Amores Perros (அமோறேஸ் பெர்ரோஸ்) – ஈஸ்வரப் பார்வை

வெறுமையான இரவுநேரமொன்றில் பொழுதினை வண்ணமயமாக்கிட உலகத்திரைப்படங்களை தேடினேன். உள்ளூர் திரைப்படங்களையே விமர்சனத்தை படித்தப்பின்புதான் அனுக இயலும் நிலையில், உலகத்திரைப்படத்தை அனுக அர்ஜூன தவம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் திரைப்படங்களையே பார்க்க வேண்டாம் எனும் அளவிற்கு நம் பொறுமையை சோதிக்கும் படங்களிடம் சிக்கிக்கொள்வோம். என்னுடைய அலுவலகத்தில் உள்ள நண்பர் ஹிட்ச்காக், பாபெல் , ஜாக் நிக்கல்சன், 12 ஆங்கிரி மேன் என்பதைப் போன்று நிறைய திரைமொழி வார்த்தைகளை குறிப்பிடுவார். ஆனால் எனக்கோ பேருந்தில் சக பயனியாக அமர்ந்த இசுலாமிய குடும்பம் பேசும் அரபோ, உருதோ போல புரியாமலேயே இருக்கும். அதனால் அவரிடமிருந்து நமக்கு பயனுள்ள தகவல் கிடைக்காது.

ஆனால் திரைமொழி பேசும் தமிழ் வலைப்பதிவர்களை நாடினேன். மாறுபட்ட வாழ்வியலை கொண்ட மனிதர்கள் ஒரு சம்பவத்தின் போது பிணைக்கப்படுதலை திரைக்கதையாக கட்டமைக்கும் யுத்தி அமோறேஸ் பெர்ரோஸ் படத்திலிருந்தே உதயமானதாக கூறினார்கள். ஆயுத எழுத்து, வேதமென தமிழில் பார்த்திருந்தாலும் உலகத்திரைப்படத்தில் காண ஓடினேன்.

amores-perros

அமோறேஸ் பெர்ரோஸ் –

அமோறேஸ் பெர்ரோஸ் கதை குவில்லர்மொ அர்ரியாகா என்ற மெக்சிக்கன் திரைமொழி எழுத்தாளர் மற்றும் இயக்குனர் என்று பல்துறை வித்தகருடையது. இவருடன் இணைந்த இயக்குனர் இன்னாரித்தோ 36 முறை மாற்றம் செய்ததாக நிலாமுகிலன் வலைப்பூவில் படித்தேன். இப்படத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட நபர்களைப் பற்றிய கதைகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், ஆக்டாவியோ என்ற நாய் சண்டையிடும் இளைஞன், வலேரியா என்ற விளம்பர மாடல் பெண், எல் சைவோ என்ற பணத்திற்காக கொலை செய்யும் முதியவன் என மூன்று நபர்களைச் சுற்றி நடப்பவையாக வடிவமைத்திருக்கின்றார்கள்.

ஆனால் நான் படத்தினை பார்க்கையில் ராட்வில்லர்(rottweiler) வகையைச் சார்ந்த கோஃபி என்ற நாயை நடுநாயகமாக வைத்தே திரைக்கதை செல்வதை உணர்ந்தேன். இதுவரை இந்த கருத்தோட்டத்துடன் எவரும் பதிவு செய்யவில்லை என்பதால் அமோறேஸ் பெர்ரோஸின் மாறுபட்ட பார்வையை சகோதரனில் பதிவு செய்கிறேன். முதலில் ராட்வில்லர் நாயைப் பற்றி சில வரிகள். இது மீடியம் சைஸ் வகையானது. இந்தியாவின் சீதோசன நிலைக்கு ஏற்றது என்றாலும் சற்று மூர்க்கமானது. குடும்பத்தினரைத் தவிற பிறரை ஏற்றுக் கொள்ளவது கடினம். ஏற்கனவே நாய்களை வளர்த்தவர்களால் மட்டுமே எளிமையாக வளர்க்க முடியும். இல்லையென்றால் ஏய்த்துவிடும்.

காயம்பட்ட ஒரு நாயுடன் இரு இளைஞர்கள் காரில் பறக்கின்றார்கள். அவர்களை துரத்திக் கொண்டு மற்றொரு காரில் சில ஆட்கள் வருகிறார்கள். சிலர் துப்பாக்கியால் அந்த இளைஞர்களை சுட முயற்சிக்கின்றார்கள். அவர்களிடமிருந்து தப்பிக்க சிவப்பு சிக்னலை மதியாமல் செல்லும் இளைஞர்களின் கார் பக்கவாட்டில் வந்த மற்றொரு காரில் மோதி ஏற்படுத்தும் விபத்திலிருந்து திரைப்படம் தொடங்குகிறது. சுசைனா வீட்டின் கதவினை திறந்து உள்நூழைய முற்படும் போது, எப்படா கதவை திறப்பாங்க என்று பார்த்துக்கொண்டிருந்த கோஃபி ஓட்டம் எடுக்கிறது. அவளும் இரண்டு மூன்று முறை அழைத்துப்பார்த்துவி்ட்டு வீட்டிற்குள் போய்வி்டுகிறாள்.

வெறிகொண்ட நாயின் கழுத்தினை பிடித்தபடி எதிர்எதிரே இருநபர்கள் இருக்கிறார்கள். நடுவர் ஓகே சொன்னதும் நாய்கள் விடுபட்டு மூர்க்கமாக சண்டையிடுகின்றன. பலர் சுற்றி நின்று வேடிக்கைப் பார்க்கின்றார்கள். நம்மூர் சேவல் சண்டையைப் போலவே இருக்கிறது நாய் சண்டையும். சண்டையில் ஜெயித்த நாயும் அதன் உரிமையாளரும் மிகவும் பெருமையோடு சாலைக்கு வருகிறார்கள். மூர்க்கம் தீரா நாயின் வேகத்தினை தெருநாயின் மீது காட்டச்செல்லும் போது அதை தடுத்திட விழைகிறார் ஒரு முதியவர். அவனுடைய நண்பர்கள் அங்கே சுற்றும் கோஃபியை மாட்டிவிடுகிறார்கள். வீட்டுநாயுடன் வேட்டைநாயை மோதவிடுகிறார்களே என்று பதறும்போது, அவர்களுடன் இருந்து வேடிக்கைப் பார்த்த ஜார்ஜ் கோஃபியின் ஓனரான அக்டாவியோவிடம் வந்து “உன் நாய் வேட்டைநாயை கொன்றுவிட்டது” என சொல்கிறான்.இறந்த நாயை வைத்து பேரம் பேசுகிறார்கள் தோற்றவர்கள். அக்டோவியோ அதற்கு படியாமல் போக வெறுப்புடன் செல்கிறார்கள்.

ஜார்ஜின் யோசனையைக் கேட்டு, கோஃபியை நாய் சண்டை நடக்குமிடத்திற்கு அழைத்துசெல்கிறான். போட்டியை நடத்துபவரிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு தோற்றவனிடமே மீண்டும் மீண்டும் ஜெயிக்கிறான். (எனக்கு ஏனோ ஆடுகளம் நினைவில் வந்துபோனது) ஒவ்வொருமுறையும் புதுபுது நாயுடன் வந்தாலும் வில்லன் தோற்றுப்போகிறான். பணமிருக்கும் தெகிரியத்தில் அண்ணியின் மீதான தகாத காதலை வெளிப்படுத்தி, உறவும் கொள்கிறான். அவளை தனியாக சென்று வாழ அழைக்கிறான், இப்போதிருக்கும் பணம் இரண்டு வருடங்களுக்குகூட வராது என்று அவள் கூற, மேலும் பணம் சேர்க்க வேண்டிய நிர்பந்த்திற்கு வருகிறான். அந்நேரத்தில் எதிரியிடமிருந்து தனிப்பட்ட இடத்தில் நாய்சண்டை வைத்துக்கொள்ள ஒரு அழைப்பு வருகிறது. எதிரி பெரும்பணம் தர சம்மதிக்கவும், தன் சுயதேவைக்காக சண்டைக்கு சம்மதிக்கிறான். அந்த சண்டையில் கிடைக்கும் பணத்தினை வைத்து அண்ணியுடன் தனியாக செல்ல திட்டம் தீட்டுகிறான். அதற்கு குறுக்கே நிற்கும் அண்ணை அடியாட்களை வைத்து அடிக்கிறான்.

