சோழ ரகசியம் – பாகம் 2

உடையார்குடி கிராமம் சோழப்படைகளால் சூழந்திருந்தது. மன்னர் உடையார் சிறீ ராஜராஜர் தனித்தேரிலும், மும்முடிச் சோழப் பிரம்மராயர், தளபதிகள், படை தலைமையாட்கள், ஒற்றர் படைத் தலைவர் போன்றோர் குதிரையுடனும் நின்றிருந்தார்கள். மண்டபத்தின் நடுவே நின்று பறையை மிகவும் வேகமாக அடித்து, “இதனால் சகலருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், ஆதித்த கரிகாலன் கொலையில் இங்கிருக்கும் ஒவ்வொரு பிஞ்சுகளுக்கும் கூட சம்மந்தம் இருப்பதை அறிகிறோம். நெடுநாட்கள் நடந்த விசாரணையில் அவை தெளிவாக மக்களுக்கு நிறுபனம் செய்யப்பட்டன. அதனால் உடையார் குடியில் இருக்கும் அந்தணர்னர்களையும், பெண்டுகளையும், சிறார்களையும் அவர்களோடு உறவுமுறை கொண்டுள்ள அனைவரையும் சோழ தேசத்தினை விட்டு நாடு கடத்துகிறோம். அவர்கள் அனைவரின் சொத்துகளும் அரசாங்கம் எடுத்துக் கொள்ளும். வாழ்க சோழம். வாழ்க உடையார் சிறீ இராஜராஜர்.” என்று அறிவித்தனர்.

அந்தணர்களிடமிருந்த அனைத்தையும் எடுத்துக்கொள்ளப்பட்டு, ஆடைகளோடு அவர்களை அணிவகுக்க வைத்தார்கள் சோழவீரர்கள். மும்முடிச் சோழப் பிரம்மராயர் தனியாக ஆட்களை நியமித்து அவர்களின் அடையாளங்களை சரிபார்த்தார். சில வீரர்கள் அந்தணர்களின் உறவுகளையும் அவர்களின் உறவு முறைகளையும் அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறிக் கொண்டிருந்தனர். பெண்களில் சிலரும், ஆண்களில் சிலரும், ஆதித்த கரிகாலரின் கொலையில் தங்களுக்கு சம்பந்தமில்லை என சத்தம் எழுப்பினார்கள். சிலர் கர்பிணிப் பெண்களுக்கும் இதே தீர்ப்பா எனவும், பச்சிளம் குழந்தைகளுக்கு இதிலென்ன சம்பந்தம் எனவும் கூச்சல் போட்டார்கள்.

மும்முடிச்சோழப் பிரம்மராயரே அனைத்தும் விடையளிக்கும் விதமாக, “நாங்கள் இங்கிருக்கும் அனைத்து நபர்களும் சோழ இளவரசர் ஆதித்த கரிகாலரின் கோரக் கொலையில் சம்பந்தம் இருப்பதை அறிந்தோம். உடையார் சிறீ இராஜராஜ சோழர் ஆட்சிப் பொறுப்பேற்றதும் முறையாக வழக்குகளும், வாதங்களும் எடுத்துரைக்கப்பெற்று அவற்றை நிறுபனம் செய்தும் உள்ளோம். சோழமக்களும் அதனை உறுதி செய்துள்ளார்கள். மாமன்னர் தீர்ப்பு வழங்கியதும், மீண்டும் ஒன்றுமறியாதது போல நீங்கள் பேசுவதில் ஞாயம் இல்லை. சோழத்தேசத்திற்கு எதிராக தேசதுரோகத்தில் ஈடுபட்ட போதும், உங்கள் அனைவரையும் உயிரோடு நாடுகடத்தவே மாமன்னர் உடையார் சிறீ இராஜராஜர் தீர்ப்பு தந்துள்ளார். சோழமக்களின் கோபத்திற்கு ஆளாவதற்குள், இங்கு மக்கள் கிளர்ந்து எழுவதற்குள் நீங்கள் நாட்டினைக் கடப்பதே உத்தமமான காரியம்.” என்றார்.

