திகைக்க வைத்த திருப்பதி பயணம் -3

திருமலையை விட்டு கீழிறங்கும் போது வேறு பாதையில் வருவதை அறிய முடிந்தது. பல இடங்களில் மரக் கன்றுகள் பராமரிக்கப்பட்டுக் கொண்டு இருந்தன. சில இடங்களில் நடைபயணம் மேற்கொள்வோர்களுக்கான படிக்கட்டுகளும், ஓய்வு அமைப்புகளும் இருந்தன. அதை தவிர நிர்வாக அமைப்புக்காக உள்ள சில கட்டிடங்கள், சிறு கோவில்கள். இவை தவிற வேறெந்த கட்டிடங்களோ, வீடுகளோ மலை முழுக்க இல்லை. இன்னும் கூட காடுகளாகவே திருமலை பாதுகாக்கப் பட்டு வருதல் மகிழ்ச்சி. மான்கள் சிலவற்றை சாலையின் ஓரம் பார்க்க முடிந்தது. சுதந்திரமாக திரிந்து கொண்டிருந்தன. சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதென சில நேரங்களில் செய்திதாள்களில் படித்திருக்கிறேன். ஆனால் அவைகள் கண்களில் படவில்லை. திருமலைக்கு செல்லும் நேரத்தினை விட மிகக் குறைவான நேரத்திலே மீண்டும் நகரை அடைந்தோம்.

பேருந்து பங்களா போன்ற தோற்றம் அளிக்கக் கூடிய பெரிய கட்டிடத்தினை நோக்கி சென்றது அங்கு எ.பி.டிராவல்ஸ் என்று எழுதப்பட்ட பத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் நின்றுகொண்டிருந்ததன. ஆந்திர அரசாங்கத்தின் சுற்றுலா மேம்பாடுத் துறை பெரிய அளவில் செயல்படுவதற்கு அந்த கட்டிடமே சாட்சி. வழிநடத்துனர் எங்களிடம் வந்து “முதல் மாடியில் ரெஸ்ட் ரூம் இருக்கு, அதற்கு பக்கத்திலேயே ரெஸ்டாரன்ட் இருக்கு சாப்பிட்டுட்டு எல்லோரும் கீழே வந்திடுங்க” என்று கூறி, ஆளுக்கொரு டோக்கன் கொடுத்தார். லிப்டுக்கு எங்களோடு வந்தவர்கள் நிற்க, முதல்மாடிதானே படிக்கட்டில் செல்லாம் என படிக்கட்டை தேடினோம். வலது பக்க திருப்பத்தில் அமைந்திருந்த படிக்கட்டின் மேலே “” என்று எழுதியிருந்தது அறிவிப்பு பலகை. திருமலையின் மேல் பழந்தமிழர்களின் வாழ்வியலை கூறிக் கொண்டு தமிழ்கல்வெட்டுகள் இன்னுமும் இருக்கின்றன. ஆனால் கீழே தமிழ் கொலை செய்யப்பட்டு கிடக்கின்றது.

தமிழ் கொலை

தமிழ் கொலை

அனைவருக்கும் முழு சாப்பாடு வழங்கப்பட்டது. நாங்கள் உண்டு முடித்தும் பலர் இன்னும் மும்முரமாக அந்த வேலையில் இருந்ததால், கட்டிடத்தினை சுற்றிப் பார்க்க சென்றோம். சென்னை மயிலாப்பூர், கலங்கரை விளக்கம் போன்ற இடங்களில் அமைந்திருக்கும் மின்சார தொடர்வண்டிகளுக்கான பிரம்மாண்ட கட்டிடங்களைப் போல இருந்தது. குறைவான அளவே மக்கள் இருந்ததால் கட்டிடத்தின் பேரமைதியும், பெரும் இடமும் நன்கு தெரிந்தது. ஆன்மீக நூல்கள், குளிர்பான விற்பனையகம் என்று குட்டி குட்டியாய் கடைகள் இருந்ததன. கலை அலங்காரப் பொருள்கள் விற்பனையகம் மட்டும் பெரியதாக இருந்தது. ஸ்பென்சரில் இருப்பது போல கட்டுப்படியாக விலையில் பொருள்கள் விற்கப்பட்டன. வெங்கியின் மரத்தாலான உருவம் லட்சக்கணக்கான விலைப்பட்டியலைக் கொண்டிருந்தது. தஞ்சை தலையாட்டி பொம்மைகள், சிறு சிறு கற்சிலைகள், வெங்கல சிலைகள் என ஏகம் இருந்தன. பேருந்தை தவற விட்டுவிடப்போகிறோம் என வாசல் நோக்கி வந்தோம்.

