பிள்ளைக்குப் பெயர் வைக்கும் படலம்

நண்பர்களே எங்களுக்கு கடந்த மாதம் 26ம் தேதி மகள் பிறந்திருக்கிறாள். அவளுக்காக பெயர்களை தேடும் பொழுது வீட்டில் எழுந்த கூத்துகளும் கும்மாளங்களும் அளவில்லாத மகிழ்ச்சி தருபவை. அதனை அவ்வப்போது முகநூல் பகிர்ந்து வந்திருந்தேன். அவற்றின் தொகுப்பு இங்கே.

நான்: அம்மா என்ன பேருமா வைக்கலாம்.
அம்மா: சோசியருக்கிட்ட கேட்டு பிள்ளை நட்சத்திரத்துக்கு ஏத்த மாதிரி எழுத்து தருவாரு.. அதை தெரிஞ்சுக்கிட்டு வைச்சுடலாம்.
நான்: அதுக்கு எதுக்குமா அவர்கிட்டயெல்லாம் போகனும். இணையத்திலேயே இருக்கே..
இணையம்: ட,டு, டி, மோ, மௌ
நாங்கள்:???

மாமா: பாப்பா பிறந்த தேதி என்ன?
நான்: 26-10-2016
மாமா:2+6+1+0+2+0+1+6 பதினெட்டு. 1+8=9. தம்பி.. வைக்கிற பேரு நியூமராலஜிப்படி ஒன்பது வர மாதிரி பார்த்துக்கோ..
நான்: அய்யோ.. இது வேறையா..

நேமாலஜி, நியூமிராலஜி போன்றவற்றோடு சோதிட முறையில் கூறப்படும் நட்சத்திர அட்சரங்களையும் வேண்டாமென மறுத்தோம். தூய தமிழில் வெகு இயல்பாய் அழைக்கும் வண்ணம் இருக்க வேண்டும் என்றும், பெண் பிள்ளை என்பதால் அதிக பகடிக்கு ஆளாகா வண்ணம் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தோம்.

ஆதிரை
இளவஞ்சி
உமையவள்
எயினி
எழினி
கலாமயில்
கொற்றவை
கொன்றை
செந்தமிழ் குழல்வாய் மொழி
செம்பாகத்தாள்
நறுமுகை
நன்முல்லை
பிறப்பறு செல்வி
புவியேழ் பூத்தவள்
பூங்குயில்
மகரி
மகிழ்
மஞ்சரி
மதங்கி
மதிராட்சி
மயூரி
மோதயந்தி
மோய்
மௌவை
யாழினி
வெண்ணி

என ஓரளவு ஈர்த்த பெயர்களை முகநூலில் இட்டபோது, கனடாவில் வாழுகின்ற தமிழறிஞர் செல்வக்குமார் ஐயா, தமிழ்ப்பரிதி மாரி, விஜி பழனியப்பன் போன்றவர்கள் இப்பட்டியலில் உள்ள தமிழல்லாதவைகளை இனம் கண்டு ஒதுக்க உதவினார்கள்.

செந்தமிழ் குழல்வாய் மொழி – மிக நெடியப் பெயர், கொற்றவை – வெம்மையின் தெய்வம், எயினி – இடையர் பெண் என்பதாலும் தொடக்கதிலேயே மறுக்கப்பட்டுவிட்டன. அதன் பின்பு வெண்ணி என்பதை பன்னி என்று பகடி செய்ய ஏதுவாக இருக்கும் எனவும், பூ என்பதை கல்லூரிப் பெண்கள் வேறு ஒன்றுக்காக பயன்படுத்துகிறார்கள் என்பதால் பூங்குயிலும் விலகியது.

எழினி, கொன்றை, நறுமுகை, மகிழ், யாழினி இவைகளில் சிற்சிற மாறுபாடுகளோடு புதிய பெயர்களை இட்டுப் பார்க்கிறோம். எல்லாவற்றையும் விட மகிழினி, மகிழ் சிவனி, சிவக்கொன்றை, யாழிசை, யாழினி என விரிகிறது. அதிலும் யாழ் வகைகளுடன் இணைத்து யாழிசையும் யாழினையும் கொண்டுவர முயன்றோம்.

யாழ் – பண்டைய இசைக்கருவிகளில் ஒன்று. இதுவே தற்போதைய வீணையின் தாய்க்கருவி என்கிறார்கள். யாழைப் பற்றி எண்ணற்ற இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளது. எனினும் இங்கு அது வழக்கிலிருந்து அழிந்து போயிற்று. வெளிநாடுகளில் இன்னமும் யாழினைப் பயன்படுத்துகிறார்கள். மிகவும் போற்றப்படும் யாழ் வகைகளுள் மகர யாழ் கவர்ந்தது. அதனால் மகரயாழினி, மகரயாழிசை என்ற பெயர்களையும், மருத நிலத்தினை சார்ந்து எங்கள் குடும்பங்களில் பெயர் வைப்பது வழமை என்பதால் மருதயாழினி, மருதயாழிசை என்பதையும் கவனத்தில் கொண்டுள்ளோம்.

மகர யாழாள் – மகர யாழினை ஆள்பவள் –

finiyal

மகரயாழ் மீட்டும் பெண் – மகரயாழாள்

யாழினி, யாழிசை என்ற பெண் பெயர்கள் யாழின் இசையையும், அதன் இன்பத்தினையும் கூறுபவை. யாழை மீட்டுபவள் என்ற சொல்லாக்கத்திற்காக கௌதம் நீல்ராஜ் என்பவர் யாழ் மகிழி என்ற பெயரை கையாண்டுள்ளார். யாழினால் ஆன இசையால் மகிழுபவள் என விரித்து பொருள் கொள்ள வேண்டுமென நினைக்கிறேன். யாழினை மீட்டுபவள் என்றே பொருள் தர யாழ் + ஆள் – யாழாள் என்பதே சரியாக இருக்குமென நினைக்கிறேன்.

இந்து தொன்மவியலில் மகரம் என்பது யானை, முதலை, பறவை, மீன் என உயிரினங்களின் கலவை. மகரயாழ் கிரேகத்திலிருந்து நமக்கு கிடைத்திருக்க கூடும் என்று கருதுகிறார்கள்.

மகர யாழில் பத்தொன்பது நரம்புகள் இருந்திருக்கின்றன. இதனுடைய இசை யானையையும் வீழ்த்தக் கூடியது என்றும், யாழினை ஒரு போர்க்கருவியாகவே தமிழர்கள் உபயோகித்தார்கள் என்றும் ஒரு தகவல் உள்ளது.

ஒரு முறை விக்கிப்பீடியாவிலும் இணையத்திலும் இயங்குகின்ற செங்கைப் பொதுவன் ஐயா, தன்னுடைய புத்தகத்திற்காக ஒரு ஓவியத்தினை கற்பனை செய்யும் படி கூறினார். அதில் ஒரு ஆண் யாழினை மீட்டும் பொழுது அருகே ஒரு யானை மயங்கி நிற்பதாக இருக்க வேண்டும் என்றார்.

