பேலுக்குறிச்சி சந்தையும் சங்கிலி கருப்பும்

இம்முறை வீட்டு வருச சாமான்கள் வாங்குவதற்கு நாமக்கல் மாவட்டம் பேலுக்குறிச்சிக்கு செல்வது என்று அம்மா முடிவெடுத்தார். சென்ற முறை திருச்சிராப்பள்ளியில் வருச சாமான்கள் வாங்கியிருந்தாலும், மற்ற உறவினர்களிடம் அது குறித்து விசாரித்த போது விலை மலிவாக பேலுக்குறிச்சியில் கிடைப்பதை தெரிவித்தனர். அதனால் இம்முறை சென்ற சனிக்கிழமையன்று பேலுக்குறிச்சிக்கு சென்றோம்.
pellukurichi

வாசனைப்பொருள்களுக்கு என்று தனிக்கடைகளும், வருச சாமான்கள் எனப்படும் மிளகு, கடுகு, சீரகம் போன்றவற்றுக்கு தனிக்கடைகளும் இருக்கின்றன. இம்முறை மழைப் பொய்த்துப் போனதால் பாதிச்சந்தைக்கே வியாபாரிகள் இருப்பதாக வருடந்தோறும் சென்றுவரும் உறவினர் தெரிவித்தார். வியாபாரிகள் மக்களின் தேவைக்கு ஏற்றவாறு ரகம் வாரியாக பொருள்களை வைத்துள்ளார்கள். குறைவான விலைக்கு கேட்டால் தரம் குறைந்த பொருகளையும், தரத்தினை எதிர்ப்பார்த்தால் அதிக விலையும் உண்டு. இதுதான் வியாபாரம். சில கடைகளில் எடை ஏமாற்றும் வழக்கமும் உள்ளது என்பதால், உடன் வந்த உறவினர் வீட்டிலிருந்து படியொன்றினை எடுத்து வைத்திருந்தார். அதில்தான் தர வேண்டும் என்று வியாபாரிடம் சொன்ன போது, அவர் தன்னுடைய படியையும், உறவினர் படியையும் அளந்து சரி பார்த்தார். வியாபாரிடம் ஒரு லிட்டர் படி இருந்தது, உறவினர் கொண்டுவந்தது கிலோ படி.

லிட்டர் படியைவிட 100-200 கிராம் அளவுக்கு பொருள்கள் பிடித்தன. அதனால் செட் 1300 என நிர்ணயம் செய்து மூன்று செட்டுகளை வாங்கிக் கொண்டோம். ஒரு செட்டில் ஐந்து பொருள்கள், ஒவ்வொன்றும் நான்கு கிலோ,. ஆக 60 கிலோ பொருளுடன் நான் விடைப்பெற்று அருகிலிருந்த ஒரு கோயிலில் அமர்ந்து கொண்டேன். மற்றவர்கள் பூண்டு, மஞ்சள், பட்டாணி என வாங்கிக் கொண்டு திரும்பிவர அனைவரும் பேருந்து ஏறி அவரவர் இல்லத்தினை வந்தடைந்தோம்.

பேலுக்குறிச்சி சந்தையைப் பற்றி பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்றபட்டமைக்கு இரு காரணங்கள், 1) சங்கிலி கருப்பு 2) கூட்டாஞ் சோறு.

சங்கிலி கருப்பு – 

sangalikarupu

நாட்டார் தெய்வங்களில் முனியும், கருப்பும் மட்டும் எண்ணற்ற பெயர்களையும், அமைப்புகளையும் உடையது. மிகவும் உக்கிரமான கருப்பினை சில மந்திரவாதிகள் சங்கிலியால் கட்டி தங்களுக்கு சேவகம் செய்ய வைத்துள்ள கதைகளையும், ஊருக்கு நல்லது செய்ய சத்தியம் செய்து சங்கிலியில் கட்டுண்டு கிடக்கும் கருப்பு கதைகளும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். என்னுடைய நண்பன் ஒருவனின் குலதெய்வமான கருப்புசாமியை அவனுடைய தாத்தா அழைத்துவந்து கோயில்கட்டியமை குறித்து தெரிவித்திருக்கிறான். எனினும் இதுவரை சங்கிலி கருப்பினை கண்டதில்லை என்ற குறை இம்முறை அகன்றது.
பேலுக்குறிச்சி சந்தையின் முன்பகுதியில் சில பதிவுகளோடு, சங்கிலி கருப்பும் உள்ளார். ஆளுயர சிலை. மேலிருந்து கீழ் வரை சங்கிலி சுற்றப்பட்ட கருங்கல்லாக காட்சியளிக்கிறார். முன்பக்கத்தில் தமிழ்எழுத்துகள் இருக்கின்றன. பக்கவாட்டில் வட்டமிட்டு அதன் குறுக்காக கோடிட்டவாறு சின்னங்கள் உள்ளன. பின்பக்கம் செதில் செதிலாக உள்ளது. முகநூலில் சேலம் வரலாற்று ஆய்வு செய்யும் ஆர்வளர்களுக்கு தகவல் தந்துள்ளேன். எண்ணற்ற சிறு தெய்வங்கள் ஏதேனும் வரலாற்றுக்காக வைக்கப்பட்ட அரசுச் சின்னங்களாக இருப்பதை அவர்கள் கண்டு முன்பே தெரிவித்துள்ளார்கள்.

முகநூல் நண்பரான ராஜசேகரன் இது நெடுங்கல்லாகவோ, கோமாரிக்கல்லாகவோ இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார். மாலை, ஆபரணம், துண்டு ஆகியவை இல்லாமல் வெறும் கல்லை மட்டும் படம்பிடித்திருந்தால் இந்நேரம் அது என்ன என்று தெரிந்திருக்கும். 🙂 கருப்புசாமியாக ஒரு வரலாறு மக்களால் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பதால் மிகவும் மகிழ்ச்சி. எனக்கு நெடுங்காலமாக கேள்விப்பட்ட சங்கிலி கருப்பைக் கண்டதில் மகிழ்ச்சி.

கூட்டாஞ் சோறு –

பேலுக்குறிச்சியில் எண்ணற்ற ஊர் மக்கள், பெரும்பாலும் மகளீர் ஒற்றுமையாக ஒரு கனரக மூன்று சக்கர, நான்கு சக்கர வண்டிகளில் வந்திறங்கி முழுச்சந்தையிலும் பொருள்களை வாங்கிக் கொண்டு ஒன்று சேர்ந்து திரும்புகின்றார்கள். பசியாறுவதற்கு வீட்டில் சமைத்துக் கொண்டு வரும் உணவை கோயிலில் அமர்ந்து பகிர்ந்து உண்கிறார்கள். பொருகளை மாற்றி மாற்றி தங்களுக்குள் ஒருவர் இருந்து காவல் காக்கின்றார்கள். இந்தக் காலத்திலும் இவ்வாறான ஒற்றுமையும், குழு மனப்பான்மையும் வியக்க வைக்கிறது.

ஆயிரத்தி்ல் ஒருவன் – பாகம் 4

31. 1933 – 34 ஆண்டுகளில் எம்.ஜி.ஆர் காங்கிரசில் உறுப்பினராக சேர்ந்தார். அவர் காந்தியவாதியாகவும், காந்தியை நேசிப்பவராகவும் எப்போதும் இருந்தார். “புத்தன், ஏசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக?” என்று பாடியவருக்கு, புத்தர், ஏசுவை விட காந்தியை மிகவும் பிடிக்கும். “காந்தி மாதிரி ஒரு மகானைப் பார்த்தது இல்லை. இயேசுவும், புத்தரும் கூட மதத்தைத்தான் பரப்பினார்கள். ஆனால், காந்தி ஒருவர்தான் அரசியலை நேர்மையோடு நடத்தினார்” என்பார்.

32. 1930ம் ஆண்டு வாக்கில் காரைக்குடியில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நாடகத்தில் எம்.ஜி.ஆர் நடித்துக்கொண்டிருந்த சமயம். காந்தியடிகள் காரைக்குடிக்கு வருகைதந்தார். அப்போது காந்தியை முதன்முதலாக பார்த்ததாக எம்.ஜி.ஆர் தெரிவித்திருக்கிறார்.

33. “காந்தியக் கொள்கைகளை முழுவதுமாக கடைபிடித்த தலைவர் அண்ணா மட்டுமே. அவருடைய புத்தகங்களை படித்தேன். அவருடைய நியாயமான கோரிக்கைகள்தான், தமிழகத்திற்கும், இந்திய துணை கண்டத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்ற காரணத்தால் தி.மு.கழகத்தில் சேர்ந்தேன்.” என்று தி.மு.கவில் இணைந்த போதும் காந்திய கொள்கையில் பற்றுள்ளவராகவே இருந்தார்.

34. காந்தியடிகளின் பல்வேறு கொள்கைகளை தன்னுடைய வாழ்க்கையில் கடைபிடித்தார் எம்.ஜி.ஆர். அதிலொன்று கதர் சட்டை உடுத்துதல். நாடக நடிகராக இருந்த பொழுதிலிருந்து கதர் மீது பாசம் கொண்டவராக இருந்தார் எம்.ஜி.ஆர். இளம் வயதில் அணிந்திருந்த துளசிமாலையை துறந்தவிட்ட போது கூட, கதராடையை விடவில்லை.

35. அன்பே வா திரைப்படத்திற்கான படபிடிப்பு சிம்லாவில் நடைப்பெற்றது. படபிடிப்பு முழுவதும் முடிந்ததும், டெல்லியில் உள்ள காந்தி, நேரு போன்ற தலைவர்களின் சமாதிக்கு சென்றார் எம்.ஜி.ஆர். காந்தி சமாதியில் மலர்வளையம் வைத்து வணங்கியவர், சமாதியை ஒரு முறை சுற்றி வந்து வணங்கி அங்கேயே அமர்ந்து சில நிமிடங்கள் தியானமும் செய்திருக்கிறார்.

36. “காந்திஜி கூறிய உயர்ந்த கருத்துக்கள், தத்துவங்கள் அனைத்துமே அன்றாட வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருக்கின்றன. மது விலக்கை பற்றி யாராவது வலியுறுத்தினால் அங்கே காந்தி இருக்கிறார். தீண்டாமையை எதிர்த்து எவரேனும் போராடினால் அங்கே காந்தி இருக்கிறார்.உண்மை, எளிமை, அன்பு, நேர்மை ஆகிய பண்புகள் எங்கெங்கு இருக்கின்றனவோ, அங்கெல்லாம் காந்தி இருக்கிறார்” என்று காந்தியை நேசித்த எம்.ஜி.ஆர் மதுவிலக்கையும் தீவிரமாக கடைபிடிக்க எண்ணினார்.

