ஜோடியாக்(zodiac) – கொலையும் கலையும்

1960களிலின் இறுதியிலிருந்து 1970கள் வரை அமெரிக்காவின் கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோ மாகானத்தினை கதிகலங்க வைத்துக்கொண்டிருந்த பெயர் – ஜோடியாக்(zodiac). இது தொடர் கொலைகாரன் தனக்குத்தானே வைத்துக் கொண்ட பெயர். மக்கள் வைத்த பெயர் – ஜோடியாக் கில்லர். எத்தனையோ தொடர் கொலைகாரர்கள் இருக்கும் போது கொலையும் கலையும் தொடரில் ஏன் ஜோடியாக் பற்றி முதன்முதலாக சொல்கின்றேன் என்பதை,.. இந்த இடுகையை முழுமையாக படிக்கும் போது புரிந்து கொள்விர்கள்.

ஜோடியாக் கடிதங்கள் –

1961 வது வருடம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி, Vallejo Times Herald, San Francisco Chronicle, The San Francisco Examiner என்ற மூன்று பெரிய செய்திதாள் நிறுவனங்களுக்கும் ஒரு கடிதம் வந்தது. அதில் மிக சமீபத்தில் நடந்தேரிய இரண்டு கொலை சம்பவங்களையும் தானே செய்ததாகவும், ஒவ்வொரு கொலையிலும் குண்டுகள் உபயோகித்தது முதல், இறந்தவர்களின் ஆடைகள் வரை விவரமாக எழுதப்பட்டிருந்தது. ஆனால் பெயருக்கு பதிலாக cipher எனப்படுகின்ற ஒருவகை மாற்றுமொழியில் எழுதப்பட்ட கடிதமும் இணைக்கப்பட்டிருந்தது. அதனை முதல் பக்கத்தில் வெளியிட வேண்டும் என்றும் தவறினால், மக்கள் கொல்லப்படுவார்கள் என்றும் எழுதப்பட்டிருந்தது.

ஒரு வழியாக அந்த cipherக்கான விடையை கண்டுபிடித்தார்கள். ஆனால் அதை படிக்கும் போது உறைந்து போனார்கள். அக் கடிதம் ” நான் மக்களை கொல்ல ஆசைப்படுகிறேன். ஏனென்றால் அது மிக்க மகிழ்ச்சியை கொடுக்கின்றது” என்று ஆரமிக்கப்பட்டிருந்தது. அதைப் படிக்க படிக்க கடிதத்தினை எழுதிய நபர் சாதாரண ஆள் அல்ல என்பதை புரிந்துகொண்டார்கள். பின் ஆகஸ்ட் 7, 1969ல் மீண்டும் ஒரு கடிதம் வந்தது. அதில் “This is the Zodiac speaking” என்று தனக்குதானே சூட்டிக் கொண்ட பெயரை முதல்முதலாக அந்த கொலையாளி பதிவு செய்திருந்தான். அத்துடன் முன்பு நடந்த மூன்று கொலைகளுக்கும் தானே பொறுப்பேற்று. அதன் அதிகமாக குறிப்புகளையும் கொடுத்திருந்தான். ஆனால் வேறு எந்த இடங்களிலும் உண்மையான பெயரினை அவன் பதிவு செய்யவே இல்லை என்பது அதனுடன் இணைக்கப் பட்டிருந்த இன்னொரு cipherன் புதிரை விடுவிக்கும் போதுதான் தெரிந்தது.

Berryessa சம்பவம் –

Berryessa ஏரிக்கருகே பிக்னிக் சென்றிருந்த ஜோடியை ஜோடியாக் செப்டம்பர் 27, 1969ல் தாக்கினான். உல்லாசமாக இருந்த ஜோடியை கட்டிபோட்டுவிட்டு, கைகளில் துப்பாக்கி இருந்தும் கத்தியால் குத்திக் கொன்றான். இந்த சம்பவத்தில் மூலம் அவனுடைய உருவம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்கா முகமூடி அணிந்திருந்தான். மார்பில் ஒரு குறியீடு இருந்தது. அது ஜோடியாக் என்ற கைகடிகார நிறுவனத்தின் குறி்யீடோடு ஒத்துப்போனது பின் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இடத்திலிருந்து சுமார் 500 அடி தொலைவில் இங்கிருந்து திருடப்பட்டிருந்து கார் கதவில் “Sept 27 69 6:30 by knife” என்று குறிப்பிட்டுவிட்டு சென்றிருந்தான்.

