பொன்னியின் செல்வனுக்குப் பிறகு மீண்டும் கல்கியுடைய புதினமான மோகத்தீவைனை படித்தேன். இரண்டு நாள் மின்சார ரயில் பயணத்திலேயே புதினம் முடிந்துவிட்டது. பத்தே அத்தியாங்களில் சோழ பாண்டிய தேசத்தின் காதல் கதையை கல்கி புனைவாக கொடுத்துள்ளார். சோழ அரசனாக உத்தம சோழனை குறிப்பிடுவதால் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்றுப் புனைவோ என்ற ஐயம் ஏற்பட்டது. ஆனால் உத்தம சோழனுக்குப் பிறகு ராஜராஜனும், அவன் சந்ததிகளும் மட்டுமே ஆட்சி செய்தார்கள். இந்த புதினத்தில் உத்தம சோழனுக்கு மகன்கள் இருப்பதை பற்றியும், இராஜராஜனின் பெரிய கோவில் காலத்திற்கு பிறகு என்று கதை வருவதால் படிக்கும் போதே இப்புதினம் முழுமையான கற்பனை என்பதை அறிய முடிந்தது.

பாஸ்கர கவிராயரிடம் கதை கூறும் காதலர்கள்
திரையரங்கில் பாஸ்கர கவிராயர் என்ற நபரை சந்திக்கிறார் ஒருவர். இருவரும் கடற்கரைக்கு சென்று அங்கு பேசுகிறார்கள். பாஸ்கர கவிராயர் பர்மாவிலிருந்து இந்தியாவிற்கு கப்பலில் வரும்போது, மோகினி தீவில் ஒரு இரவு தங்கியதாகவும், அந்த இரவில் ஒரு இளைஞனும், இளைஞியும் அவரிடம் கதையொன்றை தெரிவித்து மறைந்ததாகவும் கூறுகிறார்.
மோகினித் தீவு –
பராக்கிரம பாண்டியன் மதுரையை தலைநகராக கொண்டு ஆட்சி செய்கிற பாளையக்கார மன்னன். பாண்டிய வம்சத்தவன் இல்லை என்ற மனக்கவலையில் உள்ளவன். பழமையான ராஜகுலத்தில் பிறந்தவனை தன்னுடைய ஒரே மகளான புவனமோகினியை திருமணம் செய்துவைக்க எண்ணுகிறான். அதற்காக தஞ்சை சென்று சோழ விருந்தினராக தங்குகிறான். உத்தம சோழ அரசனுக்கு இரண்டு மகன்கள். முதல் மகன் சுகுமாரன் பட்டத்து இளவரசன். இரண்டாவது மகன் ஆதித்தன்.
சுகுமாரனுக்கு தன்னுடைய மகளை திருமணம் செய்துவிக்கும் ஆசையை உத்தம சோழனின் தெரிவிக்கிறான், பராக்கிரம பாண்டியன். குமரியிலிருந்து திருச்சிவரை பாண்டிய ராஜ்ஜியம் விரிந்து கிடக்கிறது. எண்ணற்ற படைவீரர்களை கொண்ட பெரும் படை பாண்டியனிடம் இருக்கிறது. ஆனால் குலப்பெருமை இல்லை. தஞ்சையை சுற்றிய சில நகரங்களை மட்டுமே உத்தம சோழன் ஆண்டாலும், அவனுக்கு குலப்பெருமையை நினைத்து கர்வம் உண்டு. அதனால் பாண்டியனின் ஆசையை எள்ளி நகையாடுகிறான். அத்துடன் பாண்டியன் மகளை குற்றேவல் புரியும் பணியாளாக வேண்டுமானால் சோழ அரண்மனையில் இருக்கலாம், பட்டத்தரசியாக இருக்க தகுதியில்லை என்று கிண்டல் செய்கிறான். அதனை கேட்ட பாண்டிய மன்னன் கோபம் கொள்கிறான். பெரும் படை திரட்டி தஞ்சையை கைப்பற்றுகிறான். உத்தம சோழரை தனது தேர்க்காலில் மாட்டி ஊர்வலமாக அழைத்துச் செல்கிறான். அதனை அரண்மனை மாடத்திலிருந்து கண்ட இளவரசி புவனமோகினி வருந்துகிறாள். பாண்டியன் உத்தமசோழரை சிறையில் அடைக்கின்றான். அச்சமயம் அவரின் இருமகன்களும் கொல்லிமலைக்கு சென்று பாதுகாப்பாக இருக்கின்றார்கள். உத்தம சோழரை சிறையிலிருந்து மீட்க செல்வது யாரென அவர்களுக்குள் பிரட்சனையாகிறது. அதை தவிர்க்க அதிக தூரம் வேல் எறிகின்ற போட்டி வைக்கின்றார்கள். அதில் பட்டத்து இளவரசன் சுகுமாறன் வெற்றிபெருகிறான். தந்தையை சிறையிலிருந்து மீட்க மதுரை சென்றவன் மதிவாணன் என்ற மாறுவேடத்தில் தேவேந்திர சிற்பியிடம் மாணவனாக சேர்கிறான்.