எங்களுடன் வந்தவர்களை ஆந்திரா ஈசல்கள் பயமுறுத்திக் கொண்டிருந்தன. சிங்கம், புலி போன்ற பெரிய கொடும் விலங்களுக்கெல்லாம் மனிதன் பயப்படுவதில்லை. சிறு உயிர்களான கொசுவுக்கும், ஈசலுக்கும் பயந்து போகிறோம். இயற்கை சமநிலையை தகர்க்காமல் விட்டிருந்தால் இந்தநிலை மனிதனுக்கு வந்திருக்காது. கொசு, ஈ, ஈசல் என சிறு பூச்சிகளை உண்ணும் பெரும்பாலான பறவைகள் அழிந்துவிட்டன. ம்ஹூம்… நாம் அழித்துவிட்டோம். இதில் தப்பி பிழைத்த பறவை காக்கா மட்டுமே. ஆனால் அவைகளுக்கு பூச்சிகளை உண்ண பிடிப்பதில்லை. இவையெல்லாம் நாமே செய்து கொண்ட வினை. பேருந்து புறப்பட தயாரானது. உண்ட களைப்பில் பத்மாவதி அம்மன் கோவிலுக்கு போவதையே மறந்திருந்தோம். வழிநடத்துனர் அம்மனை பார்க்க சிலரே விருப்பம் தெரிவிக்கின்றார்கள், நிச்சயம் அம்மனை பார்க்கனுமா, இல்லை நேராக சென்னை சென்றுவிடலாமா என்று கேட்டார். முதல்முறையாக வந்திருக்கிறோம், பார்த்துவிட்டு செல்லலாம் என்று நாங்கள் முடிவெடுத்தோம், எங்களுடன் சிலர் மட்டுமே வர தயாராக இருந்தார்கள்.

பேருந்திலி்ருந்து இறங்கியதுமே, “கோவிலில் 40 ரூபாய் டிக்கெட் இருக்கும் அதை எடுத்துக் கொண்டு செல்லுங்கள், வேகமாக தரிசனம் செய்துவிட்டு வந்துவிடலாம். தாமதமாக்காதீர்கள்” என்று அறிவுரை கூறினார். அவர் கூறியதை போலவே 40 ரூபாய் டிக்கெட் எடுத்துவிட்டு கோவிலினுள் நுழைந்தோம். சுற்றுப் பிரகாரங்களில் எத்தனை இரும்பு தடுப்பு அமைத்து பாதை போட முடியுமோ அத்தனை போட்டிருந்தார்கள். மின்விசறிகள் கூட சிறிது இடைவெளிவி்ட்டு விட்டு தொடர்ந்தது. அம்மனை தரிசித்துவிட்டு வரும் வழியில் ஒரு பெரிய உண்டியலை சுற்றி பாதை அமைத்திருந்தார்கள். தனியே உண்டியலை வைத்தால் மக்கள் எங்கே மறந்துவிட போகின்றார்களோ என்று சிந்தித்திருக்கின்றார்கள். தரிசனத்தினை விட லட்டுக்குத்தான் பெரிய வரிசை இருந்தது. ஒரு லட்டு பத்துரூபாய்க்கு கிடைக்கிறது. அலுவலகத்தில் கொடுக்க வேண்டி சில லட்டுகளை வாங்கிக் கொண்டோம். திருமலையில் கொடுக்கப்பட்ட லட்டுபோல் இல்லாமல் முந்திரி திராட்சையோடு சுவையும் குறைந்தே காணப்பட்டது. 40 ரூபாய் டோக்கனுக்கு 2 லட்டுகள் வேறு கொடுக்கின்றார்கள். கட்டாய பிரசாதம். ஆனால் அதே பிளாஸ்டிக் பை. அப்போதுதான் திருப்பதி தேவஸ்தானமே இதை நடத்துகின்றது என்று புரிந்தது.

