ஐந்தாம் நாள் சென்னை புத்தக கண்காட்சி அனுபவங்கள்

5ம் நாள் –
விடுமுறை என்பதால், நண்பனும் வருவதாக கூறினான். மதிய உணவை முடித்துவிட்டு நண்பனோடு கண்காட்சிக்கு சென்றேன். பெயரே கேள்வியுறாத ஸ்டால்களில் புத்தகங்களை புரட்டி புரட்டிப் போட்டேன். மன நிறைவாய் ஒன்றும் அமையவில்லை. பாரதி புத்தகாலயத்தில் அரவாணிகளும் மனிதர்களே, சோசலிசமும், மதபீடங்களும் புத்தகங்களை தேர்ந்தெடுத்தேன். நக்கீரன் ஸ்டாலில் ஜெவை போட்டோசாப் செய்து போட்டிருந்தார்கள். நன்றாகவே இருந்தது.

ஞாநியையும், மனுஷ்ய புத்திரனையும் நண்பனுக்கு காட்டினேன். இருவரும் அவர்களுடைய அரங்குகளிலேயே இருந்தார்கள். சிலர் அவர்களிடம் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும், கையெழுத்து வாங்கவும் காத்திருந்தார்கள். என்.எச்.எம் அரங்கில் கூட்டம் வழிந்தோடியது, நம்முடைய ரசனைக்கு தக்கவாறு ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்தேன். ஒன்றும் கிடைக்கவில்லை. வேறொரு அரங்கில் ஒரு பெண் அளவுக்கு அதிகமான சத்தத்துடன் “நானே எம் புத்தகத்தை வாங்காம இருக்கேன்”, “இத பேஸ்புக்கில் போடப்போறேன்” என அருகில் உள்ளவரிடம் பேசிக் கொண்டிருந்தார். “மச்சி இது யாரு?” என்றான் நண்பன். “தெரியலேயப்பா” என்றேன் நான். (இந்த விஷயத்தை ஞாபகம் வைச்சுக்கோங்க, கடைசியில ஒரு மெசேஜ் இருக்கு!.)

விகடனின் புத்தகப் பட்டியலில் வ.உ.சி புத்தக்ததினை நேற்றே தேர்வு செய்திருந்தேன். அதனால் விகடன் அரங்கிற்கு சென்று வாங்கினேன். அரங்கு மிகவும் சிறியதாக இருந்தது. கூட்டமோ அதிகம். கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகங்கள் விலை குறைவாகவும், ஒரே புத்தகமாக இருப்பது அதிக விலையாகவும் இருப்பதாக கூறி வருத்தப்பட்டார் ஒருவர். சந்தியா பதிப்பகத்தின் தென்னிந்திய கிராம தெய்வங்களும் புத்தகம் சடங்குகளை விவரித்திருந்தது. அது மட்டுமே போதும் என முடிவெடுத்தேன். நண்பனுக்கு கொலையுதிர் காலத்தினை சிபாரிசு செய்தேன். (நானும் இன்னும் படிக்கலை, அதான்.) அதை வாங்கிவிட்டு கண்காட்சியை விட்டு வெளியே வந்தால், பாரதி பாஸ்கர் பேசிக் கொண்டிருந்தார்,பட்டிமன்ற ராசாவும் வந்திருந்தார்.

“வல்லமை தாராயோ” என்ற நூலுக்கான அறிமுக விழா அது. மக்கள் ராஜாவின் பேச்சுக்காக காத்திருந்தனர். கூட்டம் அதிகமாகவே இருந்தது. உடனே சாருவின் ஏழு புத்தகங்கள் வெளியீட்டு விழாவிற்கு கூட்டமே இல்லை ஜக்கி அவர்கள் எழுதியிருந்தது ஞாபகம் வந்தது. அடுத்த முறை புத்தக கண்காட்சியின் போது அவர்கள் நூல்களை வெளியிடலாம். நிச்சயம் வரவேற்பு அதிகமாக இருக்கும். ராஜா பேச்சில் விஷயமே இல்லையென்றாலும் சிரிக்க வைத்தார். குழந்தைகளை தோழில் தூக்கி வைத்திருக்கும் போது உச்சி மண்டை முடியை இழுப்பதை அழகாக சொன்னார். அம்மாக்களெல்லாம் சொல்லிறீங்க, அப்பாக்களுக்கு சொல்ல தெரியவில்லை என்றபோது, கரகோசம் வானை பிளந்தது. ராஜா பேசி முடித்ததும் கூட்டம் காலியானது, நாங்களும் கேன்டீன் வரை சென்று திரும்பினோம். அப்போது நிகழ்ச்சி முடிந்திருந்து பாரதி பாஸ்கரிடம் சிலர் ஆட்டோகிராப் வாங்கினர்.

