற்க்கைக்கு அப்பாட்ட விசயங்களின் ரகசியங்களை அறிய ஆன்மீகமும், விஞ்ஞானமும் போராடிக் கொண்டு இருக்கின்றன. ஆன்மீகத்தில் “கடவுள்” என்றொரு விடையை கொடுத்துவிட்டு அமைதியாக இருந்துவிடுகின்றார்கள். விஞ்ஞானத்திற்கு அது சாத்தியப்படுவதில்லை. எனவே தேடல் அங்கு இருந்து கொண்டே இருக்கிறது.

4. மென்பொருள்துறையின் தொழில் நுட்பத்தில் ஆரமிக்கும் நாவலில், மருத்துவ துறையின் தொழில் நுட்பத்தினை விவரித்து, இறுதியில் சட்டத்தின் தொழில் நுட்பங்களில் விளையாடியிருப்பார்.

5. இது வசந்த் சொல்லும் ஒரு ஜோக்,…
ஒரு பைத்தியக்காரன் தன் கை முஷ்டியை மூடிக்கிட்டு “என் கைக்குள்ள என்ன இருக்கு” ன்னு கேட்டானாம். அதுக்கு இன்னொரு பைத்தியக்காரன் “குஷ்பு”ன்னு சொன்னானாம். இவன் லேசா கண்ணை வெச்சுப் பார்த்துட்டு “ம், தப்பாட்டம்!. நான் வெக்கிற போது பார்த்துட்டே”ன்னானாம்.

6. முன் ஜென்மக் கதையும் அதன் கதாபாத்திரங்களும் மிகவும் அருமை. ஜெயலட்சுமி டீச்சரின் மீதான காதல், அவரை ஜெய்யூ என அழைக்கும் விதம், திருச்சியைச் சுற்றிய இடங்கள் என பார்த்து பார்த்து செதுக்கியிருப்பார்.

7. இந்தக் கதையை விகடனி்ல் தொடராக எழுதிக்கொண்டிருந்த போது, கதையின் நாயகன் நான் என்றொருவர் வந்திருக்கிறார். அவருக்கு கதையில் இருப்பதை போல குரல்கள் கேட்பதாக தொல்லை செய்திருக்கிறார்.

8. அதுமட்டுமல்லாமல் பல வாசகர்களும் இதுபோல குரல்கள் கேட்பதாகவும், அதற்கு தீர்வு தருமாரும் சுஜாதாவை அனுகியிருக்கின்றார்கள். அதுவும் 8ம் அத்தியாயம் ஆரமிக்கும் முன்பே. அவர்கள் எல்லோரையும் சைக்கியாட்ரிஸ்டுகளை பார்க்க சிபாரிசு செய்திருக்கிறார்.

9. இரண்டு மூன்று மாதங்களுக்கு முன் ஒருவன் அம்மாவைக் கொன்றுவிட்டு கடவுள் சிவன் சொன்னார், நான் கொன்றேன் என்று சொல்வதாக செய்திதாள்களில் வந்திருந்தது. இதுபோல விசித்திரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதற்காகச் சொன்னேன். பைத்தியக்காரத்தனம் என்று ஊடகங்கள் இந்த விசயத்தை பெரிது படுத்தாமல் போயிருக்கின்றன. இல்லையென்றால் நிச்சயம் புதுவகையான பிரட்சனைகளை எல்லோரும் அலசியிருப்பார்கள்.

10. கதையின் முடிவு, என்னால் யூகம் செய்து பார்க்க முடியாதபடி இருந்தது. ஏறத்தாள கதையை படித்து ஒரு மாதம் வரை எல்லா கதாபாத்திரங்களும் எனக்குள் வலம் வந்தன. காலப்போக்கில் எல்லாம் கரைந்தாலும் ஜெயலட்சுமி டீச்சர் மட்டும் மறையவே இல்லை.

நாவலை ஏற்கனவே படித்திருக்கும் நண்பர்கள் உங்களுடைய அனுபவம் எப்படி இருந்தது என்று சொல்லுங்கள். இனிதான் படிக்க வேண்டும் என்று சொல்லுபவர்கள் இங்கு சொடுக்கி நாவலின் மென்நூலை எடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த இடுகையை பி.டி.எப் கோப்பாக பதிவிரக்கம் செய்ய படத்தினை சொடுக்குங்கள்,…

மகரிசி, ஜக்கி, நித்யா என் பார்வையில்

சர்வம் சிவ மயம் என்று எண்ணுகிற தீவிர சைவன் நான். “நான் கடவுள்” என்று யாராவது தன்னை அறிமுகம் செய்து கொண்டாலே தலைதெரிக்க ஓடிவிடுவேன். இருப்பினும் மூன்று சாமியார்கள் என்னுடைய வாழ்க்கையில் அவர்களுடைய எழுத்துகளாலேயே அறிமுகமாகி இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய சிந்தனை இக்கட்டுரை.