37. காந்தியின் கொள்கையில் மதுவிலக்கை மிகவும் நேசித்தார் எம்.ஜி.ஆர். மதுவிலக்கு கொள்கையை அண்ணா கொண்டுவந்த போது அகம் மகிழந்தார். இருந்தும் அரசியல் காரணங்களுக்காக அடுத்தமுறை தி.மு கழக அரசு அதை நிறுத்தியது. அக்காலக்கட்டத்தில் மதுவிலக்கு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு செய்தார் எம்.ஜி.ஆர். “கள்ளுக்கடைப் பக்கம் போகாதே உன் காலைப் பிடித்து கெஞ்சுகிறேன்” என்று யாழ்பாணத்தினைச் சேர்ந்த திரு நித்தி கனகரத்தினம் பாடிய பாடலை, தமிழ்நாட்டின் மதுவிலக்கு பாடலுக்கு தேர்ந்தெடுத்தார் எம்.ஜி.ஆர்.

38. “அமைதியும் எளிமையுமே உருவான அவரை பார்த்ததும் ஏதோ தெய்வ தன்மை பொருந்திய ஒருவரை பார்ப்பது போன்ற பக்தி உணர்வு தான் ஏற்பட்டது. அந்த புன் சிரிப்பும், அவரது நடையும், குனிந்த தலையும் என் உள்ளத்தில் இன்றும் சித்திரமாக பதிந்து இருக்கின்றன.” என்று காந்தியை பார்த்த போது உணர்ந்தவற்றை பதிவு செய்திருக்கிறார் எம்.ஜி.ஆர்

39. காந்தியின் அகிம்சையில் நம்பிக்கை கொண்டிருந்த எம்.ஜி.ஆர், உண்ணாவிரதம் கூட இருந்திருக்கிறார். தமிழ்நாட்டுக்கு மத்திய அரசாங்கம் அரிசி அனுப்பாததைக் கண்டித்து முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் எம்.ஜி.ஆர். 10 மணியிலிருந்து உண்ணாவிரதம் இருக்க தொடங்கினார். உண்ணாவிரதம் தொடங்கிய ஒரு மணிநேரத்திலேயே மத்திய உணவு மந்திரி ராவ்பீரேந்திரசிங் தொடர்பு கொண்டு டெல்லியில் வந்து பேசும் படி கூறினார். இருந்தும் எம்.ஜி.ஆர் திட்டமிட்டபடி மாலை 5 மணி வரை உண்ணாவிரததினை தொடர்ந்தார்.

40. காந்தியின் கொள்கைகளான மது விலக்கு, தீண்டாமை ஒழிப்பு, சமூக சேவை, எளிமை, உண்மை, தேசிய உணர்வு என்று அனைத்தையும் நேசித்தவர் எம்.ஜி.ஆர். இதனை நான் கண்ட காந்தி என்ற தலைப்பில் ஆனந்த விகடன் இதழுக்கு பேட்டியாக தந்திருக்கிறார். காந்திப் படத்தையும், அண்ணா படத்தையும் வழிபட்ட பின்பே முதல்வர் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார் எம்.ஜி.ஆர்.

ஆயிரம் புகழ் மாலைகளை நோக்கி…

உயிர்களின் பரிணாமத்தினை விளக்கும் தசவதாரம்

பரிணாமக் கொள்கையை விளக்கும் படைப்பே தசாவதாரம்

****************************************************************

உலகில் உள்ள பிற மதங்கள் அறிவியலுக்கு எதிரானதாகவும், அறிவியலை மறுப்பதாகவும் இருக்கின்ற போது, இந்து மதம் மட்டுமே அறிவியலோடு இணைந்த மதமாக இருக்கிறது. நமது முன்னோர்கள் தாங்கள் கண்டறிந்த  அறிவியல் விசயங்களை நமக்கு மறைமுகமாக உணர்த்தி சென்றுள்ளார்கள். வடக்கு திசை நோக்கி படுக்க வேண்டாம் என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வந்து கொண்டிருந்த்தை, சில மூடர்கள் மூடநம்பிக்கை என்று கிண்டல் செய்தார்கள். ஆனால் வடக்கு திசை நோக்கி படுக்கும் போது மனிதனின் மூளையை பூமிகாந்தம் பாதிக்கிறது என்ற உண்மையை பிறகே மக்கள் உணர்ந்தார்கள். மஞ்சளையும் வேம்பினையும் கிருமி நாசினியாக இன்றுதான் மேலுலகம் கண்டுபிடித்திருக்கிறது. ஆனால் நம் ஞானிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அதை கண்டறிந்து பயன்படுத்திவந்துள்ளார்கள். அவர்கள் பயன்படுத்தியதோடு நில்லாமல் நம்முடைய அன்றாட வாழ்விலும் அவைகளை பயன்படுத்த வைத்துள்ளார்கள். இப்படி இந்து மதத்தில் நிறைய விசயங்களில் மறைமுகமாக இருக்கும் விஞ்ஞானத்தினை நாம் இப்போது அறிந்துகொண்டிருக்கிறோம். அந்த வகையில் இன்று டார்வினின் பரிணாமக் கொள்கையை எளிமையாக விளக்கும் இந்து மதத்தினைப் பற்றி காண்போம்.

பரிணாமக் கொள்கை –

சார்லஸ் ராபர்ட் டார்வின் கடல் வழியே, எச்எம்எஸ் பீகிள் (HMS Beagle) என்னும் கப்பலில்,  உலகில் பல இடங்களுக்கும் சென்று,  உயிரினங்களின் தோற்றம் பற்றி ஆராய்ந்தார். ஊர்வன,  பறப்பன,  நடப்பன ஆகியவற்றின் பல எலும்புகளை சேகரித்து ஆய்வு மேற்கொண்ட போது, அவைகளுக்குள் சில ஒற்றுமைகள் இருப்பதை அறிந்தார். அவைகளைக் கொண்டு உயிரினங்களின் தோற்றம் எனும் நூலில் விவரித்துள்ளார். இதனை பரிணாமக் கொள்கையென கூறுகின்றார்கள். இந்த டார்வினின் பரிணாம வளர்ச்சி கொள்கை பெரும்பாலான ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட படைப்புக் கொள்கையாகும்.

பூமியில் நீர் மட்டுமே சூழ்ந்திருந்த காலத்தில் நீர்வாழ்பவன தோன்றின. பின் நாட்களில் நீர் வற்றி, நிலம் தென்பட்ட போது, நீரில் வாழும் உயிர்களில் சில நீர் நில வாழ்பவனவாக மாற்றம் அடைந்தன. அவற்றிலிருந்து ஊர்வன உயிரினங்கள் தோன்றின. பின் பாலூட்டிகளாக அவை மாற்றம் அடைந்தன. பாலூட்டிகளில் ஒன்றான குரங்கினம் சிந்தனை செய்ய தொடங்கிது. அதனால் ஆறறிவு பெற்ற மனிதன் தோன்றினான். மற்ற பாலூட்டிகள் போல் அல்லாமல் இரண்டு கால்களால் மனிதன் நடந்தான். மூர்கமாக வேட்டையாடும் குணம் அவனுக்குள் இருந்தது. அதனால் வேட்டையாடி மிருகங்களை கொன்று உண்டான். தனித்தனியாக இருந்த மனிதன் குழுவாக இணைந்தார்கள். தங்களுக்குள் தலைவன் ஒருவனை தேர்ந்தெடுத்து அவன் பின் மற்றவர்கள் சென்றார்கள். அவன் சொல்படி நடந்தார்கள். நதிப்பகுதியில் விவசாயம் செய்து நாகரீக மனிதனாக மாறினான். கால்நடைகளை விவசாயத்திற்கு பயன்படுத்தினான். அவைகளை காடுகளில் மேய்ச்சல் செய்து பிழைத்தான். பின் தன்னுடைய அறிவினைப் பயன்படுத்தி தற்போதுள்ள விஞ்ஞான மனிதனாக மாறிவருகிறான். வருங்காலத்தில் உலகினையே அழிக்கும் சக்தியுடைவனாக மாறுவான் என்பதில் சந்தேகமில்லை.

தசவதாரம் –

உலகில் அதர்மம் அதிகமாகும் பொழுது தர்மத்தினை நிலைநாட்டுவதற்காக திருமால் அவதாரம் எடுக்கிறார். எண்ணற்ற அவதாரங்களை திருமால் எடுத்திருந்தாலும் மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமண அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், பலராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், கல்கி அவதாரம் என்ற பத்து அவதாரங்கள் மட்டும் தசவதாரங்கள் என்று பெருமையாக அழைக்கப்படுகின்றன இந்த அவதாரங்களை சற்று உற்றுநோக்கும் போது, இதில் ஒளிந்திருக்கும் பரிணாமக் கொள்கையை அறிய இயலும். டார்வினின் பரிணாம வளர்ச்சி கொள்கை உயிரிகளிலிருந்து மனிதன் தோன்றியதோடு நின்றுவிடுகிறது. அதன் பிறகு மனிதனின் பரிணாமம் துவங்குகிறது. தசவதாரத்தின் முதல் ஐந்து அவதாரங்கள் உயிர்களிலிருந்து மனிதனாக மாற்றம் அடைந்ததை விவரிக்கின்றன. அடுத்த ஐந்து அவதாரங்களும் மனிதனின் படிவளர்ச்சியை விவரிக்கின்றன.

மச்ச அவதாரம் – (மீன்- நீர் வாழ்வன)
பிரளய காலத்தில் மீனாக திருமால் அவதாரம் எடுத்து உலகை காப்பாற்றியதாக புராணம் கூறுகிறது. இது தசவதாரத்தில் முதல் அவதாரமாகும். பரிமாணவியல் கொள்கைபடி நீரில்வாழும் உயிரமான மீனிலிருந்தே உயிரங்களின் தோற்றம் ஆரமித்ததை குறிக்கிறது.

கூர்ம அவதாரம் – (ஆமை- நீர் நில வாழ்வன)
திருமாலின் இரண்டாவது அவதாரம் கூர்மம். பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடையும் போது, மேரு மலையை தாங்கிபிடிக்க திருமால் ஆமை ரூபத்தில் அவதாரம் எடுத்ததாக புராணம் கூறுகிறது. பரிணாமக் கொள்கையைப்படி நீர் வாழும் உயிர் நீர்நில வாழும் உயிராக மாற்றம் அடைந்ததாக கூறப்படுகிறது.

வராக அவதாரம் – (பன்றி- நிலத்தில் வாழும் பாலூட்டி)
தசவதாரத்தின் மூன்றாவது அவதாரம் வராகம். இரணியாசுரன் எனும் அரக்கனிடமிருந்து பூமியை காப்பற்ற திருமால் எடுத்த அவதாரம் என்று புராணம் கூறுகிறது. பரிணாமிவியல் கொள்கைபடி, நீர்நில வாழ்பவையாக இருந்தவை நில வாழ்பவையாக மாறியதை குறிக்கிறது.

