கோரதெய்வ வழிபாடு ஏற்புக்குரியதா? – என் கேள்வியும் ஜெமோ பதிலும்

11

அன்பு ஜெ,

சமயம் சார்ந்த வழிகாட்டுதல்களுக்கு உங்கள் தளம் மிகவும் உகந்ததாக இருக்கிறது. நாளும் சமயம் குறித்தான கேள்விகள் சீடர்கள் தங்களின் குருவிடம் கேட்பது போல உங்களிடம் கேட்டு தெளிவு பெறுகிறோம். படைப்புகளைத் தவிர்த்து இவ்வாறு வாசகர்கள் எங்களுடன் நீங்கள் இணைந்தே இருப்பது. எங்கள் பேறு.

உறையூர் குங்குமவல்லித்தாயார் உடனுறை தான்தோன்றீஸ்வரர் கோயிலுக்குச் சென்றிருந்தேன். அக்கோயின் பிரகாரத்திலேயே, கோரதெய்வங்களான பிருத்தியங்கரா தேவி, வராகி, அட்ட பைரவர்கள், ஆகாயகாளி, பூமாகாளி, பாதாளகாளி போன்ற தெய்வங்கள் இருந்தன. அந்தத் தெய்வங்களில் பிருத்தியங்கரா தேவியின் கோர ரூபம் இன்னும் கண்களிலேயே இருக்கிறது.

ஒரு காலத்தில் வழிபடப்பட்டதாக கூறப்பட்ட இந்த தெய்வங்கள் மீண்டும் எழுச்சி பெற்று பொது மக்களால் வழிபடக்கூடிய அளவிற்கு சென்றுள்ளன. சில நாட்கள் முன் முகநூலில் கீழ் இணைத்துள்ள விளம்பரப் பதாகை கண்களில் பட்டது. கோவிலுக்கு வருகின்றவர்கள், வேம்பினை கொண்டுவாருங்கள் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆயிரமாயிரம் தெய்வங்கள் உள்ள இந்து சமயத்தில் இந்த கோர தெய்வ வழிபாடு ஏற்புக்குறியதா? தற்போது சிவாலயங்களில் மட்டுமல்லாது, திருமால் ஆலையங்களிலும் சொர்ண ஆகர்சன பைரவரை வைத்து அட்டமி நாளில் சிறப்பு வழிபாடு செய்கின்றனர். மூல நாதனை மறந்து இப்படி ஏவல், காவல் தெய்வங்களை வழிபடும் போக்கு தற்காலத்தில் பெருகியுள்ளது ஆன்மீக எழுச்சியை வலியுறுத்துகிறதா? மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு இறையை தேடுவது காட்டுகிறதா? இதனை எவ்வாறு நீங்கள் காண்கின்றீர்கள் என்பதை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.

நன்றி.

ஜெகதீஸ்வரன் நடராஜன்

***

அன்புள்ள ஜெகதீஸ்வரன்

தெய்வம் என உருவகிக்கத் தொடங்கிவிட்டபின் பேரியற்கையில் நாம் அறியும் எல்லா ஆற்றல் வடிவங்களையும் தெய்வமாக உருவகிக்கத்தான் செய்வோம். இது உலகம் முழுக்க அனைத்து மதங்களிலும் உள்ளதுதான். தூய தத்துவ மதங்களான சமணம், பௌத்தம், அத்வைதம், கன்ஃபூஷியம், தாவோயியம் போன்றவை விதிவிலக்கு.

ஏ.எல்.பாஷாமின் The Wonder That Was India முக்கியமான ஒரு விடையை அளிக்கிறது. இந்தியாவில் வங்கம், ஒரிசா, கடலோர ஆந்திரம், கேரளம் ஆகிய கடற்கரை மாநிலங்களில் சாக்தம் வலுவாக இருக்கிறது. காரணம், இயற்கையின் கோரத்தாக்குதல் இப்பகுதிகளில் அதிகம். வருடந்தோறும் புயல் வீசும் பகுதிகள் இவை. [கடலோரத் தஞ்சையும் இதில் சேர்க்கலாம்]

இயற்கையை கருணைகொண்ட அன்னையாக, அமுதூட்டி காப்பவளாக அறிகிறான் மனிதன். கூடவே இரக்கமே அற்ற கொடூர அழிவுசக்தியாகவும் காண்கிறான். இந்த இரு முகங்களையும் இணைத்துத்தான் காளி என்னும் உருவகம் உருவாகியது. எங்கும் அது உள்ளது, ஆனால் இப்பகுதிகளில் வலுவாக இருக்கிறது.

ஆக, தெய்வ உருவகம் மனிதனால் திட்டமிட்டு உருவாக்கப்படுவதல்ல. இயற்கையிலிருந்து அவன் தன் ஆதிநுண்ணுணர்வால் அடையப்பெற்றது. தொன்மையான பழங்குடி வாழ்க்கையிலிருந்து மெல்லமெல்ல வளர்த்தெடுத்தது. பழங்குடிவாழ்க்கையில் வேர் இல்லாத தெய்வமே இருக்கமுடியாது.

