திகைக்க வைத்த திருப்பதி பயணம் -1

தரிசனத்திற்கு பணம், மக்கள் கூட்டம் இந்த இரண்டும் எனக்கு கோவிலில் பிடிக்காதது. இந்த இரண்டும் அதிகம் உள்ள இடம் திருப்பதி. அதனாலேயே இத்தனை வருடங்களாக திருப்பதி செல்வது பற்றிய சிந்தனையின்றி இருந்தேன். எல்லா இடங்களையும் ஒரு முறையாகவாவது சென்று பார்த்துவா என்று அம்மா சொல்லி சொல்லியே என் நிலையை மாற்றி விட்டார். இந்த மாதம் முதல் சனியன்று நண்பர்கள் இருவருடன் திருப்பதி செல்ல நேர்ந்தது. இதை ஆன்மீக பயணத்தில் சேர்க்க நான் விரும்பவில்லை. ஓர் அனுபவமாகவே எண்ணுகிறேன்.  என் பார்வையில் திருப்பதி எப்படி இருந்தது என்று தெரிந்துகொள்ள வாருங்கள்.

திருப்பதி –

எ.பி.டூரிசம் என்பதில் ரூபாய் 1250க்கு புக் செய்திருந்தார்கள் நண்பர்கள். காலை 4.30 மணிக்கு தி.நகரில் நிற்கும் பேருந்தை பார்த்த போதுதான் ஆந்திர பிரதேஸ் என்பதன் சுருக்கமாக எ.பி உள்ளது என்பதை அறிந்தேன். ஒரு மாநில அரசே தனியாக டூரிசத்திற்கென இத்தனை தூரம் செயல்படுகிறது என்ற ஆச்சரியத்துடன் எங்கள் பயணம் 5.30 மணிக்கு தொடங்கியது. சிலர் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். அவர்களின் வரவாலேயே பேருந்து நிரம்பியிருந்தது. குட்டி குட்டி குழந்தைகளும் தாங்கள் எங்கு செல்கிறோம் என்பதை பற்றிய கவலைகள் இல்லாமல் பயணிக்க, நானோ கொஞ்சமும் அறிமுகமே இல்லாத இடத்தினைப் பற்றிய பயத்துடேனே பயணித்தேன். உணவுக்காக பேருந்து நிறுத்தப்படும் போது மணி 10.30 இருக்கும். காலை உணவும், இரவு உணவும் பேக்கேஜில் வந்துவிடும் எனவே அவர்களே உணவுக்காக ஏற்பாடுகள் செய்திருந்தார்கள்.

உணவினை முடித்து பேருந்து அடுத்து திருமலையின் பேருந்து நிலையத்தில் நின்றது. நிறைய மக்கள் பல் விளக்கி கொண்டு கழிவறை முன் நின்றுகொண்டிருந்தார்கள். அதிக மக்கள் வந்து செல்லும் பேருந்து நிலையம் அதற்கான அறிகுறிகளுடனே இருந்தது. பேருந்து வந்து நிற்கும் போதே அதில் அமர முண்டியடிக்கும் கூட்டமும்,  குடும்பத்துடன் வந்தவர்கள் அடுத்த பேருந்திற்காக ஏக்கத்துடன் காத்திருப்பதையும் காண முடிந்தது.  திருமலை – திருப்பதி என்று ஏறக்குறைய எல்லா பேருந்துகளிலும் எழுதப்பட்டிருந்தது. அந்த பேருந்தின் பின்புறமும் பயணசீட்டுக்கான கட்டணம் பற்றிய விவரமும் இருந்தது. குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு என தனித்தனியாக அந்த விவரம் புதுமையானதாகவும், வரவேற்கதக்கதாகவும் இருந்தது. திருப்பதி என்பது நகரம் திருமலை என்பதே நாம் செல்லும் இடம் நண்பர்களில் ஒருவன் விளக்கம் கொடுத்தான். எப்படிடா சரியாத்தான் சொல்லறீயா என்றேன். நாம் மலைக்கு தானே செல்கிறோம் அது திருமலைத்தான் என்றான். ஊரெல்லாம் திருப்பதி செல்கிறேன் என்று சொல்லிவந்தோமே உண்மையில் திருமலைக்கு செல்கிறேன் என்று சொல்லவேண்டுமா?.  நாங்கள் வந்த பேருந்தில் இருந்து வேறுஒரு பேருந்திற்கு மாறினோம். திருமலை நோக்கிய எங்கள் பயணம் இறுதி கட்டத்தினை நெருங்கியது.

