விக்கியில் எனது ஓவியங்கள்

வணக்கம் நண்பர்களே, சில காலம் கணினியில் போட்டோசாப் உதவியுடன் டிஜிட்டல் ஓவியங்களை வரைய கற்றுக் கொண்டேன். போட்டோசாப்பில் உள்ள பெண் என்ற டூலை வைத்து ஓரளவு ஓவியங்களை வரைந்தேன். அவற்றை சிறப்பான ஓவியங்கள் என்று கூற இயலாது என்றாலும் ஓரளவு மனநிறைவு தந்தன.

அதன் பிறகு ஸ்மார்ட் போன் வாங்கினேன். அதில் உள்ள ஆட்டோ டெஸ்க் ஸ்கெட் புக் என்ற செயலியைக் கொண்டு நன்றாக ஓவியங்களை வரைய கற்றுக் கொண்டேன். விக்கிப்பீடியாவிற்கு தேவையான ஓவியங்கள் சிலவற்றையும் வரைந்து பதிவேற்றம் செய்தேன். விக்கிப்பீடியாவின் காமன்ஸ் தளத்தில் எனக்கென ஒரு பகுப்பே உருவாக்கியிருக்கிறார்கள். ஆர்ட் ஒர்க் பை ஜெகதீஸ்வரன். என் என்ற பகுப்பில் என் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

காண்க

https://commons.wikimedia.org/wiki/Category:Artwork_by_Jegadeeswaran.N.

ஓவியர் செல்வம்
நடிகர் வெள்ளை சுப்பையா
ஓவியர் ஏ. பி. செல்வராஜ்
ஓவியர் மாருதி

நன்றி.

நத்தமேடு நினைவுச் சின்னங்கள்

கரூர் – திண்டுக்கல் சாலையில் மணவாடி கிராமத்திலிருந்து சற்று தொலைவில் அமைந்திருக்கிறது நத்தமேடு கிராமம். மிகச் சமீபத்தில் பணக்காரர் ஒருவரால் புரணமைக்கப்பட்டு மிகச் சிறந்த சிவாலயமாக திகழ்கிறது வீரபாண்டீசுவரர் கோயில். சுற்றியிருக்கும் கிராம மக்களும் பிரதோச, சிவராத்திரி, சோமவார திங்கள் கிழமைகளுக்கு கூடுகிறார்கள். கடந்த சனிப் பிரதோசத்திற்கு அக்கோயிலுக்குச் சென்றபோது, அருகே இருக்கும் அம்மன் கோயிலொன்று கண்களில் பட்டது. அது திறந்திருக்கிறதா என காணச் சென்றேன்.

நல்ல வேளையாக திறந்திருந்தது. அம்மனின் காவல்தெய்வமாக கருப்புசாமி சன்னதி வாயிலுக்கு இடப்புறமும், சிம்ம வாகனம் மண்டபத்திற்கு வெளியேயும் அமைந்திருந்தது. மண்டபத்தில் சில நினைவுச் சிற்பங்களை அமைத்திருக்கிறார்கள். அவை குறித்தே இந்தப் பதிவு.

முதல் சிலை 1-

1
இடப்பக்க கொண்டை, கைகளில் கால்களில் ஆபரணங்கள், காதுகளில் குண்டலங்கள், மேலாடை இல்லாமல், கணுக்கால் வரை அமைந்துள்ள கீழாடை என கைகூப்பி நின்றபடி இருக்கும் சிற்பம் முதல் சிற்பமாக அமைந்துள்ளது. இடையில் குறுவாள் உள்ள சிற்பம் என்பதால் வீரராக இருக்க வாய்ப்புண்டு. சன்னவீரம் கண்களுக்குப் புலப்படவில்லை.

இரண்டாவது சிலை 2-
2மகுடம் (துணியால் ஆனதாக இருக்கலாம்), காதுகளில் குண்டலங்கள், கழுத்து, கைகள், கால்கள் ஆகிவற்றில் ஆபரணங்கள், முட்டி வரையான இடையாடை, உடைவாள் ஆகியவற்றோடு வணங்கிய நிலையில் உள்ள சாந்த தவலும் சிலை. அழகிய மீசையுடன் இருப்பது வசீகரமாக இருக்கிறது. வலது மற்றும் இடது தோள்பட்டையிலிருந்து சிறிய அளவில் புடைப்பு தெரிகிறது. அது சன்னவீரமாக இருக்கலாம். அரசராகவோ, படைத் தளபதியாகவோ இருக்கலாம்.

மூன்றாவது சிலை –

3

மற்றச் சிலைகளைப் போல அல்லாமல் தம்பதிகளாக வடிக்கப்பட்ட சிற்பம். இருவரும் வலக்கையில் வாளும், தண்டமும் ஏந்தியவாறு இருக்கிறார்கள். இடப்பக்க கொண்டை, காதணிகள், கழுத்து மாலை, கை, கால் ஆபரணங்கள் இவற்றோடு இருக்கிறார்கள். ஆண் மேலாடையில்லாமல், கீழாடை தொடையளவு மட்டுமே உள்ளதாக இருக்கிறார். பெண்ணும் மேலாடையின்றி, கீழாடை கணுக்கால் வரை அணிந்து இருக்கிறார். ஆணின் இடக்கையில் குத்துவாள் உள்ளது. பெண்ணின் கையிலும் அவ்வாறு இருந்திருக்க வேண்டும். ஆனால் சிலை சிதைவுற்று காணப்படுகிறது.

நான்காவது சிலை –
4

தனித்த சிலைகளில் இச்சிலை சற்று வித்தியாசமாக வணங்கும் பொழுது, உடைவாளை இடக்கையால் உடலை அணைத்தவாறு அமைந்துள்ளது. இச்சிலை இடப்பக்க கொண்டை, கை, கால், கழுத்து ஆபரணங்கள் அணிந்தவாறு உள்ளது.

ஐந்தாவது சிலை –
5ஐந்தாவது சிலையானது முன்னுள்ள சிலை போல அமைந்துள்ளது. இடப்பக்க கொண்டை இல்லாமல் வணங்கிய நிலையில் உள்ளது.

இந்தச் சிலைகளின் காலம் பற்றியோ, இவர்கள் யாராக இருக்க கூடும் என்ற அனுமானங்கள் கூறும் நிலையில் நானில்லை. இதைப் பற்றி ஆய்வாளர்கள் ஒன்றினைந்து ஆய்ந்தால் கரூர் மாவட்டத்திலுள்ள பல வரலாற்று தகவல்கள் கிடைக்க கூடும். நன்றி.

குரங்குநாதர் கோயில் குழந்தைகள் 2

சென்றப்பதிவில் கையில் பூக்களுடன் இறைவனுக்காக கசிந்துருகும் பக்தன் சிலையைப் பார்த்தோம். இந்தப் பதிவில் தென்முகக் கடவுள் சிற்பத் தொகுதியை காணலாம்.

சனத்குமாரர்கள் எனும் நான்கு பிரம்ம மைந்தர்கள் ஞானத்தினைப் பெறுவதற்காக பிரம்மாவையும், திருமாலையும் கண்டு அவர்கள் தம்பதி சமேதராய் வாழ்வதாலேயே நிராகரித்தனர். தங்கள் குருவினைத் தேடி வருகையில் ஈசன் அவர்களுக்கு இளைஞன் வடிவெடுத்து ஆலமரத்தின் கீழ் தட்சிணாமூர்த்தி என்ற வடிவமாக அமர்ந்தார். சிவாலயங்களின் கோஷ்டத்தில் தெற்குநோக்கியவாறு இருக்கும் அவரை இன்றைய பக்தர்கள் குருவென அழைத்து வியாழன் தோறும் சுண்டல்மாலையுடன் சந்திக்கிறார்கள். ஞானத்தின் தேடலுக்கு அவரும் அருள் செய்து கொண்டுள்ளார்.

அந்த தட்சணாமூர்த்தி குரங்குநாதர் கோயிலிலும் இருக்கிறார். சற்று சிதைந்து இருந்தாலும், முற்றிலுமாக அழிக்கப்படாமல் இருப்பது நம்மை மகிழச் செய்கிறது.  அவரும் அவரைச் சுற்றியிருக்கும் சிற்பங்களும் உயிரோட்டமாக உள்ளன. இத்தனை சித்திரவாதைகளுக்குப் பின்னும் உயிரோடு இருக்கும் சிற்பங்களை சிதைக்க கல்மனத்துக்காரர்களாலேயே முடியும்.

