முத்துக்குமாரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்

ஈழத்திற்காக தற்கொலை செய்து கொண்ட முத்துக்குமாரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று. தற்கொலைகள் அசட்டுதனமானவை என்ற எண்ணம் எப்போதும் என்னுள் இருந்துகொண்டே இருக்கிறது. படிக்க சிரமாக இருக்கிறது, வாழ்வதற்கு பிடிக்கவில்லை என்ற காரணங்கள் முதற்கொண்டு சமூகத்தின் ஏளனத்தால், கடன் தொல்லையால், கௌரவத்தின் இழுக்கால் என தற்கொலைக்கு பல முகங்கள். கொள்கைக்காக உயிர் துறப்பது என்பதை கொஞ்சம் மாறுபட்டே எண்ணத் தோன்றுகிறது. தன்னலத்தையும் தாண்டி நிற்கின்ற அந்த செயல் கொஞ்சம் மனம் நெகிழ வைக்கிறது. ஆனால் அதன்பின்னே அந்த தற்கொலைகள் செய்தவைகள் என்ன?. உண்மையைச் சொன்னால் பலன் பூஜ்ஜியம்தானே. இப்படி வீனாகப்போன ஒரு தியாகத்தின் நினைவு நாள் பொருட்டு கொளத்தூர் பகுதியில் நிகழ்ந்தவைகள் இங்கே.

குளத்தூர் வேலவன் நகரின் சாலை, பிரதான சாலை என்றெல்லாம் சொல்ல முடியாத சாலை. என்னுடைய அலுவலகம் உள்ள இங்குதான், இறந்த முத்துக் குமாரின் உடல் வைக்கப்பட்டிருந்ததாகவும், அருகில் எங்கேயோ அவரின் வீடு இருப்பதாகவும் கூறினார்கள். சென்ற வருடம் இன்றைவிட பிரம்மாண்டமாக இருந்ததாக நினைவு. பூக்களால் அளங்கரிக்கப்பட்ட கூம்பு இம்முறை சிறுத்திருந்தது. மக்கள் கூட்டம், கடைகள், பேனர்கள் என எல்லாவற்றிலும் வறுமை தெரிந்தது. சென்ற முறை திருமாவளவனை இங்கு பார்த்தேன். இன்று வைகோவை பார்க்க முடிந்தது. பிரபலங்களை தேடிச் சென்று பார்த்தாலே காணமுடியாத இன்னைய காலக்கட்டத்தில் இந்த வாய்ப்பு கொஞ்சம் பெரியதாகவேப்பட்டது. வைகோவை என் அலுவல மாடியில் இருந்தே தெளிவாக பார்க்க முடிந்தது. அது வரை எப்போதும் போல வெறிச்சோடியிருந்த சாலை பல்வேறு வாகனங்களால் திணறியது. ஆங்காங்கே நின்றிருந்த ஆண்,பெண் காவலர்கள் கூட்டம் கூட்டமாக ஒன்று சேர்ந்து நின்றார்கள்.

தலைவர்களின் வருகைக்கு முன்-பின்

வைகோவும், தாடிவைத்த ஒரு பெரியவரும் கோசம் போட சுற்றியிருந்த சிலர் அதை திருப்பிச் சொன்னார்கள். சென்ற வருடம் திருமா இதைதான் செய்தார். ஆனால் இம்முறை கைப்பேசியில் அதை காணொளி எடுத்துக் கொண்டேன். நீண்டதொரு முழக்கங்கள் நின்றபின் வைகோ வாகணத்திற்கு திரும்பினார். இரண்டு வீடியோ கேமராவுடன் நிருபர்கள் வர வைகோவை சுற்றி நிறைய பேர் சூழ்ந்து கொண்டனர். தொலைக்காட்சியில் வருதற்கு மக்களுக்குத்தான் எத்தனை ஆர்வம். வைகோ பேசுவதை என்னால் கேட்கமுடியவில்லை. அவர் வாகணத்தில் சென்று அமர்ந்து கொண்டார். அவர் கிளம்ப முற்படுகையில் சிவப்பு வண்ண கொடியேந்தி சிலர் வீரவணக்கம் கோசமிட்டபடி வந்தார்கள். அவர்கள் கையில் முத்துகுமாரின் மார்பளவு சிலையும், தீப்பந்தமும் இருந்தது. பின் அவர்கள் நினைவிடத்திற்கு வந்து கோசம் போடும்போது வைகோவும் வந்து சேர்ந்து கொண்டார்.

அவர்கள் மக்கள் மன்றம் சார்ந்தவர்கள் என அப்போது கூறினார். பின் மக்கள் மன்றத்தினர் கொண்டுவந்த தீ்ப்பந்தம் வைத்து புகைப்படங்களுக்கும் வீடியோவிற்கும் போஸ் கொடுத்தார். மக்கள் மன்றத்தினர் அதை எவ்வாறு எடுத்துக் கொண்டார்கள் என தெரியவில்லை. அதன்பின் அலுவக வேலையில் ஈடுபட வேண்டியதாகிவிட்டது. திருமாவும் வந்திருந்தார் என நினைக்கிறேன். விடுதலை சிறுத்தைகள் வீரவணக்கம் என்று குரல் கேட்டது. இன்னும் எண்ணற்ற பிரபலமாகாத இயங்கள் வந்திருந்தார்கள்.

திமுக,அதிமுக,தேதிமுக ஏன் பாமக போன்ற கட்சிகளை காணவில்லை. வந்திருந்தவர்களும் நினைவிடத்தில் நின்று சிரித்துக் கொண்டே புகைப்படம் எடுத்துக் கொள்வதில்தான் ஆர்வம் காட்டினார்கள். புத்தகங்கள் விற்கப்பட்ட தற்காலிக கடையில் கோள்கள், ராசிகள் குறிப்பிட்ட வரைபடத்தில் கோள்களை குறைசொல்ல மனிதனுக்கு அருகதையேயில்லை என்று எழுதப்பட்டிருந்தது. சிலர் அணுமின் நிலையத்திற்கு எதிராக பேசிக் கொண்டார்கள். புயலால் பாதிக்கப்பட்ட கடலூரில் எப்படிபட்ட நடவெடிக்கைகளை அரசு மேற்கொண்டிருந்தது என தெரிந்தவர்கள் நிச்சயம் அணுமின் நிலையத்தை வரவேற்க்க மாட்டார்கள் தான்.

குரல்களும் கோசங்களும் சிறிது சிறிது நேரம் கேட்டு ஓய்ந்து போயின.காலையில் சிலமணிநேரம் பரபரப்பாக இருந்த சாலை, மதியமே எப்போதும் போல அமைதியாக மாறிற்று. தியாகிகளின் புகைப்படத்தோடு வீரப்பனின் புகைப்படமும் இருப்பதாக சொன்னார்கள். அருகில் சென்று பார்த்தேன். எனக்கு செங்கொடியைத் தவிற வேறுயாரையும் தெரியவில்லை. வீரப்பனின் என்று சொல்லப்பட்டவர் வேறுமாதிரியாக தெரிந்தார். அங்கிருந்த மலர்வலையத்தில் மலருக்கு பதிலாக வெறும் தென்னங்கீ்ற்றுளே இருந்தன. இயக்கங்களின் பொருளாதார நிலையா இல்லை மனமா என வைத்தவர்களுக்கு மட்டுமே தெரியும். ஜனவரி 29 என்ற ஆவணப்படத்தின் சீடிகவர் வைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த புகைப்படத்தில் இருப்பவர்களின் பெயர்களையாவது அறிந்து கொள்ள வேண்டும். இல்லையேல் இனத்திற்காக இறந்தவர்கள் நிச்சயம் மன்னிக்க மாட்டார்கள். வீட்டிற்கு வந்ததும் தொலைக்காட்சியில் எம்.ஜி.ஆர், அண்ணா சமாதிகளை சரிசெய்ய நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகிக் கொண்டிருந்தது. ம்.. அங்கு நடக்காததா இங்கு நிகழ்ந்தது என மனம் நினைத்தது.

மேலும் –

வைகோ முத்துகுமாருக்கு வீரவணக்கம் செய்தமை காணொளியாகக் காண இங்கு சொடுக்கவும்.

வாசிப்பின் இடைவேளையில் சில வரிகள்

இந்த வருட புத்தக கண்காட்சிக்கு புத்தகங்களை தேர்வு செய்யும் போது, இலக்கியத்துவமான படைப்புகளை தேர்ந்தெடுத்தேன். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று நாஞ்சில் நாடனின் சூடிய பூ சூடற்க சிறுகதை தொகுப்பு. எண்ணற்ற சிபாரிசுகளும், சாகித்ய அகாதமி விருதும் இந்த புத்தகத்தினை தேர்வு செய்ய வைத்தன. நாஞ்சில் எழுத்துகளை முதன்முறையாக நான் படிக்கப்போகிறேன் என்ற ஆவல் இருந்ததே தவிற வேறு ஒன்றும் பெரியதாக தோன்றவில்லை. ஆனால் இந்தப் புத்தகம் என் வாசிப்பு அனுபவத்தை புரட்டி போடப் போகிறது என்பதை எண்ணிக் கூட பார்க்கவில்லை.

