மாதெருபாகன் – எதிர்ப்பு ஒரு சடங்கு

மாதொருபாகன்

 

மாதொரு பாகன் நாவல் தடைக்கோரி நீதிமன்றத்தின் படிகட்டுகளை ஏறிக்கொண்டிருப்பவர்களுக்கு இந்து மதத்தின் சடங்குகளைப் பற்றிய போதிய அறிவு இல்லையென்பது என் கருத்து. அதுவே உண்மை என்பதை இந்த இடுகையின் கடைசி வரிவரை படித்த பின்பு நீங்களும் கூறுவீர்கள்.

சூரியன், மரம் என இயற்கை வழிபாட்டையும், மாடு, நாய் என விலங்கு வழிபாட்டையும், அதற்கடுத்த செயற்கரிய செயல்செய்த மனிதர்களுக்கா நடுகல் வழிபாட்டையும் இன்னமும் இந்து மதம் காப்பாற்றிக் கொண்டே வருகிறது. ஆதிவாசிகளின் சடங்குகளை பேணிவருதல் இகழ்வானதல்ல, அவை நமக்கு வரலாறுகளை எடுத்துரைப்பது. அக்கால மக்களின் நடைமுறை வாழ்க்கையும், அறிவையும் நமக்கு கற்றுத் தருவது. எவையெல்லாம் பயத்தை தருகின்றதோ அவையெல்லாம் தெய்வமானது என்பதே உலக தொன்மவியல் எடுத்துரைப்பது. இருள், இடி, நாகம், புலி, யானை என எல்லாமே இங்கு தெய்வம்.

மண்ணின் மக்களுக்காக காட்டுப்பன்றி, புலியை எதிர்த்து வீரமரணம் அடைந்தால், புலிகுத்தி பட்டான், பன்றிக் குத்தி பட்டான் என கல்வெட்டு வடித்து வழிபாடு. கணவன் இறந்தமைக்காய் தீக்குளித்து இறந்த பத்தினிப் பெண்ணுக்கு மாலையம்மன், தீப்பாய்ந்தால் வழிபாடு. செய்யா தவறுக்காய் தீய்நீதி வழங்கி இறந்தாலும், சமூக சிக்களுக்காய் மனமுவந்து மரணித்தாலும் அவர்களுக்கும் வழிபாடு. இவையெல்லாமும் நடைந்தவைகளை காலம் கடந்தும் நம் நினைவுக்காய் முன்னோர்கள் செய்த முன்னேற்பாடு.

பெருமாள் முருகன் கையிலெடுத்துக் கொண்டது, இன்றைய நவீன உலகில் பெருநகரங்களின் வீதிக்கு வீதி திறந்து வைக்கப்பட்டிருக்கும் மெட்டியாட்ரி மருத்துவமனைகளின் யுத்தியை நம் முன்னோர்கள் கையாண்ட சடங்கு பற்றியது. முறையான உடலுறவினால் மனைவி கருதரிக்காத போது, செயற்கையாக விந்தினை செலுத்தும் முறையை நவீன மருத்துவமனைகள் கையாளுகின்றன. கணவனின் விந்தில் போதுமான அளவிற்கு ஊர்ந்து செல்லும் விந்தனுக்கள் இல்லாத போதும், உடைந்த விந்தனுக்கள் இல்லாதபோதும் பிற ஆணின் சீறான விந்தனுக்கள் செலுத்தப்பட்டு கரு உண்டாக்கப்படுகிறது. இதனை நம்முன்னோர்கள் ஓர் திருவிழாவின் இரவில் சத்தமேயில்லாமல் பல காலம்செய்து வந்திருக்கிறார்கள்.

நவீன மருத்துவர் யாரையேனும் அறிந்திருந்தால் வருடத்திற்கு இந்தியாவில் இப்படி விந்து உட்செலுத்துதல் மூலம் கருதரிக்கும் பெண்களின் எண்ணிக்கையை கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள். நிச்சயம் அதிர்ந்துப் போவீர்கள். இது ஒரு ஆபாசமான சடங்கென எதிர்ப்பு தெரிவித்தால்,. இந்து தொன்மவியலில் கிளிக்கும், மானுக்கும் என மிருகப் புணர்வு செய்த முனிவர்களைப் பற்றி எடுத்துறைக்க வேண்டியிருக்கும். அவை பற்றி இந்த வலைப்பூவிலேயே முன்பொரு முறை எழுதியிருக்கிறேன் என்பதால் இங்கு விட்டுவிடுகிறேன்.

