ஆயிரத்தி்ல் ஒருவன் – பாகம் 4

31. 1933 – 34 ஆண்டுகளில் எம்.ஜி.ஆர் காங்கிரசில் உறுப்பினராக சேர்ந்தார். அவர் காந்தியவாதியாகவும், காந்தியை நேசிப்பவராகவும் எப்போதும் இருந்தார். “புத்தன், ஏசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக?” என்று பாடியவருக்கு, புத்தர், ஏசுவை விட காந்தியை மிகவும் பிடிக்கும். “காந்தி மாதிரி ஒரு மகானைப் பார்த்தது இல்லை. இயேசுவும், புத்தரும் கூட மதத்தைத்தான் பரப்பினார்கள். ஆனால், காந்தி ஒருவர்தான் அரசியலை நேர்மையோடு நடத்தினார்” என்பார்.

32. 1930ம் ஆண்டு வாக்கில் காரைக்குடியில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நாடகத்தில் எம்.ஜி.ஆர் நடித்துக்கொண்டிருந்த சமயம். காந்தியடிகள் காரைக்குடிக்கு வருகைதந்தார். அப்போது காந்தியை முதன்முதலாக பார்த்ததாக எம்.ஜி.ஆர் தெரிவித்திருக்கிறார்.

33. “காந்தியக் கொள்கைகளை முழுவதுமாக கடைபிடித்த தலைவர் அண்ணா மட்டுமே. அவருடைய புத்தகங்களை படித்தேன். அவருடைய நியாயமான கோரிக்கைகள்தான், தமிழகத்திற்கும், இந்திய துணை கண்டத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்ற காரணத்தால் தி.மு.கழகத்தில் சேர்ந்தேன்.” என்று தி.மு.கவில் இணைந்த போதும் காந்திய கொள்கையில் பற்றுள்ளவராகவே இருந்தார்.

34. காந்தியடிகளின் பல்வேறு கொள்கைகளை தன்னுடைய வாழ்க்கையில் கடைபிடித்தார் எம்.ஜி.ஆர். அதிலொன்று கதர் சட்டை உடுத்துதல். நாடக நடிகராக இருந்த பொழுதிலிருந்து கதர் மீது பாசம் கொண்டவராக இருந்தார் எம்.ஜி.ஆர். இளம் வயதில் அணிந்திருந்த துளசிமாலையை துறந்தவிட்ட போது கூட, கதராடையை விடவில்லை.

35. அன்பே வா திரைப்படத்திற்கான படபிடிப்பு சிம்லாவில் நடைப்பெற்றது. படபிடிப்பு முழுவதும் முடிந்ததும், டெல்லியில் உள்ள காந்தி, நேரு போன்ற தலைவர்களின் சமாதிக்கு சென்றார் எம்.ஜி.ஆர். காந்தி சமாதியில் மலர்வளையம் வைத்து வணங்கியவர், சமாதியை ஒரு முறை சுற்றி வந்து வணங்கி அங்கேயே அமர்ந்து சில நிமிடங்கள் தியானமும் செய்திருக்கிறார்.

36. “காந்திஜி கூறிய உயர்ந்த கருத்துக்கள், தத்துவங்கள் அனைத்துமே அன்றாட வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருக்கின்றன. மது விலக்கை பற்றி யாராவது வலியுறுத்தினால் அங்கே காந்தி இருக்கிறார். தீண்டாமையை எதிர்த்து எவரேனும் போராடினால் அங்கே காந்தி இருக்கிறார்.உண்மை, எளிமை, அன்பு, நேர்மை ஆகிய பண்புகள் எங்கெங்கு இருக்கின்றனவோ, அங்கெல்லாம் காந்தி இருக்கிறார்” என்று காந்தியை நேசித்த எம்.ஜி.ஆர் மதுவிலக்கையும் தீவிரமாக கடைபிடிக்க எண்ணினார்.