இப்போது நான்கு கதைகளை தான் படித்து முடித்திருக்கிறேன். அதற்குள் இதுதான் சிறுகதை என இதுநாள் வரை நான் நினைத்திருந்த பின்பத்தை உடைத்தெரிந்துவிட்டன இந்த சிறுகதைகள். இயல்பான காட்சியமைப்பு இறுதியாக ஒரு மாறுபட்ட முடிவு என குமுதம், குங்குமம் வாரப் புத்தகங்களில் ஒரு பக்கத்தில் வருவதையோ, சில பக்கங்களில் காட்சிகளை விளக்கி நீதி சொல்லும் நீதிநெறிக் கதைகளோ, பிரபல எழுத்தாளர்கள் எழுதிய கதைகளையோ வடிவத்தில் ஞாபகம் செய்யாமல் செல்லுகின்ற ஒவ்வொரு கதைகளையும் ரசித்து ரசித்து படித்தேன்.

இன்னும் படிக்க பதினொரு கதைகள் இருக்கின்றன என்பது, ஏதோ புதையலில் கிடைத்த தங்க காசுகளைப் போல மகிழ்ச்சியை தந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு கதையின் தொடக்கமும் மிகுந்த கவணத்தோடு காட்சிகளை விவரிக்கின்றன. அந்தக் காட்சிகள் மனகண் முன் விரிகையில் அது கதை என்பதை மறந்து போயி அதற்குள் புதைந்து விடுகிறேன். தாய்கிழவியின் கணிவோடு தான் சொல்ல வந்ததை மிகத் தெளிவாக அந்தக் கதை சொல்லிவிட்டு முடிந்துவிடுகிறது. அதன்பின் அந்தக் கதையின் மாந்தர்கள் அதன் நிகழ்விடங்களில் சிறுது நேரம் மனத்திற்குள் வாழ்கின்றார்கள். அவர்களை அப்படியே விட்டுவிட்டு மனம் வேறு காரியங்களில் நுழைய மறுத்து மௌனமாக இருக்கிறது.

ஏதேனும் ஒரு கனத்தில் நான் உணர்ந்தவைகளை எழுத்தின் வடிவில் பார்ப்பது, எனக்கும் அந்த கதைகளுக்குமான இடைவெளியை இல்லாமல் செய்துவிடுகின்றன. கதைகள் எனக்குள் ஏற்படுத்திய உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். சிலருக்கு இது வெறும் பிதற்றலாக தோன்றலாம். சிலருக்கு வேடிக்கையாக கூட இருக்கலாம். வார்த்தைகளால் விவரிக்க முடியாது என கருதும் ஒரு மகிழ்வான கனத்தினை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

கல்கியின் பார்த்திபன் கனவிற்கு அடுத்து இப்போதுதான், பெரும் எதிர்பார்ப்புடன் ஒரு நாவலை படிக்க தொடங்கியிருக்கிறேன். அது ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவல். பார்த்திபன் கனவினை படிக்கும் போது, நான் பள்ளி செல்லும் மாணவன். மாலையில் கிடைக்கும் நேரத்தி்ல் எல்லாம் நாவல் என்னுடன் இருந்தது. குதிரையின் குளம்படி சத்தமும், வால்களில் ஓசையும், அந்தபுற ராணிகளின் குதுகல ஒலிகளும் மனகாதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்ததன. ராஜேஸ்குமார், சுபா என திரில் நாவல்களை படிக்கும் போது, அப்பா திட்டியிருக்கிறார். ஆனால் பார்த்திபன் கனவினை படிக்கும் போது ஒன்றும் சொல்லவில்லை. இந்த வாசி்ப்பு தளம் நோக்கி என்னை பயணப்பட வைத்தது அவர்தான் என நினைக்கிறேன். இதற்குதான் அவர் ஆசைப்பட்டிருக்கவும் கூடும்.

சரி விஷ்ணுபுரத்திற்கு வருவோம். வலைப்பூவில் ஜெயமோகன் அவர்களின் எழுத்துகளையும், சில கதைகளையும் படித்திருக்கிறேன். அவரை சிலர் இந்துத்துவாதி என குறிப்பிடுகின்றனர். எப்படி அமெரிக்காவில் கிருஸ்துவம் பற்றிய நிறைய படைப்புகள் வருகின்றனவோ, அதுபோல இங்கே இந்துமதம் பற்றிய படைப்புகள் வருகின்றன. அது வியாபார தந்திரமோ, சுற்றியிருக்கும் சமூகத்தின் காரணமாகவோ, இல்லை பெரும் காவியங்களின் பாதிப்போ எதுவென தெரியவில்லை. இந்து மதம் பிடிக்காத நடிகர்களை கூட வேலு, வேலாயுதம் என நடிக்கவைக்கும் காரணமும் அதுவாகத்தான் இருக்கும்.

இப்போதுதான் விஷ்ணுபுரத்திற்குள் நுழைந்திருக்கிறேன். பிரம்மாண்டமான கோவிலைக் கொண்ட விஷ்ணுபுரத்தில் விஷ்ணு படுத்திருப்பதைப் போல அங்கே ஒரு குஸ்டரோகியும் படுத்திருக்கிறான். அதைக் கண்டு ஒருவன் நிறைய சிந்தனை செய்கிறான். இல்லாத ஒரு கற்பனை நகரமன அதை எண்ணாமல், எங்கள் திருச்சி மாவட்டத்தின் திருவரங்கத்தினை மனதில் நிறுத்தி கதையை தொடர்ந்து கொண்டிருக்கிறேன். விஷ்ணுபுரமும், திருவரங்கமும் எனக்கு ஒன்றாகவே தோன்றுகின்றன. என் கற்பனையில் விஷ்ணுபுரம் திருவரங்கத்தின் பெரும் உருவகமாகவே தோன்றுகிறது. காற்றில் ஒலியெழுப்பும் தூண்கள், மிகப் பிரம்மாண்டமான கோபுரங்கள், விஷ்ணு படுத்திருக்கும் விதம் என எல்லாம் ஏற்கனவே அறிமுகமானவையாக இருப்பதால், இது புனைவு என்பதை அடிக்கடி மறந்து போகிறேன். தொடக்கமே அலாதியாக இருக்கிறது. இன்னும் சரியாக பத்து அத்தியாங்கள் கூட படிக்காமல் விஷ்ணுபுரம் பற்றி மேலும் கூற இயலாது. எல்லாம் படித்துவிட்டு வருகிறேன். என்னுடைய வாசிப்பு அனுபவம் போல நீங்களும் உணர்ந்திருந்தால் நிச்சயம் அந்த புத்தகம் பற்றி கருத்துரையில் மறக்காமல் குறிப்பிடுங்கள் நண்பர்களே.

குழந்தைகளை தத்து எடுப்பது பற்றி

ஒரு புறம் தேவைகள் இன்றி குவிந்து கிடக்கும். மறுபுறம் தேவைகள் இருந்தும் ஒன்று கூட இருக்காது. பெரும்பாலும் பணம் பற்றி கூறப்படும், இந்த வாசகம், ஏனோ எல்லாவளங்களுக்கும் பொருந்திப் போகிறது. “அந்த சனியன் இந்த தடவையும் பொண்ணையே பெத்து தொலைச்சுட்டா சார்” என்று சலித்துக் கொள்ளும் அப்புவுக்கும், “போகாத இடமில்ல சார், அவ வயித்துல புழு கூட வைக்க மாட்டேங்கு”துன்னு ஏக்கமாய் சொல்லும் சுப்புவுக்கும் சுமையும், சுகமும் குழந்தைதான். “மேடுகளை உடைத்து பள்ளங்களை நிரப்புங்கள்” என்ற தத்துவ வார்த்தையின் மதிப்புமிக்க செயல்தான் “தத்து”. என் உறவினர் ஒருவர் தத்து எடுப்பதற்காக குழந்தையின் பெற்றோரிடம் வாய்மொழி அனுமதி பெற்று குழந்தையை வளர்த்து வந்தார், சில காலம் கழித்து அந்தக் குழந்தையின் தாய்க்கு குழந்தை திரும்ப பெறுகின்ற எண்ணம் வந்துவிட்டதால், தத்து எடுத்த குழந்தை மீண்டும் பெற்றோரையை அடைந்தது. பேச்சு வார்த்தை மூலமோ, பூஜைகளோ செய்து வி்ட்டு குழந்தைகளை தத்து எடுத்தல் இப்போதெல்லாம் செல்லாது என்பதை அவர் உணர்ந்தார். சட்டங்களை அறிவது பற்றிய கவணக்குறைவு எல்லாக் காலங்களிலும் நம்முடன் வருவது.

சட்டப்பூர்வமாக தத்து எடுப்பது பற்றியும், தத்து கொடுப்பது பற்றியும் அறிந்து கொள்ள இந்த புத்தக கண்காட்சியில் “குழந்தைகளை தத்து எடுப்பது பற்றி,..” என்ற புத்தகம் கிடைத்தது, அந்தப் புத்தகம் குறிப்பிட்டுள்ள முக்கிய விஷயங்கள் இனி,..

