மாதெருபாகன் – எதிர்ப்பு ஒரு சடங்கு

மாதொருபாகன்

 

மாதொரு பாகன் நாவல் தடைக்கோரி நீதிமன்றத்தின் படிகட்டுகளை ஏறிக்கொண்டிருப்பவர்களுக்கு இந்து மதத்தின் சடங்குகளைப் பற்றிய போதிய அறிவு இல்லையென்பது என் கருத்து. அதுவே உண்மை என்பதை இந்த இடுகையின் கடைசி வரிவரை படித்த பின்பு நீங்களும் கூறுவீர்கள்.

சூரியன், மரம் என இயற்கை வழிபாட்டையும், மாடு, நாய் என விலங்கு வழிபாட்டையும், அதற்கடுத்த செயற்கரிய செயல்செய்த மனிதர்களுக்கா நடுகல் வழிபாட்டையும் இன்னமும் இந்து மதம் காப்பாற்றிக் கொண்டே வருகிறது. ஆதிவாசிகளின் சடங்குகளை பேணிவருதல் இகழ்வானதல்ல, அவை நமக்கு வரலாறுகளை எடுத்துரைப்பது. அக்கால மக்களின் நடைமுறை வாழ்க்கையும், அறிவையும் நமக்கு கற்றுத் தருவது. எவையெல்லாம் பயத்தை தருகின்றதோ அவையெல்லாம் தெய்வமானது என்பதே உலக தொன்மவியல் எடுத்துரைப்பது. இருள், இடி, நாகம், புலி, யானை என எல்லாமே இங்கு தெய்வம்.

மண்ணின் மக்களுக்காக காட்டுப்பன்றி, புலியை எதிர்த்து வீரமரணம் அடைந்தால், புலிகுத்தி பட்டான், பன்றிக் குத்தி பட்டான் என கல்வெட்டு வடித்து வழிபாடு. கணவன் இறந்தமைக்காய் தீக்குளித்து இறந்த பத்தினிப் பெண்ணுக்கு மாலையம்மன், தீப்பாய்ந்தால் வழிபாடு. செய்யா தவறுக்காய் தீய்நீதி வழங்கி இறந்தாலும், சமூக சிக்களுக்காய் மனமுவந்து மரணித்தாலும் அவர்களுக்கும் வழிபாடு. இவையெல்லாமும் நடைந்தவைகளை காலம் கடந்தும் நம் நினைவுக்காய் முன்னோர்கள் செய்த முன்னேற்பாடு.

பெருமாள் முருகன் கையிலெடுத்துக் கொண்டது, இன்றைய நவீன உலகில் பெருநகரங்களின் வீதிக்கு வீதி திறந்து வைக்கப்பட்டிருக்கும் மெட்டியாட்ரி மருத்துவமனைகளின் யுத்தியை நம் முன்னோர்கள் கையாண்ட சடங்கு பற்றியது. முறையான உடலுறவினால் மனைவி கருதரிக்காத போது, செயற்கையாக விந்தினை செலுத்தும் முறையை நவீன மருத்துவமனைகள் கையாளுகின்றன. கணவனின் விந்தில் போதுமான அளவிற்கு ஊர்ந்து செல்லும் விந்தனுக்கள் இல்லாத போதும், உடைந்த விந்தனுக்கள் இல்லாதபோதும் பிற ஆணின் சீறான விந்தனுக்கள் செலுத்தப்பட்டு கரு உண்டாக்கப்படுகிறது. இதனை நம்முன்னோர்கள் ஓர் திருவிழாவின் இரவில் சத்தமேயில்லாமல் பல காலம்செய்து வந்திருக்கிறார்கள்.

நவீன மருத்துவர் யாரையேனும் அறிந்திருந்தால் வருடத்திற்கு இந்தியாவில் இப்படி விந்து உட்செலுத்துதல் மூலம் கருதரிக்கும் பெண்களின் எண்ணிக்கையை கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள். நிச்சயம் அதிர்ந்துப் போவீர்கள். இது ஒரு ஆபாசமான சடங்கென எதிர்ப்பு தெரிவித்தால்,. இந்து தொன்மவியலில் கிளிக்கும், மானுக்கும் என மிருகப் புணர்வு செய்த முனிவர்களைப் பற்றி எடுத்துறைக்க வேண்டியிருக்கும். அவை பற்றி இந்த வலைப்பூவிலேயே முன்பொரு முறை எழுதியிருக்கிறேன் என்பதால் இங்கு விட்டுவிடுகிறேன்.

முன்பு நிலவிய இந்த சடங்கு முறை உயிர் கொடுத்தலுக்கானது. இங்கே உயிர் எடுத்தலுக்கான சடங்கும் நிலவிவந்துள்ளது. பொதுவாக புதையலை காவல் காக்கும் பூதங்களுக்கும், தீய சக்திகளுக்கும் பலி கொடுத்தலில் சூலியை பலி கொடுத்தலும் நிகழ்ந்துள்ளது. இவை கூட சடங்குதான். கள்ளர்கள் சூலாடு, சூல்பன்றிக்குப் பின்பு சூலியான பெண்ணை பலி கொடுத்திருக்கிறார்கள். இதனை பதிவு செய்திருக்கும் கதைப்பாடலை வாசித்த போது, பொன்னிறத்தாளின் தாயின் நிலையை எண்ணினேன்,. ஓர் வசனக் கவிதையாக

நா.. பொன்மாரி. பொறக்கறது அத்தனையும் ஆம்பளையா பொறக்க.. தவமிருந்து பெத்த பொட்டபுள்ளைய ஆளாக்கி, நல்ல பயனுக்கு கட்டிக்கொடுத்து, இப்ப வயிறு நிறைஞ்சு நிக்குது. இந்தா வாரேன்னு தோழிகளோடு ஓடைக்கு போனபுள்ள வீடுவந்து சேரல.. வானம் கருத்து பேய்காத்து வீசுது. கூட போன புள்ளைக ஒன்னுமொட்ட திரும்பிவந்து… காட்டாளம்மன் கோயிலுல கற்பினியவ தனிச்சிருக்கா.. பத்திரமா போய் பாங்கா கூட்டிக்கிட்டு வாங்குதுங்க.

முன்னேப் பெத்த ஏழுகளோட காட்டாளம்மன் கோயிலுக்கு போறேன். ஆடிக் காத்துல அடிமேல அடிவைச்சு அழகா நடந்துவர யாரால முடியும். அடிக்கிற எதிர்காத்துல.. அம்மன் கோவிலுக்கு வர அரும்பாடு பட்டாச்சு. கோயிலுக்கு முன்னாடி குறுதியோட ஆடு கிடக்கு. பலியா கிடக்கறது சூலாடுன்னு புரிஞ்சு.. அடேய் ஓடுங்கடா.. உன்தங்காவ பாருங்கடான்னு கத்தறேன். முன்னாடிப் போனப் பயளுக வெவவெளத்து நிக்க…

மூச்செறைக்க ஓடிவந்து முன்னெட்டி பார்க்கிறேன். ஆசை மவ அம்மணமா, அம்மன் முன்னாடி தான் கிடக்கா..பக்கத்துல தலைவாழ இலையில அவ தலைச்சம் புள்ள கரிகெடக்க… ஒம்போது மாசம் புள்ளைய சுமந்த வயிறு.. ஒன்னுமில்லாம கிழிச்சு திரீயேத்தி நிக்குது. பாவிமக நா செஞ்ச பாவமென்ன… இப்படி பலியாட கிடக்கிற மகளைகாண நா செஞ்ச பாவமென்ன….

பூச்சியம்மன் பட்டபிரான் கதை – தமிழ் மண்ணின் சாமிகள்

கதையின் நாயகனான பட்டபிரான் திருநெல்வேலி வல்லநாட்டினை சார்ந்த மறவன். தனது தொழிலுக்காக மேற்கே இருக்கும் ஊரான பாவூர் கிராமத்திற்கு செல்கிறான். அங்கு பொல்லாம் பூச்சி என்றொரு அருந்ததியினப் பெண்ணை காண்கிறான். இருவரும் காதல் கொள்கின்றார்கள்.