தொடர் கொலைகளாலும், அதற்கடுத்து வரும் கடிதங்களாலும் நகரமே கதிகலங்கிப் போயிருந்தது. சான் பிரன்சிஸ்கோ காவல்துறை வரைபடமாக அவனின் உருவத்தினை வரைந்து வெளியிட்டது. இருப்பினும் தேடல்கள் ஓயவில்லை. இதற்கு மத்தியில் அக்டோபர் 11, 1969ல் மீண்டும் ஒரு கொலை நடந்தது. இந்த முறை ஜோடிகள் இல்லை, டாக்ஸி ஓட்டுனர் பலியாகியிருந்தார். பயணியாக டாக்ஸியில் ஏறிய கொலைகாரன். ஒரு தெருவில் ஓரமாக டாக்ஸியை நிறுத்த சொல்லி, பின்னால் அமர்ந்து கொண்டே தலையில் சுட்டிருக்கிறான்.

இந்தக்கொலை நடந்தபோது அதைக் கண்டவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இரண்டாவது வரைபடம் தயாரிக்கப்பட்டது. காவல் அதிகாரிகள் சந்தேகத்திற்கு இடமானவர்களை விசாரித்தனர். இரண்டு அதிகாரிகள் இந்த வழக்கிற்காக தனியாக நியமிக்கப்பட்டார்கள். அதன் பிறகும் கொலைகளும், கடிதங்களும் நிகழந்து கொண்டே இருந்தன. அவைகள் அனைத்தையும் விரிவாக கூறினால், கொஞ்சம் போர் அடிக்கும். எனவே அடுத்த விசயத்திற்கு செல்லுவோம்.

யார் ஜோடியாக் –

சான் பிரான்ஸிஸ்கோ காவல் அதிகாரிகள் நிறைய பேரை சந்தேகப்பட்டனர். அவர்களில் முக்கியமாக கருதப்பட்ட நபர்கள் மட்டும் ஏழு பேர்.

  1. Arthur Leigh Allen
  2. Bruce Davis
  3. Lawrence Kane
  4. Michael O’Hare
  5. Richard Marshall
  6. Ted Kaczynski
  7. Robert Hunter

இதில் Arthur Leigh Allen தான் ஜோடியாக் என கருதிய காவல்துறை செப்டம்பர் 27, 1974ல் கைது வாரண்ட் கொடுத்தது. மற்றவர்களை விட அதிக சாதகமான விசயங்கள் Allen னிடம் இருப்பதாக காவல்துறை கருதியதே காரணம். அதனை தவறு என்று சிலர் கருதினார்கள். Allenன் கைரேகை ஜோடியாக்கோடு ஒத்துப்போகவில்லை. ஆனால் காவல்துறை ஏற்கவில்லை. அதற்கு காவல்துறையிடம் இருந்த சில ஆதாரங்களே காரணம். உதாரணத்திற்கு ஒன்று நவம்பர் 9, 1969ல் வந்த கடிதத்தில் ஜோடியாக் தனது பேஸ்மென்டில் வெடிகுண்டு இருப்பதாக குறிப்பிட்டிருந்தான். பிப்ரவரி 1991ல் Allen வீட்டின் பேஸ்மென்டில் வெடிகுண்டுகளை காவல்துறை கைப்பற்றியது போன்றவை.

ஆனால் 2002ல் நடந்த DNA சோதனையில் Allenனுடைய DNA ஒத்துப்போகவில்லை. ஆனால் இந்த மகிழ்ச்சியை கொண்டாட Allen உயிரோடு இல்லை. அவர் ஆகஸ்ட் 26, 1992லேயே மரணமடைந்துவிட்டார். ஜோடியாக் cipher கடிதங்கள் சில தீர்க்கப்படாமலேயே இருப்பதைப் போல இந்த வழக்கும் தீர்க்கப்படாமல் இருக்கிறது.

இதன் பாதிப்பில் ஏகப்பட்ட நாவல்களும் ஐந்து திரைப்படங்களும் வந்துள்ளன. அவ்வளவு ஏன் டி.சர்டுகளில் ஜோடியாக் cipher பதிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். வழக்கில் ஆர்வமிருந்தால் cipherக்கான விடையை கண்டுபிடித்து எப்.பி.ஐக்கு அனுப்புங்கள் நண்பகர்களே!…

நன்றி –
wikipedia

zodiackiller.com

கொலைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் – கொலையும் கலையும்

சமீபத்தில் வந்துள்ள மர்டர்-2 சக்கை போடு போட்டுக்கொண்டுப்பதாக அலுவலகத்தில் பேசிக் கொண்டார்கள். அது தொடர் கொலையை மையப்படுத்தி வந்துள்ள படம் என்பதை அறிந்தேன். கடந்த இரண்டு நாட்களாக வேலை சுமை குறைந்து போனதால், நெடுநாட்களுக்கு முன் “கொலையும் கலையும்”க்காக சேகரித்த தகவல்கள் ஞாபகத்திற்கு வந்தன. அதுவே இந்த இடுகைக்கு காரணம்.

