விஜயாக்கா – சிறுகதை

29733691103_2493d06955_b

சன்னமாய் தட்டுமுட்டு சாமான்களை உருட்டும் சத்தம் கேட்டது. அதுவே கொஞ்சம் கொஞ்சம் அதிமாக கேட்கத் தொடங்கியது. அம்மாச்சி இருமல் சத்தம் மூலையில் இருந்துக் கேட்டது.
ஏ. கழுத.. அதான் முழுப்பு வந்துடுச்சுல்ல. எந்திருச்சி தொலைக்க வேண்டியதுதானே  என சத்தமிட்டுக் கொண்டே சட்டியில் எதையோ கடைந்து கொண்டிருந்தாள் அம்மா.
ஏன்தான் சீக்கிரமே விடிந்து தொலைக்கிறதோ. இரவு சின்னக்குஞ்சானோட விளையாடிக் கொண்டிருந்தது மட்டுமே ஞாபகம் இருக்கிறது. எப்படி தூங்கினேன் என்று தெரியவில்லை. அம்மா விரிப்பைப் போட்டு என்னைக் கிடத்தியிருக்க வேண்டும். சின்னக்குஞ்சான் எங்கிருக்கிறது என்று தேடிக் கொண்டே கொல்லைப் பக்கம் சென்றேன். செங்கலை எனக்கும் சேர்த்தே பொடியாக்கி வைத்திருந்தாள் அம்மா.

கொஞ்சத்தை அள்ளி பீச்சாங்கையில் போட்டுக் கொண்டு, சோத்துக் கையில் எச்சிலைத் துப்பி செங்கல் பொடியை தொட்டு ஈ எனக்காட்டி பல்லை விளக்கினேன். அங்கிருந்து அவள் கவனித்துக் கொண்டே இருப்பாள் என்று தெரியும். ஆனாலும் நான் சின்னக்குஞ்சானை பார்த்தேன். அவன் கொட்டிலிலேயே இன்னும் இருந்தான். வழக்கமாய் இந்நேரம் எழுந்து அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்க வேண்டும். ஏன் நான் சீக்கிரம் எழுந்துவிட்டேனோ என்று தோன்றியது. என் காலுக்கு அடியில் ஒரு உண்டை ஓடியது. அது பீயுருட்டி வண்டு. சாணியை உருண்டையாக உருட்டி லாவகமாய் எடுத்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்து. நான் குத்துக்காலிட்டு உட்காந்து அதன் உருவத்தைப் பார்த்தேன். அது இப்படியொருத்தன் பார்த்துக் கொண்டிருக்கிறானே என்ற கூச்சம் இல்லாமல் ஓடியது. எழுந்து அதைக் காலால் ஒரு எத்துவிட்டு அம்மாவின் பக்கம் வந்தேன். அந்த வண்டு எவன்டா என்னை உதைத்தது என என்னை தேடிக்கொண்டிருக்கும், உள்ளுக்குள் மகிழ்ந்தேன்.

அம்மாவிடம் ஈ எனக் காட்டினேன். அவள் போய் வாய்க்கொப்புளி என்றவுடன் அங்கிருந்து தொட்டியிலிருந்து நீரெடுத்து வாய்க்குள் இட்டு அந்நாந்து குலவை இட்டேன். வாயிலிருந்து நீீர் மார்பில் வழிந்தது. நன்றாக கொப்பிலித்துவிட்டு முகத்தில் நீரை இறைத்து முகத்தில் அடித்தேன். டவுசர் நினைந்துவிடாதவாறு உடல்முழுக்க நனைத்துவிட்டு நிமிர்ந்தபோது, வயிற்றுக்குள் பிசைவு உண்டாகியது. கீறிச்சிடும் தகரக்கதவைத் திறந்தேன். உள்ளே பெரிய குழியும் இரு கால் வைக்க மேடும் கொண்ட கக்கூஸ் இருந்தது. அதன் வலதுபக்கம் ஒரு பழைய இரும்பு சட்டியில் நிறைய சாம்பலும், கதவுக்கு அருகே நீர்வாளியும் டப்பாவும் இருந்தன. டவுசரை கழட்டி தோளில் போட்டுக் கொண்டு அந்த கால்வைக்கும் இடத்தில் ஒரு காலை கவனமாக வைத்துக் கொண்டேன். அடுத்தக் காலை வைக்கும் போது கொஞ்சம் பயமாக இருந்தது. இது பெரியவர்களுக்கு செய்யப்பட்டது. அதனால் குழியின் அகலம் அதிகமாக இருந்தது. குழிக்குள் எல்லோரும் கழித்த மலம் விதவிதமாக இருந்தது. நிறைய சாம்பலை அள்ளிப் போட்டிருந்தார்கள். அப்படியும் அதில் இருந்த மஞ்சள் நிறம் மறைவதாய் இல்லை.

