கருவறை வேண்டாம் கழிவறை கட்டுங்கள்

வேலைதேடி சென்ற நாட்களில் நானும், என் நண்பர்களும் சந்தித்த பிரட்சனைகளில் கழிவறையும் ஒன்று. இந்த நாட்டில் வேலையை கூட தேடிவிடலாம், ஆனால் கழிவறையை தேடி கண்டுபிடிப்பது அத்தனை சுலபமல்ல. இன்று அலுவலகம் செல்லும் வழியில் ஒரு சம்பவத்தைக் கண்டேன். சில வாலிபர்கள் சுவரில் இருந்த வள்ளலாரை சிறுநீரால் அபிசேகம் செய்து கொண்டிருந்தார்கள். இதை வள்ளலாருக்கு அவமானமாக நான் கருதவில்லை. அதை வரைந்து வைத்த கட்டிட உரிமையாளரின் அறியாமையைத்தான் பெரியதாக கருதினேன்.

சில நாட்களுக்கு முன் நான் எழுதிய கவிதை,.

இங்கு சிறுநீர் கழிக்காதே!

அன்று காலை முதல்

வேலை தேடி

அலைந்து கொண்டிருந்தேன்

திடீரென சிறுநீர் உந்துதல் ஏற்பட

கழிவறையை தேடினேன்!.

ஆனால்

கண்ணில் பட்டதெல்லாம்

இங்கு சிறுநீர்க் கழி்க்காதே என்ற வாசகமும்

அதைக் காவல் காக்கும் கடவுளையும் தான்!.

தெருவிற்கு தெரு இங்கே தெய்வங்கள் குடியிருக்கும் கருவறைகள் இருக்கின்றன. ஆனால் நம்முடைய கழிவுகளை அகற்ற கழிவறைகள் தான் இல்லை. இங்கு “சிறுநீர் கழிக்காதீர்கள்” என எழுதப்பட்டிருக்கும் பகுதியிலெல்லாம் கழிவறையின் தேவை இருக்கிறது என்பது மறைமுக உண்மை.

இப்பொழுதெல்லாம் வாசகங்கள் மட்டும் எழுதப்படுவதில்லை. மாறாக கடவுளின் படங்கள் வரைந்து வைக்கப்படுகின்றன. மனிதர்கள் சிறுநீர் கழிக்காமல் இருக்க, தெய்வங்கள் காவல் காக்கின்றன. “இங்கு சிறுநீர் கழிப்பது குற்றம்” என்ற பலகைகளைத் தாங்கி அல்லா, புத்தர், ஏசு, சிவன் என எல்லோரும் அமர்ந்திருக்கின்றார்கள்.
“ஏன் நாத்திகர்களுக்கு சிறுநீர் உந்துதலே வராதா” என சில நேரங்களில் நான் வேடிக்கையாக நினைத்ததுண்டு.

கூவம் நதிக்கரையில் இருக்கும் ஆயிரக்கணக்காக குடிசைகளுள் சில காங்கிரிட் கட்டிடங்கள் இருக்கிறது. அது மக்கள் ஒன்று சேர்ந்து கட்டிய கோவிலாகவோ, ஆலயமாகவோ இருக்கிறதே தவிற, கழிவறையாக எங்கும் இருப்பதில்லை. இங்கு மட்டுமல்ல எங்கும் அதே நிலைதான். கிராமங்களில் கோவில்கட்ட வீட்டிற்கு ஆயிரம், ஐயாயிரம் என கட்டாய வரிவிதிப்பு செய்கின்றார்கள். அதற்கு அள்ளி கொடுக்கும் கைகள், காலைக்கடனுக்காக கிள்ளிக் கூட கொடுப்பதில்லை.

அதுமட்டுமின்றி கழிவறை என்பது பெண்களுக்கு மட்டுமான ஒரு தனிச் சொத்தாக எண்ணத் தொடங்கிவிட்டார்கள். பல பள்ளிகளில் மாணவர்களுக்கு மட்டும் கழிவறை இருக்காது. மாணவிகள் தினம் தினம் பராமரிக்கப்படும் கழிவறையில் சுகமாய் சென்று வர,. மாணவர்கள் மட்டும் புதர்களையும், மரத்தையும் தேடிக் கொண்டு அலைய வேண்டும். ஏன் அவர்கள் மனிதர்கள் இல்லையா. அரசால் கட்டப்பட்ட பல கழிவறைகள் இன்று ஆக்கிரமிப்பில் இருக்கின்றன. இலவச கழிவறை எல்லாம் கட்டனக் கழிவறைகளாக செயல்பட்டுவருகின்றன. சில இடங்களில் ஐந்து ரூபாய் கூட வசூல் செய்யப்படுகிறது.