ஓர்நாளில் பொல்லாம் பூச்சியும், பட்டபிரானும் காதல் திருமணம் செய்துகொள்ள வீட்டினை விட்டு வெளியேறிவிடுகிறார்கள். அவர்களுடன் பூச்சி என்ற நாயும் வருகிறது. உழக்குடி என்ற கிராமத்திற்கு அருகே இருக்கும் காட்டுப் பகுதியில் தங்குகிறார்கள். தங்களுடைய பசியினைப் போக்கிக் கொள்ள கிராமத்திலிருக்கும் ஆட்டினை திருடி சமைத்து உண்கிறார்கள்.

பூச்சியம்மன் பட்டபிரான் கதை

பூச்சியம்மன் பட்டபிரான் கதை

எட்டு நாட்களுக்கு ஒருமுறை ஆடு களவு போவதை கிராமத்துக்காரர்கள் கண்டுகொள்கிறார்கள். அப்போது பொல்லாம் பூச்சியை தேடிவரும் ஏழு அண்ணன்மார்கள் அக்கிராம்த்திற்கு வருகிறார்கள். அவர்களின் விசாரனையில் ஆடு களவு போவதும், காட்டுனுள்ளே நண்பகலில் வெண்புகை வருவது பற்றி அறிந்து கொள்கிறார்கள்.

பாறையொன்றில் ஏறி புகை வரும் நேரம் வரை காத்திருக்கிறார்கள். புகை வருவதைக் கண்டபின் அதனை நோக்கி செல்கிறார்கள். அங்கு பொல்லாம் பூச்சியின் மடியில் தலை வைத்துப் படுத்திருக்கும் பட்டபிரானை கண்டு கோபம் கொண்டு தங்களுடைய ஈட்டியால் குத்தி கொல்கிறார்கள். அப்போது சத்தமிடும் நாயையும் கொன்றுவிடுகின்றனர்.

அண்ணன்மார்கள் தங்களுடன் பொல்லாம் பூச்சியை வந்துவிடும்படி கூறுகின்றனர். அவள் தன்னுடைய கணவனும், செல்லப்பிராணியும் கொலையுண்டது கண்டு மனம்நொந்து அண்ணமார்களுடன் செல்ல மறுக்கிறார்கள். அளவு கடந்த அன்பு வைத்திருக்கும் இறுதி சகோதரன் தடுத்தும் கேளாமல் மற்றோர் பொல்லாம் பூச்சியையும் கொன்றுவிடுகின்றனர்.

வந்த பிணி முடிந்து பாவூர் திரும்பும் அண்ணன்மார்களில் முதல் ஆறு நபர்களும் வழியிலேயே இறந்துவிடுகின்றனர். அதற்கு தன் தங்கையான பொல்லாம்பூச்சியே காரணம் என நினைத்து இளைய அண்ணன் கோயில் எழுப்பி வழிபடுகிறார்.

பூச்சியம்மன் பட்டபிரான் கதையை அறிந்த பொழுது வழமையான காதல் கதையில் நிகழ்வது தான் இதுவென அலட்சியம் செய்ய முடியவில்லை. மறவருடன் ஓடிப்போன பெண்ணான பொல்லாம்பூச்சியையும் கொன்றிருப்பதை காணுகையில் அருந்ததி இனத்தில் இருந்த கட்டுப்பாடுகளும், மறவர் இனத்தில் திருமணம் செய்து கொண்டாலும் ஏற்கா உறவுகளையும் ஆலோசிக்க வேண்டியுள்ளது. காலம் அருந்ததி இனத்தினையும், மறவர் இனத்தினையும் மாறுபட்ட இடத்தில் வைத்துள்ளதா என வரலாற்று ஆய்வாளர்கள் தான் நோக்க வேண்டும்.

செவிட்டு சாமியின் கதை

ஈசனை வணங்குவதற்காக சிவாலயம் சென்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்பொழுதெல்லாம் சிவாலயம் சென்றால் தூணில் என்ன செதுக்கியிருக்கின்றார்கள். கோபுரத்தில் இருக்கும் சிற்பங்களின் கதையென்ன என்று ஆய்வு செய்து கொண்டே திரும்பிவிடுகிறேன். எப்பொழுதாவது ஈசனை வணங்க வேண்டுமென்றால், அக்கணமே நினைவில் வேண்டுவதோடு சரி.

ஆனால் சிறுவயதில் யாரேனும் கூறிய நியதிகளுடன் மிகக்கவனமாக ஈசனை வணங்குவேன். சிவாலயங்களின் வழிபாட்டு முறைகளையும், எந்த எந்த தெய்வங்களை எப்படி வணங்க வேண்டும் என்று வழிகாட்டுகின்றார்களோ அப்படியே வணங்கியிருக்கிறேன். கருவறையில் இருக்கும் லிங்கத்தினை வணங்கிவிட்டு சுற்றி வருகையில் தெற்கு நோக்கிய தட்சிணாமூர்த்தி, மேற்கு நோக்கிய விஷ்ணு, வடக்கு நோக்கிய பிரம்மா ஆகியோரை தரிசித்துவிட்டு தனியாக சந்நிதி கொண்டிருக்கும் செவிட்டு சாமியிடம் வருவேன்.

எத்தனை பலமாக கைதட்ட முடிகின்றதோ அத்தனை பலமாக தட்டி அட்டனஸ் போட்டுக் கொள்வேன். நான் அறிந்தது செவுட்டு சாமி எப்பொழுதும் சிவனை நினைத்து தியானத்தில் இருப்பார். அவருக்கு நாம் வந்திருக்கிறோம் என்பதை சொ்ன்னால்தான் நல்லது நடக்கும் என்று எனக்கு கற்பிக்கப்பட்டிருந்தது. சிலர் சொடுக்கிடுவார்கள். எனக்கு சத்தமாக சொடுக்கிட வராது என்பதால் கைதட்டுவேன். கொஞ்சம் வளர்ந்த பொழுது செவுட்டு சாமியின் பெயர் சண்டீசர் என்பதை அறிந்தேன் அத்துடன் சத்தம் அதிகமில்லாமல் சொடுக்கிடுவேன். இவ்வாறு சொடுக்கிடுவதும், கைதட்டுவது தவறு அவரை அமைதியாக வணங்கவேண்டும் என்று சிலர் கூறினார்கள்.

சண்டீசர்

சண்டீசரை வணங்குவதற்கு இத்தனை கெடுபிடிகளா?. யார் இவர்?. இவரை எப்படிதான் வணங்குவது? என்று அறிந்து கொள்ள ஆவல் பிறந்தது.

“சண்டீசர்” என்பது நான் நினைத்துக் கொண்டிருந்த மாதிரி ஒரு சாமியே அல்ல. அது ஒரு பதவி. எப்படி அலுவலகங்களில் கணக்கு அதிகாரி இருக்கின்றாரோ!, அதுபோல சண்டீசர் என்பது சிவாலயத்தின் நிர்மால்ய அதிகாரப் பதவி. நிர்மால்யம் என்பது சிவபெருமானுக்கு படைத்த பொருள்களையும், அவருக்கு அணிவித்த ஆடைகள், மாலைகள் என அனைத்தையும் குறிக்கின்ற சொல். நிர்மால்யம் என்ற சொல்லிற்கு நிகராக சிவப்பிரசாதங்கள் என்ற தமிழ் சொல்லைப் பயன்படுத்தலாம்.

சண்டீசர் என்பது ஒரு பதவியென்றால், அதை கொடுப்பவர் யார்?. வேறு யார் சிவன் தான். யார் சிவன் மீது அதீத பாசத்தினையும், சிவ நிந்தனை செய்வோரிடத்து அதீத கடுமையும் கொள்கின்றார்களோ, அவர்களுக்கு சிவன் இப்பதவி தருகின்றார். இவ்வாறு சிவனிடமிருந்து பதவி பெற்றவர்களின் பட்டியல் சரிவர தெரியவில்லை. நான்முகனான பிரம்மா சதுர்முக சண்டீசர் என தில்லையிலும், தர்ம அதிகரியான யமதேவன் யம சண்டீசர் என திருவாரூரிலும் இருக்கின்றார்கள். மற்ற சிவாலயங்களைப் பொறுத்த வரை சண்டீச பதவியில் இருப்பவர் விசாரசருமர் எனும் சிவபக்தர்.