நரசிம்ம அவதாரம் – (மிருகமாக இருந்து மனிதனாக மாறும் தன்மை)
தசவதாரத்தின் நான்காவது அவதாரம் நரசிம்மம். நரன் என்பது மனிதனைக் குறிக்கும் சொல். மனிதன் பாதியாகவும், மிருகம் பாதியாகவும் இருக்கின்ற திருமாலின் அவதாரம் இரணியனை கொல்ல எடுக்கப்பட்டதாக புராணம் கூறுகிறது. நிலவாழ்பவைகளாக இருந்த மிருகம் சிந்தனை திறன் பெற்று மனிதன் பாதி, மிருகம் பாதியாக இருந்த தொடக்க நிலையை இந்த அவதாரம் குறிக்கிறது.

வாமண அவதாரம் – (மனித தோற்றம்)
தசவதாரத்தின் ஐந்தாவது அவதாரமான வாமண அவதாரமே முழுமனிதனாக திருமால் எடுத்த அவதாரமென புராணங்கள் கூறுகின்றன. பரிணாமக் கொள்கைபடி முழு மனிதனை இந்த அவதாரம் குறிக்கிறது.

பரசுராம அவதாரம் – (மூர்கமாக வேட்டையாடும் மனிதன்)
தசவதாரத்தின் ஆறாவது அவதாரம் பரசுராம அவதாரம். மிகவும் மூர்க்க மனிதராக இந்த அவதாரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. கோடாரி ஆயுதத்தினை சிவனிடமிருந்து பெற்ற மனிதராக பரசுராமர் புராணங்களில் குறிப்பிடப்படுகிறார். மனிதனாக மாற்றம் அடைந்த பின்பு, மிருகங்களை மூர்க்கதனமாக வேட்டையாடியதை இந்த அவதாரம் குறிக்கிறது.

ராம அவதாரம் – (குழுக்களாக இணைந்து தலைவனை தேர்ந்தெடுத்தல்)
தசவதாரத்தின் ஏழாவது அவதாரமான ராம அவதாரம் இராவணனை அழிப்பதற்காக திருமாலால் எடுக்கப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. மனிதன் குழுக்களாக இணைந்து தலைவனை தேர்ந்தெடுத்து வாழ்ந்தமையை ராம அவதாரம் குறிக்கிறது.

பலராம அவதாரம் –(விவசாயம் செய்யும் மனிதன்)
தசவதாரத்தின் எட்டாவது அவதாரம் பலராமர். கிருஷ்ணனின் அண்ணனாக திருமால் அவதரித்தாக புராணம் கூறுகிறது. பலராமர் கைகளில் ஏர் கலப்பை விவசாயம் செய்யும் மனிதனை குறிக்கிறது.

கிருஷ்ண அவதாரம் – (கால்நடைகளை மேய்க்கும் மனிதன்)
தசவதாரத்தின் ஒன்பதாவது அவதாரம் கிருஷ்ணவதாரம். கிருஷ்ணன் கம்சன் எனும் அரக்கனை அழிக்க அவதரி்த்ததாக புராணங்கள் கூறுகின்றன. கிருஷ்ணன் ஆடுகளையும், மாடுகளையும் மேய்க்கும் சிறுவனாக இருந்தது கால்நடைகளை தங்களின் வேலைகளுக்கு பயன்படுத்திக் கொண்ட மனிதர்களின் பரிணாமத்தினை குறிக்கிறது.

கல்கி அவதாரம் –
தசவதாரத்தின் இறுதி அவதாரம் கல்கியவதாரமாகும். கலியுகத்தின் முடிவில் திருமால் எடுக்கும் அவதாரமாக புராணம் கூறுகிறது. ஆயுதங்களும், வாகனமும் கொண்ட அவதாரமான கல்கி தினம் தினம் சிந்தனையில் வளர்ந்து கொண்டிருக்கும் மனிதன் மகாசக்தியாக மாறுவதை குறிப்பதாகும்.

மேலைநாட்டு அறிஞர்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு ஆய்வு செய்து அறிந்து கொண்ட பரிணாமவியல் கொள்கை இந்து மதத்தின் தசவதாரத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தெளிவுற எடுத்துரைக்கப்பட்டுள்ளமை வியப்பானதல்லவா?.

நன்றி –
வலைப்பூக்கள்

ஆயிரத்தில் ஒருவன் – பாகம் 3

“மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்” என்று கடமையை மூச்சாக கொண்ட எம்.ஜி.ஆருக்கு, அவருடைய மூன்றெழுத்தினையே மூச்சாக கொண்ட ஆயிரமாயிரம் ரசிகர்கள் கிடைத்தார்கள். இன்று கூட மூன்றெழுத்து மந்திரம் என்று எம்.ஜி.ஆரை சுட்டுகின்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எம்.ஜி.ஆருக்கும் மூன்று என்ற எண்ணிற்குமான தொடர்பு அவருடைய பெயரிலிருந்து ஆரமித்தாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவருடைய வரலாற்றினை உற்றுநோக்கினால், ஏனோ அவர் பிறந்ததிலிருந்தே அந்த மூன்று என்ற எண் அவரை பின் தொடர்ந்து வருவதை நம்மால் காணமுடியும்.

“என்னங்கடா 12லிருந்து 5 கழிச்சா 7ங்குவீங்க போலிருக்கே” என வசூல்ராஜா படத்தில் கமல் பேசும் வசனத்தினை கூட நீங்கள் நினைத்துக் கொள்ளலாம். இது கொஞ்சம் அறிவற்ற தன்மைதான் என்றாலும் சுவாரசியமானது.

21. அன்னை சத்தியபாமா அவர்களுக்கு நான்காவது பிள்ளை சக்ரபாணி அவர்கள். எம்.ஜி.ஆர் ஐந்தாவது பிள்ளை தான். எம்.ஜி.ஆர் அவர்கள் பிறந்த பிறகே இரண்டு சகோதரிகளும் ஒரு சகோதரரும் என மூன்று முன்னோர்கள் அடுத்தடுத்து இறந்து போனார்கள். எம்.ஜி.ஆரின் தந்தை கோபாலமேனன் காலமானபோது எம்.ஜி.ஆருக்கு வயது மூன்று.

22. என்னுடைய புது முயற்சிகளுக்கு மற்றவர்களை துன்பத்தில் ஆழ்த்த விரும்பவில்லை என்று கூறி எம்.ஜி.ஆர் பிச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவத்தினை உருவாக்கினார். அதன் மூலம் நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய மூன்று படங்களைத் தயாரித்தார் எம்.ஜி.ஆர்.

23. நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் என மூன்று படங்களை சொந்தமாக இயக்கியுள்ளார் எம்.ஜி.ஆர். இதில் நாடோடி மன்னன் தலைநகர் சென்னையில் மூன்று திரையங்குகளில் 100 நாட்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது.

24. எம்.ஜி.ஆரின் முதல் மனைவி பார்கவி என்கிற தங்கமணியை அன்னை சத்தியபாமாவின் கட்டாயத்தினால் 1941ல் திருமணம் செய்து கொண்டார். 1942ல் தங்கமணி நோய்வாய்ப்பட்டு இறந்த பிறகு எம்.ஜி.ஆர் சதானந்தவதியை 1944ல் திருமணம் செய்து கொண்டார். சதானந்தவதி அவர்களுக்கு 3-வது மாதத்தில் கர்ப்ப சிதைவு ஏற்பட்டது. பிறகு அடுத்து சதானந்வதி அவர்கள் கர்ப்பமாக இருந்தபோது உடல் நலம் குறைவு ஏற்பட்டு மருத்துவர்கள் யோசனைப்படி அந்த குழந்தையும் கலைக்கப்பட்டது. இருந்தும் சதானந்தவதி இறந்துபோனார். அதன் பின் தான் காதலித்த ஜானகி அம்மையாரை மூன்றாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார் எம்.ஜி.ஆர்.

25. 1977,1980,1984 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் தொடர்ந்து வெற்றிப் பெற்று மூன்று முறை தமிழக முதல்வராக பதவி வகித்தார் எம்.ஜி.ஆர். கி.பி 1920ல் அ. சுப்பராயலு ரெட்டியார் முதல் முதல்வராக இருந்ததிலிருந்து இன்றுவரை தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்தது எம்.ஜி.ஆர் மட்டுமே.

26. 1967 ஜனவரி 12 ந்தேதி எம்.ஜி.ஆர் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டார். முதல் சிகிச்சைக்குப் பிறகு ராயப்பேட்டை ஆஸ்பத்திரிலிருந்து சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் மாற்றப்பட்டார். எம்.ஜி.ஆர். கழுத்தில் பாய்ந்த குண்டு, மூன்று முக்கிய நரம்புகளுக்கு இடையே பதிந்திருந்ததால் அதனை அகற்றினால் பெரிய பிரட்சனையாகலாமென அப்படியே விட்டுவிட்டார்கள். இப்படி துப்பாக்கி குண்டோடு வாழ்ந்தவர்களில் மாவீரன் நெப்பொலியனும் ஒருவர்.

27. ஜானகி அம்மையாரின் முதல் கணவர் நடிகரும் ஒப்பனையாளருமான கணபதிபட் ஆவார். இவர்கள் இருவருக்கும் அப்பு என்கிற இரவீந்திரன் என்னும் மகன் இருந்தார். எனினும் எம்.ஜி.ஆர் மீதான காதலால் கணவரை விவாகரத்து செய்துவிட்டு எம்.ஜி.ஆரின் மூன்றாவது மனைவியானர். ஜானகி அம்மையார் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடத்த படம் மூன்று. அவை கோவிந்தன் கம்பெனி தயாரித்த “மருதநாட்டு இளவரசி”, எம்.கே.தியாகராஜ பாகவதர் தயாரித்த “ராஜமுக்தி”, ஜுபிடர் தயாரித்த “மோகினி”.

28. எம்.ஜி.ஆரின் கொடைத்தன்மை உலகம் அறிந்ததே. அந்த வள்ளல் தன்மையை குறிக்கும் பொருட்டு அவருக்கு ஏராளமான அடைமொழிகள் மக்களால் வழங்கப்பட்டன. அதில் ஒன்று முக்கை கொண்டவர் என்பதாகும். அதாவது வலக்கை, இடக்கையோடு ஈகை எனும் கையும் உடையவர் என்று பொருள்படும்படி கூறப்பட்டது.