அரசு அனுமதி பெற்ற தத்து கொடுக்கும் அமைப்புகள் (Licenced Adoption/Placement agencies) மூலம்தான் தத்து பெறமுடியும். இவற்றை FIT person Institute என்று மத்திய அரசு அழைக்கிறது.

தத்து எடுப்பது தொடர்பான சட்டங்கள் –
1. Hindu Adoption and Maintenance Act(HAMA) – 1956 இந்துக்களுக்கானது.
2. Guardians and wards Act – 1890(GWA) மற்ற மதத்தினருக்கானது.

சில விதிமுறைகள் –

 1. குழந்தை தத்து எடுத்துக் கொள்ளப்பட சட்ட விதிகளின்படி தடையின்றி இருக்க வேண்டும்.
 2. குழந்தை 6-வயதிற்கு மேல் இருந்தால் வாய்மொழி மற்றும் எழுத்து மூலம் தத்து எடுத்துக் கொள்ளப்படுவதாக குழந்தை ஒப்புதல் அளிக்க வேண்டும்.
 3. உடன்பிறந்தோர் – இரட்டைக் குழந்தைகளைப் பிரிக்கக் கூடாது.
 4. தம்பதியருக்கு ஏற்கனவே குழந்தைகள் இருந்கதாலும் தத்து எடுக்கலாம்.
 5. ஒற்றைப் பெற்றோரும்(ஆண் / பெண் தத்து எடுக்கலாம்
 6. ஒரு ஆண், பெண்ணைத் தத்து எடுக்க விரும்பினாலும் அல்லது பெண், ஆணைத் தத்து எடுக்க விரும்பினாலும் தத்து எடுப்பவருக்கு குழந்தையை விட 21 வயது அதிகமாக இருக்க வேண்டும்.
 7. தாய் அல்லது தந்தை வயது 35-க்குள் இருப்பது நல்லது.
 8. குழந்தை தனது சொந்தப் பெற்றோரிடமிருந்து மொத்தமாகப் பிரிய வேண்டும். வயது வந்த பிறகு சொந்த பெற்றோரோடு சேர நினைத்தாலும் முடியாது.

திருமணம் ஆகாத ஆண், பெண், முறையான விகாரத்து பெற்றவர்கள் அல்லது வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள் தன்னிச்சையாக முடிவெடுக்கலாம். தத்து எடுத்துக் கொள்பவர்களுக்கு 18 வயதிற்கு மேலும் நல்ல மனநலத்துடனும் இருக்கவேண்டும். ஆனால் திருமணம் ஆனவர்கள் வாழ்க்கைத் துணைவர்/துணைவி சம்மதத்துடன் தத்து எடுக்கலாம். ஒன்றிக்கும் மேற்பட்ட வாழ்க்கை துணையிருந்தால் அனைவரின் சம்மதமும் அவசியம்.

பாரதி புத்தகாலயம் வெளியீட்டில் டாக்டர்.என்.கங்கா அவர்களால் எழுதப்பட்ட இப்புத்தகத்தில் இப்படி அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் நிரம்ப இருக்கிறது. விலை 5 ரூபாய்.

கணினி மேஜிக்கா நாம் கண்டுகொள்ளாமல் விட்டவையா

இன்று ஒரு நண்பர், முகநூலில் மைக்ரோசாப்ட் கூட தீர்க்க முடியாத சில பிரட்சனைகள் என்று ஒரு பதிவினை இட்டிருந்தார். கல்லூரிக் காலங்களில் “மைக்ரோசாப்ட் மேஜிக்” என அறிவார்ந்த சில நண்பர்கள் கூறியதில் சிலவும் இருந்தது. அதனை ஒரு பிரதியெடுத்து உங்களுக்கு தருவதல்ல இந்த இடுகையின் நோக்கம். பிறகு வேறெதுக்கு என தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

மேஜிக் 1 –
உங்களின் விண்டோஸ் கணினியில் CON என்ற பெயரில் ஒரு ஃபோல்டரை உருவாக்க முயற்சி செய்யுங்கள். என்னதான் முயன்றாலும் அது முடியாது.

உண்மை காரணம்-
CON மட்டுமல்ல,.. PRN, AUX, CLOCK$, NUL
COM0, COM1, COM2, COM3, COM4, COM5, COM6, COM7, COM8, COM9
LPT0, LPT1, LPT2, LPT3, LPT4, LPT5, LPT6, LPT7, LPT8, and LPT9 என எந்த பெயரிலும் நம்மால் ஃபோல்டரை உருவாக்க முடியாது. காரணம், இவையெல்லாம் DOS மொழியில் இருக்கும் பிரத்தியோகமாக கருவிகளுக்காக உருவாக்கப்பட்டவை. இதே பெயரில் மற்றொன்று இருந்தால் வீண்குழப்பம் நேரிடும், இதை தவிர்க்கவே ஃபோல்டரை உருவாக்க முடிவதில்லை.

சிலர் அதற்கும் வழியை கண்டுபிடித்து வைத்திருக்கின்றார்கள்.

வழி 1 – புது ஃபோல்டரை உருவாக்கி அதன் பெயரினை CON என்று தட்டச்சு செய்தவுடன், alt கீயை அழுத்தியப்படி, 0160 என்று தட்டச்சு செய்தால் போதும்.

வழி 2 – @echo off
mkdir c:\con\ என்ற பேட்ச் பைலினை எழுதி இயக்கினால் கிடைத்துவிடும்.

வழி 3 – DOSஐ திறந்து MD \\.\C:\CON என்று தட்டச்சு செய்து என்டர் செய்தும் உருவாக்கிக் கொள்ளலாம்.

மேஜிக் 2 –
மைக்ரோசாப்ட் ஆபீஸ் வேர்ட் தொகுப்பினை திறந்து அதில் =rand (200,99) என தட்டச்சு செய்து என்டர் கீயை அழுத்துங்கள்.

உண்மை காரணம்-
On the Insert tab, the galleries include என்று தொடங்கும் பக்கம் பக்கமாக எழுதிய ஒரு கட்டுரை ஒன்று கிடைக்கும். சிலருக்கு “The quick brown fox jumps over the lazy dog” என்ற வரி திரும்ப திரும்ப கிடைக்கலாம், அப்போது நீங்கள் பயண்படுத்தும் தொகுப்பானது MS 2003 என அர்த்தம்.

இதற்கு நீங்கள் டம்மியாக கட்டுரையை தயார் செய்ய மைக்ரோசாப்ட் உதவுவதே காரணம்,. இதில் 200 என்பது பாராவின் அளவினையும், 99 என்பது அதில் உள்ள வரிகளின் அளவையும் குறிப்பன. நீங்கள் =rand (2,3) என்று முயன்றுப் பார்த்தால் புரியும். 200,99 என்பது அதிகப்படியான அளவு, அதற்கு மேல் அனுமதியில்லை.

மேஜிக் 3 –

உங்கள் நோட்பேடை திறந்து Bush hid the facts என தட்டச்சு செய்து சேவ் செய்து விடுங்கள். பிறகு நீங்கள் திறந்து பாருங்கள்.

உண்மை காரணம்-
ஒன்று நடக்காமல் அப்படியே Bush hid the facts என இருந்தால், உங்கள் கணினியில் IsTextUnicode என்ற Function சரியான பணியை செய்திருக்கின்றது என அர்த்தம். அப்படியில்லாமல் சைனிஸ் மொழியில் காண்பித்தால், சரியாக வேலை செய்யவில்லை. தற்போது வருகின்ற Windows XP, Windows Vista and Windows 7 ஆகியவற்றில் இந்தப் பிரட்சனை தவிர்க்கப்பட்டுள்ளது. நீங்கள் Bill fed the goats ஐயும் முயன்று பாருங்கள்.

பல ஆங்கில வலைதளங்களில் கூறப்பட்டிருக்கும் இவைகள் தமிழில் இருப்பது சில நண்பர்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன். உங்கள் கணினியில் உண்மையான மேஜிக் செய்ய விருப்பமா,..

நோட்பேடில் கீழே உள்ளதை வெட்டி ஒட்டி “magic.bat” என சேவ் செய்திடுங்கள். பின் அதனை சொடுக்கி பாருங்கள். மேலும் பலவற்றை அறிந்து கொள்ள இங்கு சொடுக்குங்கள்.

நன்றி –
விக்கி
Notepad Trick

ரஜினி – சிவாஜிராவ் இரண்டுக்கும் இடையில்

நேற்று அதிகாலை “திருச்சியெல்லாம் இறங்கு” என்ற கண்டெக்டரின் குரல் கேட்டு கண்களைக் கசக்கிக் கொண்டு எழ முயற்சித்தேன். அங்கு தென்பட்டதெல்லாம் ரஜினியின் பிறந்த நாளுக்காக தொண்டர்களால் வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ் வாழ்த்துகள். இதெல்லாம் ரஜினி என்ற சூப்பர் ஸ்டாருக்கு ரசிகர்களால் செய்யப்பட்டது, என்று கூறிவிட்டு சொல்லமுடியாது. ரசிகன் என்பதையும் மீறி விசுவாசியாக இருக்கின்றார்கள்.