புவனமோகினிக்கு சிற்ப கலையில் ஆர்வம் அதிகம் என்பதால் தேவேந்திர சிற்பியின் சிற்பக் கூடத்திற்கு அடிக்கடி வருகிறாள். அவளை சந்திப்பதை தவிர்க்க மதிவாணன் பெண்களிடம் பேசுவதில்லை என்ற விரதம் பூண்டிருப்பதாக தேவேந்திர சிற்பியிடம் கூறுகிறான். சீடனின் விரதத்தினை இளவரசியிடம் கூறி அவனை சந்திக்கவிடாமல் செய்கிறார் குரு. மதிவாணன் வடித்த ஜீவனுள்ள சிற்பங்களும், தேவேந்திர சிற்பி, பணிப்பெண் பாராட்டுகளும் இளவரசிக்கு அவனை சந்திக்க வேண்டுமென்ற ஆவலை துண்டுகின்றன. அதனால் தந்திரமாக தேவேந்திர சிற்பியின் தமையன் மகன் கோவிந்தன் என்று ஆண்வேடமிட்டு அவனை சந்திக்கின்றாள். தன்னை மதிவாணன் தொட்டுப்பேசி சங்கடம் தரக்கூடாது என்பதற்காக தானும் ஒரு விரதம் இருப்பதாக பொய்யுரைக்கின்றாள்.
பாண்டிய இளவரசியும், சோழ இளவரசனும் தங்களுடைய உண்மைகளை மறைத்து வைத்து பழகினாலும், இனிமையான குணத்தினாலும், சிற்ப ஆர்வத்தினாலும் நட்பாகின்றார்கள். சோழ யுவன் ஒருவன் சிற்பக் கூடத்தில் இருப்பதை அறிந்து ஒற்றர் தலைவன் தினகரன் சந்தேகம் கொள்கின்றான். ஒரு முறை கோவிந்தன் வேடத்தில் இருக்கும் புவனமோகினிடம் கடுமையாக நடந்து கொள்ளும் போது, இளவரசி என்பதை அறிந்துகொள்கிறான். அதன் பிறகு பாண்டிய மன்னின் ஊர்வலம் நடக்கும் போது அதில் புவனமோகினியை கண்டு கோவிந்தன் என்ற மாறுவேடத்தில் வந்ததது அவள்தான் என மதிவாணன் அறிகிறான். உத்தம சோழரிடம் செப்பு சிற்பம் வார்க்கும் ரகசியம் அறிய வேண்டுமென்று பொய்யுரைத்து புவனமோகினிடம் முத்திரை மோதிரத்தை பெற்றுக் கொள்கிறான்.

புவன மோகினிடம் தாதிப்பெண் மோதிரம் கொடுத்தல்
சந்தேகம் கொண்டு சிற்பக்கூடத்தினை சுற்றிவரும் தினகரனுடன் சிறைகூடம் சென்று அங்கு அவனை சிறைபடுத்துவிட்டு உத்தம சோழருடன் பாண்டிய எல்லையை கடக்கிறான் சுகுமாறன். விரைந்து பாண்டிய நாட்டின் மீது படையெடுக்கிறான். உத்தம சோழனை சிறைகூடத்தில் சந்திக்க செல்லும் இளவரசி தன்னை மதிவாணன் என்று ஏமாற்றிவிட்டதை அறிந்து சுகுமாறன் மேல் கோபம் கொள்கிறாள். பராக்கிரம பாண்டியன் உடல்நிலை குன்றியிருப்பதால், புவனமோகினியே படைக்கு தலைமைதாங்கி வருகிறாள். போர்நடக்கும் போதே பாண்டியன் இறந்துவிட, சுகுமாறன் புவனமோகியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக உத்தம சோழரிடம் அனுமதி கேட்கிறான். ஆனால் உத்தம சோழன் மறுத்துவிடுகிறான். புவனமோகினியை சிறைபடுத்திவரும் சுகுமாறனிடம் அவள் காதலித்தது சிற்பி மதிவாணனை தான் என்பதை தெரிவிக்கின்றாள். இளவரசனாக அல்லாமல் சிற்பியாக இருந்தால் புவனமோகினி தன்னை ஏற்றுக் கொள்வாள் என்பதால் ஆதித்தனுக்கு பட்டம் கட்டிவிட்டு, படைவீரர்கள், தேவேந்திரன் முதலிய சிற்ப கலைஞர்களோடு கப்பலில் புறப்படுகிறான். ஆயுதங்கள் அனைத்தையும் கடலில் போட்டுவிட்டு ஆளில்லா தீவொன்றை அடைந்து அனைவரும் நிம்மதியாக வாழ்கின்றார்கள். காலத்தால் அழியாத சிற்பங்களை வடிக்கின்றார்கள். புவன மோகனியும், சுகுமாறனும் அத்தீவுக்கு வருகின்ற நபர்களிடம் தங்களுடைய காதல் கதையை சொல்லி களிப்புருகின்றார்கள்.
சில இடங்களில் பொன்னியின் செல்வனை ஞாபகம் செய்தாலும், மோகினித்தீவு அருமையான நாவல்.
மேலும் –