நண்பர்களே எங்களுக்கு கடந்த மாதம் 26ம் தேதி மகள் பிறந்திருக்கிறாள். அவளுக்காக பெயர்களை தேடும் பொழுது வீட்டில் எழுந்த கூத்துகளும் கும்மாளங்களும் அளவில்லாத மகிழ்ச்சி தருபவை. அதனை அவ்வப்போது முகநூல் பகிர்ந்து வந்திருந்தேன். அவற்றின் தொகுப்பு இங்கே.
நான்: அம்மா என்ன பேருமா வைக்கலாம்.
அம்மா: சோசியருக்கிட்ட கேட்டு பிள்ளை நட்சத்திரத்துக்கு ஏத்த மாதிரி எழுத்து தருவாரு.. அதை தெரிஞ்சுக்கிட்டு வைச்சுடலாம்.
நான்: அதுக்கு எதுக்குமா அவர்கிட்டயெல்லாம் போகனும். இணையத்திலேயே இருக்கே..
இணையம்: ட,டு, டி, மோ, மௌ
நாங்கள்:???
மாமா: பாப்பா பிறந்த தேதி என்ன?
நான்: 26-10-2016
மாமா:2+6+1+0+2+0+1+6 பதினெட்டு. 1+8=9. தம்பி.. வைக்கிற பேரு நியூமராலஜிப்படி ஒன்பது வர மாதிரி பார்த்துக்கோ..
நான்: அய்யோ.. இது வேறையா..
நேமாலஜி, நியூமிராலஜி போன்றவற்றோடு சோதிட முறையில் கூறப்படும் நட்சத்திர அட்சரங்களையும் வேண்டாமென மறுத்தோம். தூய தமிழில் வெகு இயல்பாய் அழைக்கும் வண்ணம் இருக்க வேண்டும் என்றும், பெண் பிள்ளை என்பதால் அதிக பகடிக்கு ஆளாகா வண்ணம் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தோம்.
ஆதிரை
இளவஞ்சி
உமையவள்
எயினி
எழினி
கலாமயில்
கொற்றவை
கொன்றை
செந்தமிழ் குழல்வாய் மொழி
செம்பாகத்தாள்
நறுமுகை
நன்முல்லை
பிறப்பறு செல்வி
புவியேழ் பூத்தவள்
பூங்குயில்
மகரி
மகிழ்
மஞ்சரி
மதங்கி
மதிராட்சி
மயூரி
மோதயந்தி
மோய்
மௌவை
யாழினி
வெண்ணி
என ஓரளவு ஈர்த்த பெயர்களை முகநூலில் இட்டபோது, கனடாவில் வாழுகின்ற தமிழறிஞர் செல்வக்குமார் ஐயா, தமிழ்ப்பரிதி மாரி, விஜி பழனியப்பன் போன்றவர்கள் இப்பட்டியலில் உள்ள தமிழல்லாதவைகளை இனம் கண்டு ஒதுக்க உதவினார்கள்.
செந்தமிழ் குழல்வாய் மொழி – மிக நெடியப் பெயர், கொற்றவை – வெம்மையின் தெய்வம், எயினி – இடையர் பெண் என்பதாலும் தொடக்கதிலேயே மறுக்கப்பட்டுவிட்டன. அதன் பின்பு வெண்ணி என்பதை பன்னி என்று பகடி செய்ய ஏதுவாக இருக்கும் எனவும், பூ என்பதை கல்லூரிப் பெண்கள் வேறு ஒன்றுக்காக பயன்படுத்துகிறார்கள் என்பதால் பூங்குயிலும் விலகியது.
எழினி, கொன்றை, நறுமுகை, மகிழ், யாழினி இவைகளில் சிற்சிற மாறுபாடுகளோடு புதிய பெயர்களை இட்டுப் பார்க்கிறோம். எல்லாவற்றையும் விட மகிழினி, மகிழ் சிவனி, சிவக்கொன்றை, யாழிசை, யாழினி என விரிகிறது. அதிலும் யாழ் வகைகளுடன் இணைத்து யாழிசையும் யாழினையும் கொண்டுவர முயன்றோம்.
யாழ் – பண்டைய இசைக்கருவிகளில் ஒன்று. இதுவே தற்போதைய வீணையின் தாய்க்கருவி என்கிறார்கள். யாழைப் பற்றி எண்ணற்ற இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளது. எனினும் இங்கு அது வழக்கிலிருந்து அழிந்து போயிற்று. வெளிநாடுகளில் இன்னமும் யாழினைப் பயன்படுத்துகிறார்கள். மிகவும் போற்றப்படும் யாழ் வகைகளுள் மகர யாழ் கவர்ந்தது. அதனால் மகரயாழினி, மகரயாழிசை என்ற பெயர்களையும், மருத நிலத்தினை சார்ந்து எங்கள் குடும்பங்களில் பெயர் வைப்பது வழமை என்பதால் மருதயாழினி, மருதயாழிசை என்பதையும் கவனத்தில் கொண்டுள்ளோம்.