வையம் உடையான் மகரயாழ் கேட்டருளும்
தெய்வச் செவிகொதுகின் சில்பாடல் – இவ்விரவில்
கேட்டவா என்றழுதாள் கெண்டையங்கண் நீர்சோரத்
தோட்டவார் கோதையாள் சோர்ந்து.
– புகழேந்திப் புலவர் (நளவெண்பா)

கேடு இலா மகர யாழில் கின்னர மிதுனம் பாடும்
– கம்பராமாயணம்

தகரக் குழலாள் தன்னொடு மயங்கி மகர யாழின் வான்கோடு தழிஇ – மணிமேகலை

மகர யாழ் வல்ல மைந்தன் ஒருவனைக்கண்ட மத்தப் புகர் முகக் களிற்றின்…”  மேருமந்திரப் புராணம் (வச்சிராயுதம்-31)

தமிழில் மகரம் என்பது மீனைக் குறிப்பது. மகரக்கொடியோன் என்ற மீனைக் கொடியாக உடைய மன்மதனைக் குறிக்க பயன்படுத்துகின்றனர். தமிழ்ப்படி பார்த்தால் மகர யாழ் என்பது மீனின் வடிவுடைய யாழ். ஆனால் சமசுகிருதத்தில் மகரமீன், மகரமச்சம் என்றெல்லாம் கையாளுகின்றனர். மகரம் என்பதே சமசுகிருதமாக இருக்கலாம் என்றொரு கருத்து இருந்தாலும், இலக்கியங்களில் ஆளப்பட்டுள்ளது என்பதால் ஒரு துணிவு இருக்கிறது. மரகயாழினை மீன்யாழ் என மாற்றவும், அதுகுறித்தான இலக்கிய செறிவும் இல்லை. எனவே மகரத்தினை விட மனமில்லாமல் இருக்கிறோம்.

மருதயாழிசை –

தமிழரின் ஐந்திணைகளுள் ஒன்றான வயலும் வயல் சார்ந்த இடமும் மருத நிலம். இத்திணையில் மருதயாழ் இசைக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர். இந்த யாழினைப் பற்றியும் இலக்கியங்களில் செய்திகள் இருக்கின்றன. எனினும் இதன் அமைப்பு குறித்து சரியான ஆய்வு விளக்கம் இணையத்தில் இல்லை. இதனுடைய இசையானது எவ்வாறானது என்பது பற்றி மட்டுமே செய்திகள் உள்ளன. மதுர யாழ் என்பது அமைப்பு ரீதியில் இல்லாமல் ஒரு பண்ணாக மட்டுமே இருந்திருக்க வாய்ப்புகள் அதிகமுள்ளது.

பூம ரும்புனல் வயற்களம் பாடிய பொருநர்
தாம ருங்கிளை யுடன்றட மென்மலர் மிலைந்து
மாம ருங்குதண் ணீழலின் மருதயாழ் முரலுங்
காமர் தண்பணைப் புறத்தது கருங்கழி நெய்தல்.
– சேக்கிலார் (பெரியபுராணம்)

நன்றி.

விக்கிப்பீடியாவில் பொன்னியின் செல்வன் கட்டுரைகள்

இதோ இரண்டாயிரத்து பனிரெண்டாம் ஆண்டு முடியப்போகிறது. எல்லோர் மனமும் இந்த வருடத்தில் பெற்றவைகளையும், இழந்தவைகளையும் பட்டியலிட்டு அசைபோட்டுக் கொண்டிருக்கின்றன. நானும் நிறைய இழந்திருக்கிறேன், அதேசமயம் நிறைய பெற்றிருக்கிறேன். அனைவரையும் போல தனிப்பட்ட மகிழ்வுகளையும், துக்கங்களையும் அனுபவித்திருக்கிறேன். ஆனால் இறுதியாக இந்த வருடத்தில் நான் வாழுகின்ற சமூகத்திற்கு ஏதேனும் செய்திருக்கின்றேனா என்ற கேள்வியெழுப்புகிறேன். ஆம் என்று விடைக் கிடைக்கின்றது. அது காலத்தினால் அழியாத காவியத்தினை கலைக்களஞ்சியத்தில் சேர்ப்பித்த பணி.

எவரும் எழுதலாம் என்ற சுலோகத்தோடு விக்கிப்பீடியா அனைவரையும் எழுத அழைக்கிறது. நானும் எதையாவது எழுதலாம் என விக்கியில் கணக்கு தொடங்கினேன். ஆனால் எழுதுவதற்கான உறுதியான மேற்கோள்கள், வலைதளம் போல் அல்லாது கலைக்களஞ்சியத்திற்கான தனித்த எழுத்துமுறை என்று ஏகப்பட்ட கடுமையான வரன்முறைகளால் என்னால் தொடர்ந்து பங்குகொள்ள முடியவில்லை. அவ்வப்போது ஆர்வம் மேலோங்கும் பொழுதெல்லாம் ஓடிச்சென்று எழுதிவிட்டு வருவதோடு என் பணி நின்று போனது. அலுவல் குறைந்த போன செப்டம்பர் மாதத்தில் அமரர் கல்கியின்  பொன்னியின் செல்வனை படிக்க தொடங்கியிருந்தேன்.

032

முழுவதுமாக படித்து முடிக்காமல் சகோதரன் வலைப்பூவில் கருத்து பகிர்வது இயலாது என்பதால், பொன்னியின் செல்வனைப் பற்றி பகிர்ந்து கொள்ள வேறொரு வழியை தேடினேன். அத்தருனத்தில் விக்கிப்பீடியாவில் பொன்னியின் செல்வன் என்ற பக்கமும், சில கதைமாந்தர்களின் பக்கமும் மட்டுமே உருவாக்கப்பட்டு இருந்தன. அவையும் முழுமையின்றி தொடங்கப்பட்ட இடத்திலேயே நின்றுகொண்டிருந்தன. எனவே படித்ததை பகிர்தலுக்காக விக்கியை தேர்தெடுப்பதில் எந்த சிரமமும் இல்லாமல் போனது.

02

சில நாட்களில் பொன்னியின் செல்வனை படிப்பதும், அதில் வரும் கதாப்பாத்திரங்களின் இயல்புகள் பற்றி விக்கியில் எழுதுவதுமே வழக்கமானது. இடைஇடையே வந்த சிக்கல்களும், கருத்து மாறுபாடுகளும் விக்கியில் முன்பிருந்தே பணியாற்றிக் கொண்டிந்த தமிழ்க்குரிசில், –Booradleyp போன்ற நண்பர்களால் ஒழுங்கு செய்யப்பட்டது. புனைவுக் கதையின் கதைப்பாத்திரங்கள் பற்றி எழுதுவதால் மேற்கொள் கட்ட வேண்டிய தொல்லையும் இல்லாதுபோனதால், மிகக் குறுகிய காலத்தில் பொன்னியின் செல்வன் கதைமாந்தர்கள் அனைவருக்குமான பக்கங்களை உருவாக்கிவிட்டேன். சில நாட்களிலேயே கதைமாந்தர்களின் இயல்புகள் எழுதிமுடிக்கப்பட்டுவிட்டன.

இருப்பினும் அந்த கட்டுரைப் பக்கங்களுக்கு மேலும் அழகு சேர்க்க பொன்னியின் செல்வன் கதைமாந்தர்களை கற்பனையாக வரைந்த மணியம், வினு ஓவியங்களுடன், பத்ம வாசன் ஓவியங்களும் கிடைத்தவரை சேர்த்தேன். கட்டுரைகள் முழுமையான அழகுவடிவெடுத்து நின்றன. பொன்னியின் செல்வனுக்கான தனித்த வார்ப்புருவை கனகரத்திரம் என்ற நண்பர் உருவாக்கியிருந்தார். அதில் சில மாற்றங்களை செய்து, புதிய கதைமாந்தர்களையும் இணைத்து மேலும் பெரியதாக மாற்றினேன். இந்த வார்பபுரு முயற்சிக்கும் விக்கிப் பயனர்களால் வரவேற்பு தரப்பட்டது. ஆர்வமுள்ள புதுப்பயனர் பதக்கம், மறுவருகைப் பதக்கம் என இருபதக்கங்களும் விக்கியன்பர்களால் எனக்கு கொடுக்கப்பட்டன.