அடிப்பட்ட அண்ணனும், அண்ணியும் இவனுடைய பணத்தினை எடுத்துக்கொண்டு வேறிடம் சென்றுவிடுகிறார்கள். தன்னை அண்ணி ஏமாற்றிவிட்டாள் என்று அறிந்தாலும், போட்டிநாளன்று எதிரியை தனியாக கோஃபியுடன் சந்திக்கிறான். அங்கு நடக்கும் போட்டில் எதிரி கோஃபியை சுட்டுவிட, எதிரியை கத்தியால் குத்திவிட்டு கோஃபியை காப்பற்ற நண்பன் ஜார்ஜுடன் பயனிக்கும் போதுதான் முதலில் வந்த விபத்து நேரிடுகிறது.

காசிற்காக பிறரை கொலை செய்யும் எல் சைவோ, தான் ஒத்துக்கொண்ட புதிய கொலைக்காக விபத்துநடக்கும் இடத்திற்கு எதற்சையாக வருகிறார். குறிவைத்த நபரை சுடும் முன்பே விபத்து நிகழ்ந்துவிடுவதால் அதை புறந்தள்ளிவிட்டு சேதமடைந்த காரில் இருக்கும் ஜார்ஜிடம் வருகிறார். ஜார்ஜ் இறந்துகிடக்கிறான். அவனிடமிருந்து பணத்தினை திருடிக்கொண்டு சைவோ கிளம்புகையில், உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ஆக்டாவியோவை மற்றவர்கள் ஆம்புலன்சில் ஏற்றுவதையும், குண்டடிப்பட்ட காயத்துடன் இருந்த கோஃபியை இறந்துவிட்டதாக எண்ணி குப்பைக்கு அருகே சிலர் போடுவதையும் காண்கிறார். நாய்களின் காதலனான சைவோ கோஃபி உயிரோடு இருப்பதை அறிந்து மருத்துவம் பார்க்க ஏற்கனவே நிறைய நாய்களோடு அவர் இருக்கும் வீட்டிற்கு செல்கிறார்.

கோஃபியை குணப்படுத்திவிட்டு தன்னுடைய மகளை காண செல்கிறார். வீடுதிரும்பியதும் அவரை வரவேற்க கோஃபி ஓடுவருகி்றது. கோஃபியின் உடல்முழுக்க ரத்தம் தெரித்திருக்கிறது. சைவோ கோஃபியின் உடல்முழுக்க ஆராய்ந்துவிட்டு சந்தேகத்துடன் வீட்டிற்குள் நுழைய ஆங்காங்கே ஆசையாய் வளர்த்த நாய்கள் மரணமடைந்து கிடைக்கின்றன. கோஃபிதான் காரணமென அறிந்தாலும் கொல்ல இயலாமல் விட்டுவிடுகிறார். அதன்பின் முடிக்காமல் விட்ட அசைன்மென்டை முடிக்க செல்கிறார். கொலை செய்யவேண்டிய ஆளை வீட்டிற்குள் கூட்டிவந்து கட்டிவைத்து அவனை கொல்ல அனுப்பியது யாரென கேட்கிறார். அவன் சகோதரன் என்பதை அறிந்ததும், அவனை வீட்டிற்கு வரவைத்து எதிரே கட்டிப்போடுகிறார். அவர்களுக்கு காவலாக கோஃபி இருக்கிறது. இறுதியாக இருவரின் கட்டுகளையும் தளர்த்திவிட்டு நடுவே துப்பாக்கியை வைத்து முடிவினை அவர்களிடம் விட்டு வெளியேறுகிறார் சைவோ. தன்னுடைய அனைத்து சம்பாத்தியத்தையும் மகளின் வீட்டில் வைத்து கண்ணீர் மல்க தன்னுடைய இயலாமையை பதிவு செய்துவிட்டு கோஃபியுடன் நடக்கையில் படம் நிறைவடைகிறது.

இடையே ஆக்டாவியோ ஏற்படுத்தும் விபத்தில் வலேரியா என்ற மாடலின் கால் பாதிக்கப்படுகிறது. அவளுடைய காலை அசையாமல் பார்த்துக்கொள்ள மருத்துவர்கள் வலியுருத்துகிறார்கள். புதியதாக வாங்கிய வீட்டில் தன் காதலனுடன் இருக்கும் வலேரியாவுக்கு மிகப்பிடித்தமான ரிச்சி அந்த வீட்டில் இருக்கும் ஓட்டைக்குள் விழுந்துவிடுகிறது. அதை மீட்கும் முயற்சியல் வலேரியாவின் கால் அதிகமாக காயப்பட, காலையே வெட்டி எடுத்துவிடுகிறார்கள் மருத்துவர்கள். மீட்கப்பட்ட ரிச்சியுடன் காலை இழந்த வலேரியாவின் கதை முடிகிறது. நெருடலான இந்த வலேரியாவின் கதை இடைசொறுகப்படாமலேயே இருந்திருக்கலாம். பணத்திற்கு குறைவில்லாத வலேரியா நிச்சயமாக ஓட்டைக்குள் விழுந்த அதே தினத்தில் ரிச்சியை மீட்டிருக்க இயலும் என்ற எதார்த்தம் படத்தினை பலவீனப்படுத்துகிறது. வங்கி கொள்ளையில் மாண்டுபோகும் ஆக்டோவியோவின் அண்ணன், ஆக்டோவியாவுடன் இறுதியாக வரமறுக்கும் சுசேனா என்று திரையியல் வன்புணர்வுகள் இருந்தாலும் சொல்லப்பட்டவிதத்தில் அமோறேஸ் பெர்ரோஸ் தனித்த இடத்தை வகிக்கிறது.

விஷ்வரூப அனுபவம்

இருபத்தி நான்கு இஸ்லாமிய கூட்டமைப்புகளின் எதிர்ப்பால் கமலின் விஷ்வரூபம் திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்படாமல் இருக்கிறது. உயர்நீதிமன்றம் தடை நீக்கம், தமிழக அரசு தடை என நாளுக்கு நாள் விஷ்வரூபமாகி வரும் திரைப்பட பிரட்சனை என்றாவது முடிந்து தமிழகத்தில் திரையிடப்படும் என்ற நம்பிக்கை குறைந்து வரும் வேளையில் ஆந்திர தமிழக எல்லையில் வசித்துவரும் அலுவலக நண்பர் ஒருவர் தமிழில் விஷ்வரூபத்தினை பார்த்தாக கூறினார். அலுவலகத்தில் இருக்கும் அனைவரும் அவருடன் பேசி அவ்விடம் ஆந்திர தமிழக எல்லையில் இருக்கும் சத்தியவேடு என்ற கிராமம் என்று அறிந்தோம்.

ஒரு திரைப்படத்தினைப் பார்க்க மாநிலம் விட்டு மாநிலம் செல்ல வேண்டாமென காத்திருந்த போது, இஸ்லாமிய அமைப்புகளை சமரசம் செய்ய சில காட்சிகளை நீக்கி வெளியிட கமல் தரப்பு சம்மதித்தாக செய்தி வந்தது. அரைமணி நேரக் காட்சிகள் நீக்கப்படலாம் என்ற யூகத்தினை செய்திதாள்கள் வெளியிட்டன. முழுவதுமாக பார்க்க வாய்ப்பு இருக்கும் போது, அரை குறை திரைப்படத்தினை அதுவும் பல நாட்கள் காத்திருந்து பார்க்க வேண்டாமென முடிவு செய்து சென்ற சனிக்கிழமை கிளம்பினோம். மேனேஜிங் டைரக்டர் வாங்கிய புதிய காரில் எங்கள் பயணம் தொடங்கியது.

