செவப்பி – சிறுகதை

செவப்பியை உங்களுக்கு தெரிந்திருக்கலாம். நீங்கள் சென்னை வாசியாக இருந்தால், அவளை பேருந்திலோ, மின்சார ரயிலிலோ, சாலையிலோ, ஏன் உறவினர் வீட்டிலோ கூட பார்த்திருக்க வாய்ப்புண்டு. மாலை நாளேடுகளை தொடர்ந்தப வாசிக்கும் பழக்கம் இருந்தால் நீங்கள் அவளைப் பற்றி படித்திருப்பீர்கள்.

முன்நெற்றியில் விழும் கற்றைக் கூந்தலும், திருத்திய புருவங்களும், கோலிக்குண்டு கண்களும், கிள்ளத்தூண்டும் கண்ணச் சதையும் அவள் அடையாளங்கள். தெருவோரக் கடையில் விற்கும் காதணியும், மார்பை இறுக்கிப் பிடிக்கும் சட்டையும், கூடார பாவடையும் அவள் அணிபவை. உங்களுக்கு ஞாபகம் வருகிறதா?. இல்லையா!. சரி விடுங்கள் சிவப்பியை நான் உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

நெடுங்காலம் முன்பு குஜராத்தில் பூமிதேவதை ஆடிய ருத்திர தாண்டவத்தால் பெற்றோரையும், உற்றோரையும் இழந்த பெண் குழந்தையை, வடநாட்டு கூட்டமொன்று சென்னைக்கு அழைத்துவந்தது.

அன்றிரவு பூக்கார செவ்வந்தி விற்று தீர்க்காத பூக்களெல்லாம் கூடையில் அள்ளிப் போட்டுக் கோண்டு, கிடத்தியிருந்த சாக்கினையும், அவ்வப்போது நீர் தெளிக்க வைத்திருந்த பாத்திரத்தையும் ஓரம்கட்டி புறப்பட தயாரானாள். இப்போது கிளம்பினால்தான் கடைசி மின்சார வண்டியை பிடிக்க முடியும். நேற்று அதை தவறவிட்டு விட்டதால், பேருந்துக்காக காத்திருந்து அது வராமல் போக ஆட்டோவிற்கு மொத்த வருமானத்தையும் கொடுக்க வேண்டியதாய்ப் போயிற்று. வேக வேகமாய் எட்டுவைத்து நிலையத்தினை அடைந்தாள்.

இரவு உறக்கிய கூட்டத்திலிருந்து பிரிந்து தாயை தேடி மழலை மொழி பேசித் திரிகின்ற குழந்தையை பார்த்தாள். “அடடே, என்ன செவப்பு” என தனக்குள் அதிசயத்து அந்த குழந்தை அருகில் சென்றாள். அது இவளைப் பார்த்து ஏதோ சொன்னது. முகத்தினை உற்றுப் பார்த்து சிரித்து. செவ்வந்திக்கு சில நிமிடம் உலகமே மறந்தது. இருந்தும் குழந்தை நிறுத்தாமல் அவளிடம் பேசியது. அதன் பாசையில் வடமொழி வீச்சம் அதிகமிருந்ததால் யாரேனும் தவற விட்டிருக்கலாம் என்று சற்று நேரம் வருவோர் போவோரிடம் விசாரித்தாள்.

இறுதியாக ஏட்டு சிதம்பரத்திடம் சென்று “சாரே, யாரோ புள்ளைய தவறவிட்டுட்டாங்க” என்று நின்றாள். ஏட்டு நிலைய அதிகாரிடம் விசயத்தை கூறி, அறிவிப்பு செய்தும் யாருமே வராததால், குழந்தையை ஆசிரமம் ஏதாவதொன்றில் சேர்த்துவிட வேண்டுமென பேசிக்கொண்டார்கள். குழந்தையில்லாத செவ்வந்தி தயங்கி தயங்கி தானே வளர்ப்பதாக கூற, அவளுடைய முகவரியை வாங்கி பதிவு செய்து கொண்டு குழந்தையை அவளிடம் ஒப்படைத்தார்கள். செவ்வந்திக்கு குழந்தையை தர சொல்லி சிபாரிசு செய்த சிதம்பரம் அதற்காக தனியே மாமுல் வாங்கிக் கொண்டதை சொல்லி தெரியவேண்டியதில்லை.

செவ்வந்திக்கு தான் கருப்பாய் இருப்பதை உணர்ந்து கொஞ்சம் வருத்தம் இருந்தது. சிவப்பாய் இருப்பவர்கள் இறந்து போனதும் அவர்களின் தோலை வாங்கி தான் உடுத்திக் கொண்டால் என்ன என்றெல்லாம் சிந்திப்பாள். தன்னைவிட நிறமான குழந்தை தனக்கு கிடைத்திருப்பதை நினைத்து மகிழந்தபடி குடிசைக்கு சென்றாள். புருசன் மாரிமுத்துவிடம் கெஞ்சி கூத்தாடி வளர்க்கவும் சம்மதம் வாங்கிக் கொண்டாள். குழந்தை சிவப்பாக இருக்கிறது என்ற எண்ணம் தவிற வேறொன்றும் செவ்வந்திக்கு இல்லை. அதனால் செவப்பி என்று பெயர் வைத்தாள். தினமும் பூக்கூடையில் பூக்கள் நிரப்பி வைத்து அதில் செவப்பியை கிடத்தி தூங்க வைப்பாள். செவப்பி வளர்ந்து மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடும் போதும் தனித்த நிறத்துடன் திகழ்வதை பெருமை பொங்க பார்ப்பாள். கார்பரேசன் பள்ளியில் சேர்த்துவிட்டு செவப்பியை பெரிய ஆபிசராக ஆக்க எண்ணியிருந்தாள்.