இனி நாம் தட்சிணாமூர்த்தியை கவனிப்போம். இறையின் அடியைப் பற்றினால்தானே மோட்சம். தட்சிணாமூர்த்தியின் அடியை கவனிப்போம். சிதைக்கும் எண்ணம் கொண்டவர்களால் சிதைக்க முடியாத பாதங்கள் மட்டும் அந்தரத்தில் இருந்து முயலகனின் மேல் இருக்கின்றன. ஆகா.. முயலகன். இந்து சமயத்தவர்களின் குறியீட்டு சின்னம் முயலகன். அறிவே வடிவான ஞானமூர்த்தி, அஞ்ஞானத்தினை காலடியிட்டு இட்டு மிதிக்கிறார் என்ற கருத்துருவின் வடிவு. முலகனை உற்று நோக்கினோல் அவன் தட்சிணாமூர்த்தியின் அழுத்ததால் ஆ.. வென கதறுவது தெரியும். சோழச் சிற்பியின் திறம்.

தட்சிணாமூர்த்தி சிற்பத் தொகுதி. கட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது, முயகனை மிதிக்கும் ஈசனின் பாதம்.

001

கால்கள் வெட்டப்பட்டாலும், சிதைவுறாமல் சேதி சொல்லும் பாதம். முயலகன் ஏறக்குறைய பூதவடிவில் குறுகைகளும், குறுகால்களும் கொண்டு இருக்கிறார்.

002

ஈசனின் திருவடி  முயலகனின் மீது இருப்பதும், முயலகனின் முக பாவனையும் தெரிகிறாதா.

003

இதோ “ஆ..” வென வாய் திறந்து அலறும் முகப்பாவம்.

004

குரங்குநாதர் கோயில் குழந்தைகள்

சீனிவாசநல்லூர். சிவபெருமானின் பிரதானப் பக்தன் சீனிவாசன் வசிக்கும் நல்ல ஊர். எங்கள் காட்டுப்புத்தூரிலிருந்து முசிறி செல்லும் வழியில் தொட்டியத்திற்கு அடுத்தபடியாக இருக்கும் ஊர். நீங்கள் திருச்சியிலிருந்து சேலம் செல்லும் போது முசிறியைக் கடந்ததும் இவ்வுரை எதிர்ப்பார்த்து இருக்கலாம்.

காட்டுப்புத்தூரிலிருந்து முசிறி நோக்கி செல்லும் போது ஒவ்வொரு முறையும் தொட்டியத்தினை கடக்கும் போது சீனிவாசநல்லூர் குரங்குநாதர் கோயிலை ஏக்கத்துடன் பார்த்துச் செல்வேன். இந்தக் கோயில் எப்போதுதான் திறக்கும் என விசாரித்துக் கொள்வேன். யாருக்கும் தெரியவில்லை. இம்முறை அவ்வழியாக சென்ற போது, பூட்டியக் கோயிலையாவது காண்போம் என சென்றேன்.

கோயிலுக்கு அருகே உள்ள ஒரு மரத்தின் நிழலில் கயிற்று கட்டிலில் ஒரு மூதாட்டி அமர்ந்திருந்தாள். அவளுடைய பேரன் விளையாடிக் கொண்டிருந்தான். இனி எங்களின் உரையாடல்கள்.

“அம்மா.. இந்தக் கோயில் எப்பங்க திறந்திருக்கும்”

“அது இந்தக் கோயிலோட சாவி தஞ்சாவூர் ஆபிசருங்க கிட்ட இருக்குதுப்பா. அவுங்க வந்து திறந்தாதான் உண்டு.”

“அப்படிங்களா, எப்பவாச்சும் வந்து திறப்பாங்களா”

“அவுங்க வந்தா தான் உண்டு. எப்ப வருவாங்கன்னு தெரியாதுப்பா. உள்ளுக்கார சாமியில்லை. தூணுதான் இருக்கு. நீங்க எந்த ஊரு”

“நான் காட்டுப்புத்தூருங்க”

“காலையிலக் கூட இரண்டு மூணுபேரு வந்து கேட்டாங்க. என்னப்பா பன்னறது சாவி இல்லையே. இந்தக் கேட்டு சும்மாதான் சாத்தியிருக்கு. நீ வேணா சுத்தி இருக்கிறதைப் பார்த்துட்டு போ.”

“சரிங்க”

20161001_123526-copy

நான் கோயிலைக் கவனித்தேன். இது கோயிலா.. இல்லை. கருவறையும், அர்த்தமண்டபமும் மட்டுமே கொண்ட ஒரு சன்னதி அவ்வளவுதான். பிறந்தநாள் கேக்கில் எல்லோருக்கும் பங்கு போட்டு கொடுத்தப் பிறகு நடுப்பகுதி எஞ்சியிருக்குமே அப்படிதான் இருக்கிறது மூலவர் சன்னதி. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் மூலவரை மீண்டும் வைத்து கோயிலை புரணமைக்காமல் அப்படியே வைத்துள்ளார்கள். எந்தக் காரணத்திற்காக உருவாக்கப்பட்டதோ அந்தக் காரணம் நிறைவேறாமல் சூன்யமாக இருக்கிறது.

வேலியை விட சன்னதி கீழ் மட்டத்தில் இருக்கிறது. நம்மவர்கள் சாலைகளை உயர்த்த, அருகிலுள்ள வீடுகள் கீழே செல்ல. மீண்டும் வீடுகள் உயர்த்திக் கட்டப்பட, சாலைகள் அதற்கும் மேலும் உயர்ததப்பட என இங்கு நடக்கும் அரசாங்க தனியார் போரின் உச்சத்தால் இந்த நிலை.

நான் கதவினைத் திறப்பது கண்டு என்னுடைய சிற்றன்னையும் வந்து இணைந்து கொண்டார். கருவறை ஒரு முறை வலம் வந்து முடிந்தமட்டும் கைப்பேசியால் புகைப்படம் எடுத்துக் கொண்டு கிளம்பினோம். ஒரு சுற்று அல்லை. ஒரு நாள் அமர்ந்து காணக் கூடிய வகையில் சிற்பங்கள் அமைந்துள்ளன. அத்தனை நுட்பம். அவற்றை முடிந்த மட்டும் இடுகைகளாகத் தரப்பார்க்கிறேன்.

 

 

205

மேற்கண்டப் படத்தில் கருவறை கோஷ்டத்தில் இருக்கும் சிற்பத்தினைக் காண்கின்றீர்கள். தூரத்தில் இருந்துப் பார்த்தால் அவருடைய கைகள் வணக்கம் தெரிவித்தபடி இருப்பதாக தோன்றும், ஆனால் நன்கு நோக்கும் போது கைகளிடையே பூக்கள் உள்ளதைக் காணலாம். பூவினால் செய்தலே பூசை என்று நம்முன்னோர்கள் தெரிவித்துள்ளார்கள். இறைவனை வணங்குவதற்கு கற்பூரம் காட்டுவதும், ஆராத்திகள் எடுப்பதும் பிற்காலத்தில் வந்த சடங்கு முறைகள். நம் முன்னோர்கள் பூக்களை இறையுருவின் மீது தூவி வழிபட்டு வந்துள்ளார்கள். அந்த பாரம்பரியத்தினை விளக்கும் சிற்பம் இது.

 

Amores Perros (அமோறேஸ் பெர்ரோஸ்) – ஈஸ்வரப் பார்வை

வெறுமையான இரவுநேரமொன்றில் பொழுதினை வண்ணமயமாக்கிட உலகத்திரைப்படங்களை தேடினேன். உள்ளூர் திரைப்படங்களையே விமர்சனத்தை படித்தப்பின்புதான் அனுக இயலும் நிலையில், உலகத்திரைப்படத்தை அனுக அர்ஜூன தவம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் திரைப்படங்களையே பார்க்க வேண்டாம் எனும் அளவிற்கு நம் பொறுமையை சோதிக்கும் படங்களிடம் சிக்கிக்கொள்வோம். என்னுடைய அலுவலகத்தில் உள்ள நண்பர் ஹிட்ச்காக், பாபெல் , ஜாக் நிக்கல்சன், 12 ஆங்கிரி மேன் என்பதைப் போன்று நிறைய திரைமொழி வார்த்தைகளை குறிப்பிடுவார். ஆனால் எனக்கோ பேருந்தில் சக பயனியாக அமர்ந்த இசுலாமிய குடும்பம் பேசும் அரபோ, உருதோ போல புரியாமலேயே இருக்கும். அதனால் அவரிடமிருந்து நமக்கு பயனுள்ள தகவல் கிடைக்காது.