சத்தியவேடு கிராமத்திற்கு இதற்கு முன்பே சக அலுவலரின் திருமணத்திற்கு சென்றுள்ளோம் என்பதால், எவ்வித இடையூருமின்றி எங்களால் கிராமத்தினை அடைய முடிந்தது. ஆனால் சிற்சில சாலை அமைக்கும் பணிகளால் கரடுமுரடான சாலையில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. புதுப்பாதையில் வெங்கடேஷ்வரா திரையரங்கத்திற்கான வழியை சிலரிடம் கேட்டு தெரிந்து கொண்டு பயணித்தோம். வழியில் ஒரு பெண்ணிடம் விவரம் கேட்க அடக்க இயலா சிரிப்போடு வழிகாட்டினார். அந்த சிரிப்பின் பின்னனியில் உள்ளதை அறிய ஆவல் உண்டாயிற்று, ஏன் இப்படி சிரிக்கின்றீர்கள் என்றோம், இதுவரை பலருக்கும் வழிகாட்டியாக இங்கு நிற்பதாகவும், யாருமே பயணப்படாத சாலையில் இன்று பெரும் வாகனங்கள் பயணப்படுவதை எண்ணி சிரிப்பதாகவும் கூறினார். எங்களுக்கு முன் ஒரு அம்பாசிட்டர் மறைந்து கொண்டிருந்தது.

வழிநெடுகிலும் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், நாங்கள் திரையரங்கத்தினை நெருங்கிவிட்டோம் என்று கூறின. திரையரங்கத்தின் முகப்பில் ஏகப்பட்ட இருசக்ர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. சனிக்கிழமை என்பதால் நாங்கள் எதிர்ப்பார்த்தை விட ரசிகசிகாமணிகள் அதிகமாகவே இருந்தார்கள். தெலுங்கில் எழுதப்பட்டிருந்த திரையரங்கத்தின் பெயர், எண்ணற்ற தமிழ் ரசிகர்களை பார்த்து மகிழந்து கொண்டிருந்தது. நீண்டு வளைந்து சென்ற வரிசையின் இறுதியில் நான் நின்று கொண்டேன். ஆந்திரா நண்பர் திரையரங்கில் தெரிந்தவர்களை இனம் கண்டு மகிழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். மற்றவர்கள் டிக்கெட் கொடுக்குமிடத்திற்கு விரைந்தார்கள். சாலையில் செல்லும் உள்ளூர் வாசிகள், நம்மூர் திரையரங்குதானா என்று வியந்தபடியும், ரசிக கோமாளிகளை எண்ணி நகைத்தபடியும் சென்றார்கள். எனக்கு முன் எஸ்.ஆர்.எம் கல்லூரி மாணவர்கள் சிலர் நின்றிருந்தார்கள். அவர்கள் பதினாறு பேர் ஒன்றாக வந்ததாகவும், இவர்களின்றி மேலும் இருவர் தற்போது ஓடுகின்ற காட்சியை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்கள். எனக்குப் பின் பிளாக்கில் டிக்கெட்டுகளை விக்கும் சிறுவன் ஒருவன் நின்றிருந்தான். முதலாவதாக நின்றிருந்த தன்னை நண்பர்கள் கலாட்டகள் செய்து இடத்தினை பிடுங்கிக் கொண்டதாக கூறி அவர்களை வசைபாடிக் கொண்டிருந்தான். அவனுக்குப் பின்னே ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்கவர் தன் இருபது வயதுகளில் சகலகலா வல்வன் படத்திற்காக மூன்று முறை திரையரங்கம் சென்று நான்காவது முறைதான் பார்த்தாக அனுபவங்களை பிறரிடம் கூறிக் கொண்டிருந்தார்.

எங்களுக்கெல்லாம் பின்னார் நின்று கொண்டிருந்த ஒரு கும்பல் டிக்கெட் கிடைச்சிடுச்சு என்று மகிழ்ச்சியில் ஆரவாரமிட்டார்கள். அனைவரும் ஆச்சரியத்தோடு பார்க்க தரகர்கள் மூலம் கிடைத்தாக கூறி சென்றார்கள். அவர்கள் பின்னே சிலர் தகரை அறிமுகம் செய்துவைக்கும்படி கோரிக்கையோடு சென்றார்கள். ஆறு ரூபாய் டிக்கெட் ஐம்பது ரூபாய்க்கு விற்கப்பட்டாலும், ஐம்பது ரூபாய் டிக்கெட்டை கள்ளத்தனமாய் இருநூறு ரூபாய் வரை விற்றார்கள். சிறி்து நேரத்தில் டிக்கெட் கொடுக்குமிடத்தில் முட்டி மோதி எனக்கும் சேர்த்து வாங்கிவந்தார்கள் நண்பர்கள். ஏகப்பட்ட தள்ளுமுள்ளுகளுக்குப் பிறகு அரங்கில் நுழைந்தோம். முன்னூற்று ஐம்பது நபர்களுக்கான அரங்கில் ஐநூறுக்கும் மேற்ப்பட்டவர்கள் நுழைந்தமையால், பலர் நின்றபடி படம் பார்க்கத் தொடங்கினர். அமரச் சொல்லி அமர்ந்திருப்பவர்களும், நின்று பார்க்கச் சொல்லி நின்றிருப்பவர்கள் கூச்சலிட்டனர். எல்லாம் படம் தொடங்கும் வரைத்தான்.

விஷ்வரூபம் –

விஷ்வரூபம்

விஷ்வரூபம்

அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அணு ஆயுதம் மூலம் அழிவை ஏற்படுத்த முற்படுகின்றார்கள். அதை இந்தியாவிலிருந்து செல்லும் ஒரு முஸ்லிம் எப்படி அறிந்து கொள்கிறான், அவன் மனைவியான பிராமணப்பெண்ணுடன் இணைந்து எப்படி அதை முறியடிக்கிறான் என்பதே விஷ்வரூபத்தின் கதை. அமெரிக்காவில் தமிழ்பேசும் மாணவிகளுக்கு பரதம் சொல்லிதரும் குருவாக அறிமுகமாகிறார் கமலஹாசன். தமிழ்திரையின் சித்தாந்தப்படி நடனத்தின் நளினங்களால் பாதிக்கப்பட்டு பெண் அசைவுகளுக்குள் சிக்குண்டவராக வலம்வருகிறார். பரதத்தினை கற்றுக் கொள்ளும் ஆண்மகனெல்லாம் மகள்களாக மாறிவிடுவார்களோ என்ற அச்சம் கொள்ளும் அளவுக்கு நடையிலும், ஓட்டத்திலும் நளினம் காட்டியபடி இருக்கிறார். கமல் மனைவியான பூஜா குமார் உளவுபார்க்கும் ஆள்மூலம் தன் கணவன் முஸ்லிம் என்ற உண்மையை அறிகிறார். அதை அவரின் பாய் பிரண்டிடம் கூற, ஜிகாத்திகள் கதைக்குள் பிரவேசிக்கின்றார்கள். கமலையும், பூஜாவையும் அவர்கள் ஒளிந்திருக்கும் இடத்திற்கு கொண்டு செல்கிறார்கள். இடையே ஜிகாத்திகளின் தலைவனாக வருகின்ற ராகுல் போஸ் பூஜாவின் பாய் பிரண்டை கொல்லவும், கமலை உயிரோடு பிடித்து வைத்திருக்கவும் கூறி அவ்விடத்திற்கு புறப்படுகிறார். அதற்குள் கமலும் பூஜாவும் தீவிரவாதிகளிடமிருந்து தப்புகிறார்கள். ராகுல் போஸ் மிரட்டும் பார்வையும், மெல்லிய பேச்சும் புதிய வில்லனாக காட்டுகிறது.