37. காந்தியின் கொள்கையில் மதுவிலக்கை மிகவும் நேசித்தார் எம்.ஜி.ஆர். மதுவிலக்கு கொள்கையை அண்ணா கொண்டுவந்த போது அகம் மகிழந்தார். இருந்தும் அரசியல் காரணங்களுக்காக அடுத்தமுறை தி.மு கழக அரசு அதை நிறுத்தியது. அக்காலக்கட்டத்தில் மதுவிலக்கு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு செய்தார் எம்.ஜி.ஆர். “கள்ளுக்கடைப் பக்கம் போகாதே உன் காலைப் பிடித்து கெஞ்சுகிறேன்” என்று யாழ்பாணத்தினைச் சேர்ந்த திரு நித்தி கனகரத்தினம் பாடிய பாடலை, தமிழ்நாட்டின் மதுவிலக்கு பாடலுக்கு தேர்ந்தெடுத்தார் எம்.ஜி.ஆர்.

38. “அமைதியும் எளிமையுமே உருவான அவரை பார்த்ததும் ஏதோ தெய்வ தன்மை பொருந்திய ஒருவரை பார்ப்பது போன்ற பக்தி உணர்வு தான் ஏற்பட்டது. அந்த புன் சிரிப்பும், அவரது நடையும், குனிந்த தலையும் என் உள்ளத்தில் இன்றும் சித்திரமாக பதிந்து இருக்கின்றன.” என்று காந்தியை பார்த்த போது உணர்ந்தவற்றை பதிவு செய்திருக்கிறார் எம்.ஜி.ஆர்

39. காந்தியின் அகிம்சையில் நம்பிக்கை கொண்டிருந்த எம்.ஜி.ஆர், உண்ணாவிரதம் கூட இருந்திருக்கிறார். தமிழ்நாட்டுக்கு மத்திய அரசாங்கம் அரிசி அனுப்பாததைக் கண்டித்து முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் எம்.ஜி.ஆர். 10 மணியிலிருந்து உண்ணாவிரதம் இருக்க தொடங்கினார். உண்ணாவிரதம் தொடங்கிய ஒரு மணிநேரத்திலேயே மத்திய உணவு மந்திரி ராவ்பீரேந்திரசிங் தொடர்பு கொண்டு டெல்லியில் வந்து பேசும் படி கூறினார். இருந்தும் எம்.ஜி.ஆர் திட்டமிட்டபடி மாலை 5 மணி வரை உண்ணாவிரததினை தொடர்ந்தார்.

40. காந்தியின் கொள்கைகளான மது விலக்கு, தீண்டாமை ஒழிப்பு, சமூக சேவை, எளிமை, உண்மை, தேசிய உணர்வு என்று அனைத்தையும் நேசித்தவர் எம்.ஜி.ஆர். இதனை நான் கண்ட காந்தி என்ற தலைப்பில் ஆனந்த விகடன் இதழுக்கு பேட்டியாக தந்திருக்கிறார். காந்திப் படத்தையும், அண்ணா படத்தையும் வழிபட்ட பின்பே முதல்வர் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார் எம்.ஜி.ஆர்.

ஆயிரம் புகழ் மாலைகளை நோக்கி…

ஆயிரத்தில் ஒருவன் – பாகம் 3

“மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்” என்று கடமையை மூச்சாக கொண்ட எம்.ஜி.ஆருக்கு, அவருடைய மூன்றெழுத்தினையே மூச்சாக கொண்ட ஆயிரமாயிரம் ரசிகர்கள் கிடைத்தார்கள். இன்று கூட மூன்றெழுத்து மந்திரம் என்று எம்.ஜி.ஆரை சுட்டுகின்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எம்.ஜி.ஆருக்கும் மூன்று என்ற எண்ணிற்குமான தொடர்பு அவருடைய பெயரிலிருந்து ஆரமித்தாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவருடைய வரலாற்றினை உற்றுநோக்கினால், ஏனோ அவர் பிறந்ததிலிருந்தே அந்த மூன்று என்ற எண் அவரை பின் தொடர்ந்து வருவதை நம்மால் காணமுடியும்.