01

நான் உருவாக்கிய நாற்பதற்கும் மேற்பட்ட பொன்னியின் செல்வன் தொடர்புடைய கட்டுரைப் பக்கங்களால், விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/ஜெகதீஸ்வரன் என்பது உருவாக்கப்பட்டது. அது மட்டுமன்றி 29ம் தேதி அக்டோபர் மாதம் நான் பங்களித்த பொன்னியின் செல்வன் வார்ப்புரு விக்கப்பீடியாவின் முதல் பக்கத்தில் காட்சிபடுத்தப்பட்டது. பங்களிப்பின் இனிமையை உணர்ந்து மகிழ்ந்த தினம் அது. இப்போதும் சைவ சமயம் சார்ந்த கட்டுரைகளை போதிய அளவு எழுதப்படாமலும், எழுத தொடங்கப்பட்ட பல கட்டுரைகள் ஆழமாக எழுதப்படாமலும் உள்ளன. ஆனால் அவைகளை கற்பனை கதைகளைப் போல எழுத இயலாது. சரியான ஊடக மேற்கோள்களுடன் மட்டுமே எழுத வேண்டியுள்ளதால் கடினமாக உள்ளது. தீர்ப்புகளும், தீர்வுகளும் நம்மிடம் இருப்பதில்லை, எல்லாம் வல்ல ஈசன் அடுத்த வருடமாவது இதற்கு அருள் செய்ய வேண்டும். அடுத்த வருடத்தில் சந்திப்போம் நண்பர்களே.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

01

மேலும் –

விக்கிப்பீடியா பயனர் பக்கம் 

தொடங்கியுள்ள கட்டுரைகள்

கதைகளும் நானும் – விடலை ஞாபகங்கள்

கதைகளும் நானும் – மழலை ஞாபகங்கள் ன் தொடர்ச்சி,..

சிறுவர் மலரில் தொடங்கிய என் வாசிப்பனுவபம் வாரமலர், குமுதம், ஆனந்தவிகடன் என சிற்றிதழ்களாக நீண்டது.  சிற்றிதழ் கதைகளில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கொஞ்சம் சிற்றின்பமும் இணைந்தன.  மலரின் வாசனையில் மதிமயங்கிய வண்டென மனம் தள்ளாடின. அதன் புரிதலை நோக்கிய பயணத்தில் புராணக் கதைகளில் கூட இதுவரை தெரிந்த கதைகளிலேயே சில சம்பவங்கள் உடன் சேரத் தொடங்கின.  பாஞ்சாலிக்கு ஐந்து கணவன்கள், தசரதனுக்கு ஆயிரம் மனைவிகள், இராமனின் மனைவிக்கு இராவணன் ஆசை கொண்டது என கதைகளின் அடிநாதம் காமமாக இருந்தது.

உடலுறவு என்பதை வெறுத்தோ, குழந்தைகளுக்கு சொல்ல மறுத்தோ புராண, இதிகாசங்களில் ஒரு நகைப்புக்குறிய விசயத்தினை செய்திருப்பார்கள். குமரன் சிவ நெற்றி பொறியில் இருந்து பிறந்தான், வினாயகன் சக்தியின் அழுக்கில் இருந்து பிறந்தான், ஐயப்பனை மன்னன் கண்டெடுத்தான் என்று கதையளந்திருப்பார்கள். மகாபாரதத்தில் பாண்டு இறந்தபிறகு குந்திக்கு ஐந்து மகன்கள் பிறந்தன என்றும், ஒவ்வொருவரின் தந்தையும் எமன்(தர்மனின் தந்தை), வாயு(பீமனின் தந்தை), இந்திரன்(அர்ஜூன்னின் தந்தை), அஸ்வினி தேவர்கள்(நகுலன்,சகாதேவனின் தந்தை) என்று சொன்னவர்கள். மந்திரத்தால் பிறந்தவர்களாக சுட்டியிருப்பார்கள். அதனால்தான் கண்ணனும், இயேசுவும் கன்னித்தாய்க்கு பிறந்தவர்களாக மாற்றியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

நல்லவேளை சிற்பிகளும் அவ்வாறு நினைக்காததால் பாலியல் கல்வி கோயில் சிற்பங்களாக இருந்துவந்துள்ளன. அம்மையும் அப்பனும் சொல்லிதர தயங்கும் சங்கதிகளெல்லாம் சப்தமின்றி அங்கிருந்தன. கோயிலே கதியென இருந்த அந்தகால மக்களுக்கு இதெல்லாம் சாத்தியப்பட்டு இருந்திருக்கலாம். கருவறை மட்டுமே பிரதானமாக மாறியிருக்கும் இந்த காலத்தில் நிச்சயம் கோவில்சிற்பங்களால் பலனில்லை. காரைக்கால் அருகே இருக்கும் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் 500 ரூபாய் தரிசன நபர்கள் மட்டுமே ராஜகோபுரம் வழியாக நுழைய முடியும். விழாக்காலங்களில் வாசலில் ஆரமிக்கும் இரும்பு தடுப்புகள், சனீஸ்வரை நமக்கு காட்டிவிட்டு மறுபடியும் வாசலுக்கே கொண்டுவந்து விட்டுவிடும். பிறகு எங்கிருந்து கோயில் சிற்பங்களை கண்டுகளிப்பதெல்லாம்.

ஒவ்வொரு ஆணின் பருவ வயது ஒரு சிக்கலான நூல்கண்டினைப் போன்றது. அதன் சிக்கல்களை நீக்க முடியாமல் நூல் முழுவதையும் வீணாக்கிவிடுகின்றதைப் போல வாழ்க்கையை வீணடித்த ஆண்களே இங்கு அதிகம். வெகுசிலரே அதன் சிக்கல்களை புரிந்துகொண்டு வாழ்கின்றார்கள். இந்த சமூகத்தின் கட்டமைப்பில் ஆண்களின் நிலையை விட பெண்ணின் நிலை மிகவும் தெளிவானதாக இருக்கிறது. அவளுக்கு அன்னை, பாட்டி என எல்லோரும் உதவி செய்ய காத்திருக்கின்றார்கள். போதாக்குறைக்கு சமூலநல இயக்கங்களும் உடனிருக்கின்றன. ஆனால் ஆணின் அருகில் வரக் கூட தகப்பன்மார்கள் விரும்புவதில்லை. சமூகமும் அதன் பொறுப்புணர்வில்லாமல் ஊமையாக இருந்துவிடுகிறது. அதனால் முட்டிமோதி பருவத்தினைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஆண்களுக்கு ஏற்படுகிறது.

என் சகவயது தோழர்களும் ஏறக்குறைய இதே நிலையில்தான் இருந்தார்கள். அவர்களிடமும் பல கேள்விகள் இருந்தன, விடையின்றி. எங்கிருந்து இதற்காக விடைபெறுவது. இணையம் அறிமுகம் இல்லா காலம் என்பதால் ஒரே உபாயம் புத்தகம் மட்டுமே. அறிமுகமானது குறுநாவல் படிக்கும் வழக்கம். ஒரு கதாநாயகன் கதாநாயகியை திருமணம் செய்து கொள்வதிலிருந்து கதை ஆரமிக்கிறது. அவன் அவளுடைய உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் நேரம்கால கணக்கின்றி அவளை அனுபவிப்பதிலேயே குறியாக இருக்கிறான். அவள் அன்னையிடம் புகார் கூறும் போது, அன்னை அதை அலட்சியம் செய்கிறாள். இப்படி போகின்ற கதையின் இறுதியில் அவளின் தகப்பன் இறந்ததை கூட மறைத்து இரவு முழுதும் அவளுடன் கழித்துவிட்டு காலையில் சொல்கிறான். அதனால் கோபம் கொண்டு அவள் வெளியேறுவதாக முடிகிறது கதை. எது புரிந்த்தோ இல்லையோ, இவ்வகை கதைகளை படிப்பதால் கேள்விகளுக்கு விடை கிடைக்காது என்று நன்கு புரிந்தது.