வேதாந்திர மகரிசி –

எனக்கு அறிமுகமான மகான்களில் முதலிடம் வகிப்பவர் வேதாந்திர மகரிசி. என் அம்மா அவருடைய தியான மையத்தில் சேர்ந்து பட்டங்களுக்கு மேல் பட்டங்களாக வாங்கி குவித்துக்கொண்டிருக்கின்றார். அ ம்மாவின் குரு என்பதாலும், தியானத்தினை கற்பிக்க பணம் வாங்குவதில்லை என்பதாலும், அவர்மேல் மிகுந்த மரியாதை எனக்கு. அவருடைய புத்தகங்களை படித்திருக்கின்றேன். அதிகமாக சுவாரசியம் என்றெல்லாம் சொல்ல இயலாது. ஆனால் ஓர் வகையான ஈர்ப்பு இருக்கும்.

அவரிடம் பிடித்தது அம்மாவுக்காகவும், அப்பாவுக்காகவும், நண்பர்களுக்காகவும், காதலர்களுக்காகவும் ஒருதினத்தினை மக்களை ஏற்று அனுசரிக்க, மனைவிக்காகவும் ஒருநாளை தேர்ந்தெடுத்து நடத்தி காட்டியவர். இன்றும் லட்சக்கணக்கான தம்பதிகள் அதை விழாவாக கொண்டாடுவதை பார்த்திருக்கின்றேன். கணவன்கள் மனைவிகளின் மகிமையை பற்றி தெரிந்து கொள்ளும் ஒரு திருவிழா அது. “வாழ்க வளமுடன்” என்ற மந்திரச் சொல்லாக மாறிய வாழ்த்து பல வீடுகளில் மாற்றங்களை கொண்டுவந்திருக்கும் என தெரியும். அவர் மறைந்து விட்டார் என்றாலும் அவருடைய பணிகளை மிகச்செம்மையாக சீடர்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்.

வேதாந்திர மகரிசியின் மகிமை –

அவருடைய தலைநகரான ஆழியாருக்கு சென்றவர்கள் எல்லோரும் (என் அன்னை உட்பட) ஏதோ பரவச நிலை அடைந்ததாக தெரிவித்தனர். அந்த இடம் முழுக்க தெய்வீக மனம் வீசுவதாகவும், எல்லையற்ற ஆனந்தம் பெருகுவதாகவும் கூறினார்கள். அங்கு செய்யும் தியானதில் தான் முழுமையைக ஈடுபட்ட திருப்தி ஏற்பட்டதாக தெரிவித்தனர். இந்த இயக்கத்தில் இருப்பவர்கள் பலரும் மிகவும் மரியாதையுடனும் கணிவாகவும் பேசுவதை கேட்டிருக்கிறேன்.

சற்குரு ஜக்கி வாசுதேவ் –

தியான லிங்கம் அமைத்து அதன் மகிமையை மதங்கள் கடந்து கொண்டு செல்லும் ஞானி சற்குரு ஜக்கி வாசுதேவ். இவருடைய எழுத்துகள் தான் எனக்கு நெருக்கத்தினை உண்டு பண்ணின. சில கேள்விகளுக்கு அவரிடமிருந்து பதிலாய் சாட்டையடி கிடைக்கும். சில கேள்விகளுக்கு அனுதாபம் கிடைக்கும். எப்படியிருப்பினும் எனக்கு சற்குரு முதல் குரு. அவருடைய எல்லா புத்தகங்களையும் கடனுக்காவது வாங்கி படித்துவிடுவேன். அவருடைய எழுத்துகளின் ரசிகன் என்று கூட சொல்லிக்கொள்ளலாம்.

சற்குருவின் வசியப்பார்வையும், உருவமும் எனக்குள் பிரம்மிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. பிரபல தொலைக்காட்சியில் அவருடைய உரையை கேட்டிருக்கிறேன். ஒருமுறை ஈசா என்ற தியானமைய முன்னுரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றேன். தியானத்தின் அற்புதங்களை மக்கள் சொல்ல நேரில் கேட்டிருக்கிறேன். அதில் கடந்த ஒரு மாதத்தில் எத்தனை பேர் பட்டாம்பூச்சியை பார்த்து இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு கை தூக்கிய சொற்ப ஆட்களில் நானும் ஒருவன். எனக்கு தியானம் இப்போதைக்கு தேவையில்லை என தோன்றவே, அதில் என்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை.