பழங்குடிகளின் பெரும்பாலான தெய்வங்கள் உக்கிரரூபம் கொண்டவை. நோய், இயற்கைச்சீற்றம் ஆகிய வடிவில் தன்னைக் காட்டும் மனிதனை மீறிய பேராற்றலை தெய்வமென உருவகித்தனர். கூடவே அவற்றிலிருந்து காத்து ஆண்டு அருளும் தெய்வங்களையும் உருவகித்தனர். இருவகை தெய்வங்களும் எல்லா தொன்மையான பண்பாடுகளிலும் உள்ளன. சாஸ்தா தவிர நம் நாட்டார் தெய்வங்கள் அனைத்துமெ உக்கிரரூபம் கொண்டவை அல்லவா?

பின்னர் அத்தெய்வங்கல் மேலும் மேலும் குறியீட்டு ரீதியாக விரிவாக்கம் செய்யப்பட்டன. அவற்றின் உருவம் முறைப்படுத்தப்பட்டது. அவற்றின் வழிபாடு வகுக்கப்பட்டது. அவற்றுக்கு தத்துவார்த்த விளக்கங்கள் அளிக்கப்பட்டன புராணங்கள் உருவாயின. அவை இன்றைய தெய்வங்களாக மாறின. இன்றைய எல்லா தெய்வங்களும் அவ்வாறு பல்லாயிரமாண்டுகளாகப் பரிணாமம் பெற்றவைதான்.

இந்த தொன்மையான தெய்வ உருவகங்கள் பின்னாளில் பெருந்தெய்வமாக மாறியபோதும்கூட அவற்றில் இந்த இரட்டைமுகம் இருப்பதைக் காணலாம். உலகாளும் விஷ்ணு ஒருமுகம் உக்கிரநரசிம்மர் மறுமுகம். ருத்ரனும் உமாமகேஸ்வரனும் ஒரே தெய்வம்தானே?

இந்திய புத்தமதத்தில் கோரத்தெய்வம் இல்லை. ஆனால் திபெத்திய பௌத்தம் பலநூற்றாண்டுகளுக்குப்பின் பல கோரத்தெய்வங்களை உருவாக்கிக்கொண்டது. கோரத்தோற்றம் கொண்ட காலதேவர், போதிசத்வர்கள் திபெத்திய, சீன, தாய்லாந்து, கம்போடிய பௌத்தத்தில் உண்டு. திபெத்திய வஜ்ராயன பௌத்தத்தில் கொடூரமான தோற்றம் கொண்ட புத்தரின் தோற்றம்கூட வழிபடப்படுகிறது.

கிறித்தவர்களின் ஜெகோவாவும் சரி இஸ்லாமியர்களின் அல்லாவும் சரி சீற்றம் கொண்டு தண்டிக்கும் தெய்வங்களும் கூட. மேலே சொன்ன விளம்பரத்தைப்போலத்தான் குமரிமாவட்ட கிறித்தவர்களின் கன்வென்ஷன் விளம்பரங்களும் இருக்கும். கிட்டத்தட்ட இதே வாசகங்கள் காணப்படும்.

இந்த தெய்வங்களின் நடைமுறைப் பயன்கள் என்ன? ஒன்று, மனிதனின் அச்சத்திற்கு இவை காப்பு. மானுடர் மிக எளியவர். தன்னம்பிக்கை, ஆணவம், அறிவுஜீவித்தோரணை ஆகிய அனைத்துக்கும் அடியில் அவர்கள் அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். பதற்றத்தில் இருக்கிறார்கள். நிலையின்மையை, நோயை, மரணத்தை, காலப்பெருவெளியை எண்ணி அலைக்கழிகிறார்கள்.

அந்த அச்சமே தெய்வங்களை நோக்கிச் செலுத்துகிறது. கோரத்தோற்றமுடைய தண்டிக்கும் தெய்வங்கள் தங்களுக்கு காப்பாகும் என அவர்களின் ஆழ்மனம் நம்புகிறது. பெரியபேச்சு பேசியவர்கள்கூட ஒரு இக்கட்டில் சட்டென்று சரணடைந்துவிடுவதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.

இரண்டாவதாக, இக்கோரதெய்வங்கள் மனிதன் தன் ஆழத்தில் உறையும் உக்கிரத்தை, ஆதிவிசையைக் கண்டடைய உதவிகரமாக உள்ளன. பிரத்யங்காரா போர்த்தெய்வம். உயிர்கொடுக்கக் களம்செல்லும் ஒருவீரனுக்கு அதற்கான வீரியத்தை அளிப்பவள். அவள் சாந்தமாக இருக்கமுடியுமா என்ன?

என் அனுபவத்தில் பல நிகழ்வுகளைச் சொல்லமுடியும். ஒன்று ஒருநண்பர் அணுக்கமான இருவரின் அவமரணத்திற்குப்பின் ஆழமான அக அதிர்ச்சிக்கு உள்ளாகி நரம்புப்பதற்றம் அடைந்த நிலையில் இருந்தார். அவர் வைணவப்பின்னணி கொண்டவர், மார்க்சியர். நான் அவரிடம் அவர் அகோரநரசிம்மரை வழிபடலாம் என்றேன். நூல்களில் அதுதான் சொல்லப்பட்டிருக்கிறது என்றேன்.