ஆப்கானிஸ்தானில் ராகுல் போஸிடம் கமல் இணைவதும், போராளிகளுக்கு பயிற்சி கொடுப்பதும், குடும்பத்தினருடன் நன்றாக பழகுவதுமாக விரிகிறது பிளாஸ்பேக். தீவிரவாதத்தின் பின்னனியில் இருக்கும் குடும்ப உறவுகளின் வலிகளையும், ஆப்கானின் தினசர் வாழ்வினையும் தொட்டு செல்கிறது படம். ராகுல் போஸின் மனைவிக்கு மருத்துவம் பார்க்க வருவபவளை இஸ்லாமியர்களைப் போல உடை அணியச் சொல்வதும், மருத்துவச்சி போல நடித்து அவர் பிள்ளை சந்தோசம் கொள்வதும் யதார்த்தங்களின் கலவை. அமெரிக்கர்களின் தாக்குதல்களும், அமெரிக்கர்களை கொல்வதினையும் கடந்து ராகுல் போஸின் நியூயார்க் நகரை தாக்கும் தந்திரம் கமலுக்கு தெரியவருகிறது. அதைத் தடுக்க கமல் போராடுவதே மீதமிருக்கும் கதை. இறுதியாக நியூக்கிளியார் டாக்டரேட்டான பூஜாவின் உதவியால் சுபமாக முடிந்தாலும், கமல் ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பியதும், வில்லன் ராகுல் போஸ் மிச்சமிருப்பதும் விஷ்வரூபத்தின் இரண்டாவது பாகத்திற்கான வழிவகைகளோடு சின்ன டிரைலர் தந்து படம் முடிகிறது. ஆன்ட்ரியா, நாசர் போன்றவர்கள் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. அடுத்த பாகத்தில் கதாப்பாத்திரத்தின் வலு கூடினால் பார்க்கலாம்.

என் பாட்டன்மார்களெல்லாம் கூத்து பார்க்க வண்டிக்கட்டி போனதைப் பற்றி கேள்வியுற்றிருக்கிறேன். தூரங்களை மதியாமல், கலைஞர்களை மதித்து சென்ற அந்த பயணங்கள் முடிந்துவிடவில்லை. அருகே ஆயிரம் திரையரங்குகள் இருந்தும், ஆந்திராவின் எல்லைக்கு எங்களையெல்லாம் படையெடுக்க வைத்தமைக்காக இசுலாமிய அமைப்புகளுக்கும், இங்கிருக்கும் அரசிற்கும் தான் நன்றி கூற வேண்டும். இல்லையென்றால் இப்படியொரு அனுபவம் என்வாழ்வில் நிகழ்ந்திருக்காது.

தி பேட்மேன் – அனிமேசன் தொடரின் முதல் சீசன்

அலுவகத்திற்கு செல்லும் போதும், சென்றுவிட்டு திரும்பும் போதும் என் காதுகளில் இப்போதெல்லாம் பொன்னியின் செல்வன் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அத்துடன் பொன்னியின் செல்வன் கதைப்பாத்தரங்களை விக்கிப்பீடியாவில் ஆவனப்படுத்திக் கொண்டிருக்கிறேன். எண்ணற்ற தமிழார்வளர்கள் இயங்குமிடத்தில் இத்தனைகாலம் இவைகளை எழுதாமல் வைத்திருந்ததே ஆச்சரியம். (எனக்காகவே விட்டு வைத்திருக்கின்றார்கள் என்று நினைத்துக் கொள்வேன்). புத்தகத்தினை முழுவதுமாக படித்துவிட்டு சகோதரன் வலைப்பூவில் எழுதலாம், அதுவரை வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன். வலையுலகில் பொன்னியின் செல்வனை ஏழுவயதிலேயே படித்தவர்களெல்லாம் இருக்கும் போது, அரைகுறையாய் படித்துவிட்டு ஏதேனும் சொன்னால் கடித்தே தின்றுவிடுவார்கள். :-). அதனால் இப்போதைக்கு பேட்மேனை தொல்லை செய்வோம்.

சூப்பர் ஹீரோக்கள் என்று ஆயிரம் பேர் வந்தாலும், பேட்மேனை போல வசீகரி்க்க கூடிய கதாப்பாத்திரம் யாருமேயில்லை. “மனிதர்களுக்கு சூப்பர் பவர் வந்தபின்பு அதனை சமூகத்திற்காக பயன்படுத்துவது” என்ற ஒற்றை வரியை புறக்கணித்து மக்களுக்கு நன்மை செய்வதற்காக ஒரு மனிதன் தன்னுடைய அறிவினையும், உழைப்பினையும், பணத்தினையும் செலவிட்டு சூப்பர் ஹீரோ பேட்மேனாக ஆவது போல உருவாக்கியமைக்காக பாப் கானேவிற்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும். “அவனுக்கென்னப்பா, சூப்பர் பவர் இருக்கு” என்று அடிமனதில் எழுகின்ற வேற்றுமை உணர்வு சூப்பர் ஹீரோக்களை ஏற்றுக் கொள்ளவிடாமல் செய்துவிடுகிறது. ஆனால் பேட்மேன் நம்மைப் போல ஒரு மனிதன் என்ற சிந்தனையை பேட்மேனை அருகே அழைத்துவருகிறது.

அனிமேசன்களை அறிந்தவர்களுக்கு வார்னர் பிரதர்சை நிச்சயம் தெரிந்திருக்கும், தி பேட்மேன் என்ற தொலைக்காட்சி தொடரை அவர்கள் உருவாக்கி தந்திருக்கிறார்கள். டபள்யூ.பி, பூமரங், கார்ட்டூன் நெட்வொர்க் என பல்வேறு இடங்களுக்கெல்லாம் சென்று இறுதியில் இணையத்தினை அடைந்திருக்கிறது அந்த தொகுப்பு. தற்போது இரவு நேரங்களில் குறைந்தது இரண்டு அத்தியாயங்களையாவது பார்த்துவி்ட்டுதான் உறங்குகிறேன். ஆறு எம்மி விருதுகளை வென்ற இத்தொடரின் ஓவியமுறையும் வெகு நேர்த்தியாக உள்ளது. ஒரு அத்தியாயத்தினை எடுத்துக் கொண்டால் அரைமணிநேரம் ஓடுகிறது. தொடக்கத்தில் ஒரு வில்லனின் வெற்றி, அதன்பின் பேட்மேனின் சாகசங்கள், இறுதியில் சுபம். இதுதான் கான்செப்ட்.

முதல் அத்தியாத்திலேயே பேட்மேனின் ஆரம்பகால வாழ்க்கையும், ஏன் பேட்மேனாக ஆனார் என்றும் சொல்லாமலேயே அதிரடியாக சாகசங்களுக்குள் நுழைந்துவிடுகிறது. அதனால் பேட்மேனின் குறைந்தபட்ச அறிவுடைவர்களுக்கு குதுகலமாக இருக்கும். மற்றவர்களுக்கு கொஞ்சம் சிரமம்தான்.

ப்ரூஸ் வேனே –
ப்ரூஸ் வேனே கௌதம் நகரில் வசிக்கும் பெரும் பணக்காரர்களில் ஒருவர். ப்ரூஸ் சிறுபிள்ளையாய் இருக்கும் போது, சாலையோர திருடன் ஒருவனால் தன் பெற்றோர்கள் கொல்லப்படுவதை பார்க்கிறார். வளர்ந்து பெரியவனாகியதும், நகரில் நடக்கும் குற்றங்களை தடுப்பதற்கு முடிவு செய்கிறார். பேட்மேன் என்ற சூப்பர் ஹீரோவாக தன்னைதானே மாற்றிக் கொள்கிறார். மற்றவர்களுக்கு தன் பெயரில் சந்தேகம் உண்டாகமல் இருப்பதற்காக இளம் பெண்களுடன் சேர்ந்து கும்மளம் அடித்து ப்ளேபாய் இமேஜை ஏற்படுத்துகிறார். மற்ற சூப்பர் ஹீரோக்கள் எல்லாம் பெண்களுக்காக அலைந்து திரிய, ப்ளூசை சுற்றி சுற்றி வருகிறார்கள் பெண்கள்.

