விக்கிப்பீடியாவில் பொன்னியின் செல்வன் கட்டுரைகள்

இதோ இரண்டாயிரத்து பனிரெண்டாம் ஆண்டு முடியப்போகிறது. எல்லோர் மனமும் இந்த வருடத்தில் பெற்றவைகளையும், இழந்தவைகளையும் பட்டியலிட்டு அசைபோட்டுக் கொண்டிருக்கின்றன. நானும் நிறைய இழந்திருக்கிறேன், அதேசமயம் நிறைய பெற்றிருக்கிறேன். அனைவரையும் போல தனிப்பட்ட மகிழ்வுகளையும், துக்கங்களையும் அனுபவித்திருக்கிறேன். ஆனால் இறுதியாக இந்த வருடத்தில் நான் வாழுகின்ற சமூகத்திற்கு ஏதேனும் செய்திருக்கின்றேனா என்ற கேள்வியெழுப்புகிறேன். ஆம் என்று விடைக் கிடைக்கின்றது. அது காலத்தினால் அழியாத காவியத்தினை கலைக்களஞ்சியத்தில் சேர்ப்பித்த பணி.

எவரும் எழுதலாம் என்ற சுலோகத்தோடு விக்கிப்பீடியா அனைவரையும் எழுத அழைக்கிறது. நானும் எதையாவது எழுதலாம் என விக்கியில் கணக்கு தொடங்கினேன். ஆனால் எழுதுவதற்கான உறுதியான மேற்கோள்கள், வலைதளம் போல் அல்லாது கலைக்களஞ்சியத்திற்கான தனித்த எழுத்துமுறை என்று ஏகப்பட்ட கடுமையான வரன்முறைகளால் என்னால் தொடர்ந்து பங்குகொள்ள முடியவில்லை. அவ்வப்போது ஆர்வம் மேலோங்கும் பொழுதெல்லாம் ஓடிச்சென்று எழுதிவிட்டு வருவதோடு என் பணி நின்று போனது. அலுவல் குறைந்த போன செப்டம்பர் மாதத்தில் அமரர் கல்கியின்  பொன்னியின் செல்வனை படிக்க தொடங்கியிருந்தேன்.

032

முழுவதுமாக படித்து முடிக்காமல் சகோதரன் வலைப்பூவில் கருத்து பகிர்வது இயலாது என்பதால், பொன்னியின் செல்வனைப் பற்றி பகிர்ந்து கொள்ள வேறொரு வழியை தேடினேன். அத்தருனத்தில் விக்கிப்பீடியாவில் பொன்னியின் செல்வன் என்ற பக்கமும், சில கதைமாந்தர்களின் பக்கமும் மட்டுமே உருவாக்கப்பட்டு இருந்தன. அவையும் முழுமையின்றி தொடங்கப்பட்ட இடத்திலேயே நின்றுகொண்டிருந்தன. எனவே படித்ததை பகிர்தலுக்காக விக்கியை தேர்தெடுப்பதில் எந்த சிரமமும் இல்லாமல் போனது.

02

சில நாட்களில் பொன்னியின் செல்வனை படிப்பதும், அதில் வரும் கதாப்பாத்திரங்களின் இயல்புகள் பற்றி விக்கியில் எழுதுவதுமே வழக்கமானது. இடைஇடையே வந்த சிக்கல்களும், கருத்து மாறுபாடுகளும் விக்கியில் முன்பிருந்தே பணியாற்றிக் கொண்டிந்த தமிழ்க்குரிசில், –Booradleyp போன்ற நண்பர்களால் ஒழுங்கு செய்யப்பட்டது. புனைவுக் கதையின் கதைப்பாத்திரங்கள் பற்றி எழுதுவதால் மேற்கொள் கட்ட வேண்டிய தொல்லையும் இல்லாதுபோனதால், மிகக் குறுகிய காலத்தில் பொன்னியின் செல்வன் கதைமாந்தர்கள் அனைவருக்குமான பக்கங்களை உருவாக்கிவிட்டேன். சில நாட்களிலேயே கதைமாந்தர்களின் இயல்புகள் எழுதிமுடிக்கப்பட்டுவிட்டன.