அதை ஒரு சம்பிரதாய வைணவர் சொல்லியிருக்கக்கூடும். நான் சி.ஜி.யுங்கை எல்லாம் மேற்கோள் காட்டி விளக்கினேன். அது ஓர் ஆழ்மனப் பயிற்சி என சொன்னேன். அவர் நூற்றெட்டுநாள் அகோரநரசிம்மரை வழிபட்டார். அவர் மீண்ட விதம் எனக்கே பிரமிப்பூட்டியது. குறியீடுகளின் வல்லமை அப்படிப்பட்டது. அவை நம்மை நாமறியாத வரலாற்று ஆழத்துக்குக் கொண்டுசெல்கின்றன. பண்பாட்டின் விசை முழுக்க அவற்றில் அடங்கியிருக்கிறது.

இன்னொரு அனுபவம் பிரத்யங்காரா தேவி. ஒருவரை கும்பகோணம் அருகே உள்ள பிரத்யங்கரா தேவியை  வழிபடும்படி ஓரிரு நூல்களை மேற்கோள்காட்டிச் சொன்னேன். அவர் மரபில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். ஒரு முக்கியமான வணிகமுடிவு எடுப்பதற்கு முன் தயங்கிக்கொண்டிருந்தார் அவர் துணிவுகொள்ளவும் போர்வேகம் கொள்ளவும் அவ்வழிபாடு உதவுவதை கண்டேன்.

ஆக கோரதெய்வங்கள் இருந்துகொண்டே இருக்கும். ஏனென்றால் அழகு, அருள்,நன்மை மட்டும் அல்ல இயற்கையில்  தெய்வவெளிப்பாடாக நாம் காண்பது. கோரம், அழிவு, தீமை ஆகியவையும்தான். ஒருவர் தெய்வம் என ஒன்றை மட்டும் பார்த்தார் என்றால் அவர் உண்மையின் ஒருபக்கத்தை மட்டுமே பார்க்கிறார். எங்கோ ஒரு புள்ளியில் அவர் ஏமாற்றத்தில் முட்டிக்கொண்டு மண்டையை உடைத்துக்கொள்வார்

கடைசியாக இரண்டு விஷயங்கள்.

ஒன்று: ஒருவருக்கு கோரமாகத் தெரிவது இன்னொருவருக்கு அப்படித் தெரியாமலிருக்கும். நீங்கள் சொல்லியிருக்கும் வராகி பன்றிமுகம் கொண்ட தேவதை. பழங்காலத்தில் மிக மங்கலமான தேவதையாக கருதப்பட்டாள். பன்றி நிலத்தை உழுவது. மேழி போன்ற முகம் கொண்டது. எனவே வளத்தின் குறியீடு.

அன்றெல்லாம் பன்றி நாம் இன்றுகொடுக்கும் எதிர்மறை அடையாளம் கொண்டது அல்ல. அன்றைய இந்தியப்பார்வையில் கருமை அழகு எனக் கருதப்பட்டது. பன்றி அழகும் ஆற்றலும் கொண்டது. வளம் நிறைப்பது. ஆகவே வழிபடப்பட்டது. பெருமாள் கூட பன்றியுருவத்தில் வராகராக வழிபடப்படுகிறார்

அதேபோல நாம் மங்கலமாகக் கருதும் யானைமுகப் பிள்ளையார், குரங்குமுக அனுமார் போன்ற தெய்வங்கள் ஐரோப்பியருக்கு அச்சமும் அருவருப்பும் ஊட்டும் வடிவங்களாகத் தெரிகின்றன.

இதைப்பற்றி ஒரு வெள்ளையர் கேட்ட கேள்விக்கு ஓஷோ ஒரு பதிலை அளித்தார். ஒரு கிறித்தவத் தம்பதியினர் சீனாவுக்குச் சென்றார்கள். அங்கே அவர்கள் சீனர்களின் பௌத்த மடாலயங்களில் உள்ள கோரத் தோற்றம் கொண்ட போதிசத்வர்களைக் கண்டு அருவருப்புடன் முகம் சுளித்தார்கள்

அன்று மாலையே அவர்களின் சீன வேலைக்காரி தப்பி ஓடிவிட்டாள். என்ன என்று போய் விசாரித்தால் அவள் இவர்கள் ஒரு மரச்சின்னத்தில் தொங்கும் குருதிவடியும் அரைநிர்வாணப் பிணத்தை வழிபடுவதை பார்த்து அருவருப்பு அடைந்துவிட்டாள் என்று தெரியவந்தது.

இரண்டு: கோரத் தெய்வங்கள் பெரும்பாலும் மானுடனின் அச்சத்துடன் தொடர்புடையவை. ஆகவே அந்த அச்சத்தையும் ஐயத்தையும் பயன்படுத்திக்கொண்டு வணிகம் செய்யும் பூசாரிகளும் மந்திரவாதிகளும்தான் அவற்றை அதிகமாக பிரச்சாரம் செய்வார்கள் – எல்லா மதங்களிலும். நீங்கள் காட்டிய சுவரொட்டி அத்தகையது.