ஆனால் திரைமொழி பேசும் தமிழ் வலைப்பதிவர்களை நாடினேன். மாறுபட்ட வாழ்வியலை கொண்ட மனிதர்கள் ஒரு சம்பவத்தின் போது பிணைக்கப்படுதலை திரைக்கதையாக கட்டமைக்கும் யுத்தி அமோறேஸ் பெர்ரோஸ் படத்திலிருந்தே உதயமானதாக கூறினார்கள். ஆயுத எழுத்து, வேதமென தமிழில் பார்த்திருந்தாலும் உலகத்திரைப்படத்தில் காண ஓடினேன்.

amores-perros

அமோறேஸ் பெர்ரோஸ் –

அமோறேஸ் பெர்ரோஸ் கதை குவில்லர்மொ அர்ரியாகா என்ற மெக்சிக்கன் திரைமொழி எழுத்தாளர் மற்றும் இயக்குனர் என்று பல்துறை வித்தகருடையது. இவருடன் இணைந்த இயக்குனர் இன்னாரித்தோ 36 முறை மாற்றம் செய்ததாக நிலாமுகிலன் வலைப்பூவில் படித்தேன். இப்படத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட நபர்களைப் பற்றிய கதைகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், ஆக்டாவியோ என்ற நாய் சண்டையிடும் இளைஞன், வலேரியா என்ற விளம்பர மாடல் பெண், எல் சைவோ என்ற பணத்திற்காக கொலை செய்யும் முதியவன் என மூன்று நபர்களைச் சுற்றி நடப்பவையாக வடிவமைத்திருக்கின்றார்கள்.

ஆனால் நான் படத்தினை பார்க்கையில் ராட்வில்லர்(rottweiler) வகையைச் சார்ந்த கோஃபி என்ற நாயை நடுநாயகமாக வைத்தே திரைக்கதை செல்வதை உணர்ந்தேன். இதுவரை இந்த கருத்தோட்டத்துடன் எவரும் பதிவு செய்யவில்லை என்பதால் அமோறேஸ் பெர்ரோஸின் மாறுபட்ட பார்வையை சகோதரனில் பதிவு செய்கிறேன். முதலில் ராட்வில்லர் நாயைப் பற்றி சில வரிகள். இது மீடியம் சைஸ் வகையானது. இந்தியாவின் சீதோசன நிலைக்கு ஏற்றது என்றாலும் சற்று மூர்க்கமானது. குடும்பத்தினரைத் தவிற பிறரை ஏற்றுக் கொள்ளவது கடினம். ஏற்கனவே நாய்களை வளர்த்தவர்களால் மட்டுமே எளிமையாக வளர்க்க முடியும். இல்லையென்றால் ஏய்த்துவிடும்.

காயம்பட்ட ஒரு நாயுடன் இரு இளைஞர்கள் காரில் பறக்கின்றார்கள். அவர்களை துரத்திக் கொண்டு மற்றொரு காரில் சில ஆட்கள் வருகிறார்கள். சிலர் துப்பாக்கியால் அந்த இளைஞர்களை சுட முயற்சிக்கின்றார்கள். அவர்களிடமிருந்து தப்பிக்க சிவப்பு சிக்னலை மதியாமல் செல்லும் இளைஞர்களின் கார் பக்கவாட்டில் வந்த மற்றொரு காரில் மோதி ஏற்படுத்தும் விபத்திலிருந்து திரைப்படம் தொடங்குகிறது. சுசைனா வீட்டின் கதவினை திறந்து உள்நூழைய முற்படும் போது, எப்படா கதவை திறப்பாங்க என்று பார்த்துக்கொண்டிருந்த கோஃபி ஓட்டம் எடுக்கிறது. அவளும் இரண்டு மூன்று முறை அழைத்துப்பார்த்துவி்ட்டு வீட்டிற்குள் போய்வி்டுகிறாள்.

வெறிகொண்ட நாயின் கழுத்தினை பிடித்தபடி எதிர்எதிரே இருநபர்கள் இருக்கிறார்கள். நடுவர் ஓகே சொன்னதும் நாய்கள் விடுபட்டு மூர்க்கமாக சண்டையிடுகின்றன. பலர் சுற்றி நின்று வேடிக்கைப் பார்க்கின்றார்கள். நம்மூர் சேவல் சண்டையைப் போலவே இருக்கிறது நாய் சண்டையும். சண்டையில் ஜெயித்த நாயும் அதன் உரிமையாளரும் மிகவும் பெருமையோடு சாலைக்கு வருகிறார்கள். மூர்க்கம் தீரா நாயின் வேகத்தினை தெருநாயின் மீது காட்டச்செல்லும் போது அதை தடுத்திட விழைகிறார் ஒரு முதியவர். அவனுடைய நண்பர்கள் அங்கே சுற்றும் கோஃபியை மாட்டிவிடுகிறார்கள். வீட்டுநாயுடன் வேட்டைநாயை மோதவிடுகிறார்களே என்று பதறும்போது, அவர்களுடன் இருந்து வேடிக்கைப் பார்த்த ஜார்ஜ் கோஃபியின் ஓனரான அக்டாவியோவிடம் வந்து “உன் நாய் வேட்டைநாயை கொன்றுவிட்டது” என சொல்கிறான்.இறந்த நாயை வைத்து பேரம் பேசுகிறார்கள் தோற்றவர்கள். அக்டோவியோ அதற்கு படியாமல் போக வெறுப்புடன் செல்கிறார்கள்.

ஜார்ஜின் யோசனையைக் கேட்டு, கோஃபியை நாய் சண்டை நடக்குமிடத்திற்கு அழைத்துசெல்கிறான். போட்டியை நடத்துபவரிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு தோற்றவனிடமே மீண்டும் மீண்டும் ஜெயிக்கிறான். (எனக்கு ஏனோ ஆடுகளம் நினைவில் வந்துபோனது) ஒவ்வொருமுறையும் புதுபுது நாயுடன் வந்தாலும் வில்லன் தோற்றுப்போகிறான். பணமிருக்கும் தெகிரியத்தில் அண்ணியின் மீதான தகாத காதலை வெளிப்படுத்தி, உறவும் கொள்கிறான். அவளை தனியாக சென்று வாழ அழைக்கிறான், இப்போதிருக்கும் பணம் இரண்டு வருடங்களுக்குகூட வராது என்று அவள் கூற, மேலும் பணம் சேர்க்க வேண்டிய நிர்பந்த்திற்கு வருகிறான். அந்நேரத்தில் எதிரியிடமிருந்து தனிப்பட்ட இடத்தில் நாய்சண்டை வைத்துக்கொள்ள ஒரு அழைப்பு வருகிறது. எதிரி பெரும்பணம் தர சம்மதிக்கவும், தன் சுயதேவைக்காக சண்டைக்கு சம்மதிக்கிறான். அந்த சண்டையில் கிடைக்கும் பணத்தினை வைத்து அண்ணியுடன் தனியாக செல்ல திட்டம் தீட்டுகிறான். அதற்கு குறுக்கே நிற்கும் அண்ணை அடியாட்களை வைத்து அடிக்கிறான்.

அடிப்பட்ட அண்ணனும், அண்ணியும் இவனுடைய பணத்தினை எடுத்துக்கொண்டு வேறிடம் சென்றுவிடுகிறார்கள். தன்னை அண்ணி ஏமாற்றிவிட்டாள் என்று அறிந்தாலும், போட்டிநாளன்று எதிரியை தனியாக கோஃபியுடன் சந்திக்கிறான். அங்கு நடக்கும் போட்டில் எதிரி கோஃபியை சுட்டுவிட, எதிரியை கத்தியால் குத்திவிட்டு கோஃபியை காப்பற்ற நண்பன் ஜார்ஜுடன் பயனிக்கும் போதுதான் முதலில் வந்த விபத்து நேரிடுகிறது.