இருப்பினும் அந்த கட்டுரைப் பக்கங்களுக்கு மேலும் அழகு சேர்க்க பொன்னியின் செல்வன் கதைமாந்தர்களை கற்பனையாக வரைந்த மணியம், வினு ஓவியங்களுடன், பத்ம வாசன் ஓவியங்களும் கிடைத்தவரை சேர்த்தேன். கட்டுரைகள் முழுமையான அழகுவடிவெடுத்து நின்றன. பொன்னியின் செல்வனுக்கான தனித்த வார்ப்புருவை கனகரத்திரம் என்ற நண்பர் உருவாக்கியிருந்தார். அதில் சில மாற்றங்களை செய்து, புதிய கதைமாந்தர்களையும் இணைத்து மேலும் பெரியதாக மாற்றினேன். இந்த வார்பபுரு முயற்சிக்கும் விக்கிப் பயனர்களால் வரவேற்பு தரப்பட்டது. ஆர்வமுள்ள புதுப்பயனர் பதக்கம், மறுவருகைப் பதக்கம் என இருபதக்கங்களும் விக்கியன்பர்களால் எனக்கு கொடுக்கப்பட்டன.

01

நான் உருவாக்கிய நாற்பதற்கும் மேற்பட்ட பொன்னியின் செல்வன் தொடர்புடைய கட்டுரைப் பக்கங்களால், விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/ஜெகதீஸ்வரன் என்பது உருவாக்கப்பட்டது. அது மட்டுமன்றி 29ம் தேதி அக்டோபர் மாதம் நான் பங்களித்த பொன்னியின் செல்வன் வார்ப்புரு விக்கப்பீடியாவின் முதல் பக்கத்தில் காட்சிபடுத்தப்பட்டது. பங்களிப்பின் இனிமையை உணர்ந்து மகிழ்ந்த தினம் அது. இப்போதும் சைவ சமயம் சார்ந்த கட்டுரைகளை போதிய அளவு எழுதப்படாமலும், எழுத தொடங்கப்பட்ட பல கட்டுரைகள் ஆழமாக எழுதப்படாமலும் உள்ளன. ஆனால் அவைகளை கற்பனை கதைகளைப் போல எழுத இயலாது. சரியான ஊடக மேற்கோள்களுடன் மட்டுமே எழுத வேண்டியுள்ளதால் கடினமாக உள்ளது. தீர்ப்புகளும், தீர்வுகளும் நம்மிடம் இருப்பதில்லை, எல்லாம் வல்ல ஈசன் அடுத்த வருடமாவது இதற்கு அருள் செய்ய வேண்டும். அடுத்த வருடத்தில் சந்திப்போம் நண்பர்களே.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

01

மேலும் –

விக்கிப்பீடியா பயனர் பக்கம் 

தொடங்கியுள்ள கட்டுரைகள்

தமிழ் திருமண அழைப்பிதழ் – வழிகாட்டுதலுக்காக

என் சிற்றன்னைக்கு “மணிவிழா” விரைவில் நடைபெறவிருக்கிறது. அதற்கான அழைப்பிதழ் தயார் செய்யும் பணியை என்னிடம் கொடுத்தார்கள். நல்ல தமிழில் அழைப்பிதழைத் தர வேண்டும் என்பது என் விருப்பம். அதற்காக வலைமனையில் தேடியும் பலனில்லை.

சட்டென தோழி ஒருத்தியின் மண விழா அழைப்பிதழ் முழுவதும் தமிழில் எழுதப்பட்டிருந்தது ஞாபகத்திற்கு வந்தது. என் பழைய புத்தகங்களோடு உறவாடிக்கொண்டிருந்த அந்த அழைப்பிதழை கண்டபின் மனநிறைவானது. அதனை வழிகாட்டுதலாக கொண்டு, அழைப்பிதழை வடிவமைத்துவிட்டேன்.

எனக்கு வழிகாட்டுதலாக இருந்த அந்த அழைப்பிதழ் பிறருக்கும் வழிகாட்டுதலாக இருக்கட்டும் என நம்முடைய சகோதரன் வலைப்பூவில் தருகிறேன்.