அந்த வணிகத்துக்கு உடன்படுவது வழிபாடல்ல. அது ஒரு மனிதனின் பேராசைக்கோ சுயநலத்துக்கோ நம்மை அர்ப்பணிப்பது. அது பூசாரியாக இருந்தாலும் சரி பாதிரியாக இருந்தாலும் சரி. கடைசியாக எஞ்சுவது துயரமும் ஏமாற்றமும்தான்.

ஜெ

என் கேள்வியும் ஜெயமோகனின் அவர்களின் பதிலும்

விஷ்ணுபுரம் – வாங்கினோம், படித்தோம் என்று மட்டும் முடிந்து விடும் நாவல் அல்ல. அந்த நாவல் சொல்லும் செய்திகளும், கேட்கும் கேள்விகளும் மிகவும் வித்தியாசமானவை. அதில் சில கேள்விகளுக்கு நம்மிடமே விடை கிடைத்துவிடுகிறது. சிலவற்றிக்கு நம்மால் விடை காண முடிவதில்லை. எனவே விடை தெரிந்தவரை நாட வேண்டிய அவசியம் வந்துவிடுகிறது. விஷ்ணுபுரம் நாவலை எழுதிய ஜெயமோகன் அவர்கள் வாழும் காலக்கட்டத்திலே நாம் இருப்பதால் நேரடியாக அவரிடமே இந்த கேள்வியை கொண்டு சென்றேன். எழுத்தாளனுக்கும் வாசகனுக்குமான பிணைப்பு நாவலைத் தாண்டி கடிதம் வரை செல்வது வரவேற்கதக்கதுதானே. எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நான் எழுதிய இரண்டாவது கடிதம் இது என்றாலும், முதல் கடிதம் நாட்டார் தெய்வங்களைப் பற்றி ஒரு சிறு தேடல் உள்ள மனிதனிடமிருந்து சென்றது. ஆனால் ஒரு வாசகனாக அவருடைய எழுத்தின் தாக்கத்தினால் எழுதிய முதல் கடிதம் இது.இதற்கும் பதில் தந்து தனது வலைதளத்திலேயே பிரசுகம் செய்த ஜெயமோகன் அவர்களுக்கு நன்றி.

 

விஷ்ணுபுரம்

விஷ்ணுபுரம்

 

அன்பு ஜெ,

வணக்கம். தங்களுடைய விஷ்ணுபுரம் நாவலை இப்போது படித்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை இத்தனை அருமையான வித்தியாசமான நாவல் தமிழில் எழுதப்படவில்லை என்பதை அறிந்தே வாங்கினேன். உங்களின் உலோகம் நாவலையும், காவல்கோட்டத்தையும் வாங்கினாலும், அது என்னை முழுவதுமாக புரட்டிப்போடப் போகிறது என்று தெரியாமல் விஷ்ணுபுரத்தினைத்தான் படிக்கக் கையில் எடுத்தேன்.

ஸ்ரீபாதம் படிக்கும்பொழுது முதலில் பொம்மைக்கடையில் தனியாக விடப்பட்ட குழந்தையொன்று எப்படி கண்ணில்படும் பொருட்களையெல்லாம் எடுத்துவைத்துக் கொள்ள இயலுமோ அப்படித்தான் நீங்கள் விஷ்ணுபுரம் என்ற நகரில் நிகழும் சம்பவங்களை எழுத்துக்களாக வடித்திருக்கின்றீர்கள் என நினைத்தேன். ஸ்ரீபாதத்தின் இறுதி அத்தியாயங்களைப் படிக்கும் பொழுதுதான் எல்லா கதாபாத்திரங்களும் ஒன்றுக்கொன்று எப்படி தொடர்புறுகின்றன என்பது தெரிந்தது. மிக நேர்த்தியான கட்டமைப்பினைக் கொண்ட இந்த நாவலை நான் குழந்தைக்கு ஒப்பிட்டதை எண்ணி வெட்கம் கொண்டேன். வீரன் கொல்லப்படும் இடத்தினை தவிர்த்திருக்கலாமே, ஒரு வாசகனை அழவைத்துப்பார்க்கையில் எழுத்தாளர்களுக்கு என்ன சுகமென்று நினைத்தேன். அதன் பின்தான் எல்லாமும் அந்த சம்பவத்தோடு பின்னிப் பிணைந்து நடக்கின்றன என்பதை உணர்ந்தேன். வீரனுக்காக கவலைகொண்ட மனம், அவன் காலில் மிதிபட்டு இறந்த இருபது பேருக்காக வருத்தம் அடையாதது கண்டு வியந்தேன். அப்போதே விஷ்ணுபுரம் பற்றி உங்களுக்கு எழுதியிருந்தாலோ, வலைப்பக்கத்தில் எழுதியிருந்தாலோ, அது உலகிலேயே விஷ்ணுபுரம் பற்றி ஞானமே இல்லாமல் எழுதியதாக இருந்திருக்கும். இறைவன் அருளால் அந்தத்தவறை நான் செய்யவில்லை. இந்தக்கடிதம் கூட எத்தனை தூரம் ஞானமானது எனத்தெரியவில்லை.