29. நாடகம், திரைப்படம், அரசியல் என்று மூன்று துறைகளில் ஜொலித்த எம்.ஜி.ஆருக்கு அரசியல் பாடம் கற்றுக் கொடுத்து, அன்போடு இருந்தவர் அண்ணா என்ற மற்றொரு மூன்றெழுத்துக்காரர். அண்ணாவினைப் போல தி.மு.க என்ற முன்றெழுத்து கட்சியை அதிகம் நேசித்தார் எம்.ஜி.ஆர். தனிக் கட்சி தொடங்கியபோது கூட தி.மு.க என்ற மூன்றெழுத்தினையும், அண்ணா என்ற மூன்றெழுத்தினையும் இணைத்தே அண்ணா தி.மு.கவென கட்சிக்கு பெயர்வைத்தார்.

30. முப்பிறவி, இப்பிறவி, மறு பிறவி என்று மூன்று பிறவிகள் இருப்பதாக பலர் நம்பிக்கொண்டுள்ளார்கள். ஆனால் வாழ்நாளில் மூன்று பிறவிகளை கண்டவர் எம்.ஜி.ஆர். “செத்துப் பிழைச்சவன்டா – எமனை பார்த்து சிரிச்சவன்டா” என்று வாலிப கவிஞர் வாலி எழுதிய வார்த்தைகள் எத்தனை சத்தியமானவை.

ஆயிரம் புகழ் மாலைகளை நோக்கி…

முந்தைய பாகங்கள் –
ஆயிரத்தில் ஒருவன் – பாகம் 1
ஆயிரத்தில் ஒருவன் – பாகம் 2

ஆயிரத்தில் ஒருவன் – பாகம் 2

11)இன்றைக்கு நாய்களையும், பூனைகளையும் வளர்க்கின்ற பிரபலங்களை நமக்கு தெரியும். ஆனால் எம்.ஜி.ஆர் சிங்கத்தினை செல்ல பிராணியாக வளர்த்தார். அதுவும் ஒன்றல்ல,. இரண்டு. ஆண் சிங்கத்தின் பெயர் ராஜா. பெண் சிங்கத்தின் பெயர் ராணி.

12)1959 ஆம் ஆண்டு டைரக்டர் கே.சுப்ரமணியம் முயற்சி காரணமாக “தமிழ் நடிகர் சங்கம்” தொடங்க ஏற்பாடுகள் நடந்தன. அப்போது தெலுங்கு, மலையாளம் நடிகர்களும் இங்கிருந்தே இயங்கினார்கள். அதனால் எம்.ஜி.ஆர் “தென்னிந்திய நடிகர்கள் சங்கம்” என்று பெயர்மாற்ற யோசனை கூறினார். அவர் யோசனைப்படியே தென்னிந்திய நடிகர்கள் சங்கம் உருவானது. இன்றுவரை அந்தபெயரே நிலைத்திருக்கிறது.

13)எம்.ஜி.ஆரும், சிவாஜியும் ஒருவர் மீது ஒருவர் பாசமும், மரியாதையும் வைத்திருந்தார்கள். எம்.ஜி.ஆரை சிவாஜி “அண்ணன்” என்றே அழைப்பார். சிவாஜியை எம்.ஜி.ஆர். “தம்பி” என்று குறிப்பிடுவார். பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகளின்போது, எம்.ஜி.ஆர். வீட்டில் இருந்து சிவாஜி வீட்டுக்கு இனிப்பு போன்ற உணவுப் பண்டங்கள் போகும். அதேபோல் எம்.ஜி.ஆருக்கு சிவாஜி கணேசன் வீட்டில் இருந்து பொங்கல், பழங்கள் முதலியன போகும்.

14)நாடோடி மன்னன் படத்தைத் தயாரித்து தானே இயக்கினார் எம்.ஜி.ஆர். இந்த படத்திற்காகவே வாகினி ஸ்டுடியோவில் உணவுக்கூடம் (மெஸ்) ஒன்றை திறந்தார் எம்.ஜி.ஆர். அதற்கான செலவில் ஒரு படமே எடுத்திருக்கலாம் என்கிறார்கள். அத்தனை தரமான உணவுகளை உழைப்பவர்களுக்காக கொடுத்தார் எம்.ஜி.ஆர்

15)தன் சிறு வயதில் தங்கள் சொந்த ஊரான பரமக்குடியில் ஒரே தியேட்டரில் 100 தடவைக்கு மேல் மதுரை வீரன் படத்தை தினமும் தொடர்ந்து பார்த்ததாக நடிகர் கமலஹாசன் கூறியிருக்கிறார். மக்களோடு மக்களாக எம்.ஜி.ஆர் இணைந்தபடம் இது.

16) சதிலீலாவதி எம்.ஜி.ஆருக்கு எப்படி முதல்படமோ, அதைப்போலவே டி.எஸ்.பாலையா, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் முதல் படம் அதுவே. ஜெமினி அதிபர் எஸ்.எஸ். வாசனின் சினிமா உலகப் பிரவேசம் இதில்தான் ஆரம்பமானது. அவர் ஆனந்த விகடன் இதழில் எழுதிய சதிலீலாவதி தொடர் நாவல்தான் படமாகியது.

17) தந்தை இயக்குனராகவோ, தயாரிப்பாளராகவோ இருந்தால் இப்போதெல்லாம் உடனே கதைநாயகனாகிவிடுகிறார்கள் மகன்கள். இவர்களைப் போல எடுத்தவுடன் கதாநாயகன் ஆனவர் அல்ல எம்.ஜி.ஆர். திரை உலகில் கதாநாயகன் அந்தஸ்து கிடைக்கு 11 வருடங்கள் அவர் போராடினார்.

18) “மலைக்கள்ளன்”, நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை எழுதிய நாவலாகும். கருணாநிதி வசனத்தில், எம்.ஜி.ஆர் நடித்த இந்த படம் வெற்றிபடம். இந்த தாக்கத்தில் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம் என பிற ஐந்து மொழிகளிலும் படமாக்கப்பட்டது. ஆக ஆறு மொழிகளிலும் வெற்றி பெற்றது மலைக்கள்ளன் எனும் தமிழ் நாவல்.

19) எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்து தயாரித்த “ராஜமுக்தி” படத்தில் ஜானகி கதைநாயகி. எம்.ஜி.ஆர் தளபதியாக நடித்தார். எம்.ஜி.ஆரின் முதல் மனைவி பார்கவி என்கிற தங்கமணி போலவே ஜானகி இருந்ததால் எம்.ஜி.ஆருக்கு தடுமாற்றம் ஏற்பட்டது. அதன் பின் ஜானகியும் எம்.ஜி.ஆரும் காதலர்களானார்கள்.

20) எம்.ஜி.ஆருக்கு ஆயிரம் பட்டங்களை தந்திருந்தாலும், பலருக்கும் பிடிக்கின்ற பட்டம் “பொன்மனச் செம்மல்” என்பதே. இந்த பட்டத்தினை தந்தவர் முருக பக்தர் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள்.

ஆயிரம் புகழ் மாலைகள் நோக்கி…

முந்தைய பாகம் –
ஆயிரத்தில் ஒருவன் – பாகம் 1

ஆயிரத்தில் ஒருவன் – பாகம் 1

எம்.ஜி.ஆர் இறந்த அதே 1987 -ல் நான் பிறந்தேன். பின் எவ்வாறு நான் எம்.ஜி.ஆர் ரசிகனானேன்? என்பதை எண்ணுகையில் வியப்பாக இருக்கிறது. எம்.ஜி.ஆர் ஆரமித்துவைத்த சத்தணவு திட்டத்தின் மூலம் எங்கள் ஊரில் ஒரு பெண்ணிற்கு வேலை கிடைத்தது. அந்த வேலையை வைத்து அவளின் ஆறு பெண் பிள்ளைகளையும் நன்றாக வளர்க்க முடிந்தது. அந்த ஆறில் ஒருவர் என் அன்னை. அந்த பெண்மணி என் அம்மாச்சி. இதனால் அம்மாச்சி எப்போதுமே எம்.ஜி.ஆரைப் பற்றி புகழந்து கொண்டிருப்பார். அம்மாச்சிக்கு அரசியல் தெரியாது அதனால் அவர் எம்.ஜி.ஆரின் அரசியல் பற்றி புகழமாட்டார். அம்மாச்சி அதிகமாக படங்களை பார்த்தது கிடையாது, பாட்டாளியாக உழைக்கவே நேரமில்லாத காலத்தில் படம் எப்படி பார்ப்பார். அதனால் எம்.ஜி.ஆரின் படங்களைப் பற்றி அதிகம் புகழமாட்டார். அவர் எம்.ஜி.ஆர் பற்றி கூறுவதெல்லாம் சத்துணவு சார்ந்தவைகள் மட்டுமே.

எம்.ஜி.ஆர் திருச்சிராப்பள்ளியில் அந்த திட்டத்தினை ஆரமித்துவைத்தது முதற்கொண்டு, அந்த திட்டத்தில் கொடுக்கப்பட்ட காய்கறி அளவுகள், எண்ணைய், பருப்பு வைகைகளின் அளவுகள் என்று எல்லாமும் அம்மாச்சிக்கு அத்துபடி. கட்டைவிரல் மடக்கி நான்கு விரல்களை அளவாக காண்மித்து “அந்த காலத்துல இம்புட்டு எண்ணைய் ஒரு புள்ளைக்குன்னு கொடுப்பாங்க பாரு. அதே அளவு எடுத்துப் போட்டா,.. புள்ளைகளுக்கு கழிசலே வந்துடும்” என்பார். “அம்மாம் பெரிசா யானமெல்லாம் தன் கையாலேயே கொடுத்தாரு” என்று சொல்லும் போது அம்மாச்சியின் கண்களில் இன்றும் பிரகாரம் மிளிரும். இப்படி ஆயிரம் முறை கூறக் கேட்டும் இன்னும் சலிக்காமல் இருப்பதுதான் எம்.ஜி.ஆரின் புகழ்.

அதன் பின் எம்.ஜி.ஆரின் திரைப்படம், அரசியல், அன்பு, ஈகை, வீரம் என பல பரிணாமங்களை கண்டு இன்றும் வியந்து கொண்டிருக்கிறேன். எம்.ஜி.ஆர் பற்றி படிக்கும் போதும், பிறர் பேச கேட்கும் போதும் மனம் துள்ளலாக இருக்கும். அவரைப் பற்றி விக்கியில், வலையில், முகநூலில் என கிடைக்கும் இடங்களிலெல்லாம் எழுதி தள்ளியிருக்கிறேன். சகோதரனிலும் அவரைப் பற்றி சில இடுகைகள் எழுதியிருப்பேன், என்றாலும் ஒரு தொடராக அவரைப் பற்றி எழுத வேண்டும் என ஆசைப்பட்டேன். அதற்காகவே அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு சென்று கடந்த சில வாரங்களாக செய்திகளை சேகரித்துக் கொண்டிருக்கிறேன்.