முன்பு நிலவிய இந்த சடங்கு முறை உயிர் கொடுத்தலுக்கானது. இங்கே உயிர் எடுத்தலுக்கான சடங்கும் நிலவிவந்துள்ளது. பொதுவாக புதையலை காவல் காக்கும் பூதங்களுக்கும், தீய சக்திகளுக்கும் பலி கொடுத்தலில் சூலியை பலி கொடுத்தலும் நிகழ்ந்துள்ளது. இவை கூட சடங்குதான். கள்ளர்கள் சூலாடு, சூல்பன்றிக்குப் பின்பு சூலியான பெண்ணை பலி கொடுத்திருக்கிறார்கள். இதனை பதிவு செய்திருக்கும் கதைப்பாடலை வாசித்த போது, பொன்னிறத்தாளின் தாயின் நிலையை எண்ணினேன்,. ஓர் வசனக் கவிதையாக

நா.. பொன்மாரி. பொறக்கறது அத்தனையும் ஆம்பளையா பொறக்க.. தவமிருந்து பெத்த பொட்டபுள்ளைய ஆளாக்கி, நல்ல பயனுக்கு கட்டிக்கொடுத்து, இப்ப வயிறு நிறைஞ்சு நிக்குது. இந்தா வாரேன்னு தோழிகளோடு ஓடைக்கு போனபுள்ள வீடுவந்து சேரல.. வானம் கருத்து பேய்காத்து வீசுது. கூட போன புள்ளைக ஒன்னுமொட்ட திரும்பிவந்து… காட்டாளம்மன் கோயிலுல கற்பினியவ தனிச்சிருக்கா.. பத்திரமா போய் பாங்கா கூட்டிக்கிட்டு வாங்குதுங்க.

முன்னேப் பெத்த ஏழுகளோட காட்டாளம்மன் கோயிலுக்கு போறேன். ஆடிக் காத்துல அடிமேல அடிவைச்சு அழகா நடந்துவர யாரால முடியும். அடிக்கிற எதிர்காத்துல.. அம்மன் கோவிலுக்கு வர அரும்பாடு பட்டாச்சு. கோயிலுக்கு முன்னாடி குறுதியோட ஆடு கிடக்கு. பலியா கிடக்கறது சூலாடுன்னு புரிஞ்சு.. அடேய் ஓடுங்கடா.. உன்தங்காவ பாருங்கடான்னு கத்தறேன். முன்னாடிப் போனப் பயளுக வெவவெளத்து நிக்க…

மூச்செறைக்க ஓடிவந்து முன்னெட்டி பார்க்கிறேன். ஆசை மவ அம்மணமா, அம்மன் முன்னாடி தான் கிடக்கா..பக்கத்துல தலைவாழ இலையில அவ தலைச்சம் புள்ள கரிகெடக்க… ஒம்போது மாசம் புள்ளைய சுமந்த வயிறு.. ஒன்னுமில்லாம கிழிச்சு திரீயேத்தி நிக்குது. பாவிமக நா செஞ்ச பாவமென்ன… இப்படி பலியாட கிடக்கிற மகளைகாண நா செஞ்ச பாவமென்ன….

பிள்ளையாரின் பிறப்பு

இன்று பிள்ளையார் தனது எத்தனையாவது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடுகிறார் என்று தெரியவில்லை. அவர் பிறந்தநாளை கொண்டாடும் நம்மில் பலருக்கு அவருடையப் பிறப்பு பற்றிய ஐந்து ஆறு கதைகள் தெரியும்.

1) பிள்ளாயார் பார்வதியின் அழுக்கிலிருந்து பிறந்தவர்
2) பிள்ளையார் சிவனின் நெற்றிக்கண் நெருப்பிலிருந்து பிறந்தவர்
3) பார்வதியின் சாபத்தால் சிவனே பிள்ளையாராக மாறினார்
4) முழுமுதற்கடவுளான பிள்ளையார் பார்வதி சிவனின் தவத்தினால் அவர்களுக்குப் பிள்ளையாக பிறந்தார்
5) வாதாபியிலிருந்து பிள்ளையாரை பல்லவர்கள் கொண்டுவந்தார்கள்.

vinayagar_01

இப்படியாக பிள்ளையாரின் பிறப்பு பற்றிய கதைகள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் இந்தப் பிள்ளையாரைப் பற்றி விக்கப்பீடியாவிற்காக தேடிய பொழுது பிள்ளையார் என்று நாம் கும்பிடும் தெய்வத்தை நம்முடைய முன்னோர்கள் ஆணாக வழிபடவில்லை என்ற தகவல் கிடைத்தது.

மனிதர்கள் இயற்கையை வழிபட ஆரமித்தன் காரணம் இயற்கையின் மீதான பயமே காரணம். இயற்கையின் மீதான பயம் போய்விட்ட பின்பு அந்த வழிபாடு மக்களால் புறக்கணிக்கப்பட்டு விடுகிறது. உதாரணத்திற்கு தமிழர்களின் வருணன் மற்றும் இந்திரன் வழிபாடுகள். அவற்றில் சில வழிபாடுகள் பிற்காலத்தில் வேறு உருவம் பெற்று தங்களை தக்கவைத்துக் கொள்கின்றன. அவ்வாறான ஒரு வழிபாடு பிள்ளையார் வழிபாடு.