ஒரு பெரிய வீரர்களின் வளையத்திற்குள் அத்தனையும் நிகழ்ந்து கொண்டிருந்தது. அனைத்து சரிபார்க்கப் பட்டதாய் பிரம்மராயருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டவுடன். அவர் இராஜராஜரைப் பார்த்தார். அந்தப் பார்வையின் அர்த்தத்தினை உணர்ந்த இராஜராஜர், கைகளை முன்நோக்கி அசைத்தார்.

வீரர்கள் சூழ்ந்திருக்கும் அந்தணர்க் கூட்டம் நகர்ந்து சென்றது. எதிர்த்துப் பேசியவர்களுக்கும், மறுத்து நின்றவர்களும் பிரம்பால் தாக்கப்பட்டார்கள். ஒரு ஊரே காலிச் செய்து செல்வதை கனத்த மனதோடு பார்த்துக் கொண்ட இராஜராஜர் அங்கிருந்து தன்னுடையத் தேரில் கிளம்பினார். இதுவரை ஆதித்த கரிகாலனின் மரணத்திற்கு தக்க நடவெடிக்கை எடுக்கவில்லை என்ற அவரது மனவலி அகன்றது. உறவைக் கொன்றவர்களும் தயவுக்காட்டி, நாடுகடத்த கூறியிருக்கும் நல்மனதுடன் அவர் அரண்மனை நோக்கிச் சென்றார். எல்லாவற்றையும் கவனித்துவந்த பிரம்மராயர் குதிரையை வேறுபக்கம் செலுத்தினார்.
பிறகு உயிரோடு நாடுகடத்தப்படுவதை அறிந்த சோழ மக்கள் வெகுண்டு எழுந்து அந்தணர்கள் வாழ்ந்த வீடுகளை தீவைத்தார்கள். அவ்வூரே தீப்பிழம்பாக மாறியது. அந்நேரத்தில் மிகவும் சாமர்த்தியமாக சோழர் படை அந்தணர்களையும், அவரது உறவுகளையும் சேர நாட்டை நோக்கி கொண்டு சென்றுகொண்டிருந்தது. அவ்வாறு போகின்ற வழியில் சில விசயம் அறிந்த சோழமக்கள் அவர்களை துன்புருத்தினர். சோழப் படைவீரர்கள் அதனை தடுத்து அந்தணர்களை முன்நோக்கி அழைத்துச் சென்றது.

***
பெண்கள் கத்திக் கதறிக் கொண்டிருந்தார்கள். குழந்தைகளும், சிறுவர்களும் நடப்பது புரியாது தாய் தந்தையோடு ஒடுங்கி ஓலமிட்டுக் கொண்டிருந்தனர். ஆண்களுக்குள் இதுவரை இருந்த சோழப் பகைமை கொழுந்துவிட்டு எறிந்துக் கொண்டிருந்தது. கர்பினியாய் இருந்த ஒருபெண் எப்படி இந்த சோழ தேசத்தினை நிர்மூலம் ஆக்குவது என வயிற்றுக்குள் இருந்த குழந்தைக்கு சொல்லித் தந்துகொண்டிருந்தாள். வெற்றிலை எச்சிலை துப்பி, கல்லெடுத்து எரிந்து கனல் பொங்கும் கண்களோடு சோழ மக்கள் ஏசியதை வழியெல்லாம் சொல்லிக் கொண்டே வந்தார்கள்.
சோழத்தை ஏசுவதிலேயே கவனம் கொண்டமையால் அவர்களின் இருபுறமும் கிராமத்திற்கு கிராமம் படைவீரர்கள் கூடிக்கொண்டு போவதையும், ஏற்கனவே அவர்களோடு வந்த ராஜராஜரின் படைவீரர்கள் விலகிக்கொள்வதையும் அவர்கள் கவனிக்கவில்லை.
காடுகளின் ஊடே நடந்து ஒரு சமவெளியை கூட்டம் அடைந்தபோது, அந்தக்கூட்டத்தினை விட பெரிய அளவில் படைவீரர்கள் இருந்தார்கள்.