இப்போது ஸ்ரீபாதத்தினை முடித்தும் என்னால் அதைவிட்டு நகரமுடியவில்லை. இந்த நாவல் எழுத்தாளனைப்போல வாசகனையும் களப்பணி செய்ய கட்டளை இடுகிறது. மிகப்பெரும் தேடல்களில் இருந்து கட்டமைக்கப்பட்டவைகள் என்பதால், சிற்ப மரபுகள், யானை, குதிரை சாஸ்திரங்கள் பற்றி வரும் போது அறிவார்ந்த கற்பனை இல்லாமல் வறட்சியாக இருக்கின்றன என் கற்பனைகள். வீரனை சிறுனி என்று வாமனன் குறிப்பிடும்போது அதற்குள் இருக்கின்ற அத்தனையும் அறிந்து கொள்ள மனம் விழைகிறது. மரபுகளையும் சாஸ்திரங்களைப் பற்றியும் அடிப்படைகளைப் புரிந்துகொண்டு படித்தால் நாவலின் அடுத்தகட்ட பரிணாமத்தையும் நான் உணரமுடியும் என நம்புகிறேன். லலிதாம்பிகை நகைகளை வர்ணிக்கும்போதும், வைஜயந்தியும் சித்திரையும் தங்களை அழைத்துச்செல்ல வருகின்ற பெண் கூட்டத்தில் இருக்கும் இசைக் கருவிகளைப் பார்க்கும்போதும், குதிரை நாச்சியாரின் பெருமை விளங்கும் போதும் நான் கண்கள் இல்லாதவனாக உணர்கிறேன். உதாரணமாக அந்த இசைக் கருவிகள் எப்படியிருக்கும், அவைகள் எந்த இசையை எப்படி தரும் என்பதையெல்லாம் அறியாமல் ஒளி மங்கியது போல அவர்களை கற்பனை செய்தேன். அவைகளைப் பற்றி எங்கு சென்று படிக்கலாம் என்று சொன்னால் மிக்க கடமைப்பட்டவனாக இருப்பேன்.

ஸ்ரீபாதம் முழுக்க விரவியிருக்கும் கடவுள்கள் இந்து மதத்தில் இருப்பவைகள் என்பதால் கருடன், இந்திரன் என்றவுடன் என்னால் கற்பனை செய்ய இயலுகிறது. ஸ்ரீசக்கரத்தின் அமைப்புகளை உணர முடிகிறது. விஷ்ணுபுர கோவில்களின் பிரம்மாண்டத்தை அறியமுடிகிறது. ஆனால் பௌத்தம் பற்றிய அடிப்படை அறிவு இல்லாமல் போதிசத்துவர் என்று வருகிறபோது என் அறிவை நாவல் கேலி செய்கிறது. சென்று அறிந்துவிட்டு பின் வந்து என்னைத் தொடு என்று சொல்வது போல இருக்கிறது. அதிகார வர்க்கத்தின் எதிர்ப்புக் குரல்களும், எளியவர்களின் வாழ்வியல் நெறிகளையும் ஏற்கனவே பல வாசகர்கள் உங்களிடம் தாங்கள் உணர்ந்ததாகக் கூறியிருக்கிறார்கள். இந்து மதத்தில் ஓரினச்சேர்க்கை இருந்ததா என்று ஆச்சரியத்தில் வினவியிருக்கின்றாரகள். என்றாலும் இவைகளை நானும் உணர்ந்தேன் என்று கூறாமல் இருக்க முடியவில்லை.

மஹாபாரதம் போன்ற உறுதியான தளத்தினை விஷ்ணுபுரத்தில் காண்கிறேன். கிளைக்கதைகளும் பெரும் நாவலாக மாற்றமெடுத்து நிற்கும் மரபை, மீண்டும் விஷ்ணுபுரம் வழிவகை செய்திருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரங்களைப் பற்றியும் ஒரு தனி காவியம் உருவாக விஷ்ணுபுரம் அனுமதியும் தருகிறது. நளன் – தமயந்தி போல விஷ்ணுபுரத்தில் மூழ்கிப்போகும் ஒரு சிறந்த வாசகனால் எழுத்தாளனாகவும் மாற முடியும் என நம்புகிறேன். நமது தலைமுறையிலோ, அல்லது நம் வருங்கால தலைமுறையிலோ விஷ்ணுபுரத்தினை ஆராய்ந்து என் எண்ணத்திற்கு உயிர் கொடுக்கும் நிகழ்வு நடக்குமெனத் தோன்றுகிறது. வெறும் ஒரு பாகம் படித்த சாதாரணமான எனக்கே இந்த விஷயம் தோன்றும்போது, நிச்சயமாக இதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். விஷ்ணுபுரத்தினை அடிப்படையாகக் கொண்டு சிறுகதைகள், நாவல்கள் வருவதை வரவேற்பீர்கள் என நம்புகிறேன். அப்படி எழுத முனைபவர்களுக்கு தாங்கள் நிச்சயம் வழிகாட்ட வேண்டும்.