காசிற்காக பிறரை கொலை செய்யும் எல் சைவோ, தான் ஒத்துக்கொண்ட புதிய கொலைக்காக விபத்துநடக்கும் இடத்திற்கு எதற்சையாக வருகிறார். குறிவைத்த நபரை சுடும் முன்பே விபத்து நிகழ்ந்துவிடுவதால் அதை புறந்தள்ளிவிட்டு சேதமடைந்த காரில் இருக்கும் ஜார்ஜிடம் வருகிறார். ஜார்ஜ் இறந்துகிடக்கிறான். அவனிடமிருந்து பணத்தினை திருடிக்கொண்டு சைவோ கிளம்புகையில், உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ஆக்டாவியோவை மற்றவர்கள் ஆம்புலன்சில் ஏற்றுவதையும், குண்டடிப்பட்ட காயத்துடன் இருந்த கோஃபியை இறந்துவிட்டதாக எண்ணி குப்பைக்கு அருகே சிலர் போடுவதையும் காண்கிறார். நாய்களின் காதலனான சைவோ கோஃபி உயிரோடு இருப்பதை அறிந்து மருத்துவம் பார்க்க ஏற்கனவே நிறைய நாய்களோடு அவர் இருக்கும் வீட்டிற்கு செல்கிறார்.

கோஃபியை குணப்படுத்திவிட்டு தன்னுடைய மகளை காண செல்கிறார். வீடுதிரும்பியதும் அவரை வரவேற்க கோஃபி ஓடுவருகி்றது. கோஃபியின் உடல்முழுக்க ரத்தம் தெரித்திருக்கிறது. சைவோ கோஃபியின் உடல்முழுக்க ஆராய்ந்துவிட்டு சந்தேகத்துடன் வீட்டிற்குள் நுழைய ஆங்காங்கே ஆசையாய் வளர்த்த நாய்கள் மரணமடைந்து கிடைக்கின்றன. கோஃபிதான் காரணமென அறிந்தாலும் கொல்ல இயலாமல் விட்டுவிடுகிறார். அதன்பின் முடிக்காமல் விட்ட அசைன்மென்டை முடிக்க செல்கிறார். கொலை செய்யவேண்டிய ஆளை வீட்டிற்குள் கூட்டிவந்து கட்டிவைத்து அவனை கொல்ல அனுப்பியது யாரென கேட்கிறார். அவன் சகோதரன் என்பதை அறிந்ததும், அவனை வீட்டிற்கு வரவைத்து எதிரே கட்டிப்போடுகிறார். அவர்களுக்கு காவலாக கோஃபி இருக்கிறது. இறுதியாக இருவரின் கட்டுகளையும் தளர்த்திவிட்டு நடுவே துப்பாக்கியை வைத்து முடிவினை அவர்களிடம் விட்டு வெளியேறுகிறார் சைவோ. தன்னுடைய அனைத்து சம்பாத்தியத்தையும் மகளின் வீட்டில் வைத்து கண்ணீர் மல்க தன்னுடைய இயலாமையை பதிவு செய்துவிட்டு கோஃபியுடன் நடக்கையில் படம் நிறைவடைகிறது.

இடையே ஆக்டாவியோ ஏற்படுத்தும் விபத்தில் வலேரியா என்ற மாடலின் கால் பாதிக்கப்படுகிறது. அவளுடைய காலை அசையாமல் பார்த்துக்கொள்ள மருத்துவர்கள் வலியுருத்துகிறார்கள். புதியதாக வாங்கிய வீட்டில் தன் காதலனுடன் இருக்கும் வலேரியாவுக்கு மிகப்பிடித்தமான ரிச்சி அந்த வீட்டில் இருக்கும் ஓட்டைக்குள் விழுந்துவிடுகிறது. அதை மீட்கும் முயற்சியல் வலேரியாவின் கால் அதிகமாக காயப்பட, காலையே வெட்டி எடுத்துவிடுகிறார்கள் மருத்துவர்கள். மீட்கப்பட்ட ரிச்சியுடன் காலை இழந்த வலேரியாவின் கதை முடிகிறது. நெருடலான இந்த வலேரியாவின் கதை இடைசொறுகப்படாமலேயே இருந்திருக்கலாம். பணத்திற்கு குறைவில்லாத வலேரியா நிச்சயமாக ஓட்டைக்குள் விழுந்த அதே தினத்தில் ரிச்சியை மீட்டிருக்க இயலும் என்ற எதார்த்தம் படத்தினை பலவீனப்படுத்துகிறது. வங்கி கொள்ளையில் மாண்டுபோகும் ஆக்டோவியோவின் அண்ணன், ஆக்டோவியாவுடன் இறுதியாக வரமறுக்கும் சுசேனா என்று திரையியல் வன்புணர்வுகள் இருந்தாலும் சொல்லப்பட்டவிதத்தில் அமோறேஸ் பெர்ரோஸ் தனித்த இடத்தை வகிக்கிறது.

கம்பீர கடவுளுக்கு என் காணிக்கை

பாரதி

பாரதியார்

கம்பன், வள்ளுவன் என கணக்கில்லா கலைத்தாயின் புதல்வர்கள் இங்கே உதித்ட்டிட்டாலும், கவிஞன் என்றதும் என் கண்முன் வருவது பாரதிதான். சக்தி, சிவன், வள்ளி, வேலன் மீது போற்றி பாடல்களை இயற்றியது பக்தி. பாடலில் கண்ணம்மா, வாழ்க்கையில் செல்லம்மா என காதலிலே வாழ்ந்து காட்டியது காதல். சுகந்திர உணர்வூட்டியது தேசப்பற்று, மாய,மன,சித்தாந்தம் அறிந்து வெளியிட்டது ஞானம். சாமர்த்தியமாய் சாதியை வடிவமைத்து வாழ்க்கையில் பிணைத்த பிராமண வயிற்றில் பிறந்தாலும், சாதிகள் இல்லையென்றது புரட்சி.

பக்திக்காக, பாப்பாவுக்காக, பாவைக்காக, பாரதத்திற்காக என பட்டியல் நீண்டு செல்கிறது. அத்தோடு இருநூறு ஆண்டுகள் பாரதத்தை  இறுக்கமாய் பற்றி ரத்தம் உறிஞ்சிய அட்டைப்பூச்சி ஆங்கிலேயர்களை  விரட்டியத்த வீரனின் (பாரதியின்) செல்லப் பெயர் சுப்பன்.  உறக்கவே கூறலாம் ஆங்கியனை விரட்டியடித்தவன் குப்பன் சுப்பனென. இங்கே சிலர் பாரதியின் திலகத்தினை அழித்து வெறியூட்டும் முகம் வரைந்து பாரதி என்கிறார்கள். என்னால் அந்த ஓவியத்தை பாரதியென ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. மூர்க்கதிற்கும் மிடுக்கிற்குமான வித்தியாசம் அழிக்கப்படுவதும், பாரதியின் இயல்பு முகம் மறைந்து மிருக முகம் ஏற்கப்படுதும் நாளைய சந்ததியனருக்கு நாம் செய்துபோகும் துரோகம்.

அவனுடைய இறுகிய தலைப்பாகையும், முறுக்கிய மீசையும் எத்தனையோ மனிதர்களை தமிழனென்ற இறுமாப்பு கொள்ள வைத்திருக்கிறது. அந்த கம்பீரமான கவிதைக் கடவுளுக்கு என் காணிக்கை இது.

பாரதியார் ஓவியம்

பாரதியார் ஓவியம்

தரவிரக்கம் செய்ய –

Mediafire
RapidShare
DropBox

விஷ்வரூப அனுபவம்

இருபத்தி நான்கு இஸ்லாமிய கூட்டமைப்புகளின் எதிர்ப்பால் கமலின் விஷ்வரூபம் திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்படாமல் இருக்கிறது. உயர்நீதிமன்றம் தடை நீக்கம், தமிழக அரசு தடை என நாளுக்கு நாள் விஷ்வரூபமாகி வரும் திரைப்பட பிரட்சனை என்றாவது முடிந்து தமிழகத்தில் திரையிடப்படும் என்ற நம்பிக்கை குறைந்து வரும் வேளையில் ஆந்திர தமிழக எல்லையில் வசித்துவரும் அலுவலக நண்பர் ஒருவர் தமிழில் விஷ்வரூபத்தினை பார்த்தாக கூறினார். அலுவலகத்தில் இருக்கும் அனைவரும் அவருடன் பேசி அவ்விடம் ஆந்திர தமிழக எல்லையில் இருக்கும் சத்தியவேடு என்ற கிராமம் என்று அறிந்தோம்.