ஆனாலும் பருவக் கதைகள் சகதோழர்களிடம் ஏகம் இருந்தன. வழிவழியாக நாடோடிப் பாடல்களைப் போல கடத்தப்பட்டுவந்த அது, இன்னமும் வரிவடிவம் பெறாமல் இருக்கின்றன. சில எழுத்தாளர்கள் சுஜாதா, கி.ராஜநாராயணன் போல துணிந்து எழுதினாலும் அதெல்லாம் முதல் மழைதுளி போன்றதே. இன்றும் கடலளவு கதைகள் காற்றோடு காற்றாய் பரிமாறப்பட்டு வந்துகொண்டிருக்கின்றன. தேர்ந்த எழுத்தாளர்களால் எழுத்துருவம் பெறும் கதைகள் திரிதலுக்கும் உட்படுகின்றன. நாட்டார் பாடல்கள் போல அப்படியே ஆவணம் செய்தல் கடினமே. மூன்றாம் தர எழுத்தாளர்களால் எழுதப்படும் கதைகளில் நான் மேலே கூறிய எதையும் நீங்கள் பெற முடியாது. காமத்தினை காசாக்க நினைப்பவர்களின் கதையில் சதை வர்ணனை தவிற ஏதையும் எதிர்பார்க்க முடியாது. 13+, 18+ என வயதுவரையரை செய்தாலும் கதைகளுக்கு வயதில்லை.

இதில் ரசனை மிகுந்த நகைச்சுவை கதைகளும் ஏராளம். விடுதியின் ஞாயிறுகளில் மேடைமீதேறி ஒவ்வொருவராய் கதை பகிர்ந்திருக்கிறோம். மண்குடம் கதை சொல்லி நான் அமர்ந்த பிறகு அரங்கேறிய கதைகளால் விடுதியறை வெட்கம் கொண்டிருக்கும். குபீர் சிரிப்பலைகளை அடக்கி விடுதி கண்காணிப்பாளரிடமிருந்து தப்பிய அனுபவங்களை எத்தனை தோழர்கள் பகிர்ந்து கொண்டிருப்பார்கள் என்பதே கேள்விக் குறிதான். இறுக்கமாக இருக்கும் நம் சமூகத்திலேயே இத்தனை கதைகள் புழங்குகையில், வெளிநாடுகளில் எளிமையான  காமிக்ஸ் வரை சென்றது வியப்புகுறியதல்ல.

பாலுறுப்புகளின் அமைப்பினையும், செயல்பாட்டினையும் பள்ளி பாடபுத்தகம் கற்றுக் கொடுத்தாலும், வாழ்வியல் சந்தேகங்களை அவைகள் கண்டுகொள்வதில்லை. காமகதைகளும் உதவாது என்றானபோது, ஏன்?ஏதற்கு?எப்படி? என்பதில் வாசகர் சுயஇன்பம் பற்றி கேட்ட கேள்விக்கு சுஜாதா விடை எழுதியிருந்தார். எதார்த்த உண்மையானது கதையில் வருவது போல கற்பனையல்ல என்று உணர்ந்த போது, நாராயணரெட்டி, ஷாலினி போன்ற மருத்துவர்களின் நூல்கள் கிடைக்க தொடங்கின. இதெல்லாம் இணையமென்ற பரந்தவெளி அறிமுகமி்ல்லா காலத்தில் நிகழந்த ஒரு விடலை வாழ்வியல் நிகழ்வுகள். இப்போதிருக்கும் விடலைகளுக்கு இதைவிட அதிக கதைகள் கிடைத்திருக்கலாம், இல்லை கிடைக்கப்பெறாமல் கூட போயிருக்கலாம். கிடைத்தவர்கள் பாக்கியசாலிகள் என்று சொல்லமுடியாத போது என்ன கவலை?

பி.கு –

விரசமின்றி எழுதியிருக்கிறேன் என்று நம்புகிறேன். இருப்பினும் விரும்பாதவர்கள் பொருட்செய்யாதீர்கள்.

சரோஜாதேவி முதல் சகுந்தலாதேவி வரை இனி இல்லை

“புத்தகங்களைத் திருடுங்கள். ஏனென்றால் புத்தகம் திருடுவது வெண்ணையைத் திருடுவதைவிடப் புனிதமானது” என்று சொன்னார் வலம்புரிஜான். பல மனிதர்களிடம் புத்தகங்கள் செய்திருக்கும் மாற்றங்கள் அலாதியானது. நிறைய மின்புத்தகங்களை வாசிக்க கிடைக்கையிலும், அச்சுப் புத்தகத்தினை புரட்டி படிப்பது அனைவருக்கும் விருப்பமான ஒன்று.

வான் முட்டி நிற்கும் விலைவாசியில், வயிற்றிக்கு செலவு செய்யவே விழிபிதுங்கி நிற்கும் நடுத்தர வர்க்கத்தினர். அறிவுப் பசிக்காய் அச்சு புத்தகங்களை வாங்கிப் படிப்பது இயலாத ஒன்றாகி விட்டது. ஆடி கழிவு போல வருடம் ஒரு முறை வந்து போகும் புத்தகச் சந்தை எதிர்நோக்கி என்னைப் போல எத்தனையோ பேர் காத்துக் கொண்டிருக்கிறோம்.

இதற்கு மத்தியில் அபூர்வமாய் சில இடங்களில் நூலகங்கள் உண்டு. அதிலும் அபூர்வமாய் சில இடங்களிலும் புத்தகங்களும் உண்டு. ஏனென்றால் நிறைய நூலகங்கள் பெயரளவில் மட்டுமே இருக்கின்றன. அப்படி பெயரளவில் இல்லாமல் கணக்கற்ற புத்தகங்களை தாங்கிக் கொண்டிருக்கும் நூலகங்களில் “அண்ணா நூற்றாண்டு நூலகமு”ம் ஒன்று. சைதைக்கு அருகே இருப்பதால் சில ஞாயிறுகள் நண்பர்களுடன் அங்கு சென்றிருக்கிறேன்.

இது போன்ற மிக நவீனமயமான நூலகத்தினை இதுவரை நான் கண்டதில்லை. ஆயிரம் புத்தகங்களை கொண்ட நூலத்தினை பார்த்தவனுக்கு ஆசியாவிலேயே பெரிய நூலகத்தினை பார்த்த போது எற்பட்ட மகிழ்ச்சியை உங்களால் அறிந்து கொள்ள முடியும். எங்கள் கிராமத்து நூலகத்தில் பெரும்பாலும் பொழுது போகாத பெருசுகளும், நாவல்களில் ஊறிப்போன சிறுசுகளை மட்டுமே காண முடியும். ஆனால் இங்கே ஏகப்பட்ட உழைக்கும் வர்கத்தினரைப் பார்க்க முடியும்.

கணினி முதற்கொண்டு வரலாறு வரை தனித்தனிப் பிரிவுகளாக ஏகப்பட்ட புத்தகங்கள். அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் மனிதர்கள் என்று கண்டாலும். என்னை வியக்க வைத்தது இங்கு வரும் குழந்தைகள்தான். திரைப்படங்களிலும், தொலைக்காட்சியிலும் தொலைந்து விடாமல் அறிவு வளர்க்க வரும் அந்த அடுத்த தலைமுறையை காணும் போது,.. இன்னும் படிப்பவர்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றார்கள் என்ற ஆனந்தம் ஏற்பட்டது.

கடந்த முறை சென்ற போது கூட உறுப்பினர் அட்டைக்காக அங்குள்ளவர்களை நாங்கள் அனுகினோம். விரைவில் அதற்கான ஏற்பாடுகள் முடிந்துவிடும் என நம்பிக்கையாக சொன்னார்கள். ஆனால் இன்று இடிபோல ஒரு செய்தி “சென்னை கோட்டூர்புரத்தில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட, ஆசியாவிலேயே மிகப் பெரிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தை டிபிஐ வளாகத்திற்கு மாற்றப் போவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்”.

வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது. கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட ஒரே காரணத்திற்காக நூலகத்தினை முடக்குவது எந்த நாட்டின் வரலாற்றிலும் நிகழ்ந்திருக்க முடியாத ஒன்று. நான் அறிந்த வரையில் ஹிட்லர் மட்டுமே நூலகத்தினை அழித்தாக கேள்வியுற்றிருக்கிறேன். ஆனாலும் என்னால் ஜெயலலிதாவை ஹிட்லருடன் கூட ஒப்பிட முடியவில்லை. ஏனென்றால் அவர் அழித்த நூலகம் “செக்ஸ்” பற்றியது என்று குறிப்புகள் கூறுகின்றன. எனவே ஜெயலலிதா இன்று ஹிட்லரையும் மிஞ்சிவிட்டார்.

முதல்வர் அதிகாரத்தில் இருக்கும் ஜெயலலிதாவின் இந்த அறிவில்லாத செயலுக்காக அவரை நடுத்தெருவில் நிற்க வைத்து செருப்பினால் அடித்தாலும் தகும் என்றே தோன்றுகிறது.
– புத்தகத்தினை நேசிக்கும் ஒரு மனிதன்.

நூலகத்தினைப் பற்றி மேலும் அறிய ,..

http://annanootrandunoolagam.blogspot.com

கருவறை வேண்டாம் கழிவறை கட்டுங்கள்

வேலைதேடி சென்ற நாட்களில் நானும், என் நண்பர்களும் சந்தித்த பிரட்சனைகளில் கழிவறையும் ஒன்று. இந்த நாட்டில் வேலையை கூட தேடிவிடலாம், ஆனால் கழிவறையை தேடி கண்டுபிடிப்பது அத்தனை சுலபமல்ல. இன்று அலுவலகம் செல்லும் வழியில் ஒரு சம்பவத்தைக் கண்டேன். சில வாலிபர்கள் சுவரில் இருந்த வள்ளலாரை சிறுநீரால் அபிசேகம் செய்து கொண்டிருந்தார்கள். இதை வள்ளலாருக்கு அவமானமாக நான் கருதவில்லை. அதை வரைந்து வைத்த கட்டிட உரிமையாளரின் அறியாமையைத்தான் பெரியதாக கருதினேன்.

சில நாட்களுக்கு முன் நான் எழுதிய கவிதை,.

இங்கு சிறுநீர் கழிக்காதே!

அன்று காலை முதல்

வேலை தேடி

அலைந்து கொண்டிருந்தேன்

திடீரென சிறுநீர் உந்துதல் ஏற்பட

கழிவறையை தேடினேன்!.

ஆனால்

கண்ணில் பட்டதெல்லாம்

இங்கு சிறுநீர்க் கழி்க்காதே என்ற வாசகமும்

அதைக் காவல் காக்கும் கடவுளையும் தான்!.

தெருவிற்கு தெரு இங்கே தெய்வங்கள் குடியிருக்கும் கருவறைகள் இருக்கின்றன. ஆனால் நம்முடைய கழிவுகளை அகற்ற கழிவறைகள் தான் இல்லை. இங்கு “சிறுநீர் கழிக்காதீர்கள்” என எழுதப்பட்டிருக்கும் பகுதியிலெல்லாம் கழிவறையின் தேவை இருக்கிறது என்பது மறைமுக உண்மை.

இப்பொழுதெல்லாம் வாசகங்கள் மட்டும் எழுதப்படுவதில்லை. மாறாக கடவுளின் படங்கள் வரைந்து வைக்கப்படுகின்றன. மனிதர்கள் சிறுநீர் கழிக்காமல் இருக்க, தெய்வங்கள் காவல் காக்கின்றன. “இங்கு சிறுநீர் கழிப்பது குற்றம்” என்ற பலகைகளைத் தாங்கி அல்லா, புத்தர், ஏசு, சிவன் என எல்லோரும் அமர்ந்திருக்கின்றார்கள்.
“ஏன் நாத்திகர்களுக்கு சிறுநீர் உந்துதலே வராதா” என சில நேரங்களில் நான் வேடிக்கையாக நினைத்ததுண்டு.

கூவம் நதிக்கரையில் இருக்கும் ஆயிரக்கணக்காக குடிசைகளுள் சில காங்கிரிட் கட்டிடங்கள் இருக்கிறது. அது மக்கள் ஒன்று சேர்ந்து கட்டிய கோவிலாகவோ, ஆலயமாகவோ இருக்கிறதே தவிற, கழிவறையாக எங்கும் இருப்பதில்லை. இங்கு மட்டுமல்ல எங்கும் அதே நிலைதான். கிராமங்களில் கோவில்கட்ட வீட்டிற்கு ஆயிரம், ஐயாயிரம் என கட்டாய வரிவிதிப்பு செய்கின்றார்கள். அதற்கு அள்ளி கொடுக்கும் கைகள், காலைக்கடனுக்காக கிள்ளிக் கூட கொடுப்பதில்லை.

அதுமட்டுமின்றி கழிவறை என்பது பெண்களுக்கு மட்டுமான ஒரு தனிச் சொத்தாக எண்ணத் தொடங்கிவிட்டார்கள். பல பள்ளிகளில் மாணவர்களுக்கு மட்டும் கழிவறை இருக்காது. மாணவிகள் தினம் தினம் பராமரிக்கப்படும் கழிவறையில் சுகமாய் சென்று வர,. மாணவர்கள் மட்டும் புதர்களையும், மரத்தையும் தேடிக் கொண்டு அலைய வேண்டும். ஏன் அவர்கள் மனிதர்கள் இல்லையா. அரசால் கட்டப்பட்ட பல கழிவறைகள் இன்று ஆக்கிரமிப்பில் இருக்கின்றன. இலவச கழிவறை எல்லாம் கட்டனக் கழிவறைகளாக செயல்பட்டுவருகின்றன. சில இடங்களில் ஐந்து ரூபாய் கூட வசூல் செய்யப்படுகிறது.

பள்ளிகளில் ஆரமித்து இந்த கழிவறைப் பிரட்சனை கோவில்கள், சுற்றுலாதளங்கள் என எல்லா இடங்களுக்கும் பொதுவான பிரட்சனையாகவே உள்ளது. மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்பதை மறுக்க முடியாது. இந்தியாவில் கைப்பேசிகளின் எண்ணிக்கையை விட கழிவறைகள் குறைவு என செய்திகள் வெளிவந்தன. திறந்த வெளி கழிவறைகளை உபயோகப்படுத்தும் போது சைனா செட்டில் சத்தமாக பாட்டு வைத்துக்கொண்டு போகின்றார்கள். கைப்பேசி இங்கு மானப்பிரட்சனையாக மாறிவிட்டது. ஆனால் மானமெல்லாம் எப்போதோ போய்விட்டதை உணராமலே.

இனி அடுத்த தலைமுறையாவது சிறுநீர் உந்துதல் ஏற்படும் போது, மரத்தையோ, செடியையோ தேடி ஓடாமல் கழிவறையை பயன்படுத்த அரசு நடவெடிக்கை எடுக்கட்டும்.

தமிழ் திருமண அழைப்பிதழ் – வழிகாட்டுதலுக்காக

என் சிற்றன்னைக்கு “மணிவிழா” விரைவில் நடைபெறவிருக்கிறது. அதற்கான அழைப்பிதழ் தயார் செய்யும் பணியை என்னிடம் கொடுத்தார்கள். நல்ல தமிழில் அழைப்பிதழைத் தர வேண்டும் என்பது என் விருப்பம். அதற்காக வலைமனையில் தேடியும் பலனில்லை.