“நான் ஏன் பிறந்தேன்” என்று எம்.ஜி.ஆர் தொடங்கி, அவருடன் இருந்த புகைப்படக்காரர் வரை எம்.ஜி.ஆர் வாழ்வில் நடந்த பல்வேறு சுவாரசியங்களை தந்துள்ளார்கள். அவைகள் நூலகத்தில் இருக்கின்றன. ஆனால் இணையத்தில் சொற்பமே கிடைக்கின்றன. அவைகளில் சுவாரசியம் மிகுந்தவையை சிறு சிறு தகவல்களாக தந்தால் நன்றாக இருக்கும். ஏற்கனவே எம்.ஜி.ஆர் 25 என ஆனந்தவிகடன் வெளியிட்டு விட்டது. எம்.ஜி.ஆர் 100 என நக்கீரன் புத்தகமே வெளிவந்துள்ளது. இவைகளைப் போல ஆயிரம் தகவல்களை திரட்ட முடிவு செய்திருக்கிறேன். அப்படியே சுவாரசியம் குன்றினால் தொகுத்தோடு நிறுத்திவிடலாம். நம்பிக்கை இருக்கிறது. இனி ஈசன் அருள் செய்ய வேண்டும்.

ஆயிரத்தில் ஒருவன் –

1) ஒரு வருடத்தின் உதயம் ஜனவரி மாதம். மறைவு டிசம்பர் மாதம். எம்.ஜி.ஆர் உதித்தது ஜனவரி 17, 1917, மறைந்தது டிசம்பர் 24, 1987. இதை ஆண்டவனின் விளையாட்டாக எண்ணுவதா, இல்லை விருப்பமாக எண்ணுவதா என தெரியவில்லை. எம்.ஜி.ஆரின் பிறப்பும், இறப்பும் கூட தனிசிறப்பாக இருக்கிறது.

2) எம்.ஜி.ஆருக்கு ஒரு பைட் மாஸ்டருக்கு என்ன என்ன தெரிந்திருக்க வேண்டுமோ, அத்தனையும் தெரியும். சிலம்பம், வாள், குஸ்தி, குதிரையேற்றம், தற்காப்பு கலைகள், சண்டை முறைகள் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

3) எம்.ஜி.ஆர் இருந்த காலத்தில் குறைந்த வேகத்தில் சண்டைகளை எடு்த்துவிட்டு, பின் திரையில் அதிக வேகத்துடன் ஓட வைக்கும் கேமிராக்கள் வரவில்லை. எம்.ஜி.ஆரும், நம்பியாரும் மோதும் காட்சிகளில் இருக்கும் வேகம் உண்மையான சண்டை வேகம்.

4) “காதல் வாகணம்” என்ற தேவர் பிளிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படத்தில் எம்.ஜி.ஆரை பெண் வேடத்தில் காணலாம். நாடகத்துறையில் இருந்தபோது நிறைய முறை பெண் வேடமேற்று நடித்திருந்தாலும், திரையுலகில் எம்.ஜி.ஆர் பெண்ணாக நடத்தது ஒரே ஒரு படத்தில்தான்.

5) அண்ணா தி.மு.க வின் கட்சி சின்னம் இரட்டை இலை. இந்த சின்னத்தினை எம்.ஜி.ஆர் உருவாக்கவில்லை, தேர்ந்தெடுக்கவும் இல்லை. அப்போதெல்லாம் சுவர் ஓவியங்கள் மூலமாகவே விளம்பரம் செய்ய வேண்டிருந்தது. எனவே இந்த இலை சின்னம் வரைய எளிதாக இருக்கும் என்று தேர்ந்தெடுத்தவர் திண்டுகல் தொகுதி வேட்பாளர் மாயத் தேவர். அந்தளவிற்கு செல்வாக்கு மிக்கவர்களாக தொண்டர்களைம், வேட்பாளர்களையும் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.

6) எம்.ஜி.ஆரின் தாய் சத்தியபாமாவின் குலதெய்வம் மூகாம்பிகை. அதன் காரணமாகவே எம்.ஜி.ஆருக்கு மூகாம்பிகையை பிடிக்கும். தாயார் இறந்த பின் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். மூகாம்பிகையை பார்க்கும் போதெல்லாம் என் தாயை பார்ப்பது போல இருக்கிறது என்பார்.

7) தமிழக மக்களுக்கு “எம்.ஜி.ஆர்”. நடுநிலை பேசுகிறவர்களுக்கு “எம்.ஜி.ராமச்சந்திரன்”. தொண்டர்களுக்கு “புரட்சி தலைவர்”. இப்படி பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும், எம்.ஜி.ஆரின் அன்பான செல்ல பெயர் என்ன தெரியுமா?. ராமு.

8) எப்போதுமே தரையில் சம்மனமிட்டு அமர்ந்து சாப்பிடுவதே எம்.ஜி.ஆருக்கு பிடிக்கும். விருந்தாளிகள் வந்தால் மட்டும்தான் டைனிங் டேபிலில் அமர்ந்து சாப்பிடுவாராம் எம்.ஜி.ஆர்.

9) டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்,பிளொட் இந்த பெயர்கள் உங்களுக்கு தெரிந்திருந்தால்,. நீங்கள் ஈழம் பற்றி அறிந்தவராவீர்கள். இத்துடன் சேர்த்து விடுதலைப்புலிகள் என ஐந்து அமைப்புகள் ஈழத்தினை பெறுவதற்காக போராடிக் கொண்டிருந்தார்கள். இவற்றில் விடுதலைப் புலிகள் மட்டும் மிகப் பெரும் அளவிற்கு வருவதற்கு பிரபாகரனும், அவருக்கு பக்கபலமாக இருந்த எம்.ஜி.ஆரும் காரணம்.

10) ரிக்சாகாரன் படவெற்றியை கொண்டாட சென்னையில் இருக்கும் 6,000 ரிக்சா காரர்களுக்கு மழைகாலங்களில் உதவியாக இருக்கும்படி, மழைநீர் கோர்டுகளை வாங்கிதந்தார். இன்று கூட ஆட்டோக்களில் எம்.ஜி.ஆரின் உருவம் பதித்து வலம் வர அவரின் இந்த தொழிலாளர்களை மதிக்கும் தன்மையை காரணமென நினைக்கிறேன்,.

ஆயிரம் புகழ் மாலைகள் நோக்கி…

தொட்டியச்சியம்மன் கதை – தமிழ் மண்ணின் சாமிகள்

தொட்டியம் நாயக்கர் பற்றியும், சோழிய வெள்ளாளர் பற்றியும் தெரிந்து கொண்டால் மட்டுமே நாட்டார் தெய்வமான தொட்டியச்சியின் கதையை அறிய முடியும். இந்த இரண்டு சமூகமும் தொட்டியச்சியின் கதையோடு பின்னிப்பிணைந்து இருக்கிறது. அதனால் இந்த சமூகங்களைப் பற்றி முதலில் சில வரிகள்,…

தொட்டியம் நாயக்கர்கள் –

தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்ட சமூகம். ஆந்திராவில் அதிகமாக வாழும் காப்பு என்ற இனத்தின் உட்பிரிவில் ஒன்றாக இந்த தொட்டியம் நாயக்கர்கள் இருக்கிறார்கள். காப்பு இன மக்கள் ஆந்திராவில் அதிகம் இருந்தாலும், தமிழகத்தில் தொட்டியம் நாயக்கர்கள் அதிகளவு உள்ளார்கள். தங்கள் பூர்வீகமான “கம்பளம்” நாட்டினை வைத்து ராஜகம்பளம் என்ற இனமாகவே தங்களை அடையாளம் காண விரும்புகிறார்கள்.

சோழிய வெள்ளாளர் –

தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட சமூகம்.  தமிழகத்தின் தென்பகுதியில் அதிகமாக வாழும் இல்லத்துப் பிள்ளைமார்(ஈழவர்) என்ற இனத்தின் உட்பிரிவில் ஒன்றாக இந்த சோழிய வேள்ளாளர்கள் இருக்கிறார்கள். ஈழவர் இன மக்கள் ஆந்திராவில் அதிகம் இருந்தாலும், தமிழகத்தில் சோழிய வெள்ளாளர் அதிகளவு உள்ளார்கள். தங்கள் பூர்வீகமான “சோழ” நாட்டினை வைத்து  சோழிய வெள்ளாளர் என்ற இனமாகவே தங்களை அடையாளம் காண விரும்புகிறார்கள்.

மணவாடி –

கரூர் மாநகரிலிருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும் சாலையில் இருக்கிறது மணவாடி என்ற குக்கிராமம். எனது சிற்றன்னையை மணம்முடித்து கொடுத்த ஊர் என்பதால் சிறுவயதிலிருந்தே மிகவும் நெருக்கமான ஊர். பாறை பூமி என்பதால் தண்ணீருக்கு கொஞ்சம் பஞ்சம். அதனாலேயே சோளப் பயிர்கள் வயல்களிலும், கள்ளி செடிகள் மற்ற இடங்களிலும் காணப்படும். சென்ற தலைமுறை வரை அத்தனை பேரும் விவசாயம் சார்ந்த தொழில்களையே செய்து வந்தார்கள். நிற்காது ஓடும் எண்ணை செக்கும், நிரம்பி வழியும் பசுமையும் காணப்படும். இப்போது கரூர் நகரின் வளர்ச்சியால் பலர் டெக்டைல்ஸ் தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். அதோடு இங்கு வயக்காடுகளின் வரப்போரங்களில் விளையும் குண்டுமணியையும், காதுகுத்தி முள்ளையும் வேறுபகுதியில் நான் கண்டதில்லை. பனை மரங்கள் அதிகம் இருந்த பகுதி இப்போது புதியதாக வந்திருக்கும் பணக்கார வெள்ளாளர்களால் பாசன வசதி செய்யப்பட்டு தென்னை தோப்பாக காட்சியளிக்கன்ற புதுமையும் காண முடிந்தது. குக்கிராமம் என்ற நிலையிலிருந்து தன்னை உயர்த்திக் கொள்ள ஆரமித்திருக்கிறது மணவாடி.