சற்குரு ஜக்கி வாசுதேவின் மகிமை –

தியான நிகழ்ச்சிக்கு சென்ற போது இவரைப் பற்றியும், தியானத்தினால் அடைந்த பயனையும் பற்றி ஒரு பெண்மணி சொன்னார். பல இன்னல்களை வாழ்கையில் அனுபவித்து, வாழ்க்கையை மிகவும் வெறுத்த நிலையில் இருந்திருக்கிறார். பெற்றோர்களிடம் யாரோ ஈசாவைப் பற்றிச் சொல்ல, அவர்கள் பெண்ணை சேர்த்துவிட்டிருக்கிறார்கள். பின்பு படிப்படியாக எல்லா துயரங்களையும் கடந்து வந்து இந்த நிலையில் இருப்பதாக சொன்னார். சொல்லும் போதே கண்களில் நீர் வந்து விழுந்தது அவருக்கு.

நித்யானந்த பரமஹம்சர் –

சிவசொருபத்தினை நித்யானந்த பரமஹம்சர் முழுமையாக ஏற்றிருக்கிறார் என்பதை அவருடைய ஊர்வலத்தில் பார்த்திருக்கின்றேன். வெகுஜனப் பத்திரிக்கையில் நித்தியானந்தரின் பல தொடர்களை படித்திருக்கிறேன். நான் நித்தியானந்தரை பார்த்து வியந்த விசயங்கள் அவருடைய இளமையும், அழகிய சிரிப்பும் தான்.பொதுவாக சாமியார்கள் என்பர்வர்கள் தாடி வைத்து முதிர்ந்த வயதை கொண்டிருக்க வேண்டும் என்ற இயல்பை முறியடித்தவர். கொஞ்சம் அதிகமாக சொன்னால் பெண்ணா என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு அழகு எனலாம்.

நித்யானந்த பரமஹம்சர் மகிமை –

நித்தியானந்தர் பற்றி எழுத்தாளர் சாருநிவேதிதா அவர்களின் வலைதளத்தில் படித்திருக்கிறேன். சாரு நித்தியானந்தரை கடவுள் என்றே குறிப்பிடுகின்றார். கல்பதரு பற்றி வியந்து பேசுகிறார். தன்னுடைய அனுபவங்களைப் பற்றி அழகாக சொல்கிறார். அது அப்படியே.

நான் கேட்ட வரம் இதுதான்: ஸீரோ டிகிரி என்று ஒரு நாவல் எழுதியிருக்கிறேன். அது ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளது. டெஹல்கா போன்ற முக்கியமான பத்திரிகைகளில் அது பற்றிய உற்சாகமான மதிப்புரைகள் வந்துள்ளன. ஆனால் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் அதை எடுத்துச் செல்ல ஆள் இல்லை.இந்த வரத்தைக் கேட்டு மூன்று வாரங்களுக்குள் உலகின் மிக முக்கியமான, 200 ஆண்டுகள் பழமையான ப்ரிட்டிஷ்/அமெரிக்கப் பதிப்பகம் ஒன்றிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. 50 Indian Classics இல் ஒன்றாக ஸீரோ டிகிரியும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாகவும், இது தங்களுக்கு ஒரு unconventional choice ஆக இருந்தது என்றும் அக்கடிதத்தில் கண்டிருந்தது. கடிதத்தில் அந்த இரண்டாவது வாக்கியத்தை நான் மிகவும் ரசித்தேன்.

பலர் மதிக்கின்ற பெரிய எழுத்தாளர் சாரு. அவரே வியந்து பேசியிருப்பதால் நித்தியானந்தர் மேல் ஓர் கவணம் ஏற்பட்டுவிட்டது.

ஒற்றுமைகள் –

இவர்கள் மூன்று பேரிடமும் பலபல வேற்றுமைகள் இருக்கின்றன. ஆனால் மூவரும் தியானத்தையும், யோகாவையும் கொண்டு மக்களின் பிரட்சனைகளை தீர்த்து வைக்கின்றனர். ஈசனினை நீங்கள் பெரும்பாலும் தியான நிலையில் மட்டுமே காண முடியும். காரணம் தியானம் ஒன்று தான் மனதை வெல்ல கூடிய வழி.

“சிவ மயம்”.