ஆறு மணிக்கு வாலியின் தலைமையிலான கவியரங்கு தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் வெகு நேரமாகியும் தொடங்கவில்லை. பிறகு கூட்டத்தினுள் சலசலப்பு கேட்டது, வாலி கிழட்டு சிங்கம் போல, நடை தளர்ந்து வந்தார். வாலியின் இளைமைகால புகைப்படங்கள் கண்முன் தோன்றி மறைந்தன. வாரம்தோரும் வாலியில் வந்த கவிதையின் முன்னும் பின்னும் கொஞ்சம் சேர்த்து கவி படைத்தார். அதில் ஈழமும், 2ஜியும் அதிகமாக இடம் பிடித்திருந்தது.
“நேர்மையென்றால் நேற்றுவரை டாடா, இன்றோ டாடாவா” என்று அதிகம் 2ஜியை விமர்சித்தார் வாலி. நான் கொஞ்சம் கூட இதை எதிர்ப்பார்க்கவில்லை. கவிதையின் ஓரிடத்தில் உங்கள் குழந்தை ராஜாவாகட்டும் என்று சொல்லிவிட்டு, இது வேற ராஜா என்று சிரித்தார்.

முத்துலிங்கம் பேச்சில் இன்றைய அரசியல் அனல் அடித்தது. பணம் எனும் தலைப்பில் 2ஜியை தவிர்க்க முடியவில்லை. கூட்டத்திலிருந்து கிடைத்த கரகோசத்தினை கவனித்த வாலி மக்கள் நாம் ஒன்றை சொன்னால், அதை வேறொன்றுடன் ஒப்பிட்டு கைதட்டுகிறார்கள், இந்த மக்களால் தான் கவியரங்குக்கு வெற்றி, நம் கவிதையால் அல்ல என்று மகிழ்ந்தார். ராதாகிருஷ்ணனின் பேச்சில் அவருடைய வங்கி அனுபவம்தான் தெரிந்தது. பத்திரத்தினை பத்திரமாக வைத்துக் கொள்வதோடு, நிலத்தினையும் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என அடிக்கடி கூறினார்.

இளைய கம்பன் கடிதம் எனும் தலைப்பில் மிக அருமையாக பேசினார். இரண்டொரு இடங்களில் வாலி பாராட்டியதோடு, வாஞ்சையாக தடவியும் கொடுத்தார். நெல்லை ஜெயந்தா புத்தகம் பற்றி பேசினார். அரசியல் கலப்பு அதிகமில்லை. பழனிபாரதி கவிமழையில் வாக்குச் சீட்டு மாட்டிக் கொண்டது. பெரும்புள்ளிகளாக்கும், வெறும்புள்ளிகளாக்கும் கரும்புள்ளி நம் ஆள்காட்டி விரல் புள்ளி என்று பேசினார். இடையே தி.மு.காவின் வாக்கிற்கு பணம் கொடுப்பதையும் கடிந்தார். நந்தலாலாவுக்கு பத்திரிக்கைதான் தலைப்பு, பத்திரிக்கைகளின் மோசமான செயல்களை திட்டினார். தலையரங்கத்தில் மட்டும்தான் தலை இருக்கிறது, மற்ற இடங்களில் உறுப்புகள்தான் இருக்கிறது என ஆபாசத்தினை விதைக்கும் சிறுபத்திரிக்கைகளை வாரினார். முதலில் கருத்துகணிப்பு போல கவி சொன்னார், அதில் சாமியாரிடம் கேட்டேன், பத்திரிக்கையென்றால் அதிகம் பயப்படுகின்றவர்கள் இப்போது சாமியார்கள்தான். அதனால் அவர் கருத்து சொல்ல மறுத்துவிட்டார் என்றபோது, கரகோசம் பறந்தது. இறுதியில் ஈழத் தமிழர்களின் எலும்பில் பேனாவிற்கு கட்டை செய்து எழுதுவோம் என்று சொன்னதை வாலி பாராட்டினார். அடுத்து வாலி இன்னொரு கவிதை சொல்வார் என நினைக்கும் முன் கவியரங்கம் முடிந்தது என சொல்லிவிட்டார்.