விசாரசருமர் –

எச்சத்தன் – பவித்திரை என்ற பிராமணத் தம்பதியரின் மகன் விசாரசருமர். ஒரு முறை இடையரினச் சிறுவன் பசுவினை துன்புருத்துவது கண்டு ஆவேசம் கொண்டு, அவனைத் தடுத்து, அவனிடமிருந்த பசுக்களை பராமரிக்கத் தொடங்கினார். சில நாட்களில் பசுக்களின் பாலை இறைவனுக்கு அபிசேகம் செய்ய எண்ணி, மணலினால் லிங்கம் அமைத்து அதற்கு அபிசேகம் செய்து வந்தார். பசுவிற்கு உரியவர்கள், பாலை மண்ணில் கொட்டி வீணாக்குகிறானே என்று எச்சத்தனிடம் கடிந்து கொண்டனர்.

எச்சத்தனும் இதை தடுத்த நிறுத்த பூசையிலிருந்த விசாரசருமரிடம் பேசிப் பார்த்தார். விசாரசருமர் கண்டுகொள்ளாமல் பூசையிலேயே கவனமாக இருந்தார். கோபம் கொண்ட எச்சத்தன் கோலால் விசாரசருமரை அடித்தும் பார்த்தார். விசாரசருமர் அசைவதாக இல்லை. பூசைக்கு வைத்திருந்த பால்குடத்தினை காலால் எத்தி தன்னுடைய கோபத்தினை காண்மித்தார் எச்சத்தர். சிவ அபிசேகத்திற்கு வைத்திருந்த பாலை உதைத்து தள்ளியமைக் கண்டு விசாரசருமருக்கு கோபம் வந்தது. தன்னருகே இருந்த கோலொன்றை எடுத்து எச்சத்தனின் காலை நோக்கி வீசினார், கோல் மழுவாக (கோடாரி) மாறி காலை வெட்டியது.

பெற்ற தகப்பன் எனவும் பாராது சிவநிந்தனை செய்தமைக்காக தண்டனை கொடுத்தபடியால், சிவன் பார்வதி சமேதராக தோன்றி, த்வனி சண்டர் பதவி தந்தார். இவரை அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராக சேக்கிழார் தனது பெரிய புராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சண்டீசரை வணங்கும் முறை

சிவாலய தரிசனமும், சிவ வழிபாடும் சண்டீசரை வணங்கினால் மட்டுமே நிறைவடையும். எனவே இவர் சந்நிதியில் “அம்மையையும் அப்பனையும் தரிசித்த பலனைத் தந்தருள வேண்டும்” என்று வேண்டி, சிவாலய பிரசாதமன திருநீறு, மலர் போன்றவற்றைச் சமர்பித்து வணங்க வேண்டும். பின் தாளத்திரயம் எனப்படும் பூஜை தாள முறையை செய்யலாம். இதற்கு வலது கையின் நடுவிரல்களை இடதுகையின் உள்ளங்கையில் மும்முறை மெதுவாக தட்ட வேண்டும். அதைவிடுத்து கைகொட்டுவதும், சொடுக்கிடுவதும், ஆடையிலிருந்து நூல் எடுத்து அணிவிப்பதும் முறையன்று. இவருக்கும் மூலவருக்கும் இடையே வருதல் கூடாது என்பதால் இவருடைய சந்நிதியை வலம் வருதல் தடை செய்யப்படுகிறது.

கருவி
* பெரியபுராணம் – திருமுருக கிருபானந்தவாரியார்

மேலும்
சண்டர்
சண்டேசுவர நாயனார்

பிள்ளையாரின் பிறப்பு

இன்று பிள்ளையார் தனது எத்தனையாவது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடுகிறார் என்று தெரியவில்லை. அவர் பிறந்தநாளை கொண்டாடும் நம்மில் பலருக்கு அவருடையப் பிறப்பு பற்றிய ஐந்து ஆறு கதைகள் தெரியும்.

1) பிள்ளாயார் பார்வதியின் அழுக்கிலிருந்து பிறந்தவர்
2) பிள்ளையார் சிவனின் நெற்றிக்கண் நெருப்பிலிருந்து பிறந்தவர்
3) பார்வதியின் சாபத்தால் சிவனே பிள்ளையாராக மாறினார்
4) முழுமுதற்கடவுளான பிள்ளையார் பார்வதி சிவனின் தவத்தினால் அவர்களுக்குப் பிள்ளையாக பிறந்தார்
5) வாதாபியிலிருந்து பிள்ளையாரை பல்லவர்கள் கொண்டுவந்தார்கள்.

vinayagar_01

இப்படியாக பிள்ளையாரின் பிறப்பு பற்றிய கதைகள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் இந்தப் பிள்ளையாரைப் பற்றி விக்கப்பீடியாவிற்காக தேடிய பொழுது பிள்ளையார் என்று நாம் கும்பிடும் தெய்வத்தை நம்முடைய முன்னோர்கள் ஆணாக வழிபடவில்லை என்ற தகவல் கிடைத்தது.

மனிதர்கள் இயற்கையை வழிபட ஆரமித்தன் காரணம் இயற்கையின் மீதான பயமே காரணம். இயற்கையின் மீதான பயம் போய்விட்ட பின்பு அந்த வழிபாடு மக்களால் புறக்கணிக்கப்பட்டு விடுகிறது. உதாரணத்திற்கு தமிழர்களின் வருணன் மற்றும் இந்திரன் வழிபாடுகள். அவற்றில் சில வழிபாடுகள் பிற்காலத்தில் வேறு உருவம் பெற்று தங்களை தக்கவைத்துக் கொள்கின்றன. அவ்வாறான ஒரு வழிபாடு பிள்ளையார் வழிபாடு.

பண்டைய இலக்கியங்களில் பிள்ளையார் பற்றி தகவல்கள் இல்லை. பிற்கால இலக்கியங்களில் பிள்ளையார் வழிபாடு மற்ற தெய்வங்களை விட முதன்மையாக முன்னிருத்தப்பட்டது விசித்திரம். மனிதர்களின் முயற்சிகளுக்கு கேடு விளைவிக்கும் தெய்வமாக பிள்ளையார் கருதப்பட்டுள்ளார். வங்காள ராஜ்யத்தில் உழத்தியர் எனும் உழவர்களின் தெய்வமாக பிள்ளையார் உள்ளார். உழவுத் தொழிலின் பல செயல்களிலும் பிள்ளையார் தொடர்புபடுத்தப்படுகிறார்.

உழவர்களின் தெய்வமாகவும், முயற்சிகளுக்கு கேடு விளைவிக்கும் தெய்வமாக கருதப்பட்டதால் பயர்களை நாசம் செய்யும் காட்டு யானைகளுக்கப் பயந்து இந்தப் பிள்ளையார் வழிபாடு துவங்கப்பட்டிருக்கலாம். புராணங்களிலும் பிள்ளையாரை வழிபடாமல் போனதால் தான் பாற்கடலிருந்து ஆலகாலம் தோன்றியது எனவும், சிவானின் தேர் உடைந்தது என்றும் பல்வேறு கதைகள் கூறுகின்றன. முன்னோர்கள் கருதிய முயற்சிகளுக்கு கேடுவிளைவிக்கும் என்ற கோட்பாடு முழுவதுமாக மாறாமல் இன்றுவரை உள்ளது. புராணகால கடவுள்கள் அனைவரையும் பின்னுக்குத்தள்ளி முதல்வனாக வணங்கப்படும் அந்தஸ்து இதனால்தான் கிடைத்தது.

பிள்ளையாரின் மீதான பயம் குறைந்து சந்திகளிலும், குளக்கரைகளிலும், வாய்க்கால் வரப்புகளிலும் வழிபடதொடங்கிய பொழுது, அவர் செழிப்பின் கடவுளானார். சிவபெருமான் சிச்ஸ் பேக் வைத்திருக்கும் பொழுது அவருடைய பிள்ளை தொப்பை வயிற்றுடன் இருப்பதற்கான காரணம் செழிப்புதான். (குபேரனுக்கும் தொப்பை உண்டு. பொண்ணுங்க தொப்பை வைக்கிறத ஏத்துக்காம திருமகளை சிலிம் ஆக்கிவிட்டார்கள்) . அஷ்டஇலட்சுமிகளோடு மருமகன் பிள்ளையாரும் செல்வத்தின் அதிபதியாக வணங்கப்படுகிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள் தானே.