வாழ்க பாண்டிய தேசம் என்றொரு சத்தம் கேட்ட திசையை நோக்கினான் வாமதேவம். ஒரு வயதான மூதாட்டி கையில் கம்பினை ஊன்றி நடைதளர்ந்து வந்தவளிடமிருந்து அந்த சத்தம் வந்திருக்க கூடும். அவளின் மீது கண்களைப் பதித்தான். அவள் மீண்டும் வாழ்க பாண்டிய நாடு என்று கத்தினாள். இடைப்பட்ட கூச்சலிலும் அந்த மூதாட்டியின் அருகில் இருந்த சிறுவர்களும் பாண்டியர் புகழ் உரைப்பதை கேட்ட வாமதேவம் அதிர்ந்தான்.

“சோழதேசத்தில் அந்நியர்களுக்கு அடைக்கலம் தந்தது எத்தனை பெரியக் குற்றம். மன்னர்களின் நல்மனதினை இவர்கள் இப்படி நயவஞ்சமாக அல்லவா பயன்படுத்திக் கொண்டார்கள். இந்த பிஞ்சுகள் சோழ தேசத்தில் பிறந்தும் வாழ்ந்தும் இம்மண்ணை நேசிக்கவில்லையே. எத்தனை வன்மம். இதோடு அனைத்தும் நிறைவடையட்டும்.” என தனக்குள் உரையாடிக் கொண்டிருந்தவன், தன் இடையிலிருந்த சங்கை முழங்கினான். அந்தச் சத்தம் நிறைந்த காட்டில் மரங்களிடைப் புகுந்து அனைவருக்கும் கேட்டது. சோழ வீரர்கள் அப்படியே நின்றர். குதிரைகள் கூட ஒரு அடி எட்டுவைத்து அப்படியே நின்றன.

சோழ தேசத்திற்கு எதிராய் இவர்கள் இடும் கூச்சலையும், வசவுகளையும் கேட்டுக் கொண்டேப் பயணித்துவந்தோம். மாமன்னர் சிறீ இராஜராஜப் பெருவுடையார் இவர்களை நாடு கடத்த உத்தரவிட்டிருந்தாலும், முக்காலமும் அறிந்த நம் மும்முடிச் சோழப் பிரம்மராயரின் கட்டளையப்படி இவர்களில் சிறு பிஞ்சுகளை கூட உயிரோடு விடுவதென்பது நாளைய சோழப் பேரரசின் பேரழிவுக்கு ஒப்பாகும். மாந்திரிக தாந்திரிகத்திலும், அதிர்வண வேதத்திலும் வல்லவர்களான இவர்கள் நேரடிப் போரில் நம்மை வீழ்த்த முடியாது என்றாலும், பிற மந்திர வேளைகளில் ஈடுபட சகல வழிகளும் உண்டு. ஆகவே அனைவரையும் மண்டியிட வையுங்கள்.

வீரர்கள் விரைந்து செயல்பட்டார்கள்.

முன்சென்ற சேனைத் தலைவன் தன்னுடைய இடத்திலிருந்து ஒரு மஞ்சள் நிற கொடியை காண்பித்தான். வீரர்கள் சோழ கூட்டத்திற்குள் நுழைந்து ஆண், பெண், சிறார்கள் என மூன்றாய்ப் பிரித்தனர். “என்ன செய்கின்றீர்கள். எதற்காக என் மனைவியைப் பிரிக்கின்றீர்கள், எதற்காக என் பேரனை கொண்டு செல்கின்றீர்கள்” என எல்லாபக்கமும் கேள்விகள் எழுந்தன. ஆனால் அக்கேள்விகளுக்கு விடை சொல்வாரில்லை.

தலைமை படைவீரனான மங்களநேசன் அக்கூட்டத்தின் முன் தன் குதிரையை செலுத்தி அவர்கள் முன்பு நின்றான்.