***

செவப்பி பெரியவளாகி ஒரு மாதம் ஆகியிருந்தது. அன்றைய இரவில் ஏதோ சத்தம் கேட்டு எழுந்த செவ்வந்திக்கு கொலையே நடுங்கிப்போனது. மாரிமுத்து தூங்கிக் கொண்டிருந்த செவப்பியுடன் உடலுறவு கொள்ள முயன்று கொண்டிருந்தான். அப்பனிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள திமிரிக் கொண்டிருந்தாள்.

“ஏய், தேவுடியா மவனே..” என்று கத்திக் கொண்டே எழுந்து ஓடினாள். ஓடிய வேகத்தில் மாரிமுத்துவை எட்டி உதைத்தாள். அவன் குடிசையின் பக்கவாட்டில் சரிந்தான். அரண்டு எழுந்த சிவப்பிக்கு ஒன்றுமே புரியவில்லை. உடையை சரி செய்து கொண்டு பின்னால் நகர்ந்து கொண்டாள். “பெத்த புள்ளையை போய்.. எவனாவது இப்படி செய்வானா?” செவ்வந்தி சொல்லும் முன்பே மாரிமுத்து கத்தினான் “யாருக்கோ பிறந்த அநாதைநாயக்கு, நான் எப்படி அப்பன் ஆவேன்டீ. அவ எனக்கு புள்ளையும் இல்லை, நான் அப்பனும் இல்ல”.

தள்ளாடி எழுந்தவன் செவ்வந்தியை தள்ளிவிட்டு செவப்பியை நெருங்கினான். “இந்த செவத்த குட்டியோட படுத்து உனக்கு செவப்பா புள்ள பெத்து தாரேன்டி,..” செவப்பியின் சட்டையை இறுகப்பிடித்து கிழித்தான். அவள் உடல்நடுங்கியது. பேச்சுமூச்சற்று அப்பனையே பார்த்துக் கொண்டிருந்தாள். விழுந்துகிடந்த செவ்வந்தி தென்னமாற்றைத் தேடினாள் ஆனால் போதாத காலம் அரிவாள்மணைதான் கைக்கு சிக்கியது.

மகளை காப்பாற்ற வேண்டுமென்ற பதற்றத்தில் அவனை எத்தனையாக கூறுபோட்டாளென தெரியாது. பக்கத்து குடிசை வாசிகளும் வெளியில் படுத்திருந்தவர்களும் இந்த சத்தங்களைக் கேட்டு கதவினை தட்ட தொடங்கியிருந்தார்கள். சிறிது நேரத்தில் குடிசையின் பகுதியை கிழித்துக் கொண்டு கணேஷ் வரும்போது, மாரிமுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்தான். செவ்வந்தியும் செவப்பியும் கட்டியணைத்து அழுதபடி இருந்தார்கள். செவ்வந்தியை காவல்துறையினர் அழைத்து சென்றபோது செவப்பி இன்னும் அழுதாள். செவ்வந்திக்கு அழுவதற்கு கண்ணீர் மிச்சமிருக்கவில்லை.

மறுநாள் மாலை செய்திதாள்களில் “கணவனை கொன்ற மனைவி. வளர்ப்பு மகளிடம் தவறாக நடக்க முயன்றதால் விபரீதம்” என்று தலைப்பு செய்தியாக வந்தது. செய்தியில் பெயர்கள் மாற்றப்பட்டிருந்தன.

***

இதெல்லாம் நடந்து பல வாரங்களாகிவிட்டது, இப்போது செவ்வந்தி விசாரனை கைதியாக சிறையில் இருக்கிறாள். சிவப்பி படிப்பினை கைவிட்டுவிட்டு பக்கத்துவிட்டு சாராதாவுடன் கட்டிட வேலைக்கு சென்று கொண்டிருக்கிறாள். செவ்வந்தி இருக்கும் ஜெயிலில் கூட்டிப்பெருக்கும் வேலைக்கு சேர்ந்தால் அவளை தினமும் பார்க்கலாம் என தனக்கு தெரிந்தவர்கள் மூலம் அங்கு சேர முயன்று கொண்டிருக்கிறாள்.

நீங்கள் சிவப்பியை எங்கேனும் பார்த்தால் கொஞ்சம் தள்ளியே இருங்கள், செவ்வந்திக்கு மீண்டும் அரிவாள்மணை தூக்கும் வேலையை கொடுத்துவிடாதீர்கள்.

எனது சிறுகதைகள் –
மயிர்
தானம்
தாய்மை
அழகான பன்னிக்குட்டி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s