ஆல்பிரட் பென்னிவொர்த் –
ஆல்பிரட் பென்னிவொர்த் பெற்றோர் இழந்த ப்ரூசை வளர்க்கின்றார். சமையல்காரராக இருந்தாலும், ப்ரூசின் வளர்ப்பு தந்தையாக ஆலோசனைகள் சொல்கிறார். இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவராக இருப்பதால், மருத்துவ உதவிகளையும், புதுபுது உபகரனங்களையும் பேட்மேனுக்கு செய்கிறார். இது பேட்மேன் திரைப்படங்களில் டம்பி பீசாக சித்தரித்த ஆல்பிரடை முற்றிலும் மாறுபட்டதாக காட்டுகிறது. அவருடைய மீசை வசீகரிக்ககூடியது.

இவர்களைத்தவிற பேட்மேனை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பெண் காவலர் , அவருடன் இணைந்திருக்கும் ப்ரூசின் நண்பர் முதல் சீரியஸ் முழுவதும் பயணிக்கின்றார்கள். மொத்தமாக 13 அத்தியாங்களைக் கொண்ட தி பேட்மேன் முதல் சீசன், செப்டம்பர் 2004 முதல் மே 2005 வரை வெளிவந்ததாம்.

[1]- The Bat in the Belfry –
பேட்மேன் வில்லன்களில் பிரபலமான ஜோக்கர் வருகின்ற அத்தியாயம். அசத்தலான உடலமைப்பும், வேகமான செயல்பாடுகளும் ஜோக்கரை பிரதான வில்லாக ஏற்றுக் கொள்ள வைக்கும். ஏன் எதற்கு என்று தெரியாமலேயே மற்றவர்களையும் தன்னைப் போல ஆக்க வேண்டும் என்பதே ஜோக்கரின் மகத்தான சிந்தனை. இந்த அத்தியாயத்தில் ரசாயனயத்தினை நகரெங்கும் பரப்ப திட்டமிருகிறார்.
[2]- Traction –
பேட்மேன் ரைசஸ் படத்தில் பெயினை ஏன் அப்படி சொத்தையாக காட்டினார்கள் என்று தெரியவில்லை. முகமூடி அணிந்த கொடூரன் என்றே அறிந்த பெயின் சாமான்ய உருவில் வந்து, தன்னுள் ரசாயனத்தினை ஏற்றி ஹல்க் போல பெரியதாக மாறிவிடுவது ரசிக்க கூடியது.
[3]- Call of the Cobblepot –
பேட்மேன் வில்லன்களில் செம நகைச்சுவையான கதாப்பாத்திரம் பெங்குவினுடையது. பார்ப்பதற்கு மட்டுமே நம்மூர் வடிவேலைப் போல பெங்குவின் காமெடியான ஆள். ஆனால் பறவைகளை வசியம் செய்து அவைகள் திருடிக் கொண்டவர நோகமல் பணக்காரன் ஆகிறார். புரூஸ் வேனேயின் வீட்டிற்கு அழையா விருந்தாளியாக சென்று அவர் பார்டிக்கு வருகின்றவர்களின் பட்டியலை எடுத்து ஆட்டையைப் போடுவது புத்திசாலித்தனமான யோசனை.
[4] – The Man Who Would Be Bat –
பேட்மேன் வவ்வாலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தாலும், மனிதனை வவ்வாலாக மாற்றினால் ரசிக்க முடியாது என்பதை அழகாக சொல்லும் அத்தியாயம் இது. ஒரு விஞ்ஞானி இரவுபகலாக வவ்வால் ஆய்வு செய்து வவ்வாலாக மாறி பேட்மேனுடன் யார் நிஜ வவ்வால் மனிதன் என்று சண்டை போடுவதுதான் நாட்.
[5]- The Big Chill –
ஒரு சாதாரண திருடனை பேட்மேன் துரத்திப் போக, அவன் ஆய்வுக்கூடத்தில் சிக்கிக் கொள்கிறான். அதன் பிறகு பனிக்கட்டியாக்கும் பெரிய சக்தி அவனுக்கு கிடைத்துவிடுகிறது. தன்னைத்தானே பிக் சில் என்று அழைத்துக் கொள்ளும் அவனிடம் பேட்மேன் மாட்டிக் கொண்டு படாதபாடு படுகிறார். வேலைக்காரனாக வரும் ஆல்பர்ட் உறைபனியில் இருந்து காக்கும் வகையில் பேட்மேன் உடுப்பினை தயாரித்து தருவது கைதட்ட வைக்கும் காட்சி.
[6]- The Cat and the Bat –
ஆண்களே ஆக்கிரமிப்பு செய்திருந்த காமிக்ஸ் உலகில் வருகின்ற சில பெண்கள் கேட்வுமனும் ஒருத்தி. இவள் நல்லவளா கெட்டவளா என்று கண்டுபிடிப்பதற்கே பெரியதாக கஷ்டப்படனும். இந்த அத்தியாத்தில் பேட்மேனின் இடைக்கச்சையை அபேஸ் செய்துவிடுகிறார் கேட்வுமன். அது என்ன செய்யும் என்று அலசிபார்க்கும் போது, பேட்மேன் படுகின்ற சிரமம் சிரிப்பை வரவைக்கும்.
[7]- The Big Heat –
பயர்பிளை பேட்மேன் திரைப்படம் பார்த்தவர்களுக்கு அறிமுகமான நபர்தான். திரையில் வரும் அதே காட்சிகள் இந்த அத்தியாத்திலும் வருகின்றன. தேனியைப் போல ஆடை அணிந்திருப்பதும், மிக வேகமாக ஜெட்பேக்கினை உபயோகித்து செல்லும் போது வளைந்து நெளிந்து தங்ககோடு போல் வானத்தில் தெரிவதை ரசிக்காமல் இருக்க முடியாது.
[8]- Q and A –
தனக்கு எல்லாமே தெரியும் என்று நம்பிக்கையோடு இருப்பவனை தோல்வி என்ன செய்யும் என்பதை விளக்கும் பகுதி. அவனை பலத்தின் மூலம் வெல்லாமல் “உனக்கு நான் யார் என்ற உண்மை தெரியுமா ?” எனக் பேட்மேன் கேட்டு திகைக்க செய்யும் காட்சி அற்புதம்.
[9]- The Big Dummy –
பொம்மையை வைத்து மக்களை மகிழ்விக்கும் ஒரு கலைஞனுக்கு, தனக்குள் இருக்கும் மற்றொரு பர்சனாலிட்டி செய்வதை தடுக்க முடியவில்லை. எல்லாமே பொம்மைதான் செய்கிறது, அதுதான் எஜமானன் என்று நம்ப ஆரமித்துவிடுதலின் விளைவே இந்த அத்தியாயம்.
[10] – Topsy Turvy –
ஜோக்கர் மீண்டும் வருகிறார். சிறையிலிருக்கும் ஜோக்கரை வெளியில் கண்டவுடன் அவரை சந்திக்க சிறைக்கே செல்கிறார் பேட்மேன். பேட்மேனை சிறைக்குள் வைத்துவிட்டு ஜோக்கர் தப்பிவிடுகிறான். அவனுடைய புதிய கண்டுபிடிப்பு நபர்களை சீட்டுக் கட்டு கார்டாக மாற்றுவது. துப்பறியும் புலியான என் மாட்டிக் கொள்வதும், ஜோக்கரே கார்டாக மாறுவதும் அட்டகாசமான சிந்தனை.
[11]- Bird of Prey –
பெங்குவின் பெரிய பணக்காரனாக இம்முறை புரூஸ் வேனேயின் வீட்டிற்கு வந்து ஆல்பர்டை கட்டிவைத்துவிடுகிறான். பேட்மேனாக புரூஸ் வந்ததும், அவரையும் பிடித்துவிடுகிறான். தொலைக்காட்சியில் புரூஸின் வாழ்க்கையை வெளியுலகிற்கு காட்ட வருகின்ற நிருபரும் ஒளிப்பதிவாளரும், பெங்குவினை படம் பிடிக்கின்றார்கள். யார் பேட்மேன் என்ற காட்டுவதாக கூறி முகமூடியை அவிக்க பார்க்கையில் ஆல்பர்ட் உதவுகிறார். அத்துடன் புரூஸ்தான் பேட்மேனாக இருக்க முடியும் என்று அந்த பெண் நிருபர் நினைக்கில் புரூஸூம் பேட்மேனும் ஒரே நேரத்தில் காட்சி தருகிறார்கள்.
[12]- The Rubberface of Comedy –
ஜோக்கரின் புதிய கண்டுபிடிப்பு எந்தபொருளையும் ரப்பராக மாற்றுகிறது. சுகந்தர தேவி சிலையைப்போல வாள் ஏந்த ஒரு பெண் தெய்வத்தின் சிலையை கௌதம் நகரில் கட்டமைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதன் முகத்தினை தன்னுடைய உருவம் போல மாற்றிவிடுகிறார் ஜோக்கர்.
[13] – Clayface of Tragedy –
சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி, ஜோக்கர் கண்டுபிடிக்கும் ரப்பராக மாற்றுகின்ற ரசாயனத்தின் நெடி துப்பறியும் நபரான ஈதேன் முகத்தில் படுகிறது. அதன் விளைவாக ஈதேன் நினைத்த உருவத்தினை எடுக்கும் நபராக மாறிவிடுகிறார். தன்னை வெறுக்கும் மேலதிகாரியை கொல்ல துணிந்ததால், ஈதேன்தான் க்ளேபேஸ் என்பதை அவருடம் துப்பறியும் பெண்ணும், புரூசும் அறிந்துகொள்கின்றார்கள்.