திருப்பதி நகரில் கைகளில் துப்பாக்கியுடன் மில்டரி அதிகாரிகளும், காவல் அதிகாரிகளும் நகரத்தில் உலா வருவதை கண்டோம். அவர்கள் அருகிலேயே கைகளில்  அம்மன் படதட்டுடன் மஞ்சள், சிவப்பு சேலைகளை அணிந்திருந்த மங்கைகள் சிலர் நோட்டிசுகளை பிரித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு புறம் மக்களை காவல்காக்கும் அதிகாரிகள், மறுபுறம் தங்கள் வயிற்றுக்காக மக்களை தொல்லை செய்யும் அவலக்காரிகள். சிந்தனை வேறுதிசைக்கு பயணிக்கும் முன் திருப்பதி மலைமீது பேருந்து தவழ்ந்து கொண்டிருந்தது. இருபுறமும் காடுகளும், சில பாதசாரியாக நடந்துவரும் மனிதர்களும் தென்பட்டார்கள். பல இடங்களில் சிறு சிறு கோவில்கள் தெரிந்தன. மரங்களை வளர்க்க புதிய கன்றுகளை பரமாரிப்பதும், பூங்காக்களைப்போல அழகான வடிவமைப்புடன் தாவரங்கள் இருப்பதையும் காண முடிந்தது.

திருப்பதி மலையின் உச்சியை அடைந்தோம். மொட்டை அடிக்க நிற்கும் கூட்டத்தினைப் பார்த்து அதிர்ந்தேன். இத்தனை கூட்டத்தில் நண்பர்கள் இருவர் எப்படி மொட்டை போடபோகிறேன் என்று வேறு சொல்லியிருந்தார்கள்.  திரும்பிய திசையெங்கும் மக்கள் கூட்டமே தெரிந்தது. முடிகாணிக்கை செய்யும் நபர்களின் குடும்பத்தினை மட்டும் இறங்க சொல்லி ஒரு கட்டிடத்திற்கு அழைத்து சென்றார். அங்கிருந்த வராண்டாவில் நிறைய மக்கள் ஓரமாய் கிடைக்கும் இடத்தில் படுத்திருந்தனர். சிலர் மூட்டைமுடிச்சுகளுன் அமர்ந்திருந்தனர். மேலும் சிலர் பரபரப்பாய் அலைந்து கொண்டிருந்தனர். கவணித்து நடக்காவிட்டால் யாரையாவது மிதித்துவிடுவோம் என்ற அளவு மக்கள் கூட்டம் இருந்தது. வழிகாட்டி ஏதோ ரசிது வாங்கிக்கொண்டு வந்தார். அதற்கு அடுத்து பொருள்களை பாதுகாப்பாக வைக்கும் லாக்கர் பகுதியை பெரிய ஹால் போன்ற அமைப்பில் வைத்திருந்தார்கள். லாக்கர்கள் சுவரை சுற்றி இருக்க,. அதன் முன் மக்களின் கூட்டம் தூங்குவதும், சாப்பிடுவதுமாக இருந்தது.