பள்ளிகளில் ஆரமித்து இந்த கழிவறைப் பிரட்சனை கோவில்கள், சுற்றுலாதளங்கள் என எல்லா இடங்களுக்கும் பொதுவான பிரட்சனையாகவே உள்ளது. மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்பதை மறுக்க முடியாது. இந்தியாவில் கைப்பேசிகளின் எண்ணிக்கையை விட கழிவறைகள் குறைவு என செய்திகள் வெளிவந்தன. திறந்த வெளி கழிவறைகளை உபயோகப்படுத்தும் போது சைனா செட்டில் சத்தமாக பாட்டு வைத்துக்கொண்டு போகின்றார்கள். கைப்பேசி இங்கு மானப்பிரட்சனையாக மாறிவிட்டது. ஆனால் மானமெல்லாம் எப்போதோ போய்விட்டதை உணராமலே.

இனி அடுத்த தலைமுறையாவது சிறுநீர் உந்துதல் ஏற்படும் போது, மரத்தையோ, செடியையோ தேடி ஓடாமல் கழிவறையை பயன்படுத்த அரசு நடவெடிக்கை எடுக்கட்டும்.

தெய்வங்களுக்கு முன்னால் நடக்கும் காம களியாட்டங்கள்


கிராமங்களில் நடக்கின்ற கூத்து என்ற கலைகள் இன்று திசை மாறி பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ரெக்காட் டான்ஸ் என்ற பெயரில் ஆபாச நடனவிடுதிகளில் நடந்து கொண்டிருப்பதை கோவிலுக்கு முன்னால் நடத்திக்கொண்டிருக்கின்றார்கள் நமது பாமர மக்கள். அதுவும் விதவிதமாக மக்களின் காம உணர்ச்சிகளுக்குள் வக்கிரமான எண்ணங்கள் ஊடுருவும் விதத்தில் அந்த நிகழ்ச்சிகள் இருக்கின்றன. அதைப் பற்றிய வேதனையான இடுகை இது.

நான் நாத்திகர்களை வெறுப்பதே இல்லை. சில சமயங்களில் ஆன்மீகவாதிகள் காப்பாற்ற தவறிய ஆலையங்களையும், சுட்டிக்காட்ட பயந்துபோகும் குற்றங்களையும் எல்லோருக்கும் சொல்லி, நல் வழிப்படுத்த அவர்களே உறுதுணையாக இருக்கின்றார்கள். என்னுடைய பள்ளிகால நண்பன் தீவிர நாத்திகன். கடவுளை மனிதன் கண்டுபிடித்ததே குற்றம் சாட்டிதப்பித்துக்கொள்ளதான் என்று அடிக்கடி சொல்லுவான். இன்று “மச்சி, கிராமக் கடவுளை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க நீ பாடுபட்டுக்கிட்டு கிடக்குற, ஆனா நம்ம மக்கள் அந்த கடவுள் முன்னாடி செய்யுற அசிங்கத்தப் பாரு”ன்னு சில லிங்குகள் அனுப்பியிருந்தான்.

அவை கோவில்களுக்காக மக்களிடம் வாங்கிய பணத்தில் நடத்தப்படும் ஆபாச விழாக்களின் காணொளிகள். பல இடங்களில் கோவில்கள் கட்டுவதற்கும், திருவிழா நடத்தவும் பொது மக்களிடம் கட்டாய வசுல் வேட்டை நடக்கிறது. மாரியம்மன் கோவில் புணரமைப்புக்காக வீட்டிற்கு 1000 ரூபாய் என என்கிராமத்திலேயே வசூல் நடந்திருக்கிறது. அந்தக் கோவில் கும்பாபிசேகம் முடிந்த கையோடு, அடுத்த கோவில் எங்கிருக்கிறது என பார்த்து அடுத்த வேட்டைக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள். கைக்கு வரும் மித மிஞ்சிய பணத்தில் கோவில் கட்டியபிறகும் பணம் இருக்கிறது. அதை மக்களை மகிழ்விக்க என்று சொல்லி, இது போன்ற ஆபாச நடனங்களுக்கு ஏற்பாடு செய்கின்றார்கள். எங்களூரில் இருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவில்தான், இந்த அசிங்கத்தை முதன் முதலாகப் பார்த்தேன். அப்போது விடலைப் பருவம்.