அழைப்பிதழின் உறை –
வழக்கமான மேளதாளங்கள், ஊர்வலங்கள் போன்ற படங்களோ, கடவுளின் படங்களோ இல்லாமல் ஆதி தமிழனின் வாழ்வை சித்தரிக்கும் படத்துடன். மனம் விடு தூது என்ற வாசகமும் இணைந்து புதுமையான அழைப்பிதழ் என்ற தோற்றத்தினை உறையிலேயே கொடுத்திடும் அழகு!.

அழைப்பிதழின் முகப்பு –
“யாயும் ஞாயும் யாரா” எனத் தொடங்கும் குறுந்தொகை பாடல் முழுவதும் இடம்பெற்று, அதன் கீழே மணமக்களின் பெயர்கள்.

அழைப்பு –
நிகழும் சர்வமங்கள விகிர்தி வருடம் ஆவணித் திங்கள் 10ம் நாள் (02.01.0000) திங்கள் கிழமை சித்திரை நட்சத்திரமும் ஆயுஷ்மன் யோகமும் பாலய கரணமும் இறையருளும் கூடிய சுபயோகதினத்தில் என்று வழக்கமான முறையில் எழுதப்படாமல் மிக அழகாக எளிமையாக வடிவமைக்கப்பட்ட அழைப்பு,.

அழைப்பிதழின் பின்புறம் –
குறுந்தொகை பாடலுக்கான விளக்கம் நடைமுறைத் தமிழில்,.

பாதுகாப்பாக தீப ஒளி திருநாளை கொண்டாட செய்ய வேண்டியது


பாதுகாப்பாக தீப ஒளி திருநாளை கொண்டாட சங்கர நேத்ராலயாவின் மருத்துவ சமூகவியலாளர் முனைவர் அ.போ. இருங்கோவேள் அவள் விகடனுக்கு தந்த விழிப்புணர்வு கட்டுரை நம்முடைய தளத்திற்காக,…

மத்திய சுகாதர அமைச்சகத்தின் தேசிய பார்வையிழப்பு தடுப்பு சட்டம் தருகின்ற புள்ளிவிவரப்படி, 2005-ம் ஆண்டில் மட்டும் தீபாவளியன்று கண்ணில் பாதிப்பு ஏற்பட்டவர்கள் 1,400 பேர். இவர்களி்ல் 14 வவயதுக்கும் குறைவானவர்களே மிக அதிகம் என்பது நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய விஷயம். இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டு வருகிறது.

இதை தடுக்க சில வழிகள்,..

1. தரமற்ற, போலியான பட்டாசுகள், நீங்கள் பற்ற வைத்தவுடனேயே வெடித்து பாதிப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

2. நெருப்பை அணைப்பதற்கு மட்டுமல்ல, நமது உடலில் தீக்காயம்பட்டுவிட்டால் உடனடியாக பயன்படுத்தக் கூடிய முதலுதவி மருந்தும் தண்ணீர்தான். ஒரு பக்கெட் தண்ணீரையாவது அருகாமையில் வைத்துக் கொள்ளுங்கள், பட்டாசு வெடிக்கும்போது.

3. பட்டாசு வெடிக்கும் குழந்தைகள் மற்றும் அவர்களை கண்காணிப்பவர்கள்… கட்டாயம் காலணி அல்லது ஷூ அணிய வேண்டும்.

4. எதிர்பாராதவிதமாக தீக்காயம் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட பகுதியை உடனடியாக தண்ணீரில் நனைக்க வேண்டும். அப்போதுதான் எரிச்சல் அடங்கி, வலி குறையும். திசுக்கள் பாதிக்கப்படுவதும் குறையும். காயத்தைச் சுத்தமான துணி கொண்டு மூட வேண்டும். பிறகு மருந்துவரிடம் செல்ல வேண்டும். அதேசமயம், கண்களில் காயம் ஏற்பட்டால், தண்ணீர் விட்டுக் கழிவக் கூடாது. சுத்தமான துணி கொண்டு மூடியபடியே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