மனுஷ்ய புத்திரன் அவர்கள் ரஜினியை “தோன்ற மறுத்த தெய்வம்” என்று குறிப்பிடுகிறார். தொண்டன் ஒரு படி கடவுளை நோக்கி ஏறினால், தெய்வம் நூறு படி இறங்கி வரும் என்பார்கள். ஆனால் ரஜினி விசயத்தில் இது தலைகீழாக நடக்கிறது. ரஜினியைப் பார்க்கும் போதெல்லாம் வியப்பு ஏற்படுவதற்கு பதில் ஒரு வித சோகம் தலையெடுப்பதை மறுப்பதற்கில்லை. அதற்கு காரணம், ரஜினிக்கும் சிவாஜிராவிற்கும் இடையே அவர் தனக்குள் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டம்.

நான் பள்ளியில் படித்த காலக் கட்டத்தில் ரஜினியும், கமலும் பழைய தலைமுறை நடிகர்களாக மாறிவிட்டிருந்தார்கள். இருந்தும் அவர்களைப் பற்றிய வாதங்கள் இன்று வரை எல்லோரிடமும் இருப்பது வியப்பானதுதான். ரஜினியை எம்.ஜி.ஆரோடும், கமலை சிவாஜியோடும் ஒப்பீடு செய்வது இயல்பானது, ஆனால், கமலின் பளிங்கு நிறமும், உடற்கட்டும், புதியமுயற்சிகளும் எம்.ஜியாரிடம் இருந்தவை. ரஜினியின் வில்லன் வேட திறனும், நகைச்சுவை உணர்வும் அப்படியே சிவாஜியிடம் இருந்தவை,.. இருந்தும் இந்த ஒப்பீடுகள் புறக்கணிக்ப்படுகின்றன. ஊடகங்கள் தங்களின் தேவைக்காக சிலரை மிகைப்படுத்தி பரப்பிவிட்டு காசுபார்க்க பயன்படுத்திக் கொள்ளும், அந்த விஷயத்தில் ரஜினியும் விதிவிலக்கல்ல.

ஒரு பக்கம் கோடிக்கணக்கான ரசிகர்கள், கோடிகளைத் தர தயாரக இருக்கும் தயாரிப்பாளர்கள், தலைக்காட்டினாலே போதும் என தவிக்கும் சக நடிகர்கள், பலருக்கும் வாய்க்காத அன்பான குடும்பம், ஆனால் இதையெல்லாம் விட்டு விட்டு ரஜினி தேடிக் கொண்டிருப்பதோ,… ஆன்மீக ஞானத்தினை. மற்ற நடிகர்களைப் போல இந்து மக்களைக் கவர நடத்தப்படும் நாடகமாக இது இல்லாமல், உண்மையாக இருப்பதை எல்லோரும் உணர்வார்கள். ரஜினியிடம் நான் மயங்கிப் போன இடம் அவரின் தனிப்பட்ட வாழ்க்கைதான்.

எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் போல ரசிகர்களை தொண்டர்களாக மாற்றியிருக்கலாம். கொஞ்சம் விட்டிருந்தால் ரசிகர்களே எம்,ஜி,ஆருக்கு செய்த்து போல ரஜினிக்கும் செய்திருப்பார்கள், ரஜினி தப்பிவிட்டார். அதில் எம்.ஜி.ஆரை மிஞ்சிவிட்டார். எம்.ஜி.ஆர் தன்னுடைய சொட்டை தலையை மக்களிடம் காட்டி தன் கதாநாயக பின்பத்தினை உடைத்துக் கொள்ள விரும்பவில்லை. விளைவு, கருப்பு கண்ணாடியோடு தொப்பியும் அவர் அடையாளமாக மாறிப் போனது. ரஜினி நினைத்திருந்தால் மறைத்திருக்க முடியும், கார்த்தி, விஜயகாந்த் போல விக் வைத்து அலைந்திருக்க முடியும். திரைக்கு முன் விக் வைத்துக் கொண்டு பேத்தி வயதில் இருப்பவரோடெல்லாம் டூயட் ஆடி, அரசியல்வாதிகளிடமிருந்தும், தீய சக்திகளிடமிருந்தும் மக்களை காப்பாற்றிவிட்டு, திரைக்குபின் ஆன்மீகத்தினை தேடி, ரசிகனிடமிருந்து ஓடி, அரசியலிருந்து தப்பித்து சிவாஜிராவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

நம்மிடையே போலியாக வாழும் பலருக்கு மத்தியில் ரஜினியைப் போல சில மனிதர்கள் தங்கள் சுய அடையாளங்களை மீட்க தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு சமர்ப்பனமாக இந்த இடுகை இருக்கட்டும். நன்றி.

சரோஜாதேவி முதல் சகுந்தலாதேவி வரை இனி இல்லை

“புத்தகங்களைத் திருடுங்கள். ஏனென்றால் புத்தகம் திருடுவது வெண்ணையைத் திருடுவதைவிடப் புனிதமானது” என்று சொன்னார் வலம்புரிஜான். பல மனிதர்களிடம் புத்தகங்கள் செய்திருக்கும் மாற்றங்கள் அலாதியானது. நிறைய மின்புத்தகங்களை வாசிக்க கிடைக்கையிலும், அச்சுப் புத்தகத்தினை புரட்டி படிப்பது அனைவருக்கும் விருப்பமான ஒன்று.

வான் முட்டி நிற்கும் விலைவாசியில், வயிற்றிக்கு செலவு செய்யவே விழிபிதுங்கி நிற்கும் நடுத்தர வர்க்கத்தினர். அறிவுப் பசிக்காய் அச்சு புத்தகங்களை வாங்கிப் படிப்பது இயலாத ஒன்றாகி விட்டது. ஆடி கழிவு போல வருடம் ஒரு முறை வந்து போகும் புத்தகச் சந்தை எதிர்நோக்கி என்னைப் போல எத்தனையோ பேர் காத்துக் கொண்டிருக்கிறோம்.

இதற்கு மத்தியில் அபூர்வமாய் சில இடங்களில் நூலகங்கள் உண்டு. அதிலும் அபூர்வமாய் சில இடங்களிலும் புத்தகங்களும் உண்டு. ஏனென்றால் நிறைய நூலகங்கள் பெயரளவில் மட்டுமே இருக்கின்றன. அப்படி பெயரளவில் இல்லாமல் கணக்கற்ற புத்தகங்களை தாங்கிக் கொண்டிருக்கும் நூலகங்களில் “அண்ணா நூற்றாண்டு நூலகமு”ம் ஒன்று. சைதைக்கு அருகே இருப்பதால் சில ஞாயிறுகள் நண்பர்களுடன் அங்கு சென்றிருக்கிறேன்.

இது போன்ற மிக நவீனமயமான நூலகத்தினை இதுவரை நான் கண்டதில்லை. ஆயிரம் புத்தகங்களை கொண்ட நூலத்தினை பார்த்தவனுக்கு ஆசியாவிலேயே பெரிய நூலகத்தினை பார்த்த போது எற்பட்ட மகிழ்ச்சியை உங்களால் அறிந்து கொள்ள முடியும். எங்கள் கிராமத்து நூலகத்தில் பெரும்பாலும் பொழுது போகாத பெருசுகளும், நாவல்களில் ஊறிப்போன சிறுசுகளை மட்டுமே காண முடியும். ஆனால் இங்கே ஏகப்பட்ட உழைக்கும் வர்கத்தினரைப் பார்க்க முடியும்.

கணினி முதற்கொண்டு வரலாறு வரை தனித்தனிப் பிரிவுகளாக ஏகப்பட்ட புத்தகங்கள். அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் மனிதர்கள் என்று கண்டாலும். என்னை வியக்க வைத்தது இங்கு வரும் குழந்தைகள்தான். திரைப்படங்களிலும், தொலைக்காட்சியிலும் தொலைந்து விடாமல் அறிவு வளர்க்க வரும் அந்த அடுத்த தலைமுறையை காணும் போது,.. இன்னும் படிப்பவர்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றார்கள் என்ற ஆனந்தம் ஏற்பட்டது.

கடந்த முறை சென்ற போது கூட உறுப்பினர் அட்டைக்காக அங்குள்ளவர்களை நாங்கள் அனுகினோம். விரைவில் அதற்கான ஏற்பாடுகள் முடிந்துவிடும் என நம்பிக்கையாக சொன்னார்கள். ஆனால் இன்று இடிபோல ஒரு செய்தி “சென்னை கோட்டூர்புரத்தில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட, ஆசியாவிலேயே மிகப் பெரிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தை டிபிஐ வளாகத்திற்கு மாற்றப் போவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்”.

வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது. கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட ஒரே காரணத்திற்காக நூலகத்தினை முடக்குவது எந்த நாட்டின் வரலாற்றிலும் நிகழ்ந்திருக்க முடியாத ஒன்று. நான் அறிந்த வரையில் ஹிட்லர் மட்டுமே நூலகத்தினை அழித்தாக கேள்வியுற்றிருக்கிறேன். ஆனாலும் என்னால் ஜெயலலிதாவை ஹிட்லருடன் கூட ஒப்பிட முடியவில்லை. ஏனென்றால் அவர் அழித்த நூலகம் “செக்ஸ்” பற்றியது என்று குறிப்புகள் கூறுகின்றன. எனவே ஜெயலலிதா இன்று ஹிட்லரையும் மிஞ்சிவிட்டார்.