சட்டென தோழி ஒருத்தியின் மண விழா அழைப்பிதழ் முழுவதும் தமிழில் எழுதப்பட்டிருந்தது ஞாபகத்திற்கு வந்தது. என் பழைய புத்தகங்களோடு உறவாடிக்கொண்டிருந்த அந்த அழைப்பிதழை கண்டபின் மனநிறைவானது. அதனை வழிகாட்டுதலாக கொண்டு, அழைப்பிதழை வடிவமைத்துவிட்டேன்.

எனக்கு வழிகாட்டுதலாக இருந்த அந்த அழைப்பிதழ் பிறருக்கும் வழிகாட்டுதலாக இருக்கட்டும் என நம்முடைய சகோதரன் வலைப்பூவில் தருகிறேன்.

அழைப்பிதழின் உறை –
வழக்கமான மேளதாளங்கள், ஊர்வலங்கள் போன்ற படங்களோ, கடவுளின் படங்களோ இல்லாமல் ஆதி தமிழனின் வாழ்வை சித்தரிக்கும் படத்துடன். மனம் விடு தூது என்ற வாசகமும் இணைந்து புதுமையான அழைப்பிதழ் என்ற தோற்றத்தினை உறையிலேயே கொடுத்திடும் அழகு!.

அழைப்பிதழின் முகப்பு –
“யாயும் ஞாயும் யாரா” எனத் தொடங்கும் குறுந்தொகை பாடல் முழுவதும் இடம்பெற்று, அதன் கீழே மணமக்களின் பெயர்கள்.

அழைப்பு –
நிகழும் சர்வமங்கள விகிர்தி வருடம் ஆவணித் திங்கள் 10ம் நாள் (02.01.0000) திங்கள் கிழமை சித்திரை நட்சத்திரமும் ஆயுஷ்மன் யோகமும் பாலய கரணமும் இறையருளும் கூடிய சுபயோகதினத்தில் என்று வழக்கமான முறையில் எழுதப்படாமல் மிக அழகாக எளிமையாக வடிவமைக்கப்பட்ட அழைப்பு,.

அழைப்பிதழின் பின்புறம் –
குறுந்தொகை பாடலுக்கான விளக்கம் நடைமுறைத் தமிழில்,.

பாதுகாப்பாக தீப ஒளி திருநாளை கொண்டாட செய்ய வேண்டியது


பாதுகாப்பாக தீப ஒளி திருநாளை கொண்டாட சங்கர நேத்ராலயாவின் மருத்துவ சமூகவியலாளர் முனைவர் அ.போ. இருங்கோவேள் அவள் விகடனுக்கு தந்த விழிப்புணர்வு கட்டுரை நம்முடைய தளத்திற்காக,…

மத்திய சுகாதர அமைச்சகத்தின் தேசிய பார்வையிழப்பு தடுப்பு சட்டம் தருகின்ற புள்ளிவிவரப்படி, 2005-ம் ஆண்டில் மட்டும் தீபாவளியன்று கண்ணில் பாதிப்பு ஏற்பட்டவர்கள் 1,400 பேர். இவர்களி்ல் 14 வவயதுக்கும் குறைவானவர்களே மிக அதிகம் என்பது நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய விஷயம். இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டு வருகிறது.

இதை தடுக்க சில வழிகள்,..

1. தரமற்ற, போலியான பட்டாசுகள், நீங்கள் பற்ற வைத்தவுடனேயே வெடித்து பாதிப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

2. நெருப்பை அணைப்பதற்கு மட்டுமல்ல, நமது உடலில் தீக்காயம்பட்டுவிட்டால் உடனடியாக பயன்படுத்தக் கூடிய முதலுதவி மருந்தும் தண்ணீர்தான். ஒரு பக்கெட் தண்ணீரையாவது அருகாமையில் வைத்துக் கொள்ளுங்கள், பட்டாசு வெடிக்கும்போது.

3. பட்டாசு வெடிக்கும் குழந்தைகள் மற்றும் அவர்களை கண்காணிப்பவர்கள்… கட்டாயம் காலணி அல்லது ஷூ அணிய வேண்டும்.

4. எதிர்பாராதவிதமாக தீக்காயம் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட பகுதியை உடனடியாக தண்ணீரில் நனைக்க வேண்டும். அப்போதுதான் எரிச்சல் அடங்கி, வலி குறையும். திசுக்கள் பாதிக்கப்படுவதும் குறையும். காயத்தைச் சுத்தமான துணி கொண்டு மூட வேண்டும். பிறகு மருந்துவரிடம் செல்ல வேண்டும். அதேசமயம், கண்களில் காயம் ஏற்பட்டால், தண்ணீர் விட்டுக் கழிவக் கூடாது. சுத்தமான துணி கொண்டு மூடியபடியே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

5. பாட்டில் மூலமாக ஏவப்பட்ட ராக்கெட் வெடித்தபோது ஒரு குழந்தையின் கண்ணை, கண்ணாடித் துகளோ அல்லது இரும்புத் துகளோ தாக்கிவிட்டது. ஆனால், கண்ணிலிருந்து ரத்தம் ஏதும் வரவில்லை. வலியும் உடனே போய்விட்டது. இத்தகைய சூழலில் நாம் செய்ய வேண்டியது என்ன?. உடனடியாக கண் மருத்துவரின் கவனி்பபு வழங்கப்படாவிட்டால், முழுமையான பார்வையிழப்பு உள்ளிட்ட மோசமான விளைவுகள் ஏறபடலாம். கண்ணைக் கசக்கினால் ரத்தம் அதிகமாக வெளியேறலாம். காயத்தின் வீரியமும் அதிகரிக்கலாம். எனவே கண்ணைச் சுற்றி பாதுகாப்பாகக பேப்பர் கப் ஒன்றினை வைத்து டேப்பினால் ஒட்டியோ… அல்லது பாதுகாப்புக்கான பேட்ச் அணிவித்தோ அழைத்துச் செல்லலாம்.

6. வலி நிவாரணியாக எந்த மருந்தையும் கொடுக்கக் கூடாது. சில வகை மருந்துகள் ரத்தம் கசிவதை அதிகப்படுத்தக் கூடும்.

7. தீக்காயம் ஏற்பட்டவுடன் மஞ்சள்தூள், பேனா மை, பக்கத்து வீட்டார் சொல்லும் ஆயின்மென்ட் போன்றவற்றை போடக் கூடாது. அப்படி செய்தால்.. எந்த அளவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது என்று கண்டுபிடிப்பதற்கு சிரமம்.

நன்றி –

அவள் விகடன்.

இந்த இடுகையை பி.டி.எப் கோப்பாக பதிவிரக்கம் செய்ய படத்தினை சொடுக்குங்கள்,…

இன்று சுதந்திரத்திற்கு அகரம் எழுதுவோம்

கல்விதான் மனிதனுடைய அடுத்தக் கட்ட பரிணாம வளர்ச்சிக்கு கொண்டு செல்கிறது. ஆனால் நல்ல மதிப்பெண்களை பெற்றிருந்தும் கல்வியை தொடர முடியாமல் செல்கின்ற பலரை என் வாழ்க்கையில் சந்தித்திருக்கிறேன். கிராமத்தில் இருப்பவர்களுக்கு கல்வி ஒரு கனவு. மேல்படிப்பும், நல்ல வேலையும் சமூக அந்தஸ்தும் ஒரு போதை. இப்போது கூட அவர்களிடம் பெரியவனாக ஆகியதும் என்ன செய்ய போகிறாய் என கேட்டால் எல்லோரும் போலிஸ், டாக்டர், இன்ஜினியர், ஆசிரியர் என்பார்கள். கௌரவமான தொழில் செய்ய வேண்டும் என அவர்களின் மனதில் சிறுவயதிலேயே பதிந்துவிடுகிறது.