அந்த ஹாலை கடந்தபின் முடியெடுக்கும் இடம். முடிகாணிக்கை செய்ய வந்தவர்கள் துண்டு, சாட்ஸ் என தங்களுக்கு வசதியானவற்றுக்கு மாறிக்கொண்டிருந்தார்கள். முடியின்றி ஏகப்பட்ட தாய்குலங்களும், தந்தை குலங்களும் மொட்டையாக இருந்தார்கள். முடி துறந்த மன்னர்களாக ஆண்கள் வலம் வந்தாலும், பெண்கள் தான் அழகு. முடியில்லையென்றாலும் கூட சில பெண்களின் முகம் ஹில்பாவினை ஞாபகம் செய்தது. திருப்பதி வந்தாலும் கூட நடிகைகளின் நினைப்பு விடுவதில்லை என மனதினை கடிந்துகொண்டேன். முழுக்க முழுக்க டையில்சால் ஆன இடத்தில் முடிகாணிக்கை எடுப்பதற்காக ஏகப்பட்ட நாவிதர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்கள்தான் இந்த மலையின் சொந்த மக்கள். அவர்கள் வழிபட்ட காளிதான் இப்போது திருமாலாக உள்ளது என்றெல்லாம் படித்த ஞாபகம். அந்த அறையின் ஓரத்தில் முடியை போட்டு வைக்கும் பெரிய டிரம் இருந்தது. கீழே முடிகளை சுத்தம் செய்ய தனி பணியாட்கள் இருந்தார்கள். அந்த அறைக்குள் செருப்பினை அணிந்துவருபவர்களை திருப்பி அனுப்புவதும் அவர்களின் வேலையாகவே இருந்தது. முடி மழித்தும் குளியல் செய்ய ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியான குளியல் அறைகள் வெளியே இருந்ததன.

வரிசையில் நண்பர்களுடன் நின்று கொண்டிருக்கும் வேலையில் கண்களை சுழல விட்டேன். அறையின் ஒருபுறம் வெங்கியின் படம் மாட்டப்பட்டிருந்தது. பிறகு எல்லா இடங்களும் நாவிதர்களுக்கு மேல் அவர்களுக்கு வழங்கப்பட்ட எண்கள் இருந்தன. நாம் வாங்கும் டோக்கனில் குறிப்பிடபட்டிருக்கும் எண்ணில் உள்ள நாவிதரிடம் சென்று நிற்க வேண்டும். பத்து பதினைந்து வினாடிகளில் அவர்கள்  மொட்டை அடித்துவிட்டார்கள். அவர்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் படியாக வரிசையில் நிற்கும் போது தண்ணீரில் தலையை ஊறவைக்கும் வேலையில் இறங்க வேண்டும். இல்லையென்றால் கெடவெட்டு போல தலையெங்கும் ரத்தத்துடன்தான் வரவேண்டும். நாவிதர்கள் ரத்தம் பற்றிய கவலைகள் இன்றியே இருக்கிறார்கள். சிறு குழந்தைகளுக்கும், பெண்பிள்ளைகளுக்கு மட்டுமே கொஞ்சம் கவனத்தினை கொள்கின்றார்கள். பெண்களின் முடிக்காக அவர்களின் அருகிலேயே ரப்பர் பேன்டும் வைத்திருக்கிறார்கள். குழந்தைக்கு முடியெடுத்தும் காணிக்கையாக தாயிடமிருந்து நூறு ரூபாயும், தந்தையிடமிருந்து நூறு ரூபாயும் பெற்றுக்கொள்கின்றார்கள். அவர்களிடம் பணம் தரக்கூடாது, வெறும் டோக்கன் மட்டுமே தாருங்கள் என்று அறிவிப்பு பலகை சொன்னாலும் நம் மக்கள் பெரும் வள்ளலாகவே உள்ளார்கள்.

நண்பர்கள் மொட்டை அடித்து,குளித்துமுடித்தவுடன் மற்றவர்களுடன் இணைந்து கொண்டு வந்திருக்கும் பொருள்களை பத்திரப்படுத்தும் இடத்திற்கு சென்றோம். வழிகாட்டியாக வந்தவர் ஒரு கடையை காண்பித்து அங்கு கல்லாவில் அமர்ந்திருப்பவரிடம் கைப்பேசிகளை தரச்சொன்னார். அவர் எண்களை குறித்துக்கொண்டு டோக்கன் போட்டு வைத்துக் கொண்டார். கொண்டுவந்திருந்த பைகளை அங்கே வைத்துவிட்டு, காலணிகளை பத்திரப்படுத்தும் கடையை நோக்கி சென்றோம். அங்கு ஒரு சாக்கில் அனைத்து காலணிகளையும் போட்டுவிட்டு தரிசனத்திற்கு தயாரானோம். அப்போது மணி நண்பகல் 12.00.

