2017 சனவரி 8 ல் எனது முகநூலில் மகரயாழிக்கான மழலை பாடலை பதிவு செய்திருந்தேன்.
என்னுடைய அம்மாச்சியும், கருப்பாயி என்ற உறவுக்காரப் பாட்டியும் நிறைய நாட்டார் பாடல்களை மகரயாழினிக்காக நேற்று பாடினார்கள். பல் போன பாட்டிகள் தங்களின் நினைவுப் பைகளிலிருந்து சில்லறைகளைப் போல நாட்டார் பாடல்களை சிதறவிடுகிறார்கள். கருத்திற்கோ, பொருளுக்கோ முக்கியத்துவம் இல்லாமல் ஓசைநயத்திற்கே அதிகம் முக்கியத்துவம் தருகின்ற பாடல்களாக அவை இருக்கிறன. மொழியே அறியாத மூன்று மாதங்கள் கூட நிரம்பாத அந்த மழலை மகிழ்ச்சியை பொக்கை சிரிப்பால் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
இங்கு இங்கு இங்கு..
இது இங்கு குடிக்கிற சங்கு.
வார்த்தை கேட்கிற வண்டு.
பாட்டு கேட்கிற பாங்கி,
பேச்சு கேட்கிற பூச்சி
இது இங்கு கேட்கிற இளஞ்சியம்
இந்தப் பாடல் கேள்வியாகவும் முடியும் வண்ணமும் மாற்றிப் பாடுகிறார்கள்.
இது இங்கு குடிக்கிற சங்கா என்பதுபோல மழலையோடு உரையாடுவதாகவும் பாடுகிறார்கள். 🙂
இந்தப்பதிவிற்கு விக்கிப்பீடியரும், தமிழார்வருமான செல்வா ஐயா தன்னுடைய கருத்தினை பகிர்ந்திருந்தார்.
செல்வா ஐயா குறிப்பிட்ட ஒந்து.. ஒந்து காசு பாடலை..
“உந்தி உந்தி காசு..
யார் கொடுத்த காசு..
மாமா கொடுத்த காசு..
மாயமாப் போச்சு..”
என ஊர் பக்கம் பாடுகிறார்கள். இதில் உந்தி உந்தி எனும் போது இடது உள்ளங்கையில் வலதுகை ஆள்காட்டி விரலை தொட்டு தொட்டு காட்டவும்.. மாயமாய் போச்சு எனும் கையை விரித்து ஆட்டி இல்லை என விவரித்தார்கள்.
#மகரயாழினி க்கு பிடித்த பாடலாகிப் போனது. “வூ..ம்.. வூ..ம்” என ஓசை எழுப்பிக் கொண்டு உள்ளங்கையில் ஆள்காட்டி விரலை தொட்டு தொட்டு காட்டுவாள்.. அப்படியானால் நாம் உந்தி உந்தி காசினை பாட வேண்டும்.
அவளின் அம்மா பாடி முடித்ததும்.. என்னுடைய அம்மாக்கள் பாட வேண்டும்..
வணக்கம் வைக்க இருகரம் கூப்பவும், குட்மார்னிங் வைக்க நெற்றியில் கை வைக்கவும் தொடங்கிய பிறகு இந்த உந்தி உந்தி காசு பாடல் மறையத் தொடங்கிவிட்டது.
#மகளதிகாரம்