நாவலைப் படித்து முடித்ததும் கடிதம் எழுதலாம், இப்போது எழுதினால் அதில் தவறுகள் இருக்க வாய்ப்புகள் உண்டு என்று அறிவு எடுத்துக் கூறுவதை மனம் ஏற்கவில்லை. மேலும் எனக்கு முன்பு படித்தவர்களுக்கு உங்கள் நாவலை அடிப்படையாகக் கொண்டு படைப்புகளைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமிருந்தால் அவர்களும் உங்கள் கருத்துகளை அறிந்து கொள்ள இது சந்தர்ப்பமாக இருக்கும் என நினைக்கின்றேன். எனவேதான் இக்கடிதம் எழுதினேன். என்னுடைய எண்ணம் நகைப்புக்குரியதாக இருந்தால் மன்னித்துவிடவும். விஷ்ணுபுரம் அள்ள அள்ளக் குறையாத மணிமேகலையின் அமுதசுரபியாக இருந்தும், அது இந்த நாவலோடு முடிந்துவிடக்கூடாது என்பதே என் எண்ணம். நான் இன்னும் இன்னும் விஷ்ணுபுரத்தில் மூழ்கக் காத்திருக்கிறேன்.

நன்றி

அன்புடன்,
ந.ஜெகதீஸ்வரன்.

அன்புள்ள ஜெகதீஸ்வரன்,

விஷ்ணுபுரம் மட்டுமல்ல, ‘கிளாஸிக்’ தன்மை உடைய எந்த நாவலும் வாசிப்புக்கு ஒரு அறைகூவலையே அளிக்கிறது. எந்நிலையிலும் அந்த வாசிப்பு முடிந்துவிடுவதில்லை. ஒரு நாவலை வாசிக்க அனைத்து நூல்களையும் வாசிக்கவேண்டும் என்ற நிலையை அது எப்படியோ உருவாக்கிவிடுகிறது.

விஷ்ணுபுரம் பேசிக்கொண்டிருப்பது நம்முடைய சொந்தப்பண்பாட்டின் உள்ளடுக்குகளைப்பற்றி. நாம் அதை இழந்துவிட்டோம் என்பதனால் இந்தத் திகைப்பு ஏற்படுகிறது. அப்படியென்றால் கோதிக் காலகட்டம் பற்றிய ஒரு ஸ்பானிஷ் நாவல் நமக்கு எவ்வளவு தூரம் அன்னியமானது?அதை வாசிக்க நாம் எவ்வளவு முயற்சிகளை எடுக்கிறோம்? அம்முயற்சிகளில் ஒரு பகுதியை எடுத்தாலே விஷ்ணுபுரத்தை உள்வாங்கிக்கொள்ள முடியும்.

உண்மையில் நாவல் அளிக்கும் தகவல்களை ‘முழுமையாகவும் தெளிவாகவும்’ புரிந்துகொள்ளவேண்டுமென்ற கட்டாயமேதும் இல்லை.அத்தகவல்கள் நம்முடைய ஆழ்மனத்தில் எங்கெங்கோ பதிவாகியுள்ளன. அவை நமக்கு ஒரு கனவுநிலையை அளிக்கின்றன. கற்பனையை எப்படியோ தூண்டுகின்றன. நாவல் உத்தேசிப்பதும் அதைத்தான். அந்தக் கனவெழுச்சியும், அதன் மூலம் உருவாகும் படிமங்களுமே அந்நாவல் அளிக்கும் முதல்கட்ட அனுபவம்.

தகவல்களை மேலும் மேலும் அறிந்து விரித்து எடுத்துக்கொண்டே செல்வதென்பது நாவலை மேலும் அறிய வழிவகுக்கும். நாவலின் அடுக்குகள் விரியும். அது நாம் நம்மை, நம்முள் உறையும் நம் பண்பாட்டு ஆழத்தை அறியும் முயற்சியும் கூட. அது எளிதில் சாத்தியமாகாது. நாம் எந்தளவுக்குப் பயில்கிறோம் என்பதைப் பொறுத்தது அது.

ஆகவே முதல்முறை வாசிக்கையில் முற்றிலும் தகவல்கள் அனைத்தையும் தெரிந்துகொண்டு வாசிக்கவேண்டுமென்பதில்லை. வாசிக்க வாசிக்க நாவல் விரியலாம். விவாதங்கள் அதற்கு உதவலாம். வாசித்தது நிறைவாகிவிட்டது என்ற எண்ணம் மட்டும் வராமலிருந்தால் போதும்.

ஜெ

மேலும் – 

முதல் கடிதம் – சகோதரனில்

முதல் கடிதம் – ஜெயமோகன் தளத்தில்

இரண்டாவது கடிதம் – ஜெயமோகன் தளத்தில்

ஜெயமோகனுக்கு நன்றி

விக்கி விக்கி
எம்.ஜி.ஆரைப் பற்றிய சில கட்டுரைகளை விரிவு செய்ய வேண்டியிருந்ததால் நான் விக்கியிலேயே இரண்டு நாட்களாக சுற்றிக் கொண்டிருந்தேன். வேறு சில கட்டுரைகளிலும் பங்கெடுத்துக் கொண்டிருந்தேன். பாலின்ப இலக்கியம் என்ற கட்டுரைக்கு ஜெ தளத்திலுள்ள கம்பனும் காமமும் கட்டுரைக்கு இணைப்பு கொடுக்கலாம் என தெரிவித்திருந்தேன். புதுப்பக்கங்களை உருவாக்குவது, இணைப்பு தருவது என ஏகப்பட்டதை கற்றுக் கொண்டேன்.