தொட்டியச்சி அம்மன் –

முக்கிய சாலையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் பக்கம் நடந்து சென்றால்தான் மணவாடி கிராமம் வரும். அப்படி கிராமத்திற்கு செல்லும் சாலையின் வலது பக்கத்தில் ஒரு ஒத்தயடி பாதை பிரிகிறது. அந்த பாதையில் நடந்து சென்றால் ஆள் அரவமற்ற இடத்தில் மிக பிரம்மாண்டமாய் விரிந்து நிற்கும் வேப்பம்மரத்தின் அடியில் மண்ணில் சொறுகப்பட்டிருக்கும் வேல்கம்புகளும், செங்குத்தான  நான்கு பெரிய கற்களும் தெரிகின்றன. அந்த கற்கள் திருவிழா காலங்களி்ல் குடில் அமைக்க வைக்கப்பட்டவை. அந்த நான்கு கற்களுக்கும் மத்தியில் முக்கோண வடிவம் என்று கணிக்கும்படியான கற்கள் வரிசையாக இருக்கின்றன. அவை கன்னிமார்கள். வலது புறம் இருப்பது பெரியசாமி, இடது புறம் இருப்பது கருப்புசாமி, அதோ அதுதான் தொட்டியச்சி என்றார் உடன் வந்த உறவினர். சரியான களமின்மை, இதுதான் நாட்டார் தெய்வங்களின் பலமும், பலவீனமும்.

கதை –

சுற்றிலும் அடர்ந்த காடுகளாக இருக்க, கரூர் மாநாகராக மாறியிறாத காலம். வேட்டைக்கு பழக்கம் செய்யப்பட்ட உயர் ரக நாய்களுடன் தொட்டியம் நாயக்கர்களில் ஒரு குழு வேட்டையில் ஈடுபட்டிருந்தது. அந்த குழுவில் ஆண்களுக்கு நிகராய் பெண்களும் வீரத்துடன் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். பெருமுயல்களை பிடிப்பதற்கு நிலத்தில் வலையமைத்தல், பெருமிருங்களை வேட்டையாட துப்பாக்கியை பயன்செய்தல் என பல வழிமுறைகளை கையாண்டனர். இரவு பகலாய் விலங்குகளை வேட்டையாடுதலில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு அவர்கள் குழுவில் இருந்த பெண்ணொருத்தி வழிதவறியது தெரியவில்லை. நெடுநேரத்திற்குபின் அந்த பெண் தவறியதை அறிந்து தேடத்தொடங்கினர்.

இரவு முழுவதும் தேடியும் அவர்களுக்கு பலன்கிடைக்கவில்லை. இது அந்த குழுவில் இருந்த மற்ற பெண்களுக்கு மிகவும் வேதனை தருவதாக இருந்தது. மறுநாள் காலையில் வழிதவறியப் அந்தப் பெண் மணவாடி கிராமத்திற்கு வந்தாள். வயல்வெளிகளில் வேலை செய்து கொண்டிருந்த சோழிய வெள்ளாள மக்கள் வேட்டை தோரனையுடன் குதிரையில் வீரத்தின் உருவாகவே வந்து நிற்கும் பெண்ணைக் கண்டு அசந்து போனார்கள். அவள் வழிதவறி அலைவதையும், அவளுடன் வந்த கூட்டம் அவளை தேடுவதையும் அறிந்துகொண்டார்கள். அந்தப் பெண்ணின் துயர் தீர்க்க ஆட்கள் சிலரை தொட்டியம் நாயக்கர்களை தேடி அனுப்பினார்கள். அந்த ஆட்களும் விரைந்து தேடுதலில் ஈடுபட்டார்கள்.

ஒரு வழியாக தொட்டியம் நாயக்கர் குழுவானது கண்டுபிடிக்கப்பட்டு, வழிதவறிய அந்த வேட்டைக்காரப் பெண்ணோடு சேர்த்துவைக்கப்பட்டது. பெருநிம்மதியுடன் தங்கள் வேலையை பார்க்க திரும்பிய சோழிய வெள்ளாளர்களுக்கு தொட்டியம் நாயக்கர்களின் கட்டுக்கோப்பான கட்டுப்பாடுகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான். அது இரவு முழுதும் வேறு இடத்தில் தங்கியப் பெண்ணை மீண்டும் தங்கள் குழுவுடன் இணைத்துக் கொள்ளக் கூடாது என்ற கட்டுப்பாடு. அந்தப்பெண் தவறு செய்யவில்லை என்று அறிந்தும் கூட மனதினை கல்லாக்கிக் கொண்டு சமூகத்தின் கட்டுப்பாட்டினை காப்பாற்ற, அவளை அங்கேயே விட்டுவிட்டு சென்றனர். தன் இனமக்களின் பிரிவினை தாங்கமுடியாமல் அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்கிறாள்.

இந்த செய்தி சோழிய வெள்ளாளர்களுக்கு தெரியவருகையில் மிகவும் வருத்தம் கொள்கின்றார்கள். பிள்ளைமாரான சோழிய வெள்ளாளர்கள் கன்னி தெய்வங்களை வழிபடும் வழக்கம் கொண்டவர்கள்.பொதுவாக தன் வீட்டு கன்னி தெய்வங்களை தங்கள் வீட்டிலேயே வைத்து வணங்குதல்தான் வழக்கம்.தங்கள் இனமில்லை என்ற போதும் தங்கள் மண்ணில் உயிர்நீத்த பெண்ணை வணங்குவதென ஒருமித்து தீர்மானித்து இன்று வரை வணங்கி வருகிறார்கள். தொட்டியச்சி என்ற தொட்டியம் நாயக்கர் சமூகத்தின் பெயரையே தெய்வத்தின் பெயராக சொல்கிறார்கள். இறந்தபோன அந்தப் பெண்ணின் உண்மைப் பெயர் தெரியவில்லை. மேலும் தொட்டியம் நாயக்கர் சமூகத்திலிருந்து ஒரு தம்பதியை அழைத்துவந்து, அவர்கள் தலைமையில் தான் தொட்டியச்சியின் திருவிழாவினை சோழிய வெள்ளாளர்கள் நடத்துகிறார்கள்.

மிகவும் சுருக்கமாக சொல்வதானல் சமூகத்தின் கட்டுப்பாட்டினால் ஒதுக்கிவைக்கப்பட்டு இறந்த போன ஒரு பெண் தெய்வமான கதைதான் தொட்டியச்சியின் கதை.

இந்து மதம் ஒரு பொக்கிசம்

இந்த மதம் தான் இந்து மதம் என்றில்லை, எல்லா மதமும் இந்து மதம்தான் என்பதே என் கருத்து. 2010ம் ஆண்டு இந்த களம் பற்றிய சிந்தனை வந்தது. அன்றைய காலக்கட்டத்தில் மதம் பற்றி அறிந்திருந்தைவிட இப்போது பன்மடங்கு அதிகமாக அறிந்திருக்கிறேன். அப்போது பெருந்தெய்வங்களை மட்டுமே அறிந்திருந்த நான், இப்போது நாட்டார் தெய்வங்களைப் பற்றிய அறிவையும் வளர்த்திருக்கிறேன். அத்துடன் தத்துவார்த்த நிலைகளைப் பற்றிய புரிதல்களை நோக்கி சென்றுகொண்டிருக்கிறேன். என்னிடமிருந்த மாற்று மதங்களின் மீதான வெறுப்புணர்வு அம்மதங்களின் அடிப்படைகளைப் புரிந்து கொண்டமையால் குறைந்திருக்கிறது. அப்பாவிடம் இருந்து வந்த கடவுள் மறுப்பும், இப்போது திராவிட நண்பர்களிடம் இருந்து கிடைக்கப் பெரும் பகுத்தறிவும் என்னுடைய கட்டுரைகளை செம்மையாக்க உதவும் என நினைக்கிறேன். என்நிலை வர்ணனை இதோடு போதும் கட்டுரைக்கு செல்வோம்.

கோவில் நிகழும் பாகுபாடு –

நீங்களும் நானும் கோவிலுக்கு செல்கிறோம் என்றால், முதலில் காலணிகளை கழற்றி வைத்துவிட்டு கோவிலுக்குள் நுழைவோம். அடுத்தாக முதல் நாயகன் விநாயகரை வணக்க வேண்டும். ஆனால் அவற்றுக்கும் முன் அரசாங்கத்திற்கு வருமானம் கொடுக்க அர்சனை ரசிதையும், நுழைவு ரசிதையும் பணம் கொடுத்து பெற்றுக் கொள்ள வேண்டும். நமது பொருளாதாரத்தினைப் பொருத்தும், நம்மைபோல் கோவிலுக்கு வருகின்றவர்களின் கூட்ட நெரிசலை கண்டும் சில இடங்களில் ரூபாய் 5க்கு ஆரமிக்கும் நுழைவு ரசிதானாது, ரூபாய் 2000 வரை செல்கிறது. அதல் ஏதேனும் ஒன்றை பெற்றுக் கொள்வது அவசியம். இல்லாவிட்டால் கடவுளின் தரிசனம் என்பது இல்லை என்பதை கொள்கையாக வைத்துள்ளார்கள்.

சரி கட்டமில்லா தர்ம தரிசனம் இருக்குமென்று நினைத்தால், சில கோவில்கள் அது போன்ற வசதியை முழுவதுமாகவே மறுத்துவிடுகிறார்கள். இன்னும் சில கோவில்களில் தர்ம தரிசனம் என்று பெரிய மக்கள் வரிசையில் காத்திருப்பார்கள், அவர்களுடன் நாமும் இணைந்து கொள்ள வேண்டும். அதிக பணம் கொடுத்தவன் அரை நொடியில் கடவுளை தரிசனம் செய்து திரும்பிவிடுவான். பணம் குறைய குறைய நேரம் கூடிக்கொண்டே போகும். பரமபத பாம்பு போல சுற்றி சுற்றி வருமாறு வைக்கப்பட்டிருக்கும் இரும்பு பாதையில் வரிசையில் வர வேண்டும். கால் வலிக்க நெடுநேரம் நின்றும் நடந்தும் வந்தாலும் கடவுள் இருக்கும் கருவரையின் பத்தடி தூரத்திற்கு முன்பே தடுத்து நிறுத்தப்படுவோம். அங்கிருந்தபடியே கடவுளை வேண்டிக்கொண்டு திரும்ப வேண்டியதுதான். நமக்காக ஒரு தீபாரதனையோ, அர்ச்சனையோ தர்ம தரிசனத்தில் கிடையாது. விபூதி, குங்குமம், பூ என எந்த அர்ச்சிக்கப்பட்ட பிரசாதமும் இல்லை. மேலும் நம்மைப் போல கட்டமில்லாமல் கடவுளை தரிக்கவந்து வரிசையில் இருக்கும் பக்தர்களுக்காக உடனே நகர்ந்துவிட வேண்டும்.