முதல்வர் அதிகாரத்தில் இருக்கும் ஜெயலலிதாவின் இந்த அறிவில்லாத செயலுக்காக அவரை நடுத்தெருவில் நிற்க வைத்து செருப்பினால் அடித்தாலும் தகும் என்றே தோன்றுகிறது.
– புத்தகத்தினை நேசிக்கும் ஒரு மனிதன்.

நூலகத்தினைப் பற்றி மேலும் அறிய ,..

http://annanootrandunoolagam.blogspot.com

பொருந்தா காமமும் தமிழ் சமூகமும்

காதல் விடுத்து கதை சொல்ல எதுவுமில்லை என்கின்ற திரையுலகில் சில கட்டுப்பாடுகளை உடைத்திருக்கின்றன. ஆனால் அவை காதலை விடவும் கடுமையான காமத்தினை கையில் எடுத்திருக்கின்றன. சில வலைப்பதிவு நண்பர்கள் இதனை ஏற்றுக்கொள்ள தமிழர்களுக்கு இன்னும் பக்குவம் வரவில்லை என்கின்றார்கள்.

இந்து மத புராணங்களையும், தமிழ் இலக்கியங்களையும் கேட்டு வளர்ந்த சமூகத்தில் பக்குவம் வந்திருக்க வேண்டுமே!. எப்படி தவறியது?. ஒரு வேளை இந்து மத புராணங்களையும், தமிழ் இலக்கியங்களையும் தவற விட்டுவிட்டார்களா நம் தமிழர்கள் என்று எனக்கு ஒரு சந்தேகம். ஏன் என்கின்றீர்களா. அதற்காகத்தான் இந்த இடுகை.

பொருந்தா காமம் –
அன்பு, அறம், சமூகம், ஒழுக்கம் இவைகளை தகர்த்துவிட்டு காமுறுவதை பொருந்தா காமம் என்கின்றார்கள். காதலை ஊரறிய வெளிப்படுத்துவதிலிருந்து தொடங்கும் பொருந்தா காமம், வரைமுறையில்லா புணர்ச்சியில் வந்து முடிவடைகிறது. புனிதம் என்று போற்றி வளர்த்த உறவுகள் எல்லாம் தகர்ந்து நிற்கின்றன, சமூகம் எள்ளி நகையாடுகிறது என்பதோடு இத்தனையும் நிகழ்ந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் இலக்கியங்களில் –

இப்போது அரசியல்வாதிகளுடன் இருக்கும் மனைவியார், துணைவியார் போல அப்போது இல்லக் கிழத்தி, காதல் கிழத்தி, காமக் கிழத்தி என இருந்தார்கள் என்கின்றன தமிழ் இலக்கியங்கள். வீரம், கொடை போன்றவற்றை விடுத்து அகத்தினை முழுமையும் காமத்திற்காக எழுதப்பட்டது.

ஐம்பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரம் காதல் கிழத்தியையும், இல்லக் கிழத்தையும் ஒருசேரக் கொண்டவனின் கதை, சீவகசிந்தாமணியோ எட்டு கன்னிகளை மணம் முடிக்கும் மனிதனுடையது. ‘கற்பகத்தின் பூங்கொம்போ, காமன் தன் பெருவாழ்வோ‘ என்கிறது பெரிய புராணம். தமிழர்களின் வேதநூலானான திருக்குறளோ ‘கள்ளினும் காமம் இனிது‘ என்கிறது. கம்ப ராமயணமோ ‘விழும்தொறும் மண்ணும் கீழுற
குழைவிழும்’ என்று மிருகங்களின் புணர்ச்சியைப் பற்றிக் கூட குறிப்பிடுகின்றன.

கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை என காமத்தினை வைத்தே வகுத்துள்ளனர் நம் முன்னோர்கள். முறையான காமத்திற்கு ஐந்து திணைகளும் முறையற்ற காமத்திற்கு இரண்டு திணைகளையும் வகுத்துள்ளனர். கைக்கிளை என்பது ஒருதலைக்காதல், பெருந்திணை என்பது பொருந்தா காமம். மற்ற ஐந்துதிணைகளும் தலைவனும் தலைவியும் புணர்தல், பிரிதல், காத்திருத்தல், ஊடல், வருந்துதல் என்பவையே.

இந்து மத புராணங்களில் –

பொருந்தா காமம் என்ற ஒன்றை மட்டுமே வகையாக பிடித்துக்கொண்டு புராணங்களை படைத்திருக்கின்றார்கள். அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இப்போது நடப்பது போலவே பழங்காலத்திலும் ஏகப்பட்ட முறை தவறிய உறவுகள் சமூகத்தில் உலாவினவோ என்று சந்தேகம் வருகிறது. வெறும் கற்பனையாக எடுத்துக் கொண்டால், இத்தனை வன்மம் என்று எண்ணம் வரும், மேலும் படியுங்கள்.

மோகினி -(ஆணாக இருந்து பெண்ணாக மாறியபின் உறவு)
விஷ்னுவின் மோகினி அவதாரக் கதை ஏகம் இருந்தாலும், சிவன் மோகினியின் மேல் கொண்ட காமத்தால் ஐயப்பன் பிறந்தாக கூறப்படுதல் ஆண் ஓரகினச் சேர்க்கை தானே!.

பாஞ்சாலி – (அண்ணி கொழுந்தன் உறவு)
திரௌபதி என்று உண்மையான பெயர் பாண்டவர்கள் ஐவருக்கும் மனைவியானதால் பாஞ்சாலியாக மாறிப்போனது. ஆனால் சிலர் தர்மனின் மனைவி என்று அறிவி்க்கப்பட்டாலும், ஐந்து பேருக்கும் மனைவியாக வாழ்ந்தாள் என்கின்றனர்.

ருமை- (தம்பியின் மனைவியுடன் உறவு)
சுக்ரீவனின் மனைவி ருமை. ஆனால் சுக்ரீவனை வஞ்சித்துவிட்டு அண்ணன் வாலி ருமையுடன் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

பிருந்தை -(மாற்றன் மனைவியுடன் உறவு)
சலந்தரன் எனும் அசுரனின் மனைவி பிருந்தை. அவன் சிவனுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, விஷ்னு சலந்திரனாக வந்து பிருந்தையுடன் இருந்தாக கூறப்படுகிறது. அவள் இட்ட சாபமே ராம அவதாரத்தில் சீதையை ராவணன் கவர்ந்து செல்ல காரணம் என்கின்றார்கள்.

குந்தி – திருமணத்திற்கு முன் உறவு
குந்தி திருமணத்திற்கு முன்பே சூரியனிடம் உறவு கொண்டமையால் பெற்றெடுத்த கர்ணனை ஆற்றில் விட்ட கதை அனைவரும் அறிந்ததே. மேலும் ஐந்து பிள்ளைகள் பெற்றாலும் எவையுமே அவள் கணவன் பாண்டுவுக்கு பிறந்ததில்லை என்று வேறு கூறப்படுகிறது.

பத்மை -தகப்பன் மகள் உறவு
பத்மை என்ற பெண்ணை படைத்தார் பிரம்மா. படைத்தவனுக்கு எப்போதும் தகப்பன் அந்தஸ்த்து தரப்படுவது வழக்கம், எனவே பத்மையை பிரம்மனின் மகள் என்கின்றார்கள். ஆனால் பத்மை மிக அழகாக இருந்தமையினால் பிரம்மனே கற்பழித்தான் என்று கூறப்படுகிறது.

இதுபோல பறவைகள், விலங்கள் புணர்ச்சியும் புராணங்களில் வருகின்றன. இதுவே போதும் என இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். நம் குழந்தைகளுக்கு பாலியல் கல்வி வேண்டுமா என பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கும் வேளையில், வகுப்பறையில் குழந்தையை பெற்று கழிவறையில் எறிந்துக் கொண்டிருக்கின்றார்கள். அடிப்படை பாலியலறிவை தரவேண்டுமா என யோசனை செய்கையில், பிஞ்சுகளை வைத்து அரிப்புகளை ஒருகூட்டம் தீர்த்துக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் தடுக்க சட்டமும் இல்லை, அதைக் கேட்க நாம் தயாராகவும் இல்லை.

தமிழ் இலக்கியங்களையும், இந்துமத புராணங்களையும் தவறவிட்டவர்கள் கூட, அபூர்வ ராகங்களில் தொடங்கி உயர், கலாபக் காதலன், சிந்து சமவெளி என்று பொருந்தா காமத்தினை மையப்படுத்திய கதைகளை மறந்துவிட்டார்களா?. இன்று மாணவர்களும், மாணவிகளும் காதல் கடிதங்களை பரிமாறிக் கொள்வதில்லை. மாறாக கைப்பேசியில் நிர்வாண படங்களையும், காம குறுஞ்சேய்திகளையும் பகிர்ந்துகொள்ளும் காலக்கட்டத்தில் நின்று கொண்டிருக்கின்றோம் என்பதை மறந்துவிடக் கூடாது. இதெல்லாம் சமூகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வராவிட்டால் தடுத்து நிறுத்த, தற்காத்துக் கொள்ள என்பது பற்றிய சிந்தனையே எழாமல் போய்விடும். சிந்திப்பீர்.