வடக்கே தெற்கே ஒட்டி
வலது புறம் மூரி வச்சு
மூரி ஒழவிலே
முச்சாணி புழுதி பண்ணி
சப்பாணி பிள்ளையார்க்கு
என்ன என்ன ஒப்பதாமாம்!

முசிறி உழவிலே
மொளைச்சாராம் பிள்ளையாரு

ஓடு முத்தும் தேங்காயை
ஒடைக்கறமாம் பிள்ளையார்க்கு
குலை நிறைஞ்ச வாழைப்பழம்
கொடுக்கறமாம் பிள்ளையார்க்கு
இத்தனையும்ஒப்பதமாம்
எங்கள் சப்பாணி பிள்ளையார்க்கு!

மீண்டும் பழைய இடத்துக்கு வருவோம், பிள்ளையாரின் பிறப்பு. மேலேயுள்ள நாட்டார் பாடல் “முசிறி உழவிலே மொளைச்சாராம் பிள்ளையாரு” என்று ஏர்ச்சாலால் உழும் பொழுது மண்ணிலிருந்து பிள்ளையார் பிறந்தார் என்ற உழவர்களின் நம்பிக்கையை கூறுகிறது. வேதகால கடவுளான சிவபெருமானுடன் பிள்ளையார் வழிபாட்டை இணைக்க நினைத்தவர்களால் மேலே நாம் பார்த்த ஐந்து ஆறு கதைகள் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு இணைக்கப்பட்டிருக்காவிட்டால் வங்காளத்தில் சிறுதெய்வாக வணங்கப்பட்டு பிள்ளையார் வழக்கிலிருந்து போயிருப்பார்.

வெள்ளாளர்களுக்கு நன்றியுணர்வு அதிகம். தங்களுடைய வெள்ளாண்மை முடிந்து அறுவடை வந்ததும், தங்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவி்ப்பார்கள். உழவர்கள் சூரிய கடவுளுக்கு எடுக்கும் பொங்கல் திருவிழாவை ஒத்து பிள்ளையார் திருவிழாவும் நடந்திருக்கிறது.

மாட்டுக் கொளப்படையில்
மாவுருண்டை ஆயிரமாம்
எருதுக் கொளப்படையில்
எள்ளுருண்டை ஆயிரமாம்
ஆட்டுக் கொளப்படையில்
அதிரசம் ஆயிரமாம்
கண்ணுக் கொளப்படையில்
கடலுருண்டை ஆயிரமாம்
குட்டிக் கொளப்படையில்
கொழுக்கட்டை ஆயிரமாம்
பண்ணிக் கொளப்படையில்
பணியாரம் ஆயிரமாம்
இத்தனையும் ஒப்பதமாம் – எங்க
சப்பாணிப் பிள்ளையார்க்கு!

மாவுண்டை, எள்ளுருண்டை, அதிரசம், கடலுருண்டை, கொழுக்கட்டை, பணியாரம் என்று தங்களின் உணவுப்பொருட்களை பிள்ளையாருக்குப் படைத்து தங்களுடைய மகசூல் திருவிழாவை கொண்டாடியிருக்கின்றார்கள். பணம் முதல் இனப்பெருக்கம் வரை பெண்ணோடு தொடர்படுத்தி அம்மனாக வழிபடும் வழக்கம் சாக்தம். தாய் தெய்வம், கன்னி தெய்வம் என எல்லாவற்றையும் பெண்ணாக பார்த்தே பழக்கம் கொண்டவர்கள் பிள்ளையாரையும் பெண்ணாக்கினார்கள். அதற்குள் பிள்ளையார் சிவமைந்தனாக மக்களிடம் சென்று சேர்ந்துவிட்டதால் இந்த பெண் பிள்ளையார் வழிபாடு அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே இருந்துள்ளது. தற்போது சுசீந்திரம் கோயிலில் பெண் பிள்ளையாரை தரிசிக்கலாம்.

காளையே ஏறு..
முந்தி முந்தி வினாயகனே!
முக்கண்ணானார் தன் மகனே!
கந்தருக்கு முன் பிறந்த
காளைக் கணபதியே – (காளையே)
வேலருக்கு முன் பிறந்த
விக்கினரே முன் நடவாய்
ஊருக்கு மேற்காண்டே
ஒசந்த தொரு வெப்பாலை
வெப்பாலை மரத்தடியில்
சப்பாணி பிள்ளையாராம்
சப்பாணிப் பிள்ளையார்க்கு
என்ன என்ன ஒப்பதமாம்!
நீரு முத்தும் தேங்காயாம்
நிமித்தியமாம் பிள்ளையார்க்கு
கொத்தோடு தேங்காயாம்
குலைநிறைய வாழைப்பழம்
இத்தனையும் ஒப்பதமாம் – எங்க
சப்பாணி பிள்ளையார்க்கு – (காளையே)

வண்டு மொகராத – ஒரு
வண்ண லட்சம் பூ வெடுத்து
தும்பி மொகராத
தொட்டு லட்சம் பூவெடுத்து
எறும்பு மொகராத
எண்ணி லட்சம் பூவெடுத்து
பாம்பு மொகராத
பத்து லட்சம் பூவெடுத்து
வாரி வந்த பூவையெல்லாம்
வலப்புறமாய்க் கொட்டி வச்சேன்
கொண்டு வந்த பூவை யெல்லாம்
கோபுரமா கொட்டி வச்சேன்
குளத்திலே ஸ்நானம் பண்ணி
கோலு போல நாமமிட்டு
பொழுதேறிப் போகுதிண்ணு
வெள்ளி யொறைச்சி நாமமிட்டு
இத்தனையும் ஒப்பதமாம் – எங்க
சப்பாணிப் பிள்ளையார்க்கு!

பிள்ளையாரை சிவமைந்தனாக ஏற்றுக் கொண்டாலும் தமிழ் உழவர்கள் வழிபாட்டு முறையை மாற்றவி்லலை. தமிழர் வழிபாட்டு முறையை மேலேயுள்ள நாட்டார் பாடல் விவரிக்கிறது.

எங்கோ தோன்றி எப்படியோ பிள்ளையார் வழிபாடு இன்று இந்தியாவெங்கும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பிள்ளையாரே!

கட்டுரைக்கு உதவி –
தமிழர் நாட்டுப்பாடல் நூல் – நா வானமாமலை எம்.ஏ. எல்.டி

திகைக்க வைத்த திருப்பதி பயணம் -3

திருமலையை விட்டு கீழிறங்கும் போது வேறு பாதையில் வருவதை அறிய முடிந்தது. பல இடங்களில் மரக் கன்றுகள் பராமரிக்கப்பட்டுக் கொண்டு இருந்தன. சில இடங்களில் நடைபயணம் மேற்கொள்வோர்களுக்கான படிக்கட்டுகளும், ஓய்வு அமைப்புகளும் இருந்தன. அதை தவிர நிர்வாக அமைப்புக்காக உள்ள சில கட்டிடங்கள், சிறு கோவில்கள். இவை தவிற வேறெந்த கட்டிடங்களோ, வீடுகளோ மலை முழுக்க இல்லை. இன்னும் கூட காடுகளாகவே திருமலை பாதுகாக்கப் பட்டு வருதல் மகிழ்ச்சி. மான்கள் சிலவற்றை சாலையின் ஓரம் பார்க்க முடிந்தது. சுதந்திரமாக திரிந்து கொண்டிருந்தன. சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதென சில நேரங்களில் செய்திதாள்களில் படித்திருக்கிறேன். ஆனால் அவைகள் கண்களில் படவில்லை. திருமலைக்கு செல்லும் நேரத்தினை விட மிகக் குறைவான நேரத்திலே மீண்டும் நகரை அடைந்தோம்.