திருவிழா முடிந்து ஒரு மாதம் ஆனாலும் என்னுடன் படித்துக்கொண்டிருந்த மாணவர்களால் கூத்து பாடலை மறக்கமுடியவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஆனால் விழாவில் இளைஞர்கள் வெட்கப்பட்டுக் கொண்டிருக்க, விடலைகள் போல் அதிகம் விழுந்து விழுந்து ரசித்தது பல்போன கிழங்கள். சில பெருசுகள் மேடையேறி செல்லக்கூட முனைந்தார்கள். ஆடல் குழுவினர் தடுத்துவிட்டனர். பெரிய கோவில்களின் திருவிழாக்களிலும், மிகத் தொன்மையான கிராமக் கோவில்களிலும் இது போன்ற கொடுமைகள் நடப்பதில்லை என்பது கொஞ்சம் நிம்மதியான விசயம்.

ஆனால் கிராமமும் அல்லாமல், நகரமும் அல்லாமல் வளர்ந்து கொண்டிருக்கின்ற ஊர்களில் காவல் துறையினரின் துணையோடு இந்த கதை தொடர்ந்துகொண்டு இருக்கிறது. ஒயிலாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், புலியாட்டம் என எல்லா தொன்மையான கலைகளையும், கலைஞர்களையும் புறக்கணித்துவிட்டு, ஆடை அவிழ்ப்பு நடனங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றார்கள் ஊர் தலைவர்கள். இதனை ஆபாசமென தட்டிக்கேட்க மகளிர் அமைப்புகள் இல்லை. நடன அரங்கேற்றத்தில் கலந்து கொண்டாளாவது பணம் கிடைக்கும் என விட்டுவிட்டார்கள் போலிருக்கிறது. நடன விடுதிகளில் ஆபாச நடமாடுகின்றவர்களை அடித்து உதைத்த மனிதர்களில் சிலர், இங்கிருந்தால் கூட நல்லது நடக்கும் என்றே தோன்றுகிறது.

கோவில் பிராகாரங்களில், தூண்களில், கோபுரங்களில் சில உடலுறவுச் சிற்பங்கள் சிறிய அளவு இருக்கும். தேடுவோர் கண்களுக்கு மட்டும் தெரியும் அதையே ஆபாசமென சொல்லித்திரியும் யாரும் இதைக் கண்டு கொள்வதே இல்லை. இது போன்ற கூத்துகளால் உண்மையான கலைஞர்களும் நசிந்து போகின்றார்கள். கரகாட்டம் கூட ஆபாசங்களுக்கு இடம் கொடுக்க தொடங்கிவி்ட்டதை ஒரு காணொளி உணர்த்துகிறது.

தெருக்கூத்து ஒன்றில் இடம் பெற்ற அரிச்சந்திரன் கதையை பார்த்ததால் நமக்கொரு மகாத்மா காந்தி கிடைத்தார். இது போன்ற அவலங்களை பார்க்கும் மனிதர்கள் மகாத்மாக்களாக அல்ல மனிதர்களாகவே இருக்க மாட்டார்கள். செய்ய வேண்டியதெல்லாம் ஆபாசத்தினை அதுவும் கடவுளின் பெயரைக் கூறி நடப்பதை தடுத்து நிறுத்த விழிப்புணர்வு நமக்குள் எழுவதுதான். சமூகம் முழுவதும் புரையோடிக்கிடக்கும் இந்த வழக்கத்தை கடுமையான கைகொண்டுதான் அகற்ற வேண்டும்.

பிச்சை எடுக்கும் கதாநாயகிகள்

சென்னையின் வெயில் தாக்கம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. நன்பகல் நடுவெயிலில் ஒருவர் சட்டை கூட அணியாமல் தெருவில் கிடந்தால் ஒன்று அவர் “தண்ணியடித்த” குடிமகனாக இருக்க வேண்டும், இல்லை கைகால் இழந்த குடிமகனாக இருக்க வேண்டும். “குடி”மகனாக இருந்தால் கண்டுகொள்ள தேவையில்லை. சுரனை வந்தவுடன் எழுந்து போய்விடுவார்கள். இந்த ஊனமுற்ற நண்பர் என்ன செய்வார்.

வெகு அதிகமான நடுத்தர வர்க்கம் வந்து போகும் டிநகர் பேருந்து நிலையத்திலிருந்து மாம்பலம் ரயில் நிலையம் செல்லும் உஸ்மான் சாலையில் கைகால் இல்லாத இரண்டு பேரையாவது நீங்கள் பார்க்க முடியும். முதுகில் அடிக்கும் வெயிலுக்கு வியர்த்திருக்கும் உடலுடன், திரும்பி படுக்க கூட முடியாத அளவிற்கு ஊனப்பட்டு கிடக்கும் அவர்களுக்கு இங்கு உதவ ஏதேனும் அமைப்பு இருக்கிறதா.