பண்டைய இலக்கியங்களில் பிள்ளையார் பற்றி தகவல்கள் இல்லை. பிற்கால இலக்கியங்களில் பிள்ளையார் வழிபாடு மற்ற தெய்வங்களை விட முதன்மையாக முன்னிருத்தப்பட்டது விசித்திரம். மனிதர்களின் முயற்சிகளுக்கு கேடு விளைவிக்கும் தெய்வமாக பிள்ளையார் கருதப்பட்டுள்ளார். வங்காள ராஜ்யத்தில் உழத்தியர் எனும் உழவர்களின் தெய்வமாக பிள்ளையார் உள்ளார். உழவுத் தொழிலின் பல செயல்களிலும் பிள்ளையார் தொடர்புபடுத்தப்படுகிறார்.

உழவர்களின் தெய்வமாகவும், முயற்சிகளுக்கு கேடு விளைவிக்கும் தெய்வமாக கருதப்பட்டதால் பயர்களை நாசம் செய்யும் காட்டு யானைகளுக்கப் பயந்து இந்தப் பிள்ளையார் வழிபாடு துவங்கப்பட்டிருக்கலாம். புராணங்களிலும் பிள்ளையாரை வழிபடாமல் போனதால் தான் பாற்கடலிருந்து ஆலகாலம் தோன்றியது எனவும், சிவானின் தேர் உடைந்தது என்றும் பல்வேறு கதைகள் கூறுகின்றன. முன்னோர்கள் கருதிய முயற்சிகளுக்கு கேடுவிளைவிக்கும் என்ற கோட்பாடு முழுவதுமாக மாறாமல் இன்றுவரை உள்ளது. புராணகால கடவுள்கள் அனைவரையும் பின்னுக்குத்தள்ளி முதல்வனாக வணங்கப்படும் அந்தஸ்து இதனால்தான் கிடைத்தது.

பிள்ளையாரின் மீதான பயம் குறைந்து சந்திகளிலும், குளக்கரைகளிலும், வாய்க்கால் வரப்புகளிலும் வழிபடதொடங்கிய பொழுது, அவர் செழிப்பின் கடவுளானார். சிவபெருமான் சிச்ஸ் பேக் வைத்திருக்கும் பொழுது அவருடைய பிள்ளை தொப்பை வயிற்றுடன் இருப்பதற்கான காரணம் செழிப்புதான். (குபேரனுக்கும் தொப்பை உண்டு. பொண்ணுங்க தொப்பை வைக்கிறத ஏத்துக்காம திருமகளை சிலிம் ஆக்கிவிட்டார்கள்) . அஷ்டஇலட்சுமிகளோடு மருமகன் பிள்ளையாரும் செல்வத்தின் அதிபதியாக வணங்கப்படுகிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள் தானே.

வடக்கே தெற்கே ஒட்டி
வலது புறம் மூரி வச்சு
மூரி ஒழவிலே
முச்சாணி புழுதி பண்ணி
சப்பாணி பிள்ளையார்க்கு
என்ன என்ன ஒப்பதாமாம்!

முசிறி உழவிலே
மொளைச்சாராம் பிள்ளையாரு

ஓடு முத்தும் தேங்காயை
ஒடைக்கறமாம் பிள்ளையார்க்கு
குலை நிறைஞ்ச வாழைப்பழம்
கொடுக்கறமாம் பிள்ளையார்க்கு
இத்தனையும்ஒப்பதமாம்
எங்கள் சப்பாணி பிள்ளையார்க்கு!

மீண்டும் பழைய இடத்துக்கு வருவோம், பிள்ளையாரின் பிறப்பு. மேலேயுள்ள நாட்டார் பாடல் “முசிறி உழவிலே மொளைச்சாராம் பிள்ளையாரு” என்று ஏர்ச்சாலால் உழும் பொழுது மண்ணிலிருந்து பிள்ளையார் பிறந்தார் என்ற உழவர்களின் நம்பிக்கையை கூறுகிறது. வேதகால கடவுளான சிவபெருமானுடன் பிள்ளையார் வழிபாட்டை இணைக்க நினைத்தவர்களால் மேலே நாம் பார்த்த ஐந்து ஆறு கதைகள் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு இணைக்கப்பட்டிருக்காவிட்டால் வங்காளத்தில் சிறுதெய்வாக வணங்கப்பட்டு பிள்ளையார் வழக்கிலிருந்து போயிருப்பார்.

வெள்ளாளர்களுக்கு நன்றியுணர்வு அதிகம். தங்களுடைய வெள்ளாண்மை முடிந்து அறுவடை வந்ததும், தங்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவி்ப்பார்கள். உழவர்கள் சூரிய கடவுளுக்கு எடுக்கும் பொங்கல் திருவிழாவை ஒத்து பிள்ளையார் திருவிழாவும் நடந்திருக்கிறது.