இது போல ஏழை பக்தர்களை இம்சை செய்தும், பணக்கார பக்தர்களுக்கு மரியாதை செய்வது ஏதோ தனியார் கோவில்களில் நடைபெறும் செயல் அல்ல. இந்து சமய அறநிலையத்துறை எனும் அரசாங்கத்தின் ஒரு பிரிவின் கீழ் வரும் கோவில்களில்தான் இந்த கொடுமை. கோவில் பராமரிப்புக்காகவும், ஏனைய இந்து சமய அற நிலையத்துறையின் செயல்பாடுகளுக்காக இந்த கட்டணவசூலா என்ற சிந்தனை எழும்வேளையில், கோவில்களை கட்டிபோட்டு அதை பராமரிக்கும் முறைகளை புறக்கணித்து சென்றுவிட்டார்களா நம்முன்னோர்கள் என்ற கேள்வி எழுகிறது.

கண்டுகொள்ளப்படாத கோவில் நிலங்கள் –

பண்டைய தமிழர்களின் கலைதிறனை மட்டுமல்ல, நிர்வாகத்திறனையம் நாம் கோவிலில் கண்டுகொள்ளாலாம். பெரும் கோவில்களோ, சிறு கோவில்களோ அவற்றை நடத்த கூடிய பொருளாதார வழிகளுக்கு எல்லா முன் ஏற்பாடுகளும் அவர்களால் செய்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த பொருளாதார வழியின் அச்சாணி கோவில் நிலங்களும், கோவிலுக்காக நேந்து விடப்படும் மாடுகளும்,ஆடுகளும்,கோழிகளும்தான். ஒவ்வொரு கோவிலுக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நிலங்கள் சொத்தாக பக்தர்களாலும், அரசனாலும் கொடுக்கப்பட்டன. இதில் விளைநிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயிகள் பயிர் செய்தார்கள். கிடைக்கும் லாபத்தில் நிலத்திற்கான குத்தகை பணத்தினை கோவில் நிர்வாகத்திற்கு தந்தார்கள். நிலங்கள் மூலமாக கணிசமான பணத்தொகை கிடைக்க, மாடுகளும்,ஆடுகளும் மேய்ப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அத்துடன் மேச்சல் நிலமும் தரப்பட்டது. ஆடு மாடுகளிடமிருந்து கிடைக்கும் குறிப்பிட்ட பாலை கடவுளுக்கு நெய்வெய்தியம் செய்ய கொடுத்தவிட்டால் போதும் என்பது போன்ற நுட்பமான கோட்பாடுகளை வகுத்திருந்தார்கள். விளை நிலங்கள் என்றுமட்டும் இல்லாமல் வீடுகளும், கடைகளும் நவீன காலத்திற்கு ஏற்ப இப்போதும் சொத்தாக கொடுக்கப்படுகின்றன.

கடந்த 2011 செப்டம்பர் மாத கணக்குபடி இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில், 4 லட்சத்து, 78 ஆயிரத்து, 463 ஏக்கர் நன்செய், புன்செய், மானாவாரி நிலம் இருக்கிறது. இந்த நிலங்களை முறையாக குத்தகைக்கு வி்ட்டு கிடைக்கும் பணத்தினைக் கொண்டு செயல்பட்டால் இந்து கோவில்கள் புரணமைப்பு மட்டுமல்லாது, ஏனைய பிற செயல்பாடுகளிலும் தீவிரமாக இறங்க இயலும். அதுவும் கோவில் ஏழை பணக்கார பாகுபாடின்றி கடவுளை தரிசிக்க வரும் பக்தர்களை எவ்வித இன்னலுக்கும் ஆளாக்காமல் செய்யமுடியும். இது தவிர, 22 ஆயிரத்து, 599 கட்டடங்களும், 33 ஆயிரத்து, 627 மனைகளும் உள்ளன. இவற்றினை முறைப்படுத்தி வாடகை வசூல் செய்தால் இன்னும் சிறப்பாக பக்தர்களுக்கும், கோவிலுக்கும் நிறைய பணிகளை செய்ய முடியும்.

திறன் இல்லாத நிர்வாகம் –

மற்ற அரசு துறைகளை போல எந்த திட்டமிடுதலும், அதிரடி நடவெடிக்கையும் எடுக்காத துறையாக இந்து சமய அறநிலையத்துறை உள்ளது. நிலத்தையோ, கடையையோ நடப்பு குத்தகைக்கு விலைக்கு தராமல், என்றோ நிர்ணயக்கப்பட்ட குறைந்த பண அளவிலேயே இன்றளவும் குத்தகைக்கு விடப்படுகின்றன. பாரம்பரிய விவசாயிகள் எல்லாரும் பட்டா போட்டு நிலத்தினை விற்றுவிட துணிந்துவிட்ட இந்த நிலையில் கோவில் நிலங்கள் மட்டுமே மிகச்சிறந்த விளைநிலங்களாக உள்ளன. அதுவும் ஏக்கர் கணக்கில் ஒரே இடத்தில் கிடைப்பதை உணர்ந்த அரசியல்வாதிகளும், செல்வாக்கு மிகுந்தவர்களும். மிகக்குறைந்த குத்தகைக்கு கோவில் நிலங்களை எடுத்துவிட்டு, அந்த குறைந்த நில குத்தகை பணத்தினையும் தர மறுக்கிறார்கள்.

இப்படி குறைந்த குத்தகையைகூட தர மறுப்பவர்கள் மேல் வழக்கு தொடுக்க தனித்த சட்டமும், அந்த வழக்குகளை உடனடியாக தீர்க்க தனி நீதிமன்றங்களும் இல்லை என்பது வெட்ககேடான செயல். வருமானம் மிகுந்த வழிகளையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசு, மக்களை வாட்டி வதைப்பதில்தான் குறியாக உள்ளது. மதுரை, கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட ஆறு இடங்களில், வருவாய் நீதிமன்றங்களும், சேலம், மன்னார்குடி உள்ளிட்ட நான்கு இடங்களில், முகாம் நீதிமன்றங்களில் வெறும், 28 கோடி ரூபாய் குத்தகை நிலுவைக்காக, 28 ஆயிரத்து, 382 வழக்குகள் தொடரப்பட்டு, 13 ஆயிரத்து, 307 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை குத்தகைதாரர்கள் செலுத்திவிட்டனரா என்ற தகவல் இல்லை. இதுதவிர, இன்னும், 17 கோடி ரூபாய் குத்தகைப் பணம் தொடர்பாக, 15 ஆயிரத்து, 75 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்கிறது 2011 செப்டம்பர் மாத புள்ளிவிவரம்.

இந்து சமய அறநிலையத்துறை கோவில் நிலங்களையும், கடை, வீடுகளையும் இன்றைய காலக்கட்டத்திற்கு தகுந்தது போல விலை நிர்ணயம் செய்து குத்தகையை வசூல் செய்தாலே,. கோவில்களை பராமரிக்கவும், பக்தர்களை மகிழ்விக்கவும் தேவையான அளவுக்கும் மேல் பணம் கிடைக்கும் என்பது உறுதி. இந்த நிலை வர மெத்தனமாக இருக்கும் இந்து சமய அறநிலையத்துறையை விரைவாக செயல்பட வைக்க வேண்டும். அப்போதுதான் பக்தர்களிடம் பஞ்ச பாட்டு பாடி பணம் பிடுங்கும் வேலையை நிறுத்தி, உண்மையான பக்தர்களை எந்த கட்டணமும் இன்றி கடவுளை தரிக்க வைக்க செய்யமுடியும்,.

சிந்தனை செய்வோம்…

முந்தைய கட்டுரைகள் –

அந்த காலத்தில் கோவில்கள் 

இந்த காலத்தில் கோவில்கள்

இன்றைய கோவில்களின் நிலை

ஜோடியாக்(zodiac) – கொலையும் கலையும்

1960களிலின் இறுதியிலிருந்து 1970கள் வரை அமெரிக்காவின் கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோ மாகானத்தினை கதிகலங்க வைத்துக்கொண்டிருந்த பெயர் – ஜோடியாக்(zodiac). இது தொடர் கொலைகாரன் தனக்குத்தானே வைத்துக் கொண்ட பெயர். மக்கள் வைத்த பெயர் – ஜோடியாக் கில்லர். எத்தனையோ தொடர் கொலைகாரர்கள் இருக்கும் போது கொலையும் கலையும் தொடரில் ஏன் ஜோடியாக் பற்றி முதன்முதலாக சொல்கின்றேன் என்பதை,.. இந்த இடுகையை முழுமையாக படிக்கும் போது புரிந்து கொள்விர்கள்.

ஜோடியாக் கடிதங்கள் –

1961 வது வருடம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி, Vallejo Times Herald, San Francisco Chronicle, The San Francisco Examiner என்ற மூன்று பெரிய செய்திதாள் நிறுவனங்களுக்கும் ஒரு கடிதம் வந்தது. அதில் மிக சமீபத்தில் நடந்தேரிய இரண்டு கொலை சம்பவங்களையும் தானே செய்ததாகவும், ஒவ்வொரு கொலையிலும் குண்டுகள் உபயோகித்தது முதல், இறந்தவர்களின் ஆடைகள் வரை விவரமாக எழுதப்பட்டிருந்தது. ஆனால் பெயருக்கு பதிலாக cipher எனப்படுகின்ற ஒருவகை மாற்றுமொழியில் எழுதப்பட்ட கடிதமும் இணைக்கப்பட்டிருந்தது. அதனை முதல் பக்கத்தில் வெளியிட வேண்டும் என்றும் தவறினால், மக்கள் கொல்லப்படுவார்கள் என்றும் எழுதப்பட்டிருந்தது.

ஒரு வழியாக அந்த cipherக்கான விடையை கண்டுபிடித்தார்கள். ஆனால் அதை படிக்கும் போது உறைந்து போனார்கள். அக் கடிதம் ” நான் மக்களை கொல்ல ஆசைப்படுகிறேன். ஏனென்றால் அது மிக்க மகிழ்ச்சியை கொடுக்கின்றது” என்று ஆரமிக்கப்பட்டிருந்தது. அதைப் படிக்க படிக்க கடிதத்தினை எழுதிய நபர் சாதாரண ஆள் அல்ல என்பதை புரிந்துகொண்டார்கள். பின் ஆகஸ்ட் 7, 1969ல் மீண்டும் ஒரு கடிதம் வந்தது. அதில் “This is the Zodiac speaking” என்று தனக்குதானே சூட்டிக் கொண்ட பெயரை முதல்முதலாக அந்த கொலையாளி பதிவு செய்திருந்தான். அத்துடன் முன்பு நடந்த மூன்று கொலைகளுக்கும் தானே பொறுப்பேற்று. அதன் அதிகமாக குறிப்புகளையும் கொடுத்திருந்தான். ஆனால் வேறு எந்த இடங்களிலும் உண்மையான பெயரினை அவன் பதிவு செய்யவே இல்லை என்பது அதனுடன் இணைக்கப் பட்டிருந்த இன்னொரு cipherன் புதிரை விடுவிக்கும் போதுதான் தெரிந்தது.