என்னுடைய மலம் தொங்கியவாறு இருந்து அறுந்து அறுந்து விழுந்தது. வயிற்றுள் ஒரு வலியுடன் கூடிய இன்பம் கிடைத்தது. எனக்கு அருகில் ஒரு எறும்பு எதையோ தூக்கிக் கொண்டு ஓட அதைப் பின்தொடர்ந்து அங்கும் இங்கும் அலைந்தவாரு மற்றொரு எறும்பும் ஓடிக்கொண்டிருந்தது. அதனுடைய உணவை இது எடுத்துக் கொண்டு போயிலிருக்கலாம். சட்டென குழிக்குள் வெளிச்சம் பரவியது. அதன்பின்பக்கம் இருந்த தகரத்தை தூக்கி எட்டிப்பார்த்த ஒட்டச்சி “ஏலே.. மணி என்னாவுது இன்னும் கக்கூச உட்காந்துக்கிட்டு கிடக்க என்றாள்”. நான் அதிர்ந்து என்னுடைய டவுசரை முன்னுக்கு வைத்து மறைத்து சுவரோடு நின்றிருந்தேன். “என்னாடா பல்லிக் கணக்கா சுவத்துல ஒட்டிக்கிட்டு இருக்க. அந்த சாம்பல அள்ளி குழிக்குள் போடு” என்றாள். எனக்குள் எழுந்த படபடப்பு அடங்குவதற்குள், அவளிடம் திட்டுவாங்ககூடுமென நான் டவுசரை எங்கு வைத்துக் கொண்டு சாம்பலை அள்ளுவது. அவளிடம் அனுமதி கேட்டு கழுவிக் கொள்ளலாமா. ஒருவேளை அதுக்கும் திட்டினாள் என்ன செய்வது என்று பயந்து டவுடசை தூர வைத்துவிட்டு சாம்பலை கையில் அள்ளிப் போட்டேன். “இன்னும் போடு” .நானும் போட்டேன்.

சாம்பல் முழுக்க மூடியதும், அகப்பையால் அள்ளி அள்ளி கூடைக்குள் போட்டுக் கொண்டாள். எல்லாவற்றையும் அள்ளுவதற்குள் நான் ஓடிச்சென்று கழுவி டவுசரையும் போட்டுக் கொண்டு வெளியே வந்துவிட்டேன். என்ன நடந்தது என்று யோசிப்பதற்குள் வீ்ட்டின் வாசல் பக்கம் வந்து நின்றாள். ஐயயோ.. இப்போதும் திட்டுவாள் போலிருக்கே என்று நான் பின்பக்கம் ஓடினேன். “அம்மா.. அம்மாவோவ்..” என்னுடைய அம்மா வந்து பார்த்தால், ஒட்டச்சியைப் பார்த்தும் அவள் கக்கூசுக்குப் போய் தண்ணியை ஊற்றிவிட்டாள். ஒட்டச்சி விளக்கமாறால் அந்தக் குழியைக் கழுவி விட்டு தன்னுடைய கூடையை இடுப்பில் வைத்துக் கொண்டு கிளம்பினாள்.

“ஏன்டா கொஞ்ச நேரம் நின்னு தண்ணியை ஊத்திக்கிட்டு வந்திருக்கலாமுள்ள”
“அந்த ஒட்டச்சி, நான் ஒட்காந்து இருக்கும்போதே திறந்து பார்த்துடுச்சு.”
அம்மா சிரித்துக் கொண்டே, “நீ பொழுது முழுக்க தூங்கி எந்திருச்சி வெளுக்கிப் போனா, அவ திறந்து பார்க்கத்தான் செய்வா. சீக்கிரமே கக்கூசுக்கு போயிட்டு வந்தடனும்” என்றாள். நான் சரியென மண்டையை ஆட்டினேன். இரண்டு அடி என்னைக் கடந்து எடுத்துவைத்தவள். சற்று முகத்தினை மட்டும் திருப்பி,..”அவளை ஒட்டச்சின்னு இனி சொல்லாதே, விஜயாக்கன்னு கூப்பிடு. பாவப்பட்ட சாதியில்ல பிறந்து ஊரு பீயை அள்ளி பிழைச்சுக்கிட்டு இருக்கா.” என்றபடி நடந்தாள் அம்மா.

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s