உலகின் மிக நீளமான கடற்கறையா மெரினாவில் இன்னும் கொடூரம். ஒரு குரங்கு குட்டிக்கு பாவாடை சட்டை (பெண் மீது உள்ள அன்பு) போட்டு அங்கும் இங்கும் குதிக்க சொல்லிக் கொண்டிருக்க,. நான் அதை கவணித்துக் கொண்டிருந்தேன். நண்பன் சுட்டி காட்டிய இடத்தில் மிகவும் கூட்டம், அங்கு சென்றபின் தான் தெரிந்தது. இங்கே குரங்கு செய்வதை ஒரு சின்னப் பெண் செய்து கொண்டிருந்தது.

பொதுவாகவே நமக்குள் இருக்கும் கருணையை காசக்க வரும் இவர்கள். அதில் வெற்றி கண்டிருக்கின்றார்களா என தெரியவில்லை. சிட்டுக்குருவிகளுக்காகவும், தேனிக்களுக்காவும் இங்கே வருத்தம் கொள்ள ஆட்கள் உண்டு. விலங்குளின் தோலை உடையாக அணிய வேண்டாமென நிர்வாணமாய் நிற்கும் நடிகைகள் உண்டு. அழிந்து வருகிறது புலியென பிரச்சாரம் செய்யவே இங்கு ஏகப்பட்ட கோடிகளை செலவு செய்யும் நபர்கள் உள்ள நாட்டில்தான் இந்த கொடுமையும். புலிகளை பாதுகாக்க விழிப்புணர்வு செய்யும் நம் நண்பர்களுக்கு மனிதர்கள் கண்களில் தென்படவில்லை போலும்.

முன்பெல்லாம் சர்கசில் விலங்குகள் அதிகம் இருக்கும். அதையெல்லாம் தடுத்து அந்த விலங்குகளை பாதுகாத்த நண்பர்கள் அங்கு வேலைசெய்யும் நபர்களுக்கு ஏதேனும் செய்தார்களா என தெரியவில்லை. குழந்தைகள் மீதுதான் நமக்கு அனுதாபம் என சின்ன சின்ன பொருள் விற்க கூட ஒரு தூங்கமூஞ்சி குழந்தையை தோளில் இட்டுக்கொண்டு வந்து நிற்கின்றார்கள் பெண்கள். அந்தக் குழந்தைகளுக்கு ஏதோ மருந்து கொடுத்து இப்படி செய்கின்றார்கள் என வாரஇதழ் ஒன்றில் படித்தேன். ஓடிவிளையாடும் குழந்தைக்கு மருந்து கொடுத்து காசு பார்க்கும் கூட்டத்தை என்ன சொல்ல.

பெண்ணியவாதிகள் என்று பெருமைகொள்ளும் நண்பர்கள் இதற்கென தீர்வு காண முற்பட்டிருக்கின்றார்களா என தெரியவில்லை. குரங்கு பதிலாக குதித்து சாகசம் செய்யும் சிறுமிகளுக்கு எப்போது விடிவோ. குரங்கு, கரடி, யானை என வேடிக்கை காட்டும் விலங்குகளை வனவிலங்கு சரணாலயத்தில் விட்டுவிட்டு மனிதர்களைக் கொண்டே இங்கு வேடிக்கை காட்டி பிழைப்பு ஓடிக்கொண்டிருக்கின்றது.

ஊனமுற்றவர்களுக்காக மாற்றுதிறன் படைத்த பல தொழில்கள் வந்து கொண்டே இருக்கின்றன. கண் தெரியாதவர்கள் கூட சுயமாக புத்தகங்கள், பொருட்கள் விற்று பிழைப்பு நடுத்த, ஊனமில்லா சிறுமிகள் இங்கே குரங்காவதை உலகிற்கு சொல்லவே இக்கட்டுரை. இரண்டு ரூபாய் போடுவதும், இடுகை போடுவதும் மட்டும்தான் என்னால் முடிந்தது. இதை படிக்கும் அக்கரை உள்ள பதிவர்கள் தங்கள் வலைப்பூவிலும் இவர்களுக்காக குரல் கொடுப்பார்கள் என நினைக்கின்றேன். அப்படி செய்ய வேண்டும் என கேரிக்கையும் வைக்கின்றேன்.