“இறுதி கிராமத்தினையும் கடந்து வந்துவிட்டோம். இன்னும் இரண்டு பரலாங்களுகள் கடந்தால், நீங்கள் வேறு தேசத்திற்கு உரியவர்களாகிவிடுவீர்கள். அதனால் கூட்டத்திற்குள் இருக்கும் நம் தேசத்து ஒற்றர்கள் எழுக” என்றான்.

அந்தணர்கள் திகைத்தார்கள். என்ன நம் கூட்டத்திற்குள் சோழ தேசத்து ஒற்றர்களா. இதெப்படி சாத்தியம். நாம் மிகவும் சாமர்த்தியமாக நம் குலத்தவர்களை மட்டுமே உடையார்குடியைச் சுற்றி குடியமர்த்தி வைத்தோம். என்று தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கும் போது, ஆங்காங்கே.. சிலர் எழுந்து நின்றனர். அவர்களை முன்நோக்கி வருமாறு சைகை செய்தான். அவர்களை வீரர்கள் சோதித்தார்கள். அடையாளங்கள் சரியாக இருந்தன.

சருகுகள் உதிரும் சத்தம் மட்டுமே கேட்டது. அனைவரும் அமைதியானார்கள். அப்போது குதிரைகள் விரைந்துவரும் சத்தம் கேட்டது. அனைவர் பார்வையும் அங்கு செல்ல… மூன்று குதிரைகள் அவர்களை நோக்கி வந்தன. அதில் இரண்டில் இருந்தவர்கள் தங்களுடைய அடையாளங்களை மறைத்திருந்தார்கள். பிரம்மதேவராயரை மட்டுமே அடையாளம் காண முடிந்தது. “பிரம்மதேவராயர் ஒழிக” என கூட்டத்தில் யாரோ சத்தமிட அனைவர் கழுத்துகளின் மேலும் வீரர்களின் வாள் அடுத்தநிமிடம் இருந்தது.

“அதர்வண அந்தணர்கள். சோழப் பேரரசின் கீழ் நீங்கள் வந்தபோதே நாங்கள் உங்களையும் சோழர்களாகவே எண்ணினோம். நான் பார்த்து வளர்ந்த பிள்ளையை கோரமாய் கொலை செய்துவிட்டு அதனை பெருமை பேசி குழந்தைகளை வளர்க்கின்றீர்கள். அனைத்தும் அறிந்தும் தர்மக் கடவுளான இராஜஇராஜ சோழர் வழக்கு எடுத்து ஆதாரம் கொண்டு நிறுவி உங்களையெல்லாம் கொல்ல மனமின்றி நாடுகடத்த ஆனையிட்டிருக்கிறார். ஆனால் அத்தகைய மாண்புகொண்டோரையும் உங்களால் மதிக்க முடியவில்லை. வரும் வழியெல்லாம் சோழத்துக்கு எதிராய் உங்கள் ஏச்சுகளும், பேச்சுகளும் இருந்தன.”
“இனி உங்களால் படைதிரட்டி சோழத்தினை ஒன்றும் செய்ய முடியாது. நாங்கள் அந்நிலையை கடந்துவிட்டோம். சோழப்பேரரசின் மகாசேனைக்கு இவ்வுலகே பயம்கொள்ளும். ஆனால் பேடிகளைப் போல மறைந்து திட்டம் தீட்டி, தந்திர மந்திர யாகம் வளர்த்து உங்களால் தொடர்ந்து இடையூருகள் உண்டாகும். எனவே…” என கட்டளைப் பிறப்பிக்கும் முன் தன்னுடைய இடபக்கம் நின்ற குதிரையின் மீதிருந்தவரைப் பார்த்தார். அவர் கைகளில் ஏதோ செய்கை செய்ய, பிரம்மதேவ ராயர் அதிர்ந்து கண்களை விரித்தார். பின்பு தன்னை மீட்டுக் கொண்டு சிறார்கள் பக்கம் இருக்கும் வீரர்களுக்கு உத்தரவிட்டார். அடுத்தகணம் குழந்தைகளும், சிறார்களும் கொல்லப்பட்டனர். அதர்வணப் பெண்களும், ஆண்களும் திகைத்து கதரினார்கள்.
பிரம்மதேவராயர் மீண்டும் அந்த குதிரைமேலிருந்த உருவத்தினைப் பார்த்தார். இம்முறையும் அவருக்கு செய்கையால் கூறப்பட்டது. ஓம் என்று அந்தண ஆண்கள் பக்கம் இருக்கும் வீரர்களுக்கு கட்டளைகள் செல்ல அனைவர் தலையும் உருண்டது.