மகர யாழாள் – மகர யாழினை ஆள்பவள் –

மகரயாழ் மீட்டும் பெண் – மகரயாழாள்
யாழினி, யாழிசை என்ற பெண் பெயர்கள் யாழின் இசையையும், அதன் இன்பத்தினையும் கூறுபவை. யாழை மீட்டுபவள் என்ற சொல்லாக்கத்திற்காக கௌதம் நீல்ராஜ் என்பவர் யாழ் மகிழி என்ற பெயரை கையாண்டுள்ளார். யாழினால் ஆன இசையால் மகிழுபவள் என விரித்து பொருள் கொள்ள வேண்டுமென நினைக்கிறேன். யாழினை மீட்டுபவள் என்றே பொருள் தர யாழ் + ஆள் – யாழாள் என்பதே சரியாக இருக்குமென நினைக்கிறேன்.
இந்து தொன்மவியலில் மகரம் என்பது யானை, முதலை, பறவை, மீன் என உயிரினங்களின் கலவை. மகரயாழ் கிரேகத்திலிருந்து நமக்கு கிடைத்திருக்க கூடும் என்று கருதுகிறார்கள்.
மகர யாழில் பத்தொன்பது நரம்புகள் இருந்திருக்கின்றன. இதனுடைய இசை யானையையும் வீழ்த்தக் கூடியது என்றும், யாழினை ஒரு போர்க்கருவியாகவே தமிழர்கள் உபயோகித்தார்கள் என்றும் ஒரு தகவல் உள்ளது.
ஒரு முறை விக்கிப்பீடியாவிலும் இணையத்திலும் இயங்குகின்ற செங்கைப் பொதுவன் ஐயா, தன்னுடைய புத்தகத்திற்காக ஒரு ஓவியத்தினை கற்பனை செய்யும் படி கூறினார். அதில் ஒரு ஆண் யாழினை மீட்டும் பொழுது அருகே ஒரு யானை மயங்கி நிற்பதாக இருக்க வேண்டும் என்றார்.
வையம் உடையான் மகரயாழ் கேட்டருளும்
தெய்வச் செவிகொதுகின் சில்பாடல் – இவ்விரவில்
கேட்டவா என்றழுதாள் கெண்டையங்கண் நீர்சோரத்
தோட்டவார் கோதையாள் சோர்ந்து.
– புகழேந்திப் புலவர் (நளவெண்பா)
கேடு இலா மகர யாழில் கின்னர மிதுனம் பாடும்
– கம்பராமாயணம்
தகரக் குழலாள் தன்னொடு மயங்கி மகர யாழின் வான்கோடு தழிஇ – மணிமேகலை
மகர யாழ் வல்ல மைந்தன் ஒருவனைக்கண்ட மத்தப் புகர் முகக் களிற்றின்…” மேருமந்திரப் புராணம் (வச்சிராயுதம்-31)
தமிழில் மகரம் என்பது மீனைக் குறிப்பது. மகரக்கொடியோன் என்ற மீனைக் கொடியாக உடைய மன்மதனைக் குறிக்க பயன்படுத்துகின்றனர். தமிழ்ப்படி பார்த்தால் மகர யாழ் என்பது மீனின் வடிவுடைய யாழ். ஆனால் சமசுகிருதத்தில் மகரமீன், மகரமச்சம் என்றெல்லாம் கையாளுகின்றனர். மகரம் என்பதே சமசுகிருதமாக இருக்கலாம் என்றொரு கருத்து இருந்தாலும், இலக்கியங்களில் ஆளப்பட்டுள்ளது என்பதால் ஒரு துணிவு இருக்கிறது. மரகயாழினை மீன்யாழ் என மாற்றவும், அதுகுறித்தான இலக்கிய செறிவும் இல்லை. எனவே மகரத்தினை விட மனமில்லாமல் இருக்கிறோம்.
மருதயாழிசை –
தமிழரின் ஐந்திணைகளுள் ஒன்றான வயலும் வயல் சார்ந்த இடமும் மருத நிலம். இத்திணையில் மருதயாழ் இசைக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர். இந்த யாழினைப் பற்றியும் இலக்கியங்களில் செய்திகள் இருக்கின்றன. எனினும் இதன் அமைப்பு குறித்து சரியான ஆய்வு விளக்கம் இணையத்தில் இல்லை. இதனுடைய இசையானது எவ்வாறானது என்பது பற்றி மட்டுமே செய்திகள் உள்ளன. மதுர யாழ் என்பது அமைப்பு ரீதியில் இல்லாமல் ஒரு பண்ணாக மட்டுமே இருந்திருக்க வாய்ப்புகள் அதிகமுள்ளது.
பூம ரும்புனல் வயற்களம் பாடிய பொருநர்
தாம ருங்கிளை யுடன்றட மென்மலர் மிலைந்து
மாம ருங்குதண் ணீழலின் மருதயாழ் முரலுங்
காமர் தண்பணைப் புறத்தது கருங்கழி நெய்தல்.
– சேக்கிலார் (பெரியபுராணம்)
நன்றி.