ஒரு திரைப்படத்தினைப் பார்க்க மாநிலம் விட்டு மாநிலம் செல்ல வேண்டாமென காத்திருந்த போது, இஸ்லாமிய அமைப்புகளை சமரசம் செய்ய சில காட்சிகளை நீக்கி வெளியிட கமல் தரப்பு சம்மதித்தாக செய்தி வந்தது. அரைமணி நேரக் காட்சிகள் நீக்கப்படலாம் என்ற யூகத்தினை செய்திதாள்கள் வெளியிட்டன. முழுவதுமாக பார்க்க வாய்ப்பு இருக்கும் போது, அரை குறை திரைப்படத்தினை அதுவும் பல நாட்கள் காத்திருந்து பார்க்க வேண்டாமென முடிவு செய்து சென்ற சனிக்கிழமை கிளம்பினோம். மேனேஜிங் டைரக்டர் வாங்கிய புதிய காரில் எங்கள் பயணம் தொடங்கியது.

சத்தியவேடு கிராமத்திற்கு இதற்கு முன்பே சக அலுவலரின் திருமணத்திற்கு சென்றுள்ளோம் என்பதால், எவ்வித இடையூருமின்றி எங்களால் கிராமத்தினை அடைய முடிந்தது. ஆனால் சிற்சில சாலை அமைக்கும் பணிகளால் கரடுமுரடான சாலையில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. புதுப்பாதையில் வெங்கடேஷ்வரா திரையரங்கத்திற்கான வழியை சிலரிடம் கேட்டு தெரிந்து கொண்டு பயணித்தோம். வழியில் ஒரு பெண்ணிடம் விவரம் கேட்க அடக்க இயலா சிரிப்போடு வழிகாட்டினார். அந்த சிரிப்பின் பின்னனியில் உள்ளதை அறிய ஆவல் உண்டாயிற்று, ஏன் இப்படி சிரிக்கின்றீர்கள் என்றோம், இதுவரை பலருக்கும் வழிகாட்டியாக இங்கு நிற்பதாகவும், யாருமே பயணப்படாத சாலையில் இன்று பெரும் வாகனங்கள் பயணப்படுவதை எண்ணி சிரிப்பதாகவும் கூறினார். எங்களுக்கு முன் ஒரு அம்பாசிட்டர் மறைந்து கொண்டிருந்தது.

வழிநெடுகிலும் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், நாங்கள் திரையரங்கத்தினை நெருங்கிவிட்டோம் என்று கூறின. திரையரங்கத்தின் முகப்பில் ஏகப்பட்ட இருசக்ர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. சனிக்கிழமை என்பதால் நாங்கள் எதிர்ப்பார்த்தை விட ரசிகசிகாமணிகள் அதிகமாகவே இருந்தார்கள். தெலுங்கில் எழுதப்பட்டிருந்த திரையரங்கத்தின் பெயர், எண்ணற்ற தமிழ் ரசிகர்களை பார்த்து மகிழந்து கொண்டிருந்தது. நீண்டு வளைந்து சென்ற வரிசையின் இறுதியில் நான் நின்று கொண்டேன். ஆந்திரா நண்பர் திரையரங்கில் தெரிந்தவர்களை இனம் கண்டு மகிழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். மற்றவர்கள் டிக்கெட் கொடுக்குமிடத்திற்கு விரைந்தார்கள். சாலையில் செல்லும் உள்ளூர் வாசிகள், நம்மூர் திரையரங்குதானா என்று வியந்தபடியும், ரசிக கோமாளிகளை எண்ணி நகைத்தபடியும் சென்றார்கள். எனக்கு முன் எஸ்.ஆர்.எம் கல்லூரி மாணவர்கள் சிலர் நின்றிருந்தார்கள். அவர்கள் பதினாறு பேர் ஒன்றாக வந்ததாகவும், இவர்களின்றி மேலும் இருவர் தற்போது ஓடுகின்ற காட்சியை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்கள். எனக்குப் பின் பிளாக்கில் டிக்கெட்டுகளை விக்கும் சிறுவன் ஒருவன் நின்றிருந்தான். முதலாவதாக நின்றிருந்த தன்னை நண்பர்கள் கலாட்டகள் செய்து இடத்தினை பிடுங்கிக் கொண்டதாக கூறி அவர்களை வசைபாடிக் கொண்டிருந்தான். அவனுக்குப் பின்னே ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்கவர் தன் இருபது வயதுகளில் சகலகலா வல்வன் படத்திற்காக மூன்று முறை திரையரங்கம் சென்று நான்காவது முறைதான் பார்த்தாக அனுபவங்களை பிறரிடம் கூறிக் கொண்டிருந்தார்.

எங்களுக்கெல்லாம் பின்னார் நின்று கொண்டிருந்த ஒரு கும்பல் டிக்கெட் கிடைச்சிடுச்சு என்று மகிழ்ச்சியில் ஆரவாரமிட்டார்கள். அனைவரும் ஆச்சரியத்தோடு பார்க்க தரகர்கள் மூலம் கிடைத்தாக கூறி சென்றார்கள். அவர்கள் பின்னே சிலர் தகரை அறிமுகம் செய்துவைக்கும்படி கோரிக்கையோடு சென்றார்கள். ஆறு ரூபாய் டிக்கெட் ஐம்பது ரூபாய்க்கு விற்கப்பட்டாலும், ஐம்பது ரூபாய் டிக்கெட்டை கள்ளத்தனமாய் இருநூறு ரூபாய் வரை விற்றார்கள். சிறி்து நேரத்தில் டிக்கெட் கொடுக்குமிடத்தில் முட்டி மோதி எனக்கும் சேர்த்து வாங்கிவந்தார்கள் நண்பர்கள். ஏகப்பட்ட தள்ளுமுள்ளுகளுக்குப் பிறகு அரங்கில் நுழைந்தோம். முன்னூற்று ஐம்பது நபர்களுக்கான அரங்கில் ஐநூறுக்கும் மேற்ப்பட்டவர்கள் நுழைந்தமையால், பலர் நின்றபடி படம் பார்க்கத் தொடங்கினர். அமரச் சொல்லி அமர்ந்திருப்பவர்களும், நின்று பார்க்கச் சொல்லி நின்றிருப்பவர்கள் கூச்சலிட்டனர். எல்லாம் படம் தொடங்கும் வரைத்தான்.

விஷ்வரூபம் –

விஷ்வரூபம்

விஷ்வரூபம்

அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அணு ஆயுதம் மூலம் அழிவை ஏற்படுத்த முற்படுகின்றார்கள். அதை இந்தியாவிலிருந்து செல்லும் ஒரு முஸ்லிம் எப்படி அறிந்து கொள்கிறான், அவன் மனைவியான பிராமணப்பெண்ணுடன் இணைந்து எப்படி அதை முறியடிக்கிறான் என்பதே விஷ்வரூபத்தின் கதை. அமெரிக்காவில் தமிழ்பேசும் மாணவிகளுக்கு பரதம் சொல்லிதரும் குருவாக அறிமுகமாகிறார் கமலஹாசன். தமிழ்திரையின் சித்தாந்தப்படி நடனத்தின் நளினங்களால் பாதிக்கப்பட்டு பெண் அசைவுகளுக்குள் சிக்குண்டவராக வலம்வருகிறார். பரதத்தினை கற்றுக் கொள்ளும் ஆண்மகனெல்லாம் மகள்களாக மாறிவிடுவார்களோ என்ற அச்சம் கொள்ளும் அளவுக்கு நடையிலும், ஓட்டத்திலும் நளினம் காட்டியபடி இருக்கிறார். கமல் மனைவியான பூஜா குமார் உளவுபார்க்கும் ஆள்மூலம் தன் கணவன் முஸ்லிம் என்ற உண்மையை அறிகிறார். அதை அவரின் பாய் பிரண்டிடம் கூற, ஜிகாத்திகள் கதைக்குள் பிரவேசிக்கின்றார்கள். கமலையும், பூஜாவையும் அவர்கள் ஒளிந்திருக்கும் இடத்திற்கு கொண்டு செல்கிறார்கள். இடையே ஜிகாத்திகளின் தலைவனாக வருகின்ற ராகுல் போஸ் பூஜாவின் பாய் பிரண்டை கொல்லவும், கமலை உயிரோடு பிடித்து வைத்திருக்கவும் கூறி அவ்விடத்திற்கு புறப்படுகிறார். அதற்குள் கமலும் பூஜாவும் தீவிரவாதிகளிடமிருந்து தப்புகிறார்கள். ராகுல் போஸ் மிரட்டும் பார்வையும், மெல்லிய பேச்சும் புதிய வில்லனாக காட்டுகிறது.