ஒருபக்கம் ஆண்கள் மடிந்து கிடக்க, மறுபக்கம் சிறார்களும், குழந்தைகளும் சிதைந்து கிடக்க. நடுவே பெண்கள் கூட்டம் பெரும் ஓலம் இட்டு கதறிக் கொண்டிருந்தது. அடுத்தது அவர்கள் தான் என்று நினைக்கையில் பிம்மதேவராயர் அருகில் இருந்த உருவம் தன்மேல் போர்த்தியிருந்த ஆடையை சுழற்றி வீசியது. அதைப் பார்த்த அனைவருமே கண்களை முடிந்தமட்டும் திறந்து தங்களது வியப்பை வெளிப்படுத்தினார்கள். அது குந்தவை நாச்சியார்.

“கூட்டத்தில் கற்பினிகள் இருக்கிறார்கள். அவர்களையாவது விடுங்கள். சூலிப் பெண்களை கொல்வது சோழ தேசத்தை நிர்மூலமாக்கும்.” என்று கத்தினாள் ஒரு மூதாட்டி. அதனை மற்றப் பெண்களும் ஆமோதித்து குரல் எழுப்பினார்கள்.

குந்தவை பேசத்தொடங்கினாள். “ஆலகால விசத்திற்கெல்லாம் கருணை காட்டுதல் என்பது இயலாது. பாரதத்தில் அர்ஜூனன் செய்த தவறை நாங்களும் செய்ய மாட்டோம். உங்கள் கண்முன்னே உறவுகள் கொல்லப்பட்டமைக்கு காரணம் பெண்களாகிய நீங்களே சோழ தேசத்திற்கு எதிரிகள். நீங்களே எய்தவர்கள். ரவிதாசனும், உங்களுக்கு துணை போனவர்களும் வெறும் அம்புகள். சோழத் தேசத்து பெண்கள் மீது நீங்கள் வன்முறையை உங்கள் உறவுகளைக் கொண்டு ஏவுனீர்கள். எங்கள் பெண்களின் முலைகளையும், மூக்கினையும் அறுத்தீர்கள். குறிகளைக் காயம் செய்தீர்கள். சூலிப் பெண்கள் என்றும் நீங்கள் கருணை கொள்ளவில்லை. இப்போது அதே கருணையை உங்களுக்கு எதிர்ப்பார்க்கின்றீர்கள். இதுகண்டு பொறுக்காது பாண்டியனைத் தண்டித்த ஆதித்த கரிகாலரையும், வஞ்சமாய்க் கொன்றீர்கள். உண்மையில் இப்போது வழங்கப்பட்ட தீர்ப்பு ஆதித்த கரிகாலருக்காக அல்ல. உங்கள் மனதில் ஈரமில்லாமல் செய்த காரியத்திற்காக.”