இன்று ஜெயமோகன் என்ற புதுப்பயனர்ப் பக்கம் கண்டேன். நான் அங்கு ஜெவை எதிர்ப்பார்க்கவில்லை. சோடாபாட்டில் என்ற நபர் உண்மையில் எழுத்தாளர் ஜெயமோகனா பங்கேற்பது என்று தன் ஐயப்பாட்டினை தெரிவித்திருந்தார். அதற்கு ஜெ “ஜெயமோகனேதான். என் மின்னஞ்சலை பார்க்கலாமே. முன்பு பதிவுசெய்யாமல் இருந்தேன். இப்போது பதிவுசெய்து தகவல்களை அளிக்கிறேன். இலக்கியம் தொடர்பான தகவல்கள் இதில் இருக்கவேண்டும் என்பதற்காக இதைச் செய்கிறேன். என் இணையதளத்தில் உள்ள கட்டுரைகளில் இருந்து சிலவற்றை நான் வலையேற்றம் செய்கிறேன் -தகவல்கட்டுரைகளை. அவற்றுக்கு காப்புரிமை இல்லை. நீங்கள் செய்தாலும் சரி” என்று சொல்லியிருக்கிறார்.

வலைதளத்தில் வாசகர்களுக்காக எழுதிக்கொண்டிருந்தவர் இப்போது விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்திலும் பங்கேற்க வந்திருக்கிறார்.

20 சிறுகதைகளை 300 ரூபாய்க்கு விற்கும் அளவிற்கு எழுத்துகளை விலைபோகும் காலக்கட்டத்தில், இத்தனை இயல்பாக வியாபார நோக்கில்லாமல் அவர் எழுதுவது வியப்பாக இருந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

ஜெயமோகனுக்கு நன்றி –

கிராமங்களின் தெய்வங்களை கதையை கவணிக்க நேர்ந்த போது ஏகப்பட்ட குழப்பங்கள் எனக்குள் எழுந்தன. நாட்டாரியல் களத்தில் மட்டுமல்ல, வயதிலும் நான் சிறியன் என்பதால் யாரை அனுகினால் விடை கிடைக்கும் என தேடியபோது, ஜெயமோகன் ஞாபகத்திற்கு வந்தார். காசுக்காக மட்டுமே எழுதும் எழுத்தாளர்கள் மத்தியில் வாசகர்களுக்காக எழுதுபவர் ஜெயமோகன். எனவே தயங்காமல் என் கேள்வியை அனுப்பினேன். அதற்கு அழகாக பதிலளித்து அவரது வலைதளத்திலேயே இட்டுவிட்டார். அதற்கு நன்றி கூட சொல்லாமல் இருந்தால் எப்படி. அதற்காகதான் இந்த இடுகை.

அன்பு ஜெ,

உங்களுடைய வலைப்பூவை வாசிக்கும் லட்சக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். எல்லா விசயங்களையும் நீங்கள் அனுகும் முறை மிக அழகாகவும் அறிவுப்பூர்வமாகவும் இருக்கிறது. அதனால்தான் நெடுங்காலமாக எனக்குள் இருந்த இந்தக் கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன். குல தெய்வங்களின் கதைகளால் ஈர்க்கப்பட்டு அவற்றின் கதைகளை சேகரிக்கத் தொடங்கினேன். பிச்சாயி, தொட்டியச்சி என பல கதைகள் கிடைத்தன அவர்கள் எல்லாம் சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம்மைப் போல மனிதர்கள் என அறிந்து பெரும் வியப்படைந்தேன். அந்த வரலாற்று இடங்களுக்கும் சென்று வந்தேன். மிகப் பெரிய அனுபவமாக அது இருந்தது. அந்தக் கதைகளில் ஒரு புறம் சைவமும் வைணவமும் ஆட்சி செய்கின்றன. (இதைப் பற்றி முன்பே நீங்கள் விளக்கம் அளித்துள்ளீர்கள்.). மறுபுறம் கதைகள் திரிக்கப்பட்டு பரப்பப்பட்டிருக்கின்றன. ஒரு சில கதைகளைத் தவிற மற்றவை மிகவும் மோசமாக கற்பனைகளால் மட்டுமே நிரப்பப் பட்டிருக்கின்றன. அவற்றை ஏதேனும் செய்து உண்மைக் கதையை கண்டறிய இயலுமா. மதுரைவீரன், சுடலை மாடன் என சில தெய்வங்களின் கதைகளில் மொத்த கதையையும் மாற்றாமல் ஒரு சில சம்பவங்கள் மட்டும் மாறுபட்ட கதைகள் வெவ்வேறுவிதமாக மக்களால் சொல்லப்படுகின்றன. இவற்றில் எந்த கதையை உண்மைக் கதையென நம்புவது என்பதே என்னுடைய கேள்வி. உங்களது விளக்கத்திற்காக காத்திருக்கிறேன்.