“என்னங்கடா 12லிருந்து 5 கழிச்சா 7ங்குவீங்க போலிருக்கே” என வசூல்ராஜா படத்தில் கமல் பேசும் வசனத்தினை கூட நீங்கள் நினைத்துக் கொள்ளலாம். இது கொஞ்சம் அறிவற்ற தன்மைதான் என்றாலும் சுவாரசியமானது.

21. அன்னை சத்தியபாமா அவர்களுக்கு நான்காவது பிள்ளை சக்ரபாணி அவர்கள். எம்.ஜி.ஆர் ஐந்தாவது பிள்ளை தான். எம்.ஜி.ஆர் அவர்கள் பிறந்த பிறகே இரண்டு சகோதரிகளும் ஒரு சகோதரரும் என மூன்று முன்னோர்கள் அடுத்தடுத்து இறந்து போனார்கள். எம்.ஜி.ஆரின் தந்தை கோபாலமேனன் காலமானபோது எம்.ஜி.ஆருக்கு வயது மூன்று.

22. என்னுடைய புது முயற்சிகளுக்கு மற்றவர்களை துன்பத்தில் ஆழ்த்த விரும்பவில்லை என்று கூறி எம்.ஜி.ஆர் பிச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவத்தினை உருவாக்கினார். அதன் மூலம் நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய மூன்று படங்களைத் தயாரித்தார் எம்.ஜி.ஆர்.

23. நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் என மூன்று படங்களை சொந்தமாக இயக்கியுள்ளார் எம்.ஜி.ஆர். இதில் நாடோடி மன்னன் தலைநகர் சென்னையில் மூன்று திரையங்குகளில் 100 நாட்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது.

24. எம்.ஜி.ஆரின் முதல் மனைவி பார்கவி என்கிற தங்கமணியை அன்னை சத்தியபாமாவின் கட்டாயத்தினால் 1941ல் திருமணம் செய்து கொண்டார். 1942ல் தங்கமணி நோய்வாய்ப்பட்டு இறந்த பிறகு எம்.ஜி.ஆர் சதானந்தவதியை 1944ல் திருமணம் செய்து கொண்டார். சதானந்தவதி அவர்களுக்கு 3-வது மாதத்தில் கர்ப்ப சிதைவு ஏற்பட்டது. பிறகு அடுத்து சதானந்வதி அவர்கள் கர்ப்பமாக இருந்தபோது உடல் நலம் குறைவு ஏற்பட்டு மருத்துவர்கள் யோசனைப்படி அந்த குழந்தையும் கலைக்கப்பட்டது. இருந்தும் சதானந்தவதி இறந்துபோனார். அதன் பின் தான் காதலித்த ஜானகி அம்மையாரை மூன்றாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார் எம்.ஜி.ஆர்.

25. 1977,1980,1984 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் தொடர்ந்து வெற்றிப் பெற்று மூன்று முறை தமிழக முதல்வராக பதவி வகித்தார் எம்.ஜி.ஆர். கி.பி 1920ல் அ. சுப்பராயலு ரெட்டியார் முதல் முதல்வராக இருந்ததிலிருந்து இன்றுவரை தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்தது எம்.ஜி.ஆர் மட்டுமே.

26. 1967 ஜனவரி 12 ந்தேதி எம்.ஜி.ஆர் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டார். முதல் சிகிச்சைக்குப் பிறகு ராயப்பேட்டை ஆஸ்பத்திரிலிருந்து சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் மாற்றப்பட்டார். எம்.ஜி.ஆர். கழுத்தில் பாய்ந்த குண்டு, மூன்று முக்கிய நரம்புகளுக்கு இடையே பதிந்திருந்ததால் அதனை அகற்றினால் பெரிய பிரட்சனையாகலாமென அப்படியே விட்டுவிட்டார்கள். இப்படி துப்பாக்கி குண்டோடு வாழ்ந்தவர்களில் மாவீரன் நெப்பொலியனும் ஒருவர்.