மாட்டுக் கொளப்படையில்
மாவுருண்டை ஆயிரமாம்
எருதுக் கொளப்படையில்
எள்ளுருண்டை ஆயிரமாம்
ஆட்டுக் கொளப்படையில்
அதிரசம் ஆயிரமாம்
கண்ணுக் கொளப்படையில்
கடலுருண்டை ஆயிரமாம்
குட்டிக் கொளப்படையில்
கொழுக்கட்டை ஆயிரமாம்
பண்ணிக் கொளப்படையில்
பணியாரம் ஆயிரமாம்
இத்தனையும் ஒப்பதமாம் – எங்க
சப்பாணிப் பிள்ளையார்க்கு!

மாவுண்டை, எள்ளுருண்டை, அதிரசம், கடலுருண்டை, கொழுக்கட்டை, பணியாரம் என்று தங்களின் உணவுப்பொருட்களை பிள்ளையாருக்குப் படைத்து தங்களுடைய மகசூல் திருவிழாவை கொண்டாடியிருக்கின்றார்கள். பணம் முதல் இனப்பெருக்கம் வரை பெண்ணோடு தொடர்படுத்தி அம்மனாக வழிபடும் வழக்கம் சாக்தம். தாய் தெய்வம், கன்னி தெய்வம் என எல்லாவற்றையும் பெண்ணாக பார்த்தே பழக்கம் கொண்டவர்கள் பிள்ளையாரையும் பெண்ணாக்கினார்கள். அதற்குள் பிள்ளையார் சிவமைந்தனாக மக்களிடம் சென்று சேர்ந்துவிட்டதால் இந்த பெண் பிள்ளையார் வழிபாடு அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே இருந்துள்ளது. தற்போது சுசீந்திரம் கோயிலில் பெண் பிள்ளையாரை தரிசிக்கலாம்.

காளையே ஏறு..
முந்தி முந்தி வினாயகனே!
முக்கண்ணானார் தன் மகனே!
கந்தருக்கு முன் பிறந்த
காளைக் கணபதியே – (காளையே)
வேலருக்கு முன் பிறந்த
விக்கினரே முன் நடவாய்
ஊருக்கு மேற்காண்டே
ஒசந்த தொரு வெப்பாலை
வெப்பாலை மரத்தடியில்
சப்பாணி பிள்ளையாராம்
சப்பாணிப் பிள்ளையார்க்கு
என்ன என்ன ஒப்பதமாம்!
நீரு முத்தும் தேங்காயாம்
நிமித்தியமாம் பிள்ளையார்க்கு
கொத்தோடு தேங்காயாம்
குலைநிறைய வாழைப்பழம்
இத்தனையும் ஒப்பதமாம் – எங்க
சப்பாணி பிள்ளையார்க்கு – (காளையே)

வண்டு மொகராத – ஒரு
வண்ண லட்சம் பூ வெடுத்து
தும்பி மொகராத
தொட்டு லட்சம் பூவெடுத்து
எறும்பு மொகராத
எண்ணி லட்சம் பூவெடுத்து
பாம்பு மொகராத
பத்து லட்சம் பூவெடுத்து
வாரி வந்த பூவையெல்லாம்
வலப்புறமாய்க் கொட்டி வச்சேன்
கொண்டு வந்த பூவை யெல்லாம்
கோபுரமா கொட்டி வச்சேன்
குளத்திலே ஸ்நானம் பண்ணி
கோலு போல நாமமிட்டு
பொழுதேறிப் போகுதிண்ணு
வெள்ளி யொறைச்சி நாமமிட்டு
இத்தனையும் ஒப்பதமாம் – எங்க
சப்பாணிப் பிள்ளையார்க்கு!

பிள்ளையாரை சிவமைந்தனாக ஏற்றுக் கொண்டாலும் தமிழ் உழவர்கள் வழிபாட்டு முறையை மாற்றவி்லலை. தமிழர் வழிபாட்டு முறையை மேலேயுள்ள நாட்டார் பாடல் விவரிக்கிறது.

எங்கோ தோன்றி எப்படியோ பிள்ளையார் வழிபாடு இன்று இந்தியாவெங்கும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பிள்ளையாரே!

கட்டுரைக்கு உதவி –
தமிழர் நாட்டுப்பாடல் நூல் – நா வானமாமலை எம்.ஏ. எல்.டி

தமிழ் மண்ணின் சாமிகளின் பட்டியல்

என்னுடைய குலதெய்வம் மாசி பெரியண்ணின் கோவிலுக்கு சென்றிருந்த போதுதான், பல சுவாமிகளின் பெயர்கள் தெரியவந்தன. அவற்றின் கதைகள் அங்கிருக்கும் பூசாரிகளுக்குக் கூட தெரியவில்லை. என்னுடைய குலதெய்வத்தின் கதையையே பல மாதங்கள் அழைந்து திரிந்து பலரிடமும் கேட்டேன். என்னுடைய அப்பாவுக்கு கொஞ்சம் செய்தி மட்டுமே தெரிந்திருந்தது. ஓமாந்தூர் பெரிய பூசாரியிடம் கேட்டப்போதுதான் உண்மையான கதையை முழுமையாக அறிய நேர்ந்தது.