நன்றி,.

அன்புடன்,
ஜெகதீஸ்வரன்.

https://sagotharan.wordpress.com/

அன்புள்ள ஜெகதீசன்

குலதெய்வங்களைப்பற்றிய ஆய்வுகளை இரு கோணங்களில் செய்யலாம். சமூகவியல் கோணத்தில் அல்லது இறையியல் கோணத்தில்.

இரு தளங்களிலுமே அவற்றை ‘அப்படியே’எடுத்துக்க்கொள்ள முடியாது. அவை ஒரு குறிப்பிட்ட வகையான மொழிபுகள் [Narration] . தாங்கள் அறிந்த உண்மைகளை அம்மக்கள் ஒரு வகையான கதைகளாக ஆக்கி சொல்கிறார்கள். அக்கதைகளில் வரலாறு, தரிசனம் ஆகிய இரண்டும் புனைவாக ஆக்கப்பட்டுள்ளன. அந்த புனைவுக்கு ஒரு முறைமை உள்ளது. அந்த முறைமையை நாம் முதலில் கற்றுக்கொள்ளவேண்டும். அதன்பின்னரே நம்மால் நாட்டாரியலுக்குள் செல்ல முடியும்.

சமூகவியல் ஆய்வுக்கு விரிவான சமூகவியல் புரிதல் ஒன்று தேவை. அதாவது சமூகத்தின் கட்டுமனம், அதன் அமைப்பு முதலியவற்றை பற்றிய ஒரு பொதுமனவரைபடம் என அதை சொல்லலாம். அந்த வரைபடத்தினை நிரப்ப நாம் நாட்டார் பாடல்கள் மற்றும் கதைகளில் இருந்து தகவல்களை எடுத்துக்கொள்ளலாம்.

அதேபோல இறையியல் ஆய்வில் இந்த நாட்டார் கதைகளை தொன்மங்களாக, குறியீடுகளாகவே எடுத்துக்கொள்ளவேணாடும்

அதாவது அவற்றில் சமூகவியல் உண்மை, மதம்சார் உண்மை என பல தளங்கள் உள்ளன. நீங்கள் சமூகத்தையும் மதத்தையும் ஒட்டுமொத்தமாக ஆராயும்போது அவை உருவாக்கும் வினாக்களை ஒட்டியே இந்தக்கதைகளை பொருள்கொள்ள முடியும். அல்லாமல் இவற்றுக்குள் ஒரே ஒரு கதை அல்லது ஒரே ஒரு உண்மை மட்டும் ஒளிந்துகிடக்கவில்லை. அந்த உண்மையை இவற்றை மட்டும் ஆராய்ந்து கண்டுகொள்ள முடியாது.

உதாரணமாக பொன்னிறத்தாள் அம்மன் கதை. அது சமூகவியல் நோக்கில் அருங்கொலை செய்யப்பட்ட பெண், குறிப்பாக கர்ப்பிணிப்பெண், மீது அக்காலத்து மக்களுக்கு இருந்த குற்றவுணர்ச்சியையும் அச்சத்தையும் காட்டுகிறது. கொள்ளையடிக்கும் மறவர்கள் எத்தனை அஞ்சப்பட்டார்கள், வெறுக்கப்பட்டார்கள் என்பதைக் காட்டுகிறது. இபப்டி பல அர்த்தங்கள்

அதே கதை இறையியல் நோக்கில் மனிதர்கள் எப்படி தெய்வங்களாக ஆகிறார்கள் என்பதை காட்டுகிறது. அவர்கள் ஆவிகளாக ஆகிறார்கள். ஆவியாக இருக்கும்போது அவர்களிடம் உள்ள மன ஆற்றல் காரணமாக கடவுளை அடைந்து வரம்பெற்று தாங்களும் கடவுள்களாக ஆகிறார்கள். பெருந்தெய்வம் சிறு தெய்வத்தை உருவாக்குகிறது. இது ஒரு இறையியல் உண்மை.

இப்படி நாட்டாரியல் தரவுகளை நாம் நம்முடைய பார்வைக்கு எப்படி பயன்படுத்திக்கொள்கிறோம் என்பதே முக்கியமானதாகும்.

இந்த தளத்தில் நா.வானமாமலை, பக்தவ்த்சல பாரதி, முதல் அ.கா.பெருமாள் வரையிலானவர்கள் எழுதிய நூல்கள் உங்களுக்கு உதவும்

ஜெ

குறிப்பு =

விக்கிற்கு வந்த ஜெயமோகனுக்கு நன்றி என்றுதான் தலைப்பிட்டிருக்க வேண்டும். இது சும்மா!. பிறகு முக்கியமான விஷயம் வேலை கிடைத்துவிட்டது. இனி அடுத்தடுத்த திட்டங்களை செயல்படுத்த வேண்டியதுதான் மிச்சம்.

மிக்க நன்றி!.

மேலும் –

விக்கியில் என் பக்கம்
விக்கியில் என் பங்களிப்பு