27. ஜானகி அம்மையாரின் முதல் கணவர் நடிகரும் ஒப்பனையாளருமான கணபதிபட் ஆவார். இவர்கள் இருவருக்கும் அப்பு என்கிற இரவீந்திரன் என்னும் மகன் இருந்தார். எனினும் எம்.ஜி.ஆர் மீதான காதலால் கணவரை விவாகரத்து செய்துவிட்டு எம்.ஜி.ஆரின் மூன்றாவது மனைவியானர். ஜானகி அம்மையார் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடத்த படம் மூன்று. அவை கோவிந்தன் கம்பெனி தயாரித்த “மருதநாட்டு இளவரசி”, எம்.கே.தியாகராஜ பாகவதர் தயாரித்த “ராஜமுக்தி”, ஜுபிடர் தயாரித்த “மோகினி”.

28. எம்.ஜி.ஆரின் கொடைத்தன்மை உலகம் அறிந்ததே. அந்த வள்ளல் தன்மையை குறிக்கும் பொருட்டு அவருக்கு ஏராளமான அடைமொழிகள் மக்களால் வழங்கப்பட்டன. அதில் ஒன்று முக்கை கொண்டவர் என்பதாகும். அதாவது வலக்கை, இடக்கையோடு ஈகை எனும் கையும் உடையவர் என்று பொருள்படும்படி கூறப்பட்டது.

29. நாடகம், திரைப்படம், அரசியல் என்று மூன்று துறைகளில் ஜொலித்த எம்.ஜி.ஆருக்கு அரசியல் பாடம் கற்றுக் கொடுத்து, அன்போடு இருந்தவர் அண்ணா என்ற மற்றொரு மூன்றெழுத்துக்காரர். அண்ணாவினைப் போல தி.மு.க என்ற முன்றெழுத்து கட்சியை அதிகம் நேசித்தார் எம்.ஜி.ஆர். தனிக் கட்சி தொடங்கியபோது கூட தி.மு.க என்ற மூன்றெழுத்தினையும், அண்ணா என்ற மூன்றெழுத்தினையும் இணைத்தே அண்ணா தி.மு.கவென கட்சிக்கு பெயர்வைத்தார்.

30. முப்பிறவி, இப்பிறவி, மறு பிறவி என்று மூன்று பிறவிகள் இருப்பதாக பலர் நம்பிக்கொண்டுள்ளார்கள். ஆனால் வாழ்நாளில் மூன்று பிறவிகளை கண்டவர் எம்.ஜி.ஆர். “செத்துப் பிழைச்சவன்டா – எமனை பார்த்து சிரிச்சவன்டா” என்று வாலிப கவிஞர் வாலி எழுதிய வார்த்தைகள் எத்தனை சத்தியமானவை.

ஆயிரம் புகழ் மாலைகளை நோக்கி…

முந்தைய பாகங்கள் –
ஆயிரத்தில் ஒருவன் – பாகம் 1
ஆயிரத்தில் ஒருவன் – பாகம் 2

ஆயிரத்தில் ஒருவன் – பாகம் 2

11)இன்றைக்கு நாய்களையும், பூனைகளையும் வளர்க்கின்ற பிரபலங்களை நமக்கு தெரியும். ஆனால் எம்.ஜி.ஆர் சிங்கத்தினை செல்ல பிராணியாக வளர்த்தார். அதுவும் ஒன்றல்ல,. இரண்டு. ஆண் சிங்கத்தின் பெயர் ராஜா. பெண் சிங்கத்தின் பெயர் ராணி.