Berryessa சம்பவம் –

Berryessa ஏரிக்கருகே பிக்னிக் சென்றிருந்த ஜோடியை ஜோடியாக் செப்டம்பர் 27, 1969ல் தாக்கினான். உல்லாசமாக இருந்த ஜோடியை கட்டிபோட்டுவிட்டு, கைகளில் துப்பாக்கி இருந்தும் கத்தியால் குத்திக் கொன்றான். இந்த சம்பவத்தில் மூலம் அவனுடைய உருவம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்கா முகமூடி அணிந்திருந்தான். மார்பில் ஒரு குறியீடு இருந்தது. அது ஜோடியாக் என்ற கைகடிகார நிறுவனத்தின் குறி்யீடோடு ஒத்துப்போனது பின் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இடத்திலிருந்து சுமார் 500 அடி தொலைவில் இங்கிருந்து திருடப்பட்டிருந்து கார் கதவில் “Sept 27 69 6:30 by knife” என்று குறிப்பிட்டுவிட்டு சென்றிருந்தான்.

தொடர் கொலைகளாலும், அதற்கடுத்து வரும் கடிதங்களாலும் நகரமே கதிகலங்கிப் போயிருந்தது. சான் பிரன்சிஸ்கோ காவல்துறை வரைபடமாக அவனின் உருவத்தினை வரைந்து வெளியிட்டது. இருப்பினும் தேடல்கள் ஓயவில்லை. இதற்கு மத்தியில் அக்டோபர் 11, 1969ல் மீண்டும் ஒரு கொலை நடந்தது. இந்த முறை ஜோடிகள் இல்லை, டாக்ஸி ஓட்டுனர் பலியாகியிருந்தார். பயணியாக டாக்ஸியில் ஏறிய கொலைகாரன். ஒரு தெருவில் ஓரமாக டாக்ஸியை நிறுத்த சொல்லி, பின்னால் அமர்ந்து கொண்டே தலையில் சுட்டிருக்கிறான்.

இந்தக்கொலை நடந்தபோது அதைக் கண்டவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இரண்டாவது வரைபடம் தயாரிக்கப்பட்டது. காவல் அதிகாரிகள் சந்தேகத்திற்கு இடமானவர்களை விசாரித்தனர். இரண்டு அதிகாரிகள் இந்த வழக்கிற்காக தனியாக நியமிக்கப்பட்டார்கள். அதன் பிறகும் கொலைகளும், கடிதங்களும் நிகழந்து கொண்டே இருந்தன. அவைகள் அனைத்தையும் விரிவாக கூறினால், கொஞ்சம் போர் அடிக்கும். எனவே அடுத்த விசயத்திற்கு செல்லுவோம்.

யார் ஜோடியாக் –

சான் பிரான்ஸிஸ்கோ காவல் அதிகாரிகள் நிறைய பேரை சந்தேகப்பட்டனர். அவர்களில் முக்கியமாக கருதப்பட்ட நபர்கள் மட்டும் ஏழு பேர்.

  1. Arthur Leigh Allen
  2. Bruce Davis
  3. Lawrence Kane
  4. Michael O’Hare
  5. Richard Marshall
  6. Ted Kaczynski
  7. Robert Hunter

இதில் Arthur Leigh Allen தான் ஜோடியாக் என கருதிய காவல்துறை செப்டம்பர் 27, 1974ல் கைது வாரண்ட் கொடுத்தது. மற்றவர்களை விட அதிக சாதகமான விசயங்கள் Allen னிடம் இருப்பதாக காவல்துறை கருதியதே காரணம். அதனை தவறு என்று சிலர் கருதினார்கள். Allenன் கைரேகை ஜோடியாக்கோடு ஒத்துப்போகவில்லை. ஆனால் காவல்துறை ஏற்கவில்லை. அதற்கு காவல்துறையிடம் இருந்த சில ஆதாரங்களே காரணம். உதாரணத்திற்கு ஒன்று நவம்பர் 9, 1969ல் வந்த கடிதத்தில் ஜோடியாக் தனது பேஸ்மென்டில் வெடிகுண்டு இருப்பதாக குறிப்பிட்டிருந்தான். பிப்ரவரி 1991ல் Allen வீட்டின் பேஸ்மென்டில் வெடிகுண்டுகளை காவல்துறை கைப்பற்றியது போன்றவை.

ஆனால் 2002ல் நடந்த DNA சோதனையில் Allenனுடைய DNA ஒத்துப்போகவில்லை. ஆனால் இந்த மகிழ்ச்சியை கொண்டாட Allen உயிரோடு இல்லை. அவர் ஆகஸ்ட் 26, 1992லேயே மரணமடைந்துவிட்டார். ஜோடியாக் cipher கடிதங்கள் சில தீர்க்கப்படாமலேயே இருப்பதைப் போல இந்த வழக்கும் தீர்க்கப்படாமல் இருக்கிறது.

இதன் பாதிப்பில் ஏகப்பட்ட நாவல்களும் ஐந்து திரைப்படங்களும் வந்துள்ளன. அவ்வளவு ஏன் டி.சர்டுகளில் ஜோடியாக் cipher பதிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். வழக்கில் ஆர்வமிருந்தால் cipherக்கான விடையை கண்டுபிடித்து எப்.பி.ஐக்கு அனுப்புங்கள் நண்பகர்களே!…

நன்றி –
wikipedia

zodiackiller.com

கொலைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் – கொலையும் கலையும்

சமீபத்தில் வந்துள்ள மர்டர்-2 சக்கை போடு போட்டுக்கொண்டுப்பதாக அலுவலகத்தில் பேசிக் கொண்டார்கள். அது தொடர் கொலையை மையப்படுத்தி வந்துள்ள படம் என்பதை அறிந்தேன். கடந்த இரண்டு நாட்களாக வேலை சுமை குறைந்து போனதால், நெடுநாட்களுக்கு முன் “கொலையும் கலையும்”க்காக சேகரித்த தகவல்கள் ஞாபகத்திற்கு வந்தன. அதுவே இந்த இடுகைக்கு காரணம்.

தொடர் கொலைகளைப் பற்றியும், அதைச் செய்பவர்கள் பற்றியும் நமக்கு பல தகவல்கள் தெரியும். அன்றைய ஆட்டோ சங்கர் முதல் இன்றைய சைக்கோ மனிதன் வரை நம்முடனே நிறைய மனிதர்கள் அவர்களாக இருந்திருக்கின்றார்கள். கொலைகாரர்கள் என்றால் இவர்கள் மட்டுமா. இல்லை கொலைகள் இந்த விதத்தில் மட்டுமா நடந்துள்ளன. எல்லாவற்றைப் பற்றியும் சிறு பார்வை பார்த்துவிடுவோம்.

தற்கொலை –

எப்பொழுது மனிதனின் கடைசி நம்பிக்கை தகர்க்கப்படுகிறதோ அப்போது, நிகழும் பெரும் துயரம் இந்த தற்கொலை. பல தற்கொலைகள் துயரத்திலிருந்து தன்னை தற்காத்துகொள்ளும் கேடயமாக எண்ணி நிகழ்ந்தவை. சில மட்டும் வெறுப்பினால், மாறாதுயரத்தினால், தியாகத்தினால் நிகழ்ந்தவை. உண்ணாநோம்பால் உயிர் துறந்தாலும், பசியின் கொடுமை தாளாமல் உயிர் மாய்த்துக் கொண்டாலும் தற்கொலைதானே.

கொலை –

தன் உயிர் அல்லாமல் பிற உயிர்களை அழிக்கும் இந்த செயலில், வன்மமும், கொடூரமும் அதிகளவு கலந்திருக்கின்றன. தன்னை தற்காத்துக் கொள்ள செய்யும் கொலைகளிலிருந்து, பொழுதுபோக்கிற்காக செய்யும் கொலைகள் வரை ஆயிரமாயிரம் வகைகள் உள்ளன. சின்ன சின்ன கொலைகளையெல்லாம் விட்டு விட்டு கொஞ்சம் பெரிய கொலை அறிந்து கொள்ள செல்வோமானால், நிச்சயம் உடல் நடுங்கத்தான் செய்யும்.

தொடர் கொலை –
கோபத்தினாலோ, கொள்கைக்காகவோ, கொலை செய்யும் சுகத்திற்காகவோ, பணத்திற்காகவோ, பிறர் கவணத்தினை ஈர்ப்பதற்காகவோ இந்த தொடர் கொலைகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. பெரும்பாலும் ஒரே ஒரு மனிதனால் ஒன்றுக்கும் மேற்பட்ட மனிதர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுவதை தொடர் கொலைகள் என்கிறோம். இந்த தொடர் கொலைகளில் இருக்கும் பொதுத்தன்மை குறித்தே பல சந்தேகங்கள் இருந்தாலும், கொல்லப்படுகின்றவர்கள் ஒரே பாலினத்திலோ, ஒரே வேலை செய்பவராகவோ, ஒரே வயதுடையவராகவோ இல்லை ஏதாவது ஒரு வகையில் ஒற்றுமையுள்ளவர்களாகவே இருக்கின்றார்கள். இந்த கொலைகள் நடக்கும் காலத்தினை cooling-off period என FBI குறிப்பிடுகிறது.

அதிக மக்களை கொல்லுதல் –
மிகக் குறுகிய காலத்தில் அதிக மக்களை கொல்லும் முறை இது. இவை தனிமனிதன் மூலமாகவோ இல்லை ஒரு கும்பலினாலோ செய்யப்படுகிறது. மிக எளிமையாக சொல்வதென்றால் எப்போதும் இந்தியாவில் நிகழும் குண்டு வெடிப்புகள். சில சமயங்களில் தனியொரு மனிதனாலும் இவை நிகழ்கின்றன. வெளிநாடுகளில் படிக்கும் மாணவன், தன் கல்லூரியில் கண்ணில் படுபவர்களையெல்லாம் சுட்டு வீழ்த்திவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான் என்பதைப் போன்ற செய்திகள் உங்களுக்கு ஞாபகம் வரலாம். அவையெல்லாம் இந்த வகையினைச் சார்ந்தவையே.,

ராம்பேஜ் கில்லர்ஸ் என்று சிலரை குறிப்பிடுகின்றார்கள், இவர்களுக்கும் தொடர் கொலைகார்களுக்கும் உள்ள வித்தியாசம் அவர்கள் குறிப்பிடும் cooling-off period நேரம் மட்டுமே!… இப்படி பல வகையான கொலைகள் இருந்தாலும், தொடர் கொலைகளைப் பற்றியும், அதன் சுவாரசியான அறிவியல் முடிச்சுகள் பற்றியும் இனி வரும் இடுகைகளில் பார்க்க இருக்கிறோம். இது முன்னுரை மட்டுமே…

ரத்தம் தெறிக்கும்!…