ஒரு ஜென்மம் போதாது

34 –வது சென்னை புத்தக கண்காட்சி இன்றையிலிருந்து 17ம் தேதி வரை சேத்துப்பட்டு புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடக்க இருக்கிறது. இனி வலையுலகில் கண்காட்சிக்கு சென்ற அனுபவம், வாங்கிய புத்தகம், விமர்சனம் என கலை கட்டும். சென்ற வருடம் தான் முதன்முதலாக புத்தக கண்காட்சிக்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது. இது எனக்கு இரண்டாவது கண்காட்சி. சென்ற கண்காட்சி எனக்கு சில பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது. அதில் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.

பொதுவானவை –
சாண்டிலியன், கல்கி போன்றவர்களின் நாவல்களும், இரும்புக் கை மாயாவி போன்ற காமிஸ் புத்தகங்களும் எங்கிருக்கின்றன என்பதை தெரிந்து வைத்துக் கொள்வதில் இரண்டு நன்மை உண்டு.
1. அந்தப் பகுதியில் அதிக கூட்டம் இருக்கும் அதை தவிர்க்கலாம்.
2. நம்மிடம் இந்த புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என எதிர்ப்படுவர்களுக்கு உதவலாம்.

அடுத்து எல்லா புத்தகங்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி உண்டென்பதால், பட்ஜெட்டில் மிஞ்சுவதை வைத்து இன்னொரு புத்தகம் வாங்கலாம்.

புத்தகங்களின் பட்டியல் –
இந்த வருடம் ஒரு கோடி புத்தகங்கள் மக்களுக்காக வைக்கப்படுகின்றனவாம். இதில் நமக்கான புத்தகங்களை தேடுவதும், தேர்வு செய்வதும் பெரிய சவால்தான். கண்காட்சிக்கு செல்லும் முன்பே ஒரு குட்டிப் பட்டியல் தயாரித்துக் கொள்வதுதான் சிறந்த வழி. கேள்விப்படாத பல பதிப்பகங்களும், அறிவுக்கு எட்டாத பல புத்தகங்களும் அங்கு சென்ற பின்பே நமக்கு தெரியவரும். அதனால் இந்தப் பட்டியலை ஒரு உதவிக்காக மட்டுமே கொண்டு செல்ல தீர்மாணித்திருக்கிறேன்.

பிரபல பதிப்பகங்கள் –
விகடன், உயிர்மை, என்.எச்.எம் என சில பதிப்பகங்கள் பிரம்மாண்டமாய் இருக்கும். ஏற்கனவே நமக்கு அறிமுகமாகி இருப்பதால் நம் மனம் அங்கு செல்லவே முனையும். ஆனால் அங்கிருக்கும் பல புத்தகங்களை கண்காட்சி முடிந்தபின்பு கூட நம்மால் வாங்க முடியும். நம் தெருவில் இருக்கும் கடைகளில் கிடைக்கும் புத்தகங்களை கண்காட்சியில் வாங்குவது புத்திசாலிதனமாக இருக்காது. அதனால் இந்த வருடம் குட்டி குட்டி பதிப்பகங்களுக்கு சென்ற பின்தான் பிரபல பதிப்பகங்கள். இந்த சிறிய பதிப்பகங்களின் படைப்புகளை வெளியில் தேடுவது என்பது மிகவும் சிரமமான ஒன்று. மேலும் பிரபல பதிப்பகங்களின் புதிய புத்தகங்களை கண்காட்சியில் வாங்கலாம். அவை நம் பகுதி கடைக்கு வர நாளாகும்.

வைரமுத்துவா வாலியா –
கண்காட்சியில் நடக்கும் கலைநிகழ்ச்சிகளையும், அதில் கலந்து கொள்ளும் பிரபலங்களையும் சென்ற வருடத்தில் கவணிக்க தவறிவிட்டேன். எனவே இந்த வருடம் 7ம் தேதி வைரமுத்துவையோ, அல்லது 8ம் தேதி வாலியையோ பேசுவதை ரசித்துவிட வேண்டும். கண்காட்சிக்கு 2மணிக்கே சென்றால் புத்தகத்தினை வாங்கிய கையோடு 6மணிக்கு இவர்களை பார்க்க முடியும். இன்னும் சுகிசிவம், மனுஷ்ய புத்ரன் என நீங்கள் சந்திக்க ஆசைப்படுபவர்கள் வரும் நாட்களை அறிந்து கொள்ள இங்கு சொடுக்குங்கள்.

ஜெ, எஸ்.ரா, ஞாநி, சாரு எல்லோரும் கண்காட்சிக்கு வருவார்கள் என எதிர்ப்பார்க்கிறேன். எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் இடையே இடைவெளி விரும்புகிறவன் நான். அதனால் அவர்கள் வந்தாலும் ஓரமாக நின்று பார்த்துவிட்டு வந்துவிடுவேன்.

பிரட்சனைகள் –

 • ஒரு லட்சம் சதுரடி, 650 அரங்குகள் என்று சொல்லியிருக்கின்றார்கள். எனவே வெகுநேரமாக நின்றும் நடந்தும் புத்தகத்தினை தேடுவதால், கால்கள் அசந்துவிடும். அமருவதற்கு ஆசனம் தேடினால் சில சமயம் கிடைக்காது.
 • புத்தகங்களை தனித்தனி பதிப்பகத்தில் வாங்குவதால் மொத்தமாக போட்டு வைத்துக் கொள்ள பை கிடைக்காது. கண்காட்சிக்கு செல்லும் போதே ஒரு பையை எடுத்துக் கொண்டு செல்வது நலம். இல்லையென்றால் புத்தகத்தோடு கை வலியும் உடன் வரும்.
 • தமிழகத்திற்கே உரித்தான கழிவரைப் பிரட்சனையையும், குடிநீர்ப் பிரட்சனையையும் எதிர்ப்பார்த்து செல்வது ஏமாற்றம் தராமல் இருக்கும்.
 • அன்னை, ஜக்கி, நித்தியானந்தா என சாமியார்களுக்கான அரங்குகளில் நுழையாமல் இருப்பது நல்லது. சென்ற முறை அன்னை அரங்கில் நுழைந்துவிட்டு பெரும் அவஸ்த்தை பெற்றுவிட்டேன்.
 • உங்களுக்கு கூட்டம் பிடிக்காது என்றால் விடுமுறை நாட்களில் செல்லாதீர்கள். என்னுடைய அனுபவத்தில் வேலை நாட்களின் 2மணியிருந்து 4 மணி வரை மட்டுமே சிறந்த நேரம். அதன்பிறகு கூட்டம் அதிகரித்துவிடும்.

குறிப்பு –
இந்த இடுகை புதியவர்களுக்கு மட்டுமே பலனளிக்கும் என தெரியும். நிறைய முறை கண்காட்சியை பார்த்தவர்களுக்கு இன்னும் பல சுவாரசியங்கள் தெரியலாம். அப்படி தெரிந்தால் பகிரவும். நன்றி.

பூக்களை பரிக்காதீர்கள் பெற்றோர்களே!

வலைப்பதிவு எழுதுவது, புத்தகம் படிப்பது போன்ற என்னுடைய செயல்கள் என் பெற்றோர்களுக்கு பிடிக்கவில்லை. வாழ்க்கையில் கவணமில்லாமல் இதெல்லாம் எதற்கு என்கின்றார்கள். பணம் சேர்க்கும் வேலை மட்டுமே உகந்ததாக எண்ணுகிறார்கள். பணம் மட்டுமே வாழ்க்கையில்லை என்பது என் எண்ணம். அதை தாண்டி இருப்பவைகளை நான் தேடிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய பாதையை தொடர இயலாமல் கசப்பான விசயங்களும் நடந்து கொண்டே இருக்கின்றன. ஒரு நிறுவத்தில் புத்தகம் வெளியிடுவதற்காக அன்பான அழைப்பு வந்தது. அதற்கான கதைகள் தயாராக இருந்தும், சில சடங்குகளுக்காக அந்த வேலை காத்துக் கிடக்கின்றது. அந்த சடங்குகளை சேகரிக்க முடியாமல் குடும்பத்தில் உள்ளவர்கள் தடுத்துவிட்டார்கள். ஒரு எழுத்தாளனாக முடியாமல் தவித்து நிற்கிறேன். இது போல நடப்பது ஒன்னும் புதிதல்ல,.