12)1959 ஆம் ஆண்டு டைரக்டர் கே.சுப்ரமணியம் முயற்சி காரணமாக “தமிழ் நடிகர் சங்கம்” தொடங்க ஏற்பாடுகள் நடந்தன. அப்போது தெலுங்கு, மலையாளம் நடிகர்களும் இங்கிருந்தே இயங்கினார்கள். அதனால் எம்.ஜி.ஆர் “தென்னிந்திய நடிகர்கள் சங்கம்” என்று பெயர்மாற்ற யோசனை கூறினார். அவர் யோசனைப்படியே தென்னிந்திய நடிகர்கள் சங்கம் உருவானது. இன்றுவரை அந்தபெயரே நிலைத்திருக்கிறது.

13)எம்.ஜி.ஆரும், சிவாஜியும் ஒருவர் மீது ஒருவர் பாசமும், மரியாதையும் வைத்திருந்தார்கள். எம்.ஜி.ஆரை சிவாஜி “அண்ணன்” என்றே அழைப்பார். சிவாஜியை எம்.ஜி.ஆர். “தம்பி” என்று குறிப்பிடுவார். பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகளின்போது, எம்.ஜி.ஆர். வீட்டில் இருந்து சிவாஜி வீட்டுக்கு இனிப்பு போன்ற உணவுப் பண்டங்கள் போகும். அதேபோல் எம்.ஜி.ஆருக்கு சிவாஜி கணேசன் வீட்டில் இருந்து பொங்கல், பழங்கள் முதலியன போகும்.

14)நாடோடி மன்னன் படத்தைத் தயாரித்து தானே இயக்கினார் எம்.ஜி.ஆர். இந்த படத்திற்காகவே வாகினி ஸ்டுடியோவில் உணவுக்கூடம் (மெஸ்) ஒன்றை திறந்தார் எம்.ஜி.ஆர். அதற்கான செலவில் ஒரு படமே எடுத்திருக்கலாம் என்கிறார்கள். அத்தனை தரமான உணவுகளை உழைப்பவர்களுக்காக கொடுத்தார் எம்.ஜி.ஆர்

15)தன் சிறு வயதில் தங்கள் சொந்த ஊரான பரமக்குடியில் ஒரே தியேட்டரில் 100 தடவைக்கு மேல் மதுரை வீரன் படத்தை தினமும் தொடர்ந்து பார்த்ததாக நடிகர் கமலஹாசன் கூறியிருக்கிறார். மக்களோடு மக்களாக எம்.ஜி.ஆர் இணைந்தபடம் இது.

16) சதிலீலாவதி எம்.ஜி.ஆருக்கு எப்படி முதல்படமோ, அதைப்போலவே டி.எஸ்.பாலையா, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் முதல் படம் அதுவே. ஜெமினி அதிபர் எஸ்.எஸ். வாசனின் சினிமா உலகப் பிரவேசம் இதில்தான் ஆரம்பமானது. அவர் ஆனந்த விகடன் இதழில் எழுதிய சதிலீலாவதி தொடர் நாவல்தான் படமாகியது.

17) தந்தை இயக்குனராகவோ, தயாரிப்பாளராகவோ இருந்தால் இப்போதெல்லாம் உடனே கதைநாயகனாகிவிடுகிறார்கள் மகன்கள். இவர்களைப் போல எடுத்தவுடன் கதாநாயகன் ஆனவர் அல்ல எம்.ஜி.ஆர். திரை உலகில் கதாநாயகன் அந்தஸ்து கிடைக்கு 11 வருடங்கள் அவர் போராடினார்.

18) “மலைக்கள்ளன்”, நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை எழுதிய நாவலாகும். கருணாநிதி வசனத்தில், எம்.ஜி.ஆர் நடித்த இந்த படம் வெற்றிபடம். இந்த தாக்கத்தில் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம் என பிற ஐந்து மொழிகளிலும் படமாக்கப்பட்டது. ஆக ஆறு மொழிகளிலும் வெற்றி பெற்றது மலைக்கள்ளன் எனும் தமிழ் நாவல்.

19) எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்து தயாரித்த “ராஜமுக்தி” படத்தில் ஜானகி கதைநாயகி. எம்.ஜி.ஆர் தளபதியாக நடித்தார். எம்.ஜி.ஆரின் முதல் மனைவி பார்கவி என்கிற தங்கமணி போலவே ஜானகி இருந்ததால் எம்.ஜி.ஆருக்கு தடுமாற்றம் ஏற்பட்டது. அதன் பின் ஜானகியும் எம்.ஜி.ஆரும் காதலர்களானார்கள்.

20) எம்.ஜி.ஆருக்கு ஆயிரம் பட்டங்களை தந்திருந்தாலும், பலருக்கும் பிடிக்கின்ற பட்டம் “பொன்மனச் செம்மல்” என்பதே. இந்த பட்டத்தினை தந்தவர் முருக பக்தர் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள்.

ஆயிரம் புகழ் மாலைகள் நோக்கி…

முந்தைய பாகம் –
ஆயிரத்தில் ஒருவன் – பாகம் 1

ஆயிரத்தில் ஒருவன் – பாகம் 1

எம்.ஜி.ஆர் இறந்த அதே 1987 -ல் நான் பிறந்தேன். பின் எவ்வாறு நான் எம்.ஜி.ஆர் ரசிகனானேன்? என்பதை எண்ணுகையில் வியப்பாக இருக்கிறது. எம்.ஜி.ஆர் ஆரமித்துவைத்த சத்தணவு திட்டத்தின் மூலம் எங்கள் ஊரில் ஒரு பெண்ணிற்கு வேலை கிடைத்தது. அந்த வேலையை வைத்து அவளின் ஆறு பெண் பிள்ளைகளையும் நன்றாக வளர்க்க முடிந்தது. அந்த ஆறில் ஒருவர் என் அன்னை. அந்த பெண்மணி என் அம்மாச்சி. இதனால் அம்மாச்சி எப்போதுமே எம்.ஜி.ஆரைப் பற்றி புகழந்து கொண்டிருப்பார். அம்மாச்சிக்கு அரசியல் தெரியாது அதனால் அவர் எம்.ஜி.ஆரின் அரசியல் பற்றி புகழமாட்டார். அம்மாச்சி அதிகமாக படங்களை பார்த்தது கிடையாது, பாட்டாளியாக உழைக்கவே நேரமில்லாத காலத்தில் படம் எப்படி பார்ப்பார். அதனால் எம்.ஜி.ஆரின் படங்களைப் பற்றி அதிகம் புகழமாட்டார். அவர் எம்.ஜி.ஆர் பற்றி கூறுவதெல்லாம் சத்துணவு சார்ந்தவைகள் மட்டுமே.

எம்.ஜி.ஆர் திருச்சிராப்பள்ளியில் அந்த திட்டத்தினை ஆரமித்துவைத்தது முதற்கொண்டு, அந்த திட்டத்தில் கொடுக்கப்பட்ட காய்கறி அளவுகள், எண்ணைய், பருப்பு வைகைகளின் அளவுகள் என்று எல்லாமும் அம்மாச்சிக்கு அத்துபடி. கட்டைவிரல் மடக்கி நான்கு விரல்களை அளவாக காண்மித்து “அந்த காலத்துல இம்புட்டு எண்ணைய் ஒரு புள்ளைக்குன்னு கொடுப்பாங்க பாரு. அதே அளவு எடுத்துப் போட்டா,.. புள்ளைகளுக்கு கழிசலே வந்துடும்” என்பார். “அம்மாம் பெரிசா யானமெல்லாம் தன் கையாலேயே கொடுத்தாரு” என்று சொல்லும் போது அம்மாச்சியின் கண்களில் இன்றும் பிரகாரம் மிளிரும். இப்படி ஆயிரம் முறை கூறக் கேட்டும் இன்னும் சலிக்காமல் இருப்பதுதான் எம்.ஜி.ஆரின் புகழ்.