“பிரம்மராயரே, இவர்களை தீவைத்து எரித்து சாம்பலை காவேரில் கரையுங்கள். மிஞ்சும் எழும்புகளை பொடியாக்கி வையுங்கள். சோழ தேசத்தில் நாம் கட்டப்போகும் பெருங்கற்றளிக்கு இவர்களே அஸ்திவாரம். இங்கு நடந்தவை அனைத்தும் சோழ ரகசியமாக இருக்கட்டும். எக்காரணத்தைக் கொண்டும் எவருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு. அதற்காக நீங்கள் எது செய்தாலும் இந்தக் குந்தவை முழு ஆதரவு தருவாள்.”
பிரம்மராயர் ஓம் என்றார். எஞ்சியப் பெண்களை ஒருசேர பிணைக்கப்பட்டு முழுக்க எண்ணைய் ஊற்றினார்கள். ஓலக்குரல் எழும்ப எழும்ப தீ வானொக்கி எரிந்தது.

“அந்தணர்களைக் கொல்லக்கூடாது என்பது பரவலான கருத்தாக்கம். ஆனால் இன்று நாம் கொன்றது அந்தணர்களை அல்ல. இம்மண்ணின் எதிரிகள். நம் குலக்கொழுந்து நிகரற்ற வீரன் ஆதித்த கருங்காலனை நயவஞ்சகமாய் கொன்ற துரோகிகள். அந்தணன் என்றால் அறவோன் என்ற கூற்றின் படி பார்த்தால், இந்த துரோகிகளை மன்னித்து நாடுகடத்த சொன்ன நம் மன்னன் இராராஜ உடையாரே அந்தணன்”. என்றார் மும்முடிச் சோழப் பிரம்மராயரின் அருகில் தன் அடையாளம் காட்டாத நபர்.

ஆதித்த கரிகாலன் இறந்தபிறகு கடமை தவறியதாக நினைத்து வருந்திக் கொண்டிருந்த கரிகாலனின் மெய்காவல் படையினர் நெடுநாட்களுக்குப் பிறகு சிரித்தார்கள். குந்தவை கண்களிலிருந்து நீர் திரண்டு சோழத்தாயின் மடிமீது விழ, வீரர் பெருங்கூட்டம் இராஜராஜ உடையாரின் மெய்கீர்த்தியை பாடியது.

***
பிரம்மராயர் அமைதியாய் இருந்துவிட்டு, “அம்மா.. பெருங்கற்றளி என்று சொன்னீர்களே.. அது என்ன. இவர்களைக் கொன்றமைக்காகவா அதனை எழுப்பப் போகிறோம்.”
“தேவராயரரே. ஒருவகையில் அந்தக் கற்றளிக்கு இவர்களும் காரணம். ஆனால் நெடுநாட்களாய்.. இராஜராஜ சோழருக்கென ஒரு கனவு இருக்கிறது. அவர் கனவு இந்த உலகில் நிறைவேறும் போது சோழ தேசத்திற்கு எதிரிகள் என்று எவரும் இருக்க கூடாது.”
“அம்மா… கோபிக்க வேண்டாம். எல்லா எதிரிகளையும் தான் நாம் அழித்துவிட்டோமே. இன்னுமா எதிரிகள் இருப்பதாக கருதுகிறீர்கள்.”

“பிரம்மதேவராயரே.. நீங்கள் இதற்கு முன்கண்ட அரசியல் அல்ல இவை. நேருக்கு நேர் நின்று பகைமை தீர்க்கும் வல்லமையும் துணிச்சலும் அற்றுப்போய் கோழைகளுடன் யுத்தம் செய்து கொண்டிருக்கிறோம். இதோ எரிந்து கொண்டிருக்கும் இவர்கள் வெறும் சல்லிவேர்கள். ஆணி வேரொன்று இருக்கிறது. அதுவும் சோழ தேசத்திலேயே இருக்கிறது. அதனையும் இராஜராஜ சோழருக்கு தெரியாமலே அகற்ற வேண்டியிருக்கும். அதன்பின் எல்லாம் சுபமாகும்.”

ஆ.. அம்மா. யார் அந்த ஆணிவேரன்றே கூறுங்கள். அவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்.

அவசரம் வேண்டாம், பிரம்மராயரே. இங்கு நடந்ததையே இராஜராஜருக்கு தெரியாமல் மறைத்தாக வேண்டிய சூழ்நிலை. இதைச் சரியாக செய்து முடிக்கவே நமக்கு சில காலங்கள் ஆகும். அதற்குள் தக்க காலத்தில் மற்றவற்றை எடுத்துறைக்கிறேன். வீரர்கள் எவறேனும் சந்தேகப்படும் நபர் உண்டா.