எட்டாம் வகுப்பு முடித்தவுடன் என் பெற்றோர்களால் நாமக்கலில் உள்ள பெரிய பள்ளியில் சேர்க்கப்பட்டேன். அதுவும் விடுதியில்,. அதுவரை இருந்த என்னுடைய உறவுகளோடு இருந்த தொடர்புகள் அறுந்து போயின. அது ஒரு சிறை. அங்கு தொலைபேசியில் பேச இயலாது. செய்திதாள்களோ, தொலைக்காட்சி பெட்டிகளோ இல்லை. வெளிநடப்புகளை தெரிந்து கொள்ளவதே பெரும்பாடு. மாதம் ஒரு முறை இரண்டு நாட்கள் வீட்டிற்குச் செல்வேன். அதுவும் மெஸ் பணத்தினை வாங்குவதற்காக. அந்த இரண்டு நாட்கள் மட்டுமே எனக்கும் வெளியுலகிற்குமான தொடர்பு.

வீட்டிற்கு வந்ததும் முக்கிய உறவுகளையும், நண்பர்களை சந்தித்துவிட்டு வீட்டில் நடந்த நல்லது கெட்டதுகளை விசாரிப்பேன். ஒரு சமயம் என்னுடைய கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாதென, பெரிய பாட்டி இறந்து போன விஷயத்தினைக் கூட என்னிடமிருந்து மறைத்திருந்தார்கள். இப்படி எனக்கும் குடும்பத்திற்கும் இடையே பெரும் இடைவெளி வந்திருந்தது. நேரம் கிடைக்கும் போது பழைய செய்திதாள்களை புரட்டுவேன். ஒரு மாதத்திற்குள் நடந்த அத்தனை விசயங்களும் அப்போதுதான் தெரியும். இந்த விடுதி வாழ்க்கை என்க்கு பிடிக்கவில்லை. அங்கே நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். உறவுகளை விட உன்னதமான நட்புகள். இருந்தும் இரண்டு வருடத்திற்கு பின் ஊருக்கே திரும்பி வந்தேன்.

ஆனாலும் பொறியியல் படிப்பிற்காக மீண்டும் விடுதிவாசம். இந்த முறை அந்த பிரட்சனைகள் இல்லை. செய்திதாள்களிலிருந்து செல்போன் வரை எல்லாவற்றிற்கும் அனுமதி இருந்தமையால் பிரட்சனைகள் இல்லை. சில சுபகாரியங்களுக்குச் செல்கையில் “நான் யார்ன்னு சொல்லு”ன்னு ஒரு கூட்டம் வந்து நிற்கும். அவர்களின் முகங்களே எனக்கு புதிதாக தோன்றும். சிலர் உரிமையோடு “மாப்ள எப்படி இருக்கிங்க” என்பார்கள். அவர்களெல்லாம் யார் யாரென தெரிந்து கொள்வதிலேயே நாட்கள் கழிந்துவிடும். கல்லூரிகள் அருகில் அமையாது, ஆனால் பள்ளிகள் நிச்சயம் அமையும். எனவே பள்ளிக் காலத்தில் குழந்தைகளை அருகிலிருக்கும் பள்ளியிலேயே படிக்க வைக்காலாம் என்பது என் எண்ணம்.

இப்படி அருகிலிருக்கும் பள்ளியில் படிக்க வைப்பதால் குடும்பம் நடத்தும் பாங்கினை அவர்கள் அறிந்து கொள்ள இயலும். உறவுகள் இல்லாத, பாசம் இல்லாத வெற்றுக் கல்வியை வைத்துக் கொண்டு அவர்கள் எதிர்காலத்தில் தடுமாறாமல் இருக்கட்டும். ஏன் இப்போது அவர்களைப் போன்றவர்கள் வாழ்க்கையை நடத்தவில்லையா என்று நீங்கள் கேட்டால்,. நிச்சயமாக அவர்கள் வாழ்க்கையை வேறு கோணத்தில் வாழ்கின்றார்கள். எல்லாவற்றையும் பணம் தீர்த்துவிடும் என்கின்றார்கள். சமீபத்தில் ஒரு ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் தம்பதிகள்,. காரில் குழந்தையை வைத்துவிட்டு, ஷிப்ட் முறையில் பார்த்துக் கொண்டதாக செய்தி வந்தது. சிறுவர்களை அவர்களுடைய விளையாட்டு பொருள்களுடன் வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு அலுவலகம் செய்யும் பெற்றோர்கள் இருக்கின்றார்கள்.

ஒரு காலத்தில் என் பெற்றோர்களும் அப்படி செய்திருக்கின்றார்கள். அந்த நாட்களில் கிரில் கேட்டினை பிடித்துக்கொண்டு சாலையில் நடந்து செல்பவர்களையும், விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களையும் ஏக்கத்தோடு பார்ப்பேன். இன்று ஏன் அப்படி செய்தீர்கள் என்று கேட்டால், எல்லாம் உனக்காக பணம் சேர்க்கத்தான் என்கின்றார்கள். அவர்களும் பணம் மட்டும்தான் வாழ்க்கை என்று நினைத்துவிட்டார்கள். அவர்களின் நினைப்பினால் நான் இழந்தவைகள் மிக அதிகம்.

என்னுடைய சிறுகதை முதன்முதலாக குமுதத்திலோ, குங்குமத்திலோ வெளிவந்திருக்கிறது. என்ன இப்படி ஏனோ தானோவென சொல்லுகின்றேன் என வியப்பாக இருக்கும். ஆனால் இதுதான் உண்மை. படிக்காமல் பத்திரிக்கைகளுக்கெல்லாம் கதை அனுப்புகின்றாயா என்று கேள்விகேட்டு மிரட்டினார்களே தவிற,. அதற்கு பாராட்டோ, அது எந்த பத்திரிக்கை என்பதையோ சொல்லவில்லை. அவர்களுக்கு ரூபாய் 500 மணியாடரில் வந்திருக்கிறது என்றுமட்டும் சொன்னார்கள். விடுதியிலிருந்து வந்து அந்த மணியாடரை கேட்கும் முன்பே அவர்கள் பணத்தினை வாங்கிவிட்டு அதை வங்கியிடம் சமர்ப்பித்திருந்தார்கள். நான் மிகவும் நொந்து போனேன். தினத்தந்தியில் என்னுடைய முதல் கவிதை பிரசுகமானது. எல்லையற்ற மகிழ்ச்சியில் வீட்டிற்கு சென்று தெரிவித்தபோது, எங்கே காட்டுபார்க்கலாம் என்று படித்துப் பார்க்க யாருமில்லை. வாழ்த்து சொல்வதற்கு ஆளில்லாமல் வெறுமையாகவே கழிந்தது பொழுது.

வலைப்பதிவுகள் மற்றவர்களின் அனுபவங்களின் புதையல்., அட இப்படி கூட நடந்திருக்கிறதா என உங்களுக்குத் தோன்றினால் அதுவே அந்த பதிவின் வெற்றி. அந்த அனுபவத்தினை உங்களுக்குப் பொறுத்திப் பார்த்து தவறுகள் நிகழா வண்ணம் திருத்திவிடுவீர்கள் என்பதால்தான் என்னுடைய சோகங்களையும், என் பெற்றோர்களின் தவறுகளையும் இங்கே சுட்டிக் காட்டியிருக்கிறேன். உங்களுடைய செல்லம் ஒரு கவிதை, ஓவியம் என்று எதை கிறுக்கினாலும், அதை மெருகேற்ற வைத்து உலகிற்கு சொல்லுங்கள். அவளுடைய திறமையை மதிப்பதே அவர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய மரியாதை. பள்ளியில் வழங்கப்படும் மதிப்பெண்களுக்காக அவர்களை முடமாக்கி விடாதீர்கள் என்பது என் கோரிக்கை.

கொஞ்சம் அதிகமாகவே புழுங்கிவிட்டேன் என தோன்றுகிறது. உங்களிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்ல இப்போதைய பிரட்சனை வேலையில்லை என்பதே. அதை சரிகட்டிவிட்டு உங்களை விரைவில் சந்திக்கிறேன். இது வரை ஊக்கமளித்துவந்த அனைத்து நண்பர்களுக்கும் என் பணிவான நன்றிகள்.

வணக்கம்.

சுஜாத்…ஆ…! – மின் நாவல் பதிவிரக்கத்துடன்

சுஜாதாவைப் பற்றிய எதிர்மறை விமர்சனங்கள் வைக்கும் நபர்கள் கூட, அவரைப்போல விஞ்ஞானத்தினை எளிமையாக்கும் கலை வேறெவரிடத்திலும் இருந்ததில்லை என்பதை ஒப்புக்கொள்வார்கள். அறிவியலை அசாதரணமாக கையாளும் வரம் பெற்றவர். சில விஞ்ஞான விசயங்களை எடுத்துச் சொல்லும் போது, சாதாரண மனிதர்களும் அதனை எளிதாக புரிந்து கொள்ளும்படி சொல்லுவார். அதை சுஜாதாவின் எழுத்துகளை படித்தவர்கள் உணர்வார்கள். இலக்கியவாதிகளுக்கு வசந்த் கதாபாத்திரம் வழியாக சொல்லப்படும் சில விசயங்கள் பிடிக்கவில்லை. ஜனரஞ்சக எழுத்தாளராக அதை புறக்கணிக்க வேண்டிய நிலையிலேயே சுஜாதா இருந்தார்.