தொடர் கொலைகளைப் பற்றியும், அதைச் செய்பவர்கள் பற்றியும் நமக்கு பல தகவல்கள் தெரியும். அன்றைய ஆட்டோ சங்கர் முதல் இன்றைய சைக்கோ மனிதன் வரை நம்முடனே நிறைய மனிதர்கள் அவர்களாக இருந்திருக்கின்றார்கள். கொலைகாரர்கள் என்றால் இவர்கள் மட்டுமா. இல்லை கொலைகள் இந்த விதத்தில் மட்டுமா நடந்துள்ளன. எல்லாவற்றைப் பற்றியும் சிறு பார்வை பார்த்துவிடுவோம்.

தற்கொலை –

எப்பொழுது மனிதனின் கடைசி நம்பிக்கை தகர்க்கப்படுகிறதோ அப்போது, நிகழும் பெரும் துயரம் இந்த தற்கொலை. பல தற்கொலைகள் துயரத்திலிருந்து தன்னை தற்காத்துகொள்ளும் கேடயமாக எண்ணி நிகழ்ந்தவை. சில மட்டும் வெறுப்பினால், மாறாதுயரத்தினால், தியாகத்தினால் நிகழ்ந்தவை. உண்ணாநோம்பால் உயிர் துறந்தாலும், பசியின் கொடுமை தாளாமல் உயிர் மாய்த்துக் கொண்டாலும் தற்கொலைதானே.

கொலை –

தன் உயிர் அல்லாமல் பிற உயிர்களை அழிக்கும் இந்த செயலில், வன்மமும், கொடூரமும் அதிகளவு கலந்திருக்கின்றன. தன்னை தற்காத்துக் கொள்ள செய்யும் கொலைகளிலிருந்து, பொழுதுபோக்கிற்காக செய்யும் கொலைகள் வரை ஆயிரமாயிரம் வகைகள் உள்ளன. சின்ன சின்ன கொலைகளையெல்லாம் விட்டு விட்டு கொஞ்சம் பெரிய கொலை அறிந்து கொள்ள செல்வோமானால், நிச்சயம் உடல் நடுங்கத்தான் செய்யும்.

தொடர் கொலை –
கோபத்தினாலோ, கொள்கைக்காகவோ, கொலை செய்யும் சுகத்திற்காகவோ, பணத்திற்காகவோ, பிறர் கவணத்தினை ஈர்ப்பதற்காகவோ இந்த தொடர் கொலைகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. பெரும்பாலும் ஒரே ஒரு மனிதனால் ஒன்றுக்கும் மேற்பட்ட மனிதர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுவதை தொடர் கொலைகள் என்கிறோம். இந்த தொடர் கொலைகளில் இருக்கும் பொதுத்தன்மை குறித்தே பல சந்தேகங்கள் இருந்தாலும், கொல்லப்படுகின்றவர்கள் ஒரே பாலினத்திலோ, ஒரே வேலை செய்பவராகவோ, ஒரே வயதுடையவராகவோ இல்லை ஏதாவது ஒரு வகையில் ஒற்றுமையுள்ளவர்களாகவே இருக்கின்றார்கள். இந்த கொலைகள் நடக்கும் காலத்தினை cooling-off period என FBI குறிப்பிடுகிறது.

அதிக மக்களை கொல்லுதல் –
மிகக் குறுகிய காலத்தில் அதிக மக்களை கொல்லும் முறை இது. இவை தனிமனிதன் மூலமாகவோ இல்லை ஒரு கும்பலினாலோ செய்யப்படுகிறது. மிக எளிமையாக சொல்வதென்றால் எப்போதும் இந்தியாவில் நிகழும் குண்டு வெடிப்புகள். சில சமயங்களில் தனியொரு மனிதனாலும் இவை நிகழ்கின்றன. வெளிநாடுகளில் படிக்கும் மாணவன், தன் கல்லூரியில் கண்ணில் படுபவர்களையெல்லாம் சுட்டு வீழ்த்திவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான் என்பதைப் போன்ற செய்திகள் உங்களுக்கு ஞாபகம் வரலாம். அவையெல்லாம் இந்த வகையினைச் சார்ந்தவையே.,