திகைப்பு தொடரும்…

8 comments on “திகைக்க வைத்த திருப்பதி பயணம் -1

 1. devadass சொல்கிறார்:

  திகைக்க வைத்த திருப்பதி அடுத்த பதிவையும் படித்து விட்டு மறுமொழி தருகிறேன்.

 2. SUNDAR சொல்கிறார்:

  nandri nanbharae by SUNDAR

 3. Panama சொல்கிறார்:

  நாங்கள் சோட்டானிக்கரை தரிசனம் செய்வதற்க்கு முன்பாக குருவாயுர் சென்று இருந்தேன். அந்த மாயக் கண்ணனை, குழந்தையை அனைவரும் தரிசனம் செய்து இருப்பீர்கள், ஆதலால் விவரிக்க வில்லை. சோட்டானிக்கரை தரிசனம் முடித்து, எரிமேலிப் பயணம் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரப் பயணம். அன்று குறுகலனான ரோடுகளாலும், மக்கள் கூட்டம், பயண பேருந்து நெருக்கம் என ஜந்து மணி நேரம் ஆனது. நான் களைப்பு மற்றும் காய்ச்சல் உடன் பயணம் செய்தேன். புதிய இடங்களை பார்ப்பதால் கொஞ்சம் அசதி தெரியவில்லை. என்னடா இவன் அற்புதம் அது இதுன்னு சொல்லிட்டு, இப்படி உடம்பு சரியில்லை, காய்ச்சக் குளிறுன்னு கடுப்படிக்கிறான்னு கடுப்பாகி விடாதீர்கள். நம் கட்டுரையில் இனிதான் சூடும் சுவையும் ஆரம்பம். எரிமேலி வரும் வரைதான் ஒரு பக்தனின் பொறுப்பு, எரிமேலியில் இருந்து சன்னிதானம் சென்று திரும்புவது அந்த அய்யனின் பொறுப்பு. ஆதலால் அந்த அய்யனின் திருவிளையாடல்கள் இனிதான் ஆரம்பம். நாங்கள் எரிமேலி செல்லும் போது இரவு ஏழு அங்கு சென்றவுடன், எரிமேலி பேட்டை துள்ளும் நிகழ்ச்சிக்காக உடல் முழுதும் கலர் பொடிகளை தூவிக்கொண்டும், இடுப்பில் வேப்பிலை, அசோகா இலைகளை கட்டிக் கொண்டும், ஆதிவாசிகள், மற்றும் வேடர்களைப் போல வேடமிட்டு தெருவில் தாள வாத்தியத்துடன், சாமி திந்தகத்தோம், அய்யப்ப திந்தக்த்தோம்என ஆடிப்பாடி சரண கோசம் இட்டு ஆடிப் பேட்டை துள்ளினேம். இது எதற்காக என்று புரிய நாம் எரிமேலியின் வரலாற்றைப் பார்க்கவேண்டும்.

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   தங்கள் பயண அனுவத்தினை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. சில நேரங்களில் நாம் எங்கு எதற்காக செல்கிறோம் என்பதையும், அந்த இடத்தின் சிறப்புகள், வரலாறுகள் இவற்றையும் அறிந்து கொண்டால் மட்டுமே பயணம் மேன்மையாக இருக்கிறது. அப்படியே தவற வி்ட்டால் கூட அந்த இடங்கள் நம்மை அறிய வைத்துவிடுகின்றன. எரிமேலியின் வரலாற்றை அறிய வேண்டும் என்ற எண்ணத்தினை போன்று இன்னும் நாம் அறிதலுக்காக காத்திருக்கிறோம். மி்க்க நன்றி.

 4. devadass சொல்கிறார்:

  Bookmark the permalink.
  திகைக்க வைத்த திருப்பதி பயணம் 2 எப்போது?

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   வாத்தியார் மற்றும், எம்.ஜி.ஆரின் பேட்டிகள் புத்தகத்தில் புதைந்து போய்விட்டேன் நண்பரே. விரைவில் பயணம் இரண்டு பற்றிய கட்டுரையை சமர்ப்பிக்கிறேன். மிக்க நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s