அடுத்த சீசனை முடித்துவிட்டு வரும்வரை பேட்மேன் நிம்மதியாக இருக்கலாம், நீங்களும்தான். 🙂

மூன்று மொழி மூன்று படங்கள்

இன்று பாஸ் (எ) பாஸ்கரன் படம் பார்த்தேன். நகைச்சுவையை மையமாக கொண்ட படம் என்பதால் மூன்று மணிநேரம் சென்றதே தெரியவில்லை. ஆனால் படம் முடிந்ததும் மனதில் எந்த சலனமும் இல்லை. ஒரு படத்தினை பார்த்திருக்கிறேன் என்பதே கற்பனை போல இருந்தது. மனதில் நிற்காத படங்களைப் பற்றி பேசுவதி்ல் பலனில்லை. மொழி அறியாவிட்டாலும் மனதில் இன்றுவரை நிலைத்திருக்கும் படங்கள் ஏகம். அதில் மூன்று படங்களைப் பற்றிய பகிர்வுதான் இந்த இடுகை.

லகே ரஹோ முன்னா பாய் (Lage Raho Munna Bhai) –

முன்னா பாய் எம்.பி.பி.எஸ் படத்தின் வெற்றியை பயன்படுத்திக்கொள்ள முனைந்திருந்தாலும் எடுத்துக் கொண்ட களம் ஆச்சிரியமானது. சிறுவயதுமுதல் எனக்கு காந்தியம் மீது தனி மரியாதை இருக்கிறது. பிறருடைய மனதை புண்படுத்தாமல், தன்னால் என்ன முடிகிறதோ அதை செய்து கொண்டு வாழும் வாழ்க்கை காந்தியத்தின் ஒரு கூறு. உண்மையை மட்டும் வாழ்க்கையாக கொண்டிருத்தல், மது, மாமிசம் என தீயவைகளை ஒதுக்குதல் என்று அதன் கூறுகள் மிகஅதிகம். படத்தின் இயக்குனர் எடுத்துக்கொண்ட கூறு “அமைதியான சத்தியாகிரக முறையில் போராடி எதையும் சாதிக்கலாம்” என்பதே.

அதனை காதலை அஸ்திவாரமாக கொண்டு கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார். காந்தியத்தின் கோட்பாடுகள் பற்றி நிறைய படங்கள் வந்திருக்கின்றன. அந்தப் படங்களின் கதாநாயகன் உண்மைப் பேசி உதை வாங்குவான். சத்தியத்தால் செத்துபோவான். அவன் குடும்பம் அழிந்துபோகும். இதுபோலதான் நிறைய படங்கள். ஆனால் இதில் கதாநாயகன் கடைசிவரை காந்திய வழியில் சென்று சாதனை செய்வான். பேருந்தில் காலை மிதிப்பவர்களை, கடமையை மறந்து திரியும் அரசு ஊழியர்களை, அரசியல்வாதிகளை மன்னித்தோ, சகித்துக்கொண்டோ நிஜ வாழ்க்கையில் நிறைய இடங்களில் நாமும் காந்திய வழியில் சென்றுகொண்டிருக்கிறோம். முழுமையாக செல்ல கொஞ்சம் முனைப்பு போதும் என நினைக்கிறன்.

ஸ்டாலின் (stalin) –

சாதாரண குடும்ப சண்டை விசயத்தையே ரயில், ஹெலிகாப்படர் என பிரம்மாண்டமாக படம் எடுப்பவர்கள் தெலுங்குகாரர்கள். அவர்களிடம் இது போல ஒரு படத்தை நான் எதிர்ப்பார்கவில்லை. “ஒவ்வொருத்தரும் வாழ்க்கையில் மூன்று பேருக்காவது உதவ வேண்டும். அப்படி செய்தால் மூன்று, ஒன்பது, இருபத்தியேழு என அந்த பழக்கம் பல்கிப்பெருகும்” என்பது இயக்குனர் சொல்ல வந்த கருத்து. படம் முடியும் போது நாம் இதுவரை முகம் தெரியாத யாருக்காவது உதவி செய்திருக்கிறோமா என எண்ணிப்பார்த்தேன். சொல்லிக்கொள்ளும் படி பெரிய உதவி இதுவரை செய்யவில்லை.

சரி, படத்தில் கண்களை குளமாக்கும் ஒரு சம்பவம் உண்டு. இரண்டு கைகளையும் விபத்தில் இழந்த பெண், நம்பிக்கை தளராமல் படிக்கிறாள், தேர்வு எழுதுகிறாள். அவர் தேர்வில் சொல்ல சொல்ல நாயகன் எழுதுகிறான். ஒரே சமயத்தில் அவளைப்போன்ற மற்றொரு பெண்ணுக்கு நாயகன் உதவச் சென்றுவிடுகிற போது. இந்தப் பெண்ணுக்கு உதவ ஆட்களில்லை. அதனால் தற்கொலை செய்துகொள்கிறாள். தன்னுடைய கைகளை இழந்தபோதும் நம்பிக்கை இழக்காதவள், நம்பிக்கை இழந்த போது மரணத்தை ஏற்கிறாள். அதன் பின்தான் உதவிசெய்வதன் முக்கியத்தை மக்கள் உணர இந்த வழியை தேர்ந்தெடுக்கிறான் நாயகன். மசாலாவிற்காக சேர்த்த சில விசயங்களை மன்னித்தால் திகட்டாத ஒருபடம் ஸ்டாலின்.

இவ்விடம் சொர்கமானது (Ividam swargamanu) –

இயல்பான படங்களின் களஞ்சியம் மலையாள பூமி. அவர்களின் பெரும்பாலான படங்களின் ஒவ்வொரு காட்சியிலும் இயற்கையின் அழகு மிளிரும். அதே சமயம் பெரிய நடிகர்கள், சின்ன நடிகர்கள் என இயல்பு மீறாமல் நடிப்பது மற்ற மொழித் திரைப்படங்களில் காண முடியாத ஒன்று. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த படங்களில், குடும்ப வாழ்க்கையின் இன்னல்களை சொல்லுகின்ற படங்கள் அதிகம். சில படங்கள் அதையும் தாண்டி நாட்டினைப் பற்றிய சிந்தனைகளை கொண்டிருக்கும். அப்படிப்பட்ட படம்தான் மோகன்லாலின் இவ்விடம் சொர்கமானது.