சிறுவயதிலிருந்து “நான் டாக்டராக போகிறேன்” என்று நம்பிக்கையுடன் வளர்பவர்கள். திடிரென பணம், சமூகம், குடும்பச் சூழ்நிலை என பல எதிரிகள் முன் வரும்போது எதிர்க்க முடியாமல் போகின்றார்கள். பலர் மௌனமாக ஏற்றுக்கொள்கிறார்கள். சிலர் மறுத்து மரித்துப் போகின்றார்கள். ஆனால் முடிவுகள் அவர்கள் மீது திணிக்கப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

என்னுடைய வகுப்பில் முதல் மதிப்பெண் பெருகின்ற பெண் அவள். அவளிடம் மாணவிகளுக்குரிய கலகலப்பு இருக்காது. மெல்லிய இழையோடிய சோகம் எப்போதும் அவளிடம் இருப்பதை உணர்ந்திருக்கிறேன். அதற்கு காரணம் குடும்பம் என்பதை பிறகு தெரிந்து கொண்டேன். தகப்பன் இறந்துவிட தாயின் உழைப்பினை நம்பி வாழ்கின்ற அவளுக்கு, தங்கை வேறு. அவள் கதையை அறிந்து கொண்டபின் எனக்கோ ஏதோ பழைய படத்தின் ஞாபகம். உங்களுக்கும் கூட அப்படி இருக்கலாம். சரி.

ஒரு சமயம் தாய்க்கும் உடல்நிலை மோசமாக அவளுடைய தாய் மாமனுக்கு திருமணம் செய்துவைத்து விட்டார்கள். பள்ளிப் படிப்பும் அத்துடன் முடிந்துபோனது. அவளுடைய கைகளிலிருந்து புத்தகங்கள் பரிக்கப்பட்டு கரண்டி திணிக்கப்பட்டது. அவளுடைய அத்தனை வருட படிப்பும் செல்லாக்காசாக மாறிப்போவதை கண்களால் பார்த்துக் கொண்டிருந்தேன். இவளின் கதை இப்படியென்றால் என் பக்கத்துதெருவில் வசித்த மாணவனின் கதை இன்னும் சோகமானது.

குடித்து குடித்து குடல் வெந்துபோய் அவன் தகப்பன் படுக்கையில் இருந்தார். அவருடைய மருத்துவச் செலவுக்காக சேமிப்பில் இருந்த பணமும் தீர்ந்துபோய், கடனும் வந்தது. ஆனால் கிடைக்கின்ற சொற்ப பணத்திலும் மீண்டும் மீண்டும் குடித்து நோய் முற்றி இறந்து போனார். அவனை படிக்க வைக்க ஆள் இல்லை. கல்லூரிப்படிப்பிற்காக ஏங்கிய அவனை வேலைக்கு போகச் சொல்லி எல்லோரும் வற்புறுத்த, அவன் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்தான். கயிறெல்லாம் விட்டத்தில் கட்டி கட்டிலின் மீது ஏறி நிற்கையில் கால் தவறி, கழுத்தில் கையிறு அழுத்தி கனம் தாங்காமல் அறுந்து விழுந்தாலும், ஆண்குறி கட்டிலில் பட்டு ரத்தம் நிற்காமல் போக துடிதுடித்து இறந்தே போனான். இரண்டு மணி நேரமாவது அவன் உயிரோடு போராடிக்கொண்டு இருந்திருப்பான் என ஊரில் பேசிக்கொண்டனர்.

அவனுக்கு வாழ்க்கை மட்டுமல்ல, மரணமும் எளிதாக அமையவில்லை. பலரும் அவனுடைய உறவுகள், குடும்பங்கள் மீது கோபம் கொண்டார்கள். ஆனால் அவனின் குடும்பத்தினை குற்றம் சாட்டிவி்ட்டு நாம் நடையை கட்டமுடியாது. நம் மீதும் தவறுகள் இருக்கின்றன. ஏனென்றால் நாமும் இதே சமூகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்கும் பொறுப்புகள் இருக்கின்றன. நம்மால் என்ன செய்ய முடியுமோ அதனைச் செய்தாலே போதும். ஏதோ என்னால் முடிந்தது அகரத்தினை இணையத்தில் பரப்புவதுதான்.

நடிகர் சூர்யாவின் அகரம் அமைப்பினைப் பற்றி இன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பினார்கள். அதனை மறக்காமல் பார்க்கச் சொல்லி நேற்றே நண்பர்கள் பலரிடமிருந்தும் இணைய கடிதம் கணினியை நிறைத்தது. விதை என்ற புதிய கிளை அமைப்பில் தகுதி வாய்ந்த பணமில்லாத மாணவ கண்மணிகளுக்காக ஆரமித்திருக்கின்றார்கள். 6436 மாணவர்களில் அவர்களால் 159 பேருக்கு மட்டுமே உதவ முடிந்திருக்கிறது. அமைப்பின் பொருளாதாரத்தையும், தன்னார்வத் தொண்டர்களையும், நன்கொடையாளர்களையும் அதிகமாக கொண்டிருந்தால் இன்னும் நிறைய மாணவர்களுக்கு அவர்கள் உதவுவார்கள் என்று தோன்றியது.

உங்களுக்கும் உதவுவதற்கான விருப்பம் இருந்தால், தன்னார்வ தொண்டர்கள் என்று பதிந்து கொள்ளுங்கள். அதற்கு இங்கு சொடுக்குங்கள். நிறைய குடும்பங்களின் வளர்சசிக்கு எதிராய் ஏழ்மை, குடி, போதை என்றே இருக்கின்றன. நடுத்தர குடும்பத்தினை நடுதெருவுக்கு கொண்டு வர இன்று ஒரு மருத்துவச் செலவே போதும். நம்மால் இயன்றதை செய்திடுவோம்.

அகரம் தளம் –

agaram foundation

தெய்வங்களுக்கு முன்னால் நடக்கும் காம களியாட்டங்கள்


கிராமங்களில் நடக்கின்ற கூத்து என்ற கலைகள் இன்று திசை மாறி பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ரெக்காட் டான்ஸ் என்ற பெயரில் ஆபாச நடனவிடுதிகளில் நடந்து கொண்டிருப்பதை கோவிலுக்கு முன்னால் நடத்திக்கொண்டிருக்கின்றார்கள் நமது பாமர மக்கள். அதுவும் விதவிதமாக மக்களின் காம உணர்ச்சிகளுக்குள் வக்கிரமான எண்ணங்கள் ஊடுருவும் விதத்தில் அந்த நிகழ்ச்சிகள் இருக்கின்றன. அதைப் பற்றிய வேதனையான இடுகை இது.

நான் நாத்திகர்களை வெறுப்பதே இல்லை. சில சமயங்களில் ஆன்மீகவாதிகள் காப்பாற்ற தவறிய ஆலையங்களையும், சுட்டிக்காட்ட பயந்துபோகும் குற்றங்களையும் எல்லோருக்கும் சொல்லி, நல் வழிப்படுத்த அவர்களே உறுதுணையாக இருக்கின்றார்கள். என்னுடைய பள்ளிகால நண்பன் தீவிர நாத்திகன். கடவுளை மனிதன் கண்டுபிடித்ததே குற்றம் சாட்டிதப்பித்துக்கொள்ளதான் என்று அடிக்கடி சொல்லுவான். இன்று “மச்சி, கிராமக் கடவுளை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க நீ பாடுபட்டுக்கிட்டு கிடக்குற, ஆனா நம்ம மக்கள் அந்த கடவுள் முன்னாடி செய்யுற அசிங்கத்தப் பாரு”ன்னு சில லிங்குகள் அனுப்பியிருந்தான்.

