ஆய்வென்பது இரு வகையானது, கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளைக் கொண்டது, அல்லது களத்தில் சென்று நேரடியாக தரவுகளை சேகாரம் செய்து அதனடிப்படையில் எடுக்கப்பெறும் முடிவு.
இரண்டாவது ஆய்விற்கு நேரடியாக களத்தில் சென்று ஆய்வு செய்யும் அறிவு வேண்டும். கல்வெட்டுகளை படித்தல், வரலாறுகளின் அடிப்படையில் கோயிலின் அங்கங்களை அறிந்திருக்கும் அறிவு அதற்குத் தேவைப்படும். கோயிலின் அங்கங்கள் குறித்தும், கல்வெட்டுகள் குறித்தும் போதிய அறிவு இல்லையென்பதால், ஏற்கனவே அதனை ஆய்வு செய்து வெளியிட்ட அறிஞர்களின் கருத்தினை எடுத்துக் கொண்டு அதனடிப்படையில் சில முடிவுகளை கூறுகிறேன். மிகவும் எளிமையாக எல்லோராலும் கூறிவிடக்கூடிய முடிவுகளை எதற்காக வலைதளத்தில் பதிவுசெய்ய வேண்டும்?. இந்த முடிவுகளை வைத்துக் கொண்டு மேலும் ஓர் படி ஆய்வினை நகர்த்த இயலும்.
சீனிவாசநல்லூர் வரலாறு –
முற்காலச் சோழர்களின் கலையம்சம் உள்ள இடம் சீனிவாசநல்லூர். மகேந்திரமங்கலம் எனும் ஊரானது சீனிவாசநல்லூருக்கு அருகே உள்ளது. இந்த மகேந்திரமங்கலம் என்பது முதலாம் மகேந்திரவர்மானால் உருவாக்கப்பட்ட ஊர் என்பதால் அதன் நீட்சி சீனிவாசநல்லூர் வரை இருந்திருக்கலாம். இங்குள்ள கோயிலின் மூலவரை குரக்குத்துறைப் பெருமானடிகள் என்று கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் கோயிலை திருக்கொருக்குத்துறை மகாதேவர் கோயில் என்றும் அழைத்துள்ளனர். இந்தக் கோயில் 10ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆதித்த சோழனால் கட்டப்பட்டது. அதன் பிறகு பராந்தகன் கண்டராதித்தர், ராஜராஜன் ஆகியோர் இக்கோயிலுக்கு வந்துள்ளனர். அவர்களின் கல்வெட்டுகள் உள்ளன.
கோயில் அமைப்பு –

நவீன கோயில்களைப் போல மிகவும் சிறியது. கருவறையும் அதனை ஒட்டிய நீட்சியான அர்த்தமண்டபமும் மட்டுமே நமக்கு எஞ்சியுள்ளன. இதனுடைய அருகே சண்டிகேசருக்கு நிச்சயமாக ஒரு சன்னதி இருந்திருக்க வேண்டும். மற்படி அம்மன் சன்னதி, கன்னி விநாயகர், வள்ளி தெய்வானை முருகன் என இப்போது காணும் சிவாலய அமைப்பு இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் தஞ்சைப் பெரியக் கோயிலைக் கட்டிய ராசராச தேவரே இந்த மூலவரையும், சண்டிகேசரையும் மட்டும் தான் அமைத்தான் என்று கூறிகிறார்கள். மகன் காலத்திலேயே இல்லையென்றால் அப்பா எப்படி கட்டியிருப்பார்.
ஆனால் இக்கோயில் கல்வெட்டில் சிறீபலிபூசை எனும் பலிபீடத்திற்கு செய்யப்படும் பூசை குறித்து இருந்த தகவல்களைப் பெற்றிருக்கிறார்கள். அதன் படி அட்ட திக்கு பாலகர்களுக்கு இந்த பலிபூசை கொடுக்கப்படுகிறது. உடன் ஈசன் பலி கொள்ளும் தேவர் என்றோ, அஸ்திரதேவராக வந்து பங்கு கொண்டிருக்கிறார். அதனால் கோயிலுக்கு முன்பு அமைக்கப்பட்ட கோபுரத்திலும், திருச்சுற்றிலும் அட்டதிக்கு பாலகர்கள் இருந்திருக்கலாம். சுகாசனர், பிரம்மா, தட்சிணாமூர்த்தி ஆகியோரின் திருவுருவங்களே இருக்கின்றன.
சிறிய வடிவங்களில் நடனமாடும் நங்கைகளும், இசைக்கும் புதகணங்களும், குறும்புகளும் பதிவாகியுள்ளன. சிவபெருமானின் கரிதோல் உரித்த பெருமான் மற்றும், ஊர்த்தவ தாண்டவ சிற்பங்கள் மிகவும் சிறிய அளவில் நயத்துடன் உள்ளன. இவ்விரண்டிலுமே அம்மை பயந்த நிலையில் இருப்பதால் சைவத்தோடு அம்மனையும் இணைத்த காலத்திற்கு பிறகானது என்பதையும் நினைவில் கூற வேண்டும்.