பேருந்து பங்களா போன்ற தோற்றம் அளிக்கக் கூடிய பெரிய கட்டிடத்தினை நோக்கி சென்றது அங்கு எ.பி.டிராவல்ஸ் என்று எழுதப்பட்ட பத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் நின்றுகொண்டிருந்ததன. ஆந்திர அரசாங்கத்தின் சுற்றுலா மேம்பாடுத் துறை பெரிய அளவில் செயல்படுவதற்கு அந்த கட்டிடமே சாட்சி. வழிநடத்துனர் எங்களிடம் வந்து “முதல் மாடியில் ரெஸ்ட் ரூம் இருக்கு, அதற்கு பக்கத்திலேயே ரெஸ்டாரன்ட் இருக்கு சாப்பிட்டுட்டு எல்லோரும் கீழே வந்திடுங்க” என்று கூறி, ஆளுக்கொரு டோக்கன் கொடுத்தார். லிப்டுக்கு எங்களோடு வந்தவர்கள் நிற்க, முதல்மாடிதானே படிக்கட்டில் செல்லாம் என படிக்கட்டை தேடினோம். வலது பக்க திருப்பத்தில் அமைந்திருந்த படிக்கட்டின் மேலே “” என்று எழுதியிருந்தது அறிவிப்பு பலகை. திருமலையின் மேல் பழந்தமிழர்களின் வாழ்வியலை கூறிக் கொண்டு தமிழ்கல்வெட்டுகள் இன்னுமும் இருக்கின்றன. ஆனால் கீழே தமிழ் கொலை செய்யப்பட்டு கிடக்கின்றது.

தமிழ் கொலை

தமிழ் கொலை

அனைவருக்கும் முழு சாப்பாடு வழங்கப்பட்டது. நாங்கள் உண்டு முடித்தும் பலர் இன்னும் மும்முரமாக அந்த வேலையில் இருந்ததால், கட்டிடத்தினை சுற்றிப் பார்க்க சென்றோம். சென்னை மயிலாப்பூர், கலங்கரை விளக்கம் போன்ற இடங்களில் அமைந்திருக்கும் மின்சார தொடர்வண்டிகளுக்கான பிரம்மாண்ட கட்டிடங்களைப் போல இருந்தது. குறைவான அளவே மக்கள் இருந்ததால் கட்டிடத்தின் பேரமைதியும், பெரும் இடமும் நன்கு தெரிந்தது. ஆன்மீக நூல்கள், குளிர்பான விற்பனையகம் என்று குட்டி குட்டியாய் கடைகள் இருந்ததன. கலை அலங்காரப் பொருள்கள் விற்பனையகம் மட்டும் பெரியதாக இருந்தது. ஸ்பென்சரில் இருப்பது போல கட்டுப்படியாக விலையில் பொருள்கள் விற்கப்பட்டன. வெங்கியின் மரத்தாலான உருவம் லட்சக்கணக்கான விலைப்பட்டியலைக் கொண்டிருந்தது. தஞ்சை தலையாட்டி பொம்மைகள், சிறு சிறு கற்சிலைகள், வெங்கல சிலைகள் என ஏகம் இருந்தன. பேருந்தை தவற விட்டுவிடப்போகிறோம் என வாசல் நோக்கி வந்தோம்.

எங்களுடன் வந்தவர்களை ஆந்திரா ஈசல்கள் பயமுறுத்திக் கொண்டிருந்தன. சிங்கம், புலி போன்ற பெரிய கொடும் விலங்களுக்கெல்லாம் மனிதன் பயப்படுவதில்லை. சிறு உயிர்களான கொசுவுக்கும், ஈசலுக்கும் பயந்து போகிறோம். இயற்கை சமநிலையை தகர்க்காமல் விட்டிருந்தால் இந்தநிலை மனிதனுக்கு வந்திருக்காது. கொசு, ஈ, ஈசல் என சிறு பூச்சிகளை உண்ணும் பெரும்பாலான பறவைகள் அழிந்துவிட்டன. ம்ஹூம்… நாம் அழித்துவிட்டோம். இதில் தப்பி பிழைத்த பறவை காக்கா மட்டுமே. ஆனால் அவைகளுக்கு பூச்சிகளை உண்ண பிடிப்பதில்லை. இவையெல்லாம் நாமே செய்து கொண்ட வினை. பேருந்து புறப்பட தயாரானது. உண்ட களைப்பில் பத்மாவதி அம்மன் கோவிலுக்கு போவதையே மறந்திருந்தோம். வழிநடத்துனர் அம்மனை பார்க்க சிலரே விருப்பம் தெரிவிக்கின்றார்கள், நிச்சயம் அம்மனை பார்க்கனுமா, இல்லை நேராக சென்னை சென்றுவிடலாமா என்று கேட்டார். முதல்முறையாக வந்திருக்கிறோம், பார்த்துவிட்டு செல்லலாம் என்று நாங்கள் முடிவெடுத்தோம், எங்களுடன் சிலர் மட்டுமே வர தயாராக இருந்தார்கள்.

பேருந்திலி்ருந்து இறங்கியதுமே, “கோவிலில் 40 ரூபாய் டிக்கெட் இருக்கும் அதை எடுத்துக் கொண்டு செல்லுங்கள், வேகமாக தரிசனம் செய்துவிட்டு வந்துவிடலாம். தாமதமாக்காதீர்கள்” என்று அறிவுரை கூறினார். அவர் கூறியதை போலவே 40 ரூபாய் டிக்கெட் எடுத்துவிட்டு கோவிலினுள் நுழைந்தோம். சுற்றுப் பிரகாரங்களில் எத்தனை இரும்பு தடுப்பு அமைத்து பாதை போட முடியுமோ அத்தனை போட்டிருந்தார்கள். மின்விசறிகள் கூட சிறிது இடைவெளிவி்ட்டு விட்டு தொடர்ந்தது. அம்மனை தரிசித்துவிட்டு வரும் வழியில் ஒரு பெரிய உண்டியலை சுற்றி பாதை அமைத்திருந்தார்கள். தனியே உண்டியலை வைத்தால் மக்கள் எங்கே மறந்துவிட போகின்றார்களோ என்று சிந்தித்திருக்கின்றார்கள். தரிசனத்தினை விட லட்டுக்குத்தான் பெரிய வரிசை இருந்தது. ஒரு லட்டு பத்துரூபாய்க்கு கிடைக்கிறது. அலுவலகத்தில் கொடுக்க வேண்டி சில லட்டுகளை வாங்கிக் கொண்டோம். திருமலையில் கொடுக்கப்பட்ட லட்டுபோல் இல்லாமல் முந்திரி திராட்சையோடு சுவையும் குறைந்தே காணப்பட்டது. 40 ரூபாய் டோக்கனுக்கு 2 லட்டுகள் வேறு கொடுக்கின்றார்கள். கட்டாய பிரசாதம். ஆனால் அதே பிளாஸ்டிக் பை. அப்போதுதான் திருப்பதி தேவஸ்தானமே இதை நடத்துகின்றது என்று புரிந்தது.

கோவிலுக்கு வெளியே தாமரை, ருத்திராட்சம், படிகமாலை என எல்லாமே விற்பனை செய்யப்படுகிறது. ருத்திராட்சம் மரத்தின் கிளையோடு வெட்டி வைத்திருந்தார்கள் சிலர். கோவிலுக்கு வராத பலர் எங்களின் வருகைக்காக பேருந்தில் காத்திருந்தார்கள். அனைவரும் வந்ததும், வழிநடத்துனர் “இதோடு நான் போயிடுவேன். இனிமே இவர்தான் கூட வருவார். இவர்க்கிட்ட எந்த இடத்தில் நிறுத்தனுமுன்னு முன்னாடியே சொல்லிடுங்க” என்று அறிவுரை கூறிவிட்டு விடை பெற்றார். நாங்கள் யார் யாருக்கு எத்தனை லட்டுகள் கொடுக்கப்போகிறோம் என்று பட்டியல் தயாரித்துக் கொண்டிருந்தோம். பேருந்து சென்னை நோக்கி முன்னேற, கொஞ்சம் கண்கள் அயர்ந்தோம், சில மணி நேரங்களில் சைதை பனகல் மாளிகை அருகே பேருந்து நின்றது. அப்போது மணி இரவு 1.30. எங்களின் திருப்பதி பயணம் இனிதே முடிந்தது.