ராம்பேஜ் கில்லர்ஸ் என்று சிலரை குறிப்பிடுகின்றார்கள், இவர்களுக்கும் தொடர் கொலைகார்களுக்கும் உள்ள வித்தியாசம் அவர்கள் குறிப்பிடும் cooling-off period நேரம் மட்டுமே!… இப்படி பல வகையான கொலைகள் இருந்தாலும், தொடர் கொலைகளைப் பற்றியும், அதன் சுவாரசியான அறிவியல் முடிச்சுகள் பற்றியும் இனி வரும் இடுகைகளில் பார்க்க இருக்கிறோம். இது முன்னுரை மட்டுமே…

ரத்தம் தெறிக்கும்!…

கொடூர கொலைகாரிகள் – மகளிர்தின மறுநாள் ஸ்பெசல்

அன்னை தெரசாவில் ஆரமித்து ஆட்டுக்குட்டி வளர்க்கும் பெண்கள் வரை நேற்று மகளிர் தினத்திக்காக வலைப்பூக்களில் புகழ்ந்துவிட்டார்கள். ஆனால் கொலைகளை கலைகளாக ரசித்து செய்பவர்களிலும் பெண்கள் இருக்கின்றார்கள் என்பதை மறந்துவிட்டார்கள். அகி்ம்சைக்கு காந்தி என்பது போல அராஜகத்திற்கு ஹிட்லர் என்பது ஆணாதிக்கம் அல்லவா ?. அதனால் மகளிர்தின மறுநாள் ஸ்பெசலாக அவர்களை நினைகூறுவோம்.

பூலான் தேவி –

இந்தம்மாவுக்கு மூன்று கணவன்கள். பால்ய விவாகம் செய்து அடிக்கடி தொல்லை கொடுத்த கணவனை பிரம்பால் அடித்து வெறியை தீர்த்துக்கொண்டாள். பிறகு கொள்ளைக்காரியாக மாறி பலரு்க்கும் தொல்லை கொடுத்து வந்தவள், 1981ல் ஒரு கிராமத்தில் உள்ள 22 மனிதர்களை கொலை செய்தாள். இந்தியாவின் அதிகபட்ச தனிநபர் பெண் கொலையில் இதுவும் ஒன்று. பிறகு சிறையில் இருந்து, பொதுமன்னிப்பு கேட்டு என்னதான் அரசியல்வாதியாக மாறினாலும், இவளால் பதிக்கப்பட்டவர்களே இவளை கொலைசெய்தனர். மேலும் அறிந்து கொள்ள இங்கு சொடுக்குங்கள்.

பெல்லே குன்னேச்ஸ் –

படத்தைப் பார்த்தவுடனே, அடடா பாசமிகு தாய் என எண்ணிவிடாதீர்கள். இந்தம்மா கொலைசெஞ்சதே இந்தக் குழந்தைகளையும்தான். இதுக்கூட குடும்பம் நடத்தின பாவத்திற்கு இரண்டு புருசன்மார்களையும் சேர்த்து போட்டு தள்ளிருக்கு இந்த அம்மா. 1900 லிருந்து 1908 வரைக்கும் 40 பேரை நாக் அவுட் செய்திருக்கிறாள் என்கிறார்கள். மேலும் அறிந்து கொள்ள இங்கு சொடுக்குங்கள்.

கதேரினே நைட் –

இந்தம்மாவுக்கு நாளு புருசன், நாளு குழந்தை. இவுங்க சின்ன வயசா இருக்கரப்ப பல கொடுமைகளை அனுபவச்சிருக்காங்க. அதுக்கு பதிலடியா வளர்ந்ததுக்கப்புறம் இவங்க கொலை செஞ்சிருக்காங்க. ஒரு முன்னாள் கணவனை கொலை செய்து சமையல் செய்திருக்கிறாள். அடுத்த கணவனை 37முறை குத்தி அவன் தோலை உரித்து தொங்க விட்டிருக்கிறாள், தலையை தனியாக வெட்டியிருக்கிறாள். இப்போது சிறையில் இருப்பதால், இவளைப் பற்றி இத்தோடு முடித்துக் கொள்வோம். இல்லையென்றால், எழுதிய என்னையும், படிக்கும் உங்களையும் உயிருடனே வேகவைத்தாலும் வைத்துவிடுவாள்.மேலும் அறிந்து கொள்ள இங்கு சொடுக்குங்கள்.

