அதென்னமோ தெரியவில்லை, வெளிநாடுகளில் இருக்கும் சிறுசிறு கட்டிடங்களின் திறனையும், சின்ன சின்ன ஓவியங்களையும் கொண்டாடத் தெரிந்த நமக்கு நம் அருகில் இருக்கும் சிற்பங்களின் அமைப்பையும், ஓவியங்களின் அதிசயத்தையும் பற்றி சிந்திக்க கூட நேரமில்லை.

பேயுருவத்தில் காரைக்கால் அம்மையார்
காரைக்காலிற்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட, சென்றேன். கல்லூரி நாட்களில் தவறாது அருள் செய்த அம்மையை காலை முதல் வேளையாக தரிசிக்க சென்றேன். செருப்பினை விடும் வேளையில் எதற்ச்சையாக மேலே பார்க்க, காளையும், யானையும் ஒருசேர இருந்த சுவரோவியம் ஈர்த்தது. காளை, யானை இரண்டின் முகங்களும் ஒட்டியபடி இருக்கும், யானையின் உடலோடு தலையை தேடினால் யானை தெரியும், காளையின் உடலைக் கொண்டு தேடினால் காளை தெரியும்.

யானையும், காளையும் இணைந்திருக்கும் சிற்பம்
எங்கள் ஊரில் இருக்கும் 200 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஆஞ்சினேயர் கோவிலில் இந்த ஓவியத்தை சிற்பமாக கண்டிருக்கிறேன்.

அம்மைக்கு மாம்பழம் ஈசன் கொடுத்தல்
பிறகு அம்மையின் சுற்றுப்புறச் சுவர்களில் வரைந்திருந்த வாழ்க்கை வரலாறு ஓவியங்கள் மெய்சிலிர்க்க வைத்தன. தத்துரூபமான ஓவியங்கள். அம்மையின் பிறப்பு முதற்கொண்டு, திருமணம், மாங்கனி திருவிளையாடல், அம்மையின் பேயுருவம் என சகலமும் வரையப்பட்டிருக்கிறது. அம்மையின் சந்நிதியின் முன்புறம் இருக்கும் இரண்டு துவாரபாலகைகளின் உருவம் அம்மனுக்கு இணையான தெய்வீகத்தன்மையுடன் இருந்தது.

குரங்கின் ஓவியம் - காரைக்கால்
பனிரெண்டு ராசி ஓவியமும், இல்யுசன் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகின்ற அதிசயமான ஓவியங்களும் இருந்தன. அடுத்து நான் கண்டது, ஒரு தலை பல உடல்களுடன் பொருந்திய குரங்கின் ஓவியம். மிகவும் நேர்த்தியாக எல்லா உடல்களுடனும் அந்த ஒரே தலை பொருந்த இருப்பது ஆச்சிரியமான ஒன்று. இந்த ஓவிய அமைப்பை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அது திருச்சியில்.

குரங்கின் ஓவியம் - திருச்சி
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோவிலில் சித்திரக் கூடம் என்ற ஒரு பகுதியுண்டு. அங்கே விதவிதமான ஓவியங்கள் இருக்கின்றன. நிர்வாணமாய் பெண்கள் முலைகள், யோனிகள் தெரிய ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தபடி, ஏறியபடி என்றெல்லாம் இருப்பதைக் கண்டேன். “ச்சீ என்ன கண்றவி இது” என சிலர் ஓடிப்போனார்கள்.
ஆனால் அந்த ஓவியத்தினை தூரத்தில் இருந்து பார்த்தால் தான் அருமை தெரியும். அந்த ஓவியம் மயிலாக தெரியும். இது போல பல பல ஓவியங்கள். அது போலவே குரங்கின் ஓவியத்தினை முதலில் அங்குதான் பார்த்தேன். அவற்றை புகைப்படம் பிடிக்கவும் தடை உண்டு. அப்படியிருந்தும் என் சகோதரன் தன்னுடைய கைப்பேசியில் புகைப்படம் எடுத்தான்.
காரைக்காலிற்கு வருவோம், அங்கு மாங்கனி திருவிழா முடிந்து சில நாட்களே ஆனதால், விழாவிற்காக போடப்பட்டிருந்த கடைகள் அப்படியே இருந்தன. மற்றக் கடைகளைவிட வீட்டுச் சாமான்கள் இருந்த கடைகளிலும், அழகு சாதனங்கள் இருந்த கடைகளிலுமே அதிகக் கூட்டம். சில கடைகளில் இஸ்லாமியப் பெண்களும் பேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். எழுதப்பட வேண்டியது நிறைய இருந்தாலும், இடுகையில் படங்களை இணைப்பதால் பெரியதாக மாறக் கூடும் என சுருக்கிவிட்டேன்.
சில திருச்சி மலைக்கோட்டை ஓவியங்கள் –

மயிலாய் நிர்வாணப் பெண்கள்

முடிவறிய இயலாத பாம்புகள் - சித்திரக் கூடம்
Like this:
Like ஏற்றப்படுகின்றது...