அதன் பின் எம்.ஜி.ஆரின் திரைப்படம், அரசியல், அன்பு, ஈகை, வீரம் என பல பரிணாமங்களை கண்டு இன்றும் வியந்து கொண்டிருக்கிறேன். எம்.ஜி.ஆர் பற்றி படிக்கும் போதும், பிறர் பேச கேட்கும் போதும் மனம் துள்ளலாக இருக்கும். அவரைப் பற்றி விக்கியில், வலையில், முகநூலில் என கிடைக்கும் இடங்களிலெல்லாம் எழுதி தள்ளியிருக்கிறேன். சகோதரனிலும் அவரைப் பற்றி சில இடுகைகள் எழுதியிருப்பேன், என்றாலும் ஒரு தொடராக அவரைப் பற்றி எழுத வேண்டும் என ஆசைப்பட்டேன். அதற்காகவே அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு சென்று கடந்த சில வாரங்களாக செய்திகளை சேகரித்துக் கொண்டிருக்கிறேன்.

“நான் ஏன் பிறந்தேன்” என்று எம்.ஜி.ஆர் தொடங்கி, அவருடன் இருந்த புகைப்படக்காரர் வரை எம்.ஜி.ஆர் வாழ்வில் நடந்த பல்வேறு சுவாரசியங்களை தந்துள்ளார்கள். அவைகள் நூலகத்தில் இருக்கின்றன. ஆனால் இணையத்தில் சொற்பமே கிடைக்கின்றன. அவைகளில் சுவாரசியம் மிகுந்தவையை சிறு சிறு தகவல்களாக தந்தால் நன்றாக இருக்கும். ஏற்கனவே எம்.ஜி.ஆர் 25 என ஆனந்தவிகடன் வெளியிட்டு விட்டது. எம்.ஜி.ஆர் 100 என நக்கீரன் புத்தகமே வெளிவந்துள்ளது. இவைகளைப் போல ஆயிரம் தகவல்களை திரட்ட முடிவு செய்திருக்கிறேன். அப்படியே சுவாரசியம் குன்றினால் தொகுத்தோடு நிறுத்திவிடலாம். நம்பிக்கை இருக்கிறது. இனி ஈசன் அருள் செய்ய வேண்டும்.

ஆயிரத்தில் ஒருவன் –

1) ஒரு வருடத்தின் உதயம் ஜனவரி மாதம். மறைவு டிசம்பர் மாதம். எம்.ஜி.ஆர் உதித்தது ஜனவரி 17, 1917, மறைந்தது டிசம்பர் 24, 1987. இதை ஆண்டவனின் விளையாட்டாக எண்ணுவதா, இல்லை விருப்பமாக எண்ணுவதா என தெரியவில்லை. எம்.ஜி.ஆரின் பிறப்பும், இறப்பும் கூட தனிசிறப்பாக இருக்கிறது.

2) எம்.ஜி.ஆருக்கு ஒரு பைட் மாஸ்டருக்கு என்ன என்ன தெரிந்திருக்க வேண்டுமோ, அத்தனையும் தெரியும். சிலம்பம், வாள், குஸ்தி, குதிரையேற்றம், தற்காப்பு கலைகள், சண்டை முறைகள் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

3) எம்.ஜி.ஆர் இருந்த காலத்தில் குறைந்த வேகத்தில் சண்டைகளை எடு்த்துவிட்டு, பின் திரையில் அதிக வேகத்துடன் ஓட வைக்கும் கேமிராக்கள் வரவில்லை. எம்.ஜி.ஆரும், நம்பியாரும் மோதும் காட்சிகளில் இருக்கும் வேகம் உண்மையான சண்டை வேகம்.