அவருடைய அறிவியல் திறனை நான் உணர்ந்த நாவல் கணேஸ், வசந்த் வரும் ஆ..!. காதல், க்ரைம் என்று இரண்டு குதிரைகளில் மட்டுமே நிரம்பியிருக்கும் நாவல் உலகில் நிச்சயமாய் ஒரு மாற்று நாவல் இது. நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல பொண்டாட்டி, நல்ல ரசனை என்றெல்லாம் இருக்கும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் பூர்வ ஜென்மத்தின் மனிதர்கள் தலையிட்டால் என்ன நடக்கும்? என்பதுதான் கதையின் நாட். பூர்வ ஜென்மம் என்றெல்லாம் சொல்லும் கதையில் மூடநம்பிக்கைகள்தான் நிறைந்தி்ருக்க வேண்டும். ஆனால் கதையில் இருந்தது “குரல்”களைப் பற்றிய அறிவியல். அதுமட்டும்தானா என்கின்றீர்களா. இல்லை,..

தினேஸ்குமார் என்றொரு மென்பொருள் வல்லுனன். நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல பொண்டாட்டி, நல்ல ரசனை என்று நல்லபடியாக செல்லும் அவனுக்குள் ஒரு குரல் தற்கொலை செய்துகொள்ள சொல்கிறது. சில தற்கொலை முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. அதன்பின்பு அந்தக் குரல் அவனின் மனைவியை கொல்ல சொல்ல, அவனும் கொன்று விடுகிறான். அந்தக் குரலின் பின்னனியில் அவனுடைய முன் ஜென்மம் இருக்கிறது. இதை இந்த பகுத்தறிவு உலகம் நம்புமா. அவனின் நிலை என்ன என்பதே முழுமையான கதை.

சிலசமயங்களில் அப்போதுதான் நடக்கும் விசயங்கள் முன்பொருமுறை நடந்ததாக நினைவுக்கு வரும். வாழ்க்கையில் முதன்முறையாக பார்க்கும் சிலரை, நன்கு அறிமுகமானவர்கள் என்று நம்பத்தோன்றும். நம்முடைய வாழ்க்கையிலும் மிக அரிதாக அமானுஸ்யங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அமானுஸ்யங்கள் என்று சொல்கின்ற விசயங்களில் நான் மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள் என்னுடைய நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் ஏற்பட்டிருப்பதை அவர்களுடன் பேச்சுவாக்கில் உறுதி செய்திருக்கிறேன். இவற்றுக்கான விடையை சைக்காலஜி வழியாக தேடலாம் என்றாலும், அதை பெரிது படுத்தாமல் விட்டுவிடுவோம்.

நாம் மனசாட்சி என்று நம்புகின்ற ஒரு குரல் நமக்குள் எப்போதும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. பல சமயங்களில் உற்ற நண்பனாக இருக்கும் அந்தக் குரலை நம்பிதான், முக்கிய முடிவுகளை நாம் எடுக்கிறோம். அந்தக் குரலை நம்பிதான் தனிமையை விரட்டுகிறோம். (பிறவி செவிடர்கள் இந்த விசயங்களை எப்படி எதிர்கொள்கின்றார்கள் என்று நீண்ட காலமாகவே சிந்தனை இருக்கிறது. தெரிந்தவர்கள் சொல்லவும்). இந்தக் குரல் நமக்கு தவறான ஆலோசனை சொன்னாலும், அதையே செய்யவோம். அதே குரல் நம்மை தற்கொலைக்கு முயற்சிக்க வற்புறுத்தினால் நிச்சயமாக நாம் தப்பிக்கவே முடியாது. சரி… சரி இப்படியே போனால் நான் சைக்கியாட்ரிஸ்டுகளை பார்க்க நேரிடும். நாவலுக்குச் செல்வோம்.

நாவலில் நான் ரசித்தவை,…

1. ஒவ்வொரு பகுதியும் முடியும் போது ஆ என்று முடியும். சில இடங்களில் வலிய திணிக்கப்பட்டிருப்பது தெரிந்தாலும் பெரும்பான்மையான இடங்களில் இயல்பாக வரும். இந்த சிந்தனை எப்படி வந்தது என்று தெரியவில்லை. நாவலின் வித்தியாச தன்மையை இரண்டு அத்தியாங்களை படிக்கும் போதே உணர்ந்தேன்.

2. ஹிப்னாட்டிக்ரிக்ரெஷன், ரோர்ஷாக் டெஸ்ட், தீமாட்டிக் அப்ரிஸியேஷன் என்றெல்லாம் மருத்துவ அறிவியல் பெயர்கள் நாவல் முழுவதும் வியாப்பித்திருக்கின்றன. அவைகள் எதற்கானவை என்பது நாவலை படிக்கும் போதே புரிந்துவிடும்.

3. குரல் பிரட்சனையை ஆன்மீக ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் பிரித்து எழுதியிருப்பார் சுஜாதா. பாராஸைக்காலஜி, பாராநார்மல் என்று இயற்க்கைக்கு அப்பாட்ட விசயங்களின் ரகசியங்களை அறிய ஆன்மீகமும், விஞ்ஞானமும் போராடிக் கொண்டு இருக்கின்றன. ஆன்மீகத்தில் “கடவுள்” என்றொரு விடையை கொடுத்துவிட்டு அமைதியாக இருந்துவிடுகின்றார்கள். விஞ்ஞானத்திற்கு அது சாத்தியப்படுவதில்லை. எனவே தேடல் அங்கு இருந்து கொண்டே இருக்கிறது.

4. மென்பொருள்துறையின் தொழில் நுட்பத்தில் ஆரமிக்கும் நாவலில், மருத்துவ துறையின் தொழில் நுட்பத்தினை விவரித்து, இறுதியில் சட்டத்தின் தொழில் நுட்பங்களில் விளையாடியிருப்பார்.

5. இது வசந்த் சொல்லும் ஒரு ஜோக்,…
ஒரு பைத்தியக்காரன் தன் கை முஷ்டியை மூடிக்கிட்டு “என் கைக்குள்ள என்ன இருக்கு” ன்னு கேட்டானாம். அதுக்கு இன்னொரு பைத்தியக்காரன் “குஷ்பு”ன்னு சொன்னானாம். இவன் லேசா கண்ணை வெச்சுப் பார்த்துட்டு “ம், தப்பாட்டம்!. நான் வெக்கிற போது பார்த்துட்டே”ன்னானாம்.

6. முன் ஜென்மக் கதையும் அதன் கதாபாத்திரங்களும் மிகவும் அருமை. ஜெயலட்சுமி டீச்சரின் மீதான காதல், அவரை ஜெய்யூ என அழைக்கும் விதம், திருச்சியைச் சுற்றிய இடங்கள் என பார்த்து பார்த்து செதுக்கியிருப்பார்.

7. இந்தக் கதையை விகடனி்ல் தொடராக எழுதிக்கொண்டிருந்த போது, கதையின் நாயகன் நான் என்றொருவர் வந்திருக்கிறார். அவருக்கு கதையில் இருப்பதை போல குரல்கள் கேட்பதாக தொல்லை செய்திருக்கிறார்.

8. அதுமட்டுமல்லாமல் பல வாசகர்களும் இதுபோல குரல்கள் கேட்பதாகவும், அதற்கு தீர்வு தருமாரும் சுஜாதாவை அனுகியிருக்கின்றார்கள். அதுவும் 8ம் அத்தியாயம் ஆரமிக்கும் முன்பே. அவர்கள் எல்லோரையும் சைக்கியாட்ரிஸ்டுகளை பார்க்க சிபாரிசு செய்திருக்கிறார்.

9. இரண்டு மூன்று மாதங்களுக்கு முன் ஒருவன் அம்மாவைக் கொன்றுவிட்டு கடவுள் சிவன் சொன்னார், நான் கொன்றேன் என்று சொல்வதாக செய்திதாள்களில் வந்திருந்தது. இதுபோல விசித்திரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதற்காகச் சொன்னேன். பைத்தியக்காரத்தனம் என்று ஊடகங்கள் இந்த விசயத்தை பெரிது படுத்தாமல் போயிருக்கின்றன. இல்லையென்றால் நிச்சயம் புதுவகையான பிரட்சனைகளை எல்லோரும் அலசியிருப்பார்கள்.

10. கதையின் முடிவு, என்னால் யூகம் செய்து பார்க்க முடியாதபடி இருந்தது. ஏறத்தாள கதையை படித்து ஒரு மாதம் வரை எல்லா கதாபாத்திரங்களும் எனக்குள் வலம் வந்தன. காலப்போக்கில் எல்லாம் கரைந்தாலும் ஜெயலட்சுமி டீச்சர் மட்டும் மறையவே இல்லை.

நாவலை ஏற்கனவே படித்திருக்கும் நண்பர்கள் உங்களுடைய அனுபவம் எப்படி இருந்தது என்று சொல்லுங்கள். இனிதான் படிக்க வேண்டும் என்று சொல்லுபவர்கள் இங்கு சொடுக்கி நாவலின் மென்நூலை எடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த இடுகையை பி.டி.எப் கோப்பாக பதிவிரக்கம் செய்ய படத்தினை சொடுக்குங்கள்,…