முதல் முறை என்பதாலும், முறையான தகவல்கள் இல்லாததாலும் இந்தப் பயணத்தில் பலவற்றை அறியமுடியவில்லை. திருப்பதியே செல்ல வேண்டாம் என்று நினைத்தவன், இப்போது நினைப்பதெல்லாம் இரண்டு மூன்று நாட்கள் திருப்பதியில் இருக்கும்படியாக செல்ல வேண்டும் என்பதே. எல்லா கோவில்களிலும் கருவறை தவிற நிறைய இருக்கிறது, திருப்பதியிலும் அவ்வாறு இருந்திருக்கும். ஆனால் இந்த பயணத்தில் கருவறை வேறொன்றை கூட கண்களால் பார்க்க முடியவில்லை. கருவறைக்கே செல்லாத ஒரு திருப்பதி பயணம் வரும் காலத்திலாவது சாத்தியப்படுமா என பார்க்கலாம்.

திகைக்க வைத்த திருப்பதி பயணம் -2

திகைக்க வைத்த திருப்பதி பயணம் – 1

வழிகாட்டியாக வந்தவர் வாகன மண்டபம் என்ற இடத்தினை குறிப்பிட்டு காட்டி, தரிசனம் முடித்ததுமே இங்கு வந்துவிடுங்கள். தரிசனத்திற்கு நான் வரமாட்டேன் என்று கூறிவிட்டு திருப்பதி கோவிலுக்குள் அழைத்து சென்றார். வெள்ளை வெள்ளேறென கோபுரங்கள் இருக்க கலசங்கள் மட்டும் தங்க நிறத்தில் தகதகத்தன. கற்கோபுரங்களையும், வர்ண கோபுரங்களையும் விட ஈர்ப்பானது இல்லையென்றாலும் புதுமையாக இருந்தது. பிரகார வீதியிலிருந்து ஒரு மண்டபத்திற்கு வந்தோம். அங்கிருந்த வரிசையில் இணைந்தோம். எங்கள் காத்திருப்பு நேரம் கணக்கிடப்பட தொடங்கியது.

சிலர் கைகளில் வாட்டர் பாட்டில் வைத்திருந்தார்கள். நாங்கள் வாங்கியதை பேருந்திலேயே விட்டுவிட்டு வந்திருந்தோம். இதை கோவிலுக்குள் அனுமதிப்பார்களோ மாட்டார்களோ என்ற தயக்கமே காரணம். ஆனாலும் அதையெல்லாம் மறந்து புராணங்கள் பற்றியும், திரைப்படங்கள் பற்றியும் கதையடிக்க தொடங்கினோம். வரிசை மெதுவாக மெதுவாக ஊர்ந்து ஒரு சிறைபோன்ற அமைப்பினை எட்டியது. அதனை பெட்டி என்று சொன்னார்கள். ஏற்கனவே அமர்ந்திருந்த கூட்டத்துடன் ஐக்கியமானோம். அந்த அமைப்பின் வலது மூளையில் திடீறென திண்பன்டங்கள் விற்கப்பட்டன. ஈக்கள் மொய்ப்பது போல ஒரே கூட்டம். அது அடங்கியப் பிறகு முறுக்கு வாங்கிவந்து கொறிக்கத் தொடங்கினோம். அறையின் வெளியில் தண்ணீர் இருந்தது, கழிவறையும் கூட சுத்தமாக இருந்தது. எல்லாம் முடித்து அறைக்கு திரும்பினோம்.

இப்போது அதே வலது மூளையில் சாதம் தரப்பட்டது. முதலில் தின்பண்டங்கள் போல இதுவும் பணம் என்று அமைதியாக இருந்தோம். அருகில் உள்ளவர் இலவசம் என்றார். இது தெரிந்திருந்தால் முறுக்கு பாக்கெட்டை 40 ரூபாய் கொடுத்து வாங்கியிருக்க மாட்டோமே என்று க்ளுக்கென சிரித்துக் கொண்டோம். மீண்டும் ஈ போல மொய்க்கும் கூட்டம் குறைய பொறுத்திருந்தோம். ஒரு வழியாக சாப்பாடும் முடிந்தத போது மணி 2.30.பக்கத்து அறை கதவு திறந்து மக்கள் செல்ல அடுத்து நாம் தான் என அறைக்குள் இருந்த கூட்டம் வரிசையாக தொடங்கிற்று.

மீண்டும் வரிசையில் இணைந்தோம். எங்கள் அறைக் கதவுகள் திறக்கப்பட்டு மீண்டும் ஊர்ந்து ஊர்ந்து செல்ல தொடங்கினோம். அப்போதுதான் திருப்பதி கோவிலின் தங்க கோபுர தரிசனம் கிடைத்தது. அந்த இடத்திற்கு அருகே பெல்ட் மூலம் சிமென்ட் மூட்டைகள் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன. இத்தனை நவீன வசதிகளுடன் வேலை நடப்பது வியப்புதான் என்றாலும், அவை பாதுகாப்பு கோபுரங்கள் அமைக்க செல்கின்ற என்பதை அங்கிருந்த முழுமையடையாத அமைப்புகள் தெரிவித்தன. எங்கள் மீது ஏசிக் காற்று படர்ந்தது, சிறிது தூரத்தில் வேறொரு வரிசையும் எங்களுடன் இணையத் தொடங்கிற்று. ஆகா நெருங்கிவிட்டோம் சந்நிதியை என்று குதுகலமானோம்.

“கோவிந்தா போலோ,. பாலாஜி போலோ” என்று பெரியவர் ஒருவர் கூற எல்லோரும் கோவிந்தா என்றே கூறிவந்தார்கள். போலோன்னா சொல்லுங்கள் தானே கோவிந்தா போலோன்னு சொல்லும் போதும் கோவிந்தான்னு சொல்லறாங்க, பாலாஜி போலோன்னு சொல்லும் போதும் கோவிந்தானே சொல்லறாங்க என்று கேள்விஞானம் கேள்விகளை கேட்க., அதைப் பற்றிய அக்கரை இன்றி அறை முழுதும் கோவிந்தா கோசங்கள் ஒலிக்க, தென்பட்டது சுவரில் இருந்த  கல்வெட்டுகள். அத்தனையும் அழகு தமிழில், நானும் நண்பனும் சேர்ந்து சில சொற்களைப் படித்தோம், பிரம்மிப்புடன் முன்நோக்கி நகர்ந்தோம். அது வரை அன்னியமாகவே இருந்த திருப்பதி நெருங்கிவந்தது போல இருந்தது. கோவிலை சுற்றி கல்வெட்டுகள் இருக்கும் என்று சொன்னபோது என் கற்பனையில் சிறிய அளவே கல்வெட்டுகளைப் பற்றிய சிந்தனை இருந்தது. ஆனால் நேரில் காணும்போது அதன் முழுஅளவு கண்டு திகைத்தேன், அந்த திகைப்புடன் தமிழன் என்ற பெருமை உடன் சேர்ந்தது. கொடிரத்தின் அடிப்பாகம் மட்டும் தெரிய, அதனைச் சுற்றி ஏதாவது சிற்பத்தினை அவதானிக்க முடிகிறதா என்று பார்த்தேன். அதற்குள் நுழைவுவாயில் வந்துவிட்டது.

உள்பிரகாரத்திற்குள் பிரசுவித்தோம், இருபுறமும் ஏதோ சந்நிதிகள் இருந்தன. உபதேவதைகள் பற்றிய கவலைகள் இன்றி மூலவரை நோக்கியே கூட்டம் நகர்ந்தது. நாமாவது செல்லலாமே என்று பார்த்தால் கயிறுகட்டி தடுத்திருந்தார்கள். அதைப் பற்றி மேலும் நினைக்க நேரமில்லை. மூலவரை நெருங்கினோம். வேங்கடநாதனின் படத்தினை எத்தனை முறை தெளிவாகவே பார்த்திருக்கிறேன். மார்பில் இருக்கும் முக்கோணம் முதற்கொண்டு படித்தும் இருக்கிறேன். ஆனால் திரைப்படங்களில் காண்பிப்பது போல தெளிவாக தெரியவில்லை. கருவறையின் இருளில், விளக்கொளிகளின் மங்கிய வெளிச்சத்தில் யாருமின்றி தனியாக நின்றுகொண்டிருப்பதை கண்டேன். பூசை செய்ய வேண்டியவர்கள் வெங்கிக்கு முதுகுகாட்டிக் கொண்டு எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பிரசாதங்களோ, சடரி சடங்குகளோ இல்லை. பின்னால் வரும் பக்தர்களுக்காக எங்களை தள்ளிக் கொண்டிருந்தார் ஒருவர். அவர் ஏதாவது சொல்கிறாரா என்று பார்த்தேன்.ம்ஹூம்., பேச்சேயில்லை செயல்தான்.