என்னைப் போல பலரும் தங்களின் குலதெய்வங்களின் கதை அறிய ஆவலாய் இருக்கிறார்கள் என்று அறிந்தேன். என்னுடைய நண்பர்களின் குலதெய்வங்களின் கதைகளை அறிய முற்பட்டபோது எனக்கு ஏராளமான ஆச்சிரியங்கள் நிகழ்ந்ததன. பெரும்பாலான கதைகளில் சிவனும், விஷ்னுவும் ஆட்சி செய்திருந்தார்கள். அவர்களை நீக்கிவிட்டு பார்க்கும் போது, உண்மையில் வாழ்ந்து மடிந்த மனிதர்களின் கதை கிடைத்தது. ரசவாதம், காயகல்பம் என சித்தர்களை தேடினால் எத்தனை சுவாரசியங்கள் கிடைக்குமோ, அந்தளவிற்கு எனக்கு இப்போது கிடைக்கின்றது.

இதுவரை நான் கேள்விப்படாத பல தெய்வங்களின் பெயர்களும், கதைகளும் கிடைத்திருக்கின்றன. குறைந்தது ஆயிரம் சுவாமிகளின் பெயர்கள் கிடைக்கும் என நினைக்கின்றேன். நான் சேகரித்த பெயர்கள் விடுபடாமல் இருக்க வேண்டி இங்கு தொகுத்திருக்கிறேன்.

ஆண் தெய்வங்கள் –

தடிவீர சுவாமி

பெரியசாமி, பெரியண்ணாசுவாமி, மாசி பெரியண்ண சுவாமி, கொடை ஆல், மலையாளி, மலையாள கருப்பு, கருப்பண்ண சாமி, கொல்லிமலை கருப்பு, பதினெட்டாம்படி கருப்பு, இரட்டைமலை கருப்பு, ஒன்டி கருப்பு, பனையடி கருப்பு, சங்கிலி கருப்பு, முத்து கருப்பண்ண சாமி, வேம்பழ முத்து கருப்பண்ண சுவாமி, கறுப்பண்ணா, கறுப்பு கூத்தாண்டவர், கீழேரி கருப்பு, உதிர கருப்பு, சமயக்கருப்பசாமி, கருப்பு, தலைவாயில் கருப்பசாமி,கழுவடியான், இருளப்பச்சாமி, அய்யனார், மாடசாமி, சுடலைமாடன், உத்தண்டசாமி, பெரியாண்டவர், பசவன்னா, பதலமா, புத்தாகாசிப், எல்லைக்கறுப்பு, ஐயனார், மாதேஸ்வரா, ஊர் அத்தியன், மகாலிங்கா, ராஜவாயன், எதுமலை மதுரை வீரன், காத்தவராய சுவாமி, மந்திர மாகாமுனி, லாடசன்னாசி, அகோதரவீரபுத்திர சுவாமி, ஆலாத்தி வெள்ளையம்மாள், அனந்தாயி, ஆந்திரமுடையார், உச்சிமாகாளி, கட்டிலவதானம், சிதம்பர நாடார், தடிவீரசாமி, பிச்சைக்காலன், முத்துப்பட்டன் , வன்னியடி மறவன், வன்னியன், வன்னிராசன், வெங்கலராசன், பாவாடைராயன், பருதேசியப்பர், பொன்னர், சங்கர், ஒன்பது அண்ணன்மார்கள், விருமாண்டி, செங்கல்வராயன், வாழ்முனி, செம்முனி, செங்கா முனியப்பன், சங்கிலிபூதத்தார், நல்லமாடன், முத்து முனி, செம்முனி, ஜடாமுனி, லாடமுனி, கருமுனி, வீரமாமுனி, வாழுமுனி, கருப்பராயர், காவல்ராயன், கருப்பராயர், மண்டுகருப்பு, சாத்தன்-சாத்தாயி, வெண்டுமாலைகருப்பு, மாலைக்கருப்பு, தொட்டியக்கருப்பு,தூண்டிவீரன், வாகையடியான், உத்தாண்டராயர், பெத்தாரணசுவாமி, இருளப்பர், இருளாயி, கனரயடி காத்த அய்யனார், அனடக்கலம் காத்த அய்யனார், நீர் காத்த அய்யனார், அருஞ்சுனன காத்த அய்யனார், சொரிமுத்து அய்யனார், கலியணான்டி அய்யனார், கருங்குளத்து அய்யனார், குருந்துனடய அய்யனார், இளம்பானள அய்யனார், கற்குவேல் அய்யனார், கொண்னறயான்டி அய்யனார், செண்பகமூர்த்தி அய்யனார், திருவேட்டழகிய அய்யனார், சமணர்மனல அய்யனார், கூடமுனடய அய்யனார், சினற மீட்டிய அய்யனார், மக்கமனட அய்யனார், செகுட்ட அய்யனார், வெட்டுனடய அய்யனார்,மருது அய்யனார், வேம்பூலி அய்யனார், நினறகுளத்து அய்யனார், ஆதிபுதிரங்கொண்ட அய்யனார், சித்தகூர் அய்யனார், பிரண்டி அய்யனார், வீரமுத்து அய்யனார், பாலடி அய்யனார், தந்தனல வெட்டி அய்யனார், கருமனல காத்த அய்யனார், அல்லல் தீர்த்த அய்யனார், ஹரி இந்திர அய்யனார், கானட பிள்னள அய்யனார், செல்லப் பிள்னள அய்யனார், வீர பயங்கரம் அய்யனார், மாணிக்கக் கூத்த அய்யனார்,