ஆப்கானிஸ்தானில் ராகுல் போஸிடம் கமல் இணைவதும், போராளிகளுக்கு பயிற்சி கொடுப்பதும், குடும்பத்தினருடன் நன்றாக பழகுவதுமாக விரிகிறது பிளாஸ்பேக். தீவிரவாதத்தின் பின்னனியில் இருக்கும் குடும்ப உறவுகளின் வலிகளையும், ஆப்கானின் தினசர் வாழ்வினையும் தொட்டு செல்கிறது படம். ராகுல் போஸின் மனைவிக்கு மருத்துவம் பார்க்க வருவபவளை இஸ்லாமியர்களைப் போல உடை அணியச் சொல்வதும், மருத்துவச்சி போல நடித்து அவர் பிள்ளை சந்தோசம் கொள்வதும் யதார்த்தங்களின் கலவை. அமெரிக்கர்களின் தாக்குதல்களும், அமெரிக்கர்களை கொல்வதினையும் கடந்து ராகுல் போஸின் நியூயார்க் நகரை தாக்கும் தந்திரம் கமலுக்கு தெரியவருகிறது. அதைத் தடுக்க கமல் போராடுவதே மீதமிருக்கும் கதை. இறுதியாக நியூக்கிளியார் டாக்டரேட்டான பூஜாவின் உதவியால் சுபமாக முடிந்தாலும், கமல் ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பியதும், வில்லன் ராகுல் போஸ் மிச்சமிருப்பதும் விஷ்வரூபத்தின் இரண்டாவது பாகத்திற்கான வழிவகைகளோடு சின்ன டிரைலர் தந்து படம் முடிகிறது. ஆன்ட்ரியா, நாசர் போன்றவர்கள் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. அடுத்த பாகத்தில் கதாப்பாத்திரத்தின் வலு கூடினால் பார்க்கலாம்.

என் பாட்டன்மார்களெல்லாம் கூத்து பார்க்க வண்டிக்கட்டி போனதைப் பற்றி கேள்வியுற்றிருக்கிறேன். தூரங்களை மதியாமல், கலைஞர்களை மதித்து சென்ற அந்த பயணங்கள் முடிந்துவிடவில்லை. அருகே ஆயிரம் திரையரங்குகள் இருந்தும், ஆந்திராவின் எல்லைக்கு எங்களையெல்லாம் படையெடுக்க வைத்தமைக்காக இசுலாமிய அமைப்புகளுக்கும், இங்கிருக்கும் அரசிற்கும் தான் நன்றி கூற வேண்டும். இல்லையென்றால் இப்படியொரு அனுபவம் என்வாழ்வில் நிகழ்ந்திருக்காது.

தாய்க் கிழவி காத்திருக்கிறாள்

தாய்க் கிளவி

திகட்டாத பலநூறு கதைகளுடன்
திண்ணையில் காத்திருக்கிறாள்
இந்த தாய்க் கிழவி!

வாருங்கள் கதை கேட்க
குழந்தைகளாக மாறி…

– சகோதரன் ஜெகதீஸ்வரன்

டிஜிட்டல் ஓவியத்தை நம்மாலும் வரைய இயலும்

கணினி அறிமுகமானது முதல் அதில் ஓவியம் வரைய வேண்டும் என்று பல முறை முயற்சி செய்திருக்கிறேன். ஏறத்தாள அனைத்து முயற்சியுமே தோல்விதான். பென்சிலால் தாள்களில் வரைவதைப் போல மவுசைக் கொண்டு வரைய முடியவில்லை. நாம் ஒரு கோட்டை வரைய நினைத்தால் அது கோடாவே இல்லாமல் வளைந்து நெளிந்து பயனிக்கும். கணினி அடிப்படை ஓவிய கருவியான பெயின்ட் பல முயற்சிகளுக்குப் பிறகு படிந்தது. ஆனால் நிபுனர்களைப் போல அன்றி எளிமையான கோட்டோவியங்களே அதில் சாத்தியமாயிற்று. சகோதரன் வலைப்பூவில் இதற்கு முன் கருப்பு வெள்ளை ஓவியங்கள் எனும் தலைப்பில் சில ஓவியப்படைப்புகளை வெளியிடப்பட்டிருப்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

இதற்கிடையே கோரல் டிரா, மாயா போன்ற மென்பொருள்களை கற்கும் முயற்சியில் இறங்கினேன். அதிலிலும் தோல்வி. ஓவியம் வரைய வேண்டும் என்ற ஆசையைத் தவிற, சிறந்த ஓவியங்களின் படைப்புகளை உற்று நோக்கவில்லை என்பதுதான் என் தோல்விக்கான காரணம் என்று புரிந்து கொண்டேன். ருத்ரன், மணிவர்மா போன்ற ஓவியர்களின் படைப்புகளை உற்றுக் கவனித்தேன். அதில் மணிவர்மா நெளிநெளியான கோட்டோவியங்களை மிகவும் திறமையான அழகான ஓவியங்களாக மாற்றும் வித்தையை தன் விரல் நுனியில் வைத்திருக்கிறார். வண்ணக் கலவைகளை கலந்து தந்து ஓவியமாக்கும் மாயாஜாலம் ருத்ரனுடையது.

போட்டோசாப் அடிப்படைகளை இணையத்தின் உதவியால் கற்றுக் கொண்டிருக்கிறேன். அதில் பிரஸ் போன்ற அடிப்படையான டூல்களை பயன்படுத்தும் விதத்தினைப் பற்றி இப்போதுதான் தெரிந்து கொண்டேன். பெயின்ட் போலன்றி படங்களை லேயர்களாக அடுக்கிவைக்க போட்டாசாப்பில் முடிகிறது. அந்த லேயர் முறையை உபயோகம் செய்து கோட்டோவியமாக வரைகின்ற போட்டோவை முதலில் வைத்துக் கொண்டு, வண்ணங்களை அதன் பின் உள்ள லேயர்களில் இட்டு சரிபடுத்தி வரைய முயன்றேன். முதல் முயற்சியாக தஞ்சை தலையாட்டி பொம்மையை தேர்வு செய்து வரைந்தேன். முகநூலில் அதை இட்டு நண்பர்களுக்கு காட்டினால், ஒருத்தரும் விருப்பம் தெரிக்கவில்லை.

பிறகு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியை வரைந்தேன். போட்டோசாப் என்பதால் பல வண்ணங்களில் வரைந்ததை மாற்ற முடிந்தது. முகநூல் சோழிய வெள்ளாளர் குழுமத்திலும், வ.உ.சி பேரவை குழுமத்திலும் அதை நண்பர்களின் பார்வைக்கு வைத்த போது, சிலர் விருப்பம் தெரிவித்தார்கள். வ.உ.சியின் ஓவியம் நம்பிக்கை தந்தது என்றே கூற வேண்டும். நேற்று பிளிக்கர் இணையதளத்திலிருந்து வயலில் நாற்று நடும் பெண்ணின் புகைப்படத்தினை தேர்வு செய்து வரைந்தேன். கோட்டோவியத்தில் அதிக வண்ணங்களை வண்ணங்களை சேர்க்காமல் தேர்ந்தெடுத்த சில வண்ணங்களை மட்டுமே இட்டு முடித்தேன். மீண்டும் முகநூலில் நண்பர்களின் பார்வைக்கு கொண்டு சென்றேன். நண்பர்கள் சிலரின் விருப்பங்கள் கிடைத்தன.