அப்படியானால் அம்மையும் அப்பனும் சரிபாதியாய் சரீரத்தினை பகிர்ந்த அர்த்தநாரீசுவரோ, திருமாலும் பிரம்மாவும் காண இயலாமல் தவித்த லிங்கோத்பவரோ கோயிலின் பின் பக்க கோஷ்டத்தில் அமைந்திருக்க வேண்டும். ஆனால் அவ்விடத்தில் சிறு துணுக்கு இல்லாமல் செய்துவிட்டார்கள். தற்போது வெற்றிடமாக இருக்கிறது. ஆமாம் வெற்றிடம் தானே நடராசத் தத்துவம். 🙂
இக்கோயிலின் மூலவர் விமான அமைப்பினைக் கொண்டு மணிக் கோயில் என்ற வகையிலானது என்கிறார்கள்.
யாரிந்த குரங்கு?
காவேரி நதிக்கரையில் அமைந்திருக்கும் இக்கோயின் நாதன் குரங்குநாதன் என்றால் ஏன் அப்பெயர் ஏற்பட்டது. நிச்சயமாக ஒரு குரங்கு வந்து வழிபாடு செய்திருக்க வேண்டும். யார் அந்தக் குரங்கு?
குரங்கினை நாம் எங்கு பார்த்தாலும் அடிமனதிலிருந்து ஒரு பெயர் எழும் அது மாருதி. ஒரு வேளை மாருதி வழிபாடு செய்திருப்பாரா. இருக்காது. ஏனென்றால் இராமாயணம் நன்கு தெரிந்தவர்களுக்கு அனுமான் சிவ அம்சம் என்பது தெரிந்திருக்கும். அத்துடன் இராமாயணத்தில் அனுமன் இராமனை மட்டுமே தெய்வமாக வணங்கும் குணம் கொண்டவர். அதனால் முதல் யோசனை தோல்வி.
சரி. குரங்கு என்றால் அனுமார்தானா. இராமாயணத்தில் பெரிய வானர இனமே அல்லவா சொல்லப்பட்டிருக்கிறது. அதில் யாராவது வணங்கியிருக்கலாமே. ஆமாம் வாய்ப்புள்ளது. அது யாராக இருக்க கூடுமானால், வானர இனத்தில் மிகுந்த சிவபக்தியைக் கொண்டவராக இருக்க வேண்டும். அவர் வணங்கியமைக்காகவே சிறப்பு பெற்றதாக சோழர்கள் கற்றளி அமைத்திருக்க வேண்டும். அத்தனை சிறப்பு மிக்க சிவபக்த குரங்கு யார்?
வேறு யார் வாலி. யாராலும் சமம் செய்ய இயலாத வலிமை பெற்றவன். சிறந்த சிவபக்தன். சரி.. வாலியே சிறந்த சிவபக்தன் என்றாலும் நம்மால் எவ்வாறு வாலி என்று உறுதியாக கூற முடியும். நம்மால் உறுதியாக கூற முடியவேண்டுமானால் கல்வெட்டில் வாலியைப் பற்றி குறிப்பு இருக்க வேண்டும். ஆனால் நம் போதாத காலம் அது இல்லை. எனவே அருகில் இருக்கும் ஊர்களில் உள்ள சிவாலயங்களை கவனத்தில் கொள்வோம்.
எங்கள் காட்டுப்புத்தூருக்கு அருகே இருக்கும் சீறிராமசமுத்திரம் எனும் அயிலூரில் உள்ள சிவாலயத்தின் பெயர் “வாலீசுவரர்” கோயில் என்பதாகும். அத்தலத்தில் வாலி காசியிலிருந்து கொண்டுவந்த லிங்கம் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. அடுத்தது, அருகே இருக்கும் மாவட்டமான கரூரில் இருக்கும் திருமுக்கூடலூர் சிவாலயத்தின் வரலாறும் வாலியை சுட்டுகிறது. அங்குதான் முதலில் வாலி தன்னுடைய சிவலிங்கத்தினை அமைக்க வேண்டும் என எண்ணி வந்தார். ஆனால் அதற்கு முன்பே மணலில் அகத்தியர் லிங்கம் செய்து பூசை செய்துவிட்டார். வாலிக்கும் அகத்தியருக்கும் சண்டை உண்டாக, அகத்தியரோ தன்னுடைய மணல் லிங்கத்தினை எடுத்துவிட்டு முடிந்தால் வாலி கொண்டுவந்த லிங்கத்தினை வைத்து வழிபாடு செய்யுமாறு கூறியுள்ளார். வாலி அந்த மணல் லிங்கத்தினை அசைக்க முடியாமல் போக, அங்கிருந்து சீறிராமசமுத்திரத்தில் தன்னுடைய லிங்கத்தினை வைத்துப் பூசித்தார் என்று கூறப்படுகிறது. இந்த வரலாறுகளின் அடிப்படையில் வாலியே இத்தலத்தில் சிவபெருமானை பூசித்திருக்க வேண்டும் என்று கொள்ளலாம்.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...