பெண் தெய்வங்கள் –

வெள்ளையம்மாள்

எட்டுகை அம்மன், கொல்லிப் பாவை, பாப்பாத்தி, கருப்பாயி, முத்துநாச்சியார், அரியநாச்சியார், காளியம்மன், துர்க்கையம்மன், தோட்டுக்காரி அம்மன், செல்லியம்மன், மாரியம்மன், கரடியம்மன், காந்தாரியம்மன், வெயிலுகாத்தம்மன், உச்சிமாகாளி, காய்ச்சிக்காரம்மன், வடக்கு வாய்ச்சொல்லி, அரிய நாச்சியம்மன், வீரகாளியம்மன், அங்காள ஈசுவரி, குளத்து அம்மன், மந்தையம்மன், வடக்குத்தியம்மன், சந்தனமாரியம்மன், உமையம்மன், ராசாயி, பெத்தனாட்சி, சோலையம்மன், காமாட்சியம்மன், மரகதவல்லி, செண்பகவல்லியம்மன், சந்திரமாகாளி, அட்டங்கம்மா, அம்மாரி, அங்கம்மா, அன்னம்மா, அரிக்கம்மா, பாலம்மா, பத்ரகாளி, பூலங்கொண்டாள் அம்மன், பொன்னிறத்தாள் அம்மன், அங்காள பரமேஸ்வரி, செமலம்மா, தாலம்மா, தோட்டம்மா, திரௌபதி, துர்க்கா, கங்கம்மா, கூனல்மாரி, கிரிதேவி, கன்னியம்மா, கன்னிகை, கீர்மாரி, மலைமாயி, மாரம்மா, முத்தாலம்மா, பிடாரி, பூலம்மா, சப்தகன்னிகை, துர்க்கை, உடலம்மா, உக்கிரமாகாளி, உச்சினமாகாளி, வாசுகோடி, ஈலம்மா, வானமாலம்மன், பேச்சியம்மன், பச்சை வாழையம்மன், சப்த கன்னிகள், நவ கன்னிகள், முக் கன்னிகள், இசக்கி, நீலி, பைரவி, மாடச்சி, அம்மாச்சி, பேராத்துசெல்வி, தளவாய்பேச்சி, பூங்குறத்தி, காத்தாயி அம்மன், குழந்தையம்மன், ராக்காச்சி , தீப்பாச்சியம்மன், இடைச்சியம்மன்,கிச்சம்மா, தொட்டிச்சிஅம்மன், ஆலாலகங்கா, வல்லடிக்காரர்

சைதாப்பேட்டை கடும்பாடி அம்மன் கோவிலில் ஒன்பது அண்ணன்மார்கள், மூன்று கன்னிகள் என பல்வேறு எண்ணிக்கையில் கூட தெய்வங்களை வழிபடுகின்றனர். இவர்களின் கதையும் கிடைக்கவில்லை.

உதவுங்கள் –

விடுபட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள் பெயர்களை சொல்லுங்கள் சேர்த்துக் கொள்கிறேன். இவர்களில் யாரின் கதை தெரிந்திருந்தாலும் சொல்லுங்கள் கேட்டுக்கொள்கிறேன். இல்லை ஏதேனும் வலைப்பூவில் இருந்தால் லிங்க் கொடுங்கள், படித்து தெரிந்து கொள்கிறேன்.

அன்புடன்,

சகோதரன் ஜெகதீஸ்வரன்.

தமிழ் மண்ணின் சாமிகள் – ஒரு முயற்சி

சிறுதெய்வம் என்ற சொல்லுக்குக் கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி மக்கள் தம் குறை நீக்கும் தெய்வம். அந்தணர்(ஆரியர்கள் அல்லது பிராமணர்கள்) அல்லாத பூசாரி பூசை செய்யும் தெய்வம் “eleity worshipped by people for alleviation and whose pooja is conducted by a non-brahmin pirst” (T. 439)

நாட்டுப்புற மக்கள் என்றும் நாட்டார் என்றும் தொடர்ந்து ஒரே மண்ணில் வாழும் மக்களைக் குறிக்கின்ற சொற்களையே பயன்படுத்தி, நாட்டுப்புற தெய்வங்கள் நாட்டார் தெய்வங்கள் என்று சிறு தெய்வங்களைக் கூறுகின்றார்கள். பொதுவாக ஆரியர்களின் தெய்வங்களை தவிர்த்து மற்ற அனைத்தையும் சிறு தெய்வங்கள் என்று குறிப்பிடுகின்றார்கள். தமிழில் செய்யப்படுகின்ற பூஜைகளும், தமிழரின் பண்பாட்டை உணர்த்தும் சடங்களும் இதில் மிகச்சிறப்பு.