Charcoal Large Smear, Hard Round 3 pixels, Hard Round 9 pixels இவை நான் பயன்படுத்திய பிரஸ்களின் பெயர்கள். கோட்டோவியம் வரைந்தது முதல் இறுதிக் கட்டம் வரை சிறு புகைப்பட தொகுப்பாக தந்துள்ளேன். இந்த இடுகையை வைத்துக் கொண்டு ஓவியம் வரைந்துவிட இயலாது என்று நினைத்துவிடாதீர்கள். படிப்படியாக விளக்கம் சொல்லும் அளவிற்கு இந்த ஓவியம் பெரிய விசயமில்லை. என்னுடைய பழைய இடுகையில் Try and try,one day …. என்று நண்பர் K.V.Rudra வழிகாட்டியிருந்தார். அவர் சொல்படி இது சாத்தியமாயிருக்கிறது என்றே மகிழ்கிறேன்.

டிஜிட்டல் 1

டிஜிட்டல் 2

டிஜிட்டல் 3

டிஜிட்டல் 4

மேலும் –

பிளிக்கர் இணையதளத்தில் எனது ஓவியங்கள்

தி பேட்மேன் – அனிமேசன் தொடரின் முதல் சீசன்

அலுவகத்திற்கு செல்லும் போதும், சென்றுவிட்டு திரும்பும் போதும் என் காதுகளில் இப்போதெல்லாம் பொன்னியின் செல்வன் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அத்துடன் பொன்னியின் செல்வன் கதைப்பாத்தரங்களை விக்கிப்பீடியாவில் ஆவனப்படுத்திக் கொண்டிருக்கிறேன். எண்ணற்ற தமிழார்வளர்கள் இயங்குமிடத்தில் இத்தனைகாலம் இவைகளை எழுதாமல் வைத்திருந்ததே ஆச்சரியம். (எனக்காகவே விட்டு வைத்திருக்கின்றார்கள் என்று நினைத்துக் கொள்வேன்). புத்தகத்தினை முழுவதுமாக படித்துவிட்டு சகோதரன் வலைப்பூவில் எழுதலாம், அதுவரை வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன். வலையுலகில் பொன்னியின் செல்வனை ஏழுவயதிலேயே படித்தவர்களெல்லாம் இருக்கும் போது, அரைகுறையாய் படித்துவிட்டு ஏதேனும் சொன்னால் கடித்தே தின்றுவிடுவார்கள். :-). அதனால் இப்போதைக்கு பேட்மேனை தொல்லை செய்வோம்.

சூப்பர் ஹீரோக்கள் என்று ஆயிரம் பேர் வந்தாலும், பேட்மேனை போல வசீகரி்க்க கூடிய கதாப்பாத்திரம் யாருமேயில்லை. “மனிதர்களுக்கு சூப்பர் பவர் வந்தபின்பு அதனை சமூகத்திற்காக பயன்படுத்துவது” என்ற ஒற்றை வரியை புறக்கணித்து மக்களுக்கு நன்மை செய்வதற்காக ஒரு மனிதன் தன்னுடைய அறிவினையும், உழைப்பினையும், பணத்தினையும் செலவிட்டு சூப்பர் ஹீரோ பேட்மேனாக ஆவது போல உருவாக்கியமைக்காக பாப் கானேவிற்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும். “அவனுக்கென்னப்பா, சூப்பர் பவர் இருக்கு” என்று அடிமனதில் எழுகின்ற வேற்றுமை உணர்வு சூப்பர் ஹீரோக்களை ஏற்றுக் கொள்ளவிடாமல் செய்துவிடுகிறது. ஆனால் பேட்மேன் நம்மைப் போல ஒரு மனிதன் என்ற சிந்தனையை பேட்மேனை அருகே அழைத்துவருகிறது.

அனிமேசன்களை அறிந்தவர்களுக்கு வார்னர் பிரதர்சை நிச்சயம் தெரிந்திருக்கும், தி பேட்மேன் என்ற தொலைக்காட்சி தொடரை அவர்கள் உருவாக்கி தந்திருக்கிறார்கள். டபள்யூ.பி, பூமரங், கார்ட்டூன் நெட்வொர்க் என பல்வேறு இடங்களுக்கெல்லாம் சென்று இறுதியில் இணையத்தினை அடைந்திருக்கிறது அந்த தொகுப்பு. தற்போது இரவு நேரங்களில் குறைந்தது இரண்டு அத்தியாயங்களையாவது பார்த்துவி்ட்டுதான் உறங்குகிறேன். ஆறு எம்மி விருதுகளை வென்ற இத்தொடரின் ஓவியமுறையும் வெகு நேர்த்தியாக உள்ளது. ஒரு அத்தியாயத்தினை எடுத்துக் கொண்டால் அரைமணிநேரம் ஓடுகிறது. தொடக்கத்தில் ஒரு வில்லனின் வெற்றி, அதன்பின் பேட்மேனின் சாகசங்கள், இறுதியில் சுபம். இதுதான் கான்செப்ட்.

முதல் அத்தியாத்திலேயே பேட்மேனின் ஆரம்பகால வாழ்க்கையும், ஏன் பேட்மேனாக ஆனார் என்றும் சொல்லாமலேயே அதிரடியாக சாகசங்களுக்குள் நுழைந்துவிடுகிறது. அதனால் பேட்மேனின் குறைந்தபட்ச அறிவுடைவர்களுக்கு குதுகலமாக இருக்கும். மற்றவர்களுக்கு கொஞ்சம் சிரமம்தான்.

ப்ரூஸ் வேனே –
ப்ரூஸ் வேனே கௌதம் நகரில் வசிக்கும் பெரும் பணக்காரர்களில் ஒருவர். ப்ரூஸ் சிறுபிள்ளையாய் இருக்கும் போது, சாலையோர திருடன் ஒருவனால் தன் பெற்றோர்கள் கொல்லப்படுவதை பார்க்கிறார். வளர்ந்து பெரியவனாகியதும், நகரில் நடக்கும் குற்றங்களை தடுப்பதற்கு முடிவு செய்கிறார். பேட்மேன் என்ற சூப்பர் ஹீரோவாக தன்னைதானே மாற்றிக் கொள்கிறார். மற்றவர்களுக்கு தன் பெயரில் சந்தேகம் உண்டாகமல் இருப்பதற்காக இளம் பெண்களுடன் சேர்ந்து கும்மளம் அடித்து ப்ளேபாய் இமேஜை ஏற்படுத்துகிறார். மற்ற சூப்பர் ஹீரோக்கள் எல்லாம் பெண்களுக்காக அலைந்து திரிய, ப்ளூசை சுற்றி சுற்றி வருகிறார்கள் பெண்கள்.

ஆல்பிரட் பென்னிவொர்த் –
ஆல்பிரட் பென்னிவொர்த் பெற்றோர் இழந்த ப்ரூசை வளர்க்கின்றார். சமையல்காரராக இருந்தாலும், ப்ரூசின் வளர்ப்பு தந்தையாக ஆலோசனைகள் சொல்கிறார். இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவராக இருப்பதால், மருத்துவ உதவிகளையும், புதுபுது உபகரனங்களையும் பேட்மேனுக்கு செய்கிறார். இது பேட்மேன் திரைப்படங்களில் டம்பி பீசாக சித்தரித்த ஆல்பிரடை முற்றிலும் மாறுபட்டதாக காட்டுகிறது. அவருடைய மீசை வசீகரிக்ககூடியது.

இவர்களைத்தவிற பேட்மேனை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பெண் காவலர் , அவருடன் இணைந்திருக்கும் ப்ரூசின் நண்பர் முதல் சீரியஸ் முழுவதும் பயணிக்கின்றார்கள். மொத்தமாக 13 அத்தியாங்களைக் கொண்ட தி பேட்மேன் முதல் சீசன், செப்டம்பர் 2004 முதல் மே 2005 வரை வெளிவந்ததாம்.