அப்படியிருந்தால் இவ்விடத்திற்கு வந்திருக்க மாட்டார்கள் அம்மா. அனைவருமே மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்கள். கடுகளவும் இந்த விசயம் வெளியே தெரியாது. நாளைய வரலாறு.. இவர்கள் தூரதேசத்திற்கு அனுப்பபட்டார்கள் என்பதோடு முடிந்துபோகும். அத்துடன் பேச்சின் இடையே கற்றளி என்று கூறினாயே. அது யாருக்காக சோழர்களின் குலதெய்வமான நிதம்பசூதனிக்கா.

“இல்லை பிரம்மராயரே. சாக்தம் இம்மண்ணில் தளைத்தால் மீண்டும் சோழ தேசம் அல்லல்படும். மந்திரங்களும், தந்திரங்களும் முடக்கப்பட்டு, அன்பு சமயமொன்று இங்கு எழவேண்டும். அத்தோடு ஆதித்த கரிகாலரும், அவர் பொருட்டு இதுவரை இறந்த அத்தனை உயிர்களும், இனி இறக்கப்போகிற உயிர்களுக்கும் நல்வழிகாட்ட ஈசனையே சரணடைய வேண்டும். அதனால் பெருங்கற்றளி ஈசனுக்கு உரித்தாகும்.

ஈசன் இனி சோழநாட்டினை பாதுகாப்பான். அன்பே வடிவான அருண்மொழிக்கு இனி ஈசனே துணை.”

சோழம்.. சோழம்.. சோழம்..

4 comments on “சோழ ரகசியம் – பாகம் 2

 1. ViswanathVRao சொல்கிறார்:

  I cant agree with killing people. But story is good.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   பலராலும் ஏற்றுக் கொள்ள முடியாததையே எழுதியிருக்கிறேன் என்பதை அறிவேன் நண்பரே. எனினும் என்னுடைய மனதில் இந்த தீர்ப்பினை வரலாறு தந்திருக்க கூடாதா என்ற ஏக்கம் உள்ளது. எனவே நான் என் மனதில் இருக்கும் கசப்பினை எழுதியிருக்கிறேன். நன்றிங்க, படித்து கருத்து தெரிவித்தமைக்கு.

 2. மு. பாலாஜி சொல்கிறார்:

  திருச்சிராப்பள்ளியை சேர்ந்த தென்களை வைணவர்களை கரவழி(காவிரி கரைபகுதி) சோழியர்கள், மற்றும் திருவள்ளரை சோழியர்கள் என்றும் அழைக்கப்படுவார் அதாவது சோழதேசத்தின் குடிகள் என்பதையே தங்கள் பெருமைக்குரிய அடயாலமாக இன்றளவும் கொண்டுள்ளனர்., அத்தகைய பார்பணர்களை கொண்டிருந்த சோழ நாட்டில் தேசதுரோக தண்டனைக்கு பார்பணர்கள் உள்ளாகியிருக்கலாம் என்ற கணிப்பு வியப்பாக உள்ளது _/\_ நன்றி

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   நன்றிங்க. சோழ தேசத்தில் எண்ணற்ற சலுகைகள் பிராமணர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தனிக்கிராமங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்ற என்றும் கூறுகிறார்கள். கோயில்களில் மூலவரை தொட்டு அபிசேகம் செய்யும் உரிமை முதற்கொண்டு தந்திருக்கிறார்கள். வடஇந்தியாவில் எல்லோருமே சிவலிங்கத்தினை தொட்டு வணங்கும் வழக்கம் இருக்கிறது. இங்குதான் சிவலிங்க வழிபாடு மறுக்கப்படுகிறது. அதுகுறித்து எனக்கு கொஞ்சம் வருத்தம் உண்டு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s