சிறு தெய்வங்கள் குடும்ப தெய்வம், குலதெய்வம், ஊர் தெய்வம் என்று மூவகையினதாகக் காணப்படுகின்றன.

குடும்ப தெய்வம்-

குடும்ப தெய்வம் என்பது ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்குரிய தெய்வம் ஆகும். இது பெரும்பாலும் குடும்பத்தில் கன்னிப் பெண்ணாக இறந்து போனவர்களே தெய்வமாகப் போற்றி வணங்கப்படுகின்றனர். குடும்பத்தின் நன்மைக்காக தற்கொலை செய்தோ, கொலை செய்யப்பட்டோ இறந்து போனவர்களை நினைவில் வைத்துக் கொள்ள இந்த குடும்ப தெய்வ முறை காணப்படுகின்றது.

தெய்வாக மாறியவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளையோ செய்தோ, பொங்கல் வைத்தோ குடும்ப தெய்வத்திற்கு பூஜை செய்யப்படுகிறது. குடும்பத்தின் தலைவரே பூஜையை செய்கிறார். வீட்டில் நடக்கின்ற நல்ல காரியங்களுக்கு குடும்ப தெய்வத்திடம் அனுமதி வாங்கிய பின்னரே செயலில் ஈடுபடுகின்றனர். சில வசதி படைத்தவர்கள் சாமி வீடு என சிறு குடிசையை கட்டி அதிலும் இந்த தெய்வத்தை வைத்து வணங்குகின்றனர்.

குடும்பத்தில் யாராவது நோய்வாய்ப்பட்டாலோ, வீட்டில் சண்டை சச்சரவு போன்ற குழப்பங்கள் அடிக்கடி நிகழ்ந்தாலோ குடும்ப தெய்வத்திற்குப் பூசை செய்வர். மந்திர தந்திரங்கள் இல்லாது, முழு நம்பிக்கையுடன் மட்டுமே பூஜை நிகழ்த்தப்படுகிறது. வருடத்திற்கு ஒரு முறை குடும்பத்தில் இருக்கும் எல்லோரும் சேர்ந்து பொங்கல் வைத்து பூஜை செய்கின்றனர்.

குலதெய்வம் –

குலதெய்வம் என்பது ஒரு குலத்தினரால் வழிபடப்படும் தெய்வம் ஆகும். தங்களுடைய குலம் தழைப்பதற்காக உதவியவர்களையும், குலம் காப்பதற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களையும் குலதெய்வங்களாக வணங்குகின்றார்கள். பல்வேறு சாதிகளுக்கு பொதுவான குலதெய்வங்கள் காணப்படுகின்றன. கருப்பு, ஐயனார், மதுரை வீரன், பெரியசாமி போன்ற தெய்வங்களை பல்வேறு சாதியை சார்ந்த மக்கள் குலதெய்வங்களாக வழிபடுகின்றனர்.

திருவிழா நாட்களிலும், குல தெய்வ சிறப்பு பூஜைகளும் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றார்கள். கொல்லிமலை தெய்வமான பெரியசாமியை கொங்கு வெள்ளாளர், சோழிய வெள்ளாளர் என பல சாதிகளை சார்ந்த மக்கள் வணங்குகின்றார்கள். இவர்களுக்கு கோவில் பங்காளிகள் என்று சிறப்பு பெயர் கிராமத்தி்ல் நிலவுகிறது. குலதெய்வங்கள் தான் தம்மைக் காப்பதாக ஒவ்வொரு குலத்தவரும் நம்புகின்றனர்.

அவர்தம் குடும்பத்தில் நடைபெறும் பிறந்த நாள் விழா, காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, திருமண விழா போன்ற விசேச நாட்களில் குலதெய்வத்திற்கு முதல் அழைப்பிதல் வைக்கும் பழக்கம் இருக்கிறது. திருமண நிச்சயம் குலதெய்வத்தின் முன்பு நடக்கும் வழக்கமும் சில இடங்களில் இருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறை சுற்றமும், கோவில் பங்காளிகளும் ஒன்றாக இணைந்து ஆட்டு கெட வெட்டி பொங்கல் வைத்து விழாவை போல சிறப்பாக வழிபாடு செய்கின்றார்கள்.

“குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறவாதே…”

“குலதெய்வத்தைக் கும்பிட்டு கும்மியடி…”

என்ற முதுமொழிகள் குலதெய்வ வழிபாட்டின் சிறப்புகளைக் குறிப்பிடுகின்றன.