இத்தனை அற்புதமாக கவியரங்கம் இருக்குமா என நண்பன் பாராட்டியபடியே வந்தான். நானும் அதன் அருமையை எதிர்ப்பார்க்கவே இல்லை. தொலைக்காட்சியில் போடுகின்ற கவியரங்கமெல்லாம், கருணாநிதியைப் பற்றியே நிகழ்கிறது, தமிழ் மாநாட்டிலும் இதுவே நிகழந்தது. ஆனால் வாலியின் தலைமையில் நிகழ்ந்த இந்த கவியரங்கத்தில்தான், 2ஜி, நிராடியா, ராஜா, நித்தியானந்தர் என அரசியலும், ஈழத்தின் மீதான கவிஞர்களின் உணர்வுகளும் பதிவு செய்யப்பட்டன. தி.மு.க ஆட்கள் தலைமையிடம் சொன்னால் அடுத்த முறை கண்காட்சி நடப்பதே கஷ்டம். கலைஞர் கொடுத்த ஒரு கோடி வைப்புநிதியில்தான் கண்காட்சி நடத்தும் பபாசி இயங்கிக் கொண்டிருக்கிறது. சாலையில் வந்து கொண்டிருந்தபோது, ஒரு பெண்மணி தொலைப்பேசியில் “அதுக்கென்ன அடுத்த தொகுதியாக போட்டுடலாம்” என்று பேசிவந்ததை கேட்டோம்., ஆகா சென்னையில் இருக்கிற எல்லோருமே எழுத்தாளர்களாகவும், பதிப்பகத்தரகளாகவும் இருப்பார்கள் போல! நாம ஜாக்கிரதையாகவே இருப்போம் என்று அமைதியாக வீடு திரும்பினோம். (இதுதான் அந்த மெசேஜ்!)

4 comments on “ஐந்தாம் நாள் சென்னை புத்தக கண்காட்சி அனுபவங்கள்

 1. ரவிபிரகாஷ் சொல்கிறார்:

  ஒரே மூச்சில் புத்தகக் காட்சி பற்றிய உங்கள் அத்தனைப் பதிவுகளையும் படித்து முடித்தேன். மிக இயல்பாக, உள்ளது உள்ளபடி எழுதியிருந்த உங்கள் பாணி மிகப் பிடித்திருந்தது. சில நுணுக்கமான விஷயங்களையும் குறிப்பிட்டிருந்தது கண்டு வியந்தேன். உ-ம்: அர்த்தமுள்ள இந்து மதம் தனித் தனிப் புத்தகமாக இருந்த செட் விலை குறைவாகவும், ஒரே தொகுப்பாக வந்த புத்தகம் விலை அதிகமாகவும் இருந்தது பலருக்கு அதிருப்தி தந்தது. உண்மைதான். நான்கூட தனித் தனி புத்தகங்களாக இருந்த செட்டைத்தான் வாங்கினேன்!

  • ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

   தாங்கள் எனது வலைப்பூவை படித்தமையை மிகவும் பெருமையாக கருதுகிறேன். உங்களுடைய ஏடாகூட கதைகளை படித்து படித்து சிலாகித்துக் கொண்டிருக்கிறேன்,. மிகவும் வித்தியாசமான முயற்சி அது. நன்றி!…

   தனித்தனி புத்தகங்கள் தொலைந்துவிடும் வாய்ப்புகள் அதிகம். அதுவுமின்றி ஒரு முழுப் புத்தகத்தினை படித்த மனநினைவை அது தராது, என்பதால் அந்த நபர் தொகுப்பினையே அதிக விலை கொடுத்து வாங்கிப்போனார். புத்தகம் படிக்கும் மக்களை சங்கடத்திற்கு உள்ளாக்கினால், பதிப்பகங்கள் எப்படி வெற்றி பெரும் என தெரியவில்லை.

 2. படைப்பாளி சொல்கிறார்:

  நம்ம சகோதரன் இருக்கிறார்..அனுபவங்களைப் பகிர…புத்தக கண்காட்சிக்கு போக இயலாதக் குறையைப் போக்கி விட்டீர்கள் நண்பா…அருமை..அருமை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s