இன்றைய இந்தியாவின் முக்கியமான பிரட்சனை நகரமயமாதல். நெல்லும் கரும்பும் விளைந்திருக்கின்ற வயல்வெளியெல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் கட்டிடங்களாக முளைக்கின்றன. நேற்று பார்த்த கிராமம் இன்று அழிந்து போய் நகரமாக மாறிக்கொண்டிருக்கிறது. நகரமயமாதல் சாதாரணப் பிரட்சனையல்ல, அதனால் காலம்காலமாக பேனிவந்த நிலங்களை இழக்கும் விவசாயின் வேதனைகளையும் , அதன் பின் நிற்கும் அரசியலையும் பிரதிபளிக்கின்ற படம். இயல்பு மீறாமல் படத்தினை இறுதிவரை கொண்டு செல்லும் இயக்குனர் ஆன்டிரியாஸை பாராட்டாமல் இருக்கமுடியாது.

நீங்கள் ஏற்கனவே இந்தப்படங்களைப் பார்த்திருந்தால், உங்களின் எண்ணத்தினை கூறுங்கள். இல்லையென்றால் நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.

Magadheera (தெலுங்கு படம்)- ஈஸ்வரப் பார்வை

நடிகர்கள் –

நடிகர் சிரஞ்சிவியின் மகன் ராம் சரன் தேஜா நாயகனாகவும், கஜால் அகர்வால் நாயகியாகவும் தெலுங்கு திரைஉலகையே கலக்கியப் படம். இயக்கம் எஸ்.எஸ்.ராஜமௌலி.

ஒரு வரிக் கதை –

முன்ஜென்மத்தில் பிரிந்த காதலர்கள், இந்த ஜென்மத்தில் சேருவதுதான் கதை.

முழுமையானக் கதை –

முதலில் முன்ஜென்மக்கதையைப் பார்த்துவிடுவோம். காலபைரவனும்,  இளவரசி மித்திராவும் காதல் கொள்கின்றார்கள்.  ஆனால் வில்லன் ரனதேவ் பில்லாவும் இளவரசியை அடைய ஆசைக் கொள்கிறான். இளவரசிக்காக நடக்கும் போட்டியில் பைரவன் ஜெயித்தாலும், இளவரசியை மணம் செய்துவைக்க மகாராஜ தயங்குகிறார்.

அந்த சமயத்தில் ஷேருக்கான் பெரும் படையுடன் வர அவனுடன்  சேர்ந்துக் கொள்கிறான் ரனதேவ். நாட்டையும், இளவரசியையும் காக்கும் பொறுப்பு காலபைரவனுக்கு வருகிறது. கால பைரவனான சிவனுக்கு பூஜை செய்யப் போகும் இளவரசியையும், பைரவனையும் அங்கேயே சந்திக்கின்றார்கள் ரனதேவும், ஹேருக்கானும்.

காலபைரவனின் பெருமையை கேள்விப்பட்ட ஹேருக்கான், காலபைரவனுக்கு தேர்வு வைக்கின்றான். காலபைரவன் அந்தப் போட்டியில் ஜெயித்தால் நாட்டை அவனே ஆண்டுகொள்ளலாமென தெரிவிக்கின்றான். போட்டியில் வெற்றிபெற்ற பைரவனை ராஜ்தேவ் தாக்க, அதனை தடுக்க முடியாமல் ஹேருக்கான் வருத்தம் கொள்கிறான். ரனதேவ் இறக்கும் தருவாயில் தனக்கு கிடைக்காத எதுவும் பிறருக்கும் கிடைக்கக் கூடாதென சொல்லி இளவரசியின் மீது கத்தியை வீசிவிடுகிறான். இளவரசி மலைமீதிருநது பள்ளத்தாக்கில் விழ, காலபைரவனும் அவளுடன் விழுந்து மரிக்கின்றான்.

நாட்டை ஆளுவதற்கு வாக்கு கொடுத்தும், தீய உடன்படிக்கையால் காலபைரவனுக்கு உதவ முடியாதை எண்ணி வருந்துகின்ற ஷேருக்கான், அடுத்த ஜென்மத்தில் பிறக்கச் சொல்லி கதருகிறான்.

மறு ஜென்மம்….

எதைப் பற்றியும் கவலைக் கொள்ளாத ஒரு பைக் ரேசர் நம் நாயகன் ஹர்சா(தேஜா). ஒரு சமயம் ஆட்டோவில் செல்லும் போது இந்துவின் (கஜால் அகர்வாலின்) ஸ்பரிசம் பட, முன்ஜென்ம ஞாபம் வருகிறது. இந்துயாரென அவளிடமே கேட்க, நாயகியை கண்டுபிடிக்க சின்னதொரு கண்ணாமூச்சி விளையாட்டு நடக்கிறது. நாயகியை கண்டுபிடிக்கும் சமயம் வில்லன் ரகுவீரின்(தேவி கில்) என்ட்ரி.

நாயகனும், வில்லனும் சந்திக்கும் காட்சிகளில் புறாக்கள் பறப்பது கொஞ்சம் வித்தியாசமான விசயம். இந்துவின் அப்பா ஹர்சாவின் காதலுக்கு சம்மதம் தர, ரகுவீர் அவரைக் கொன்றுவிட்டு பழியை ஹர்சாவின் மீது போடுகிறான். இந்துவும் அதை உண்மை என நம்பி வில்லன் ரகுவீருடன் சென்றுவிடுகிறாள்.

நாயகியை வில்லனிடமிருந்து காப்பாற்றி தங்களின் முன்ஜெம்ம பந்தத்தினை நாயகிக்கு உணர்த்தி அவளை கதாநாயகன் கைப்பிடிக்கும் விசயத்தை சொல்லவும் வேண்டுமா?.

பிடித்த காட்சி –

படத்திற்கு பலம் சேர்க்கும் விசயமே முன்ஜென்மக் கதைதான். காஜல் தேவதை போல காட்சியளிக்கின்றார். செட்டிங்குகளும், கிராபிக்சும் ஹாலிவுட்டிற்கு சலைக்கவில்லை. அரண்மனையும், அதன் மேலிருக்கும் இறக்கை வைத்த சிங்கமும் அருமை. அதிலும் அந்த சிவனின் சிலை கண்களிலேயே நிற்கின்றது.

பைரவன் நூறு பேரை தனி ஆளாக கொல்வான் என சொன்னதற்காக, ஷேருக்கான் நூறு பேரை அனுப்பி சோதிக்கும் காட்சியில் உட்சபட்ச ஹீரோயிசம்.

போட்டியின் போது புதர்குழியில் மாட்டிக்கொண்ட குதிரைகளைக் காப்பாற்ற காதலில் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை என
பைரவன் முடிவெடுக்கும் காட்சியும், காதலுக்காக எதையும் விட்டுக்கொடுக்கலாம், நட்புக்காக காதலையும் விட்டுக்கொடுக்கலாம் என ஹர்சா சொல்லும் காட்சியும் பக்காவான சென்டிமென்ட்.

பாடல் தரவிரக்கம் –


இசைக்காக தேசிய விருது வாங்கிய மரகத மணி கீரவாணி (Maragatha Mani Keeravaani)யின் இசையில், தீபு, கீதாமாதுரி என பிரபலங்களின் குரலில் எல்லாப் பாடல்களும் ஹிட்.