5. பாட்டில் மூலமாக ஏவப்பட்ட ராக்கெட் வெடித்தபோது ஒரு குழந்தையின் கண்ணை, கண்ணாடித் துகளோ அல்லது இரும்புத் துகளோ தாக்கிவிட்டது. ஆனால், கண்ணிலிருந்து ரத்தம் ஏதும் வரவில்லை. வலியும் உடனே போய்விட்டது. இத்தகைய சூழலில் நாம் செய்ய வேண்டியது என்ன?. உடனடியாக கண் மருத்துவரின் கவனி்பபு வழங்கப்படாவிட்டால், முழுமையான பார்வையிழப்பு உள்ளிட்ட மோசமான விளைவுகள் ஏறபடலாம். கண்ணைக் கசக்கினால் ரத்தம் அதிகமாக வெளியேறலாம். காயத்தின் வீரியமும் அதிகரிக்கலாம். எனவே கண்ணைச் சுற்றி பாதுகாப்பாகக பேப்பர் கப் ஒன்றினை வைத்து டேப்பினால் ஒட்டியோ… அல்லது பாதுகாப்புக்கான பேட்ச் அணிவித்தோ அழைத்துச் செல்லலாம்.

6. வலி நிவாரணியாக எந்த மருந்தையும் கொடுக்கக் கூடாது. சில வகை மருந்துகள் ரத்தம் கசிவதை அதிகப்படுத்தக் கூடும்.

7. தீக்காயம் ஏற்பட்டவுடன் மஞ்சள்தூள், பேனா மை, பக்கத்து வீட்டார் சொல்லும் ஆயின்மென்ட் போன்றவற்றை போடக் கூடாது. அப்படி செய்தால்.. எந்த அளவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது என்று கண்டுபிடிப்பதற்கு சிரமம்.

நன்றி –

அவள் விகடன்.

இந்த இடுகையை பி.டி.எப் கோப்பாக பதிவிரக்கம் செய்ய படத்தினை சொடுக்குங்கள்,…

இன்று சுதந்திரத்திற்கு அகரம் எழுதுவோம்

கல்விதான் மனிதனுடைய அடுத்தக் கட்ட பரிணாம வளர்ச்சிக்கு கொண்டு செல்கிறது. ஆனால் நல்ல மதிப்பெண்களை பெற்றிருந்தும் கல்வியை தொடர முடியாமல் செல்கின்ற பலரை என் வாழ்க்கையில் சந்தித்திருக்கிறேன். கிராமத்தில் இருப்பவர்களுக்கு கல்வி ஒரு கனவு. மேல்படிப்பும், நல்ல வேலையும் சமூக அந்தஸ்தும் ஒரு போதை. இப்போது கூட அவர்களிடம் பெரியவனாக ஆகியதும் என்ன செய்ய போகிறாய் என கேட்டால் எல்லோரும் போலிஸ், டாக்டர், இன்ஜினியர், ஆசிரியர் என்பார்கள். கௌரவமான தொழில் செய்ய வேண்டும் என அவர்களின் மனதில் சிறுவயதிலேயே பதிந்துவிடுகிறது.

சிறுவயதிலிருந்து “நான் டாக்டராக போகிறேன்” என்று நம்பிக்கையுடன் வளர்பவர்கள். திடிரென பணம், சமூகம், குடும்பச் சூழ்நிலை என பல எதிரிகள் முன் வரும்போது எதிர்க்க முடியாமல் போகின்றார்கள். பலர் மௌனமாக ஏற்றுக்கொள்கிறார்கள். சிலர் மறுத்து மரித்துப் போகின்றார்கள். ஆனால் முடிவுகள் அவர்கள் மீது திணிக்கப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

என்னுடைய வகுப்பில் முதல் மதிப்பெண் பெருகின்ற பெண் அவள். அவளிடம் மாணவிகளுக்குரிய கலகலப்பு இருக்காது. மெல்லிய இழையோடிய சோகம் எப்போதும் அவளிடம் இருப்பதை உணர்ந்திருக்கிறேன். அதற்கு காரணம் குடும்பம் என்பதை பிறகு தெரிந்து கொண்டேன். தகப்பன் இறந்துவிட தாயின் உழைப்பினை நம்பி வாழ்கின்ற அவளுக்கு, தங்கை வேறு. அவள் கதையை அறிந்து கொண்டபின் எனக்கோ ஏதோ பழைய படத்தின் ஞாபகம். உங்களுக்கும் கூட அப்படி இருக்கலாம். சரி.