4) “காதல் வாகணம்” என்ற தேவர் பிளிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படத்தில் எம்.ஜி.ஆரை பெண் வேடத்தில் காணலாம். நாடகத்துறையில் இருந்தபோது நிறைய முறை பெண் வேடமேற்று நடித்திருந்தாலும், திரையுலகில் எம்.ஜி.ஆர் பெண்ணாக நடத்தது ஒரே ஒரு படத்தில்தான்.

5) அண்ணா தி.மு.க வின் கட்சி சின்னம் இரட்டை இலை. இந்த சின்னத்தினை எம்.ஜி.ஆர் உருவாக்கவில்லை, தேர்ந்தெடுக்கவும் இல்லை. அப்போதெல்லாம் சுவர் ஓவியங்கள் மூலமாகவே விளம்பரம் செய்ய வேண்டிருந்தது. எனவே இந்த இலை சின்னம் வரைய எளிதாக இருக்கும் என்று தேர்ந்தெடுத்தவர் திண்டுகல் தொகுதி வேட்பாளர் மாயத் தேவர். அந்தளவிற்கு செல்வாக்கு மிக்கவர்களாக தொண்டர்களைம், வேட்பாளர்களையும் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.

6) எம்.ஜி.ஆரின் தாய் சத்தியபாமாவின் குலதெய்வம் மூகாம்பிகை. அதன் காரணமாகவே எம்.ஜி.ஆருக்கு மூகாம்பிகையை பிடிக்கும். தாயார் இறந்த பின் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். மூகாம்பிகையை பார்க்கும் போதெல்லாம் என் தாயை பார்ப்பது போல இருக்கிறது என்பார்.

7) தமிழக மக்களுக்கு “எம்.ஜி.ஆர்”. நடுநிலை பேசுகிறவர்களுக்கு “எம்.ஜி.ராமச்சந்திரன்”. தொண்டர்களுக்கு “புரட்சி தலைவர்”. இப்படி பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும், எம்.ஜி.ஆரின் அன்பான செல்ல பெயர் என்ன தெரியுமா?. ராமு.

8) எப்போதுமே தரையில் சம்மனமிட்டு அமர்ந்து சாப்பிடுவதே எம்.ஜி.ஆருக்கு பிடிக்கும். விருந்தாளிகள் வந்தால் மட்டும்தான் டைனிங் டேபிலில் அமர்ந்து சாப்பிடுவாராம் எம்.ஜி.ஆர்.

9) டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்,பிளொட் இந்த பெயர்கள் உங்களுக்கு தெரிந்திருந்தால்,. நீங்கள் ஈழம் பற்றி அறிந்தவராவீர்கள். இத்துடன் சேர்த்து விடுதலைப்புலிகள் என ஐந்து அமைப்புகள் ஈழத்தினை பெறுவதற்காக போராடிக் கொண்டிருந்தார்கள். இவற்றில் விடுதலைப் புலிகள் மட்டும் மிகப் பெரும் அளவிற்கு வருவதற்கு பிரபாகரனும், அவருக்கு பக்கபலமாக இருந்த எம்.ஜி.ஆரும் காரணம்.

10) ரிக்சாகாரன் படவெற்றியை கொண்டாட சென்னையில் இருக்கும் 6,000 ரிக்சா காரர்களுக்கு மழைகாலங்களில் உதவியாக இருக்கும்படி, மழைநீர் கோர்டுகளை வாங்கிதந்தார். இன்று கூட ஆட்டோக்களில் எம்.ஜி.ஆரின் உருவம் பதித்து வலம் வர அவரின் இந்த தொழிலாளர்களை மதிக்கும் தன்மையை காரணமென நினைக்கிறேன்,.

ஆயிரம் புகழ் மாலைகள் நோக்கி…