ஊர் தெய்வம் –

மூன்றாவதாக ஊர் தெய்வம் என்பது அந்த ஊரில் வாழும் மக்கள் அனைவராலும் வணங்கப்படும் பொது தெய்வமாகும். ஊர் மக்களின் நன்மைக்காக உயிர்த்தியாகம் செய்த மனிதர்களின் நினைவாக எழுந்ததே இந்த வழிபாடு. சில ஊர்களில் பெரும்பான்மையோராக வாழும் இனத்தவரின் குலதெய்வமே ஊர்த்தெய்வமாக விளங்குதலும் உண்டு. சிற்ப்பு பூஜை முறைகளுடன், ஊர் நியமித்த பூசாரியே பூஜை செய்கின்றார்.

கோடாங்கி ஒரு வகையில் பூசாரி என்பர்.ஒரு தெய்வ ஆகர்ஷனம் உடையவர் என்பர். குறி சொல்லுதல் அவர்களது இயல்பு. அவர்கள் கையில் உடுக்கு(கோடாங்கி) இருக்கும். ஒரு பட்டையான கயிறு
இருபக்கங்களையும் இணைக்கும் கயிற்றுப் பின்னலை இடதுகையினால் தளர்த்தியும் இறுக்கியும் வலதுகை விரல்கள் உடுக்கின் தோல்பகுதியில் விரைந்து மோதும்போது ஒலிஎழுப்பும்.

பெண் தெய்வ வழிபாடு –

சிறு தெய்வ வழிபாட்டில் பெண் தெய்வ வழிபாடே மிகுதியாகக் காணப்படுகின்றது. பண்டைத் தமிழரிடையேயும் கொற்றவை, காளி, இசக்கி என்ற பெண் தெய்வ வழிபாடுகள் காணப்படுகின்றன. பாலை நிலத் தெய்வமாகவும் வெற்றி தரும் தெய்வமாகவும் கொற்றவை குறிக்கப்படுவதனைச் சங்க இலக்கியங்களில் காண முடிகிறது. போர்களத்தில் பிணங்களைத் தின்னும் பேய்கணங்களின் தலைவியாகக் காளி குறிக்கப்படுகின்றாள்.

“இயக்கி” என்னும் பெண் தெய்வம் சிலப்பதிகாரத்தின் வழி அறியப்படுகின்றாள். இளங்கோவடிகள் இடையர்குலப் பெண் மாதரியை அறிமுகப்படுத்தும் போது,

“அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர் பூங்கண் இயக்கிக்குப்
பால்மடை கொடுத்துப் பண்பின் பெயர்வோள்
ஆயர் முதுமகள் மாதிரி என்போள்”

என்கின்றார். பால் சோறு படைத்தல் என்பது பாயாசம், சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றைக் குறிப்பதாக இருக்கலாம்.

தொடக்கம் –

சிறு தெய்வங்கள் மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவு செய்வனவாக பாதுகாவல் தருவனவாக மக்களால் பெரிதும் நம்பப்பட்டு வருகின்றன. சிறு தெய்வங்களில் கருப்பசாமி, சுடலைமாடன், பெரியசாமி போன்ற ஆண் தெய்வங்களும் மக்களால் வணங்கப்படுகின்றன.

நாட்டுப்புற மக்கள் சிறு தெய்வங்களை மட்டுமின்றி பெருந்தெய்வங்களையும் வழிபடுகின்றனர். ஆயினும் நாட்டுப்புற மக்களிடையே சிறு தெய்வங்களே ஒன்றிக் காணப்படும் சக்தியாக விளங்குகிறது. மக்கள் தாம் வழிபடும் சிறு தெய்வங்களின் தெய்வ நிலைக்குட்பட்ட பூசாரி, அருள் வந்தோரின் குறி கூறுவதன் மூலமாக தங்கள் வாழ்க்கைச் சிக்கல்கள், தமது விருப்பங்கள் நிறைவேறும் நிலை.

நிறைவேற்றப்பட வேண்டிய வேண்டுதல்கள் ஆகியவற்றை அறிந்து கொள்வதால் சிறு தெய்வங்கள் மீது மிகுந்த பற்றுடையவர்களாகின்றனர். தென் மாவட்டங்களில் சிறு தெய்வங்களில் பெண் தெய்வ வழிபாடுகளாக முத்தாரம்மன், மாரியம்மன், இசக்கியம்மன் வழிபாடுகள் காணப்படுகின்றன. சிறுதெய்வங்கள் ஊர் மக்களைக் காக்க இரவு வலம் வருவதாகவும், அதற்கான பிரத்தியோக வானமாக குதிரை இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இது வரை சொன்னவை எல்லாம் ஒரு முன்னோட்டமே!. சொல்லப்பட வேண்டியவைகள், நாளைய தலைமுறைக்கு தெரிவிக்க வேண்டிய வரலாறுகளையும் இனி தமிழ் மண்ணின் சாமிகள் என்ற சிறு பகுப்பின் கீழ் தொடர்வோம்.

எல்லா வல்ல ஈசன் அருள் செய்வானாக!@.