ஒரு சமயம் தாய்க்கும் உடல்நிலை மோசமாக அவளுடைய தாய் மாமனுக்கு திருமணம் செய்துவைத்து விட்டார்கள். பள்ளிப் படிப்பும் அத்துடன் முடிந்துபோனது. அவளுடைய கைகளிலிருந்து புத்தகங்கள் பரிக்கப்பட்டு கரண்டி திணிக்கப்பட்டது. அவளுடைய அத்தனை வருட படிப்பும் செல்லாக்காசாக மாறிப்போவதை கண்களால் பார்த்துக் கொண்டிருந்தேன். இவளின் கதை இப்படியென்றால் என் பக்கத்துதெருவில் வசித்த மாணவனின் கதை இன்னும் சோகமானது.

குடித்து குடித்து குடல் வெந்துபோய் அவன் தகப்பன் படுக்கையில் இருந்தார். அவருடைய மருத்துவச் செலவுக்காக சேமிப்பில் இருந்த பணமும் தீர்ந்துபோய், கடனும் வந்தது. ஆனால் கிடைக்கின்ற சொற்ப பணத்திலும் மீண்டும் மீண்டும் குடித்து நோய் முற்றி இறந்து போனார். அவனை படிக்க வைக்க ஆள் இல்லை. கல்லூரிப்படிப்பிற்காக ஏங்கிய அவனை வேலைக்கு போகச் சொல்லி எல்லோரும் வற்புறுத்த, அவன் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்தான். கயிறெல்லாம் விட்டத்தில் கட்டி கட்டிலின் மீது ஏறி நிற்கையில் கால் தவறி, கழுத்தில் கையிறு அழுத்தி கனம் தாங்காமல் அறுந்து விழுந்தாலும், ஆண்குறி கட்டிலில் பட்டு ரத்தம் நிற்காமல் போக துடிதுடித்து இறந்தே போனான். இரண்டு மணி நேரமாவது அவன் உயிரோடு போராடிக்கொண்டு இருந்திருப்பான் என ஊரில் பேசிக்கொண்டனர்.

அவனுக்கு வாழ்க்கை மட்டுமல்ல, மரணமும் எளிதாக அமையவில்லை. பலரும் அவனுடைய உறவுகள், குடும்பங்கள் மீது கோபம் கொண்டார்கள். ஆனால் அவனின் குடும்பத்தினை குற்றம் சாட்டிவி்ட்டு நாம் நடையை கட்டமுடியாது. நம் மீதும் தவறுகள் இருக்கின்றன. ஏனென்றால் நாமும் இதே சமூகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்கும் பொறுப்புகள் இருக்கின்றன. நம்மால் என்ன செய்ய முடியுமோ அதனைச் செய்தாலே போதும். ஏதோ என்னால் முடிந்தது அகரத்தினை இணையத்தில் பரப்புவதுதான்.

நடிகர் சூர்யாவின் அகரம் அமைப்பினைப் பற்றி இன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பினார்கள். அதனை மறக்காமல் பார்க்கச் சொல்லி நேற்றே நண்பர்கள் பலரிடமிருந்தும் இணைய கடிதம் கணினியை நிறைத்தது. விதை என்ற புதிய கிளை அமைப்பில் தகுதி வாய்ந்த பணமில்லாத மாணவ கண்மணிகளுக்காக ஆரமித்திருக்கின்றார்கள். 6436 மாணவர்களில் அவர்களால் 159 பேருக்கு மட்டுமே உதவ முடிந்திருக்கிறது. அமைப்பின் பொருளாதாரத்தையும், தன்னார்வத் தொண்டர்களையும், நன்கொடையாளர்களையும் அதிகமாக கொண்டிருந்தால் இன்னும் நிறைய மாணவர்களுக்கு அவர்கள் உதவுவார்கள் என்று தோன்றியது.