எலிசபெத் பதொரி –

இந்தம்மா பிறந்தது கி.பி.1560 ஆக இருந்தாலும், மக்கள் தொகையை குறைக்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் கொலைகள் செய்ய ஆரமிச்சது, கி.பி.1590 வாக்கில்தான். புருசன் உயிரோடு இருக்கும் வரை சாதாரண பெண்மணியாக இருந்தவள், அவன் இறப்பிற்கு பிறகு நூற்றுக்கணக்கான பெண்களை கொலை செய்திருக்கிறாள். குளிப்பதற்கு தண்ணீர் கிடைக்கவில்லையோ என்னவோ, இறந்தவர்களின் ரத்தத்தினாலேயே குளித்திருக்கிறாள். 1610ல் இந்த தொடர் கொலைகள் முடிவுக்கு வந்தன. இடைப்பட்ட இருபது ஆண்டுகளில் தோராயமாக 650 கொலைகளை செய்து வரலாற்றில் முதல் இடத்தில் இருக்கிறாள். மேலும் அறிந்து கொள்ள இங்கு சொடுக்குங்கள்.

சிலுவை – கொலையும் கலையும்

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். சென்ற வருடத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை திரும்பி பார்க்க நம் தயாராக இருக்கிறோம். அதற்கு வருங்காலத்தினை நன்முறையில் அமைக்க முடியும் என்பதே காரணம். அதே சிந்தனையின் அடிப்படியில் இது வரை மனிதஇனம் நடந்தி வந்துள்ள சில விஷயங்களை ஒரு தொடராக தர உத்தேசித்திருக்கிறேன்.

கோவையில் பள்ளி குழந்தைகளை கடத்தி கொடூரமாக கொன்ற மோகன்ராஜ் கடந்த நவம்பர் மாதம் 9ம் தேதி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அன்று தீபாவளிபோல பட்டாசுகள் வெடித்து கொண்டாடினார்கள் மக்கள். மோகன்ராஜ் என்கௌன்டர் சரியா தவறா என்றெல்லாம் பேசாமல் நாம் கவனமாக பார்க்க வேண்டியது மக்களின் மகிழ்ச்சியை. ஒருவனின் இறப்பை கொண்டாடவும், ரசிக்கவும் மக்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தயாராகி விட்டார்கள். இந்த ரசனையும், கொண்டாட்டமும் நாளுக்குநாள் தீவிரமாகிக் கொண்டே செல்கிறது. இந்த ரசனை நல்லதோ கெட்டதோ, அது அறிவியலை வளர்த்திருக்கிறது. அந்த அறிவியலைப் பற்றயதே இந்த கொலையும் கலையும்.

சிலுவை –
உலகிலேயே வேறெந்த கொலைக் கருவிக்கும் கிடைக்காத பெருமை சிலுவைக்கு கிடைத்துள்ளது. மிகப் பெரிய மதத்தினை குறிக்கின்ற சின்னமாக பார்க்கப்படுவதும், புனிதமாக கருதப்படுவதும் மிகவும் வியப்பானது. ஒரு குழந்தை கூட வரைந்துவிடும் அளவிற்கு மிக எளிமையாக இருப்பது அதன் இன்னொரு பெருமை. இத்தனை சிறப்புகள் இருந்தாலும் சிலுவையின் அறிவியல் விசித்திரமானது.

வடிவம் –

சிலுவை இரண்டு கோடுகள் 90° கோணத்தில் ஒன்றை ஒன்று வெட்டிக் கொள்ளவது போன்ற அமைப்பு. + குறி அதன் செங்குத்தான கோடு கீழ்புறமாக நீண்டது போல十 தோற்றமளிப்பது சிலுவையின் நிறைவான வடிவம். தண்டனைக்கான சிலுவையின் செங்குத்தான பகுதி 12 அடி உயரமானது. கிடைமட்ட பகுதி 6லிருந்து 8 அடிவரை இருக்கலாம். செங்குத்தான 12 அடியில் 4 அல்லது 3 அடி நிலத்தினுள் வைக்கப்படும். மிகவும் அதிகமாக சிலுவை தண்டனை நிறைவேற்ற செங்குத்தான பகுதி அப்படியே நிரந்தரமாக மண்ணில் புதைக்கப்பட்டு கிடைமட்ட பகுதி மட்டும் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும். ரோம் நகரில் T வடிவத்தில் சிலுவை இருந்ததாக வரலாறு சொல்கிறது.