பாடல்களை தரவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்

படத்தின் முன்னோட்டம் –

The Losers – ஈஸ்வரப் பார்வை

இன்று தி லூசர்ஸ் (The Losers) படம் பார்த்தேன். Sylvain Whiteலின் இயக்கத்தில் கொஞ்சம் மிரட்டியிருக்கிறது படம். தமிழ்ப்படங்களை ஒப்பிட்டு பார்த்தால் இந்தப் படத்தினை கண்டிப்பாக பாராட்டலாம். ஆங்கிலப் படங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் சுமார்.

கதை –

Clayஆக Jeffrey Dean Morgan, Aishaஆக Zoe Saldana, Maxஆக Jason Patric, Jensenஆக Chris Evan, Rogue ஆக Idris Elba, Poochஆக Columbus Short, Cougar ஆக Óscar Jaenada என எல்லோரும் நடிப்பில் பின்னியெடுத்திருக்கின்றார்கள்.

வழக்கமான பழிவாங்கும் கதை தான் என்றாலும், கொஞ்சம் வித்தியாசம். தான் தப்பிப்பதற்காக பள்ளிக் குழந்தைகளைக் கடத்தி வைத்திருக்கும் வில்லனைக் கொல்லவும், குழந்தைகளை மீட்கவும் ஒரு ஐந்து பேர் கொண்ட ரானுவம் செல்கிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாக் குழந்தைகளையும் காப்பாற்றி, ஒரு வாகணத்தில் ஏற்றி தாங்களும் விரைகின்றார்கள்.

இவர்களுக்காக காத்திருக்கும் ஹெலிகாப்டர் குழந்தைகளை ஏற்றிக் கொண்டுச் பறக்கின்றது. அடுத்தக் கட்டத்திற்கு படம் நகரும் என நாமும் ஓய்வாக உட்காரப் போனால், ஹெலிகாப்டரை ஒரு விமானம் ஏவுகனையிட்டு தகர்த்துவிட்டு பறக்கின்றது. உயிரைப் பொருட்படுத்தாமல் தாங்கள் காப்பாற்றி குழந்தைகள் அத்தனைப் பேரும் கண்முன்னே கருகி சாம்பலாவதைக் கண்டு ஐந்து பேரும் திகைத்து நிற்கின்றார்கள். படம் The Losers என்ற தலைப்புடன் தொடங்குகிறது.

பெற்றோர்களை கொன்றதற்காக, தங்கையை கற்பழித்தற்காக என மட்டுமே பார்த்து வந்ததால் தாங்கள் மீட்டு வந்த குழந்தைகளைக் கொன்றதற்காக பழி வாங்குதல் புதியதாக இருந்தது. இந்தக் கதையில் கூட அப்பாவை கொன்றதற்காக பழிவாங்க ஹீரோயின் வருகிறார். ஆனால் ஹீரோவின் மீது உள்ள காதலால் அவர்களுக்கு உதவுகிறாள்.

ஹெலிகாப்டரை அழகாக திருடினாலும் அந்தக் காட்சியை விட சுற்றி போலிஸ் பாதுகாப்புடன் இருக்கும் வண்டியை தூக்கிச் செல்வது மிகவும் பிடித்திருந்தது. அதுவும் Jensen மூன்று காவல் அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டதும் வெறும் கைகளால் துப்பாக்கியென காட்டிக் கொண்டு சத்தமிடும் நேரத்தில் பின்னாலிருந்து cohgar சுடும் காட்சி சூப்பர்.

ஹீரோயின் யாரென தெரிந்ததும் கதை சூடு பிடிக்கின்றது. இருந்தும் அசராமல் ஐந்து பேரும் வில்லன் இடத்திற்கு செல்லும் போது ஒவ்வொறுவராக மாட்டிக் கொள்கின்றார்கள். எல்லாம் ஹீரோயின் செய்யும் வேலை என நினைக்கும் முன்பே ஐந்து பேரில் ஒருத்தன் தான் எனத்தெரிகிறது. ஆபத்து நேரத்தில் ஹீரோயின் உதவ, வில்லனிடமிருந்து கன்ட்ரோலைப் கைப்பற்றி பயோமெடிக்கல் வெப்பனை செயலிழக்கச் செய்கிறார் ஹீரோ!. வில்லன் இறுதியில் தப்பிவிடுகிறான். அடுத்த பாகம் வந்தாலும் வரலாம்.

காணோளி –

மனதைக் கவர்ந்த பிட்டு படங்கள்

பசி –

காட்சிப்பிழை –

புனிதம் –

தவிப்பு –

பி.கு –

பிட்டு படத்தை குறும்படமுன்னு சொல்லிக்கிறாங்க

தலைசிறந்த குறும்படங்கள்

இரண்டு மூன்று மணிநேரம் படம் பார்த்துவந்தாலும் மனதை தொடாத கதைகள் இருக்கின்றன. என்ன சொல்ல வருகின்றார்கள் என புரியாமல் சில நேரங்களில் மண்டை காய்ந்ததுண்டு. தமிழ் படங்கள் என்று மட்டுமல்ல எல்லா மொழிப் படங்களிலும் இந்த பிரட்சனை உண்டு.

ஆனால் குறும்படங்களில் இந்தப் பிரட்சனை இல்லை. ஓடுவது ஐந்து நிமிடமோ, பத்து நிமிடமோ என்றாலும் சொல்ல வந்ததை நச்சென சொல்லிச் செல்லும் படங்கள் இவை. குறும்படங்களை தூர்தசனில் பார்த்திருக்கிறேன். அதன் பிறகு தமிழனில் பார்த்ததாக ஞாபகம்.

இணையத்தில் இதெல்லாம் கிடைக்கும் என கொஞ்சம் கூட நினைக்கவில்லை. தமிழிஸ் இணையதளத்தில் இருந்த
‘கர்ண மோட்சம்’ – விருதுகள் பெற்ற கூத்துக் கலை என்ற தலைப்பில் மறந்து போகாத சில வலைப்பூவையில் எழுதப்பட்ட பதிவைப் படித்தேன், அதில் கொடுக்கப்பட்ட இணைப்பை பயண்படுத்தி யூ டியூபில் பார்த்தேன். அருமை.

அதன் பின் தேடல் அதிகமானது.

மறைபொருள் –

எனக்கு அடுத்து கிடைத்த குறும்படம் இது. ஒரு பெண் குளித்து முடித்து வந்து கூந்தலை துவட்டத் தொடங்குகிறாள். பின்பு ரசித்து ரசி்த்து அலங்காரம் செய்கிறாள். மெல்லிய இசை பின்னால் ஓடிக்கொண்டே இருக்கிறது. வலையல், தோடு வரை எல்லாவற்றையும் அணிந்து கொண்டப் பின் பீரோவை திறக்கிறாள்.அதிலிருந்து பர்தாவை எடுத்து அணிகிறாள். வெறும் கண்கள் மட்டும் தெரிகின்றன.

மறைபொருள் குறும்படத்தை காண இங்கு சொடுக்கவும்.

வர்ணம் –

இந்துக் கோவில்களில் நடக்கும் பல கொடுமைகளில் ஒன்று தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் நுழையவிடாமல் தடுப்பது, அதைப் பற்றி சித்தரிக்கும் படம் இது. சாக்கடை அல்ல தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் அனுமதிக்கும் நபர்கள், சாமியை தரிசணம் செய்ய அனுமதிப்பதில்லை. கோவில் பிரகாரத்தில் அனுமதிக்கப்படும் மக்கள், கருவரைக்குள் அனுமதிப்பதில்லை. இது காலம் காலமாக நடந்துவருவது.

இந்துக்கள் ஒன்று சேர்ந்து மொத்த கோவில் அமைப்பையும் மாற்றினால் தான் இதற்கு விடிவு. அதற்கு பிராமணியத்தை ஒழித்தால் மட்டுமே நடக்கும்.

வர்ணம் பாகம் 1 குறும்படத்தை காண இங்கு சொடுக்கவும்.

வர்ணம் பாகம் 2 குறும்படத்தை காண இங்கு சொடுக்கவும்.