உங்களுக்கும் உதவுவதற்கான விருப்பம் இருந்தால், தன்னார்வ தொண்டர்கள் என்று பதிந்து கொள்ளுங்கள். அதற்கு இங்கு சொடுக்குங்கள். நிறைய குடும்பங்களின் வளர்சசிக்கு எதிராய் ஏழ்மை, குடி, போதை என்றே இருக்கின்றன. நடுத்தர குடும்பத்தினை நடுதெருவுக்கு கொண்டு வர இன்று ஒரு மருத்துவச் செலவே போதும். நம்மால் இயன்றதை செய்திடுவோம்.

அகரம் தளம் –

agaram foundation

வாங்க ஒரு கப் விஷம் சாப்பிடலாம்

சாப்பாட்டுல தினமும் ஒரு கீரையை சேர்த்துக்கோங்க என்கின்றார்கள் மருத்துவர்கள். அதற்கு எப்போதும் பூச்சி அரிக்காத, பாலிஸ் கீரைகள் தான் நம்முடைய சாய்ஸ். ஆனால் அவ்வாறு பூச்சி அரிக்காத கீரைகளை சாப்பிடாதீர்கள் என்கிறார் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்.

பூச்சிகள் கூட உண்ண முடியாத அளவிற்கு தகுதியற்று போயிருக்கும் விஷ கீரையை நீங்கள் உண்ணுவதால் என்ன நேரும் என நினைத்துப் பார்க்க சொல்கிறார். கீரையில் தானே விஷம் இருக்கிறது என பழங்களுக்குப் போனால், இதைவிட கொடூரமாக இருக்கிறது விளைவுகள். பளபளக்கும் பழங்களில் எல்லாம் மறைமுகமாக ஒளிந்திருக்கிறது விஷம்.

பயிர் செய்யும் முன்பிருந்தே விதைகளை பூச்சி கொல்லி மருந்தில் ஊர வைப்பதை எங்கள் கிராமத்திலேயே பார்த்திருக்கிறேன். அடுத்தடுத்து பூச்சி கொல்லி மருந்தை தெளிப்பதால் நிலமே விஷமாகிப் போயிருக்கின்றது. ஆங்கில மருத்துவத்திற்கு பயந்து சிலர் இன்னும் சித்த மருத்துவத்தையே கடைபிடிக்கின்றார்கள். விளைவுகள் இல்லாத மருந்தென தலையில் வைத்து கொண்டாடிக் கொண்டிருந்தால் காலம்காலமாக பயன்படுத்தி வந்த வேப்பண்ணையே விஷமாகி உயிரைக் குடித்திருக்கின்றது.

சித்த மருத்துவம் வேண்டாமென சென்றவர்களையும் போலி மாத்திரைகள் பயமுருத்தியிருக்கின்றன. எதைச் சாப்பிட்டாலும் கண்டிப்பாக விஷம் நமக்குள் போகிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். கோக், பெப்சி மட்டுமல்ல சாதாரண குடிநீரையே இப்போது நம்ப முடியவில்லை.

இதிலிருந்து தப்புவது எப்படி, பூச்சி தின்ற கீரையை வாங்க வேண்டும், நன்கு அலசிவிட வேண்டும். பழம் வாங்கும் போது சரியான அளவிலும், சரியான ருசியையும் தருவதை மட்டுமே வாங்க வேண்டும்.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும். இதைத் தவிர வேறு வழி இருப்பதாக தெரியவில்லை.

போலி மருந்து, போலியான காய்கறி, பழங்களை விற்பதாக உங்களுக்குத் தெரிந்தால் காவல் துறையை அனுகலாம். அதற்கான தொலைப்பேசி எண் – 044-24321830. பல உயிர்களை காப்பாற்றிய பெருமை உங்களுக்குச் சேரட்டும்.

நன்றி- குமுதம் சினேகிதி.