சிலுவையில் அறைதல்–
சிலுவையின் கிடைமட்ட பகுதியையும் தண்டனைக்கு உள்ளாகப்பட்ட கைதியின் கைகளையும் இணைக்க ஆணிகள் அடிக்கப்படும். சில சமயங்களில் கையிறுகளும் பயன்பட்டிருக்கின்றன. உள்ளங்கையில் ஆணி அடிக்கப்படுவதால் மனிதனின் முழு எடையையும் தாங்காமல் சில சமயங்களில் கைகள் பிய்த்துக் கொள்ள நேரிடலாம் என்பதால், மணிக்கட்டுக்கு அருகே எலும்பின் பிளவுகளிலும் ஆணி அடித்திருக்கின்றார்கள். சிலுவையின் செங்குத்தான பகுதியையும் கால்களையும் இணைக்க இரண்டு முறைகளை பயன்படுதியிருக்கின்றார்கள். ஒரு முறையில் கால்களை ஒன்றின் மீது மற்றொன்றை வைத்து ஆணி அடிப்பது. அடுத்தது சிலுவையின் பக்கவாட்டில் கால்களை வைத்து ஆணி அடிப்பது.


இப்படி சிலுவையையும் கைதியையும் முழுமையான இணைத்த பின்னர், சூரியன் உதிக்கும் திசையை நோக்கி நிறுவி விடுவார்கள். கைதிக்கு வெகுவிரைவில் களைப்பு ஏற்பட இம்முறை பயன்படுகிறது. சிலுவையை தெருநெடுகிலும் தூக்கிக் கொண்டு வர செய்வதும், சாட்டையால் அடிப்பதும் சோர்வினை விரைவில் தர செய்யும் செயல்கள். தண்டனைகளுக்காக அதிக கைதிகள் காத்திருக்கும் போது சிலுவை சுமக்க சொல்வது இல்லை. அதற்கு பதிலாக சிலுவையில் அறைப்பட்டபின் ஈட்டியால் காயம் ஏற்படுத்தினார்கள்.

மரணம் நிகலும் முறை –

உடலில் ஏற்படும் நீர்ப் பற்றாக்குறையும், ஆணிகள் மற்றும் ஈட்டியால் குத்தப்பட்ட இடங்களில் இருக்கும் வலியும் கைதிக்கு மிகவிரைவில் சோர்வை தருகின்றன. வெளியேருகின்ற ரத்தமும் தன் பங்கிற்கு சோர்வைதர, சிலுவையில் தொங்கும் நிலையை கைதியால் சமாளிக்க முடியாது. அது நுரையீரலை சரிவர இயங்க முடியாமல் செய்து மரணத்தினை நிகழ்விக்கிறது. சிலுவையில் அறையப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மூச்சடைப்பு ஏற்பட்டே இறந்திருக்க கூடும் என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். சிலர் ரத்த சுழற்ச்சிக்கு போதுமான நீரின்றியும் இறந்திருக்கலாம் என்றும் சொல்லுகின்றனர். ரத்த சுழற்சி நடக்காது போது மாரடைப்பு நிகழும் வாய்ப்புகள் அதிகம்.

இன்று கோடிக்கணக்கான மக்கள் தெய்வமாக வழிபடும் ஏசு பிரான், ஒரு காலத்தில் இந்த துன்பங்களையெல்லாம் அடைந்து இறந்து போயிருக்கிறார். அந்த இறப்பினையும் சிலர் ரசித்து கொடுத்திருக்கின்றார்கள், அங்கிருக்கும் மக்கள் கொண்டாடியிருக்கின்றார்கள். எல்லா காலங்களிலும் தண்டனைகள் கொண்டாடும் மக்கள் இருந்திருக்கின்றார்கள், என்பதற்கு ஏசுவே சாட்சி. இரண்டு மரத்துண்டுகள் மூலம் மனிதனுக்கு கொடுத்திருக்கும் உடல்சார்ந்த வேதனையைக் கற்பனை செய்து பார்ப்பதே இயலாது. இது தொடக்கமே!. மனிதனின் ரத்த வெறி வரலாறெங்கும் தெறித்து இருக்கிறது.

ரத்தம் தெறிக்கும்!…

நன்றி –
http://en.wikipedia.org/wiki/Death_of_Jesus
http://ta.wikipedia.org/wiki/இயேசுவின்_சாவு
http://dsc.discovery.com/