தேவனூர் தந்த தொடக்கம்

கோவிலுக்கு செல்லும் சிலர் சடசடவென ஓடி கருவறையில் இருக்கும் கடவுளிடம் கோரிக்கைகளை வைத்து, கனநொடியில் காணாமல் போய்விடுவார்கள். இன்றும் சிலரோ நீண்ட நெடிய வரிசையில் காத்திருந்து கடவுளிடம் சரிவர பேச முடியாமல் கனத்த மனதோடு திரும்பி வருவார்கள். வெகு சிலரே கருவறையை தவிர்த்து கலையின் அழகை ரசிப்பார்கள். அந்த சிலரில் நானும் ஒருவன். சிற்பம், ஓவியம், இசை, நடனம், சொற்பொழிவு, ஆடை ஆபரண வடிவமைப்பு என்று கலைகளின் சங்கமமாக இருக்கும் கோவிலில், சமைத்து பரிமாறப்படும் பிரசாதமும் கூட கலைதான். கோவில் என்பது கலையின் வடிவம். கடவுள் இருக்கும் இடமாக மட்டுமே பார்த்தால் கோவில் பக்தி நிறைந்த இடமாக மட்டுமே தெரியும்.

இப்போது பக்தி என்பது கூட, கடவுளிடம் தனக்கு இன்னென்ன வேண்டும் என்று பட்டியல் இடுவதும், பத்து ரூபாய் உண்டியலில் போடுகிறேன், பத்து லட்சம் எனக்கு கொடு என்று பேரம் பேசுவதுமாக சுருங்கிப் போயிருக்கிறது. அதையும் குறிப்பிட்ட கோவிலுக்குள் சென்று கோரிக்கை வைத்தால் தான் நிறைவேறும் என்ற நம்பிக்கை உண்டாகியிருக்கிறது. இந்த நம்பிக்கையின் பின்புறம் மிக அழுத்தமான ஓர் அரசியல் ஒளிந்திருக்கிறது. அந்த அரசியல், வணிக ரீதியான லாபநோக்கிற்காக உண்டாக்கப்பட்டது. அதனால் கொஞ்சம் கூட சுயசிந்தனையற்ற ஒரு கூட்டத்தையே அது உருவாக்கி கொண்டிருக்கிறது. அதையும் மீறி சிந்திக்க நினைக்கின்றவர்களால் மட்டுமே கோவிலை வேறு வடிவமாக காண இயலும்.

ஏதோ எனக்கு தெரிந்த இந்த சிறு விஷயங்களை ஆவணப்படுத்தலாம் என கடந்த 2010 ஏப்ரல் மாதத்தில்http://hindutreasure.blogspot.in/ என்ற வலைப்பூவை தொடங்கி எழுதவும் செய்தேன். அந்த மாதத்தில் 5 பதிவுகளை மட்டுமே இட்டேன். அதில் ஒன்று தொடக்கம், மற்றொன்று படங்கள் மட்டுமே கொண்டது. இவைகளை தவிர்த்துப் பார்த்தால் மூன்றே இடுகைகள் கொண்ட வலைப்பூ அது. காலமாற்றத்தால் அந்த வலைப்பூவை நானே புறக்கணித்தேன். எத்தனை பேர் வந்து படிக்கின்றார்கள் என பார்க்க தெரியாததால் அந்த வலைப்பூ வாசகர்களாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று எண்ணினேன். வரவேற்பே பெறாத எழுத்துகள் எதற்கு என விலகி இருந்து, வருடம் இரண்டு ஓடிவிட்ட நிலையில்,.. ஒரு வாசகரின் மின்னஞ்சல் மூலம் அந்த வலைப்பூவின் உண்மைநிலையை உணர்ந்தேன். எழுதிய அந்த மூன்றே கட்டுரைகள் என்றாலும் அதை தங்கள் புத்தகத்தில் இணைத்துக் கொள்ள அனுமதி கேட்டார் அந்த நண்பர். மகிழ்ச்சியுடன் ஆச்சரியமும் வந்தது. அந்த தளத்தினை நான் மறந்தே போயிருந்தேன். ஆனால் என் பெயரை தாங்கி ஆர்.எஸ்.எஸ் புத்தகங்களில் கட்டுரையாக வரும் அளவிற்கு அந்தக் இடுகைகளுக்கு வலிமை இருப்பதை உணர்த்திவிட்டார் அந்த நண்பர். அதை உணர்ந்ததும் இது வரை சேகரித்தவைகளை எழுதலாம் என்ற உந்துதல் ஏற்பட்டது.

தேவனூர் கோவில் அன்றும் இன்றும்
தேவனூர் கோவில் அன்றும் இன்றும்

இதற்கிடையே முகநூல் நண்பர்கள் மூலம் தேவனூர் என்ற தளம் செஞ்சி அருகே சிதைந்த நிலையில் உள்ளது என்றும், அதை நண்பர்கள் ஒன்று சேர்ந்து புதுப்பிக்கின்றார்கள் என்பதையும் அறிந்தேன். ஒரு நாள் அங்கு செல்லும் வாய்ப்பும் வந்தது. சென்னையில் இருந்து திருவண்ணாமலை செல்லும் பேருந்தில் ஏறி செஞ்சிக்கு போனேன். அங்கிருந்து வளத்தி, சேத்பட்டு செல்லும் பேருந்து தேவனூருக்கு கொண்டு சேர்த்தது. கோவிலை தேடி கண்டுபிடித்ததை விட கோவிலுக்குள் எப்படி செல்வது என்று வாயிலை கண்டுபிடிக்கவே பெரும் சிரமாக இருந்தது. கோவிலை சுற்றிலும் நெற்பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. கோவிலுக்கான தடம் என்பதோ, சுற்றி வரும் பாதையோ விவசாயிகளுக்கு முக்கியமாக படவில்லை. ஆண்டுக்கணக்கில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த கோவிலின் அத்துவரை தங்களின் தேவைக்காக ஆக்கிரமிப்பு செய்திருந்தார்கள்.

