கருப்பு வெறும் நிறமல்ல!

கருப்பு வெறும் நிறமல்ல!

வெண்தோல் வேண்டி
வேண்டாத களிம்பு தடவி!

வெளியில் செல்லாமல்
வெயிலில் துள்ளாமல்!

அறைக்குள் முடங்கி
ஆடைக்குள் உறக்கியது போதும்!

உண்மையை உணர்க…

ஊருக்கு உழைத்தோம்- அதனால்
உடலெல்லாலம் கருத்தோம்!

கருப்பு வெறும் நிறமல்ல
கடவுள் கொடுத்த வரம்!

கருப்பின வெறுப்பு!

கருப்பின வெறுப்பென்பது
அவர்களை அடிப்பதும்
அடிமைசெய்வதும் மட்டுமன்று

நான் வெள்ளையாக வேண்டுமென
க்ரீம் எடுத்து பூசுவதும்கூட
கருப்பின வெறுப்புதான்!

கவிதைக்கான காரணம் –

காலம் காலமாக உழைத்தனாலும், தட்ப வெட்ப சூழலாலும் நம் தமிழர்களின் நிறம் சராசரியாக கருப்பு நிறமாகவே இருக்கிறது. சிலர் கொஞ்சம் மாநிறத்தில் இருந்தாலும், பெருபான்மை எல்லாம் கருப்பு நிறமே. உண்மை இப்படியிருக்க, பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை காட்டப்படும் வெண்தோல் விளம்பரங்களால், கருப்பான பெண் மீதும், ஆண் மீதும் மறைமுக வன்முறைகள் தொடுக்கப்படுகின்றன. ஒரு சமூகத்தின் நிறத்திற்கு எதிரான நிறவெறியை நாம் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறோம். இப்போதே பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும், தலைவிரித்தாட தொடங்கிவிட்டது நிறவெறி.

சமீபத்திய தமிழ் திரைப்படங்களின் கதைநாயகிகள் எல்லாம் வெளிர் நிறம் கொண்டவர்கள், வெளிமாநிலத்தவர்கள். தமிழ்பெண்களின் நிறம் தகுதி குறைவாக நினைக்கப்படும் போது, தமிழே அறியாதவர்கள் எல்லாம் தங்கள் நிறத்திற்காக கதைநாயகிகளாக ஆகின்றார்கள். “வெள்ளையாய் இருப்பவன் வெகுளி”, “சிகப்பு பெண்ணே அழகு”, “வெள்ளையாய் இருந்தால்தான் சாதிக்க முடியும்”  என்றெல்லாம் நம் நெஞ்சத்தில் நச்சு வளர்ந்து கொண்டே இருக்கிறது. கருப்பாக இருப்பதை “டல்” என கேலி செய்வதும், வெள்ளையாய் வந்தால் “தூள்” என புகழ்வதும் வன்முறை அல்லவா.  வெள்ளையாய் இருந்தால் தான் மேடையில் பாட முடியும், கருப்பாக இருப்பதே தோல்விக்கு காரணமென, திறமையை எல்லாம் கேலி செய்வது தவறு அல்லவா. கருப்பாக இருப்போறெல்லாம் சிவப்பாக மாற இருவாரம் போதுமென்றால் ஆப்பிரிக்காவில் இருக்கும் எல்லோரையும் சிவப்பாக மாற்றிவிட முடியுமே. அமெரிக்காவின் ஜனாதிபதியாக உலகையே ஆட்டிப் படைக்கும் ஒபாமா, இந்நேரம் வெள்ளையாய் ஆயிருப்பாரே.  எந்தவித அறிவியல் புரிதலும் இன்றி அடுக்கடுக்காய் ஏவப்படும் அபாய விளம்பரங்களை எந்த சமூக நல அமைப்பும் இன்றுவரை எதிர்க்கவில்லை. ஊருக்கு உழைப்பதாய் தங்களை முன்நிறுத்திக் கொள்ளும் எந்த ஊடகங்களும்(தொலைகாட்சி, திரைப்படம், நாளேடுகள், புத்தகங்கள்) இதற்கெதிராய் குரல் கொடுப்பதில்லை.

ஆங்காங்கே சில தோழிகள் மட்டும் இந்த விஷயத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதை பதிவு செய்திருக்கிறார்கள். சமூகம் தங்களை புறக்கணிப்பு நிகழ்கிறது என்கிறார்கள்.  ஆணைவிட இந்த பாசிச மனப்பான்மை பெண்களையே அதிகம் பாதிக்கிறது. கருப்பாய் பெண் பிறந்தால் பவுன் அதிகம் போடவேண்டுமென சொல்லும் சமூகத்தில், கருப்பு ஒரு குறைபாடாகவே பார்க்கப்படும் அவலம். கை கால்களை இழந்து நிற்கும் மனிதர்களையே மாற்றுத்திறனாளிகள் என மரியாதையோடு அழைக்கும் நாம், கருப்பாய் பிறந்தமைக்காக மனதினை ஊனமாக்குவது ஞாயமா. நீ கருப்பு நிறம் அதனால் உன்னுடன் நான் பழகமாட்டேன் என்று சொல்லுவதை நிறவெறி தானே. இன்று பழகமாட்டேன், பேசமாட்டேன் என்றெல்லாம் சொல்லும் வெறுப்புகள் வளர்ந்து, நாளே வெளிநாடுகளில் உள்ளது போல கொலைகளும், தற்கொலைகளும் நடைபெறும் முன் இந்த கொடுஞ் செயலை தடுத்துநிறுத்திட வேண்டும்.

தொலைக்காட்சி, திரைப்படம், செய்திதாள்,  நாளேடுகள், புத்தகங்கள் என்று பரவிக்கிடக்கும் இந்த வெண்க்ரீம் விளம்பரங்களை தடுத்துநிறுத்த வேண்டும். சமூக நல இயக்கங்களும், பெண்ணிய அமைப்பைபுகளும் இந்த பாசிசத்திற்கு எதிரான குரல்களையும், விழிப்புணர்வையும் பதிவு செய்ய வேண்டும். சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் இந்த நஞ்சு, முயல்பிடிக்க பம்மியிருக்கும் வேட்டை நாய்போல எப்போது வேண்டுமானாலும் உயிரை பலிகொள்ளலாம். அதற்குள் விழிப்பது அவசியம். நன்றி!.

2 comments on “கருப்பு வெறும் நிறமல்ல!

  1. வைகுண்டராமன்.ப சொல்கிறார்:

    கருப்பாக இருப்போறெல்லாம் சிவப்பாக மாற இருவாரம் போதுமென்றால் ஆப்பிரிக்காவில் இருக்கும் எல்லோரையும் சிவப்பாக மாற்றிவிட முடியுமே.

    சரியான கேள்வி ஆனால் இந்த கேள்வியை அனைவரும் தங்களுக்குள் கேட்டுக்கொண்டால் மட்டுமே இந்த சிவப்பு நிற மோகத்திற்கு தீர்வு என்பது என்னுடைய கருத்து…

    நிறத்தை வைத்து தரத்தை நிர்ணயிப்பது வரவேற்கதகாத ஒன்று.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s