[1]- The Bat in the Belfry –
பேட்மேன் வில்லன்களில் பிரபலமான ஜோக்கர் வருகின்ற அத்தியாயம். அசத்தலான உடலமைப்பும், வேகமான செயல்பாடுகளும் ஜோக்கரை பிரதான வில்லாக ஏற்றுக் கொள்ள வைக்கும். ஏன் எதற்கு என்று தெரியாமலேயே மற்றவர்களையும் தன்னைப் போல ஆக்க வேண்டும் என்பதே ஜோக்கரின் மகத்தான சிந்தனை. இந்த அத்தியாயத்தில் ரசாயனயத்தினை நகரெங்கும் பரப்ப திட்டமிருகிறார்.
[2]- Traction –
பேட்மேன் ரைசஸ் படத்தில் பெயினை ஏன் அப்படி சொத்தையாக காட்டினார்கள் என்று தெரியவில்லை. முகமூடி அணிந்த கொடூரன் என்றே அறிந்த பெயின் சாமான்ய உருவில் வந்து, தன்னுள் ரசாயனத்தினை ஏற்றி ஹல்க் போல பெரியதாக மாறிவிடுவது ரசிக்க கூடியது.
[3]- Call of the Cobblepot –
பேட்மேன் வில்லன்களில் செம நகைச்சுவையான கதாப்பாத்திரம் பெங்குவினுடையது. பார்ப்பதற்கு மட்டுமே நம்மூர் வடிவேலைப் போல பெங்குவின் காமெடியான ஆள். ஆனால் பறவைகளை வசியம் செய்து அவைகள் திருடிக் கொண்டவர நோகமல் பணக்காரன் ஆகிறார். புரூஸ் வேனேயின் வீட்டிற்கு அழையா விருந்தாளியாக சென்று அவர் பார்டிக்கு வருகின்றவர்களின் பட்டியலை எடுத்து ஆட்டையைப் போடுவது புத்திசாலித்தனமான யோசனை.
[4] – The Man Who Would Be Bat –
பேட்மேன் வவ்வாலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தாலும், மனிதனை வவ்வாலாக மாற்றினால் ரசிக்க முடியாது என்பதை அழகாக சொல்லும் அத்தியாயம் இது. ஒரு விஞ்ஞானி இரவுபகலாக வவ்வால் ஆய்வு செய்து வவ்வாலாக மாறி பேட்மேனுடன் யார் நிஜ வவ்வால் மனிதன் என்று சண்டை போடுவதுதான் நாட்.
[5]- The Big Chill –
ஒரு சாதாரண திருடனை பேட்மேன் துரத்திப் போக, அவன் ஆய்வுக்கூடத்தில் சிக்கிக் கொள்கிறான். அதன் பிறகு பனிக்கட்டியாக்கும் பெரிய சக்தி அவனுக்கு கிடைத்துவிடுகிறது. தன்னைத்தானே பிக் சில் என்று அழைத்துக் கொள்ளும் அவனிடம் பேட்மேன் மாட்டிக் கொண்டு படாதபாடு படுகிறார். வேலைக்காரனாக வரும் ஆல்பர்ட் உறைபனியில் இருந்து காக்கும் வகையில் பேட்மேன் உடுப்பினை தயாரித்து தருவது கைதட்ட வைக்கும் காட்சி.
[6]- The Cat and the Bat –
ஆண்களே ஆக்கிரமிப்பு செய்திருந்த காமிக்ஸ் உலகில் வருகின்ற சில பெண்கள் கேட்வுமனும் ஒருத்தி. இவள் நல்லவளா கெட்டவளா என்று கண்டுபிடிப்பதற்கே பெரியதாக கஷ்டப்படனும். இந்த அத்தியாத்தில் பேட்மேனின் இடைக்கச்சையை அபேஸ் செய்துவிடுகிறார் கேட்வுமன். அது என்ன செய்யும் என்று அலசிபார்க்கும் போது, பேட்மேன் படுகின்ற சிரமம் சிரிப்பை வரவைக்கும்.
[7]- The Big Heat –
பயர்பிளை பேட்மேன் திரைப்படம் பார்த்தவர்களுக்கு அறிமுகமான நபர்தான். திரையில் வரும் அதே காட்சிகள் இந்த அத்தியாத்திலும் வருகின்றன. தேனியைப் போல ஆடை அணிந்திருப்பதும், மிக வேகமாக ஜெட்பேக்கினை உபயோகித்து செல்லும் போது வளைந்து நெளிந்து தங்ககோடு போல் வானத்தில் தெரிவதை ரசிக்காமல் இருக்க முடியாது.
[8]- Q and A –
தனக்கு எல்லாமே தெரியும் என்று நம்பிக்கையோடு இருப்பவனை தோல்வி என்ன செய்யும் என்பதை விளக்கும் பகுதி. அவனை பலத்தின் மூலம் வெல்லாமல் “உனக்கு நான் யார் என்ற உண்மை தெரியுமா ?” எனக் பேட்மேன் கேட்டு திகைக்க செய்யும் காட்சி அற்புதம்.
[9]- The Big Dummy –
பொம்மையை வைத்து மக்களை மகிழ்விக்கும் ஒரு கலைஞனுக்கு, தனக்குள் இருக்கும் மற்றொரு பர்சனாலிட்டி செய்வதை தடுக்க முடியவில்லை. எல்லாமே பொம்மைதான் செய்கிறது, அதுதான் எஜமானன் என்று நம்ப ஆரமித்துவிடுதலின் விளைவே இந்த அத்தியாயம்.
[10] – Topsy Turvy –
ஜோக்கர் மீண்டும் வருகிறார். சிறையிலிருக்கும் ஜோக்கரை வெளியில் கண்டவுடன் அவரை சந்திக்க சிறைக்கே செல்கிறார் பேட்மேன். பேட்மேனை சிறைக்குள் வைத்துவிட்டு ஜோக்கர் தப்பிவிடுகிறான். அவனுடைய புதிய கண்டுபிடிப்பு நபர்களை சீட்டுக் கட்டு கார்டாக மாற்றுவது. துப்பறியும் புலியான என் மாட்டிக் கொள்வதும், ஜோக்கரே கார்டாக மாறுவதும் அட்டகாசமான சிந்தனை.
[11]- Bird of Prey –
பெங்குவின் பெரிய பணக்காரனாக இம்முறை புரூஸ் வேனேயின் வீட்டிற்கு வந்து ஆல்பர்டை கட்டிவைத்துவிடுகிறான். பேட்மேனாக புரூஸ் வந்ததும், அவரையும் பிடித்துவிடுகிறான். தொலைக்காட்சியில் புரூஸின் வாழ்க்கையை வெளியுலகிற்கு காட்ட வருகின்ற நிருபரும் ஒளிப்பதிவாளரும், பெங்குவினை படம் பிடிக்கின்றார்கள். யார் பேட்மேன் என்ற காட்டுவதாக கூறி முகமூடியை அவிக்க பார்க்கையில் ஆல்பர்ட் உதவுகிறார். அத்துடன் புரூஸ்தான் பேட்மேனாக இருக்க முடியும் என்று அந்த பெண் நிருபர் நினைக்கில் புரூஸூம் பேட்மேனும் ஒரே நேரத்தில் காட்சி தருகிறார்கள்.
[12]- The Rubberface of Comedy –
ஜோக்கரின் புதிய கண்டுபிடிப்பு எந்தபொருளையும் ரப்பராக மாற்றுகிறது. சுகந்தர தேவி சிலையைப்போல வாள் ஏந்த ஒரு பெண் தெய்வத்தின் சிலையை கௌதம் நகரில் கட்டமைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதன் முகத்தினை தன்னுடைய உருவம் போல மாற்றிவிடுகிறார் ஜோக்கர்.
[13] – Clayface of Tragedy –
சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி, ஜோக்கர் கண்டுபிடிக்கும் ரப்பராக மாற்றுகின்ற ரசாயனத்தின் நெடி துப்பறியும் நபரான ஈதேன் முகத்தில் படுகிறது. அதன் விளைவாக ஈதேன் நினைத்த உருவத்தினை எடுக்கும் நபராக மாறிவிடுகிறார். தன்னை வெறுக்கும் மேலதிகாரியை கொல்ல துணிந்ததால், ஈதேன்தான் க்ளேபேஸ் என்பதை அவருடம் துப்பறியும் பெண்ணும், புரூசும் அறிந்துகொள்கின்றார்கள்.

அடுத்த சீசனை முடித்துவிட்டு வரும்வரை பேட்மேன் நிம்மதியாக இருக்கலாம், நீங்களும்தான். 🙂