உள்பிரகாரத்தில் கண்ணாடியால் மூடப்பட்ட அமைப்பில் ஏகப்பட்ட காசுகள், நோட்டுகளை மக்கள் போட்டிருந்தார்கள். அதன் இடுக்குகளில் பணங்கள் இன்னும் சிக்கிக் கொண்டிருந்தன. இன்னும் சிலர் தங்கள் பங்கிற்கு சொருகி கொண்டிருந்தார்கள். நாங்கள் வேடிக்கை மட்டும் பார்த்தோம். நண்பர்களில் ஒருவன் தன்னுடைய பணம் இரண்டு ரூபாயை உண்டியலில் போட சென்றான். நாங்களும் பாதுகாப்பிற்கு உடன் சென்றோம். இரண்டு ரூபாய்க்காக என்று நினைத்துவிடாதீர்கள். நண்பனின் பாதுகாப்பிற்காக, அத்தனை கூட்டத்தில் தவற விடக்கூடாது அல்லவா. அதன் பின் அங்கே நடக்கும் கூத்துகள்தான் அதிகம் சிரிக்கவைத்தன. தங்க கோபுர தரிசனத்திற்காக மேடை போல சுற்றுப்பிரகாரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கு கூட்டமே இல்லை. நாங்கள் சில சிலையமைப்பினை பார்த்துவிட்டு வெளியே செல்ல முயன்றோம். அப்போது சிலர் தங்க முலாம் பூசப்பட்ட சிலையின் காலடியில் ரூபாய் நோட்டுகளை வைப்பதையும், எடுப்பதையும் பார்க்க முடிந்தது. அந்த சிலை லட்சுமி சிலை. மூடநம்பிக்கைகளின் சாட்சியாய், சிலையின் கால்களில் தங்க முலாமே இல்லை. எல்லாவற்றையும் சுரண்டிவிட்டிருந்தார்கள். சுற்றுப் பிரகாரத்தில் இருக்கும் இரண்டு சந்நிதிகளைப் பார்க்க ஆளில்லை. இரண்டுமே மூடப்பட்டுக் கிடந்தது. ஒன்றிலாவது நரசிம்மர் என பார்த்து பார்க்க முடிந்தது. மற்றொரு சந்நிதிக்கு செல்ல வழியே இல்லை.

நரசிம்மர் சந்நிதியில் ஒரு கல் இருந்தது எல்லோரும் அதில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார்கள். பெயராக இருக்குமோ என்று பார்த்தேன் அப்படி தெரியவில்லை. ஏதோ கணக்கு போல தெரிந்தது. நானும் விரல்களை வைத்து பார்த்தேன். வெண்ணெய் போல வலவலவென இருந்தது. நண்பன் ஒன்றை சுற்றிக் காட்டினான். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். கோவிலின் கற்இடுக்குகளில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என நாணயங்கள் சொருகப்பட்டிருந்ததன. அதுவும் மிக வலிமையாக, அதனால் நாணயங்கள் வளைந்தும் நெளிந்தும் கிடந்ததன. அதைப் பார்த்து இன்னும் சிலர் அந்த கேடு கெட்ட செயலை செய்து கொண்டிருந்தார்கள். சிலர் அடிக்கப்பட்டிருந்த நாணயங்களை பிடுங்க முயற்சித்தார்கள். திகைப்புடன் வெளியேற தொடங்கினோம், மீண்டும் வரிசை. வடிவேல் அவர்கள் குசேலன் படத்தில் கொடுப்பாரே அந்த அளவில் ஒரு லட்டு கொடுத்தார்கள்.

வழிநடத்துனர் கூறிய வாகன மண்டபத்திற்கு திரும்பினோம். எங்கள் குழுவில் சிலர் மட்டுமே வந்திருந்தார்கள். மீதம் இருப்பவர்கள் வருவதற்குள் லட்டு வாங்கிவரலாமே என்று எங்களை அழைத்தார். மஹா பிரசாதம் என பட்டனத்தில் பூதம் படத்தில் வரும் லட்டுபற்றி பேசிக்கொண்டு அவரை பின்தொடர்ந்தோம். 300 ரூபாய்க்கு லட்டு வழங்கும் இடம் என்பதில் நின்றோம். தள்ளுவண்டியில் கொண்டுவருகிறார்கள், பிளாஸ்டிக் கவரில் அதை டோக்கனுக்கு இத்தனை என்று தருகிறார்கள். கவர் ரூபாய் இரண்டாம். காசு கொடுத்தாலும் பிளாஸ்டிக்தான் என்றால் பிளாஸ்டிக் ஒழிப்பு என்பதெல்லாம் எப்படி என தெரியவில்லை. லட்டுகளை பிரித்துக் கொண்டு, காலணிகளை, கொடுத்திருந்த பைகளை, அலைப்பேசிகளைப் பெற்றுக் கொண்டு ஒரு பேருந்தில் அனைவரும் ஏறினோம். மலையிலிருந்து பேருந்து கீழிறங்க தொடங்கியது.

திகைப்பு தொடரும்…

தேவனூர் தந்த தொடக்கம்

கோவிலுக்கு செல்லும் சிலர் சடசடவென ஓடி கருவறையில் இருக்கும் கடவுளிடம் கோரிக்கைகளை வைத்து, கனநொடியில் காணாமல் போய்விடுவார்கள். இன்றும் சிலரோ நீண்ட நெடிய வரிசையில் காத்திருந்து கடவுளிடம் சரிவர பேச முடியாமல் கனத்த மனதோடு திரும்பி வருவார்கள். வெகு சிலரே கருவறையை தவிர்த்து கலையின் அழகை ரசிப்பார்கள். அந்த சிலரில் நானும் ஒருவன். சிற்பம், ஓவியம், இசை, நடனம், சொற்பொழிவு, ஆடை ஆபரண வடிவமைப்பு என்று கலைகளின் சங்கமமாக இருக்கும் கோவிலில், சமைத்து பரிமாறப்படும் பிரசாதமும் கூட கலைதான். கோவில் என்பது கலையின் வடிவம். கடவுள் இருக்கும் இடமாக மட்டுமே பார்த்தால் கோவில் பக்தி நிறைந்த இடமாக மட்டுமே தெரியும்.

இப்போது பக்தி என்பது கூட, கடவுளிடம் தனக்கு இன்னென்ன வேண்டும் என்று பட்டியல் இடுவதும், பத்து ரூபாய் உண்டியலில் போடுகிறேன், பத்து லட்சம் எனக்கு கொடு என்று பேரம் பேசுவதுமாக சுருங்கிப் போயிருக்கிறது. அதையும் குறிப்பிட்ட கோவிலுக்குள் சென்று கோரிக்கை வைத்தால் தான் நிறைவேறும் என்ற நம்பிக்கை உண்டாகியிருக்கிறது. இந்த நம்பிக்கையின் பின்புறம் மிக அழுத்தமான ஓர் அரசியல் ஒளிந்திருக்கிறது. அந்த அரசியல், வணிக ரீதியான லாபநோக்கிற்காக உண்டாக்கப்பட்டது. அதனால் கொஞ்சம் கூட சுயசிந்தனையற்ற ஒரு கூட்டத்தையே அது உருவாக்கி கொண்டிருக்கிறது. அதையும் மீறி சிந்திக்க நினைக்கின்றவர்களால் மட்டுமே கோவிலை வேறு வடிவமாக காண இயலும்.