அவை கோவில்களுக்காக மக்களிடம் வாங்கிய பணத்தில் நடத்தப்படும் ஆபாச விழாக்களின் காணொளிகள். பல இடங்களில் கோவில்கள் கட்டுவதற்கும், திருவிழா நடத்தவும் பொது மக்களிடம் கட்டாய வசுல் வேட்டை நடக்கிறது. மாரியம்மன் கோவில் புணரமைப்புக்காக வீட்டிற்கு 1000 ரூபாய் என என்கிராமத்திலேயே வசூல் நடந்திருக்கிறது. அந்தக் கோவில் கும்பாபிசேகம் முடிந்த கையோடு, அடுத்த கோவில் எங்கிருக்கிறது என பார்த்து அடுத்த வேட்டைக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள். கைக்கு வரும் மித மிஞ்சிய பணத்தில் கோவில் கட்டியபிறகும் பணம் இருக்கிறது. அதை மக்களை மகிழ்விக்க என்று சொல்லி, இது போன்ற ஆபாச நடனங்களுக்கு ஏற்பாடு செய்கின்றார்கள். எங்களூரில் இருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவில்தான், இந்த அசிங்கத்தை முதன் முதலாகப் பார்த்தேன். அப்போது விடலைப் பருவம்.

திருவிழா முடிந்து ஒரு மாதம் ஆனாலும் என்னுடன் படித்துக்கொண்டிருந்த மாணவர்களால் கூத்து பாடலை மறக்கமுடியவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஆனால் விழாவில் இளைஞர்கள் வெட்கப்பட்டுக் கொண்டிருக்க, விடலைகள் போல் அதிகம் விழுந்து விழுந்து ரசித்தது பல்போன கிழங்கள். சில பெருசுகள் மேடையேறி செல்லக்கூட முனைந்தார்கள். ஆடல் குழுவினர் தடுத்துவிட்டனர். பெரிய கோவில்களின் திருவிழாக்களிலும், மிகத் தொன்மையான கிராமக் கோவில்களிலும் இது போன்ற கொடுமைகள் நடப்பதில்லை என்பது கொஞ்சம் நிம்மதியான விசயம்.

ஆனால் கிராமமும் அல்லாமல், நகரமும் அல்லாமல் வளர்ந்து கொண்டிருக்கின்ற ஊர்களில் காவல் துறையினரின் துணையோடு இந்த கதை தொடர்ந்துகொண்டு இருக்கிறது. ஒயிலாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், புலியாட்டம் என எல்லா தொன்மையான கலைகளையும், கலைஞர்களையும் புறக்கணித்துவிட்டு, ஆடை அவிழ்ப்பு நடனங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றார்கள் ஊர் தலைவர்கள். இதனை ஆபாசமென தட்டிக்கேட்க மகளிர் அமைப்புகள் இல்லை. நடன அரங்கேற்றத்தில் கலந்து கொண்டாளாவது பணம் கிடைக்கும் என விட்டுவிட்டார்கள் போலிருக்கிறது. நடன விடுதிகளில் ஆபாச நடமாடுகின்றவர்களை அடித்து உதைத்த மனிதர்களில் சிலர், இங்கிருந்தால் கூட நல்லது நடக்கும் என்றே தோன்றுகிறது.

கோவில் பிராகாரங்களில், தூண்களில், கோபுரங்களில் சில உடலுறவுச் சிற்பங்கள் சிறிய அளவு இருக்கும். தேடுவோர் கண்களுக்கு மட்டும் தெரியும் அதையே ஆபாசமென சொல்லித்திரியும் யாரும் இதைக் கண்டு கொள்வதே இல்லை. இது போன்ற கூத்துகளால் உண்மையான கலைஞர்களும் நசிந்து போகின்றார்கள். கரகாட்டம் கூட ஆபாசங்களுக்கு இடம் கொடுக்க தொடங்கிவி்ட்டதை ஒரு காணொளி உணர்த்துகிறது.

தெருக்கூத்து ஒன்றில் இடம் பெற்ற அரிச்சந்திரன் கதையை பார்த்ததால் நமக்கொரு மகாத்மா காந்தி கிடைத்தார். இது போன்ற அவலங்களை பார்க்கும் மனிதர்கள் மகாத்மாக்களாக அல்ல மனிதர்களாகவே இருக்க மாட்டார்கள். செய்ய வேண்டியதெல்லாம் ஆபாசத்தினை அதுவும் கடவுளின் பெயரைக் கூறி நடப்பதை தடுத்து நிறுத்த விழிப்புணர்வு நமக்குள் எழுவதுதான். சமூகம் முழுவதும் புரையோடிக்கிடக்கும் இந்த வழக்கத்தை கடுமையான கைகொண்டுதான் அகற்ற வேண்டும்.

வாங்க ஒரு கப் விஷம் சாப்பிடலாம்

சாப்பாட்டுல தினமும் ஒரு கீரையை சேர்த்துக்கோங்க என்கின்றார்கள் மருத்துவர்கள். அதற்கு எப்போதும் பூச்சி அரிக்காத, பாலிஸ் கீரைகள் தான் நம்முடைய சாய்ஸ். ஆனால் அவ்வாறு பூச்சி அரிக்காத கீரைகளை சாப்பிடாதீர்கள் என்கிறார் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்.

பூச்சிகள் கூட உண்ண முடியாத அளவிற்கு தகுதியற்று போயிருக்கும் விஷ கீரையை நீங்கள் உண்ணுவதால் என்ன நேரும் என நினைத்துப் பார்க்க சொல்கிறார். கீரையில் தானே விஷம் இருக்கிறது என பழங்களுக்குப் போனால், இதைவிட கொடூரமாக இருக்கிறது விளைவுகள். பளபளக்கும் பழங்களில் எல்லாம் மறைமுகமாக ஒளிந்திருக்கிறது விஷம்.

பயிர் செய்யும் முன்பிருந்தே விதைகளை பூச்சி கொல்லி மருந்தில் ஊர வைப்பதை எங்கள் கிராமத்திலேயே பார்த்திருக்கிறேன். அடுத்தடுத்து பூச்சி கொல்லி மருந்தை தெளிப்பதால் நிலமே விஷமாகிப் போயிருக்கின்றது. ஆங்கில மருத்துவத்திற்கு பயந்து சிலர் இன்னும் சித்த மருத்துவத்தையே கடைபிடிக்கின்றார்கள். விளைவுகள் இல்லாத மருந்தென தலையில் வைத்து கொண்டாடிக் கொண்டிருந்தால் காலம்காலமாக பயன்படுத்தி வந்த வேப்பண்ணையே விஷமாகி உயிரைக் குடித்திருக்கின்றது.

சித்த மருத்துவம் வேண்டாமென சென்றவர்களையும் போலி மாத்திரைகள் பயமுருத்தியிருக்கின்றன. எதைச் சாப்பிட்டாலும் கண்டிப்பாக விஷம் நமக்குள் போகிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். கோக், பெப்சி மட்டுமல்ல சாதாரண குடிநீரையே இப்போது நம்ப முடியவில்லை.

இதிலிருந்து தப்புவது எப்படி, பூச்சி தின்ற கீரையை வாங்க வேண்டும், நன்கு அலசிவிட வேண்டும். பழம் வாங்கும் போது சரியான அளவிலும், சரியான ருசியையும் தருவதை மட்டுமே வாங்க வேண்டும்.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும். இதைத் தவிர வேறு வழி இருப்பதாக தெரியவில்லை.

போலி மருந்து, போலியான காய்கறி, பழங்களை விற்பதாக உங்களுக்குத் தெரிந்தால் காவல் துறையை அனுகலாம். அதற்கான தொலைப்பேசி எண் – 044-24321830. பல உயிர்களை காப்பாற்றிய பெருமை உங்களுக்குச் சேரட்டும்.

நன்றி- குமுதம் சினேகிதி.