கோவிலுக்கு வெளியே தாமரை, ருத்திராட்சம், படிகமாலை என எல்லாமே விற்பனை செய்யப்படுகிறது. ருத்திராட்சம் மரத்தின் கிளையோடு வெட்டி வைத்திருந்தார்கள் சிலர். கோவிலுக்கு வராத பலர் எங்களின் வருகைக்காக பேருந்தில் காத்திருந்தார்கள். அனைவரும் வந்ததும், வழிநடத்துனர் “இதோடு நான் போயிடுவேன். இனிமே இவர்தான் கூட வருவார். இவர்க்கிட்ட எந்த இடத்தில் நிறுத்தனுமுன்னு முன்னாடியே சொல்லிடுங்க” என்று அறிவுரை கூறிவிட்டு விடை பெற்றார். நாங்கள் யார் யாருக்கு எத்தனை லட்டுகள் கொடுக்கப்போகிறோம் என்று பட்டியல் தயாரித்துக் கொண்டிருந்தோம். பேருந்து சென்னை நோக்கி முன்னேற, கொஞ்சம் கண்கள் அயர்ந்தோம், சில மணி நேரங்களில் சைதை பனகல் மாளிகை அருகே பேருந்து நின்றது. அப்போது மணி இரவு 1.30. எங்களின் திருப்பதி பயணம் இனிதே முடிந்தது.

முதல் முறை என்பதாலும், முறையான தகவல்கள் இல்லாததாலும் இந்தப் பயணத்தில் பலவற்றை அறியமுடியவில்லை. திருப்பதியே செல்ல வேண்டாம் என்று நினைத்தவன், இப்போது நினைப்பதெல்லாம் இரண்டு மூன்று நாட்கள் திருப்பதியில் இருக்கும்படியாக செல்ல வேண்டும் என்பதே. எல்லா கோவில்களிலும் கருவறை தவிற நிறைய இருக்கிறது, திருப்பதியிலும் அவ்வாறு இருந்திருக்கும். ஆனால் இந்த பயணத்தில் கருவறை வேறொன்றை கூட கண்களால் பார்க்க முடியவில்லை. கருவறைக்கே செல்லாத ஒரு திருப்பதி பயணம் வரும் காலத்திலாவது சாத்தியப்படுமா என பார்க்கலாம்.

6 comments on “திகைக்க வைத்த திருப்பதி பயணம் -3

 1. devadass சொல்கிறார்:

  திகைக்க வைத்த திருப்பதி பயணம் 1 படித்து விட்டு முழு பதிவுகளையும் படித்துவிட்டு எனது கருத்தைத் தருகிறேன் என பின்னுாட்டம் இட்டு இருந்தேன்.
  அதன்படி எனது கருத்து
  தங்களது முதல் பதிவை படித்து விட்டு எனது மனதில் ஓடியது ஏதோ நாத்திக பாணியில் விமா்சனம் செய்வீர்களென நினைத்தேன்.
  இல்லை எனில் ஏதோ குற்றாலம் பயணம் போல எழுதுவீர்களென நினைத்தேன்.
  நானும் உங்களைப் போலத்தான் 1965ல் முதலில் செல்லும்போது பள்ளிக்குப் போக வேண்டியதில்லை ஜாலியாக இருக்குமென கருத்தில் சென்றேன்.அதன் பின் வருடம் ஒரு முறை செல்ல விபரம் தெரிய தெரிய பல வித உணர்வுகளை அனுபித்தேன்.
  தினமும் சுமார் ஒரு இலட்சம் பக்தா்கள் வருமிடத்தில் இவ்வளவு பெரிய ஏற்பாடுகளை பாருங்கள்.
  குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் அனைத்திலும் முன்னுரிமை.
  சாப்பாடு எப்போது சாப்பிட்டாலும் ஒரே மாதிரி தரமான உணவு.
  அனைத்திலும் பெருமாளைப் பாருங்கள்.ஆராய்ச்சி பண்ணத் தோன்றாது.
  நான்,எனது மனைவி, எனது இரண்டு மகன்கள்,ஒரு பேரன் அனைவரும் வருடத்திறகு ஒரு முறை சென்று குறைந்தது ஐந்து நாட்கள் இருப்போம்.
  திருமலையில் இருக்கும் ஐந்து நாட்களும் காலணி அணியமாட்டோம்.
  எந்த விதமான அலங்காரமும் செய்து கொள்ள மாட்டோம்.
  ஒருநாள் அங்கபிரதடசனம்,ஒருநாள் கட்டண சேவை மீதி இருக்கும் நாட்களில் இலவச தர்ம தரிசனம்.ஆலயத்தில் வழங்கும்.உணவு. இதுதான் எங்களது திருப்பதி ஷெட்யுல்.தாங்கள் சென்னையில் வசிப்பவராக இருந்தால் மாதம் ரூ500 இருந்தால் போதும்.இதற்கு நேரமும் மனசும்தான் வேண்டும்.
  நன்றி.வணக்கம்
  வாழ்க வளமுடன்
  snr.DEVADASS

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   நிறைய வசதிகள் செய்து தருகின்றன என்பதில் எந்தவித கருத்துமாறுபாடும் இல்லை. ஆனால் மக்கள் இன்னமும் அப்படியே இருக்கின்றார்கள் என்பது வேதனை. உங்களைப் போல ஒரு ஐந்துநாள் சென்றால் நிச்சயம் மகிழ்வாக இருக்கும். நன்றி நண்பரே.

 2. இனிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி… வாழ்த்துக்கள்…

 3. Babou சொல்கிறார்:

  மிகவும் அருமையாக இருந்தது ஜெகதீஸ்வரன்.. தெளிவான நீரோடை போல..
  ஒரு வேண்டுகோள் – தமிழ் தட்டச்சு செய்யும் போது நீங்கள் ஒருமுறைக்கு இருமுறை படித்து பதிவுகளை இடுங்கள். இங்கே நான் கவனித்த வார்த்தைகளும் திருத்தங்களும் –
  ”தவிற —> தவிர
  சுகந்திரமாக —> சுதந்திரமாக
  செய்திதாள் —> செய்தித்தாள்
  அரோக்கியமான —-> ஆரோக்கியமான”

  இதை எதற்கு சொல்கிறேன் என்றால் -திருமலையில் இருக்கும் அறிவிப்பு பலகையை குறை சொல்லிவிட்டு நீங்கள் தவறு இழைத்துவிட்டதாக மற்றவர்கள் உங்களை குறை சொல்லக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் மட்டுமே! என்னை மன்னிக்கவும். திருத்தங்களை மட்டும் செய்து விட்டு என் மறுமொழியை அழித்து விடுக.. நன்றி..

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   பாராட்டுக்கு நன்றி நண்பரே,. தவறினை சுட்டிக் காட்டுவதால்தான் தவறை திருத்திக் கொள்ள முடிகிறது. குறை சொல்லவதை இந்த சமூகம் இன்னும் கேவலமாக பேசுகிறது. அது தவறு. சுட்டிக்காட்டுதல் மிகவும் அவசியமான ஒன்று. இந்த மறுமொழியை அழித்து ஒன்றும் ஆகப் போவதில்லை. உங்கள் அன்பான பங்கெடுப்பினை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். தவறை திருத்திருக் கொள்கிறேன். மிக்க நன்றி நண்பரே.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s