ஏதோ எனக்கு தெரிந்த இந்த சிறு விஷயங்களை ஆவணப்படுத்தலாம் என கடந்த 2010 ஏப்ரல் மாதத்தில்http://hindutreasure.blogspot.in/ என்ற வலைப்பூவை தொடங்கி எழுதவும் செய்தேன். அந்த மாதத்தில் 5 பதிவுகளை மட்டுமே இட்டேன். அதில் ஒன்று தொடக்கம், மற்றொன்று படங்கள் மட்டுமே கொண்டது. இவைகளை தவிர்த்துப் பார்த்தால் மூன்றே இடுகைகள் கொண்ட வலைப்பூ அது. காலமாற்றத்தால் அந்த வலைப்பூவை நானே புறக்கணித்தேன். எத்தனை பேர் வந்து படிக்கின்றார்கள் என பார்க்க தெரியாததால் அந்த வலைப்பூ வாசகர்களாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று எண்ணினேன். வரவேற்பே பெறாத எழுத்துகள் எதற்கு என விலகி இருந்து, வருடம் இரண்டு ஓடிவிட்ட நிலையில்,.. ஒரு வாசகரின் மின்னஞ்சல் மூலம் அந்த வலைப்பூவின் உண்மைநிலையை உணர்ந்தேன். எழுதிய அந்த மூன்றே கட்டுரைகள் என்றாலும் அதை தங்கள் புத்தகத்தில் இணைத்துக் கொள்ள அனுமதி கேட்டார் அந்த நண்பர். மகிழ்ச்சியுடன் ஆச்சரியமும் வந்தது. அந்த தளத்தினை நான் மறந்தே போயிருந்தேன். ஆனால் என் பெயரை தாங்கி ஆர்.எஸ்.எஸ் புத்தகங்களில் கட்டுரையாக வரும் அளவிற்கு அந்தக் இடுகைகளுக்கு வலிமை இருப்பதை உணர்த்திவிட்டார் அந்த நண்பர். அதை உணர்ந்ததும் இது வரை சேகரித்தவைகளை எழுதலாம் என்ற உந்துதல் ஏற்பட்டது.

தேவனூர் கோவில் அன்றும் இன்றும்
தேவனூர் கோவில் அன்றும் இன்றும்

இதற்கிடையே முகநூல் நண்பர்கள் மூலம் தேவனூர் என்ற தளம் செஞ்சி அருகே சிதைந்த நிலையில் உள்ளது என்றும், அதை நண்பர்கள் ஒன்று சேர்ந்து புதுப்பிக்கின்றார்கள் என்பதையும் அறிந்தேன். ஒரு நாள் அங்கு செல்லும் வாய்ப்பும் வந்தது. சென்னையில் இருந்து திருவண்ணாமலை செல்லும் பேருந்தில் ஏறி செஞ்சிக்கு போனேன். அங்கிருந்து வளத்தி, சேத்பட்டு செல்லும் பேருந்து தேவனூருக்கு கொண்டு சேர்த்தது. கோவிலை தேடி கண்டுபிடித்ததை விட கோவிலுக்குள் எப்படி செல்வது என்று வாயிலை கண்டுபிடிக்கவே பெரும் சிரமாக இருந்தது. கோவிலை சுற்றிலும் நெற்பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. கோவிலுக்கான தடம் என்பதோ, சுற்றி வரும் பாதையோ விவசாயிகளுக்கு முக்கியமாக படவில்லை. ஆண்டுக்கணக்கில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த கோவிலின் அத்துவரை தங்களின் தேவைக்காக ஆக்கிரமிப்பு செய்திருந்தார்கள்.

நிறைய நண்பர்களின் அறிமுகம் கிடைத்த அந்த நாளில், நான் இதுவரை சென்று வந்த சிதையாத கோவில்கள் சொன்னதைவிட மிக அதிகமான செய்திகளை அந்த சிதைந்த கோவில் சொல்வதை உணர்ந்தேன். அங்கிருந்த கல்வெட்டில் ராஜராஜ சோழனின் பெயரும், குலோத்துங்க சோழனின் பெயரையும் கண்டேன். ஆர்காடு நவாப் நடத்திய போர்களைப் பற்றிய குறிப்புகள் இந்த கோவிலிருந்து கிடைக்கும் என்று நண்பர் ஒருவர் உறுதியாக கூறினார். கோவில் என்பது கலைகளை மட்டும் சுமந்ததல்ல. அவை மிகப்பெரும் வரலாற்று ஆவணங்கள் கூட. ஒற்றைக் கோவிலிலேயே இத்தனை வரலாறு கிடைக்கும் போது நிச்சயம் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கோவில்களையும் ஆய்வு செய்தால் கோடிக்கணக்கான செய்திகளும், தமிழனின் வரலாறும் தெரியும்.

இந்த நிலையிலும் தமிழனுக்கு வரலாறு இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் சிலர். இப்படி வரலாற்றை அழியவிட்டுவிட்டு நாளை அதை தேடினால் எப்படி கிடைக்கும். நாளைய தலைமுறைக்கு சொல்வதற்கு நம்மிடையே சோழனைப் பற்றியும், சேரனைப் பற்றியும், பாண்டியனைப் பற்றியும் அதிகம் தகவல்கள் இல்லை. தமிழனின் விளையாட்டு, வீரம் என்பன பற்றியும் தெரிவதில்லை. ஆனால் அயல்நாட்டவன் பற்றி புத்தகம் எழுதும் அளவிற்கு நம்மிடம் செய்திகள் இருக்கின்றன. தங்கள் இனத்தவரின் பெருமையை அறிவதற்கும், அறிந்து கொண்டமையை சொல்வதற்கும் நம்மிடைய தயக்கங்கள் இருக்கின்றன. இந்த தயக்கங்களை நாம் தகர்க்க வேண்டும். அப்போதுதான் தமிழனின் பெருமையை மற்ற இனத்தவர்களும் அறிய முடியும்.

தோவனூர் கோவிலின் தூண்களில் பலவகையான வேலைபாடுடைய சிற்பங்கள் இருந்தன. அதில் சிலவற்றை எந்தக் கோவிலிலும் நான் கண்டதி்ல்லை. குறிப்பாக அந்த பிரசவ நிலையை விளக்கும் சிற்பம் அருமையானது. சுக பிரசவத்திற்கு பெண்கள் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்று சொல்லுகின்ற சிற்பத்தை வடித்த சிற்பிக்கு, எத்தனை பொது நல நோக்கம் இருந்திருக்க வேண்டும். இறைவனை மட்டுமே கண்மூடித்தனமாக செதுக்காகமல் மக்களின் வாழ்வியல் முறைகளையும் செதுக்கி சென்றவனின் பெயர் கூட அங்கு இல்லை. ஆனால் அவன் நோக்கம் ஆயிரம் வருடங்கள் தாண்டியும் இன்று நம்மை வந்து சேர்ந்திருக்கின்றன.

பழங்கால பிரசவ முறையை விளக்கும் சிற்பம்
பழங்கால பிரசவ முறையை விளக்கும் சிற்பம்

இறுகிக் கிடந்த மண்ணை கடப்பாரையை எடுத்து கொத்திவிட்டு மண்வெட்டியால் அள்ளிக் கொடுத்த எனக்கே கையில் காப்பு காய்த்து இரண்டுநாட்கள் சிரமாக இருந்தது. வாரந்தோறும் இரண்டுநாள் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் நண்பர்களின் நோக்கம், மீண்டும் ஒரு சிவன் கோவிலை மக்களுக்கு தருவதல்ல. மண்ணுக்குள் புதைந்திருக்கும் தமிழனின் வரலாற்றை மீட்டெடுப்பது மட்டுமே. பிரதிபலன் பாராது உழைக்கும் அவர்களுக்கு மத்தியில் பாராட்டுக்காக பெரும் தொடரை நிறுத்திய என்னை நினைத்து வெட்கம் வந்தது. தகுதியானவைகளுக்கு தகுந்த அங்கிகாரம் காலம் கடந்தபின்னாவது கிடைக்கும் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்துள்ளேன். அதே உத்வேகத்துடன் இந்து மதம் ஒரு பொக்கிசம் இனி தொடராக இங்கு வெளிவரும்.

மேலும் பார்க்க –
தேவனூர் முகநூல் பக்கம்