நிறைய நண்பர்களின் அறிமுகம் கிடைத்த அந்த நாளில், நான் இதுவரை சென்று வந்த சிதையாத கோவில்கள் சொன்னதைவிட மிக அதிகமான செய்திகளை அந்த சிதைந்த கோவில் சொல்வதை உணர்ந்தேன். அங்கிருந்த கல்வெட்டில் ராஜராஜ சோழனின் பெயரும், குலோத்துங்க சோழனின் பெயரையும் கண்டேன். ஆர்காடு நவாப் நடத்திய போர்களைப் பற்றிய குறிப்புகள் இந்த கோவிலிருந்து கிடைக்கும் என்று நண்பர் ஒருவர் உறுதியாக கூறினார். கோவில் என்பது கலைகளை மட்டும் சுமந்ததல்ல. அவை மிகப்பெரும் வரலாற்று ஆவணங்கள் கூட. ஒற்றைக் கோவிலிலேயே இத்தனை வரலாறு கிடைக்கும் போது நிச்சயம் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கோவில்களையும் ஆய்வு செய்தால் கோடிக்கணக்கான செய்திகளும், தமிழனின் வரலாறும் தெரியும்.

இந்த நிலையிலும் தமிழனுக்கு வரலாறு இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் சிலர். இப்படி வரலாற்றை அழியவிட்டுவிட்டு நாளை அதை தேடினால் எப்படி கிடைக்கும். நாளைய தலைமுறைக்கு சொல்வதற்கு நம்மிடையே சோழனைப் பற்றியும், சேரனைப் பற்றியும், பாண்டியனைப் பற்றியும் அதிகம் தகவல்கள் இல்லை. தமிழனின் விளையாட்டு, வீரம் என்பன பற்றியும் தெரிவதில்லை. ஆனால் அயல்நாட்டவன் பற்றி புத்தகம் எழுதும் அளவிற்கு நம்மிடம் செய்திகள் இருக்கின்றன. தங்கள் இனத்தவரின் பெருமையை அறிவதற்கும், அறிந்து கொண்டமையை சொல்வதற்கும் நம்மிடைய தயக்கங்கள் இருக்கின்றன. இந்த தயக்கங்களை நாம் தகர்க்க வேண்டும். அப்போதுதான் தமிழனின் பெருமையை மற்ற இனத்தவர்களும் அறிய முடியும்.

தோவனூர் கோவிலின் தூண்களில் பலவகையான வேலைபாடுடைய சிற்பங்கள் இருந்தன. அதில் சிலவற்றை எந்தக் கோவிலிலும் நான் கண்டதி்ல்லை. குறிப்பாக அந்த பிரசவ நிலையை விளக்கும் சிற்பம் அருமையானது. சுக பிரசவத்திற்கு பெண்கள் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்று சொல்லுகின்ற சிற்பத்தை வடித்த சிற்பிக்கு, எத்தனை பொது நல நோக்கம் இருந்திருக்க வேண்டும். இறைவனை மட்டுமே கண்மூடித்தனமாக செதுக்காகமல் மக்களின் வாழ்வியல் முறைகளையும் செதுக்கி சென்றவனின் பெயர் கூட அங்கு இல்லை. ஆனால் அவன் நோக்கம் ஆயிரம் வருடங்கள் தாண்டியும் இன்று நம்மை வந்து சேர்ந்திருக்கின்றன.

பழங்கால பிரசவ முறையை விளக்கும் சிற்பம்
பழங்கால பிரசவ முறையை விளக்கும் சிற்பம்

இறுகிக் கிடந்த மண்ணை கடப்பாரையை எடுத்து கொத்திவிட்டு மண்வெட்டியால் அள்ளிக் கொடுத்த எனக்கே கையில் காப்பு காய்த்து இரண்டுநாட்கள் சிரமாக இருந்தது. வாரந்தோறும் இரண்டுநாள் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் நண்பர்களின் நோக்கம், மீண்டும் ஒரு சிவன் கோவிலை மக்களுக்கு தருவதல்ல. மண்ணுக்குள் புதைந்திருக்கும் தமிழனின் வரலாற்றை மீட்டெடுப்பது மட்டுமே. பிரதிபலன் பாராது உழைக்கும் அவர்களுக்கு மத்தியில் பாராட்டுக்காக பெரும் தொடரை நிறுத்திய என்னை நினைத்து வெட்கம் வந்தது. தகுதியானவைகளுக்கு தகுந்த அங்கிகாரம் காலம் கடந்தபின்னாவது கிடைக்கும் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்துள்ளேன். அதே உத்வேகத்துடன் இந்து மதம் ஒரு பொக்கிசம் இனி தொடராக இங்கு வெளிவரும்.

மேலும் பார்க்க –
தேவனூர் முகநூல் பக்கம்

2 comments on “தேவனூர் தந்த தொடக்கம்

  1. Kalidoss சொல்கிறார்:

    மிக நல்ல முயற்சி. பாராட்டுக்கள். உங்கள் தொடரை தொடர ஆவலாய் உள்ளேன் .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s